-முனைவர். இராம. இராமமூர்த்தி

நாம் காணவிருக்கும் இக்கட்டுரைக்கண் இரண்டு செய்திகள் இடம்பெறவுள்ளன. பாடலின் மையப்பொருளாக விளங்கும் அகப்பொருட் செய்தியொன்று; பிறிதொன்று அப்பாடற்கு உறுதுணையாக விளங்குவதோடு, பண்டை நாளைய வரலாறு பற்றிய செய்தி. முதலில் அகப்பொருட் செய்திக்குறிப்பினைக் காணலாம்.

சங்க இலக்கியங்களில் நற்றாய்க்கு உசாத்துணையாக விளங்குபவள், அவள் தோழியாகிய செவிலி. மற்றொருவர், ’தானே அவளே’ வேறுபாடின்றி விளங்கும் தலைவியின் உயிர்த்தோழியாவாள். இவ்வருமருந்தன்ன தோழி, செவிலி(த்தாயின்) மகளாவாள். இவ்விருவரும் அகப்பொருள் இலக்கியங்களில் இன்றியமையாச் சிறப்பிடங்கள் பெறுதலை இலக்கியங்கற்போர் நன்கறிவர். ஈண்டுச் செவிலியின் அன்பு மீதூர்ந்தவுள்ளம் தலைவியின் பிரிவால் வருந்தும் நிலையினை நாம் காண்போம்.

அதற்குமுன்னர், இலக்கியம் படைக்கும் சங்கப்புலவர்கள், தாம் கூறுஞ்செய்திக்கு வலிவும் பொலிவுஞ் சேர்க்கப் பண்டைய வரலாற்றுச் செய்திகளை உவமை முகத்தானும், பிறவாற்றானும் அப்பாக்களில் அழகுறப் புனைந்துபாடுவர். இங்ஙனம் அகத்திணைப் பாடல்களுள் வரலாற்று நிகழ்வுகளை எழிலுறப் புனைந்து பாடியோர் பலர். அவருள்ளும் பரணரும் மாமூலனாரும் சிறப்பிடம் பெறுவோராவர். இவ்விருவர் அகப்பாடல்களான், வரலாற்று நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றால் தமிழக வரலாறு உறுதியும் ஒளியும் பெற்றுச் சிறந்துள்ளமை காணலாம். இத்தகு அரிய பாடல்களைப் புனையும் மாமூலனாரின் கைவண்ணத்தை இக்கட்டுரையில் இடம்பெறும் அகநானூற்றுப் பாடலான் காண்போம்.

நம் தலைவி, தேன்கலந்த பாற்சோற்றினைச் செவிலி அன்பொடு குழைத்து ஊட்டியபொழுது மறுத்துண்ட செல்வமகள். தலைவியின் சிறுதுயரினையும் பொறாது வருந்துமியல்பினள் அன்புச்செவிலி. அவ்வண்ணம் அன்பால் வளர்ந்த அத்தலைமகள், தலைவன் ஒருவனைக் கண்டு காதல் வயப்பட்டனள். இரவும் பகலும் காதல் வளர்ந்தது. தலைவியின் காதலைப் போற்றத்தவறினர் தாயும் தமரும். தலைவனும் வரைதலை (மணஞ்செய்து கொள்ளலை) நீட்டினன். என் செய்வாள் பேதை? தலைவனொடு அவன் ஊருக்கு உடன்போகத் துணிந்தாள். தோழியும் உடன்போக்கிற்குத் துணைநின்றாள். காதல் தலைவனொடு தலைவி கொடிய பாலை நிலங்கடந்து அவனூர் செல்லத் துணிந்து சென்றாள்.

தலைவியின் உடன்போக்கினையறிந்த செவிலி ஆற்றொணாத் துயரில் மூழ்கினாள். தலைவி விளையாடி மகிழ்ந்த இடங்களை நோக்கி நோக்கிப் பெருமூச்செறிந்தாள். தலைவியில்லா இல்லம், செவிலிக்குப் பாலையாகவே தோன்றிற்று. என்ன செய்வதெனப் புரியாது தவித்தாள் செவிலி. தலைவியின் பிரிவுத்துயரினும் அவள் காதலனோடு உடன்போக்கு மேற்கொண்ட பாலைநிலமும், காய்கதிர்ச்செல்வனின் கொடுமையும், நிழலற்ற அரிய வழிகளும் செவிலிக்குச் சொல்லொணாத் துன்பத்தைத் தந்தன; தலைவியின் பிரிவுத்துயர் நிலத்தினும் பெரிதாகி வருத்தியது.

இத்துணைத் துயர்களையும் தாங்கிகொண்ட செவிலிக்குத் தாங்கொணாத் துயரொன்று உளத்தைத் துளைத்தெடுத்தது. அத்துயர்தான் என்ன? நாமறிய அவாவுவது இயல்புதானே! தலைவியும் தானும் (செவிலியும்) உடலால் இருவரே; ஆயினும் உயிரான் ஒன்றானவர். தன்னுயிர் பிரிந்துபோதலைச் செவிலி எங்ஙனம் ஆற்றுவள்? தலைவி சென்றபோழ்து தன்னுயிரும் சென்றிருக்கவேண்டுமே? புலம்பியவளாய் இனியும் உயிர்வாழ்கின்றேனே எனக் கவன்றனள் செவிலி. இந்நிலையில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த போர்நிகழ்வொன்று அவள் நினைவிற்கு வருகின்றது.

வெண்ணிப்பறந்தலை என்ற இடத்தில் சோழன் கரிகாலனொடு பெருஞ்சேரலாதன் கடும்போர் புரிந்தான். கரிகாலன் எறிந்த வாள் சேரலாதனின் மார்பிற் பாய்ந்தது; அந்தோ! அவ்வாள் அவன் முதுகுவழியே வெளியேறியது. சேரலாதன் என் செய்வான்? முதுகில் வாட்புண் ஏற்பட்டதால் புறப்புண்பட்டதாக நாணினான்; பட்ட பழியைத் துடைக்கவேண்டி, வாளொடு வடக்கிருந்து தன்னுயிர் துறந்தான் சேரவேந்தன். சேரலாதன் இறந்தான் என்ற இன்னாச் சொல்லையும், அதேநேரத்தில் புறப்புண்ணாக நாணி உயிர்நீத்த இனிய மொழியையும் ஒருங்கே கேள்வியுற்ற அம்மன்னனின் அவைக்களச் சான்றோர் பலர் அவனோடு உடனுயிர் துறக்க எண்ணித் தம்மின்னுயிர் நீத்தனர். இந்நிகழ்வே செவிலியின் துயரை மிகுவித்தது. தம் மன்னன் இறந்தானெனக் கேட்ட சான்றோர் தம்முயிர் துறந்தனர்.  ஆனால் என் தலைவி பிரிந்துசென்ற பின்னும், என்னுயிர் பிரியவில்லையே?  நான் என்செய்வேன் எனப் புலம்புகின்றாள் அவள். செவிலியின் அன்பினை அளந்துரைக்கவும் இயலுமோ? அத்துயர் தம்நெஞ்சினையும் வருத்துவதனைக் கற்போர் உணர்வர். அன்பெனப்படுவது உறவினரைப் பிரியாது போற்றும் பெருந்தகைமையாகும். இதைத்தான் ’அன்பெனப்படுவது தன்கிளை செறாஅமை’ என்கிறது கற்றறிந்தார் ஏத்தும் கலி.

செவிலியின் துயர்பேசும் அப்பாடல்!

காய்ந்துசெலற் கனலி கல்பகத் தெறுதலின்
நீந்து குருகுருகும் என்றூழ் நீளிடை
உளிமுக வெம்பரல் அடிவருத் துறாலின்
விளிமுறை அறியா வேய்கரி கானம்
வயக்களிற் றன்ன காளையொ டென்மகள்
கழிந்ததற் கழிந்தன்றோ இலனே யொழிந்தியான்
ஊதுலைக் குருகின் உள்ளுயிர்த் தசைஇ
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேஎன் கனவ ஒண்படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருதுபுண் ணாணிய சேர லாதன்
அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென
இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்
அரும்பெறல் உலகத் தவனொடு செலீஇயர்
பெரும்பிறி தாகி யாங்குப் பிறிந்திவண்
காதல் வேண்டியென் துறந்து
போதல்செல் லாவென் உயிரொடு புலந்தே.
(அகம்-55: மாமூலனார்) 

இவ்வகப்பாடல் புலவர் மாமூலனாரின் மிகுபுலமைக்கு ஓர் உரைகல். வரலாற்று நிகழ்வினைச் சுட்டுமாற்றான் பிரிவுத்துயரான் வருந்தும் செவிலியின் ஆற்றொணாத் துயரையும் ஓர் அழகோவியமாய்ப் படைத்துள்ள பாங்கு எண்ணியெண்ணி யின்புறத்தக்கது. இப்பாடற்கண் திகழும் மற்றுமொரு சிறப்பு அவர் கையாண்ட “இன்னா இன்னுரை”, என்னுந்தொடர். இத்தொடரில் முரண்பொருட்சுவையைக் காணலாம். ‘இன்னா’ எனுஞ்சொல் சேரலாதன் இறந்தான் என்பதனைச் சுட்டுதலால் அஃது இன்னாவுரை என்க; ’புறப்புண் நாணி வடக்கிருந்து உயிர்துறந்தான்’ என்பது சான்றோர்க்கு இன்னுரையாயிற்று. “இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்” எனவரும் செய்யுளடி மாமூலனாரின் சென்னியிற் றிகழும் மணிமுடியன்றோ!     

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *