Blog

  • புதிராட்டம்

    -இரா.சந்தோஷ் குமார்

    தொண்டைக் குழியில்
    பசையொட்டிய ஒருவித
    உணர்வுப் பிழையேந்தும்
    நாக்குத் தசை,
    பேசமுடியா மூச்சிரைப்பில்
    இதழ் வழியே
    ஒரு சொல்லை வெளியிட்டது
    அது ‘தாகம்’ என்றானது!

    என்னிதழுக்கு
    உன்னிதழால் நீ
    கவ்விக் குதறி
    வேதனை நீர் ஊற்றினாய்
    தாகத்திற்கு
    எந்நீர் என்றாலும் என்ன
    எந்த ரணமானாலும் என்ன…
    அந்நொடியில் தீர்வது
    ஒரு தீர்வுதானே?

    நிழல் தேவதையே…!
    உன் கரங்களினால்
    தேவைப்படுகிறது
    ஒரு மருந்துக் களிம்பு!
    இல்லையேல்
    ஒரு மரண விளிம்பு!

    இமை திறந்து நான்
    நெஞ்சு நிமிர்த்தி
    நிரந்தரமாய்
    இமை மூடிவிடக்கூடாது
    என்பதற்காகவே
    உன்னிடம் நித்தமும்
    யுத்தம் போன்ற
    முத்தப் போரிட்டுதானே
    இருக்கிறேன்…?
    ஆனாலும்,
    புரியவில்லை தோழி…!
    என்னவாக என்னை
    புதிராகப் புதியதாகச்
    செய்து கொண்டிருக்கிறாய்…
    என்
    வாழ்க்கைக் கவிதையே!

     

    Share
  • ஓலைத்துடிப்புகள் (9)

    கவிஞர் ருத்ரா

    ====================================================

    உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ
    =========================================================

    oolaisuvadi

    தமிழ் மொழியின் நுண்சொற்பாடு ஒரு ஒப்பற்ற மொழியியல் வெளிச்சம் காட்டும் தன்மையது ஆகும்.உடல் என்றால் உடம்பு என்று தான் நாம் அறிவோம்.அந்த சொல் ஒரு ஆழமான தத்துவம் அல்லது மெய்யுணர்வு தரும் சொல்லாக அல்லவா இருக்கிறது.உடலின் இயல்பே உள்ளே இருக்கும் உள்ளம் என்பதனோடு எப்போதும் பொருது கொண்டே இருக்கும் இயல்பினது ஆகும்.இதுவே எல்லா மனித மற்றும் சமுதாய நோய்களுக்கு காரணம்.சங்கத்தமிழ் வரலாற்றில் இப்படியொரு ஆழமான ஆராய்ச்சிக்கு வித்திடும் சொல் (“உடல்”) என்பதை நான் மேலே கண்ட (ஐங்குறு நூறு..பாடல் 66)செய்யுள் புகுந்த போது தான் திக்குமுக்காடிப்போனேன். (உள்ளே இருப்பதால் தான் அது உள்ளம் எனப்படுகிறது என்பது மற்றொரு “வியப்பு தரும் சொல்” அது) அதனால் தான் திருமூலர் போன்ற சான்றோர்கள் “உடம்பையே” கோவில் ஆக்கினார்கள் போலும்.இந்த “உடலை” வைத்து என் சங்கநடைப்பாடலை இங்கு நான் எழுதியுள்ளேன்.ஓரம்போகியார் எனும் அந்த சங்கப்புலவர் உண்மையிலேயே இலக்கியம் எனும் இமயம் ஏறி நின்று ஒளி காட்டியவர் என்றே நாம் கொள்ள வேண்டும்.கீழ்வரும் செய்யுள் ஒரு சான்று.

    “உடலினென் அல்லேன்; பொய்யாது உரைமோ;
    யார் அவள், மகிழ்ந!தானே…தேரொடு,நின்
    தளர்நடைப்புதல்வனை யுள்ளி,நின்
    வளைமனை வருதலும் வௌவி யோளே?”

    (ஐங்குறு நூறு பாடல் 66)

    “கோபம் கொள்ள மாட்டேன்.சண்டையிடமாட்டேன்.(உடலுதல் எனும் சொல் தெறிக்கும் அந்த “முரணும் உணர்வு” தலைவியின் வாயிலிருந்து எப்படி வெளிப்படுகிறது பாருங்கள்) பொய்யாது உரையுங்கள்.யார் அவள்? தேரை இன்னும் அதன் உரிய இடத்தில் கூட நிறுத்தவில்லை.அதற்குள் நம் மகனை கொஞ்சுவதற்கு இறங்கி விட்டீர்கள்.அந்தப்பயலின் “குறு குறு” நடை உங்களை குழைய வைத்திருக்கிறது.அதெல்லாம் சரி.கூடவே வந்த நம் புதல்வனை அள்ளியெடுத்துச்செல்கிறாளே! யார் அவள்?” தலைவியின் நெஞ்சம் உலைக்களம் ஆகிறது.அப்படியும் அவனை”மகிழ்ந” என்று அழைப்பதில் ஒரு குத்தல் நிறைந்த உணர்வு இருப்பினும் அவனைக்கண்டதும் அவள் மகிழ்கிறாளே அந்த மின்னல் வெளிச்சத்தை வைத்துக்கொண்டு தானே “ஆண்” பெண் மீது இத்தகைய கொடும் ஆதிக்கத்தை செலுத்துகிறான் என்பதனையும் காட்ட மேலே வரிகளில் “சூடு” போடுகிறார் புலவர். நம் முதுகு மட்டும் புண்ணாகவில்லை.நம் உள்ளுணர்வே (ஆத்மா)அந்த சூடு தாங்காமல் பற்றி எரிகிறது. என் பாடலின் பொழிப்புரையை அடுத்த இதழில் எழுதுகிறேன்.இதை அன்புடன் பொறுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ
    ===================================================

    பைஞ்சாய்ப் பாவைக்கு பொய்ப்பாலூட்ட‌
    நீள்தல் ஆற்றா குடுமியவாய் திகழ்தரு
    பைஞ்சுரைச் சிறுகாய் அன்ன முலையின்
    அண்மை காட்டி அரும்பவிழ் நகையொடு
    தன்மை படர்த்தி நின்னை அழைக்கும்
    மடவள் என்னிவள் வந்திசின் ஓம்புமன்!
    முடமுது நாரை இறை தேடி அலம்ப‌
    ஞாழல் கொடுஞ்சினை காலுடன் அலம்ப‌
    பதைப்பத்ததைந்த நெய்தல் அங்கழி
    பனி இமிர் பைந்திரை படர் கரை சேர்ப்ப!
    உடலோடு உடலுதல் முறுக்கும் செந்தீ
    உறைநோய் உற்று நின்னை நோக்கும்
    நரம்பார்த்த தீங்கிளவியள் குழறல் ஒல்லுமோ.
    ஒள்மணல் படுத்தன்ன கருங்கோட்டெருமை
    ஒத்த திண்ணிய அம்பி ஆங்கு அடைகரை
    சிறைபெய் குருகு கணங்கொள் துறைவ‌
    மடப்பம் தீண்டிய சில்மகள்ப் பெருநோய்
    துடைப்புன ஆற்றுதி விழி தூஉய் கண்டிசின்.
    வெண்முளை வித்திய வினைசெறி யன்ன‌
    கண்முளை எல்கதிர் உள்சிறை ஒடுங்க‌
    இருள் தின்ற ஒளியாய் அளியள் ஆனாள்.
    உண்துறை ஆங்கு மண்மறை முன்னே
    உய்யக்கொள்வாய் பெரும்பணைத் தோளாய்!

    தொடரும்

    Share
  • சிகரம் நோக்கி – (9)

    சுரேஜமீ

    மனிதம்

    peak1111

    மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே- இது
    மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

    asurஎனும் மருதகாசியின் வரிகளோடு இன்றைய சிந்தனையைத் தொடங்க நினைக்கிறேன். இரண்டு வரிகளில் எதிர்கால வாழ்க்கையை கண்ணாடியாகக் காட்டிய கவிஞர்களும், மனிதம் மலரவேண்டும் என்ற துடிப்புடைய தேசியவாதிகளும் வாழ்ந்த மரபு நம்முடையது!

    ஏனோ, தன் முனைப்பு, தவறான எண்ண ஓட்டங்கள், சமுதாயப் பொறுப்பற்ற செயல்கள் என கற்றவர்களாலும், கயவர்களாலும், இந்த சமூகம் மனிதத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது என்பது கண்கூடு!

    இந்த உலகில், இப்படியும் ஒரு மனிதரா எனப் போற்றப்பட வேண்டிய பண்பாளர், தமிழனின் தயாள குணத்திற்கு ஒரு சான்று, இந்த வாழ்வின் சுவையே, சக மனிதனின் கண்ணீர் மொழியை அறிவதில்தான் இருக்கிறது என்பது மட்டுமல்ல, அதைத் தன் வாழ்நாளில் செய்தும் காட்டிய வள்ளல் கலைவாணர் என்பதை கலைஉலகம் தாண்டி அவரோடு பழகியவர்கள் அறிந்திருந்தாலும் அவர் பற்றிய சில செய்திகளை, இன்று உங்கள் பார்வைக்கு வைப்பதன் மூலம், நாம் நம் மண்ணின் குணத்தை மீட்டெடுப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!

    பொன்னுச்சாமி நாடகக் குழு என்ற புகழ்பெற்ற நாடகக் கம்பெனி இருந்தது. அதிலிருந்த்துதான், நடிகர் திலகம், லட்சிய நடிகர், வி.கே.ஆர் போன்றோரெல்லாம் சினிமாவுக்கு வந்தனர் என்பது வரலாறு.

    அந்த நாடகக் கம்பனி நலிந்த நிலையில் அதைக் காப்பாற்றும் நோக்குடன், கலைவாணர் அவர்கள் உரிமையேற்று எடுத்து நடத்த முனைப்பட்ட நேரம்,

    ஒரு நபர் கலைவாணரிடம், அய்யா எனக்கு நன்றாக நடிக்கத் தெரியும். எனக்கு வாய்ப்புக் கொடுத்தால், நான் (சிவாஜி ) கணேசனை விட நன்றாக நடிப்பேன் என்று சொல்கிறார். இதைக் கேட்ட கலைவாணர் அருகில் இருந்த நண்பருக்கு கோபம் வந்துவிட்டதாம்.

    என்ன சொன்னாய்? கணேசனை விட நன்றாக நடிப்பியா? எனக் கடிந்து கொள்ள,

    கலைவாணர் நண்பரைத் தடுத்து, என்ன தப்பிருக்கிறது அவன் சொன்னதில் என்று கேட்டு,

    உனக்குத் தெரியுமா? கணேசனை விட அவனுக்கு நடிக்கத் தெரியாமல் வேண்டுமானால் இருக்கலாம்!

    ஆனால், கணேசனை விட அவனுக்குப் பசி இருக்கிறது என்று சொன்னாராம்!

    இது தான் தமிழர் பண்பாடு!

    ஒருவன் பசியைப் புரிந்து கொள்ளும் மனநிலை என்பது தெய்வத்திற்குச் சமமானது!

    asuraகலைவாணர் அவர்கள் நடித்த ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சியில் பிச்சைக்காரனுக்கு மனைவி பிச்சையிட வரும்போது ஒருமையில் அழைப்பார். அதைப் பார்த்த கலைவாணர், தன் மனைவியைக் கடிந்து, மரியாதையாகப் பேசச்சொல்லுவார்! இப்படி தான் நடித்த காட்சிகளில் கூட, மற்றவர் மனம் புண்படக்கூடாது என்பதும், தானம் செய்வதன் நோக்கம் ஒரு இருமாப்பைத் தரக் கூடாது எனவும் அறிவுறுத்துகிறாரென்றால்,

    அந்தப் பண்பாடல்லவா நாம் கற்க வேண்டிய பால பாடம்!

    இப்படித்தான், இன்னொரு முறை கலைவாணர் அவர்கள் சென்னையில் இருந்தபோது, ஒரு நாயனக் குழுவினர், கலைவாணரை அணுகி, நாயனம் நன்கு வாசிக்கும் திறமை பெற்றவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, தங்களுக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததை ஏற்று, தன் வீட்டிற்கு மாலை வருமாறு கலைவாணர் அந்தக் குழுவிடம் கூற, அவர்கள் அன்று மாலை கலைவாணர் இல்லம் வருகின்றனர். கலைவாணரும் தன் நண்பர்களை கச்சேரி கேட்கலாம் வாருங்கள் என்று அழைத்ததை ஏற்று நண்பர்கள் கூட, கச்சேரி ஆரம்பமாயிற்று!

    வாசிக்க ஆரம்பித்தால் ஒரே அபஸ்வரமாகவே இருக்க, வந்தவர்கள் நெளிகிறார்கள். கலைவாணரோ, நல்லா வாசிக்கிறீர்களே….இன்னும் வாசிங்க….இன்னும் வாசிங்க என்று உற்சாகப் படுத்த,

    நண்பர் ஒருவர் கலைவாணரைப் பார்த்து….என்ன வாசிக்கிறான்? இன்னும் வாசி…வாசி என்று உற்சாகமூட்டுகிறீர் என்று கேள்வி கேட்க, கலைவாணர் சொன்னாராம்…..அட பைத்தியக்காரர்களே அவன் பசி…பசின்னு கத்துறான்…..உங்களுக்கு அவன் மொழி புரியவில்லை! ஆனால், எனக்குப் புரிகிறது! உடனே பணம் கொடுத்து அனுப்பிவிட்டால், அவன் திறமை மீது அவனுக்கு நம்பிக்கை குன்றிவிடும். ஆதலால், அவனைப் பெருமைப்படுத்தி, அவன் பசியைப் போக்க நினைத்தேன் என்றார்!

    என்ன நண்பர்களே….உங்கள் இதயத்தைத் தொட்டுச் சொல்லுங்கள்!

    இந்த ஈர நெஞ்சம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்று?
    ஆகத் தொடங்கிய பாடல் வரிகளாக இன்றைய வாழ்க்கை இருக்க,

    அதற்கு மாறாக நம் பண்பாடு இருக்க வேண்டுமென்று வாழ்ந்து காட்டிய அய்யா என்.எஸ்.கே அவர்கள் வாழ்க்கை இருக்க, மாறுவதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்ற கேள்வியுடன்

    சிகரத்தை நோக்கி பயணிப்போம்…….

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • பால்மனம் பூமனம் பாவை மனம் …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

     

    பால் மனம் பூ மணம்பால்மனம் பூமனம் பாவை மனம்…

    திரைப்பாடல் ஒன்றில்கூட மனம் லயித்துவிடுகிறதே, ஏன்… சொல்லுங்கள். அதுவும் பல்லவியிலேயே நம்மைக் கட்டியிழுக்கும் கவிஞர்களின் சாமார்த்தியம். இசையிலே சுண்டியிழுக்கும் இசையமைப்பாளர்களின் கற்பனா சக்தி. பாடக பாடகியரின் இனிமைதவழும் குரல்களில் அந்தக் கவிதை நதி இசையோடு பயணித்து வருகின்ற அழகில் நாம் சொக்கித்தான் போகிறோம்!

    இதோ இந்தப் பாடல்…

    கதை என்ன என்பது முக்கியமல்லாமல், யார் நடித்தார் என்கிற கேள்வி எழாமல், கேட்க வைக்கிற ரகம்! ஆம், பல்லவியில் உள்ள சுகம் ஏதோ ஒரு பல்லக்கில் நம்மை அமர வைக்கிறது! அந்தப் பல்லக்கின் ஆடல்போல் இசையும் அமைந்துவிட, பூங்காற்று இதமாக வருடிக்கொடுக்கிற பல்லவிகள்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் பி.சுசீலா இணைந்தளித்துள்ள தேவகானமா இது! தேன்மழை பொழிகிறமாதிரி, கண்ணன் ராதை காதல் லீலைகளின் அழைப்பிதழ் அச்சிடப்பட்டதுபோல் வாசகங்கள் வரிகளாய் அமைய வழிகிறது இனியதொரு கானம்!

    பிருந்தாவனத்தில் தொடங்கி, பள்ளியறை தொடர்ந்து, சரசக்கலையை உரசிக்காட்டும் உன்னத வரிகள்! விரசமின்றி பொங்கிவழியும் காதல் அமுதம்!! நல்லிசையால் நம் இதயங்களை மீட்டியெடுக்கிறார் இசையமைப்பாளர் வி.குமார்!

     

    “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

    பாடல்: பால் மனம் பூ மனம் பாவை மனம்
    திரைப் படம்:ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
    பாடல்: கவியரசு கண்ணதாசன்
    இசை: வி.குமார்
    பாடியவர்கள்: பீ.சுசீலா – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    காணொளி: https://www.youtube.com/watch?v=mcEr9r7qzF4

    “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
    பெண்:
    பால் மனம் பூ மனம் பாவை மனம்
    பால் மனம் பூ மனம் பாவை மனம்
    கண்ணா உனக்கிது பிருந்தாவனம்
    கண்ணா உனக்கிது பிருந்தாவனம்

    ஆண்:
    கோதையின் பூவுடல் கோகுலம் என்றே
    கண்ணன் விளையாட
    கோதையின் பூவுடல் கோகுலம் என்றே
    கண்ணன் விளையாட
    காலம் என்ன நேரம் என்ன கண்ணே கொஞ்சவா

    ஆண்:
    பால் மனம் பூ மனம் பாவை மனம்
    கண்ணே எனக்கது பிருந்தாவனம்

    ஆண்:
    வாடை தான் பட்டாடை இழுக்கும்
    செவ்வாழைப் பூ என் கண்ணைப் பறிக்கும்

    பெண்:
    கிள்ளித் கிள்ளிப் பறிக்கின்ற கைகள் என்னவோ
    கண் பட்டு கை தொட்டு கன்னிப் போகாதோ

    ஆண்:
    பூ முத்தம் வேண்டும் கன்னம்
    புண் படும் என்றா எண்ணும்

    பெண்:
    எல்லாம் இன்று தந்தால்
    நாளை மிச்சம் வேண்டுமே

    ஆண்:
    பால் மனம் பூ மனம் பாவை மனம்
    கண்ணே எனக்கது பிருந்தாவனம்

    பெண்:
    கால் முதல் என் கூந்தல் வரையில்
    உன் காவியம் சொல் பள்ளியறையில்

    ஆண்:
    சொல்லிச் சொல்லி முடியாது பள்ளிக் கவிதை
    அம்மமா கேட்டுப்பார் அந்திப் பொழுதை

    பெண்:
    ஆனந்த ராகம் ஒன்று ஆரம்பமாகும் அன்று
    ஆனந்த ராகம் ஒன்று ஆரம்பமாகும் அன்று

    ஆண்:
    ராகம் பாதி தாளம் பாதி சேர்ந்தால் கீதமே

    பெண்:
    பால் மனம் பூ மனம் பாவை மனம்

    ஆண்:
    கண்ணே எனக்கது பிருந்தாவனம்

    https://www.youtube.com/watch?v=mcEr9r7qzF4

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    இன்று கண்ணன் அம்ப்யர் போல் இருகரங்களை தூக்கி
    மழையில் நனையும் மாடுகளுக்கு ‘’ஆறு’’தல் சிக்ஸர்
    அளிக்கிறான்….

    ”ஆண்டவன் நானென்(று) அறிந்தபின்னும் இந்திரா,
    மூண்டெழச் செய்வதேன் மாரியிது -வேண்டாமே!,
    மேடெடுத்து அம்ப்யர்போல் மாடுகளுக்(கு) ஆறளித்த
    தேர்ட்அம்ப் பயரும்நான் தான்’’….கிரேசி மோகன்….

    மேடு -கோவர்த்தனக் குன்று….மாரி -மழை….

    Share
  • ரிபு கீதை படித்த பாதிப்பில்….

     

    ஆதித்தன் அம்புலிவிண் மீன்கள் மாயை
    ஆடவரும் பெண்டிரும்அவ் அலிகள் மாயை
    போதிமரத் தடிவாழும் புத்தரும் மாயை
    புகன்றவந்த நிர்வாணப் பூச்சும் மாயை
    வாதிட்டு வென்றசங் கரனும் மாயை
    விளைந்தஷண் மதங்களும் மாயை மாயை
    ஆதியந்த மிலாபிரமன் அடையா தோற்கு
    அகமாயை சகமாயை அனைத்தும் மாயை

    அதனாலோ இதனாலோ அதுயிங் கில்லை
    அதுவாக அதற்குள் அதுவாய் ஆகி
    அதன்பின்னே அதுஅலுத்து அதுவே றாகி
    அதுவென்றும் இதுவென்றும் அதனால் மாறி
    அதற்கப்பால் இதற்குள்ளே அதுபோய் நின்று
    அதுஆதி இதுஅந்தம் எனப்பேர் கொண்டு
    எதுஇதுவென்(று) எனஅதுவே எங்கும் தேடி
    இதுஅதுவென்(று) அதுஅகமென்(று) அடங்கும் ஆன்மா
    வைகுண்டம் கைலாஸம் வானம் பூமி
    வார்த்தைகள் தானன்றி வேறே இல்லை
    பொய்கொண்ட வாழ்க்கையைப் புறத்தே தள்ளி
    புலன்களுக்கு அப்பாலே பார்த்துப் பார்த்து
    மெய்கண்டு கொள்ளஅம் மாயை போகும்
    முயல்கொம்பால் மலடிமகன் பேரை நீரில்
    கைகொண்டு எழுதிடலாம் குருடன் என்று
    கையெழுத்து காய்வதற்குள் காலம் மாறும்….

    காட்சிகளும் காண்போனும் காணும் கண்ணும்
    கற்பிதமா சொப்பனமா கானல் நீரா
    ஆட்சியிது ஐம்புலன்கள் ஆட்டம் அன்றோ
    ஆதலினால் ஆன்மாவை ஆத ரித்து
    சாட்சிபரி பாலனமாய் சான்றோர் போக்கில்
    சுகதுக்க பேதமற சார்ந்தோர் உள்ளம்
    சூழ்ச்சிபுரி காலன்தன் சூதை வென்று
    சும்மாயி ருக்கலாமே சுகமாய் என்றும்….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    கட்டை விரல் சைஸுக்கு ஆன்மா இருப்பதாய் ஐதீகம்(அங்குஷ்டாப்யாம்)
    அந்த ஆன்மன் கிருஷ்ண ஆண்மன்….

    அங்குஷ்டாப்யாம்
    ———————-

    வீணாய் இலைகளும் வேர்களும் இல்லாது
    தானாய் முளைக்கும் மரமிவன் -நானார் ?
    உரலில் தலைவிட்டு ஓவென்(று) அழுதால்
    விரலளவு ஆகும் வியப்பு….கிரேசி மோகன்….

    பகவான் ஸ்ரீ அரவிந்தர் சொல்வார்….
    ‘’An Eternal Child Plaqying An Eternal game
    In an Eternal Garden”…..

    அந்தக் குழந்தைதான் கிருஷ்ணன்….
    அவனது GAME தீராத விளையாட்டு….
    அவன் ஆடும் GARDEN பிருந்தாவன் -கார்டன்….

    ‘’சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே,
    எந்தையே ஏகப் பரம்பொருளே, -விந்தையே!
    தீராத ஆட்டத்தை, மாறாத தோட்டத்தில்,
    சீராக ஆடிடும் சேய்’’….கிரேசி மோகன்….

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜூன் 15, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு ‘மல்ட்டி ஃபன்’ குழு மாணவர்கள் 

    20150527_499_HR_042

    ஏர்பஸ் விமான நிறுவனம் யூனெஸ்கோ நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கான உலகளாவிய போட்டியாக “ஃப்ளை யுவர் ஐடியாஸ்” (Unesco-Airbus ‘Fly Your Ideas’ global student competition) என்ற போட்டியை நடத்தி வருகிறது. மாணவர்களிடம் வானூர்தி தயாரிப்பின் தொழில் நுட்ப ஆர்வத்தைத் தூண்டுவதும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க ஊக்கமூட்டுவதுமே இப்போட்டியின் அடிப்படை நோக்கமாகும். நான்காவது முறையாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றிபெற்ற “மல்ட்டி ஃபன்”(Multifun) என்ற இந்திய மாணவர் குழுவினரை இவ்வார வல்லமையாளர்களாகப் பாராட்டி வாழ்த்துவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். மல்ட்டி ஃபன் மாணவர் குழுவினரை வல்லமையாளர்களாகப் பரிந்துரைத்தவர் வல்லமை இதழின் நிறுவனர் முனைவர் அண்ணா கண்ணன் அவர்கள். அவரது பரிந்துரைக்காக அவருக்கு நன்றியை வல்லமைக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

    Team Multifun2

    இந்த ஆண்டு இப்போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 3,700; 104 நாடுகளில் இருந்து பலதுறைகளையும் சேர்ந்த 518 குழுவினர் போட்டியிட்டனர். போட்டியில் கலந்து கொண்டவர்களில் ஆசியா பசிஃபிக் நாடுகளின் மாணவர்கள் 45%, ஐரோப்பியர் 35%, அமெரிக்கர் 15%. இவர்களில், 71% குழுக்கள் பலவகைப் படிப்புகளைக் கொண்ட மாணவர்களையும், பலநாடுகளில் வாழும் மாணவர்களையும், ஆண்களும் பெண்களும் எனப் பல பிரிவினரும் இணைந்த குழுக்களாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. விமானத்தின் செயல்திறன் மேம்பாடு, பயணிகளின் வசதி அதிகரிப்பு, எரிபொருள் சேமிப்பு, எளிய செயல்படுத்தும்தன்மை, பயணப் பாதுகாப்புக்கு உதவி, மக்கள் தொடர்பு மேம்பாடு என விமானப்பயணத்தினை மேம்படுத்தும் வகையில் குறிப்பிட்ட இந்த ஆறு பிரிவுகளில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து தங்கள் திட்டத்தை மாணவர்கள் ஏர்பஸ் நிறுவனத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.  இவ்வாறு மாணவர்கள் சமர்ப்பித்த திட்டங்களைப் பரிசீலித்த பின்னர், சென்ற ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற முதல் சுற்றில் 100 குழுவினர் இரண்டாம் சுற்றுக்காகத் தேர்வு செய்யப்பட்டனர். சென்ற மாதம் மே 27 ஆம் தேதி அன்று நடந்த இறுதிச் சுற்றில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டவர்கள் பிரேசில், சீனா, ஜப்பான், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த 5 குழுவினர்.

    Finalists on the stage collage

    நெதர்லாந்தின் டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (Delft University of Technology, Netherlands) பயிலும் இந்திய மாணவர் சதீஷ்குமார் அனுசூயா பொன்னுசாமியின் தலைமையில் நான்கு நாடுகளில் படிக்கும் ஐந்து இந்திய மாணவர்கள் ‘மல்ட்டி ஃபன்’ என்ற ஒரு குழுவாக இணைந்தார்கள். தாமோதரன் வீராசாமி (சிட்டி யுனிவர்சிட்டி ஆஃப் லண்டன்), மொஹித் குப்தா (ஜியார்ஜியா டெக் யுனிவர்சிட்டி, அமெரிக்கா) , சஷாங்க் அகர்வால் மற்றும் அஜித் மோசஸ் (இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ், பெங்களூரு) என உலகின் பல பகுதிகளில் படித்துவரும் இந்திய மாணவர்கள் தொலைத்தொடர்பு வழியாகவே இணைந்து பணியாற்றினார். இவர்கள் பொறியியல் துறையிலும், விண்வெளிப் பொறியியல் துறையிலும், வானியல் துறையிலும் உயர்கல்வி, முனைவர் ஆய்வுக்காகப் பயிலும் மாணவர்கள். மொஹித் குப்தாவைத் தவிர்த்து பிறர் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை வழி நடத்தியவர் இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ்ஸின் பேராசிரியர் தினேஷ்குமார் ஹருர்சம்பத் அவர்கள். கடந்த ஆறு மாதங்களாக இணையவழி ஒருங்கிணைந்து பணியாற்றிய பின்னர், ஜெர்மனியில் நடந்த இறுதிப் போட்டியில் நேரடியாக முதன்முதலில் சந்தித்து தங்களது அறிவியல் கருத்தை போட்டியின் நடுவர்களிடம் மல்ட்டி ஃபன் குழுவினர் விளக்கினர்.

    மல்ட்டி ஃபன் குழு ஏர்பஸ் நிறுவனத்தின் போட்டியில் முன்வைத்தத் திட்டம்:

    Team Multifun3
    விமானப்பயணத்தின் பொழுது ஏற்படும் அதிர்வுகளைப் பயன்படுத்தி அவற்றில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து, மின்கலங்களில் அந்த மின்சாரத்தைச் சேமித்து விமானப்பயணத்தின் பொழுது தேவைப்படும் விளக்குகள், கேளிக்கை பயன்பாட்டிற்கான மின்திரைகள் ஆகியவற்றை இயக்கப் பயன்படுத்துவது இவர்கள் முன்வைத்த திட்டமாகும். விமானப்பயணத்தில் ஏற்படும் அதிர்வுகள் யாவும் இதுநாள்வரை விரயமாகின்றன. ‘பைஸோஎலக்ட்ரிக் இழைகள்‘ (Piezoelectric fibres) சிறு அதிர்வுகளால் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இந்த இழைகளால் ஆன உறையை விமானத்தின் இறக்கைகளின் மேல் அமைத்து அதன்மூலம் பெறும் பெறும் மின்சக்தியை மின்கலத் தகடுகளில் சேமித்து பயன்படுத்த இயலும். நீண்ட தூர விமானப்பயணத்தில் விமானம் 12 மணி நேரம் வரை பறக்கும், அப்பொழுது கிடைக்கும் மின்சக்தியே விமானத்தின் விளக்குகளை ஒளிர்விக்கப் போதுமானது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் விமானப்பயணத்தில் எரிபொருள் சேமிப்பிலும் முன்னேற்றம் காணலாம் என்று மல்ட்டி ஃபன் குழுவினர் நடுவர்களுக்கு விளக்கினர். இவர்களது திட்டம் நடைமுறைப்படுத்தவும் எளிதானது, தொலைநோக்குப் பார்வை கொண்டது, முன்னர் இதுவரை எவரும் முன்வைக்காத ஒரு புதிய கோணம் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 30,000 யூரோ வெள்ளிகள் பரிசளிக்கப்பட்டனர்.

    SKETCH_Multifun 1

    வெற்றிபெற்ற குழுவின் தலைவர் சதீஷ்குமார் அனுசூயா பொன்னுசாமி, தனது குழுவினர் யாவரும் இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ்ஸில் ஒன்றாகப் படித்த மாணவர்கள், இந்தியாவின் பின்புலம் கொண்ட மாணவர்கள் என்றாலும் பல்வேறு மொழிகளையும் பேசும் பின்புலம் கொண்டவர்கள் என்றும், அவர்களது பலவிதப் பின்னணியே மல்ட்டி ஃபன் என்று குழுவிற்குப் பெயரிடக் காரணமானது என்று வெற்றிபெற்ற பின்னர் பத்திரிக்கைகளுக்கு அளித்த நேர்காணலில் கூறினார். இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ்ஸின் கல்விச் சூழ்நிலையும், வழங்கும் பயிற்சியும் புதுமையான எண்ணங்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது என்றும் கூறியுள்ளார். கடந்த ஆறு மாதங்களாக வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றி, புதுமையான திட்டமொன்றை முன்வைத்து, உலகளாவிய போட்டியில் வெற்றிபெற்று தாய்நாட்டின் பெருமையை உயர்த்திய இம்மாணவர்களை வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சியுடன் பாராட்டிப் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    தகவல்களும் படங்களும் வழங்கிய இணையதளம்: http://www.airbus-fyi.com/article/769/team-multifun

    Share
  • திருக்குறளுக்குப் புது விளக்கம் – 1

    — புலவர் இரா.  இராமமூர்த்தி.

    திருவள்ளுவரின் ஆன்மிகக் கொள்கை எண்ணுந்தோறும் இன்பம் பயப்பது. அவர் இறைவன் , உயிர், தளை ஆகியவற்றைப் பற்றித் தனிச்சிறப்புடைய கருத்துக்களை வழங்கியுள்ளார். இறைவன் பற்றிய இந்துமதத்தின் புராணக் கருத்துக்களை இடையிடையே விளக்கியுள்ளார்.

    அவர் ”மடியின்மை” அதிகாரத்தில்,

    “மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
    தாஅயது எல்லாம் ஒருங்கு.”

    என்ற திருக்குறளிலும்,

    ”ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலும் கரி”

    என்ற திருக்குறளிலும்,
    ”மாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு மூவுலகையும் அளந்த திருமாலின் வாமனாவதாரக் கதையையும், இராமாயணத்தில் அகலிகை சாபம் பெறக் காரணமான இந்திரன் இறைவனிடம் தண்டனை பெற்ற வரலாற்றையும் குறிப்பிட்டுள்ளார்.

    முதல் திருக்குறளில், ” மடியிலா மன்னவன்” என்ற தொடரின் பொருளை – என்றும் முழுமையான சுறுசுறுப்புடன், வஞ்சனை இன்றி உழைக்கும் மன்னவன் – என்று பொருள் கொண்டால், மாபலி முன் குறளனாய்த் தோன்றி ” மூன்றடி மண் வேண்டும்” என்று வரம் கேட்டபின், யாருமே நினைந்திராத பேருயரம் பெற்று வளர்ந்து, தான் கேட்ட மூன்றடி நிலத்தின் அளவை மாற்றி வஞ்சனை செய்த வாமனன் அளந்து பெற்ற மூவுலகையும், வள்ளுவர் காட்டும் மடியிலாத சுறுசுறுப்புடைய வஞ்சனையில்லாத மன்னவன் பெறுவான் என்று புதுப் பொருள் கொள்ளலாம் !

    இதனை, இளங்கோவடிகள் தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தில் குறிப்பாக விளக்குகிறார்…

    ”மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத்
    தாவிய சேவடி சேப்பத் தம்பியோடும் கான்போந்து
    சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
    சேவகன்!”

    என்ற பாடற்பகுதியில், ”முறை நிரம்பா வகை முடியத் தாவிய சேவடி ” என்ற தொடரின் பொருளாக, ”முறைமை நிரம்பாத வஞ்சனைச் செயலால் தாவிய சேவடி” என்ற கருத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டதை உணர்கிறோம்! அதுமட்டுமல்லாமல், அவ்வாறு வஞ்சனையால் தாவிய சேவடிக்கு தண்டனை தந்து கொண்டு , பெருமாளே தம் சேவடி சிவக்கச் சிவக்க நடந்தார் – என்ற பொருளில் அவர் எழுதியுள்ளார் என்பதையும் உணர்கிறோம்! ஆதலால், வாமனன் வஞ்சனையால் அடைந்த மூவுலகையும், மடியின்றி நேர்மமையாக அரசாளும் மன்னவன் எய்துவான் என்ற புதுப்பொருள் நமக்கு உரிய வகையில் நல்ல விளக்கத்தைத் தருகிறது.

    திருவள்ளுவரும் ஏனைய சான்றோர்களும் உலகில் பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இறக்கும் உயிரின் நிலையை மிகவும் துன்பமுடையது என்றே கூறுகின்றனர். திருக்குறளில்,”பிறவிப் பெருங்கடல்”(10) , வாழ்நாள் வழியடைக்கும் கல்”(38), ”வாழ்க்கை வழி எஞ்சல்”(44) , எழுபிறப்பும் ”(62, 107), ”இழிந்த பிறப்பு”133) , ”தோன்றின் புகழோடு ”(236), ”சாக்காடு, பிறப்பு”(339) ”பிறப்பறுக்கல்”(345), ”பிறப்பறுக்கும்”(349), முதலான நாற்பத்து நான்கு குறட்பாக்களில் பிறப்பின் இழிவைத் திருவள்ளுவர் கூறியுள்ளார்!

    இந்த பிறப்பிறப்புத் தொடர்ச்சியை மாணிக்கவாசகர்,

    ”பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் ”,

    ” புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் ” என்றும் ,

    ”மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே” என்றும் பாடுகிறார்…

    இந்தப் பிறப்பினுள் பலவகைப்பட்ட துன்பங்களை நாம் அனுபவிப்போம், இவை பிறக்கும் முன்னரே உருவாகி, நம்மை அச்சுறுத்தும் என்கிறார் மாணிக்க வாசகர்.

    பிறப்பதற்கு முன்னர் தாயின் கருப்பையுள் கிடக்கும் குழவி, ஒவ்வொரு திங்களும் எத்தகைய துன்பச் சூழ்நிலையிலிருந்து தப்பிப் பிழைக்கிறது என்பதை அவர் துன்பங்களை

    யானை முதலா எறும்பு ஈறு ஆய,
    ஊனம் இல், யோனியின் உள் வினை பிழைத்தும்;
    மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து,
    ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்;
    ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்;
    இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்;
    மும் மதி தன்னுள் அம் மதம் பிழைத்தும்;
    ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்;
    அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்;
    ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும்;
    ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்;
    எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்;
    ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்;
    தக்க தச மதி தாயொடு தான் படும்
    துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்

    என்றும் பாடுகிறார். மேலும் பிறந்து வளரும்போது எத்தனைத் துன்பங்களிலிருந்து ஓர் உயிர் பிழைக்கிறதுஎன்பதையும் அவரே பாடுகிறார்…

    ஆண்டுகள்தோறும் அடைந்த அக் காலை
    ஈண்டியும், இருத்தியும், எனைப் பல பிழைத்தும்;
    காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி
    வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்:
    கரும் குழல்; செவ் வாய்; வெள் நகை; கார் மயில்
    ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்து,
    கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து,
    எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து,
    ஈர்க்கு இடை போகா இள முலை; மாதர் தம்
    கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்:
    பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
    மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்;
    கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்;
    செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்;
    நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்;
    புல் வரம்பு ஆகிய பல துறை பிழைத்தும்
    தெய்வம் என்பதோர் சித்த முண்டாகி
    என்று பாடுகிறார்.

    இவ்வாறு தாயின் கருப்பைக்குள்ளும், பிறந்தபின் வெளி உலகிலும் இந்த உயிர் படும் பாட்டை பிறவித்துன்பங்கள் என்று சான்றோர் கூறுவர்.

    ”கருப்பத்தூறிப் பிறவாதே கனக்கப் பாடுற்று உழலாதே” என்று அருணகிரிநாதர் பாடுகிறார்! இவற்றுக்கெல்லாம் மூலகருத்தைத் திருக்குறள் அழகாகக் கூறுகிறது. நாம் பிறப்பதற்கு உரிய கருவி, தாயின் கருப்பை. இந்தக் கருப்பைக்குள் உயிரை இட்டு இறைவனே வளர்க்கிறார்! இனி, தனிச் சிறப்புடைய இரண்டு குறட்பாக்களை இங்கே ஆராய்வோம்

    ”வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல ”

    என்ற குறட்பாவுக்கு, ”விருப்பு வெறுப்பு இல்லாத இறைவன் திருவடியை வழிபாடு செய்தோருக்கு, எக்காலத்தும், என்றும் பிறவித் துன்பங்கள் இல்லை!” என்றே அனைவரும் இதுகாறும் பொருள் கூறி வந்தனர். மேலே நாம் கண்ட பிறப்புத் துன்பங்களைப் பற்றிய கருத்துக்களின் படி, ”இடும்பை ” என்ற சொல்லை – இடும்+ பை – என்று பிரித்து நாம் புதிய பொருளைக் காணலாம்! இதன் படி இடும் பை என்பது நம்மை ஏற்றுத் தாங்கிப் பிறப்பிக்கும் கருப்பையைக் குறிக்கும்! விருப்பு வெறுப்பற்ற இறைவனை வழிபட்டார்க்கு எக்காலத்தும் இனிப் பிறப்புத் துன்பம் இல்லை; அதாவது இடும் (கருப்)பை இல! என்று இத் திருக்குறளுக்குப் புதிய , பொருத்தமான பொருளைக் காணலாம் ! இவ்வாறே,

    ”நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம்
    என்றும் இடும்பை தரும் ”(138)

    என்ற திருக்குறளுக்கும் இவ்வாறே புதிய பொருளைக் காணலாம்!மேலும் …

    ” இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை
    கையாறாக் கொள்ளாதாம் மேல்” (627)

    என்ற திருக்குறளையும் இவ்வாறே காணலாம். திருக்குறளுக்குப் பொருள் காணும் முறைகளுள் இதுவும் ஒருவகையே! அதற்காக இடும்பை என்ற சொல் துன்பம் என்ற பொருளில் அமைந்த மற்ற குறட்பாக்களுக்கும் இடும்+பை என்று பொருள் கொள்ளுதல் தவறாகும்.

    திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி
    ஆலந்தூர், சென்னை 600 016.

    Share
  • படக்கவிதைப் போட்டி (17)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11356062_847745791946288_1022635255_n

    123121007@N08_rதிரு ஆதித்யா நாகராஜ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (20.06.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 170

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    சாரணர் கூறிய குரங்குக் கை வானவனது வரலாறு

    சாரணன் கூறியதாவது:

    முன்பு ஒரு காலம்
    ’எட்டி’ எனும் பட்டம் பெற்ற
    ‘சாயலன்’ எனும் வணிகன் ஒருவன் இருந்தான்
    பட்டினி இருந்து நோன்பு செய்யும் பலரும் வந்து
    தம் இல்லம் சேர்ந்து தானம் செய்ய வேண்டி
    அவன் இல்லம் துறவாது வாழ்ந்து வந்தான்

    மேலான தவத்தால் சிறப்புப் பெற்ற ஒருவனை
    இல்லறத்துணையாகிய சாயலன் மனைவி,
    தம் தீவினைகள் அழிய வேண்டி                       monkey for silambu
    ஒரு நாள் எதிர் கொண்டழைத்து
    உணவு படைத்தாள்

    அப்போது அவ்வூர் மக்கள் அலைக்கழித்ததால்
    அச்சப்பட்ட சிறுகுரங்கு ஒன்று
    அம்மனைக்குள் புகுந்தது
    அருளும் அறனும் வாய்க்கப்பெற்ற
    அம்மாதவ(ன்) அடிகளை வணங்கி,
    அவன் உண்டபின் மிஞ்சிய சோற்றையும்
    அவன் ஊற்றிய நீரையும் விரும்பி உண்டு
    தன் பசி நீங்கியது

    இன்பமடைந்த அக்குரங்கு
    அவன் முன்னே சென்று நின்று
    தன் நன்றியை அறிவிக்கும் வண்ணம்
    அவன் முகத்தை நோக்கியபடி இருந்தது

    இச்செய்கையை விரும்பிய
    பிறழாத அறக்கொள்கையுடைய அம்மாதவனும்
    சாயலன் மனைவியை நோக்கி,
    ‘இல்லக்கிழத்தி!
    இக்குரங்கினை நின் மக்களைப் போலப்
    போற்றிப் பாதுகாப்பாயாக!’ என்றுரைத்தான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 163 – 174

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
    pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • இரட்டைவால் குருவி!

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    கரிக்குருவி, வலியன் குருவி, கரிச்சான்,
    கருவாட்டு வாலி, ஆனைச்சாத்தன், காரியெனும்
    கறுப்பான பல பெயருடைய இரட்டைவால் குருவி
    கண்டம் ஆசியா தாயகமான சிறுகுருவி

    கீச்சுக் கீச்சு ராகமாய் உற்சாகச் சுரத்தில்               sparrow
    கீதமிசைக்கும்; அடர்த்தியற்ற காட்டில் வாழும்
    வால் இரண்டாய்ப் பிளந்து ஆங்கில
    ’வி’  எழுத்துருவில் இருபத்தெட்டு செ.மீ. நீளம்

    பயமற்றது, துணிச்சல், உரமுடை மனம்
    பசுக்களின் மீதேறிச் சவாரி செய்யும்
    பருந்து, காகம், கழுகுகளை ஓடஓட
    பராக்கிரமமாய் விரட்டிக் கொத்தி எதிர்க்கும்!

    எறும்புப் புற்றின் மீது அமருமாம்
    எண்ணற்ற தன்னுடலின் உண்ணிப் பூச்சிகளையழிக்க!
    எறும்புகள் வெளியாக்கும் பாஃமிக் அமிலத்தில்
    எல்லாப் பூச்சிகளும் அழியுமாம்! வியப்பு!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(76)

    -செண்பக ஜெகதீசன்

    கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையர் கல்லா தவர். (திருக்குறள்-393: கல்வி)

    புதுக் கவிதையில்…

    கண்போன்றது கல்வி,
    கற்றவர்தான்
    கண்ணுடையார் எனப்படுவர்…

    கல்லாத மூடர்
    முகத்திலிருப்பவை
    கண்களல்ல,
    பயனிலாப் புண்கள்…!

    குறும்பாவில்…

    கல்வி கற்றோர்தான் கண்ணுடையோர்,
    கல்லாதவர் முகத்திருப்பவை
    கண்களல்ல, புண்கள்…!

    மரபுக் கவிதையில்…

    முன்னால் நடப்பதைப் பார்ப்பதற்கே
    –முகத்தில் இரண்டு கண்வேண்டும்,
    தன்னால் உலகைக் காண்பதற்கே
    –தரமிகு கல்வி தான்வேண்டும்,
    சொன்னார் பெரியோர் கண்ணெனவே
    –சொத்தாம் கல்வி அறிவினையே,
    முன்னால் முகத்தில் உள்ளதெல்லாம்
    –மாசுடைப் புண்ணாம் கல்லார்க்கே…!

    லிமரைக்கூ…

    கல்வி அறிவுதான் உண்மையில் கண்,
    கல்லார் முகங்களில் உள்ளவை
    காணும் கண்ணல்ல, கவலைதரும் புண்…!

    கிராமிய பாணியில்…

    கண்ணுகண்ணு பாக்கும்கண்ணு
    கல்விதானே காக்கும்கண்ணு,
    பொன்னுபொன்னு மின்னும்பொன்னு
    படிப்புத்தானே மின்னும்பொன்னு…

    கல்வியறிவு கண்ணா ஆச்சி
    படிப்பறிவு பார்வயா ஆச்சி,
    படிச்சவன் மொகத்திலத்தான்
    பாத்துக்கநீ கண்ணுகண்ணு,
    படிக்காதவன் வச்சிருக்கான்
    புண்ணுபுண்ணு ரெண்டுபுண்ணு…

    கண்ணுகண்ணு பாக்கும்கண்ணு
    கல்விதானே காக்கும்கண்ணு…!

     

    Share
  • இரட்டை நான்!

    -இரா.சந்தோஷ் குமார்

    அதுவோர் இல்லம்
    ஊதுப்பத்தி மணம் பரவிய
    வரவேற்பறையில்
    ஒரு விளக்கு எரிகிறது
    அதனருகே…
    நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கிறேன்!

    சற்று நிமிடங்களுக்கு முன்
    அடிவயிற்றிலிருந்து எழும்பிய
    வலிப்போன்ற
    ஓர் உணர்வு
    தொண்டைக்குழியில்
    சிக்கித்திணறி
    விக்கி விக்கி
    நாசிவழியே வெளியேறியது
    அனற்போன்ற குளிர்காற்று!

    யாரோ ஒரு பெண்
    அழுதபடியே
    வெள்ளைத்திரவத்தை
    என் வாய்வழியே ஊற்ற
    அது நிரம்பிய குடத்திலிருந்து
    வெளியேறும் நீரைப்போல
    பீறிட்டது!
    ஊற்றியது என் தாயாக இருக்கும்

    யாரோ ஒரு பெரியவர்
    உடல் குலுங்கித்
    தேம்பித் தேம்பிச் சாய்கிறார்
    அவரென் தந்தையாக இருக்கும்

    இப்போது,
    வரவேற்புரை முழுக்க
    உறவு, நட்பு, மனிதமுள்ள
    மானிடர்களுடன் சில
    துரோக எதிரித் தலைகளும்!

    அன்றொருநாள்
    மூளைவெடிக்கச் சிந்தித்தெழுதிய
    என் எழுத்துகளுக்கு
    மறுப்புச்சொன்னவர்
    இன்று
    ரோஜாப்பூ மாலையினை
    என் மீது கிடத்துகிறார்…

    வெறுப்பு எச்சில்களில்
    எனைக் கழுவியவர்கள்
    மல்லிப்பூ மாலையிடுகிறார்கள்!

    சற்று நாழிகைக்குப்பின்
    பூக்கள் அலங்கரித்த
    மூங்கில் பல்லக்கில்
    எனைத்தூக்கிச் செல்கின்றனர்
    பறையின் இசையுடன்
    சங்கு முழங்குகிறது!

    ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறேன்
    என் பின்னால்
    இருபதுக்கும் மேற்பட்டவர்கள்
    சோகம் கவ்வியவாறு…

    ஓ! நான் மனிதர்களை
    சம்பாதித்து இருக்கிறேனே…!

    அதிலொருவர்
    பாவம் நல்லா எழுதுவான்
    செத்துட்டான் என்கிறார்
    ஓ இவரா…? இவர்தான்
    புத்தகப் பதிப்பகத்தார்!
    வாய்ப்புக்கேட்டு
    என் தன்னம்பிக்கையில்
    பலமாக இவர் கதவை
    ஓர் அங்கீகாரத்தென்றலுக்காக
    அன்று தட்டியப்போது
    சாளரத்தினை சற்றுத்திறந்து
    “பத்துவிரல்கள் வைத்து
    கணினி எலிக்கருவி பிடித்து
    இணையத்தை இயக்கத்தெரிந்த
    நீயெல்லாம் ஓர் எழுத்தாளனா?” என
    ஏளன எச்சில் துப்பியவர்தான் இவர்

    நான் எப்போது செத்துப்போனேன்.
    உடலுக்குள் ஓர் உயிராக நானாக
    உயிருக்குள் ஓர் உயிராக வேறொரு நானாக
    வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறேன்!

    பிரபஞ்சத்தில் உலாவியவாறு
    ஒரு நானாக
    பூமிப்பந்தில் உலாவியவாறு
    ஒரு நானாக
    இரட்டை நானாக
    வாழ்கிறேனே…!

    அய்யோ… வெட்டியானே…
    ஏன் என்னுடலை எரிக்கிறாய்?
    உடலுக்குள்ளிருக்கும் நான்
    மரித்துவிட்டேனா…?

    ஓ… ! ஓ….!
    இப்போது நான் எந்த நான் ?
    உடலற்ற நானா?
    உடலுள்ள நானா ?

    அச்சோ… தோழர்களே….!
    ஓர் உதவி வேண்டும்…
    இந்தப் படைப்பை
    கவிதை என்றோ
    கட்டுரை என்றோ
    ஏதேனும்
    இலக்கியப் பத்திரிகையிலோ
    மின்னிதழ்களிலோ
    பிரசுரம் செய்யவேண்டுமே..!

    உதவி…உதவி… உதவி…!

    Share
  • ஈகைக் குணம் நன்றே !

    -பா.ராஜசேகர்

    சிந்தையிலே
    விந்தையுண்டு
    பிறர்க்குதவும்
    குணமும் ஒன்று !

    இல்லாதோர்
    காண்கையிலே
    இளகிநின்று
    மனம் நோகும் !

    பிறர்க்கீய
    மனம் துடிக்கும்
    தன்
    பசி மறக்கும் !

    மறுநொடி
    மடிதேடும்
    உதவும்
    மனம் மகிழும் !

    பலன் காணாது
    பழகும்
    வரம்கண்டு
    வாழும் !

    சிந்தையிலே
    அரிய விந்தை
    வள்ளல்
    குணம் ஈகை !

    செல்வத்துள்
    சிறப்போன்றே
    இச்செல்வக்
    குணம் நன்றே !

    பிறர்க்குதவத்
    தேவை
    செல்வச்செழிப்பல்ல…
    மனக்களிப்பே!

     

    Share