புலவர் இரா.  இராமமூர்த்தி.

திருவள்ளுவரின் ஆன்மிகக் கொள்கை எண்ணுந்தோறும் இன்பம் பயப்பது. அவர் இறைவன் , உயிர், தளை ஆகியவற்றைப் பற்றித் தனிச்சிறப்புடைய கருத்துக்களை வழங்கியுள்ளார். இறைவன் பற்றிய இந்துமதத்தின் புராணக் கருத்துக்களை இடையிடையே விளக்கியுள்ளார்.

அவர் ”மடியின்மை” அதிகாரத்தில்,

“மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.”

என்ற திருக்குறளிலும்,

”ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி”

என்ற திருக்குறளிலும்,
”மாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு மூவுலகையும் அளந்த திருமாலின் வாமனாவதாரக் கதையையும், இராமாயணத்தில் அகலிகை சாபம் பெறக் காரணமான இந்திரன் இறைவனிடம் தண்டனை பெற்ற வரலாற்றையும் குறிப்பிட்டுள்ளார்.

முதல் திருக்குறளில், ” மடியிலா மன்னவன்” என்ற தொடரின் பொருளை – என்றும் முழுமையான சுறுசுறுப்புடன், வஞ்சனை இன்றி உழைக்கும் மன்னவன் – என்று பொருள் கொண்டால், மாபலி முன் குறளனாய்த் தோன்றி ” மூன்றடி மண் வேண்டும்” என்று வரம் கேட்டபின், யாருமே நினைந்திராத பேருயரம் பெற்று வளர்ந்து, தான் கேட்ட மூன்றடி நிலத்தின் அளவை மாற்றி வஞ்சனை செய்த வாமனன் அளந்து பெற்ற மூவுலகையும், வள்ளுவர் காட்டும் மடியிலாத சுறுசுறுப்புடைய வஞ்சனையில்லாத மன்னவன் பெறுவான் என்று புதுப் பொருள் கொள்ளலாம் !

இதனை, இளங்கோவடிகள் தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தில் குறிப்பாக விளக்குகிறார்…

”மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியோடும் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்!”

என்ற பாடற்பகுதியில், ”முறை நிரம்பா வகை முடியத் தாவிய சேவடி ” என்ற தொடரின் பொருளாக, ”முறைமை நிரம்பாத வஞ்சனைச் செயலால் தாவிய சேவடி” என்ற கருத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டதை உணர்கிறோம்! அதுமட்டுமல்லாமல், அவ்வாறு வஞ்சனையால் தாவிய சேவடிக்கு தண்டனை தந்து கொண்டு , பெருமாளே தம் சேவடி சிவக்கச் சிவக்க நடந்தார் – என்ற பொருளில் அவர் எழுதியுள்ளார் என்பதையும் உணர்கிறோம்! ஆதலால், வாமனன் வஞ்சனையால் அடைந்த மூவுலகையும், மடியின்றி நேர்மமையாக அரசாளும் மன்னவன் எய்துவான் என்ற புதுப்பொருள் நமக்கு உரிய வகையில் நல்ல விளக்கத்தைத் தருகிறது.

திருவள்ளுவரும் ஏனைய சான்றோர்களும் உலகில் பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இறக்கும் உயிரின் நிலையை மிகவும் துன்பமுடையது என்றே கூறுகின்றனர். திருக்குறளில்,”பிறவிப் பெருங்கடல்”(10) , வாழ்நாள் வழியடைக்கும் கல்”(38), ”வாழ்க்கை வழி எஞ்சல்”(44) , எழுபிறப்பும் ”(62, 107), ”இழிந்த பிறப்பு”133) , ”தோன்றின் புகழோடு ”(236), ”சாக்காடு, பிறப்பு”(339) ”பிறப்பறுக்கல்”(345), ”பிறப்பறுக்கும்”(349), முதலான நாற்பத்து நான்கு குறட்பாக்களில் பிறப்பின் இழிவைத் திருவள்ளுவர் கூறியுள்ளார்!

இந்த பிறப்பிறப்புத் தொடர்ச்சியை மாணிக்கவாசகர்,

”பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் ”,

” புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் ” என்றும் ,

”மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே” என்றும் பாடுகிறார்…

இந்தப் பிறப்பினுள் பலவகைப்பட்ட துன்பங்களை நாம் அனுபவிப்போம், இவை பிறக்கும் முன்னரே உருவாகி, நம்மை அச்சுறுத்தும் என்கிறார் மாணிக்க வாசகர்.

பிறப்பதற்கு முன்னர் தாயின் கருப்பையுள் கிடக்கும் குழவி, ஒவ்வொரு திங்களும் எத்தகைய துன்பச் சூழ்நிலையிலிருந்து தப்பிப் பிழைக்கிறது என்பதை அவர் துன்பங்களை

யானை முதலா எறும்பு ஈறு ஆய,
ஊனம் இல், யோனியின் உள் வினை பிழைத்தும்;
மானுடப் பிறப்பினுள், மாதா உதரத்து,
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்;
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்;
இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்;
மும் மதி தன்னுள் அம் மதம் பிழைத்தும்;
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்;
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்;
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும்;
ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்;
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்;
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்;
தக்க தச மதி தாயொடு தான் படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்

என்றும் பாடுகிறார். மேலும் பிறந்து வளரும்போது எத்தனைத் துன்பங்களிலிருந்து ஓர் உயிர் பிழைக்கிறதுஎன்பதையும் அவரே பாடுகிறார்…

ஆண்டுகள்தோறும் அடைந்த அக் காலை
ஈண்டியும், இருத்தியும், எனைப் பல பிழைத்தும்;
காலை மலமொடு, கடும் பகல் பசி, நிசி
வேலை நித்திரை, யாத்திரை, பிழைத்தும்:
கரும் குழல்; செவ் வாய்; வெள் நகை; கார் மயில்
ஒருங்கிய சாயல்; நெருங்கி, உள் மதர்த்து,
கச்சு அற நிமிர்ந்து, கதிர்த்து, முன் பணைத்து,
எய்த்து இடை வருந்த எழுந்து, புடை பரந்து,
ஈர்க்கு இடை போகா இள முலை; மாதர் தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்:
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்;
கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்;
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்;
நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்;
புல் வரம்பு ஆகிய பல துறை பிழைத்தும்
தெய்வம் என்பதோர் சித்த முண்டாகி
என்று பாடுகிறார்.

இவ்வாறு தாயின் கருப்பைக்குள்ளும், பிறந்தபின் வெளி உலகிலும் இந்த உயிர் படும் பாட்டை பிறவித்துன்பங்கள் என்று சான்றோர் கூறுவர்.

”கருப்பத்தூறிப் பிறவாதே கனக்கப் பாடுற்று உழலாதே” என்று அருணகிரிநாதர் பாடுகிறார்! இவற்றுக்கெல்லாம் மூலகருத்தைத் திருக்குறள் அழகாகக் கூறுகிறது. நாம் பிறப்பதற்கு உரிய கருவி, தாயின் கருப்பை. இந்தக் கருப்பைக்குள் உயிரை இட்டு இறைவனே வளர்க்கிறார்! இனி, தனிச் சிறப்புடைய இரண்டு குறட்பாக்களை இங்கே ஆராய்வோம்

”வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல ”

என்ற குறட்பாவுக்கு, ”விருப்பு வெறுப்பு இல்லாத இறைவன் திருவடியை வழிபாடு செய்தோருக்கு, எக்காலத்தும், என்றும் பிறவித் துன்பங்கள் இல்லை!” என்றே அனைவரும் இதுகாறும் பொருள் கூறி வந்தனர். மேலே நாம் கண்ட பிறப்புத் துன்பங்களைப் பற்றிய கருத்துக்களின் படி, ”இடும்பை ” என்ற சொல்லை – இடும்+ பை – என்று பிரித்து நாம் புதிய பொருளைக் காணலாம்! இதன் படி இடும் பை என்பது நம்மை ஏற்றுத் தாங்கிப் பிறப்பிக்கும் கருப்பையைக் குறிக்கும்! விருப்பு வெறுப்பற்ற இறைவனை வழிபட்டார்க்கு எக்காலத்தும் இனிப் பிறப்புத் துன்பம் இல்லை; அதாவது இடும் (கருப்)பை இல! என்று இத் திருக்குறளுக்குப் புதிய , பொருத்தமான பொருளைக் காணலாம் ! இவ்வாறே,

”நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும் ”(138)

என்ற திருக்குறளுக்கும் இவ்வாறே புதிய பொருளைக் காணலாம்!மேலும் …

” இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை
கையாறாக் கொள்ளாதாம் மேல்” (627)

என்ற திருக்குறளையும் இவ்வாறே காணலாம். திருக்குறளுக்குப் பொருள் காணும் முறைகளுள் இதுவும் ஒருவகையே! அதற்காக இடும்பை என்ற சொல் துன்பம் என்ற பொருளில் அமைந்த மற்ற குறட்பாக்களுக்கும் இடும்+பை என்று பொருள் கொள்ளுதல் தவறாகும்.

திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி
ஆலந்தூர், சென்னை 600 016.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருக்குறளுக்குப் புது விளக்கம் – 1

  1. தெற்றென பல்பொருள் நீங்கிய சிந்தனையுடன் அருமையாக எழுதியுள்ளீர்கள், ஐயா. மாபலியைப் பற்றிய எனக்கு ஒரு ஐயத்தைத் தெளிவுபடுத்துவீர்களா? தற்போது, கேரளாவினர் மாபலி கேரளாவை ஆட்சி செய்ததாகச் சொல்கிறார்கள். பாதாளத்திற்குச் சென்ற மாபலி ஆண்டுக்கு ஒருமுறை தம் மக்களைக் காண வரும்போது, தாம் மகிழ்ச்சியாக இருப்பதைக் காட்ட ஓணம் கொண்டாடுவதாகவும் சொல்கிறார்கள். மாபலி கேரளாவை ஆண்டதற்கு சிலப்பதிகாரம் போன்ற பண்டைய நூல்களில் சான்று உள்ளதா? (செங்குட்டுவனை உயர்த்திப்பிடிக்கும் சிலப்பதிகாரம், பெரும்புகழ் பெற்ற மாபலி-சேரனாக இருந்திருந்தால்-கண்டிப்பாக அதனைப்பற்றிய குறிப்புகளைச் சொல்லாமல் விட்டிருக்காது) ஓணம் பண்டிகை பற்றிய குறிப்புகள் ஏதேனும் அந்நூல்களில் உள்ளனவா? அல்லது, இவையெல்லாம், கேரளமொழி மலையாளமாகப் பிரித்துணரப்பட்ட காலகட்டதில் கட்டிவிடப்பட்ட கதைகளா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *