தமிழில் ஆர்வம் கொண்டு செயல்பட்டு அதன் மேம்பாட்டிற்கும் தமிழ் மக்களின் நல்வாழ்விற்கும் உழைக்கும் அறிஞர்களும் சான்றோர்களும் அதிக பட்சம் பிற துறைகளிலும் சாதித்தவர்களாக இருக்கிறார்கள். இந்த வார வல்லமையாளரும் அப்படிப் பட்டவர் தான்.

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்”

என்பார் பாரதியார். அப்படி உலகமெங்கும் வியக்கும் பல மருத்துவக் கருத்துகளைத் தமிழ்மொழியிலும் தந்து, தமிழின் மீதும் ஆன்மீகச் சிந்தனைகளின் மீதும் தீராத காதலாகி, அவை இரண்டையும் தமதிரு கண்களாகவே போற்றி வாழ்ந்து வரும் டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள்.

பல இதழ்களில் ஆன்மீக சிந்தனைகளை எழுதியும், பல மேடைகளில் தமிழர் தெய்வீகத்தை உரையாற்றியும் வருகின்ற டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள், தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளராகப் பணியாற்றி, மருத்துவம் தொடர்பான நிறைய கட்டுரைகளைத் தமிழில் எழுதிச் சிறப்பு சேர்த்தவர். அந்தப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த திருமதி கீதா லட்சுமி ஓய்வு பெற்றதும், அதற்கடுத்த இரண்டே நாட்களில், மரியாதைக்குரிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களால் அதே மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவர், மருத்துவப் பேராசிரியர், ஆன்மீகவாதி, சொற்பொழிவாளர், எழுத்தாளர் என்ற பல பரிமாணங்களைத் தாங்கி நிற்கும் சுதா சேஷய்யன் அவர்கள் இப்போது துணைவேந்தர் என்ற உயரிய பதவியையும் தமது திறத்தால் அடைந்து உயர்ந்துள்ளார் என்பது பாராட்டுதலுக்கு உரியது.

மனித உடற்கூறியல் துறையில் மிகவும் பிரபலமான Gray’s anatomy என்கின்ற புத்தகத்தை எழுதி வெளியிட்ட சர்வதேச ஆசிரியர் குழுவில் ஓர் அங்கமாக இவர் செயல்பட்டார். ஆன்மீகம் மற்றும் மருத்துவம் தொடர்பாக இவர் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். பல அரசு விழாக்களின் சிறப்பு தொகுப்பாளராகவும் டாக்டர் சுதா சேஷய்யன் இருந்து வருகிறார் என்பதெல்லாம் இவரது இடையறாத உழைப்பையும் திறனையும் மேற்கோளிட்டுக் காட்டும் பதிவுகள்.

சென்ற வாரம், தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சுதா சேஷய்யன் அவர்களுக்கு வல்லமை மின்னிதழ் சார்பில் “வல்லமையாளர்” விருது அளிப்பதில் கௌரவம் கொள்கிறோம்.

டாக்டர் சுதா சேஷய்யன் அவர்களைப் பற்றி தி இந்து வெளியிட்டிருக்கும் செய்தி
https://www.thehindu.com/features/friday-review/art/balancing-act/article2011893.ece

மருத்துவத்தோடு மலர்த்தமிழ்த் தொண்டும்
பொருத்தமாய்ச் செய்து புவியில் – அருத்தமுடைச்
சொல்லொடு வாழும் சுதா சேஷயனுக்கு
வல்லமை யாளர் விருது!

(“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)

இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
https://www.vallamai.com/?p=43179

Leave a Reply

Your email address will not be published.