செண்பக ஜெகதீசன் 

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். (திருக்குறள்-450: பெரியாரைத் துணைக்கோடல்) 

புதுக் கவிதையில்… 

பெரியவர்கள் துணை
பெருந்துணை… 

பலரைப் பகைத்துக்கொள்வதால்
வருவதைவிடப்

பத்து மடங்கு தீமையானது,
நல்ல பெரியவர்களின்

துணையை இழப்பது! 

குறும்பாவில்… 

பலர்பகை பெருந்தீது,
பன்மடங்கு அதனிலும் தீது

பெரியோர் தொடர்பை விட்டிடல்! 

மரபுக் கவிதையில்… 

மண்ணில் மாந்தர் வாழ்க்கையிலே
  –மாபெரும் தீங்கைத் தந்துவிடும்

எண்ணில் நில்லா மனிதருடன்
     –ஏற்றுக் கொள்ளும் பகையதுவே,
எண்ணிப் பத்து மடங்காக

     –இதைவிடத் தீங்கைத் தந்துவிடும்
கண்ணியம் மிக்க பெரியோர்துணை
     –கைவிடல் காட்டும் வாழ்வதுவே! 

லிமரைக்கூ… 

பெருந்தீமை பலரிடம் கொண்ட பகை,
பெரியோர் உறவைக் கைவிடலால்

வருந்தீமை பத்துக்குமேல் மடங்கு மிகை! 

கிராமிய பாணியில்… 

கைவுடாத கைவுடாத
பெரியவங்க தொணயத்தான்

ஒருநாளும் கைவுடாத,
கைவுட்டா கெடுதிவரும்

வாழ்க்கயில கெடுதிவரும்… 

பகச்சிக்காத பகச்சிக்காத
பலரயுந்தான் பகச்சிக்காத,
பகச்சிக்கிட்டா கெடுதிவரும்

வாழ்க்கயில கெடுதிவரும்…
அதவிடப்
பலமடங்கு கெடுதிவரும்,
பெருசுகளக் கைவுட்டா

கெடுதிவரும் கெடுதிவரும்
பலமடங்கு கெடுதிவரும்… 

அதால,
கைவுடாத கைவுடாத

பெரியவங்க தொணயத்தான்
ஒருநாளும் கைவுடாத!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *