இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (187)

— சக்தி சக்திதாசன்.

Princess Sophia Duleep Singh
அன்பினியவர்களே !

அன்பினிய வணக்கங்கள்.

8ம் திகதி மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் வாரத்திலே உங்கள் முன்னால் என் மடல் வந்து விழுகிறது. பெண்களுக்கென ஓர் தினம் அவசியமா ? எனும் கேள்விகள் சில திக்குகளில் இருந்து கிளம்பியதை என்னால் அவதானிக்க முடிந்தது. மேற்கத்திய உலகில் முன்னேற்றமடைந்த நாடுகளில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்றாக இங்கிலாந்து திகழ்கிறது. இங்கே பெண்கள் சுயாதீனமாக, தமது கால்களில் தாங்கள் தங்கி வாழக்கூடிய சூழல் பல பத்து வருடங்களுக்கு முன்னாலேயே உருவாகி விட்டது.

அதாவது எமது பின்புல நாடுகளில் பெண்களின் மகத்துவத்தின் பெருமை உணரப்படுவதற்கு முன்னாலேயே இங்குப் பெண்களுக்கான உரிமைகள் முன்னெடுக்கப்பட்டு விட்டன. அப்படியிருந்தும் மேற்கத்திய நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்தில் இச்சர்வதேசப் பெண்கள் தினத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதீதமானதாகவே காணப்படுகிறது. இதுவே சர்வதேச மகளிர் தினம் அவசியமா எனும் வினாவை எழுப்புவோருக்குத் தக்க விடையாகக் கூட அமைந்து விடுகிறது. இங்கிலாந்தில் உலக மகாயுத்தத்திற்கு முன்னிருந்த பெண்களின் நிலையும் இரண்டாம் உலகமகாயுத்தத்திற்குப் பின்னால் இருந்த பெண்களின் நிலையும் முற்றிலும் மாறுபட்டிருந்தது.

1800 களின் இறுதியிலும் 1900களின் முற்பகுதியிலும் பிரித்தானியாவில் பெண்களின் விடுதலைக்கான போராட்டம் முனைப்படைந்திருந்தது. பெண்கள் தமது வாக்குரிமைக்காகப் பல போராட்டங்களை நடத்தினார்கள். இப்போராட்டங்களின் போது பல வீராங்கனைகள் தமது உயிரைப் பணயமாகக் கொடுத்த நிகழ்வுகளும் உண்டு. இப்போராட்டங்களில் ஈடுபட்ட வீராங்கனைகளில் ஒருவர் “சோபிஃயா டியூலிப் சிங்” ( Sophia Duleep singh ) ஆவார். இவரின் தந்தை மகாராஜா டியூலிப் சிங் , சீக்கிய இராச்சியத்தின் மகாராஜா ஆவார். இவரின் தாயார் ஒரு ஜெர்மானிய வியாபாரியின் மகளாவார். மகாராஜா டியூலிப் சிங் தனது 11வது வயதில் தனது இராஜ்ஜியத்தை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திடம் கையளித்தார் என்பதும், இவரே “கோஹினூர் வைரத்தை” அன்றைய பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவிற்கு அன்பளிப்புச் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

இவரின் குடும்பம் பிரித்தானியாவுக்கு, பிரிட்டிஷ் நிர்வாகத்தினரால் நாடு கடத்தப்பட்டது என்பதுவும் இவரை இங்கிலாந்தில் பிரித்தானிய மகாராணி விக்டோரியா பராமரித்தார் என்றும் கூறப்படுகிறது. அத்தகைய ஒரு சூழலில் தான் ஃசோபியா டியூலிப் சிங் இங்கிலாந்தில் பெண்ணுரிமைக்கான போராட்டத்தில் இணைந்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது. பல பெண்களுக்கான போராட்டங்களில் பங்கெடுத்த இவர் உலக மகாயுத்தத்தின் போது செஞ்சிலுவைச் சங்கத்தின் சீருடையில் நர்ஸாகப் பணியாற்றியுள்ளார் என்பதும், இந்திய இராணுவ வீரர்களுக்கான பல ஆதரவுப் போராட்டங்களில் பங்கெடுத்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. 1048ம் ஆண்டு இவர் இங்கிலாந்தில் மரணமடைந்தார்.

நான் சுருக்கமாக இந்திய வரலாற்றுப் பின்னணி கொண்ட ஒரு பெண்ணின் பெண்ணியப் போராட்டத்தைப் பற்றி இங்கே குறிப்பிட்ட காரணம் இங்கிலாந்தில் இத்தினத்திற்கான மகிமையின் பின்னணியைச் சிறிது விளக்குவதற்காகவே! அப்படியானால் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சம உரிமை அடைந்து விட்டார்களே இன்னும் என்ன பிரச்சனை என்கிறீர்களா?

அதாவது 2016ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பெண்களுக்கும், ஆண்களுக்குமான ஊதிய வேறுபாடு நிலவும் ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். ஒரே தரமான பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு ஆணின் ஊதியத்திற்கும், பெண்ணின் ஊதியத்திற்கும் வேறுபாடு காணப்படுகிறது. இவ்வேறுபாட்டின் அடிப்படையை அறிந்து ஆவன செய்வதற்கு இங்கிலாந்து அரசாங்கம் அதற்கான குழுவை அமைத்துச் செயற்படுகிறது. பெண்களின் கல்வித்தகமைகள் எவ்வளவு உயர்ந்ததாக இருப்பினும் அவர்களால் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் ஏறமுடியாதவாறு தடைக்கற்கள் காணப்படுகின்றன எனும் வாதம் வலுவடைந்திருக்கிறது.

உச்சியைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது ஆனால் அதை நோக்கி முன்னேறும் போது கண்ணாடிக் கதவுகள் தடைசெய்கின்றன. இதை ஆங்கிலத்தில் “Glass Ceiling” என்பார்கள். பெண்கள் தான் வீட்டைப் பராமரிக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு இன்னும் நவீனமயமான ஆண்களிடம் நிலவுவதை நாம் பல இடங்களில் கண்கூடாகக் காணக்கூடியதாக உள்ளது. “இல்லத்தரசி” எனும் பதவி ஒரு பெண்ணுக்குக் கெளரவமானதே ! ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக முழுநேரப் பணியிலும் ஈடுபட்டுக் கொண்டு முழுநேர இல்லத்தரசியாகவும் இருக்க வேண்டும் எதிர்பார்ப்பு நியாயமானதா ?

ஒரு பெண்ணை நோக்கிய சமுதாய எதிர்பார்ப்புகள் பல பெண்களை மனோநிலை பாதிக்கப்படும் அளவிற்குக் கொண்டு செல்லுகின்ற நிலை இன்றைய காலகட்டத்தில் நிகழ்வது பரிதாபத்திற்குரியதே! ஒரு பெண்ணால் நிறுவனத்தை நிர்வகிப்பது மட்டுமல்ல ஒரு நாட்டையே ஆளமுடியும் என்பதைச் சான்றுடன் நிரூபித்த பெண்களைக் கண்ட நாம், அன்றைய நிலைப்பாடுகளில் எம் வாழ்க்கையில் காணும் பெண்களை எடைபோட முனைவது எவ்வகையில் நியாயமாகும் ?

அதற்காக எல்லா ஆண்களுமே அப்படிப்பட்ட மனோபவத்தில் தான் இருக்கிறார்கள் என்பதல்ல எனது வாதம். தன் மனைவியின் பெருமை உணர்ந்து அதற்கான மதிப்பைக் கொடுத்துக் கௌரவிக்கும் பல விதிவிலக்கான சந்தர்ப்பங்களும் காணப்படத்தான் செய்கின்றன. தன் மனைவி தன்னோடு இல்லாத நேரத்தில் தானருந்துவதற்கான பாலைக் காய்ச்ச முனைந்த போதுதான் மகாகவியின் மனதில் பெண்ணுரிமையின் முக்கியத்துவம் உதித்தது. அவரிடம் நிவேதிதா அம்மையார் “இந்நாட்டில் எப்போது பெண்களுக்கு விடுதலை வருகிறதோ அப்போதுதான் இந்நாடு விடுதலையடையும்” என்று கூறியது அவரது தீர்க்கமான பெண்விடுதலைக் கருத்தை வலியுறுத்தியது.

எம் வாழ்வில் பெண்களின் வெவ்வேறு வடிவங்களை நாம் வெவ்வேறு நிலைகளில் பார்க்கிறோம் என்பதுவே உண்மை. எமது அன்னைக்கும், சகோதரியருக்கும் கொடுக்கும் இடத்தை எமது மனைவிக்குக் கொடுக்கிறோமா? என்பது ஒரு நியாயமான கேள்வியே. பெண்ணுரிமை என்பது அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டால்தான் அதன் உண்மையான தாத்பரியம் புரியும். சர்வதேச மகளிர் தினத்தின் முக்கியத்துவம் என்னைப் பொறுத்தவரையில் எம் ஒவ்வொருவர் மனங்களிலும் கேள்வியை எழுப்புவதே !

“எம்மைச் சுற்றியுள்ள, எம் வாழ்வில் இணைந்துள்ள பெண்களுக்கு அவர்களுக்கு உரியக் கெளரவத்தை மனிதாபிமானத்தின் அடிப்படியில் வழங்குகிறோமா ?“ என்பதுவே.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

Leave a Reply

Your email address will not be published.