நட்பு சுகமா….. சுமையா….?
பவள சங்கரி
வாழ்க்கையில் நாம் அன்றாடம் எத்தனையோ பேரைச் சந்திக்கிறோம். ஒரு சிலரை பார்த்தவுடன் வெகு நாட்கள் அவர்களுடன் பழகியது போல ஒரு நெருக்கம் உண்டாகும். நம்மையறியாமல் ஒரு நேசமும், பாசமும் உருவாகிவிடும். சில நேரங்களில் இந்த பாசம் நேரில் பார்க்காமல் கூட ஒரு கற்பனை உருவத்துடனே வளர்ந்து வருவதற்கு, நம் பதிவுலக நட்புக்களே ஆதாரம். இந்த பாசமும், நேசமும், முன் ஜென்ம தொடர்போ என்று கூட பல நேரங்களில் நினைக்கத் தோன்றும். நம்மையறியாமல் நம் மனது அவர்களிடம் அதிக உரிமையைக் கூட எடுத்துக் கொள்ளும்.
என் தோழி அஞ்சுவை {அஞ்சனா] என்ற பேரை நான் அஞ்சு என்றுதான் கூப்பிடுவேன் ] நான் சந்தித்தது ஒரு சுவாரசியமான சூழலில்…………..
நாங்கள் புதிதாக வீடு வாங்கி குடி வந்திருந்த காலம். அக்கம் பக்கத்தில், 200 அடிக்கு எந்த வீடும் இல்லை. என் இரண்டு குழந்தைகளும் பள்ளி செல்லும் வயது. கணவர் பணி நிமித்தமாக வெளியில் சென்று திரும்ப நேரமானால் கூட அச்சமாகத்தான் இருக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருந்துவிட்டு முதன் முதலில் தனியே வெளியே வரும் அத்தனை பெண்களுக்கும் ஏற்படக்கூடிய சங்கடம்தான் இது. ஏதோ கண்ணைக் கட்டி ஒரு அத்துவானக் காட்டில் விட்டது போல சோகம்….. வலிய போய் பக்கத்தில் இருப்பவர்களிடம் பழகவும் தயக்கம். கல்லூரிக் காலங்களில் இருக்கும் சகஜ நிலை ஏனோ திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்தவுடன், அப்படியே மாறிவிடுகிறது.
உற்றார், உறவினர் என்ற சூழலிலேயே சுழன்று விட ஆரம்பித்துவிடுகிறது. பழைய நட்புக்களைப் பற்றி நினைக்கவும் நேரமின்றிப் போய்விடுகிறது. புதிய சூழல், புதிய மனிதர்கள் என்று ஒரு புறம், கணவரும் பணி நிமித்தமாக அதிக,நேரம் வெளியில் இருக்க வேண்டிய கட்டாயம். வழமையாக நான் தான் மகிழுந்தில் குழந்தைகளை பள்ளியில் சென்று விட்டு விட்டு வருவேன். அன்றும் அப்படி விட்டுவிட்டு, வங்கியில் ஒரு வேலை இருந்ததால் அதையும் முடித்துவிட்டு, வீடு திரும்ப எண்ணி காரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். கிளம்பிய 5 நிமிடத்தில் ……….
ஈரோட்டில் மேட்டூர் சாலை பிரதான சாலை. மிகப் பரபரப்பான சாலை, பஸ் நிலையமஅருகில் உள்ளதால், எந்நேரமும் சாரி, சாரியாக வண்டிகள் போய்க்கொண்டே இருக்கும். இடது புறம் இருந்த வங்கியிலிருந்து, சாலையின் மேற்குப் புறம் செல்வதற்காக, தெருவை கடக்க வேண்டி, என்னுடைய நான்கு சக்கர வாகனத்தை வேகமாக முடுக்கிவிட, அந்த வேளையில் சரியாக, நேர் எதிரில், ஒரு ஸ்கூட்டர், கண்,மண் தெரியாமல் படுவேகமாக வர, நேராக வந்து வண்டியின், பம்ப்பரில், மோதி, குட்டிக் கரணம் அடித்து சுருண்டு விழுந்ததை முதன் முதலில் கண்ணுக்கு நேராக, அதுவும், என் வண்டியிலேயே……. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து விட்டது, அடுத்த நொடி, போக்குவரத்து காவல் அதிகாரி, இதையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவர், நேராக வந்து, தவறு அந்த பெருங்குடி மகனார் மீதுதான், என்றும், தவறான பாதையில் அவர் வந்ததையும் சுட்டிக் காட்டி, என்னை அந்த இடத்தை விட்டு நகரச் சொன்னார். தெய்வாதீனமாக, விழுந்த அந்த மனிதரும் போதை தெளிய, மெதுவாக எழ முயற்சித்தார். ஆனாலும்,எனக்கு, கை, கால்கள் உதறல் எடுத்து, ஒரு அடி கூட நகர மறுக்கிறது.
இந்த இக்கட்டான சூழலில்தான், ஒரு பெண்மணி,ஆதரவாக என் தோளில் கை போட்டு, வாருங்கள் போகலாம், என்றார். அந்த நேரத்தில் அவரை யார் என்று கேட்கக் கூட எனக்குத் தோன்றவில்லை. தன் கணவருடன் வந்திருந்தவர், அவரை எங்கள் பின்னாலேயே வரச் சொல்லிவிட்டு, என்னை வண்டியை எடுக்கச் சொல்லி, அருகில் அமர்ந்து கொண்டார். எனக்கு அந்த நேரத்தில் தெய்வமே வானத்திலிருந்து இறங்கி வந்தது போல ஒரு உணர்வு. செல்லும் வழியில்தான் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். எங்கள் வீட்டின் அருகில் தான் அவர் வீடு என்றும், என்னை அவர் பார்த்திருப்பதாகவும், கூறினார். அவர் தன் பெயரை, அஞ்சனா என்றும், தன் கணவர் வங்கியில் பணிபுரிவதாகவும், ஒரே மகன் பத்தாம் வகுப்பு படிப்பதாகவும், தான் ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருப்பதாகவும் கூறினார்.
அன்று முதல் அஞ்சனா எனக்கு அஞ்சுவானார். எங்கள் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருந்தது. அஞ்சுவின் கணவர் மிக கலகலப்பாக பழகக் கூடிய மனிதர். வலிய சென்று அடுத்தவர்களுக்கு உதவுவதில் அஞ்சுவிற்கு எள்ளளவும் குறைந்தவரில்லை அவர். அவரும் என்னை உடன் பிறவா சகோதரியாகவே நடத்தினார். இருவரும் “மேட் ஃபார் ஈச் அதர்” என்பார்களே, அப்படித்தான் இருப்பார்கள்.மிக அன்னியோன்யமான தம்பதியர் இருவரும். மிகத் தெளிந்த நீரோடையாக இருந்தது இவர்கள் வாழ்க்கை.
ஆனால் விதிக்கு அது பொறுக்கவில்லை போலும். மிக ஆரோக்கியமான உடல் நிலையுடன், அன்றாடம் வாக்கிங், யோகாசனம், தியானம் என்று அழகாக திட்டமிட்ட வாழ்க்கை அவருடையது. அன்றும் வாக்கிங் சென்று விட்டு, வீடு திரும்பியவர், வழியில் பார்த்தவர்களுக்கெல்லாம் காலை வணக்கம் சொல்லிவிட்டு, வீட்டிற்குள் சென்றவர், சற்று நேரத்திலேயே அவர்கள் வீட்டில் ஒரே பரபரப்பு. காரில் அவரை தூக்கி வைத்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. தீடீரென்று அதிகமாக வியர்க்க ஆரம்பித்ததாகவும், உடல் மிகவும் அசதியில் மயக்கமாக இருப்பதாகவும் கூறியதாக பேசிக் கொண்டனர். எந்த வலியோ வேதனையோ எதுவும் இல்லை. மருத்துவமனைக்குச் சென்றவர், இரண்டு மணி நேரத்திற்குள் அதே புன்னகை மாறா முகத்துடன் வெறும் உடலாக வந்து சேர்ந்தார். “திடீர் மாரடைப்பு” [ Massive attack ] என்றார்கள்.
கூடியிருந்த அனைவரும் கதறியழ, அஞ்சு மட்டும், அப்படியே அசையாமல், அதிர்ச்சி நீங்காதவராக அமர்ந்திருந்தார். வெளியூரில் படித்துக் கொண்டிருந்த மகன் வந்து கதறிய போது கூட எந்த சலனமும் இல்லை அவரிடம். எல்லாம் முடிந்து வீட்டை சுத்தம் செய்து முக்கியமான உறவினர் மட்டும் இருந்து கொண்டிருந்தனர். இன்னும் நம் குடும்பங்களில் கணவனை இழந்த பெண்களுக்கு செய்யும் சடங்குகள் என்னும் கொடுமையிலிருந்து பெரிதாக விடிவு வந்தது போல் தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் பொட்டு வைக்க அனுமதிக்கிறார்கள். ஆனால் தாலி வாங்குவது, என்று ஒரு சடங்கு இருக்கிறதே. அது போன்ற கொடுமை ஏதுமில்லை எனலாம்.
விடியற்காலை ஊர் உறங்கும் வேளையில், ஏற்கனவே கைம்பெண்களாக உள்ள சில பெண்கள் வருவார்கள். நெருங்கிய உறவினர், பெண்கள் மட்டும் இருப்பார்கள். அந்தப் பெண்ணை, நிறைய மஞ்சள் பூசி குளிக்க வைப்பார்கள். தலை நிறைய பூ வைத்து, பொட்டு பெரிதாக வைப்பார்கள். நல்ல புடவையும் உடுத்துவார்கள். பின்பு இந்த அலங்காரத்தைக் கண்ணாடியில் காட்டுவார்கள். கட்டிப்பிடித்து, ஒப்பாரி பாட்டு சொல்லி, [அந்த பாட்டைக் கேட்டால் கல் நெஞ்சும் கரையும்] பின்பு, தலையில் உள்ள பூவை பிய்த்துப் போட்டு, பொட்டை அழித்து, தாலியை கழட்டி ஒரு கிண்ணத்தில் பாலை வைத்து அதில் போட்டு விடுவார்கள். கையில் கண்ணாடி வளையல் இருந்தால் அதை உடைப்பார்கள். மற்ற சுமங்கலிப் பெண்கள் இந்த நேரத்தில் அவரைப் பார்க்காவிட்டால் மீண்டும் மூன்று மாதத்திற்கு திரும்பவும் அவரைப் பார்க்கக் கூடாதாம்………
இந்த சடங்கு நடப்பதற்காக எல்லோரும் கூடியிருந்தனர். அந்த நேரத்தில் தான் அஞ்சுவின் மகன், எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, தன் அம்மாவிற்கு இப்படி ஒரு காரியம் செய்யவே கூடாது என்று அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டான். எல்லோரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள், அவன் கேட்பதாக இல்லை. எந்த சடங்கும் செய்ய அனுமதிக்க மாட்டேன். விருப்பப்பட்டவர்கள் மட்டும் இங்கே இருக்கலாம், என்று தெளிவாகக் கூறிவிட்டான். பெரியவர்கள் அவனை பலவாறாக சமாதானம் செய்யவும், தாலியை மட்டும் கழட்டிக் கொள்ள சம்மதித்தான். ஆனால் அதற்காக அஞ்சுவிடம் அந்த பெண்கள் நெருங்கிய போதுதான், அவர் சுய நினைவு பெற்றவராக, ஓ வென கத்த ஆரம்பித்தது தெருவில் இருந்த அனைவரையும் கதி கலங்கச் செய்தது. எனக்கும் ஏதும் புரியவில்லை, அந்த நிமிடம் வரை சொட்டு கண்ணீர் விடாதவர், தாலியை தொட்டவுடன் அவர் கத்தியது, இன்று நினைத்தாலும் கதி கலங்குகிறது.
ஒருவரையும் அருகில் நெருங்கவே விடாமல், என் மடியில் படுத்துக் கொண்டு கதறியழுதது தாங்க முடியாத வேதனை. அன்று ஆரம்பித்த அழுகை முப்பது நாட்கள் இருக்கும் ஓயாத அவர் அழுகை சற்றே ஓய்வதற்கு. திடீரென, இரவு பத்து மணிக்குக்கூட அவர் அம்மா வந்து என்னை அழைப்பார்கள். அஞ்சுவின் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லையென. நானும் எந்த நேரம் கூப்பிட்டாலும், வீட்டில் போட்டது போட்டபடி உடனே ஒடி விடுவேன். அவரிடம், பல விடயங்களைப் புரிய வைத்து அவர் அழுகையை கட்டுப்படுத்த முயற்சிப்பேன். கொஞ்சம், கொஞ்சமாக தேற ஆரம்பித்தார். மகனுக்காக தன்னைத் தேற்றிக் கொள்ள முயன்றார்.
இதற்குப் பிறகுதான், என்னுடன் பழகுவதை குறைத்துக் கொள்ள ஆரம்பித்தார். கணவர் இறந்து ஆறு மாதங்கள் ஆகியிருக்கும் அந்த நேரத்தில். என்னைக் கண்டவுடன், ஏனோ அவருக்கு அழுகை பொங்கி வர ஆரம்பித்தது. நானும் அதை உணர்ந்து, சற்றே அவர் சந்திப்பைக் குறைத்துக் கொண்டேன். ஆனாலும் அவர் என்னை பார்ப்பதையே தவிர்க்க ஆரம்பித்ததுதான் ஏன் என்றே எனக்குப் புரியவில்லை……. நானும் எத்தனையோ முறை முயன்று பார்த்தும் பழையபடி அவரால் என்னிடம் பழக முடியவில்லை. அதுதான் ஏன் என்று எனக்கு இன்றும் புரியாத புதிராகவே, மனதை நெருடிக் கொண்டிருக்கிறது. இன்று அஞ்சுவின் மகன் படித்து முடித்து, துபாயில் வேலை கிடைத்து செட்டில் ஆகி விட்டான். இவரும் விருப்பு ஓய்வு பெற்று, மகனுடன் துபாய் சென்றுவிட்டார். நாட்டையே விட்டுச் செல்லும் போதுகூட என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை………. அதுதான் ஏன் என்ற காரணம் புரியாமல் என் மனம் குழம்பித் தவிக்கிறது………… மனித மனம் என்றுமே ஒரு புரியாத புதிராகத்தான் உள்ளது அல்லவா?
அன்பு பவளா ,மிக உருக்கம். இதே எனக்கும் நடந்தது. என் தோழியின் கணவர் இறந்த போது என்னுடன் பேசுவதைத் தவிர்த்துவிட்டார். ஏதோ மன உளைச்சல்.
நீ கணவரோடு வரும்போது என் இழப்புப் பெரியதாகத் தெரிகிறது என்று ஒதுங்கி விட்டாள்.
இப்போது எனக்கு ஆரம்பத்தில் இருந்த தயக்கம் குறைந்திருக்கிறது.
மனித மனம் வினோதமானது.
தோழமை இறுக வேண்டிய தருணத்தில் உடைந்தது சோகமே.
நன்றிங்க ரேவதி… உண்மையில் மனித மனம் புரியாத புதிராகவே இருந்துவருகிறது. பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒழியவே மனம் விரும்புகிறது. அது நிரந்தரத் தீர்வு அல்ல என்று புரிந்து கொள்ளும் யதார்த்த நிலைக்கு வர இயலாத சூழல்தான் இதற்குக் காரணமாக இருக்கமுடியும்.
நம் மனத்தை எக்காரணத்திற்காகவும் குழப்பம் கொள்ள அனுமதிக்கக் கூடாது. கவிஞர் கண்னதாசன் எழுதிய பாடல் வரிகள் என் செவியில் ரீங்காரமிடுகிறது.
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
. நன்றி வணக்கம்
சரியாகச் சொன்னீர்கள். எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. //எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்// எத்தனை யதார்த்தமான வரிகள்… கண்ணதாசனுக்கு நிகர் அவரேதான்… நன்றி.
உள்ளத்தை உருக்கும் எழுத்துக்கள்………..கடலின் ஆழத்தை அளந்துவிடலாம், ஒரு உள்ளத்தின் ஆழத்தை அளப்பது எளிதல்ல. “ஒவ்வொரு மனிதனும் ஒரு காவியமே, உன்னால் படிக்க முடிந்தால் ..” என்ற ஒரு ஆங்கில அறிஞனின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.
நாங்கள் ஒரு வீட்டில் குடியிருந்தபோது, விதவையான வீட்டுக்கார அம்மாள்என்னிடம், `உங்களுக்கென்ன! Man இருக்காரு!’ என்று அடிக்கடி கூறுவார். பூவும், பொட்டும் வைத்துகொண்டு, கணவருடன் சிரித்துப் பேசும் பாக்கியம் நிலைத்திருப்பவர்களைக் கண்டால், இம்மாதிரியான பெண்களுக்கு தம் இழப்பு பெரிதாகத் தெரிகிறது போலும்!