பழமொழி கூறும் பாடம்

0

– தேமொழி.

பழமொழி: முறைமைக்கு மூப்பிளமை இல்

 

சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்
காலை கழிந்ததன் பின்றையு – மேலைக்
கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான்
முறைமைக்கு மூப்பிளமை யில்.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
சால மறைத்து ஓம்பிச் சான்றவர் கைகரப்ப,
காலை கழிந்ததன் பின்றையும், மேலைக்
கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்;-
முறைமைக்கு மூப்பு இளமை இல்.

பொருள் விளக்கம்:
மிகவும் முயன்று மறைத்துப் பேசி, அறிவுடையார் இது குற்றமன்று என்றாலும், காலம் கடந்த பின்னரும், முன்னர் பசுவின் கன்றைக் கொன்றவனை, அவனது தந்தையே தேர்க்காலில் இட்டுக் கொன்றான், (எனவே) நீதி வழங்க முதுமையடைந்தவர் இவர், இளமையானவர் என்ற பேதம் பார்க்கத் தேவையில்லை.

சிலப்பதிகாரம், புறநானூறு, பழமொழி, மூவருலா, கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம் போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மனுநீதிச்சோழனின் கதை இப்பாடலில் எடுத்தாளப்பட்டுள்ளது. அனைவரும் அறிந்த மனுதீதிச்சோழன் கதையினை அடிப்படையாகக் கொண்டு அரசனின் செங்கோன்மை நடுநிலையுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. “முறைமைக்கு மூப்பு இளமை இல்” என்பதற்கு விளக்கமளிக்கும் உரையாசிரியர்கள் வெவ்வேறு முறைகளிலும் விளக்கமளித்துள்ளார்கள்.

கன்றை இழந்த பசு ஒன்று நீதி வேண்டி ஆராய்ச்சிமணியினை அடிக்க, அதன் காரணத்தை விசாரித்து, அந்தப் பசுவின் கன்றின் மீது தேரோட்டிக் கொன்றவன் தனது மகன் என அறிகிறான் அரசன். அமைச்சர்கள் தங்களது நாவன்மையால் அது குற்றமல்ல என மறுக்க முற்படுகிறார்கள். அவர்கள் அரசன் ஆணையை ஏற்று இளவரசனைத் தேர்க்காலில் ஏற்ற மறுத்துப் பின்வாங்கினாலும், அரசன் பசுவுக்கு நீதிவழங்கும் பொருட்டு, கன்றினைக் கொன்ற தனது மகனின் மீது தானே தேரோட்டி பசுவுக்கு நீதி வழங்கினான்.
நீதி வழங்கும்பொழுது குற்றவாளி ஓர் இளவயதினன் என்பதற்காகக் கருணை காட்டவில்லை என்ற வகையிலும் விளக்கமளிக்கப்படுகிறது.

மாற்று விளக்கமாகக் கூறப்படுவது பசு ஆராய்ச்சிமணி அடித்து நீதி கேட்டதைப் பற்றிய கதைக் கருத்தை முன் வைக்கவில்லை. இளவரசன் கன்றினைத் தேரேற்றிக் கொன்றதைக் கற்றறிந்த அமைச்சர்கள் பலவாறு பேசி மறைத்துவிடுகிறார்கள். பின்னொருநாளில் அரசனுக்குத் தனது மகன் இழைத்த குற்றம் தெரிய வருகிறது. காலம் கடந்துவிட்டாலும் முன்னாளில் தனது மகன் செய்த குற்றத்திற்காக, அவன் மீது தேரேற்றி தண்டனை வழங்குகிறான் மன்னவன். காலம் கடந்தாலும் நீதி நிலைநாட்டப்படுகிறது.
காலம் கடந்துவிட்டாலும் குற்றத்திற்குத் தண்டனை வழங்கப்படவேண்டும் என்ற விளக்கமும் அளிக்கப்படுகிறது.

பழமொழி சொல்லும் பாடம்: முதியவர்  அல்லது இளைஞர் எனக் குற்றவாளியின் வயதினைக் கருத்தில் கொண்டு, சார்பு நிலையுடன் நீதி வழங்கப்படுவது சரியல்ல. குற்றம் செய்தவர் யார் என அவர் பின்புலம் கண்டு மயங்காது, நடுவுநிலை தவறாது நீதி வாங்க வேண்டுமென்பதை வள்ளுவர்,

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள்: 541)

நிகழ்ந்த குற்றத்தினை ஆராய்ந்து, விருப்பு வெறுப்பின்றி, சார்புநிலையைத் தவிர்த்து, நடுவுநிலைமை கொண்டு வழங்கப்படுவதே நேர்மையான தீர்ப்பாகும். எனவே,

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. (குறள்: 118)

என்ற குறள் விளக்குவது போல எப்பக்கமும் சாயாமல், நடுவுநிலை தவறாது, துலாக்கோல் போல சீர்தூக்கிப் பார்த்து நியாயம் வழங்குவதே நேர்மையான சான்றோருக்கு அழகு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.