“நண்பர் வெ.கி. திருமாறன்”

அவன் வசந்தாமேன்ஷன் அறையில் இருந்த பொழுது அவனுக்கு சில நெருக்கமான அரசியல் தலைவர்ளின் பழக்கம் இருந்தது. அதில் ஒருவர் வெ.கி. திருமாறன். அவர் காமராஜரின் தொண்டர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பழ. நெடுமாறன் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். வெ.கி. திருமாறன் அவர்களுக்கு தாயார் வழியில் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையம். மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாவின் ஊரைச் சேர்ந்தவன் என்று பெருமிதமாகக் கூறுவார். பாரதியாரின் கவிதைகளின் நல்ல ஈடுபாடு கொண்டவர்.

திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பேருந்து நிலையம் பக்கத்தில் வெ.கி. திருமாறன் அவர்களின் வீடு இருந்ததால் அவனுக்கு அவரை அடிகடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவனது வசந்தமேன்ஷன் அறைக்கும் அவர் வருவது உண்டு. அப்படி அவர் ஒரு முறை வந்த பொழுது, ” விஸ்வநாதா…நீ ஆதிசங்கரரின் வாழ்க்கையை வெண்பாவில் எழுத வேண்டும் என்பது என்னுடைய ஆசை…செய்வாயா என்றார்”..அவன் முயற்சி செய்கிறேன் என்றான். ஆனால் அவன் அப்பொழுது அதைச் செய்ய வில்லை. அவனுக்கு அப்படி ஒரு எண்ணம் வந்தது “மே” மாதம் 2006ல்தான். அதுவும் ஸ்ரீ சங்கரரின் வாழ்க்கையை அவன் அறுசீர் விருத்தத்தில்தான் எழுதி இருந்தான். வெண்பாவில் எழுத வில்லையே என்ற ஏக்கம் அவனுக்கும் இருந்தது. அந்த ஏக்கத்தை அவன் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் வாழ்க்கையை வெண்பாவில் எழுதி அது “அம்மன் தரிசனம்” மாத இதழில் ஜூலை மாதம் 2010 முதல் டிசம்பர் 2011வரைத் தொடராக வெளிவந்ததில் மகிழ்ச்சி கொண்டான். குருவின் வாழ்க்கையை வெண்பாவில் எழுத வேண்டும் என்ற ஆசைக்குத் தூண்டுகோல் நண்பர் வெ.கி. திருமாறன் அவர்கள்தான்.

1977ம் வருடம்தில் அப்போதைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தி மதுரைக்கு வந்த பொழுது அவருக்கு தி.மு.க. வினர் கறுப்புக் கொடி காட்டியதில் வன்முறை நடந்து, அதில் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் தாக்கப் பட்டு, மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தார். சென்னையில் மெரீனா கடற்கரையில் ஒரு பிரும்மாண்டப் பொதுக் கூட்டம் ஏற்பாடாகி இருந்தது. அந்தக் கூட்டத்திற்கு அவன் செல்ல விரும்பினான். தன் விருப்பத்தை அவன் திருமாறன் அவர்களிடம் சொன்னபொழுது, அவனை அழைத்துக் கொண்டு சென்று கூட்டத்தில் முக்கியமானவர்கள் அமரும் வரிசையில் அமர வைத்தார். பாரதப் பிரதமரின் பேச்சை அவன் மிக அருகில் இருந்து கேட்டான். அதன் பிறகு இரண்டு வாரங்கள் கழித்து அவனை மயிலாப்பூரில் சோலையப்பன் தெருவில் இருந்த காங்கிரஸ் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களின் இல்லத்திற்கு அழைத்துச் சென்று, “இவர் என் நண்பர், கவிஞர் விஸ்வநாதன்” என்று அறிமுகம் செய்து வைத்தார். அவன் தான் ஒரு காமராஜர் விஸ்வாசி என்று சொன்னபொழுது பழ. நெடுமாறன் அவர்கள் அவனை கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஒருநாள் மாலையில் அவனுடைய அறைக்கு வெ.கி. திருமாறன் வந்திருந்த பொழுது அவனுக்கு நண்பன் சுரேஷ்ம் இருந்தான். அவர் அவனை நடிகரும், இலக்கியவாதியுமான ஸ்ரீகாந்த் அவர்களின் கோபாலபுரம் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். ஸ்ரீகாந்த் அவர்கள் திரைபடத் துறையில் உச்சத்தில் இருந்த நேரம். த. ஜெயகாந்தனின் சிலநேரங்களில் சிலமனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், தங்கப்பதக்கம் போன்ற வெற்றிப் படங்கள் அவரது நடிப்பைப் பாராட்டிக் கொண்டிருந்த காலம். திருமாறனும், ஸ்ரீகாந்த் அவர்களும் நல்ல நண்பர்கள். இருவரும் காமராஜரின் பக்தர்கள். ஸ்ரீகாந்த் அவர்களுக்கு அவனை அறிமுகம் செய்து வைத்த பொழுது அப்பொழுதான் வெளிவந்திருந்த த. ஜெயகாந்தன் அவர்களின் “மகாயக்யம்” நாவலின் ஒரு பிரதியை அவனுக்குப் படிக்கக் கொடுத்தார். மேலும் இரண்டு ஆங்கில நாவல்களையும் படிக்கக் கொடுத்து விட்டு, ” நீங்கள் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வாருங்கள்” என்றார். அதன் பிறகு அவன் திருமாறன் அவர்களுடனும், தனியாகவும் பலமுறை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீகாந்த் அவர்களின் இல்லத்திற்குச் சென்றிருக்கிறான். எப்பொழுது போனாலும் அன்போடு உபசரித்துப் பேசுவார். இது போன்ற நல்ல தொடர்புகளைத் தந்த நண்பர் வெ.கி. திருமாறன் அவர்கள் இளம் வயதிலேயே மரணம் அடைத்தது வருத்தமாகத்தான் இருக்கிறது.

“நண்பர் கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்”

அவனுக்கு கவிஞர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்களின் தொடர்பு அவனுக்கு தாய்மாமா மூலம் கிடைத்தது. அவனுக்கு மாமாவும், ஏர்வாடி இராதாகிருஷ்ணனும் சென்னை பாரிமுனையில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்தனர். ஒருநாள் அவனுக்கு மாமா அவனை கவிஞர் ஏர்வாடி அவர்களிடம் அறிமுகப் படுத்தி வைத்தார். அப்பொழுது ஏர்வாடி இராதாகிருஷ்ணன் சென்னையில் மேடை நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தார். சென்னை தொலைகாட்சியிலும், வானொலியிலும் அவரது படைப்புகள் வந்து கொண்டிருந்தன. ஒருநாள் கவிஞர் ஏர்வாடி அவர்கள் அவனை சென்னை வானொலி நிலையத்திற்கு வரச்சொன்னார். அவன் அங்கு சென்ற பொழுது, அங்கு நிகழ்ச்சிப் பொறுப்பாளராக இருந்த “லீலா” அவர்களிடம், ” இந்தத் தம்பி நல்ல கவிதைகள் எழுதுகிறார்…இவரைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்” என்று அறிமுகம் செய்து வைத்தார். அதுமுதல் சென்னை வானொலியில் நிறைய கவிதைகளும், சிறுகதைகளும் அவன் வாசித்திருக்கிறான்.

1977ம் வருடம் நவம்பர் மாதத்தில் ஒருநாள் கவிஞர் ஏர்வாடி இராதாகிருஷ்ணன், கவிஞர் கோவேந்தன் அவர்களையும் அழைத்துக் கொண்டு திருவல்லிக்கேணியில் அவன் தங்கியிருந்த அறைக்கு வந்திருந்தார். அவனிடம், “விசு…நாங்க கவிதை உறவு என்ற அமைப்பைத் துவங்கியிருக்கிறோம். அதன் செயலாளராக நான் இருக்கிறேன். தலைவராக கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியன் இருக்கிறார். நீங்கள் பொருளாளராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்…அது ஒன்றும் பெரிய வேலை இல்லை. மாதம் ஒரு கூட்டம் அண்ணாசாலையில் இருக்கும் மத்திய நூலகத்தில் நடக்கும். அதற்குக் கட்டணமாக பத்துரூபாய் கட்டவேண்டும். தொடர்ந்து நல்ல நிகழ்ச்சிகளை நாம் எல்லோரும் சேர்ந்து செய்யலாம்” என்று சொல்லி ஊக்கப் படுத்தினார். தொடர்ந்து மாதம் ஒரு இலக்கியக் கூட்டம் அருமையாக நடந்து வந்தது.

1978ம் வருடம் ஜனவரி மாதம் சந்திக்கும் பொழுது, ” விசு…நாம் இன்னும் சில கவிஞர்களுடன் சேர்ந்து மார்ச் மாதத்தில் “வண்ணங்கள்” என்ற தலைப்பில் ஒரு கவிதை நூல் வெளியிட வேண்டும். கவிஞர் வேதம், கவிஞர் மதிவண்ணன், ரிசர்வ் வங்கியில் வேலை செய்து வந்த கவிஞர் பகத்சிங், கவிஞர் கிருஷ்ணமூர்த்தி என்று ஒரு பத்து பேர்களது கவிதைகளைத் தொகுத்து வெளியிட திட்டமிருக்கிறது. நீங்களும் உங்களது படைப்பைத் தாருங்கள்” என்றார். அவரே அனைவருடனும் தொடர்பு கொண்டு கவிதைகளைப் பெற்றுத் தொகுத்து, முனைவர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களிடம் நூலுக்கு ஒரு வாழ்த்துரையும், பாரதிகலைக் கழகத்தின் தலைவர் , பாரதி இரா. சுராஜ் அவர்களிடம் மதிப்புரையும் வாங்கினார்.

ae5eac49-bf5b-4947-8a48-d4819cb1b750

புத்தக வெளியீட்டு விழா தொடர்பாக கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியன் அவர்களைச் சந்திக்க மயிலாப்பூரில் இருந்த அவரது இல்லத்திற்கு கவிஞர் கோவேந்தனுடன் அவனையும் அழைத்துப்போய் அவரிடமும் அறிமுகம் செய்து வைத்தார். “…மீசை வைத்ததனால் இவர் மீ.விசுவநாதன் ஆனாரோ” என்று அவனை கவிஞர் கு.மா.பா. தட்டிக் கொடுத்தார். கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர்களை அறிமுகப் படுத்தும் பொழுதும் அவனை இப்படித்தான் சொல்லி கவிஞர் கு.மா.பா. அறிமுகம் செய்தார். விழாவில் கவிதை நூலை வெளியிட்டு அப்பொழுது அறநிலைத் துறையின் அமைச்சராக இருந்த திரு. R. M . வீரப்பன் அவர்களும், வாழ்த்துரையாக முனைவர் சிலம்பொலி செல்லப்பன், பாரதி இரா.சுராஜ் போன்ற பெரியோர்களும் பேசினார்கள்.

கவிதை உறவு என்ற அமைப்பை இன்றுவரைத் தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல் “கவிதை உறவு” என்ற இலக்கிய மாத இதழையும் கவிஞர் ஏர்வாடி இராதகிருஷ்ணன் நடத்தி வருகிறார். அதில் அவர் எழுதிவருகிற “என் பக்கம்” பகுதியில் நல்ல சிந்தனைகளைப் பதிவு செய்து வருகிறார்.

கவிஞர் ஏர்வாடி அவர்களை மாத்திரம் இன்றி அவரது குடும்பத்தினர்களுடனும் அவனுக்குத் தொடர்பு இருந்து வருகிறது. அவருக்கு சங்கர் என்ற மகனும், சுதா என்ற மகளும் உண்டு. அவரது மகள் சுதா பெயரில்தான் “சுதா பதிப்பகம்” என்ற பதிப்பகத்தைத் துவங்கினார். சுதா பதிப்பகம் மூலமாகத்தான் “வண்ணங்கள்” கவிதைத் தொகுப்பும் வெளியானது.

கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவனுக்கு என்றும் ஒரு நல்ல நண்பர்.

11.03.2016

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “அவன், அது, ஆத்மா (47)

  1. வண்ணங்கள் தொகுப்பில் என் கவிதையும் வந்தது.  நல்ல நினைவுகள்.  இந்தப் படத்தைப் பார்க்கும்போது தற்போதைய விசு கலைந்து என் பழைய நண்பன் விசுவைப் பார்க்க முடிந்தது.  வாழ்த்துகள் விசு.

  2. ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன், எனக்கும் நண்பர். 90களில் அவரது கவிதை இரவு நிகழ்ச்சிகளில் பல முறைகள் கவிதை வாசித்திருக்கிறேன். கவிதை உறவு மாத இதழுக்கு என்னைச் சிறப்புத் துணையாசிரியராகவும் அறிவித்தார். 

    பழ.நெடுமாறன் உடனும் எனக்குத் தொடர்பு உண்டு. அவரது புத்தகங்களுக்கும் தென் ஆசியச் செய்தி பத்திரிகைக்கும் மெய்ப்பாளராகச் சிறிது காலம் பணியாற்றி இருக்கிறேன்.

    சென்னை வானொலியின் இளைய பாரதம் பிரிவில் நானும் பல முறைகள் கவிதை வாசித்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகச் சுமார் 5 ஆண்டுகள் அங்கே தற்காலிக நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றினேன். அக்காலத்தில் நானும் பலரை அங்கே அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.

    மீ.விஸ்வநாதன் வாழ்க்கை நிகழ்வுகள் சில, எனக்கும் பொருந்துகின்றன 🙂

  3. அன்பு நண்பனின் பெயர் விடுபட்டதற்கு  மன்னிக்கவும். அந்தப் புத்தகம்  இப்பொழுது  என்னிடம் இல்லை. பழைய நினைவுகளில்தான்  எழுதினேன். உங்களைப் பற்றிய நினைவுகளைப் பதிவு செய்ய  என் ஆழ்மனத்தில் நிறைய உண்டு. நேற்று கூட உங்களது பாஞ்சாலி சபதம் உரையை மீண்டும் படித்துக் கொண்டிருந்தேன். உங்களையும், பேராசிரியர் அவர்களையும்  நினைத்துக் கொண்டேதான் அந்தப் புத்தகத்தைப் படிக்க முடிகிறது. உங்கள் சத்சங்கம் என் பாக்கியம். 
    நட்புடன். 
    மீ.விசுவநாதன்

  4. அன்பு நண்பர் அண்ணாகண்ணன் அவர்களின் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.
    மனிதர்கள் ஒருவருக்கொருவர் எப்பொழுதோ  ஒரு முறையேனும் சந்தித்தாலும் அதை நன்றியுடன் நினைவு கொள்வது ஒரு தனி சுகம்தானே. 
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *