சித்தார்த்தா பள்ளி
– தேமொழி.
சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்
காலை கழிந்ததன் பின்றையு – மேலைக்
கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான்
முறைமைக்கு மூப்பிளமை யில்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
சால மறைத்து ஓம்பிச் சான்றவர் கைகரப்ப,
காலை கழிந்ததன் பின்றையும், மேலைக்
கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்;-
முறைமைக்கு மூப்பு இளமை இல்.
பொருள் விளக்கம்:
மிகவும் முயன்று மறைத்துப் பேசி, அறிவுடையார் இது குற்றமன்று என்றாலும், காலம் கடந்த பின்னரும், முன்னர் பசுவின் கன்றைக் கொன்றவனை, அவனது தந்தையே தேர்க்காலில் இட்டுக் கொன்றான், (எனவே) நீதி வழங்க முதுமையடைந்தவர் இவர், இளமையானவர் என்ற பேதம் பார்க்கத் தேவையில்லை.
சிலப்பதிகாரம், புறநானூறு, பழமொழி, மூவருலா, கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம் போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மனுநீதிச்சோழனின் கதை இப்பாடலில் எடுத்தாளப்பட்டுள்ளது. அனைவரும் அறிந்த மனுதீதிச்சோழன் கதையினை அடிப்படையாகக் கொண்டு அரசனின் செங்கோன்மை நடுநிலையுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. “முறைமைக்கு மூப்பு இளமை இல்” என்பதற்கு விளக்கமளிக்கும் உரையாசிரியர்கள் வெவ்வேறு முறைகளிலும் விளக்கமளித்துள்ளார்கள்.
கன்றை இழந்த பசு ஒன்று நீதி வேண்டி ஆராய்ச்சிமணியினை அடிக்க, அதன் காரணத்தை விசாரித்து, அந்தப் பசுவின் கன்றின் மீது தேரோட்டிக் கொன்றவன் தனது மகன் என அறிகிறான் அரசன். அமைச்சர்கள் தங்களது நாவன்மையால் அது குற்றமல்ல என மறுக்க முற்படுகிறார்கள். அவர்கள் அரசன் ஆணையை ஏற்று இளவரசனைத் தேர்க்காலில் ஏற்ற மறுத்துப் பின்வாங்கினாலும், அரசன் பசுவுக்கு நீதிவழங்கும் பொருட்டு, கன்றினைக் கொன்ற தனது மகனின் மீது தானே தேரோட்டி பசுவுக்கு நீதி வழங்கினான்.
நீதி வழங்கும்பொழுது குற்றவாளி ஓர் இளவயதினன் என்பதற்காகக் கருணை காட்டவில்லை என்ற வகையிலும் விளக்கமளிக்கப்படுகிறது.
மாற்று விளக்கமாகக் கூறப்படுவது பசு ஆராய்ச்சிமணி அடித்து நீதி கேட்டதைப் பற்றிய கதைக் கருத்தை முன் வைக்கவில்லை. இளவரசன் கன்றினைத் தேரேற்றிக் கொன்றதைக் கற்றறிந்த அமைச்சர்கள் பலவாறு பேசி மறைத்துவிடுகிறார்கள். பின்னொருநாளில் அரசனுக்குத் தனது மகன் இழைத்த குற்றம் தெரிய வருகிறது. காலம் கடந்துவிட்டாலும் முன்னாளில் தனது மகன் செய்த குற்றத்திற்காக, அவன் மீது தேரேற்றி தண்டனை வழங்குகிறான் மன்னவன். காலம் கடந்தாலும் நீதி நிலைநாட்டப்படுகிறது.
காலம் கடந்துவிட்டாலும் குற்றத்திற்குத் தண்டனை வழங்கப்படவேண்டும் என்ற விளக்கமும் அளிக்கப்படுகிறது.
பழமொழி சொல்லும் பாடம்: முதியவர் அல்லது இளைஞர் எனக் குற்றவாளியின் வயதினைக் கருத்தில் கொண்டு, சார்பு நிலையுடன் நீதி வழங்கப்படுவது சரியல்ல. குற்றம் செய்தவர் யார் என அவர் பின்புலம் கண்டு மயங்காது, நடுவுநிலை தவறாது நீதி வாங்க வேண்டுமென்பதை வள்ளுவர்,
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள்: 541)
நிகழ்ந்த குற்றத்தினை ஆராய்ந்து, விருப்பு வெறுப்பின்றி, சார்புநிலையைத் தவிர்த்து, நடுவுநிலைமை கொண்டு வழங்கப்படுவதே நேர்மையான தீர்ப்பாகும். எனவே,
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. (குறள்: 118)
என்ற குறள் விளக்குவது போல எப்பக்கமும் சாயாமல், நடுவுநிலை தவறாது, துலாக்கோல் போல சீர்தூக்கிப் பார்த்து நியாயம் வழங்குவதே நேர்மையான சான்றோருக்கு அழகு.
– சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே !
அன்பான வணக்கங்கள்.
காலதேவதை கருணையற்று தமிழகத்தின் தலைநகரைத் தனித்தீவாக்கிய இக்கட்டான வாரத்திலே உங்கள் முன்னே இம்மடலுடன்.
வடகிழக்குப் பருவமழை எனும் காலசக்கரத்தின் இயல்பான சுழற்சியின் ஒரு கோரத்தாண்டவ முகத்தைப் பார்க்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். “காய்ச்சலும், தலையிடியும் தனக்கு வந்தால்தான் தெரியும்” என்பர் முன்னோர்கள். பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் இருந்து கொண்டு என் இனிய உடன்பிறப்புகள் படும் இன்னல்களைத் தொலைக்காட்சி வழியாகவும், சமூக வலைத்தளங்களின் வழியாகவும் மட்டுமே அறிந்து கொள்ளக்கூடிய ஒரு நிலையில் இருந்து கொண்டே இம்மடலை வரைகிறேன்.
தண்ணீர், தண்ணீர் என்று வறட்சியால் தாகத்திற்காக தவித்த காலம் போய், சுற்றி நிறைந்து வழியும் நீரின் மத்தியிலும் தாகத்தினால் தவித்திடும் பலரின் நிலை உள்ளத்தை உறையச் செய்கிறது. ஆங்காங்கே வெள்ளத்தின் மத்தியில் சிக்கித் தவிப்போரின் உதவிக்கான கோரிக்கைகளைக் கண்டும் உதவ முடியா நிலையில் உலகின் மற்றொரு கோடியில் உடைந்த உள்ளத்தோடு தவிக்கும் என்னைப் போன்ற பலர்.
நூறு வருடங்களுக்குப் பின்னால் வரலாறு காணாத கனமழையென்று அறிவிக்கிறார்கள். சரித்திரம் படைக்கும் பல நிகழ்வுகளும் மனதிற்குப் பெருமை சேர்ப்பதுண்டு ஆனால் அச்சரித்திரப் படைப்புகளில் சில நிகழ்வுகள் இத்தகைய பேரிடர்களையும் நிகழ்த்தி விடுவதுண்டு. தவிப்புடன் என் தமிழக நண்பர்கள் பலரையும் முடிந்தளவு தொடர்பு கொண்டு நிலையறிந்தேன் ஆயினும் தொடரும் மின்சாரத் துண்டிப்பினாலும், தொலைத்தொடர்புத் துண்டிப்பினாலும் பல சமயங்களில் தொடர்புகொள்ள முடிவதில்லை.
இத்தகைய ஒரு நிகழ்விற்கு யாரையுமே குறையோ, அன்றிக் குற்றமோ கூறமுடியாது. இது அதற்கான சமயமுமல்ல. இயற்கையின் அனர்த்தங்கள் சொல்லிக் கொண்டு வருவதில்லை. காலமகளின் நர்த்தனங்களில் நிகழும் கோரத்தாண்டவங்களில் இதுவும் ஒன்று.
இத்தனை இன்னல்களின் மத்தியிலும் நெஞ்சை நிறைத்திடும் செய்தியொன்று பகர்கின்றேன். சமூகவலைத்தளங்களைப் படிக்கும் போதும், என்னுடன் தொடர்பிலிருக்கும் அன்புச் சோதரர்களின் பகிர்வுகளைப் படிக்கும் போதும் தத்தளிக்கும் தம் சமுதாய அங்கத்தினரைப் பாதுகாக்கும் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட உத்தம நெஞ்சங்களின் சேவையே அது.
இயற்கை தம்மீது வீசிய அனர்த்தங்களைச் சவாலாக எடுத்துக் கொண்டு அடுத்தவரின் கண்ணீர் துடைக்க துடித்தெழுந்து சேவையாற்றும் இவர்கள் செய்வதே உண்மையான மகேசன் சேவையாகிறது. இத்த மனப்பான்மை உடையோர்களை ஒன்றிணைத்து விஞ்ஞான மையத்தில் விளையாடும் சமூகவலைத்தளங்களை வெறும் பொழுதுபோக்கு சாதனங்களாகப் பயன்படுத்தாமல் பேரிடரால் அல்லலுறும் மண்ணின் மைந்தர்களை காக்கப் பாடுபடும் இவர்களின் தீரத்திற்கு சிரந்தாழ்த்தி வணங்குகிறேன்.
என் இனிய சோதரர்கள் தமிழகத்து உறவுகள் தம் இன்னல் விரைவில் தீர்ந்திட அனைவர்க்கும் பொதுவான, அனைத்துக்கும் அப்பாற்பட்ட இயற்கையெனும் இறையை வணங்குகிறேன்.
பொங்கிவரும் வெள்ளத்தைப்
பொத்திப் பிடிப்பது போல்
கருமேகங் கொண்டு மூடி
கண்மூடித் திறப்பதற்குள்
கதவைத் திறந்தது போல்
வரலாறு காணாத கனமழை
வாட்டுகிறது என் இனிய
உடன்பிறப்புகளைத் தமிழகத்தில்
அன்னைத் தமிழின் தலைநகராம்
அழகுசூழ் முத்தமிழின் பிறப்பிடம்
மூவேந்தர் திறன் கண்ட தமிழகம்
மூழ்கித் தத்தளிக்கிறது வெள்ளத்தில்
அந்தோ பரிதாபம் எத்தனை மக்கள்
அலறி அடித்து உயிர் காக்க போராட்டம்
வேதனைத் தீ கொண்டு நெஞ்சத்தை
வேகவைத்துப் பார்க்கின்ற காலமகள்
நெடுஞ்சாலைத் தெருக்களெல்லாம்
நீண்டு விரிந்திருக்கும் ஏரியென
கண்பாயும் இடமெல்லாம் கனநீராய்க்
காட்சி தரும் கோலமதை என்னவென்பேன்
இல்லை, இல்லை தண்ணீர் என ஏக்கம்
இருந்த பொழுதுகள் அவை ஓராயிரம்
எல்லை இல்லா நீர்ப்பெருக்கால் சோதரர்
தொல்லையுறும் பொழுதுதானோ இக்கணம்
சுற்றிக் காண்பதெல்லாம் நீராய் இருந்தும்
வற்றித் தாகத்தால் தவித்திடும் கோலம்
முற்றி விட்ட கருமேகம் உடைந்து அங்கே
கொட்டித் தீர்த்திடும் அளவுகாணா மழைநீரே
போதும் உந்தன் விளையாட்டு இறைஞ்சுகிறோம்
இயற்கைத் தாயே கருணை காட்டு அம்மா !
உறக்கமிழந்து தவித்திடும் உடன்பிறப்புகள்
உறங்கக் கொஞ்சம் அவகாசம் கொடுத்திடு
பலகாத தூரம் கடந்து இங்கே நானும்
பதைத்திடும் நெஞ்சோடு வேண்டுகிறேன்
அனைவர்க்கும் பொதுவான அற்புத சக்தியே
அளித்திடுவாய் அமைதியை தமிழன்னை மண்ணிற்கு
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடனும், ஆழமான துயருடனும்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
படங்கள் உதவி விக்கிபீடியா
-கவிஜி
புத்தனிடம் பேச
எதுவுமில்லாத யசோதரையிடம்
பேச நிறைய இருக்கிறது…!
***
உலகின் முதல் கதையும்
கடைசிக் கதையும்
‘கடவுள்’ ஆகவே இருக்கிறது…!
***
கைகளை எவ்வளவு
அகலமாக விரிக்க
முடிகிறதோ
அவ்வளவுதான் வானம்
குழந்தைக்கு…!
***
பூவைச் சூடிக்
கொண்ட தோட்டம் என
உன் கல்லறை…!
***
உங்கள் வீட்டுப்
பூனைகளிடம்
கேட்டுவிடாத கேள்விகளில்
எங்கள்வீட்டு அடுப்பு கடைசியாய்
எரிகிறது…!
கீதா மதிவாணன்
தலைப்பே நூலின் சாராம்சத்தை சொல்லிவிடுகிறது. மறைந்த பிரபல நகைச்சுவை நடிகரான சந்திரபாபு அவர்களிடமிருந்து கண்ணீர் வெளிப்பட்ட தருணங்களையும் புன்னகை வெளிப்பட்ட தருணங்களையும் மிக அழகாகப் பதிவு செய்திருக்கும் இப்புத்தகத்தின் ஆசிரியர் முகில் அவர்கள். ‘பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த ஒருவரின் வாழ்க்கையைத் தேடித் தொகுப்பது என்பது பாலைவனத்தில் மினரல் வாட்டரைத் தேடி அலைவதற்கு சமம்’ என்ற வரிகளின் மூலம் இந்நூலாக்கத்துக்கான தன் சிரமங்களைத் தெரிவிக்கிறார் நூலாசிரியர்.
முன்னுரையே நமக்கு சந்திரபாபுவைப் பற்றிய முன்னறிமுகத்தைத் தந்துவிடுகிறது. சந்திரபாபு பற்றிய இந்நூலைத் தொகுக்கும்போது தனக்கேற்பட்ட உணர்வுகளை இவ்வாறு விவரிக்கிறார் ஆசிரியர். “திங்கள்கிழமை கிடைக்கிற தகவல்களின்படி சந்திரபாபு ‘செம ஜாலி ஆளுப்பா’ என எண்ணத் தோன்றும். செவ்வாய்க்கிழமை ‘மனுஷனுக்கு லொள்ளு ஜாஸ்தி’ என்று நினைப்பேன். புதன்கிழமை, யாரிடமாவது பேசிவிட்டு வரும்போது ‘அய்யோ பாவம் சந்திரபாபு’ எனப் பரிதாபப்படுவேன். வியாழக்கிழமை, வேறொரு நபருடன் பேசும்போது ‘ச்சே, சந்திரபாபு கெட்ட பையன்’ என்று மனம் நினைக்கும். வெள்ளிக்கிழமை, ‘அட, இந்த ஆளு இவ்வளவு நேர்மையா வாழ்ந்திருக்காரே’ என்று வியப்பேன். சனிக்கிழமை, பழைய பத்திரிகைகள் எதையாவது புரட்டினால், ‘என்ன தைரியம் இருந்தா மனுஷன் இப்படிச் சொல்லுவாரு’ என்று தோன்றும். ஞாயிற்றுக்கிழமையோ, எல்லாவற்றையும் சேர்த்துவைத்து யோசிக்கும்போது, நாயகன் ஸ்டைலில் ‘சந்திரபாபு நல்லவரா? கெட்டவரா? என எனக்கு நானே கேட்டுக்கொள்வேன்.”
நூலாசிரியருக்கு ஏற்பட்ட அத்தனை உணர்வுகளும் வாசிக்கும் நமக்கும் உண்டாகும் வகையில் வெகு சிறப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூலில். ஆசிரியர் மேலும் குறிப்பிடுகிறார். “சந்திரபாபு போன்ற ஒரு மாபெரும் கலைஞரின் வாழ்க்கை அடுத்த தலைமுறைகளுக்கும் பாடமாக இருக்கும் தகுதி பெற்றது”. வழிமொழியும் பதிப்பாசிரியரும் “இந்தத் தலைமுறைக் கலைஞர்கள் இவர் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவர்கள் மட்டுமல்ல, நீங்களும்தான், ஆகவே படியுங்கள்’ என்று பரிந்துரைக்கிறார்.
உண்மைதான். சந்திரபாபுவின் வாழ்க்கை அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் ஒரு பாடம்தான். எப்படி வாழவேண்டும் என்பது ஒருவகை பாடம் எனில் எப்படி வாழக்கூடாது என்பது இன்னொருவகையான பாடம்தானே.
பிறப்பு வளர்ப்பு திருமணம் இறப்பு என்ற வரிசைக்கிரமப்படி அல்லாமல் தொகுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது என்பதே புத்தகத்தின் சுவாரசியம் கூட்டும் ஒரு விஷயம். முதல் அத்தியாயமே அவரது தற்கொலை முயற்சியில்தான் துவங்குகிறது. இவ்வுலக வாழ்வின் முடிவை நோக்கிய அவரது பயணமே அவரது கலையுலகப் பயணத்தின் ஆரம்பமாக அமைந்திருக்கிறது.
சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மகனாய்ப் பிறந்து திரைத்துறையில் கால்பதிக்கத் துடித்த அந்தக் கலைஞனின் வாழ்க்கையில்தான் எவ்வளவு மேடுபள்ளங்கள்… திருப்பங்கள்… உப்பு சத்தியாக்கிரகம் செய்ததற்காக அவரது தந்தை சிறை சென்ற வேளையில் தீரர் சத்தியமூர்த்தியின் இல்லத்தில் விடப்பட்ட பதினொரு வயது பாபுவைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு யாரிடம் விடப்பட்டது தெரியுமா? பெருந்தலைவர் காமராஜ் அவர்களிடம்தாம்.
நாற்பத்தாறு வயதிலேயே மரணத்தைத் தழுவிக்கொண்ட மகத்தான கலைஞனின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களை புத்தகத்திலிருந்து இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
நடிப்பின் மீதான மோகமும், கலையார்வமும், தொழில்பக்தியும், எதையும் தனித்துவத்துடன் செய்யவேண்டுமென்னும் தீராத ஆர்வமும் அவரை உச்ச நிலைக்குக் கொண்டுபோயின என்றால் குடிப்பழக்கமும், பெண்மோகமும், அதீத தற்பெருமையும், மற்றவர்களைப் பற்றி தன் மனத்தில் நினைப்பதை எல்லாம் ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தும் தன்மையும் அவரை படு பாதாளத்தில் வீழ்த்தின. திருமண வாழ்வில் அவருக்கு உண்டான தோல்வியே அவரது தீவிர குடிப்பழக்கத்துக்குக் காரணமாக சொல்லப்படுகிறது. அவரது திருமணவாழ்வு குறித்த செய்திகள் இதுவரை நான் கேள்விப்பட்டதிலிருந்து மாறுபட்டவையாக இருப்பதை இப்புத்தகம் வாயிலாகவே அறியமுடிந்தது.
பேசும் படம் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் தன்னைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதாவது…
பெயர் – சந்திரபாபு
செய்யும் தொழில் – நடிப்பது
தெரிந்த வேறு தொழில் – செல்ஃப் ஷேவிங்
என்னைப் பற்றி நான் கொண்டிருக்கும் எண்ணம் – உலகத்திலேயே வாழும் மிகப்பெரிய மனிதன் நான், நானேதான்.
என்னைப் பற்றி எனக்கே உள்ள மாறான கருத்துகள் – நான் அழகின் அடிமை. அழகு என்னை வசியப்படுத்தி விடும். மற்றவர்கள் அழகை ரசிப்பதற்கும் நான் அழகை ரசிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. ஒரு கற்பாறையை சிலையாக வடித்தால் பலர் ரசிப்பார்கள். நான் கற்பாறையையே ரசிப்பேன். மறைந்து கிடக்கும் இயற்கையின் அழகை நான் அதில் காண்பவன்.
உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத மனிதர்கள் யார்? – என் வாழ்க்கையில் மூன்று பேரை நான் மறக்கமாட்டேன். ஆமெரிக்க அதிபர் ஆப்ரஹாம் லிங்கன், எனது மாமனார், ஜெமினி கணேசன் ஆகியோர்.
(அதற்காக அவர் சொல்லும் காரணங்கள் விசித்திரம்.)
நீங்கள் ஊரோடு ஒத்து வாழ்ந்தால் என்ன என்ற கேள்விக்கு இப்படி விடைதருகிறார்.
‘ஊரோடு ஒத்து வாழ். கேட்பதற்கு இனிமையாகதான் இருக்கிறது. என்னைவிட, அறிவில் குறைவானவர்களையே அதிக எண்ணிக்கையில் இங்கு நான் சந்திக்கிறேன். என் பார்வைக்கு அவர்கள் பைத்தியக்காரர்களாகத் தெரிகிறார்கள். அவர்கள் பார்வைக்கு நான் பைத்தியக்காரனாகத் தெரிகிறேன். ஏதோ ஒரு சிலர்தான், அத்திப்பூவைப் போல் அறிவில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என்னை ஓரளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். நானும் அவர்களைப் புரிந்துகொண்டிருக்கிறேன். மற்றவர்களைப் பற்றி நான் ஏன் கவலைப்படவேண்டும்?’
1951 முதல் 1971 வரையிலான இருபது ஆண்டுகால திரையுலக வாழ்க்கையின் முன்னும் பின்னும் முரண்களின் மூட்டையாகிப் போனார் சந்திரபாபு. எப்படியெனில்.. விருந்தோம்பும் பண்பால் கலையுலகத்தையே அசரவைத்த அவர்தான் பின்னாளில் ஒரு பிரியாணிக்காக அலையாய் அலைந்திருக்கிறார். ராஜா அண்ணாமலைபுரத்தில் தரைத்தளத்திலிருந்து இரண்டாவது தளத்துக்கு காரிலேயே போகும்படியாக ஒரு பங்களா கட்டிக்கொண்டிருந்த சந்திரபாபுதான், வாடகை தரவும் வழியில்லாமல் வீட்டை அமீனா வந்து காலி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
சிவாஜி கணேசன், எம்ஜியார், ஜெமினி கணேசன், கண்ணதாசன் போன்ற பிரபலங்களுடன் நடிகர் சந்திரபாபு முரண்பட்ட தருணங்களை விவரிக்கும் அதே வேளை, பாலாஜி, தேங்காய் சீனிவாசன், எம் எஸ் விஸ்வநாதன் போன்றோருடன் அவருக்கிருந்த அந்நியோன்னிய நட்புறவையும் ஒருங்கே பதிவு செய்துள்ளது இப்புத்தகம்.
எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் சந்திரபாபுவுக்கும் இடையிலான நட்பு குறித்தும் பேசுகிறது இப்புத்தகம். ஜெயகாந்தன் சொல்கிறார், “பாபுவுக்கு இயற்கையாகவே நடிப்புத்திறமை, பாட்டுத்திறமை ஆகியவை எல்லோரும் விரும்பும் வகையில் அமைந்திருந்தன. அவற்றையெல்லாம் ஓர் ஊதாரியைப் போல் இந்த சினிமா உலகுக்கு வாரி இறைத்ததன் விளைவாக, அவருக்கு அதீதமான ஏற்றத்தையும், எதிர்பாராத வீழ்ச்சியையும் இந்த சினிமா உலகமே கொண்டுவந்துவிடும் என்று நான் அஞ்சினேன். எனது அச்சத்தை உரிமையோடு பலமுறை அவரிடம் கூறினேன். மிகவும் உருக்கமான நேரங்களில் அவர் திடீரென்று சிரிப்பார். அதேபோல சில நேரங்களில் அழுவார். இப்படிக் கண்களில் கண்ணீர் வருகிற அதே மனிதன், சில சமயங்களில் சட்டைக் காலரை உயர்த்திப் பிடித்துக்கொண்டு “I am Babu” என்று வல்லமை பேசுகிற காட்சி இன்னும் ரசமாக இருக்கும்.”
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த சகோதரி என்ற திரைப்படத்தைப்போட்டுப் பார்த்த ஏவிஎம் செட்டியாருக்கு திருப்தி ஏற்படவில்லையாம். படம் எடுபடாது என்று நினைத்த அவர் படத்தை ஓடவைக்க சந்திரபாபுவை அழைத்துப் பேசியிருக்கிறார். நல்ல காமெடியை பத்து நாட்களில் படமாக்கிப் படத்துடன் சேர்த்து ஒரு கோர்வையாக்கிக் கொடு என்றாராம் செட்டியார். சந்திரபாபு ஒருநாள் யோசித்து முடிவைச் சொன்னாராம். அவரது முடிவைக் கேட்ட செட்டியார் அசந்துபோய்விட்டாராம். அப்படி என்ன சொன்னார்?
“ஏழு நாட்களில் சிறப்பான நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கித் தருகிறேன். எனக்கு லட்ச ரூபாய் தாருங்கள்” என்றாராம். முதலில் மறுத்த செட்டியார் சந்திரபாபு மீது கொண்ட நம்பிக்கையால் பிறகு ஒத்துக்கொண்டாராம். அன்றைய நாட்களில் ஒரு முழுப்படத்துக்கே முன்னணி நடிகர்கள் ஐம்பதாயிரம், எழுபத்தைந்தாயிரம் என்று வாங்கிக்கொண்டிருந்த நேரத்தில் சந்திரபாபு நகைச்சுவைக் காட்சிக்காக ஒரு லட்ச ரூபாய் வாங்கியது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டதாம்.
தமிழ் சினிமா உலகில் நடிப்பாகட்டும், பாடலாகட்டும், நடனமாகட்டும், தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்த நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையில் இடம்பெற்ற பலரும் அறிந்திராத உச்சத்தருணங்களையும் வீழ்ச்சித் தருணங்களையும் அற்புதமாய்ப் படம்பிடித்துக்காட்டும் புத்தகம் இது.
நூலின் பெயர் – கண்ணீரும் புன்னகையும்
நூலாசிரியர் – முகில் அவர்கள்
பக்கங்கள் – 200
விலை – ரூ. 125
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு
முதல் பதிப்பு டிசம்பர் 2012
–சி. ஜெயபாரதன்.
(1883-1931)
மனிதன் விதிக்குப் பலியானவர் !
“நேற்று நாம் வசித்தோம். இன்று நாம் வாழ்கிறோம். இதுதான் கடவுளின் ஊழ்விதி. வானரத்தின் வாரிசுகளே ! உமது இறுதி வாக்கு மூலம் என்ன ? இந்தப் பூமியின் பொந்துக் குள்ளிருந்து வந்த பிறகு நீங்கள் உமது முதல் தடத்தை எடுத்து வைத்தீரா ?
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
___________________
ஆணுக்குப் பலியான பெண்டிர்
___________________
கடவுள் வனப்புடன் படைத்த
நீ ஓரிளம் பெண்ணா ?
செல்வந்தர்
உன் இதயத்தை விட்டு
உன்னுடலை விலைக்கு வாங்கி
மோக அணைப்புக்கு
இரையாகி
இன்னல் பட்டு வரும்
நீயோர்
ஏமாளிப் பெண்ணா ?
___________________
இப்படித் துன்புறும் பெண் ஒருத்தி
நீயானால்
மனிதன் விதிக்குப்
பலியான பாவை நீ !
துயர்ப் படுபவள் !
வலுத்தோர் அழுத்தப் பிடியில்
அநியா யத்தில்
பழுக்கும் கனி இன்னல் !
செல்வந்தர் கொடுமைச் செருக்கு !
ஒழுக்க மற்றோர் புரியும்
இழுக்குகள் !
___________________
என் ஆறுதல் மொழிகளை
உனக்களிப்பேன்
என்னுயிர்க் காதலி !
நமக்குப் பின்னால்
ஒளிந்திருப்பது
பேராற்றல் படைத்த ஒன்று
இந்த மண்ணுல குக்கு
அந்தப் புறத்தில் !
நேயமும் பரிவும்
நேர்மையும் நியாயமும்
நிறைந்தது !
___________________
மலரைப் போன்றவள் நீ
மரத்து நிழலில்
வளர்ந்து வருபவள் நீ
தென்றல் சுமந்துன் வித்துக்களை
கதிரோன் வெப்பத்தில்
விதைக்கும் !
மீண்டும் முளைப்பவள் நீ
மேனி அழகுடன் !
___________________
குளிர்காலப் பனிப் பொழிவில்
வளைந்திடும்
இலை உதிர் மரம் நீ !
வசந்தம் வந்துன் மீது
பசுமை ஆடையைப் போர்த்தும் !
உன் புன்னகை மறைக்கும்
கண்ணீர்த்
திரையைக் கிழித்திடும்
உண்மை !
என்னரும் சகோதரிகளே !
உம்மை நேசிக்கிறேன்
இணைத்துக் கொள்வேன்
என்னுடன் !
வெறுக்கிறேன் உமது
விரோதிகளை !
___________________
– புலவர் இரா. இராமமூர்த்தி.
நம் நாட்டின் இயற்கைவளத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள மனிதகுலம் கண்டுபிடித்த தொழில் உழவுத் தொழில் ஆகும். இந்த உழவுத்தொழில் உழுதவன் குடும்பத்துக்கு மட்டுமின்றி உலகத்திற்கே உணவூட்டியது. இந்த உதவியைத் திருவள்ளுவர் “ஒப்புரவு” என்று சிறப்பித்தார். ஒருவன் முயற்சியால் ஈட்டிய பொருள்கள் அனைத்தும், அவற்றின் தேவையை உணர்ந்து ஏற்றுக் கொள்வோருக்கு உதவுவதற்காகவே என்று வள்ளுவர் கூறுகிறார். இதனைத்
“தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு”
என்ற குறள் குறிப்பிடுகிறது. இதில் வேளாண்மை என்ற சொல் தக்கார்க்கு உதவுதல் என்ற பொருள் தருகிறது. ஆகவே வேளாண்மை என்பதே பிறருக்கு உதவுதல் ஆகும். இந்த வேளாண்மை என்ற சொல் விவசாயமாகிய உழவுத் தொழிலையே குறிக்கிறது!
உழவுத்தொழிலை நம் இலக்கியங்கள் மிகவும் சிறப்பாகப் போற்றுகின்றன! அரசனின் நால்வகைப் படைகளாலும் பெறுகின்ற வெற்றியே , உழுபடையாகிய கலப்பையை ஊன்றி விளைவிக்கும் பயிர் விளைச்சலால்தான் என்று புறநானூறு விளக்குகிறது! இதனைப்,
“பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே!”(புறம் 35)
என்ற பாடற்பகுதியால் அறிந்து கொள்ளலாம். உழவு என்ற அதிகாரம் வேளாண்தொழிலின் இன்றியமையாமையை விளக்குவதற்காகவே திருவள்ளுவரால் எழுதப் பெற்றது. அதில்,
“பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர். (1034)
என்ற குறளுக்குப் பொருள் கூறிய பரிமேலழகர், மேலே காட்டிய புறநானூற்றுப் பாடற்பகுதியையே எடுத்துக்காட்டாகத் தருகிறார். திரு வள்ளுவரின் உழவு அதிகாரத்தின் ஏழாம்பாட்டும், எட்டாம் பாட்டும் இந்தக் கட்டுரையில் புதிய விளக்கத்தைப் பெறுகின்றன! முதற்பாடல்,
“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்”(1037)
என்பதாகும். இதன் பொருள் ‘நிலத்திலிருக்கும் ஒருபலம் எடையுள்ள புழுதியைக் காற்பலம் எடையுள்ளதாக, நன்கு காய வைத்தபின் அந்த நிலத்திற்கு ஒருபிடியளவு எருவும் போடவேண்டியதில்லை; அது நன்றாக விளையும்’ என்பதாகும். நிலத்தை உழுது, வெய்யிலில் நன்றாகக் காய வைத்தால் அதன் மேற்பரப்பு மண்ணின் ஈரப்பதம் முக்காற்பங்கு குறைந்து விடும்! அதன்பிறகு ஒருபிடி அளவு உரமும் போடவேண்டிய தேவை இல்லை; பயிர் நன்றாக விளையும்! என்கிறார் திருவள்ளுவர். இந்தப் பாடலைத் தொடர்ந்து அடுத்த திருக்குறளில் ,
“ஏரினும் நன்றால் எருவிடுதல்; கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு ” (1038)
என்று பாடுகிறார். இங்கே அவர் நிலத்தில் “ஏரால் உழுவதை விட எரு இடுதல் நல்லது” என்கிறார். அதன்பின் களையை நீக்கிவிடுதல் நல்லது; அதைவிட நீர்பாய்ச்சுதல் நல்லது; அதை விட அந்நிலத்தில் திருட்டுத் தனமாக மாடுகள் நுழைந்து மேயாமல் காவலிட்டுப் பாதுகாத்தல் நல்லது! ” என்று தேவையான செயல்களை வரிசைப் படுத்துகிறார்! முன் பாட்டில் “உழுதபின், காயவைத்தால் போதும், எரு இடவேண்டா”, என்றார்! ஆனால் இந்தப் பாட்டில் முதலில் எருவிடுதலே நல்லது என்கிறார்! இவ்வாறு முரண்பட்ட கருத்துக்களைத் திருவள்ளுவர் கூறினால் அங்கே ஒரு புதிய பொருள் தோன்றும் என்று சான்றோர் கூறுவர். இந்த இரு குறட்பாக்களும் உழவுத் தொழிலை எவ்வாறு செய்வது என்றுதான் கூறுகின்றன!
உழவுத்தொழில் மருதநிலத்தில் ஒருவகையாகவும், முல்லை நிலத்தில் வேறுவகையாகவும் நடக்கும்! ஆம்! இப்போது நாம் புன்செய்நில விவசாயம், நன்செய்நில விவசாயம் என இருவகையாக நாம் உழவுத் தொழில் நடத்துகிறோமல்லவா? அவற்றுள் புன்செய்நில விவசாயத்துக்கு வேண்டிய நடைமுறைகளை,”தொடிப்புழுதி” எனத் தொடங்கும் குறட்பா விளக்குகிறது! அடுத்து , “ஏரினும்” எனத் தொடங்கும் குறட்பா, நன்செய்நில விவசாயம் நடத்தும் முறையைத் தெரிவிக்கிறது! புழுதி நிலத்தைக் காயவைத்து, உரமிடாமல் வானம் பொழிவதை வைத்து வேளாண்மை செய்வதை , அதாவது புன்செய்க் காட்டில் பயிரிடலை முதற் பாட்டு கூறுகிறது. அதனைப் படிப்போம்.
“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்!” (1037)
அடுத்து, ஏரால் உழுது, உரமிட்டு, களை பிடுங்கியவுடன் நீர்ப்பாய்ச்சி, அதன்பின் காவலிடுதலை, அதாவது நன்செய்வயலில் பயிரிடும் முறையை அடுத்த எட்டாம் பாட்டு விளக்குகிறது.அதனையும் படிப்போம்.
“ஏரினும் நன்றால் எருவிடுதல் ; கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு!” (1038)
இவ்வாறு திருக்குறள் காலத்துக்கேற்ற வேளாண்மை முயற்சிகளைப் புதுமையாக விளங்கிக் கொள்ள இடமளிக்கிறது. அவ்வகையில் இந்த இரண்டு குறட்பாக்களும் வள்ளுவரின் புதுமை நாட்டத்தைப் புலப் படுத்துகின்றன!
க.பாலசுப்ரமணியன்
வான்வீட்டுக் கூரை உடைந்ததினால்
என்வீட்டுக் கூரையில் மழை பெய்தது !
எவன் விட்ட கண்ணீரோ விண் விட்டு
மண் வீட்டில் கண்ணீராய் பெருக்கெடுத்தது !
ஊர்விட்டு ஊர் செல்ல வழியறியா மக்கள்
நீர்மட்டில் நிலம் மறையப் பார்த்த கண்கள்
தேரோட்டம் போலத் தெருவெல்லாம் மாக்கள்
வெள்ளோட்டம் அழிவிற்கோ வேதனையில் நெஞ்சம் !
கோடி கொடுத்துக் கூரை கட்டிக் கூவிய செல்வன்
குப்பை வண்டி மேலேறிச் செல்லும் கோலம் !
குறை யில்லா வண்ண உடை நூறு சேர்த்தும்
கோவணத்தில் வீதிவழி செல்லும் காலம் !
முலைப்பாலைக் குழந்தைக்குக் கொடுக்க
மூலையொன்றைத் தேடும் தாயின் துயரம்
மூழ்கிவிட்ட வீட்டைக் கண்டு இளமையிலும்
முதுமையடைந்த மனிதத்தின் கோரம் !
மும்மாரி வேண்டுமென்று தவமிருந்தோர்
முகம்மாறி மனமுடைந்து நிற்கும் நேரம்!
மலர்மாரி பொழிந்து நல்மழை கேட்டோர்
மனம்மாறி ஆதவனைத் தேடும் நேரம் !
பிரளயத்தின் பொருள் கேட்ட ஆசான் முன்னே
பொருளறியாது மருண்டு நின்ற மாணவனும்
பொருளான கட்டுரை அழகாக எழுதிடவே
இருளான பள்ளியில் அருளில்லாத சோகம்!
(1889-1953)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன! அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது! எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க, இயற்கை ஒருபோதும் நம்மை விடுவ தில்லை
ஸெனேகா [Seneca (First Century)]
பிரபஞ்சத்தில் பெரு வெடிப்பிற்குப் பின் விளைந்த புரட்சி!
பெரு வெடிப்புக்குப் பின், பிரபஞ்சத்தில் விளைந்தது மாறுபாடுகள் மிகுந்த மாபெரும் புரட்சி [Chaos]! எங்கெங்கு நோக்கினும் தாறுமாறு, ஒழுங்கீனம்! விண்வெளியில் விண்மீன்கள் இல்லை! பால்மய வீதிகள் இல்லை! காலக்ஸிகள் இல்லை! உயிரினமோ, விலங்கினமோ எதுவும் இல்லை! ரசாயனக் கூட்டுகள் கிடையா! அங்கிங்கு எனாதபடி எங்கும் கதிரெழுச்சிகள்! கதிர் வீச்சுகள்! வெறும் துகள்கள் [Particles]! பரமாணுக்கள் [Sub atomic particles]! துகள்களின் நாட்டியம்! தொடர்ந்து அவை யாவும் நகர்ந்து முட்டி மோதி, இணைந்து, பிணைந்து புதுத் துணுக்குகள் உண்டாயின! மோதலில் சில துகள்கள் அழிந்தும் போயின! எங்கும் தணல், வெப்பம், கற்பனிக்க இயலாத அளவில் புரட்சித் துகள்கள் [Chaotic Particles] உமிழ்ந்த உஷ்ணம்! அதே கணத்தில் கொட்டும் பேரொளி அருவிகள்! அடுத்து எங்கணும் எக்ஸ்ரே கதிர்கள் எழுச்சி! மைய மில்லாத, கங்கு கரையற்ற எல்லை மீறிய வெளி! எங்கெங்கு காணினும் சக்தி மயம்! எந்தெந்த அடிப்படைகளில் பிறக்க முடியுமோ, அந்தந்த தோற்றங்களில் உருவாகிச் சக்தியின் தாண்டவம்!
எத்திக்கிலும் விரிவு! வெளியெங்கும் விரிவு! விரிவு! விரிவு! ஈர்ப்பியல் இருப்பினும் விரிவு, துரித விரிவு! இரப்பர் பலூன் உப்பும் போது, ஒரு புள்ளி அருகிய புள்ளியை முந்தாமல் ஒன்றாய் விரிவது போல், அகிலத்தின் [Universe] ஒவ்வொரு களமும் தளமும் விரிந்தது! ஒவ்வோர் அரங்கமும் [Region] ஒன்றை விட்டு ஒன்று விலகி அப்பால் சென்றது! அடுத்த கணத்தில் நிகழ்ந்தது, தணிப்பு [Cooling]! குளிர்ந்து வெப்பம் தணிந்து ஏராளமான துகள்கள் சுருங்கி இடவசதி அமைப்பு! விரியும் விண்வெளிச் சக்தியின் உக்கிரத்தைக் குறைத்து, அகிலத்தில் உஷ்ணமும் குன்றியது!
முடிவில் ஒழுங்கீனத் தாண்டவங்களில் விளைந்த புதுத் துணுக்குகளின் பிறப்புகள் ஒய்ந்தன! அழிவு இயக்கமும் ஓய்ந்தது! ஆனால் விண்வெளியின் விரிவு நிற்காமல், தொடர்ந்து விரிந்து கொண்டே பேரொளி மட்டும் மங்குகிறது! மீதப்பட்டுத் தங்கிய பிண்டத் துணுக்குகள் குளிர்ந்து, உண்டைத் கட்டிகளாகத் திரண்டு வாயு மேகங்களாய் மிதந்தன! அப்போது பூத ஈர்ப்பியல் விசை [Giant Gravitational Force] எழுந்து மேகங்களை அழுத்திச் சுருக்கி விண்மீன்கள் தோன்றின! அண்ட கோளங்கள் தோன்றின! காலக்ஸிகள் [Galaxies] தோன்றின! சூரிய மண்டலங்கள் தோன்றின!
இருபதாம் நூற்றாண்டில் யூகித்த பெரு வெடிப்பு நியதி!
பிரபஞ்சத்தின் பிறப்பைப் பற்றி யூகிக்கும் பல கோட்பாடுகளில் ஒன்றான, ‘பெரு வெடிப்பு நியதியைத் ‘ தற்போது பெரும்பான்மையான விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். அக்கருத்துப்படி ஆதியில் பிரபஞ்சம் பேரளவுத் திணிவுள்ள, மிகத் திட்பமான, வெப்பக் கட்டியாக [Extremely Dense, Compact & Hot] இருந்தது! 10-20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஓர் அகிலப் பெரு வெடிப்பு [Cosmic Explosion] நிகழ்ந்து அதன்பின் பிரபஞ்சம் விரிந்து, குளிர்ந்து போய் வருகிறது! 1915 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய ‘பொது ஒப்பியல் நியதியின் தளவியல் சமன்பாடுகளின்’ [Field Equations of General Theory of Relativity] அடிப்படையில் அந்தக் கோட்பாடு உருவானது!
பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கும் ‘பெரு வெடிப்பு நியதி ‘ [Big Bang Theory] இதுதான்! பேரளவு உஷ்ண முள்ள, மாபெரும் திணிவும் [Density] பளுவு முள்ள [Mass] ஒரு தீக்கோளத் தீவிர வெடிப்பின் தொடர் விரிவு! அவ்வெடிப்பில் ஏற்பட்ட ஒழுங்கீனத்தின் பின் விளைவுகள்! முதலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூட பெரு வெடிப்பு நியதியை நம்புவதற்குத் தயங்கினார்! அதற்குப் பதிலாக விரியாத, நிலையான பிரபஞ்ச மாதிரி அமைப்பை விளக்க முயன்று அவர் தன் சமன்பாடுகளைத் திருத்தினார்! பின்னால் அவ்வாறு மாற்றியதற்கு, ஐன்ஸ்டைன் வருந்தினார்! சில ஆண்டுகளுக்குப் பிறகு 1922 இல் ரஷ்ய வானியல் நிபுணர் அலெக்ஸண்டர் ஃபிரைட்மன் [Alexander Friedmann (1888-1925)] பெல்ஜியம் அகிலவியல் ஞானி ஜார்ஜஸ் லெமைட்டர் [Georges Lemaitre (1894-1966)] இருவரும் பெரு வெடிப்பு நியதியை அறிவித்து, விரியும் பிரபஞ்சத்தை முதன் முதலில் விளக்கினார்கள்.
1923 இல் ஐன்ஸ்டைன் மாறாத பிரபஞ்சத்தைப் பற்றி எழுதியதைத் ‘தான் செய்த மாபெரும் தவறு ‘ என்று ஒப்புக் கொண்டார்! அலெக்ஸாண்டர் ஃபிரைட்மன் கருத்தை ஏற்றுக் கொண்டு விரியும் பிரபஞ்சக் கோட்பாடைப் பிரதிபலிக்க, ஐன்ஸ்டைன் தன் சமன்பாடுகளைத் திருத்தி எழுதினார்!
அமெரிக்க வானியல் நிபுணர், எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] 1929 ஆம் ஆண்டில் கண்டு பிடித்த விண்வெளி விந்தை பெரு வெடிப்பு நியதிக்கு ஆணித்தரமான சான்றாக ஆனது! வெகு தொலைவு காலக்ஸிகள் [Galaxies] விடும் ஒளிநிறப் பட்டையை [Light Spectrum], சக்தி வாய்ந்த பூதத் தொலை நோக்கி மூலம் ஆராய்ந்த போது, அது செந்நிற விளிம்பை நோக்கிப் பெயர்வதைக் [Redshift, செந்நிறப் பெயர்ச்சி] கண்டார்! ‘டாப்பிளர் விளைவு ‘ [Doppler Effect] கூற்றுப்படி செந்நிறப் பெயர்ச்சிக் காலக்ஸிகள் ஒன்றை விட்டு ஒன்று விலகி அப்பால் போகின்றன என்று தெளிவாக நிரூபிக்கிறது! மேலும் காலக்ஸிகளின் தூரம் அதிகமாக அதிகமாக, அவற்றின் வேகமும் மிகையாகிறது, என்றும் எட்வின் ஹப்பிள் கண்டு பிடித்தார்!
பூதத் தொலைநோக்கியில் பிரபஞ்சத்தை ஆய்ந்த விஞ்ஞானி
1925 புத்தாண்டு தினத்தில் வாஸிங்டன் D.C. இல் நடந்த அமெரிக்க வானியியல் குழுவினரின் [American Astronomical Society] முப்பத்தி மூன்றாவது கூட்டத்தில், காலிஃபோர்னியாவின் பாஸடேனா [Pasadena] நகரிலிருந்து, நேராக வர முடியாத ஓரிளைஞரின் விஞ்ஞானத் தாள் மட்டிலும் வாசிக்கப் பட்டது! அப்போதைய உலகப் பெரும் வில்ஸன் சிகரத்தின் 100 அங்குல எதிரொளிப்பியில் [Mount Wilson 100 ‘ Reflector] பணி யாற்றிய, 32 வயதுடைய, அமெரிக்க வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] ஒரு பூத விண்மீனைக் [Giant Star, Cepheid] கண்டார்! அது ஒளி மலர்ச்சியிலும், வடிவிலும் [Luminosity, Size] மாறிடும் விண்மீன் [Variable Star]! ஆகவே காலம் நீடிக்க நீடிக்க, அவ்விண்மீன் ஒளியின் முழுப் பூரண மதிப்புகள் [Absolute Magnitude] கிடைக்கும். ஆன்ரோமீடா [Andromeda or M31] என்று அழைக்கப்படும் அந்த விண்மீன், அகண்ட சுருள் மேகம் போன்ற ஒரு மாபெரும் நிபுளா [Great Nepula]! அந்த விண்மீன் அகிலத் தூரங்களை [Cosmic Distances] கணிப்பதற்கு மிகவும் உதவுகின்றது! ஆன்ரோமீடா நமது பால்மய வீதிக்கும் [Milky Way] அப்பால் வெகு தொலைவில் இருப்பதாக ஹப்பிள் ஐயமின்றி நிரூபித்துக் காட்டினார்!
எட்வின் ஹப்பிள் அவரது காலத்திய, மாபெரும் வில்ஸன் நோக்ககத்தின் [Mount Wilson Observatory] 100 அங்குல தொலை நோக்கியை முதன் முதல் இயக்கி வான மண்டலத்தைத் துருவி வட்ட மிட்டு, அரிய பல கண்டு பிடிப்புகளை வெளியிட்டவர்! பிரபஞ்சத்தின் பேரளவு, கட்டமைப்பு, பண்பாடுகள் ஆகியவற்றின் அறிவில் பெருத்த மாறுதல்களை உண்டாக்கினார்! மாபெரும் வடிவு கொண்ட காலக்ஸிகள் [Galaxies] ‘தீவு அகிலங்கள் ‘ [Island Universes] என்று ஹப்பிளின் ஆய்வுகள் கூறின! மேலும் ஹப்பிள் பல காலக்ஸிகளின் வடிவங்களை நோக்கி, அவற்றின் ‘இனப் பகுப்பு ஏற்பாட்டை ‘ [Classification System for the Galaxies] வகுத்தார். அந்த ஏற்பாடு இப்போதும் ஒப்பிடக் கையாளப் படுகிறது! அவரது உன்னத ஆக்கம், காலக்ஸியின் தூரத்திற்கும், அது விலகி நகரும் வேகத்திற்கும் உள்ள ஓர் உடன்பாட்டை 1929 இல் கண்டு பிடித்தது. அதாவது காலக்ஸிகளின் வேகம் அவற்றின் தூரத்திற்கு நேர் விகிதத்தில் உள்ளது என்று அறிவித்தார்! காலக்ஸிகளின் வேகத்துக்கும், தூரத்துக்கும் உள்ள விகிதம் [வேகம்/தூரம்] ‘ஹப்பிள் நிலை இலக்கம் ‘ [Hubble Constant] என்று வானியலில் குறிப்பிடப் படுகிறது!

எட்வின் ஹப்பிளின் வாழ்க்கை வரலாறு
1889 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி அமெரிக்காவில் எட்வின் ஹப்பிள் மிஸ்ஸொரியில் பிறந்தார். தந்தையார் ஜான் ஹப்பிள் மிஸ்ஸொரியைச் சேர்ந்தவர். தாயார் வெர்ஜினியா நெவாடாவைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தார் 1898 இல் சிகாகோ நகரில் குடியேறினர். அங்கே சிறுவன் ஹப்பிள் உயர்நிலைப் பள்ளியில் சிறப்பில்லாமல் சாதாரண மாணவன் போல் படித்தான். ஆனால் உடல்திறப் போட்டிகளில் தீரனாகப் பெயர் எடுத்தான்! சிறு வயதில் ஜூல்ஸ் வெர்ன் [Jules Verne], ரைடர் ஹாகார்டு [Rider Haggaard] ஆகியோர் நாவல், மற்றும் ஸாலமன் சுரங்கங்கள் [Solomon ‘s Mines] போன்ற நூல்களைப் படித்தான். தாத்தாவின் விருப்பப்படி பனிரெண்டாம் வயதில் செவ்வாய்க் கோளைப் பற்றி ஹப்பிள் எழுதிய ஓர் அரிய கட்டுரையை ஸ்பிரிங்ஃபீல்டு செய்தித்தாள் வெளியிட்டது! அடுத்து உதவி நிதி பெற்று சிகாகோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்து 1910 இல் B.S. பட்டத்தைப் பெற்றார்.
கல்வி மேன்மைக்குரிய ரோடெஸ் சன்மானம் பெற்று [Rhodes Scholarship] ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் ராணி கல்லூரியில் மேற்படிப்பு பயில, அவருக்கு ஓர் வாய்ப்புக் கிடைத்தது! ஹப்பிள் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே சட்டப் படிப்பை முடித்து, அமெரிக்காவுக்கு 1913 இல் மீண்டார். அமெரிக்காவில்தான் ஹப்பிள் தனது வானியல் அறிவை வளர்ச்சி செய்ய அநேக வாய்ப்புக்கள் கிடைத்தன.
மறுபடியும் சிகாகோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, வானியல் விஞ்ஞானம் பயின்று 1917 இல் Ph.D. பட்டம் பெற்றார்! 1917-1919 இரண்டாண்டுகள் முதல் உலக யுத்தத்தில் பங்கெடுத்த பின்பு, அமெரிக்க வானியல் வல்லுநர் ஜார்ஜ் ஹேல் [George Hale (1868-1938)] வேண்டுகோளுக்கு இணங்கிப் பாஸடேனா, காலிஃபோர்னியாவில் உள்ள [Pasadena, California] வில்ஸன் சிகர நோக்ககத்தில் [Mount Wilson Observatory] ஆராய்ச்சி செய்ய நுழைந்தார்!
1970 ஆம் ஆண்டு வில்ஸன் & பால்மர் நோக்ககங்கள் [Mount Wilson & Mount Palmer Observatories], விஞ்ஞானி ஹேல் நினைவாக ‘ஹேல் நோக்ககங்கள் ‘ [Hale Observatories] என்று பெயர் மாற்றம் ஆயின! உலகின் பெரிய விண்வெளி நோக்கங்களில் காலிஃபோர்னியா ஹேல் நோக்ககம் ஒன்று! 1919 இல் அமைக்கப் பட்ட மாபெரும் 100 அங்குல பூதத் தொலை நோக்கியை ஹப்பிள் இயக்கியதோடு, அடுத்து 200 அங்குலத் தொலை நோக்கியின் டிசைனுக்கும் உதவி செய்தார்! நிறுவனம் ஆன பிறகு, அதையும் தான் இறப்பதற்கு முன் [1953] உபயோகித்து ஆய்வுகள் செய்தார்! 1973 ஆண்டு வரை பெரிதாய்க் கருதப்பட்ட 200 அங்குல தொலை நோக்கி இருந்த இடத்தில், இப்போது மிகப் பெரிய 400 அங்குல தொலை நோக்கி ஒன்று அமைக்கப் பட்டுள்ளது!
1924 இல் எட்வின் ஹப்பிள் கிரேஸ் பர்க் [Grace Burke] என்னும் மாதை பாஸடேனாவில் மணந்து கொண்டார். இரண்டு உலக யுத்தங்களிலும் பங்கெடுத்து இடையே 30 ஆண்டுகள் அண்ட வெளி ஆராய்ச்சிகள் செய்து, ஹப்பிள் 1953 ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி மூளை உதிரத் தடைப்பட்டு [Cerebral Thrombosis] பாஸடெனாவில் காலமானார்.
பிரபஞ்ச விரிவு பற்றி ஐன்ஸ்டைனும், எட்வின் ஹப்பிளும்
1915 ஆம் ஆண்டில் ஒப்பியல் நியதியை ஆக்கிய ஆரம்ப சமயத்தில் ஐன்ஸ்டைன் பிரபஞ்சம் நிலையானது என்று நம்பினார்! பெரு வெடிப்பு நியதி வெளியாகி, பிரபஞ்சம் சோப்புக் குமிழிபோல் உப்பி விரிகிறது என்னும் கருத்தை முதலில் ஐன்ஸ்டைன் ஒப்புக் கொள்ளத் தயங்கினார்! அவரது பொது ஒப்பியல் நியதித் தளவியல் சமன்பாடுகளின் தீர்வுகளிலிருந்து பெரு வெடிப்பு நியதி தோன்ற ஓர் கூட்டமைப்பு [Framework] உருவானது. ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின் இன்றும் ஒப்பியல் நியதியின் பல விபரங்கள் மாற்றப் பட்டு வருகின்றன! நியதிச் சமன்பாட்டில் பிரபஞ்சம் விரிகிறதா அல்லது சுருங்குகிறதா என்பதை விளக்க வந்த இடத்தில், ஐன்ஸ்டைன் ஓர் நிலை யிலக்கத்தைச் [Constant] சேர்த்ததால், விரிவும் சுருக்கமும் கழிவு பட்டுப் போயின! பின்னால் பிரபஞ்சம் விரிகிறது என்ற கருத்துக்கள் உறுதியான போது, அகில நிலை யிலக்கத்தைச் [Cosmological Contant] இடையில் நுழைத்தது, ‘தனது மாபெரும் தவறு ‘ என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒப்புக் கொண்டார்!
1924 இல் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம், அதனுள் ஊர்ந்து செல்லும் எண்ணற்ற விண்மீன்கள், காலக்ஸிகள் ஆகியவற்றைப் பற்றிய புதிய கருத்துக்கள் பல எழுந்தன! அமெரிக்க வானியல் வல்லுநர் மெல்வின் ஸ்லிஃபர் [Melvin Slipher], எட்வின் ஹப்பிள் [Edwin Hubble], மில்டன் ஹுமாஸன் [Milton Humason] மூவரும் அண்டையில் நம் பால்மய வீதியில் இருப்பதாக எண்ணி யிருந்த சில நிபுளாக்கள், மெய்யாகப் பிரபஞ்சத்தில் பல பில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ளதாகக் கண்டார்கள்! அரிசோனா பிளாக்ஸ்டாஃப் நோக்ககத்தில் [Flagstaff Observatory, Arizona] ஸ்லிஃபரும், ஹப்பிள், ஹுமாஸன் இருவரும் காலிஃபோர்னியா வில்ஸன் சிகர நோக்ககத்திலும் [Mount Wilson Observatory, CA] பணி புரிந்து வந்தனர். அதி வேகத்தில் காலக்ஸிகள் பூமியை விட்டு அப்பால் வெகு தொலைவில் விலகிச் செல்வதை நோக்கி, பிரபஞ்சத்தின் பிரம்மாண்டப் பேரளவைக் கண்டு வியந்தனர்! டாப்பிளர் விளைவைப் [Doppler Effect] பின்பற்றிக் காலக்ஸிகளின் ஒளிநிறப் பட்டையில் செந்நிறப் பெயர்ச்சி [Red-Shift end of Spectrum] விளிம்பில் முடிவதைக் கண்டு, அவற்றின் அதி வேகத்தைக் கண்டு வியப்புற்றனர்!
ஹப்பிள் ஐன்ஸ்டைனுடன் சேர்ந்து பணியாற்றி, அவரது பொது ஒப்பியல் நியதிச் சமன்பாடுகளில் [Equations in General Theory of Relativity] சில மாற்றங்கள் செய்ய உதவினார்! 1929 இல் ஹப்பிளின் விதி [Hubble ‘s Law] வெளியானது: ‘காலக்ஸிகள் நம்மை விட்டு, தம்முள் ஒன்றை ஒன்று விட்டு விலகி அப்பால் இடைத் தூரங்களுக்கு ஏற்ப நேர் விகிதத்தில் மிகுந்திடும் வேகங்களில் செல்கின்றன ‘ என்பதே ஹப்பிள் விதி! 1929 இல் ஹப்பிள் மதிப்பிட்ட காலக்ஸிகளின் வேகம், வினாடிக்கு 45 மைல் [162,000 mph]!
ஐன்ஸ்டைன் ஹப்பிள் கூறிய விரியும் பிரபஞ்சக் கருத்துக்களை ஒப்புக் கொண்டார்! 1931 இல் காலிஃபோர்னியா வில்ஸன் நோக்ககத்தில் ஐன்ஸ்டைன் மூன்று ஆண்டுகள் ஹப்பிளுடன் பணி செய்து, பிரபஞ்ச அண்டங்களை நேராகக் கண்டு, அவருடன் விவாதித்துத் தன் ஒப்பியல் சமன்பாடுகளைத் திருத்தினார்! பிறகு ஐன்ஸ்டைன், பிரின்ஸ்டன் மேல்நிலைப் பெளதிக கூடப் [Princeton Institute of Advanced Studies, New Jersey] பதவியை ஏற்றுக் கொண்டு நியூ ஜெர்ஸிக்குச் சென்றார்!
ஹப்பிள் கண்டுபிடித்த அகிலவெளி மெய்ப்பாடுகள்
1920 ஆண்டுகளின் துவக்கத்தில் ஹப்பிள் காலக்ஸிகள் யாவை என்று ஆய்வுகள் செய்தார். சில சுருள் நிபுளாக்கள் [Spiral Nepulae] தமக்குள்ளே தனித்தனி விண்மீன்களைக் கொண்டதாக எண்ணிய கருத்து, உறுதிப்படுத்தப் படாமலே இருந்தது! அவ்விண்மீன் கூட்டம் நமது காலக்ஸியைச் சேர்ந்ததா அல்லது தனிப் பட்ட ‘பிரபஞ்சத் தீவைச்’ [Island of Universe] சார்ந்ததா வென்று ஐயம் எழுந்தது! 1924 இல் ஹப்பிள் 100 அங்குல தொலைநோக்கி மூலம் ‘ஆன்ரோமேடா நிபுளாவின் ‘ [Andromeda Nebula] தூரத்தை அளந்து, அது நமக்கு அருகில் உள்ள விண்மீன் கூட்டத்திற்கும் அப்பால் நூறாயிரம் மடங்கு தொலைவில் இருப்பதாகக் காட்டினார்! நமது பால்மய வீதிக்கு [Milky Way] ஒப்பான வடிவில், ஆனால் அப்பால் வெகு தூரத்தில் உள்ள ஓர் தனிக் காலக்ஸி [Separate Galaxy] என்றும் கூறினார்!
ஹப்பிள் மற்றும் சில காலாக்ஸிகளின் தூரங்களை அளந்து, அவை வெளிவிடும் தெளிவான ஒளியை ஆய்ந்து அவற்றின் தூரத்தைக் காட்டும் பொது அளவுக் கோலாக எடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்! ஒரு காலாக்ஸி நம்மை விட்டு விலகிப் போகும் வேகத்தையோ, அல்லது அது நம்மை நோக்கி அருகி வரும் வேகத்தையோ, அது வீசும் ‘ஒளியின் டாப்பிளர் பெயர்ச்சி’ [Doppler Shift of Light] மூலம் அளப்பது மிக எளிது என்று கண்டார்.
ஒருவர் ரயில் தண்டவாளக் கடப்புப் [Railway Crossing] பாதையில் நின்று ரயில் ஊதும் விசிலைக் கேட்டால் டாப்பிளர் பெயர்ச்சியைப் புரிந்து கொள்ளலாம்! ரயில் கடப்பு வாயிலை நெருங்கும் போது, விசிலின் ஓசை மிகுந்து கொண்டே பெருகுகிறது! ரயில் கடப்பு வாயிலைத் தாண்டியவுடன் விசிலின் ஓசை குறைந்து கொண்டே தணிகிறது! இந்நிகழ்ச்சி தான் ‘டாப்பிளர் விளைவு ‘ [Doppler Effect] என்று கூறப் படுகிறது. ஒளிச் சக்தியும், ஒலிச்சக்தி போலவே நடந்து கொள்கிறது! தாண்டிச் செல்லும் ரயில் விசிலைப் போல, நம்மைக் கடந்து செல்லும் காலக்ஸியின் ஒளிநிறப் பட்டையை [Light Spectrum] நோக்கினால் செந்நிறம் மிகையாகிறது! நம்மை நெருங்கி வரும் காலக்ஸியின் ஒளிநிறப் பட்டையை நோக்கினால் எதிர் விளிம்பான நீல நிறம் மிகையாகிறது! மேற்கூறிய செந்நிறப் பெருக்கம் ‘செந்நிறப் பெயர்ச்சி ‘ [Redshift] என்று குறிப்பிடப் படுகிறது! ஹப்பிள் நுணுக்கமான ஒளிப்பட்டை வரைமானியைப் [Sensitive Spectrograph] பயன்படுத்தி, விலகிச் செல்லும் பல காலக்ஸிகளின் ‘செந்நிறப் பெயர்ச்சிகளை ‘ 1929 ஆம் ஆண்டில் சேமித்து ஓர் வரைப்படத்தில் குறித்தார்.

ஹப்பிள் காலக்ஸிகளின் தூரத்தைக் மட்ட அச்சிலும் [X axis], அவற்றின் செந்நிறப் பெயர்ச்சிகளை நேர் அச்சிலும் [Y axis] குறித்து வரைந்த போது, எதிர்பாராத விதமாக ஒரு நேர் கோடு உருவாகியது! அதாவது காலக்ஸிகளின் தூரங்கள், அவை அப்பால் விலகிச் செல்லும் வேகங்களுக்கு நேர் விகிதத்தில் உள்ளன [Redshifts or speeds of the Galaxies are directly proportional to their distances] என்ற விந்தையான ஓர் உடன் பாட்டைக் கண்டு பிடித்தார்! காலக்ஸியின் தூரத்துக்கும், செல்லும் வேகத்துக்கும் உள்ள இந்த அரிய உடன் பாடே, ‘ஹப்பிளின் விதி ‘ [Hubble’s Law] என்று கூறப்படுகிறது. காலக்ஸிகளின் செந்நிறப் பெயர்ச்சியைக் [Red-Shift] கண்டால், அவை நம்மை விட்டு அப்பால் ஏகுகின்றன என்பது அர்த்தம்!
பிரபஞ்சம் உப்பி விரியும் போது, காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன! அதை வேறு விதமாகக் கூறினால், காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிறது என்பது தெளிவாகிறது! அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது! அது சோப்புக் குமிழிபோல் உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம் என்று ஹப்பிளால் நிரூபிக்கப் பட்டது! பொது ஒப்பியல் நியதிக்கு [General Theory of Relativity] உட்பட்டு, 1915 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய ‘ஈர்ப்பியல் நியதியின்’ [Theory of Gravity] தவிர்க்க முடியாத முடிவு, எல்லா காலக்ஸிகளும், மற்றும் பிரபஞ்சம் முழுவதுமே, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ‘பெரு வெடிப்பில் ‘ உண்டானவை என்பதே!
பெருவெடிப்பு நியதியை மெய்பித்த விஞ்ஞானிகள்
பெரு வெடிப்புக் கோட்பாடு 1917 இல் ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதியில் உருவாக்கிய ஒரு கருத்து! அதை விருத்தி செய்தவர், பெல்ஜிய விஞ்ஞானி ஜார்ஜ் லெமைட்டர் [George Lemaitre], ஹாலந்து விஞ்ஞானி வில்லம் சித்தர் [Willem de Sitter], ரஷ்ய விஞ்ஞானி அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann]. அம்மூவரது கருத்துக்களும் பிரபஞ்சம் தோற்றத்திற்குப் பின்பு, எவ்வாறு ஒழுங்கானது என்றுதான் கூறினவே தவிர, அகிலத்தின் ஆதித் துவக்கத்தைப் பற்றி எதுவும் ஆராயவில்லை! 1940 இல் ஜார்ஜ காமாவ் [George Gamov] அப்பணியைச் செய்ய தனது மாணவர் ரால்ஃப் ஆல்ஃபர் [Ralph Alpher], ராபர்ட் ஹெர்மன் [Robert Herman] இருவருடன் கூட்டுழைத்து, ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதிக்காக எழுதிய பிரைடுமான் தீர்வுகளை எடுத்துக் கொண்டு அவற்றைப் பின்னும் அபிவிருத்தி செய்தார்.
அடுத்து ஆல்ஃபர், ஹெர்மன் இருவரும் தனியாகக் காமாவின் கருத்துகளை விரிவு செய்தனர். அதன்படி கதிர்வீச்சுக் கடலில் [Sea of Radiation] கொந்தளிக்கும் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் [Proton, Neutron, Electron] ஆகிய பரமாணுக்களைக் [Subatomic Particles] கொண்ட இலெம் [Ylem] என்னும் ஆதி அண்ட நிலையிலிருந்து [Primordial State of Matter] பிரபஞ்சம் விரிந்தது!
பிரபஞ்சம் பெரு வெடிப்பின் போது மிக மிகச் சூடான நிலையில் இருந்து, பரமாணுக்கள் இணைந்து ஹைடிரஜன் மூலகத்தை விட கனமான மூலகங்கள் [Heavier Elements] முதலில் உண்டாயின! காமாவ், ஆல்ஃபர், ஹெர்மன் குழுவினர் பெரு வெடிப்பில் விளைந்த வெப்பவீச்சுக் கடல் [Sea of Radiation] இன்னும் அகிலத்தில் தங்கி இருக்க வேண்டும் என்று ஊகித்து முன்னறிவித்தார்கள்!
அவர்கள் கணக்கிட்ட அகிலப் பின்புலக் வெப்பவீச்சுக்கு [Cosmic Background Radiation] இணையான உஷ்ணம் [3 டிகிரி K (கெல்வின்)]. 1965 ஆம் ஆண்டில் பெல் ஆய்வகத்தில் [Bell Laboratories, Crawford Hill] பணியாற்றும் ஆர்னோ பென்ஸியாஸ், ராபர்ட் வில்ஸன் என்ற இரண்டு கதிரலை விஞ்ஞானிகளால் [Radio Astronomers: Arno Penzias, Robert Wilson] அந்த உஷ்ண நிலை விண்வெளியில் மெய்ப்பிக்கப் பட்டு, பெரு வெடிப்பு நியதி மேலும் உறுதியாக்கப் பட்டுள்ளது! அவ்வரிய ‘அகிலப் பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சுக் ‘ [Cosmic Microwave Background Radiation] கண்டு பிடிப்புக்குப் பென்ஸியாஸ், வில்ஸன் இருவரும் 1978 இல் நோபெல் பரிசு பெற்றார்கள்!
பூமியைச் சுற்றிவரும் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி
நாசா [NASA] எட்வின் ஹப்பிள் நினைவாக, அவரது பெயரில் 1990 ஆம் ஆண்டில் பூமியைச் சுற்றி வரும் ஒரு விண்வெளித் தொலை நோக்கியை [Orbiting Hubble Space Telescope] அண்ட வெளியில் ஏவியது. பிரதம ஆடி 94.5 அங்குல விட்டமுள்ள ஹப்பிள் தொலை நோக்கி 370 மைல் உயரத்தில், வட்ட வீதியில் பூமியைச் சுற்றி வருகிறது. பூமியின் வாயுச் சூழ்மண்டலமும், மேக மந்தைகளும் விண்வெளிக்கு முகத்திரை யிட்டு வானக் கோள்களை மறைக்காத உயரத்தில் பயணம் செய்கிறது, ஹப்பிள் தொலை நோக்கி! அண்ட வெளி மீன்கள் வீசும் மின்காந்த ஒளிநிறப் பட்டையின் [Electromagnetic Spectrum] உட்சிவப்பு, புறவூதா அரங்குகளை [Infrared, Ultraviolet Regions] ஆராயும் கருவிகளைக் கொண்டது! விரிதள, மங்கிய கோள் காமிராக்கள் [Wide Field, Faint Object Cameras], மிக நுணுக்க, மங்கிய கோள் ஒளிநிறப் பட்டை மானிகள் [High Resolution, Faint Object Spectrographs], விரை வேக ஒளித்திரள் ஒப்புமானி [High Speed Photometer] ஆகியவை தொலை நோக்கியில் அமைக்கப் பட்டுள்ளன.
பத்தாண்டுகளுக்கு மேலாக அண்ட கோளங்களின் அற்புதக் காட்சிகளை, பால்மய வீதியை, கண்கவரும் காலக்ஸிகளைப் படமெடுத்து பூமிக்கு அனுப்பிக் கொண்டு வருகிறது ஹப்பிள் தொலை நோக்கி! பிரபஞ்சத்தில் ஒருவேளை இருக்கலாம் என்று யூகிக்கப்பட்ட கருங்குழி [Black Hole] இருக்கையை முதன் முதலாக உறுதிப் படுத்தி, ஹப்பிள் தொலை நோக்கி 1994 ஆம் ஆண்டில் சான்றாக விபரங்களைக் காட்டி யுள்ளது! பரிதியின் பளுவை விட மூன்று பில்லியன் மடங்கு நிறையுடைய மாபெரும் ஓர் அண்டத்தைக் M87 காலக்ஸியின் மையத்தில் காட்டி யுள்ளது! பூதக்கோள் வியாழனின் தெளிவான வடிவத்தைக் காட்டி, 1994 இல் வால் மீன் சூமேக்கர் லெவி [Shoemaker-Levi 9] வியாழனுடன் மோதித் தூளாகி எரிந்ததைப் படமெடுத்துள்ளது!
நாசாவின் ‘துணைக்கோள் கோபி’ [COBE Spacecraft, Cosmic Background Explorer] 1989-1993 ஆண்டுகளில் அகிலப் பின்புலக் கதிர்வீச்சின் தளவரைவைப் [Cosmic Background Radiation Mapping] படம் எடுத்தது! வெப்பத்தால் அண்டங்கள் உமிழும் கதிர்வீச்சு அடர்த்தி ‘பெரு வெடிப்பு நியதி ‘ முன்னறிவித்து போல் பிரபஞ்சத்தில் பரவி இருந்ததை அது மெய்ப்பித்துக் காட்டியது! மேலும் அகிலப் பின்புலக் கதிர்வீச்சு சீராகப் பரவாது, அங்கு மிங்கும் சிறிது வேறுபட்டு இருந்ததாக படத்தில் அறியப் படுகிறது! இந்தச் சீரற்ற வேறுபாடுகள்தான் பிரபஞ்சத்தில் காலக்ஸிகளின் வளர்ச்சிக்கும், மற்றும் பிற அண்டங்களின் பெருக்கத்திற்கும் விதைகளாய் அமைகின்றன என்று உறுதியாய்க் கருதப் படுகிறது!
*********************************************
தகவல் :
1. https://en.wikipedia.org/wiki/Edwin_Hubble : Edwin Hubble (November 30, 2015)
2. www. Spacetelescope.org (Edwin Hubble – The Man Who Discovered The Cosmic Expansion ).
3. https://www.spacetelescope.org/about/history/the_man_behind_the_name/
4. http://www.biography.com/people/edwin-hubble-9345936
5. http://www.space.com/15665-edwin-powell-hubble.html
6. http://www.physicsoftheuniverse.com/scientists_hubble.html
7. https://cosmology.carnegiescience.edu/timeline/1929
8. https://www.aip.org/history/cosmology/ideas/hubble.htm
9. http://asd.gsfc.nasa.gov/archive/hubble/overview/hubble_bio.html
10. http://www.bbc.co.uk/science/space/universe/scientists/edwin_hubble
++++++++++++++++++
S. Jayabarathan (jayabarathans@gmail.com) December 2, 2015
Preview YouTube video edwin hubble history of science
Preview YouTube video Edwin Hubble
Preview YouTube video Edwin Hubble: an Informational Video
– தேமொழி.
சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும்
பட்ட விருத்தம் பலவானால், – பட்ட
பொறியின் வகைய கருமம் அதனால்
அறிவினை ஊழே அடும்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
சுட்டிச் சொலப்படும் பேர் அறிவினார்கண்ணும்,
பட்ட விருத்தம் பலவானால், பட்ட
பொறியின் வகைய கருமம், அதனால்,-
அறிவினை ஊழே அடும்.
பொருள் விளக்கம்:
குறிப்பிட்டுச் சொல்லப்படும் பெரிய அறிஞர்கள் இடத்திலும் உள்ள குற்றங்கள் பலவாக இருக்குமானால், (அது அவர்களது) முன்வினைப்பயன் செய்த செயலாகும். ஆகையினால் அறிவினை விதி அழித்து பேதைமையாக்கும்.
பழமொழி சொல்லும் பாடம்:
பேரறிவு கொண்டோரும் விதியின் காரணத்தால் மதியிழந்து குற்றம் செய்வார்கள். விநாச காலே விபரீத புத்தி என்பது வடமொழி கூறும் வழக்கு. ஒருவர் கெடும் நேரம் காலம் வந்தால் மதிக்கெட்டு குற்றமிழைத்து அழிந்து போவார்கள். பிறர் போற்றும் அறிஞர்களும் தவறு செய்வதற்கு அவர்களது தலையெழுத்தே காரணம், விதியின் வழி அவர்களது மதி சென்றது என்பதைத் திருக்குறள்,
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை. (குறள்: 372)
ஒருவர் சிறுமைப்பட வேண்டிய விதியிருந்தால் அவர்கள் அறிவழிந்து போவார்கள், அதுவே அவர்கள் சிறப்படைய வேண்டிய நேரமாக இருக்குமானால் அறிவாற்றலால் உயர்வடைவர் என்று விளக்குகிறது.
-மேகலா இராமமூர்த்தி
திங்களன்று (நவம்பர் 30) வெளியான கட்டுரையின் தொடர்ச்சி…
ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் குமுறிய ஷெல்லியைப் போன்றே, ’சிறுமைகண்டு சினந்துபொங்கிய பாரதி, அந்நியர்க்கு அடிமைகளாய், பொறியற்ற விலங்குகளாய் வாழும் இந்தியமக்களின் நிலைகண்டு, மனம் நொந்தார்; நெஞ்சு வெந்தார். வாளினும் கூரிய தன் எழுதுகோலினால் அவர்தீட்டிய சீரிய கவிதையிது!
கஞ்சி குடிப்பதற் கில்லார் – அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சமென்றே – நிதம்
பரிதவித் தேஉயிர் துடிதுடித்து
துஞ்சி மடிகின்றாரே…
[…]
எண்ணிலா நோயுடையார் –இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
[…]
புண்ணிய நாட்டினிலே – இவர்
பொறியற்ற விலங்குகள் போலவாழ்வார் (பாரத ஜனங்களின் தற்கால நிலைமை)
’விதையுங்கள் ஆனால் கொடுங்கோலரை அறுவடை செய்ய விடாதீர்கள்!’ என்று இங்கிலாந்து மக்களை ஷெல்லி எச்சரித்தது போன்றே பாரதியும்,
”ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே – நம்மை
ஏய்ப்போருக்கு ஏவல்செய்யும் காலமும் போச்சே
[…]
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனைசெய்வோம் – வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனைசெய்வோம்
விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம் – வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்!” எனத் தனது ’சுதந்திரப் பள்ளில்’ முழங்கக் காண்கின்றோம்.
ஏகாதிபத்தியச் சுரண்டலை எதிர்த்த பாரதி,
”மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ?” என்று சீற்றதோடு வினவுவதைப் பார்க்கின்றோம். இவையனைத்தும் இங்கிலாந்துக் கவிஞர் ஷெல்லி விடுத்த அறைகூவல்களின் எதிரொலிகளாகவே நம் செவிகளில் விழுகின்றன.
பிரெஞ்சுப் புரட்சியின் தாரக மந்திரங்களான ’சுதந்திரம், சமத்துவம்,
சகோதரத்துவம்’ எனும் மூன்றும் ஷெல்லியின் பாடல்கள் நெடுகிலும்
காணக் கிடைப்பவை. தன்னுடைய இஸ்லாமின் புரட்சி (The Revolt of
Islam) எனும் காவியத்தில், ‘Let all be equal and free’ (எல்லாரும் சுதந்திரமாகவும் சமமாகவும் இருக்கட்டும்) என்று எழுதுகின்றார் ஷெல்லி.
மானுடர் அனைவரும் சமமாகவும் சுதந்திரமாகவும் நடத்தப்படவேண்டும் என்பதே பாரதியின் விருப்பமும்! இவ்வெண்ணம் அவருடைய பாடல்கள் பலவற்றில் ஓங்கி ஒலிக்கின்றன.
”எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு” என்று பாடிய பாரதி, தன்னுடைய ’பாரத சமுதாயம்’ எனும் பாட்டில் தான் விரும்பும் சமதர்மச் சமுதாயத்தைக் காட்சிப்படுத்தத் தவறவில்லை.
”எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்” என்பதே பாரதியின் இலட்சியக் கனவாக இருந்தது.
எளியோரைக் கண்டிரங்கும் இளகிய மனமும், அருளுள்ளமும் கொண்டவர் ஷெல்லி. ’On leaving London for Wales’ எனும் தன்னுடைய கவிதையில் “I am the friend of the unfriended poor” (தோழர்களற்ற ஏழைகளின் தோழன் நான்!) என்று தன்னைக் கூறிக்கொள்கின்றார் அவர்.
பாரதியின் உள்ளமும் இத்தன்மையானதே! புஷ் வண்டிக்காரருக்குச் (இவ்வண்டி அந்நாளில் புதுச்சேரியில் பிரபலம்) சரிகை அங்கவஸ்திரத்தைக் கொடுத்தது; பாம்பாட்டி ஒருவரின் வறுமையைக் காணச்சகியாது தன் அரைவேட்டியையே அவிழ்த்துக் கொடுத்தது என்று நீள்கின்றன பாரதியின் அருளுள்ளத்தின் வெளிப்பாடுகள்! மனிதர்களிடம் மட்டுமின்றி பிற உயிர்களிடத்தும் தன் கருணைவெள்ளத்தைப் பாய்ச்சிய பாரதி,
”காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்று குதூகலித்தவர். தன் வீட்டிலிருந்த சொற்ப அரிசியையும் காக்கைகளுக்கும் குருவிகளுக்கும் வாரியிறைத்து அவற்றின் வயிற்றை நிறைத்தவர்.
ஷெல்லியின் வாழ்வைக் கண்ணுற்றால், இன்று உலகமேபோற்றும் அந்தப் பெருங்கவிஞரை அவர் வாழ்ந்தகாலத்தில் ஆங்கில இலக்கியஉலகம்கூட ஆதரிக்கவில்லை; மாறாகப் பலரும் அவரை நிந்திக்கவே செய்தனர்;
விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில நண்பர்களே அவருக்குத் துணைநின்றனர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்தைவிட்டே வெளியேறி இத்தாலிக்குச்சென்று குடியேறும் சூழலுக்குத்தள்ளப்பட்டார் ஷெல்லி.
பாரதியின் நிலையும் அதுவே! வாழுங்காலத்தில் பாரதியை நம் மக்கள் கொண்டாடவில்லை. அந்த எழுத்துச் சித்தரைப் பித்தர் என்று ஏசினார்கள். ஆங்கில அரசாங்கமும் அவரைச் சிறைசெய்யக் காத்திருந்த சூழலில்தான் அவர் புதுச்சேரிக்குச் சென்று தலைமறைவாய் வாழவேண்டி வந்தது.
ஆங்கில இலக்கிய விமர்சகரான எட்மண்ட்ஸ் (E.W. Edmunds) தன்னுடைய, ’ஷெல்லியும் அவருடைய கவிதைகளும்’ (Shelly and his poetry – E.W. Edmunds) எனும் நூலில் ஷெல்லியைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
”வேறு எந்தப் பெருங்கவிஞரைக் காட்டிலும் ஷெல்லி தன் கவிதைகளிலேயே வாழ்ந்தார்; தன் கவிதை மூர்க்கமாக, எதிர்ப்புணர்வு மிக்கதாக, உணர்ச்சிவேகம் நிறைந்ததாக இருந்தால் அவரும் அவ்வாறே இருந்தார். தன் கவிதைகள் ஆர்வ உணர்ச்சியும், அற்புதக் கனவுகளும் சுமந்ததாக இருந்தால் அவரும் அவ்வாறே இருந்தார். அவர் எவ்வாறு வாழ்வில் தனித்து நின்றாரோ அவ்வாறே ஆங்கிலக் கவிஞர்கள் மத்தியிலும் தனித்தே நிற்கின்றார்.”
இதே வார்த்தைகள் நம் பாரதிக்கும் அட்சரம் பிசகாமல் பொருந்தக்கூடியவை அல்லவா! ஆம்! இவ்விரு கவிஞர்களையும் பொறுத்தவரை வார்த்தையும் வாழ்க்கையும் ஒன்றேயானவை.
சமூகப் பார்வையிலும், புதுமைச் சிந்தனைகளிலும், உயிரிரக்கத்திலும், ஒரே மாதிரியான உளப்பாங்கைப் பெற்றிருந்த இக்கவியரசர்களின் மரணமும்கூட ஓரளவிற்கு ஒத்தவகையிலேயே அமைந்திருந்தது.
இத்தாலியின் லெரிஸி (Lerici) என்ற இடத்தில் வசித்தபோதுதான் ஷெல்லியின் அகால மரணம் நிகழ்ந்தது. படகில் பயணம் செய்வதில் பெருவிருப்பு கொண்டிருந்த ஷெல்லி, ஒருமுறைத் தன் நண்பர்களுடன் ஸ்பேசியக் குடாக்கடலில் (Bay of Spezia) கடற்செலவு மேற்கொண்டிருந்தபோது அடித்த பெரும்புயலில் அவர்சென்ற படகு கடலில் மூழ்கிற்று; மூழ்கிய படகோடு முப்பது வயது முடியுமுன்னே அந்த அற்புதக்கவிஞரின் வாழ்வும் மூழ்கிப் போயிற்று. இவ்விபத்து 1822-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் நாள் நிகழ்ந்திருக்கின்றது. சில தினங்களுக்குப்பின் கரையொதுங்கிய அவருடைய சடலம், அங்கேயே தகனம் செய்யப்பட்டுச் சாம்பல் உரோமாபுரியில் அடக்கம் செய்யப்பட்டதாய்க் கூறப்படுகின்றது.
39 வயதுகூட நிரம்பாத நிலையில் மண்ணுலக வாழ்வை நீத்த நம் மகாகவியின் மரணமும் அகாலமானதே. அல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்குப் பழங்கொடுக்கச் சென்றவரை யானை தூக்கியெறிந்ததால் ஏற்பட்ட விபத்திற்குப் பிறகு பாரதியின் உடல்நிலை தேறவில்லை. சில மாதங்களிலேயே அவர் உயிர்நீத்தார்.
சின்னாளும் பல்பிணியும் உடையது இம்மானுட வாழ்வு என்பது ஆன்றோர் வாக்கு. இச்சிறிய வாழ்விலேயே செயற்கரிய சாதனைகளைச் செய்துவிட்ட ஷெல்லியும், பாரதியும் மக்கள் மனத்தில் என்றும் நீங்கா இடம்பெற்று நிலைத்து வாழ்வர்.
***
கட்டுரைக்கு உதவியவை:
1. https://ta.wikipedia.org/wiki/ சுப்பிரமணிய_பாரதி
2. https://en.wikipedia.org/wiki/Percy_Bysshe_Shelley
3. பாரதியும் ஷெல்லியும் – திரு. ரகுநாதன்
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
வா இடம் விட்டு, வயதான கயாமுடன்,
கைகோபாத், கைகொஸ்ரு நகர் மறந்து,
ருஸ்டம் விருப்ப முடன் திரிய விட்டு விடு;
ஹதீம் உண்டிக்கு யாசித்தால் புறக்கணி.
1. But come with old Khayyam, and leave the Lot
Of Kaikobad and Kaikhosru forgot:
Let Rustum lay about him as he will,
Or Hatim Tai cry Supper — heed them not.
நான் கடந்த நாணற் தட்டி வேலிகளால்
பாலை வனம் விளைநிலம் பிரிபடும் அங்கே
அடிமை என்றோ, சுல்தான் பெயரோ இல்லை
பரிவெனக்கு பொன் ஆசன சுல்தான் மீது!
2. With me along the strip of Herbage strown
That just divides the desert from the sown,
Where name of Slave and Sultan is forgot —
And Pity Sultan Mahmud on his Golden Throne!
மரக்கிளை நிழலில் கவிதை நூலொரு கையில்
மதுக் கிண்ணம் மறு கையில், அப்பம், மங்கை நீ
பாடிய வண்ணம் என்னருகே கான கத்தில்;
பாலை வனமும் சொர்க்க மாகும் இப்போது !
3. Book of Verses underneath the Bough,
A Jug of Wine, a Loaf of Bread, — and Thou
Beside me singing in the Wilderness —
Oh, Wilderness were Paradise enow!
+++++++++++++++++++
தகவல்:
1. http://www.acole.com/novels/timuras/khayyam.html 2.http://poetsgraves.co.uk/Classic%20Poems/FitzGerald/rubaiyat_of_omar_khayyam.htm
3. http://www.omarkhayyamrubaiyat.com/text.htm
4. https://en.wikipedia.org/wiki/Rubaiyat_of_Omar_Khayyam [November 17, 2015]
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக எய்ட்ஸ் தின நாள் விழிப்புணர்வு நடைபெற்றது.
விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியை சாந்தி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் உலக எய்ட்ஸ் தினம் தொடர்பாகவும், நல்ல பழக்கங்களை சிறு வயதிலேயே கற்று கொள்ளவேண்டும் என்றும், எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோய் இன்று மேலாண்மை செய்ய கூடிய வகையில் நம் நாட்டில் உள்ளது. பருவ வயதில் வரக்கூடிய மன பதட்டங்களை எதிர்கொள்ள ஆசிரியரின் உதவியுடன் நல்ல பழக்கங்களை பழகிக் கொண்டாலே எந்த நோயும் வராது என்று பேசினார். மாணவர் முனீஸ்வரன், மாணவிகள் சௌமியா, தனம் ஆகியோர் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். நிறைவாக ஆசிரியை கலாவல்லி நன்றி கூறினார்.
பட விளக்கம் :
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக எய்ட்ஸ் தின விழாவில் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் பேசினார்.
உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம்
L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
Head Master,
Chairman Manicka Vasagam Middle School,
Devakottai.630 302.
Sivagangai Dist.
TamilNadu.
09786113160.
E-Mail : jeyamchok@gmail.com
http://www.kalviyeselvam.blogspot.in/
பவள சங்கரி
மணி சாரின் ஆதிவாசி எம்மையும் ஆதியை வாசிக்க வைத்தான்…. ஓவியத்தைப் பேசவைக்கும் மாயம் அறிந்த பிரம்மன்!
ஆக்கியோனின் ஆகச்சிறந்த படைப்பு
ஆறுதலாய் அடிச்சுவடிகள் அணிவகுப்பு
பட்டும் பகட்டும் படியேறி பலரோடிணக்கம்
பரிவும் பாசமும் பழங்குடியின் கழிவிரக்கம்
உண்ணும் உடைப்பெருஞ் செல்வராயினும்
கண்ணும் கருத்தும் கனிவாய் கவர்ந்திழுக்க
பொன்னும் பொருளும் போகமும் வேகமும்
நெய்யுடை அடிசிலும் அமிழ்தினிய அவியலும்
இட்டும் தொட்டும் இழிந்து இனிமையறியாதுபோம்
ஒட்டும் திட்டும் ஓட்டை வட்டிலும்
ஒழுகலும் ஒத்தும் ஒவ்வாது போனாலும்
வழக்கொழிந்த வாதமும் வஞ்சியர் வேதமும்
வசமிழந்த வார்த்தைகளும் வகையறியா நேசமும்
வாய்த்துணரா பாமரனாயினும் பாதகம் செய்யான்!
பகையறியான்! பயக்குறை கொள்ளான்!