இரட்டை நான்!
-இரா.சந்தோஷ் குமார்
அதுவோர் இல்லம்
ஊதுப்பத்தி மணம் பரவிய
வரவேற்பறையில்
ஒரு விளக்கு எரிகிறது
அதனருகே…
நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்கிறேன்!
சற்று நிமிடங்களுக்கு முன்
அடிவயிற்றிலிருந்து எழும்பிய
வலிப்போன்ற
ஓர் உணர்வு
தொண்டைக்குழியில்
சிக்கித்திணறி
விக்கி விக்கி
நாசிவழியே வெளியேறியது
அனற்போன்ற குளிர்காற்று!
யாரோ ஒரு பெண்
அழுதபடியே
வெள்ளைத்திரவத்தை
என் வாய்வழியே ஊற்ற
அது நிரம்பிய குடத்திலிருந்து
வெளியேறும் நீரைப்போல
பீறிட்டது!
ஊற்றியது என் தாயாக இருக்கும்
யாரோ ஒரு பெரியவர்
உடல் குலுங்கித்
தேம்பித் தேம்பிச் சாய்கிறார்
அவரென் தந்தையாக இருக்கும்
இப்போது,
வரவேற்புரை முழுக்க
உறவு, நட்பு, மனிதமுள்ள
மானிடர்களுடன் சில
துரோக எதிரித் தலைகளும்!
அன்றொருநாள்
மூளைவெடிக்கச் சிந்தித்தெழுதிய
என் எழுத்துகளுக்கு
மறுப்புச்சொன்னவர்
இன்று
ரோஜாப்பூ மாலையினை
என் மீது கிடத்துகிறார்…
வெறுப்பு எச்சில்களில்
எனைக் கழுவியவர்கள்
மல்லிப்பூ மாலையிடுகிறார்கள்!
சற்று நாழிகைக்குப்பின்
பூக்கள் அலங்கரித்த
மூங்கில் பல்லக்கில்
எனைத்தூக்கிச் செல்கின்றனர்
பறையின் இசையுடன்
சங்கு முழங்குகிறது!
ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறேன்
என் பின்னால்
இருபதுக்கும் மேற்பட்டவர்கள்
சோகம் கவ்வியவாறு…
ஓ! நான் மனிதர்களை
சம்பாதித்து இருக்கிறேனே…!
அதிலொருவர்
பாவம் நல்லா எழுதுவான்
செத்துட்டான் என்கிறார்
ஓ இவரா…? இவர்தான்
புத்தகப் பதிப்பகத்தார்!
வாய்ப்புக்கேட்டு
என் தன்னம்பிக்கையில்
பலமாக இவர் கதவை
ஓர் அங்கீகாரத்தென்றலுக்காக
அன்று தட்டியப்போது
சாளரத்தினை சற்றுத்திறந்து
“பத்துவிரல்கள் வைத்து
கணினி எலிக்கருவி பிடித்து
இணையத்தை இயக்கத்தெரிந்த
நீயெல்லாம் ஓர் எழுத்தாளனா?” என
ஏளன எச்சில் துப்பியவர்தான் இவர்
நான் எப்போது செத்துப்போனேன்.
உடலுக்குள் ஓர் உயிராக நானாக
உயிருக்குள் ஓர் உயிராக வேறொரு நானாக
வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறேன்!
பிரபஞ்சத்தில் உலாவியவாறு
ஒரு நானாக
பூமிப்பந்தில் உலாவியவாறு
ஒரு நானாக
இரட்டை நானாக
வாழ்கிறேனே…!
அய்யோ… வெட்டியானே…
ஏன் என்னுடலை எரிக்கிறாய்?
உடலுக்குள்ளிருக்கும் நான்
மரித்துவிட்டேனா…?
ஓ… ! ஓ….!
இப்போது நான் எந்த நான் ?
உடலற்ற நானா?
உடலுள்ள நானா ?
அச்சோ… தோழர்களே….!
ஓர் உதவி வேண்டும்…
இந்தப் படைப்பை
கவிதை என்றோ
கட்டுரை என்றோ
ஏதேனும்
இலக்கியப் பத்திரிகையிலோ
மின்னிதழ்களிலோ
பிரசுரம் செய்யவேண்டுமே..!
உதவி…உதவி… உதவி…!