இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (176)
– சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே !
அன்பான வணக்கங்கள்.
காலதேவதை கருணையற்று தமிழகத்தின் தலைநகரைத் தனித்தீவாக்கிய இக்கட்டான வாரத்திலே உங்கள் முன்னே இம்மடலுடன்.
வடகிழக்குப் பருவமழை எனும் காலசக்கரத்தின் இயல்பான சுழற்சியின் ஒரு கோரத்தாண்டவ முகத்தைப் பார்க்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். “காய்ச்சலும், தலையிடியும் தனக்கு வந்தால்தான் தெரியும்” என்பர் முன்னோர்கள். பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் இருந்து கொண்டு என் இனிய உடன்பிறப்புகள் படும் இன்னல்களைத் தொலைக்காட்சி வழியாகவும், சமூக வலைத்தளங்களின் வழியாகவும் மட்டுமே அறிந்து கொள்ளக்கூடிய ஒரு நிலையில் இருந்து கொண்டே இம்மடலை வரைகிறேன்.
தண்ணீர், தண்ணீர் என்று வறட்சியால் தாகத்திற்காக தவித்த காலம் போய், சுற்றி நிறைந்து வழியும் நீரின் மத்தியிலும் தாகத்தினால் தவித்திடும் பலரின் நிலை உள்ளத்தை உறையச் செய்கிறது. ஆங்காங்கே வெள்ளத்தின் மத்தியில் சிக்கித் தவிப்போரின் உதவிக்கான கோரிக்கைகளைக் கண்டும் உதவ முடியா நிலையில் உலகின் மற்றொரு கோடியில் உடைந்த உள்ளத்தோடு தவிக்கும் என்னைப் போன்ற பலர்.
நூறு வருடங்களுக்குப் பின்னால் வரலாறு காணாத கனமழையென்று அறிவிக்கிறார்கள். சரித்திரம் படைக்கும் பல நிகழ்வுகளும் மனதிற்குப் பெருமை சேர்ப்பதுண்டு ஆனால் அச்சரித்திரப் படைப்புகளில் சில நிகழ்வுகள் இத்தகைய பேரிடர்களையும் நிகழ்த்தி விடுவதுண்டு. தவிப்புடன் என் தமிழக நண்பர்கள் பலரையும் முடிந்தளவு தொடர்பு கொண்டு நிலையறிந்தேன் ஆயினும் தொடரும் மின்சாரத் துண்டிப்பினாலும், தொலைத்தொடர்புத் துண்டிப்பினாலும் பல சமயங்களில் தொடர்புகொள்ள முடிவதில்லை.
இத்தகைய ஒரு நிகழ்விற்கு யாரையுமே குறையோ, அன்றிக் குற்றமோ கூறமுடியாது. இது அதற்கான சமயமுமல்ல. இயற்கையின் அனர்த்தங்கள் சொல்லிக் கொண்டு வருவதில்லை. காலமகளின் நர்த்தனங்களில் நிகழும் கோரத்தாண்டவங்களில் இதுவும் ஒன்று.
இத்தனை இன்னல்களின் மத்தியிலும் நெஞ்சை நிறைத்திடும் செய்தியொன்று பகர்கின்றேன். சமூகவலைத்தளங்களைப் படிக்கும் போதும், என்னுடன் தொடர்பிலிருக்கும் அன்புச் சோதரர்களின் பகிர்வுகளைப் படிக்கும் போதும் தத்தளிக்கும் தம் சமுதாய அங்கத்தினரைப் பாதுகாக்கும் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட உத்தம நெஞ்சங்களின் சேவையே அது.
இயற்கை தம்மீது வீசிய அனர்த்தங்களைச் சவாலாக எடுத்துக் கொண்டு அடுத்தவரின் கண்ணீர் துடைக்க துடித்தெழுந்து சேவையாற்றும் இவர்கள் செய்வதே உண்மையான மகேசன் சேவையாகிறது. இத்த மனப்பான்மை உடையோர்களை ஒன்றிணைத்து விஞ்ஞான மையத்தில் விளையாடும் சமூகவலைத்தளங்களை வெறும் பொழுதுபோக்கு சாதனங்களாகப் பயன்படுத்தாமல் பேரிடரால் அல்லலுறும் மண்ணின் மைந்தர்களை காக்கப் பாடுபடும் இவர்களின் தீரத்திற்கு சிரந்தாழ்த்தி வணங்குகிறேன்.
என் இனிய சோதரர்கள் தமிழகத்து உறவுகள் தம் இன்னல் விரைவில் தீர்ந்திட அனைவர்க்கும் பொதுவான, அனைத்துக்கும் அப்பாற்பட்ட இயற்கையெனும் இறையை வணங்குகிறேன்.
பொங்கிவரும் வெள்ளத்தைப்
பொத்திப் பிடிப்பது போல்
கருமேகங் கொண்டு மூடி
கண்மூடித் திறப்பதற்குள்
கதவைத் திறந்தது போல்
வரலாறு காணாத கனமழை
வாட்டுகிறது என் இனிய
உடன்பிறப்புகளைத் தமிழகத்தில்
அன்னைத் தமிழின் தலைநகராம்
அழகுசூழ் முத்தமிழின் பிறப்பிடம்
மூவேந்தர் திறன் கண்ட தமிழகம்
மூழ்கித் தத்தளிக்கிறது வெள்ளத்தில்
அந்தோ பரிதாபம் எத்தனை மக்கள்
அலறி அடித்து உயிர் காக்க போராட்டம்
வேதனைத் தீ கொண்டு நெஞ்சத்தை
வேகவைத்துப் பார்க்கின்ற காலமகள்
நெடுஞ்சாலைத் தெருக்களெல்லாம்
நீண்டு விரிந்திருக்கும் ஏரியென
கண்பாயும் இடமெல்லாம் கனநீராய்க்
காட்சி தரும் கோலமதை என்னவென்பேன்
இல்லை, இல்லை தண்ணீர் என ஏக்கம்
இருந்த பொழுதுகள் அவை ஓராயிரம்
எல்லை இல்லா நீர்ப்பெருக்கால் சோதரர்
தொல்லையுறும் பொழுதுதானோ இக்கணம்
சுற்றிக் காண்பதெல்லாம் நீராய் இருந்தும்
வற்றித் தாகத்தால் தவித்திடும் கோலம்
முற்றி விட்ட கருமேகம் உடைந்து அங்கே
கொட்டித் தீர்த்திடும் அளவுகாணா மழைநீரே
போதும் உந்தன் விளையாட்டு இறைஞ்சுகிறோம்
இயற்கைத் தாயே கருணை காட்டு அம்மா !
உறக்கமிழந்து தவித்திடும் உடன்பிறப்புகள்
உறங்கக் கொஞ்சம் அவகாசம் கொடுத்திடு
பலகாத தூரம் கடந்து இங்கே நானும்
பதைத்திடும் நெஞ்சோடு வேண்டுகிறேன்
அனைவர்க்கும் பொதுவான அற்புத சக்தியே
அளித்திடுவாய் அமைதியை தமிழன்னை மண்ணிற்கு
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடனும், ஆழமான துயருடனும்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
படங்கள் உதவி விக்கிபீடியா