-மேகலா இராமமூர்த்தி

தமிழகம் தன்னுடைய வரலாற்றில் எத்தனையோ பெரும்புலவர்களையும்  ஆற்றல்மிகு அறிஞர்களையும் சந்தித்திருக்கின்றது. அத்தகைய பெரும்புலவர் வரிசையில் எண்ணத்தக்க இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் சுப்ரமணிய பாரதி. கனல் கக்கும் கவிதைகளால் சுதந்திரத் தீயை மூட்டிய புரட்சிக் கவியாகவும், அன்னை பராசக்தியின் பக்தராகவும், கண்ணபெருமானின் காதலராகவும் பன்முகங்கள் காட்டும் வித்தகக் கவி அவர். அன்னை கலைவாணியின் அருள்பெற்றிருந்தமையால் குழவிப் பருவத்திலேயே எழிலார் கவிபுனையும் திறன் கைவரப் பெற்றிருந்தார். அதனால், தன்னுடைய பதினோராம் வயதிலேயே எட்டயபுரம் மன்னரால் ’பாரதி’ எனும் பட்டம் தந்து சிறப்புச்செய்யப் பெற்றார் என்பது நாமறிந்ததே.

Subramanya_Bharathiகவிஞராய் மட்டுமின்றிப் பன்மொழிப் புலமை வாய்ந்தவராகவும் விளங்கினார் பாரதி. ஆங்கிலத்திலும், சமஸ்கிருதத்திலும் அவருக்கு நல்ல புலமை இருந்தது. ஆங்கிலக் கவிஞர்கள் பலரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் அவர். குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்து, காலத்தால் அழியாக் கவிதைகள் யாத்து, அற்ப ஆயுளிலேயே மறைந்துபோன ஷெல்லி, (Percy Bysshe Shelley), பைரன் (Lord Byron), கீட்ஸ்(John Keats) போன்றோரிடம் பாரதிக்குப் பற்று அதிகமிருந்தது. குறிப்பாக, ஷெல்லியிடம் பாரதிக்கு இருந்த பிடிப்பும், இருவருக்குமிருந்த ஒருமித்த சிந்தனையும் நம்மை பிரமிப்பிலாழ்த்துவது!

’சக்திதாசன்’ என்றும் ’காளிதாசன்’ என்றும் பல புனைபெயர்களில் பாரதி பாடல்கள் எழுதியிருக்கின்றார். ஆனால், அவர் சக்திக்கும், காளிக்கும் தாசனாவதற்கு முன்பே ’ஷெல்லி’க்கு தாசனாக இருப்பதில் பெருமை கொண்டிருந்தவர் என்பதைப் பலரறியார். ஆம்! ஷெல்லிதாசனாகவும் பாரதி பெயர்புனைந்து பாடல்கள் படைத்துள்ளார் என்பது அவருடைய மனைவியான செல்லம்மா பாரதி வாயிலாய்த் தெரியவருகின்றது (பாரதியார் சரித்திரம்). பாரதி பணிபுரிந்த ’சக்ரவர்த்தினி’ மாதஇதழில் அவர் எழுதிவந்த ’துளஸீபாய் சரித்திரத்தின்’ இறுதிப்பகுதியில் ‘ஷெல்லிதாஸ்” எனக் கையொப்பமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே பாரதி ஷெல்லிதாசனாக இருந்ததற்கு நமக்குக் கிடைத்துள்ள ஒரே நேரடி ஆதாரம். அம்மட்டோ? இளமைப்பருவத்தில் தான் எட்டயபுரத்தில் வாழ்ந்த காலத்திலேயே ஷெல்லியன் சங்கம் (Shellian Guild) எனும் பெயரில் பாரதி சங்கமொன்று நடத்தியதாகவும் அறிகின்றோம்.

இவ்வாறு, தன் இலக்கிய வாழ்வின் தொடக்கத்தில் ஷெல்லியின்பால் பாரதிகொண்ட ஈர்ப்பும் ஈடுபாடும் அவருடைய இறுதிக்காலம்வரை மாறவில்லை; மறையவில்லை. ஷெல்லியின் பாதிப்பு பாரதியிடம் எவ்வளவு தூரம் இருந்தது என்று அறிந்துகொள்ள ஷெல்லியைக் குறித்தும் அவரது கவிதைகள் குறித்தும் நாம் அறிந்துகொள்வது அவசியமாகின்றது.

இனி, ஷெல்லியைப் பற்றிச் சுருக்கமாகக் காண்போம்!

1792-ஆம் ஆண்டு ஆகஸ்டு 4-ஆம் தேதி சசெக்ஸ்shelley மாகாணத்திலுள்ள (Sussex) ஃபீல்டு பிளேஸ் (Field Place) எனுமிடத்தில் வசதிமிக்க பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர் பெர்சி பிஷ் ஷெல்லி (Percy Bysshe Shelley). 1811-ஆம் ஆண்டு, அவர் ஆக்ஸ்ஃபோர்டில் படிக்கும் காலத்தில், ’ஜெரமையா ஸ்டக்லி’ (Jeremiah Stukley) எனும் புனைபெயரில், ’நாத்திகத்தின் அவசியம்’ (The Necessity of Atheism) எனும் நூலையெழுதிப் பாதிரிமார்கள், கல்லூரி ஆசிரியர்கள் முதலியோருக்கு அனுப்பிவைத்தார். நாத்திகம் பேசுவதற்கு அசாதாரணத் துணிச்சல் தேவைப்பட்ட காலமது! நாத்திகனைப் ’பாவி’ என்றும் ’பிரஷ்டன்’ என்றும் மக்கள் வெறுத்தொதுக்கிய சூழலது! அப்படிப்பட்டதோர் காலகட்டத்தில் நாத்திகத்தின் அவசியத்தை வலியுறுத்தி எழுதுதற்கு எத்துணைத் துணிச்சல் இருந்திருக்கவேண்டும் அந்த இளங்கவிக்கு!

’இந்த நூலை எழுதியது தானில்லை’ என்று ஷெல்லி கூறிவிட்டால் போதும்; அவர்மீது  கடுமையான நடவடிக்கை எதனையும் எடுக்காது விட்டுவிடுவதாய்க் கல்லூரி நிர்வாகம் கூறியும், அதனை ஏற்கமறுத்த வாய்மையாளர்….தூய்மையாளர் ஷெல்லி. விளைவு…கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருக்கும்போதே அவரை வெளியேற்றி, அவருடைய கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது கல்லூரி நிர்வாகம். இதனால் பெருத்த அவமானமும் கோபமும் அடைந்தார் ஷெல்லியின் தந்தை. ஷெல்லியின் மனத்தை மாற்ற எவ்வளவோ முயன்றார்; கிட்டியது ஏமாற்றமே! ஆகவே, குடும்பத்தைவிட்டே வெளியேற்றினார் ஷெல்லியை. ஆனால், அதற்கெல்லாம் அயரவுமில்லை; தன் கொள்கையை மாற்றிக்கொள்ளவுமில்லை ஷெல்லி. தம்வாழ்வின் இறுதிவரை நாத்திகராகவே இருப்பது என்பதில் உறுதியோடிருந்தார் அவர்!

இவ்விடத்தில் ஷெல்லிக்கும் பாரதிக்கும் நாம் வேறுபாடு காண்கின்றோம். தன்னுடைய வாணாள் முழுவதும் நாத்திகராகவே வாழ்ந்திருக்கின்றார் ஷெல்லி; ஆனால் பாரதி தம்வாழ்வில் இறைநம்பிக்கை கொண்டவராகவே வாழ்ந்தார் என்பதற்குக் கண்ணன் மீதும், காளி மீதும், பிற தெய்வங்கள்மீதும் அவர் பாடிக் குவித்திருக்கும் தோத்திரப் பாடல்கள் சான்று பகர்கின்றன. கடவுள் நம்பிக்கை எனும் ஒரேயொரு கொள்கையில் மட்டும் இவ்விரு கவிவாணர்களும் இருவேறு சித்தாந்தங்களைக் கொண்டிருந்தபோதினும், சமூகம் மற்றும் அரசியல்சார்ந்த சிந்தனைகளில் இவ்விருவருக்கும் இருந்த ஒற்றுமை வியப்பிற்கும் நயப்பிற்கும் உரியது!

சான்றாகச் சில பாடல்களைக் காணலாம்.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் (Manchester city) 1819-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 16-ஆம் நாள் கூடிய சீர்திருத்தவாதிகளின் கூட்டத்தைச் சட்டவிரோதமானது என்று கருதிய இங்கிலாந்து, அதனைக் குதிரைப்படைகொண்டு தாக்கிக் கலைந்துபோகச் செய்தது. இந்த அடக்குமுறையில் எண்ணற்றோர் மாண்டனர்; கணக்கற்றோர் படுகாயமுற்றனர். இது ‘பீட்டர்லூ படுகொலை’ (Peterloo Massacre) என்று குறிப்பிடப்படுகின்றது (Similar to The Battle of Waterloo). இதனால் இங்கிலாந்து மக்கள் பெரிதும் கொதிப்படைந்திருந்தனர். அப்போது இத்தாலியில் வசித்துவந்த ஷெல்லி இக்கொடூர சம்பவம் அறிந்து துடித்தார். ‘இங்கிலாந்து மக்களுக்கான பாடல்’ (Song to the men of England) எனும் அற்புதக் கவிதையொன்றை வடித்தார்.

அப்பாடல்…

Men of England, wherefore plough
For the lords who lay ye low?
Wherefore weave with toil and care
The rich robes your tyrants wear?

Wherefore feed and clothe and save
From the cradle to the grave
Those ungrateful drones who would
Drain your sweat—nay, drink your blood?

The seed ye sow, another reaps;
The wealth ye find, another keeps;
The robes ye weave, another wears;
The arms ye forge, another bears. 

Sow seed—but let no tyrant reap:
Find wealth—let no imposter heap:
Weave robes—let not the idle wear:
Forge arms—in your defense to bear.  (verses: 1,2,4,5)

மேற்கண்ட ஷெல்லியின் கவிதையைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளேன்… 

இங்கிலாந்தின் மக்களே!
உம்மைத் தாழ்த்தி ஒடுக்கும் பிரபுக்களுக்காய்
ஏன் உடலைவருத்தி உழுகின்றீர்?
கொடுங்கோலர்கள் அணிவதற்காய் ஏன்
உழைத்து உயர்ஆடைகள் நெய்கின்றீர்?

உம் வியர்வையை வற்றச்செய்யும் – அல்ல…
குருதியைக் குடிக்கும் அந்த நன்றியிலாச்
சோம்பேறித் தேனீகட்குத்
தொட்டில் முதல் இடுகாடுவரை ஏன்
உண்டியும் உடையும் தந்து புரக்கின்றீர்?

விதைப்பது நீங்கள் அதனை அறுப்பது வேறொருவன்!
செல்வத்தைக் கண்டடைவது நீங்கள் அதனைக்
கொண்டு சுகிப்பது வேறொருவன்!
ஆடைகளை நெய்து களைப்பது நீங்கள் அதனை
அணிந்து இன்பத்தில் திளைப்பது வேறொருவன்!
ஆயுதங்களை வடித்துத் தருவது நீங்கள் அதனை
எடுத்துத் திரிவது வேறொருவன்! 

விதையுங்கள்! ஆனால் அதனை
எந்தக் கொடுங்கோலனும் அறுக்க அனுமதியாதீர்!
செல்வத்தைத் தேடுங்கள்! அதனை
எந்த வஞ்சகனும் தனக்காய்க் குவிக்க அனுமதியாதீர்!
ஆடைகளை நெய்யுங்கள் அதனை
எந்த வீணனும் அணிய அனுமதியாதீர்!
ஆயுதங்களைச் செய்யுங்கள்…உமது தற்காப்புக்காக மட்டும்! 

இப்பாடல்களில் தெறிக்கும் தீப்பொறி, இங்கிலாந்தின் சாமானிய மக்களுக்கெதிரான பிரபுக்களின் அடக்குமுறையையும் அநியாயத்தையும், சுரண்டலையும் எதிர்த்துக் குமுறும் எரிமலை ஷெல்லி என்பதை நமக்குத் தெளிவாய்க் காட்டுகின்றன. 

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.