நிர்மலா ராகவன்

பொது இடங்களில் குழந்தைகள்

உனையறிந்தால்121
கேள்வி: பெற்றோர் வெளியே போகும்போது தானும் வருவேன் என்ற் அடம் பிடிக்கிறான் எங்கள் குழந்தை. ஆனால் பொது இடங்களுக்கு அவனை அழைத்துப் போனால், அடக்கவே முடிவதில்லையே, ஏன்?

விளக்கம்: நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளால் பெரியவர்களைப்போல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க முடியாது. சில நிமிடங்களுக்குமேல் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துவதும் அவர்களால் இயலாத காரியம். அலுப்பு ஏற்படும்.

அது என்ன சில நிமிடங்கள்?

இரண்டு வயதான குழந்தை நான்கிலிருந்து பத்து நிமிடங்கள்வரைதான் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தும். அதாவது, அதன் வயதை இரண்டிலிருந்து ஐந்துவரை பெருக்கினால் கிடைக்கும் நேரம். நான்கு வயதான பிள்ளையின் படிப்பில் செலுத்தும் கவனம் அதிக பட்சம் பத்து நிமிடங்கள்தான். பசி, தூக்கம், அதிக வெப்பம் அல்லது குளிர் முதலியவை வேறு அவர்களை அலைக்கழிக்குமே! அதனால்தான் சண்டித்தனம் செய்கிறார்கள். விளையாடுவது போன்ற பிடித்த காரியமாக இருந்தால் நேரம் அவர்களைப் பாதிக்காது.

சிறு குழந்தைகளை பூங்கா, கோயில் போன்ற இடங்களைத் தவிர வேறு எங்கு அழைத்துப்போனாலும் நமக்குத்தான் தொந்தரவு. உறவினர் வீடுகளுக்கோ, திருமண வைபவங்களுக்கோ அழைத்துப்போனால்கூட, `அம்மா நம்மை மறந்துவிட்டு வேறு யார்கூடவோ பேசுகிறாளே!’ என்று `வழிவார்கள்’. `நேரமாச்சு. வீட்டுக்குப் போகலாம்,’ என்று தொணதொணப்பாரகள்.

`பிறர் முன்னிலையில் மானம் போகிறது!’ என்று, பற்களைக் கடித்துக்கொண்டு தாய் முறைத்தாலோ, திட்டினாலோ குழந்தையின் அடம் மேலும் அதிகரித்துவிடும்.

வெளியே அழைத்துப் போவதைத் தவிர்க்க முடியாது என்ற நிலை வந்தால், அங்கு வித்தியாசமாக அமைந்திருப்பவற்றைக் காட்டி விளக்குங்கள். தொங்கும் விளக்கு, பூந்தொட்டியில் பிளாஸ்டிக் செடிகள், மீன் தொட்டி இப்படி அவர்கள் பார்த்திராதது ஏதாவது இருக்குமே! குழந்தைகளின் ஆர்வம் வளர்ந்து அறிவு பெருகுவதுடன், ஒழுக்கப் பிரச்னை எழாது. வயதேற ஏற, புது அனுபவங்களை அச்சமின்றி நாடுவார்கள்.
நமக்குச் சாதாரணமாகத் தோன்றுபவைகூட குழந்தைகளுக்கு அபூர்வம்தான். நாம் காட்டினால் ஒழிய, தானே ஒரு பொருளைப் பார்த்து, அது ஏன் அங்கே இருக்கிறது என்று அலசும் திறன் அவர்களுக்கு ஏது!

உதாரணமாக, ஒரு கோயில் அர்ச்சகர் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி மந்திரங்கள் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். `கோயில்ல எத்தனை பேர், பாத்தியா? எல்லாருக்கும் காதில விழணுமே! அதான் அவர் குரல் பெரிசா கேக்க மைக். அதோ!’

ஒரு முறை சொல்லிக் கொடுப்பதைக்கூட மறக்காமல் நினைவில் பதித்துக்கொண்டு, `மைக் பாரு!’ என்று மறுமுறை உங்களுக்கே காட்டும், பெருமையுடன்! உங்களுக்குத் தெரியாது என்றல்ல, தனக்குத் தெரிந்ததை வெளிக்காட்டிக் கொண்டால், உங்கள் பாராட்டைப் பெறலாம் என்ற எதிர்பார்ப்பில்தான்.

புகழ்ந்து வைங்களேன்! காசா, பணமா!

கதை: ஒரு கர்ப்பிணி தன் உடல் நிலையைப் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவரிடம் போகுமுன், `இன்னிக்கு டாக்டர்கிட்ட போறோம். ரொம்பப் படுத்தாம, சமர்த்தா இரு!’ என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். பரிசோதனையின்போது அவளுக்குச் சிறிது பயம் ஏற்பட்டாலும், கரு அதனால் பாதிக்கப்படாமல், உருளாமல் ஒத்துழைத்தது!

அந்தக் குழந்தை ஒன்றரை வயதில் பேச ஆரம்பித்தது. புரியாவிட்டாலும், `அப்படியா? நல்ல வேடிக்கை!’ என்று சிரித்து வைப்பார்கள் குடும்பத்தினர்.

பிறர் கூறுவதைக் கூர்ந்து கவனித்து, அதற்கேற்ப நாமும் இடையிடையே கொஞ்சம் பேசுவது பரஸ்பர மதிப்பை, அன்பை வளர்க்கும் அல்லவா? அதுபோல், குழந்தை பேசுவதை நாம் கவனிக்கிறோம் என்று காட்டிக்கொண்டால், அதன் தன்னம்பிக்கையும் வளரும்.

ஆனால், பாலர் பள்ளியிலோ, ஆரம்பப் பள்ளியிலோ ஆசிரியர்கள் இத்தகைய மாணவர்களை `தலைவலி’ என்று கருதுவார்கள். ஏனெனில், இவர்களுக்குச் சராசரி மாணவர்களைவிட நிறைய தெரிந்திருக்கும், அதிக வேகமாகப் புரியும். ஆசிரியர்கள் ஏன் அம்மாவைப்போல் புகழுவதில்லை என்ற குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. புதிதான சூழ்நிலை, வித்தியாசமான மனிதர்கள்! இவை எந்த வயதிலுமே குழப்பம் விளைவிப்பதுதானே!

அதன் விளைவாக குழந்தை வீட்டிலும் முரண்டு செய்தால், நல்ல விதமாக விசாரித்து, அனுசரணையாக இருத்தல் நலம். நாளடைவில் உலகைப் புரிந்து கொள்வான்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.