குறளின் கதிர்களாய்…(76)
-செண்பக ஜெகதீசன்
கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். (திருக்குறள்-393: கல்வி)
புதுக் கவிதையில்…
கண்போன்றது கல்வி,
கற்றவர்தான்
கண்ணுடையார் எனப்படுவர்…
கல்லாத மூடர்
முகத்திலிருப்பவை
கண்களல்ல,
பயனிலாப் புண்கள்…!
குறும்பாவில்…
கல்வி கற்றோர்தான் கண்ணுடையோர்,
கல்லாதவர் முகத்திருப்பவை
கண்களல்ல, புண்கள்…!
மரபுக் கவிதையில்…
முன்னால் நடப்பதைப் பார்ப்பதற்கே
–முகத்தில் இரண்டு கண்வேண்டும்,
தன்னால் உலகைக் காண்பதற்கே
–தரமிகு கல்வி தான்வேண்டும்,
சொன்னார் பெரியோர் கண்ணெனவே
–சொத்தாம் கல்வி அறிவினையே,
முன்னால் முகத்தில் உள்ளதெல்லாம்
–மாசுடைப் புண்ணாம் கல்லார்க்கே…!
லிமரைக்கூ…
கல்வி அறிவுதான் உண்மையில் கண்,
கல்லார் முகங்களில் உள்ளவை
காணும் கண்ணல்ல, கவலைதரும் புண்…!
கிராமிய பாணியில்…
கண்ணுகண்ணு பாக்கும்கண்ணு
கல்விதானே காக்கும்கண்ணு,
பொன்னுபொன்னு மின்னும்பொன்னு
படிப்புத்தானே மின்னும்பொன்னு…
கல்வியறிவு கண்ணா ஆச்சி
படிப்பறிவு பார்வயா ஆச்சி,
படிச்சவன் மொகத்திலத்தான்
பாத்துக்கநீ கண்ணுகண்ணு,
படிக்காதவன் வச்சிருக்கான்
புண்ணுபுண்ணு ரெண்டுபுண்ணு…
கண்ணுகண்ணு பாக்கும்கண்ணு
கல்விதானே காக்கும்கண்ணு…!