-விவேக்பாரதி

முன்னரே நிறுவி வைத்திருக்கும் இலக்கினைக் காலம் ஒவ்வொரு திறனாளிகளைக் கொடுத்து உடைத்துப் பார்க்கின்றது. எளிமையாக நமது எண்ணங்களை மற்றொரு எண்ணம் வெல்வது என்பதில் தொடங்கி சர்வதேச அளவில் இந்த இலக்கை முறியடித்து சாதனை படைப்பதும் வெற்றி வாகை தரிப்பதும் ஒரு உலகியல் நியதி. நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த வினை விளையாட்டு சம்பந்தமான துறையில் நிறையவே காணப்படுகிறது. ஏற்கனவே சாதனையாளராக ஒரு விளையாட்டு வீரர் தன் திறத்தால் தாம் சேர்ந்த துறையில் பதித்து வைக்கின்ற இலக்குக் கல்லை மற்றொரு சாதனையாளர் தம் திறத்தால் இடம்பெயர்த்து உயர்த்தி வைக்கிறார் என்பதி விளையாட்டுத் துறையில் எளிதில் நமக்குப் புலப்படும் ஓர் ஆரோக்யமான போட்டி.

இந்த வார வல்லமையாளர் அப்படிப் பட்டவரே! ஆனால் இங்கே சாதனைக்கு உள்ளானது விளையாட்டு வீரர்களின் வயது! ஆம்! மிகவும் சிறு வயதிலேயே இந்தியாவின் கிராண்ட் மாஸ்டராகவும், உலக ளவில் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டராகவும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் என்னும் 12 வயது நிரம்பிய மாணவர் சாதனை படைத்துள்ளார். அவரே இந்த வாரத்து வல்லமையாளர்.

டில்லியில் நடந்த சர்வதேச ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் தினேஷ் சர்மா என்னும் வீரரை 9 ஆவது சுற்றில் வீழ்த்தி குகேஷ் இந்தப் பட்டத்தை வென்றிருக்கிறார். இதற்கு முன்னதாக 12 வயது 10 மாதங்கள் 13 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரக்னாநந்தா என்பவர் நிறுத்தி வைத்திருந்த இலக்கைத் தான் குகேஷ் முறியடித்து 12 ஆண்டு 7 மாதங்கள் 13 நாட்களில் இந்தியாவின் மிகக்குறைந்த வயது கிராண்ட் மாஸ்டராக வலம் வருகிறார்.

அவரது தந்தை மற்றும் தாயின் தளராத ஊக்கத்தாலும், 5 வயதிலிருந்தே அவர் மேற்கொண்டு வரும் செஸ் விளையாட்டின் பயிற்சி மற்றும் ஆர்வத்தினாலும் இந்த வெற்றிப் பதக்கத்தைத் தோளில் சுமந்துள்ளார். மார்ச் மாதம் சர்வதேச செஸ் மாஸ்டர், பாங்காக் ஓபன் போட்டியில் 3 ஆம் இடம், ஆர்பிஸ் போட்டிகளில் 2 ஆம் இடம் ஆகிவற்றை வென்றதன் நீட்சியாகவே இப்போது உலகத்திந் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டராகப் பரிமளிக்கிறார்.

இவர்தம் வல்லமையை மெச்சி, இன்னும் பல விருதுகளும் பல திறமைகளும் வாய்க்கப்பெற வல்லமை மின்னிதழ் குழுமம் டி குகேஷ் அவர்களுக்கு வல்லமையாளர் என்ற விருதினைப் பெருமையுடன் வழங்கி மகிழ்கின்றது.

சதுரங்க ஆட்டத்தில் காய் நகர்த்தும்
சமர்த்தாலே உலகிலிளம் கிராண்ட் மாஸ்டர்
மதிப்பதனை வென்றகுகேஷ் வல்ல மைக்காய்
வல்லமையாளர் விருதை வழங்குகின்றோம்!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க