புலவர் இரா. இராமமூர்த்தி.

நம் நாட்டின் இயற்கைவளத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள மனிதகுலம் கண்டுபிடித்த தொழில் உழவுத் தொழில் ஆகும். இந்த உழவுத்தொழில் உழுதவன் குடும்பத்துக்கு மட்டுமின்றி உலகத்திற்கே உணவூட்டியது. இந்த உதவியைத் திருவள்ளுவர் “ஒப்புரவு” என்று சிறப்பித்தார். ஒருவன் முயற்சியால் ஈட்டிய பொருள்கள் அனைத்தும், அவற்றின் தேவையை உணர்ந்து ஏற்றுக் கொள்வோருக்கு உதவுவதற்காகவே என்று வள்ளுவர் கூறுகிறார். இதனைத்

“தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு”

என்ற குறள் குறிப்பிடுகிறது. இதில் வேளாண்மை என்ற சொல் தக்கார்க்கு உதவுதல் என்ற பொருள் தருகிறது. ஆகவே வேளாண்மை என்பதே பிறருக்கு உதவுதல் ஆகும். இந்த வேளாண்மை என்ற சொல் விவசாயமாகிய உழவுத் தொழிலையே குறிக்கிறது!

உழவுத்தொழிலை நம் இலக்கியங்கள் மிகவும் சிறப்பாகப் போற்றுகின்றன! அரசனின் நால்வகைப் படைகளாலும் பெறுகின்ற வெற்றியே , உழுபடையாகிய கலப்பையை ஊன்றி விளைவிக்கும் பயிர் விளைச்சலால்தான் என்று புறநானூறு விளக்குகிறது! இதனைப்,

“பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே!”(புறம் 35)

என்ற பாடற்பகுதியால் அறிந்து கொள்ளலாம். உழவு என்ற அதிகாரம் வேளாண்தொழிலின் இன்றியமையாமையை விளக்குவதற்காகவே திருவள்ளுவரால் எழுதப் பெற்றது. அதில்,

“பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர். (1034)

என்ற குறளுக்குப் பொருள் கூறிய பரிமேலழகர், மேலே காட்டிய புறநானூற்றுப் பாடற்பகுதியையே எடுத்துக்காட்டாகத் தருகிறார். திரு வள்ளுவரின் உழவு அதிகாரத்தின் ஏழாம்பாட்டும், எட்டாம் பாட்டும் இந்தக் கட்டுரையில் புதிய விளக்கத்தைப் பெறுகின்றன! முதற்பாடல்,

“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்”(1037)

என்பதாகும். இதன் பொருள் ‘நிலத்திலிருக்கும் ஒருபலம் எடையுள்ள புழுதியைக் காற்பலம் எடையுள்ளதாக, நன்கு காய வைத்தபின் அந்த நிலத்திற்கு ஒருபிடியளவு எருவும் போடவேண்டியதில்லை; அது நன்றாக விளையும்’ என்பதாகும். நிலத்தை உழுது, வெய்யிலில் நன்றாகக் காய வைத்தால் அதன் மேற்பரப்பு மண்ணின் ஈரப்பதம் முக்காற்பங்கு குறைந்து விடும்! அதன்பிறகு ஒருபிடி அளவு உரமும் போடவேண்டிய தேவை இல்லை; பயிர் நன்றாக விளையும்! என்கிறார் திருவள்ளுவர். இந்தப் பாடலைத் தொடர்ந்து அடுத்த திருக்குறளில் ,

“ஏரினும் நன்றால் எருவிடுதல்; கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு ” (1038)

என்று பாடுகிறார். இங்கே அவர் நிலத்தில் “ஏரால் உழுவதை விட எரு இடுதல் நல்லது” என்கிறார். அதன்பின் களையை நீக்கிவிடுதல் நல்லது; அதைவிட நீர்பாய்ச்சுதல் நல்லது; அதை விட அந்நிலத்தில் திருட்டுத் தனமாக மாடுகள் நுழைந்து மேயாமல் காவலிட்டுப் பாதுகாத்தல் நல்லது! ” என்று தேவையான செயல்களை வரிசைப் படுத்துகிறார்! முன் பாட்டில் “உழுதபின், காயவைத்தால் போதும், எரு இடவேண்டா”, என்றார்! ஆனால் இந்தப் பாட்டில் முதலில் எருவிடுதலே நல்லது என்கிறார்! இவ்வாறு முரண்பட்ட கருத்துக்களைத் திருவள்ளுவர் கூறினால் அங்கே ஒரு புதிய பொருள் தோன்றும் என்று சான்றோர் கூறுவர். இந்த இரு குறட்பாக்களும் உழவுத் தொழிலை எவ்வாறு செய்வது என்றுதான் கூறுகின்றன!

உழவுத்தொழில் மருதநிலத்தில் ஒருவகையாகவும், முல்லை நிலத்தில் வேறுவகையாகவும் நடக்கும்! ஆம்! இப்போது நாம் புன்செய்நில விவசாயம், நன்செய்நில விவசாயம் என இருவகையாக நாம் உழவுத் தொழில் நடத்துகிறோமல்லவா? அவற்றுள் புன்செய்நில விவசாயத்துக்கு வேண்டிய நடைமுறைகளை,”தொடிப்புழுதி” எனத் தொடங்கும் குறட்பா விளக்குகிறது! அடுத்து , “ஏரினும்” எனத் தொடங்கும் குறட்பா, நன்செய்நில விவசாயம் நடத்தும் முறையைத் தெரிவிக்கிறது! புழுதி நிலத்தைக் காயவைத்து, உரமிடாமல் வானம் பொழிவதை வைத்து வேளாண்மை செய்வதை , அதாவது புன்செய்க் காட்டில் பயிரிடலை முதற் பாட்டு கூறுகிறது. அதனைப் படிப்போம்.

“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்!” (1037)

அடுத்து, ஏரால் உழுது, உரமிட்டு, களை பிடுங்கியவுடன் நீர்ப்பாய்ச்சி, அதன்பின் காவலிடுதலை, அதாவது நன்செய்வயலில் பயிரிடும் முறையை அடுத்த எட்டாம் பாட்டு விளக்குகிறது.அதனையும் படிப்போம்.

“ஏரினும் நன்றால் எருவிடுதல் ; கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு!” (1038)

இவ்வாறு திருக்குறள் காலத்துக்கேற்ற வேளாண்மை முயற்சிகளைப் புதுமையாக விளங்கிக் கொள்ள இடமளிக்கிறது. அவ்வகையில் இந்த இரண்டு குறட்பாக்களும் வள்ளுவரின் புதுமை நாட்டத்தைப் புலப் படுத்துகின்றன!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *