இருபெரும் கவிவாணர்கள்!
-மேகலா இராமமூர்த்தி
திங்களன்று (நவம்பர் 30) வெளியான கட்டுரையின் தொடர்ச்சி…
ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் குமுறிய ஷெல்லியைப் போன்றே, ’சிறுமைகண்டு சினந்துபொங்கிய பாரதி, அந்நியர்க்கு அடிமைகளாய், பொறியற்ற விலங்குகளாய் வாழும் இந்தியமக்களின் நிலைகண்டு, மனம் நொந்தார்; நெஞ்சு வெந்தார். வாளினும் கூரிய தன் எழுதுகோலினால் அவர்தீட்டிய சீரிய கவிதையிது!
கஞ்சி குடிப்பதற் கில்லார் – அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சமென்றே – நிதம்
பரிதவித் தேஉயிர் துடிதுடித்து
துஞ்சி மடிகின்றாரே…
[…]
எண்ணிலா நோயுடையார் –இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
[…]
புண்ணிய நாட்டினிலே – இவர்
பொறியற்ற விலங்குகள் போலவாழ்வார் (பாரத ஜனங்களின் தற்கால நிலைமை)
’விதையுங்கள் ஆனால் கொடுங்கோலரை அறுவடை செய்ய விடாதீர்கள்!’ என்று இங்கிலாந்து மக்களை ஷெல்லி எச்சரித்தது போன்றே பாரதியும்,
”ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே – நம்மை
ஏய்ப்போருக்கு ஏவல்செய்யும் காலமும் போச்சே
[…]
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனைசெய்வோம் – வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனைசெய்வோம்
விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம் – வெறும்
வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்!” எனத் தனது ’சுதந்திரப் பள்ளில்’ முழங்கக் காண்கின்றோம்.
ஏகாதிபத்தியச் சுரண்டலை எதிர்த்த பாரதி,
”மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ?” என்று சீற்றதோடு வினவுவதைப் பார்க்கின்றோம். இவையனைத்தும் இங்கிலாந்துக் கவிஞர் ஷெல்லி விடுத்த அறைகூவல்களின் எதிரொலிகளாகவே நம் செவிகளில் விழுகின்றன.
பிரெஞ்சுப் புரட்சியின் தாரக மந்திரங்களான ’சுதந்திரம், சமத்துவம்,
சகோதரத்துவம்’ எனும் மூன்றும் ஷெல்லியின் பாடல்கள் நெடுகிலும்
காணக் கிடைப்பவை. தன்னுடைய இஸ்லாமின் புரட்சி (The Revolt of
Islam) எனும் காவியத்தில், ‘Let all be equal and free’ (எல்லாரும் சுதந்திரமாகவும் சமமாகவும் இருக்கட்டும்) என்று எழுதுகின்றார் ஷெல்லி.
மானுடர் அனைவரும் சமமாகவும் சுதந்திரமாகவும் நடத்தப்படவேண்டும் என்பதே பாரதியின் விருப்பமும்! இவ்வெண்ணம் அவருடைய பாடல்கள் பலவற்றில் ஓங்கி ஒலிக்கின்றன.
”எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு” என்று பாடிய பாரதி, தன்னுடைய ’பாரத சமுதாயம்’ எனும் பாட்டில் தான் விரும்பும் சமதர்மச் சமுதாயத்தைக் காட்சிப்படுத்தத் தவறவில்லை.
”எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்” என்பதே பாரதியின் இலட்சியக் கனவாக இருந்தது.
எளியோரைக் கண்டிரங்கும் இளகிய மனமும், அருளுள்ளமும் கொண்டவர் ஷெல்லி. ’On leaving London for Wales’ எனும் தன்னுடைய கவிதையில் “I am the friend of the unfriended poor” (தோழர்களற்ற ஏழைகளின் தோழன் நான்!) என்று தன்னைக் கூறிக்கொள்கின்றார் அவர்.
பாரதியின் உள்ளமும் இத்தன்மையானதே! புஷ் வண்டிக்காரருக்குச் (இவ்வண்டி அந்நாளில் புதுச்சேரியில் பிரபலம்) சரிகை அங்கவஸ்திரத்தைக் கொடுத்தது; பாம்பாட்டி ஒருவரின் வறுமையைக் காணச்சகியாது தன் அரைவேட்டியையே அவிழ்த்துக் கொடுத்தது என்று நீள்கின்றன பாரதியின் அருளுள்ளத்தின் வெளிப்பாடுகள்! மனிதர்களிடம் மட்டுமின்றி பிற உயிர்களிடத்தும் தன் கருணைவெள்ளத்தைப் பாய்ச்சிய பாரதி,
”காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்று குதூகலித்தவர். தன் வீட்டிலிருந்த சொற்ப அரிசியையும் காக்கைகளுக்கும் குருவிகளுக்கும் வாரியிறைத்து அவற்றின் வயிற்றை நிறைத்தவர்.
ஷெல்லியின் வாழ்வைக் கண்ணுற்றால், இன்று உலகமேபோற்றும் அந்தப் பெருங்கவிஞரை அவர் வாழ்ந்தகாலத்தில் ஆங்கில இலக்கியஉலகம்கூட ஆதரிக்கவில்லை; மாறாகப் பலரும் அவரை நிந்திக்கவே செய்தனர்;
விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில நண்பர்களே அவருக்குத் துணைநின்றனர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்தைவிட்டே வெளியேறி இத்தாலிக்குச்சென்று குடியேறும் சூழலுக்குத்தள்ளப்பட்டார் ஷெல்லி.
பாரதியின் நிலையும் அதுவே! வாழுங்காலத்தில் பாரதியை நம் மக்கள் கொண்டாடவில்லை. அந்த எழுத்துச் சித்தரைப் பித்தர் என்று ஏசினார்கள். ஆங்கில அரசாங்கமும் அவரைச் சிறைசெய்யக் காத்திருந்த சூழலில்தான் அவர் புதுச்சேரிக்குச் சென்று தலைமறைவாய் வாழவேண்டி வந்தது.
ஆங்கில இலக்கிய விமர்சகரான எட்மண்ட்ஸ் (E.W. Edmunds) தன்னுடைய, ’ஷெல்லியும் அவருடைய கவிதைகளும்’ (Shelly and his poetry – E.W. Edmunds) எனும் நூலில் ஷெல்லியைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
”வேறு எந்தப் பெருங்கவிஞரைக் காட்டிலும் ஷெல்லி தன் கவிதைகளிலேயே வாழ்ந்தார்; தன் கவிதை மூர்க்கமாக, எதிர்ப்புணர்வு மிக்கதாக, உணர்ச்சிவேகம் நிறைந்ததாக இருந்தால் அவரும் அவ்வாறே இருந்தார். தன் கவிதைகள் ஆர்வ உணர்ச்சியும், அற்புதக் கனவுகளும் சுமந்ததாக இருந்தால் அவரும் அவ்வாறே இருந்தார். அவர் எவ்வாறு வாழ்வில் தனித்து நின்றாரோ அவ்வாறே ஆங்கிலக் கவிஞர்கள் மத்தியிலும் தனித்தே நிற்கின்றார்.”
இதே வார்த்தைகள் நம் பாரதிக்கும் அட்சரம் பிசகாமல் பொருந்தக்கூடியவை அல்லவா! ஆம்! இவ்விரு கவிஞர்களையும் பொறுத்தவரை வார்த்தையும் வாழ்க்கையும் ஒன்றேயானவை.
சமூகப் பார்வையிலும், புதுமைச் சிந்தனைகளிலும், உயிரிரக்கத்திலும், ஒரே மாதிரியான உளப்பாங்கைப் பெற்றிருந்த இக்கவியரசர்களின் மரணமும்கூட ஓரளவிற்கு ஒத்தவகையிலேயே அமைந்திருந்தது.
இத்தாலியின் லெரிஸி (Lerici) என்ற இடத்தில் வசித்தபோதுதான் ஷெல்லியின் அகால மரணம் நிகழ்ந்தது. படகில் பயணம் செய்வதில் பெருவிருப்பு கொண்டிருந்த ஷெல்லி, ஒருமுறைத் தன் நண்பர்களுடன் ஸ்பேசியக் குடாக்கடலில் (Bay of Spezia) கடற்செலவு மேற்கொண்டிருந்தபோது அடித்த பெரும்புயலில் அவர்சென்ற படகு கடலில் மூழ்கிற்று; மூழ்கிய படகோடு முப்பது வயது முடியுமுன்னே அந்த அற்புதக்கவிஞரின் வாழ்வும் மூழ்கிப் போயிற்று. இவ்விபத்து 1822-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் நாள் நிகழ்ந்திருக்கின்றது. சில தினங்களுக்குப்பின் கரையொதுங்கிய அவருடைய சடலம், அங்கேயே தகனம் செய்யப்பட்டுச் சாம்பல் உரோமாபுரியில் அடக்கம் செய்யப்பட்டதாய்க் கூறப்படுகின்றது.
39 வயதுகூட நிரம்பாத நிலையில் மண்ணுலக வாழ்வை நீத்த நம் மகாகவியின் மரணமும் அகாலமானதே. அல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்குப் பழங்கொடுக்கச் சென்றவரை யானை தூக்கியெறிந்ததால் ஏற்பட்ட விபத்திற்குப் பிறகு பாரதியின் உடல்நிலை தேறவில்லை. சில மாதங்களிலேயே அவர் உயிர்நீத்தார்.
சின்னாளும் பல்பிணியும் உடையது இம்மானுட வாழ்வு என்பது ஆன்றோர் வாக்கு. இச்சிறிய வாழ்விலேயே செயற்கரிய சாதனைகளைச் செய்துவிட்ட ஷெல்லியும், பாரதியும் மக்கள் மனத்தில் என்றும் நீங்கா இடம்பெற்று நிலைத்து வாழ்வர்.
***
கட்டுரைக்கு உதவியவை:
1. https://ta.wikipedia.org/wiki/ சுப்பிரமணிய_பாரதி
2. https://en.wikipedia.org/wiki/Percy_Bysshe_Shelley
3. பாரதியும் ஷெல்லியும் – திரு. ரகுநாதன்
https://jayabarathan.wordpress.com/bharathiyar/
இதந்திரு மனையின் நீங்கி,
இடர்மிகு சிறைப்பட் டாலும்,
பதந்திரு இரண்டும் மாறி,
பழிமிகுந்து இழிவுற் றாலும்,
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட் டாலும்,
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கிலேனே.
1910 – 1920 ஆண்டுகளில் முதலாய்த் தமிழ்த் திருநாடு என்று பெயரிட்டு, அது எங்கள் தாய் நாடு என்று முதன்முதல் வழிப்பட்ட கவிஞர் பாரதியார் ஒருவரே.
அவரது தேசீயப் பற்றை எழுதிய மேகலாவுக்கு இனிய பாராட்டுகள்.
சி. ஜெயபாரதன்.
இனிய பாராட்டுக்கு இதயங்கனிந்த நன்றி ஜெயபாரதன் ஐயா.
அன்புடன்,
மேகலா