வல்லமையாளர் விருது 306 – பனை சதிஷ்
-விவேக்பாரதி
நம் வாழ்க்கை வேகமயமாக மாறி வருகிறது. மரபு சார்ந்த நம் அடையாளங்கள் ஒவ்வொன்றும் எப்படியோ மறந்து வருகின்றன. இயற்கை விவசாயம் என்ற சொல்லை நாம் போராட மட்டும் தான் காண முடிகிறது. இந்த அவலநிலைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியல் கூறுகள் நம்மைச் சிந்திக்க வைப்பதில்லை. மாறாக தன் வளர்ச்சியை நம் வளர்ச்சியாக மாற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கின்றன. இவற்றிலிருந்து விடுபட, இளைஞர்கள் அறிவார்ந்த புரட்சிகளைக் கைகளில் எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு இளைஞர்தான் இந்த வாரத்தின் வல்லமையாளர்.
நீர் வளத்தைக் காக்க இயற்கை நமக்குக் கொடுத்த அற்புதமான வரம், பனை மரம். ஆழ்ந்து விரிந்து தண்ணீர் இருக்கும் இடத்தைத் தேடிச் செல்லும் வேர்களைக் கொண்டவை பனைமரங்கள். ஆறு மற்றும் குளத்தின் கரை ஓரங்களில் பனைமரங்களை நம்மால் பார்க்க முடியும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் குளங்களெல்லாம் வற்றி நிலங்களாயின. நமக்கும் ஏனோ பனை மரங்களின் மகிமை மட்டும் இதுவரை புரியாமலேயே இருக்கிறது. பனை மரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற சிந்தனையோடும் உழைப்போடும் தன் வாழ்க்கையை அவற்றுக்காகவே அர்ப்பணிக்கிறார் பனை சதிஷ் என்னும் இளைஞர். இயற்கை வேளாண் விவசாயி நம்மாழ்வாரின் வழியில் பயணிக்கிறார் இவர். சமகால இளைஞர்களைப் போல இவரும் வாழ்க்கைத் தேவைக்காகத் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்திருந்தாலும், பூமியில் பனை மரங்கள் போன்ற ஒரு வாழ்வாதாரத்தைக் காக்கப் பெரிதும் முயற்சியெடுத்து வருகிறார். பனை மரங்களின் பயன்களைச் செல்லும் இடங்களில் எல்லாம் தீர்க்கமாக வலியுறுத்தி வருகிறார்.
பனை சதிஷ், தன் குழுவுடன் இணைந்து சென்னையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் மட்டும் சுமார் 2000 பனை விதைகளை சென்ற பருவத்தில் விதைத்திருக்கிறார். இதனைப் பாராட்டி நேற்று (28.04.2019) கவிப்போம் அறக்கட்டளை இவரைப் பாராட்டிச் சிறப்பித்தது. துரித உணவுக் கலாச்சாரத்தில் மயங்கி, நம் கலாச்சாரத்தைத் தொலைத்து நிற்கும் இளைஞர்கள் மத்தியில் இவர் இயற்கை உணவுப் பழக்கங்களைப் பெரிதும் ஊக்குவித்து வருகிறார்.
“சிலரிடம் பனை பற்றி எத்தனை விழிப்புணர்வோடு பேசினாலும் அவர்களுக்கு இருக்கும் பணிச்சுமையில் அதனைக் கடந்துவிடுவது இயற்கை, ஆனால் இளஞ்சிறார்கள் அப்படி அல்ல, பனை விதைகளை விளையாடக் கொடுத்து, நடச்சொல்லி, பனை மரங்களைப் பற்றிய பயன்பாட்டை விளக்கினால் அவர்கள் இந்தப் புரட்சியை மிகச் சாதாரண விளையாட்டாக செய்வார்கள்” என்று ஒரு அமைதிப் புரட்சியைச் செய்து நம்மையும் சேர்த்துப் புளகாங்கிதம் அடைய வைக்கிறார் பனை சதீஷ்.
அவருடைய சாதனையையும், விடா முயற்சியையும் பாராட்டுகிறோம். வல்லமை மின்னிதழ் குழு பனை சதிஷுக்கு “வல்லமையாளர்” என்ற விருதை அளித்து கௌரவம் சேர்க்கிறது. இயற்கை வேளாண்மையுடைய வல்லமையை இன்னும் உலகறிய வைக்கவும் வாழ்த்துகிறோம்.
பனை சதிஷ் குறித்து அறிய அவருடைய முகநூல் பக்கம் பார்க்கவும். (https://www.facebook.com/sathishkumar.pichandi)
பனை குறித்த தகவல்கள் தேவைப்பட்டால் அவருடைய தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம் (99949 69088)
வல்லமையாளர் பனை சதிஷ் அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறோம். அவரது பணிகள் மேன்மேலும் சிறக்கட்டும். ஓங்கி வளர்க, உலகு புரக்க!