படக்கவிதைப் போட்டி (17)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
திரு ஆதித்யா நாகராஜ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (20.06.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்


அலை மகளின் அழகு !
இனிய இந்த பொன் மாலை பொழுதிலே ,அலை மகள் அசைந்து ,இசைந்து ,இன்னிசை கவி பாடி ,அலை மோதி ,விளையாடி
,தன்னை தேடி ரசிக்கவரும் ரசிகர்களை ,தனது அழகினால் மயக்கி ,தன்வசப்படுத்தி ,கவலைகளை நீக்கி ,முகத்தில் புன்னகைப்பொலிவூட்டும் ,எங்கள் கடல் அன்னையே நீ என்றும் இம் மண்ணில் வாழ்க ,வாழ்க !
செந்நிறப் பொன் பரிதி
சி. ஜெயபாரதன்.
செந்நிறச் சினமோடு
கீழ்வானில்
பொன்னிற விளக்கு எழுந்தது !
காலையில் போட்ட விளக்கு
அந்தி மாலையில்
வேர்த்து
ஓய்வு பெறும் பரிதி
செந்நிறச் சினமோடு தான்
அத்தமிக்கும் !
பிறவிப் பெருங்கடலில்
பிறப்பும் இறப்பும்
சுழற்சி நிகழ்ச்சியே !
பிரபஞ்ச நிகழ்ச்சி அனைத்தும்
பம்பரச் சுழற்சி தான் !
உப்புக் கடல் வெள்ளம்
எப்படி நிறைந்தது ?
கோடான கோடி மீன்வளம்
ஓடி விளையாடுவது
எப்படி ?
உயிரினத் தோற்றத்தின்
உதயம் யாவுக்கும்
கடல் அன்னையின்
கர்ப்பப் பையே காரணம் !
நீர்க்கோள மான நமது
நில மடந்தைக்கு
ஒப்பான பூமி
வேறெங்கும் உள்ளதா வெனக்
கூற முடியுமா ?
முத்தும் பவளமும்
கொத்துக் கொத்தாய்ப் பூத்துக்
குலுங்கும் !
புயலும், பேய் மழையும்
சூறாவளிப் பேராயுதமும்
ஒளிந்திருக்கும்
அலைமோதும் அமைதிக் கடலில் !
கடல்நீர் வற்றாது !
கதிர்ப் பரிதி அணையாது !
மானிடம் தழைக்க
சூரிய உதயம் தவறாது !
மரணம் மரிக்காது !
அத்தமனம் உண்டு
அத்தனைப் பிறவிக்கும் !
+++++++++++++++++++++
விரிந்த மணல் பரப்பில்
அலை படர்ந்த கடற்கரையில்
தொலைதூர கதிர் ஒளியில்
எங்கும் பரவிக் கிடக்கின்ற
உனதன்பை வியந்து
பெரு நீராய் விரிந்து
கிடக்கிறது எனதுள்ளம் ..
வா வந்து கொஞ்சம்
அணை இட்டு தேக்கிப்போ …
நீல பா்ர்டரில்
தங்க உடலில்
புடவைப் பரிசு
ஆர்ப்பரிக்கும்
கடற்கன்னிக்கு
ஆதிச் சூரியன்.
புடவைக்கு
அடங்கிடுவாளா
மோதிப் பார்க்கிறாள்
கரையில்..விடாமல்
ஆதவனை அடைய..
மோதிய வலியில்
இரவில் அடங்கி
பகலில் எட்டிப்
பழுத்து கொதிப்பவனை
நீல புடவையில்
முடிந்து சூடாக இவள்
குளிர்ந்தே இவளுள்
அவன்.
நீ உறங்குவதற்காகவே காத்திருக்கிறது
அலையெனும் நீலப் போர்வை
இது மாலை நேரத்து மயக்கம்…
கடக்க கடக்க
அங்கேயே நிற்கிறது
இந்தக் காதல்…
வலைப் பின்னல்களால்
கணக்கிட முடியாத
மீன்களாய் கடல்
சமைக்கிறது….
அத்து மீறியும்
தொடமுடியாத பக்கத்தில்
அச்சடித்த கண்களுடன்
சிரிக்கிறது மஞ்சள் வெயில்…
கால்சுருக்கி, தலைசுருக்கி,
இதயம் மட்டும்
துடிக்கும் கருவைப்போல
எனக்குள் என்னையே
சுருட்டுகிறது….
கறிவேப்பிலை பழங்கள்
போல
கருஞ்சிவப்பு கூட்டுக்குள்
மருதாணி முரண்பாட்டை
கொத்தாய் பிடுங்குகிறது
மணல் வெளி…….
யாரோ நடந்த
ஒற்றையடியில் அழிக்க
முடியாத பாதங்களாய்
கற்பனை விரிக்கிறது….
சொல்லிவிட முடியாத
தருணத்துக்குள் சொல்லிக்
கொண்டே பேதலித்துக்
கிடக்கிறது
கடக்கவே முடியாத
உன் மடி சாய்ந்து கிடந்த
இந்த மாலை
நேரத்து மயக்கம்…
கவிஜி
கண்கவர் வி்த்தை
வெள்ளியெனத் தோன்றும்
கடல் நீரை
தங்கமாக்க முயற்சிக்கிறதோ
இந்தச் சூரியன்!
பன்முகமாய் பரந்திலங்கும் பான்மதியே
செங்கதிரை விரித்து தோன்றும் பொன்னிற பானுமதியே
கீழ்வானில் எழுந்து குமரியிலே மறைந்து,
பொன்மலை பொழுதிற் அலைகள் அசைந்து
நின்னை காணுங்கால் ஓர் இயற்கை அழகு
இயற்கை அன்னை தந்தெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா ,
எனது, உனது என்பதெல்லாம் இடையில் மாறும் பந்தமடா !
ரா.பார்த்தசாரதி
பாடம்
பொற்கதிர் பரப்பி வையம்
பூரிக்கபகல் தந்த கதிரோன்
அற்புதமாய் வேலை முடித்து
அழகாய் மறைய துவங்குகிறான்
செக்கச் சிவந்த வானம் அதில்
சீர்மிகு பார்டராய் நீலக்கடல்
கதிரவன் மறையும் நேரம்
பூக்கும் மேகம் பல வடிவாய்
சொல்லிட இயலா இன்பம்
சொட்டியே நிற்கும் அழகாய்
வாழ்வில் இறப்பும் பிறப்பும்
மாறி மாறியே வரும்என்று
அருமை யாம்பாடம் சொன்னாய்
அறிந்தோம் அகக்கண் திரைதனிலே
தினம் உன் வருகை மறைவு அழகை
இனிதாய் காண்கிலேன் எனில்
இம்மண்ணில் கவிஞர் கள்யாரோ?
சூரியன் நிலவாய் ஆகும் அங்கே
சுடர்பரப்பி நிலவு காலை சூரியனாகுமோ?
விடியாத இருளும் இல்லை
விலகாத துயரமும் இல்லை இது
இறைவன் செய்யும் லீலை
சரஸ்வதி ராசேந்திரன்
செந்நிறப் புரவியது
சிறகு விரித்து
பறந்து வர
நடு நாயகமாய்
கதிரோனும் அதிலேறி
பவனி வர
சமுத்திரம் தன்
அலை கரம் அசைத்து
நடனமாடி வரவேற்க
வானும் தன் பங்கிற்கு
அழகினை வாரி இறைக்க
நீலம் சுமந்த கடலும்
மணல் கொண்ட கரையும்
கைகோர்த்து மகிழ்ந்தாட
கலைக் கண்களுக்கு
இவையனைத்தும் விருந்தாக –
இயற்கையின் எழிலான
அரங்கேற்றம் !
எரிதணல் கக்கி இடர்வழங்கும் சேவை
புரிந்து இளைப்பாறும் போது -பரிதி
விரிவானில் நின்று விழுந்த ஒளியால்
தெரிவிக்கும் வண்ணம் உழைப்பு!
பொங்கும் கடல்மேல் புதுக்கவிதை யாத்து
எங்கும் படர்த்தி மனதுக்குள் -தங்கும்
வகைசெய் இயற்கைக் கவிஞன் புவனம்
திகைக்க பிரசுரித்தத் தீ!
உழைத்துக் உருகும் உழைப்பாளி வாழ்வில்
பிழைத்தோங்க சிந்தும் உதிரம் -மழையாய்
பொழிந்து கடல்கலக்கத் தோன்றச் சிவந்த
விழியாமோ மாலை விசும்பு?
அலைகடல் ஓசையிலே
ஆதவனின் செம்பஞ்சுத் தங்க நீரோடையிலே
இதயம் தொட்ட
ஈன்றவளுக்கு நீலப்பட்டாடை
உடை உடுத்தியது யார்?
ஊசிக் கதிரொளியினிலே
எட்டுதிக்கும் தமிழ்த் தாயன்பை
ஏந்திழையாள் வடிக்கின்றாள்!
ஐந்திறம் நிறைந்த
ஒல்காப் புகழ் தமிழ்மண் தேடி
ஓவியக் கடலாய்
ஔடதமாய் மன்பதைக்கு
அஃதென உரைப்பவர் எங்கே?
கண்கவர் மஞ்சள் ஓடையிலே
காணாத இன்பமெல்லாம்
கிடைக்குது!
கீழ் வான அந்திச் சிவப்பும்
குயிலின் ஓசை கொஞ்சும்
கூட்டம் காண நீல வண்ணக்
கெம்புக் குழம்பு தகதகன்னு ஜொலிக்குது!
கேடில்லா அலைகடல்நீலக்
கொடி இதழ் பரப்பி
கோமளமாய் அந்திசாய்ந்தவேளையிலே
கௌளி பாட யார் அங்கே நிற்பது?
உதயமும் அஸ்தமனமும்
தங்க நிறத்தில் வானம்
தகதகக்கும் இளஞ் சூரியன்
துள்ளி வரும் வெள்ளலைகள்
கொள்ளை கொள்ளும் மணல்வெளி
இதமான காற்றின் தழுவல்
இன்பமான காலைப் பொழுது
பஞ்சபூதங்களும் ஒன்றிணைந்து
பரவசப்படுத்தும் அற்புத அழகு
இயற்கையின் சிரிப்பை ரசிப்போம்
இன்பமான வாழ்வில் மகிழ்வோம்
எல்லாம் சரிதான் – ஆனால்…
எச்சரிக்கை செய்கிறது மனது
அழகின் பின்னே மறைவாய்
ஆபத்தும் இருக்கலாம் ஜாக்கிரதை!
இன்று போல்தான் உலகம்
அன்றும் விடிந்தது நமக்கு
அமைதியாய் தோன்றும் கடலும்
ஆக்ரோஷமாய் சீறிப் பாய்ந்தது
சுனாமி பேரலையாய் புகுந்து
சுருட்டிக் கொண்டு போனது
மனித உயிர்கள் எல்லாம்
மரணத்தின் பிடியில் சிக்கியது
கொத்துக் கொத்தாய் உயிரற்று
குடிசைகள் எங்கும் பிணங்கள்
வருஷம்பல கடந்தும் மனது
வலிக்கின்ற ஆறாத ரணங்கள்
ஒரே நாளில் வாழ்வு
உருக்குலைந்து போனது
அழகான உதயம் அன்று
அஸ்தமனமாய் ஆனது
என் சொந்தக்காரி.
********************
விடியல்
ஒளி விரல்களால்
காலை மணி ஆறில்
எனை எழுப்பத் தூண்டியவள்..
மதியம் பண்ணிரெண்டில்
தன் அக்னி இதழ்கீற்றிகளினால்
என் மேனியை
முத்து வியர்வையில்
குளிப்பாட்டினாள்.
இப்படியான இன்ப இம்சை
அழகியை காதல் கொஞ்ச
கவிதைத் தூரிகையால்
சீண்டலோவியமிட
கடற்கரைக்கு விரைந்தேன்
மாலைவேளையான
மணி ஆறில்..!
பாருங்களேன்…!
இவளுக்கு என்ன திமிரு…!
என் மன்மத சொல்வித்தைக்கு
கிறங்கிவிடக்கூடாது என்பதற்காகவே…
ஆழி மெத்தையில்
வெள்ளச் சரிகையுள்ள
மஞ்சள்பட்டுப் போர்வைக்குள்
வெட்கச்சிவப்போடு
ஒடி ஒளிந்துக்கொள்ள
விரைகிறாள்
இந்த கள்ளி
என் சூரியத்தேவதை…!
–
-இரா.சந்தோஷ் குமார்.
கதிர் காட்டும் வழி…
கடலும் வானும் நிறம்மாறின
காணும் இடமெலாம் அழகாகின,
உடலில் அழகுடன் எழுகதிரே
உனக்குச் சொல்லிடும் பலகதையே,
கடமை இருக்குது உழைத்திடவே
காட்டிடு ஒளியை உலகினுக்கே,
அடைதல் இயற்கை அதன்முன்னே
ஆற்றிடு நற்பணி உலகினிலே…!
-செண்பக ஜெகதீசன்…
கவிதைக்குள் அடங்குவதில்லை
நீலநிறப் பட்டாடை நெடுமணல் மேல் உலர்த்தி
மஞ்சள் ஆடையுடுத்தி காதலனாம் மதியைத் தேடி
நெஞ்சத்துக் காதல் அலையலையாய்ப் பொங்கி வர
கொஞ்சி குதித்தோடி குரலெழுப்பி கூவும் கடற்பாவை
தன்னழுகு காதலனாம் கவின் நிலவைக் காணாது
என்ன நேர்ந்தது என வானோக்கி வருந்தி வியப்புற்று
இன்னமும் இருக்கின்றாயா நீ மறைவதெப்போது என
அன்ணணாம் கதிரவனை கேட்கின்ற அழகுதான் என்ன?
ஆயிரமாயிரம் வண்ணக் கலவையினை ஒன்றாக்கி
அகிலத்து ஓவியரெல்லாம் ஒன்றாய் கூடி நின்று
அற்புதமாய் படைத்த இணையில்லா ஓவியம் போல்
காணற்கறியா காட்சியிது கவிதைக்குள் அடங்குவதில்லை!
நீலத் தரங்கத்தில் நீராடி மெல்லெழுந்து
கோலக் கதிர்விரித்தான் கோகபந்து ! -ஓலமிட்டுத்
துள்ளும் அலைகளும் தூக்கக் கலக்கத்தில்
மெள்ளத் தவழும் விழித்து !
(கோகபந்து – சூரியன் )
படவரி 17
1. காட்சிக்கு நான்கு குருவி
ஏழு நிறப் பிரிகை எனலாம்
ஏன் இன்னும் அதிகமும் எனலாம்
குச்சிலாம்பிலொரு பிரபஞ்ச நீர்த் தொட்டிலோ!
உச்சி வேளையல்ல ஊருறங்கப் போகிறது.
ஆரம்ப ஓவிய வகுப்பில் நான்
ஆறுதலாக வண்ணம் பூசியது முப்பிரிவு
நிலம், நீர்; வானம் – இங்கு
நிறைவாக நான்கு குருவி வரையலாம்!
வரிகளாக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
20-6-2015
2. மந்த தோற்றம்
வெண் சீருடை கழுவ
கண்ணன் மாயனின் வண்ணமாம்
கண் பறிக்கும் நீலப்பொடியை
எண்ணிக் கலக்கியது யாராகும்!
–அன்றி –
விண்முகில் இங்கு சடுதியாய்
மண்ணில் தெரியும் மாயை!
திண்ணமோ இது நானறியேன்!
கண்ணின் எண்ண மயக்கமோ!
– ஒன்று –
இந்தப் பூனையும் பாலருந்துமோவென
மந்த தோற்றத்திலுறங்கும் கடலே!
மொத்த உலகுயிர்களைச் சுருட்டி
கத்தி ஆக்ரோசமான சுனாமியாவதும்
– நீ தானே! –
வரிகளாக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
19-6-2015