சுரேஜமீ

மனிதம்

peak1111

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே- இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை

asurஎனும் மருதகாசியின் வரிகளோடு இன்றைய சிந்தனையைத் தொடங்க நினைக்கிறேன். இரண்டு வரிகளில் எதிர்கால வாழ்க்கையை கண்ணாடியாகக் காட்டிய கவிஞர்களும், மனிதம் மலரவேண்டும் என்ற துடிப்புடைய தேசியவாதிகளும் வாழ்ந்த மரபு நம்முடையது!

ஏனோ, தன் முனைப்பு, தவறான எண்ண ஓட்டங்கள், சமுதாயப் பொறுப்பற்ற செயல்கள் என கற்றவர்களாலும், கயவர்களாலும், இந்த சமூகம் மனிதத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது என்பது கண்கூடு!

இந்த உலகில், இப்படியும் ஒரு மனிதரா எனப் போற்றப்பட வேண்டிய பண்பாளர், தமிழனின் தயாள குணத்திற்கு ஒரு சான்று, இந்த வாழ்வின் சுவையே, சக மனிதனின் கண்ணீர் மொழியை அறிவதில்தான் இருக்கிறது என்பது மட்டுமல்ல, அதைத் தன் வாழ்நாளில் செய்தும் காட்டிய வள்ளல் கலைவாணர் என்பதை கலைஉலகம் தாண்டி அவரோடு பழகியவர்கள் அறிந்திருந்தாலும் அவர் பற்றிய சில செய்திகளை, இன்று உங்கள் பார்வைக்கு வைப்பதன் மூலம், நாம் நம் மண்ணின் குணத்தை மீட்டெடுப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!

பொன்னுச்சாமி நாடகக் குழு என்ற புகழ்பெற்ற நாடகக் கம்பெனி இருந்தது. அதிலிருந்த்துதான், நடிகர் திலகம், லட்சிய நடிகர், வி.கே.ஆர் போன்றோரெல்லாம் சினிமாவுக்கு வந்தனர் என்பது வரலாறு.

அந்த நாடகக் கம்பனி நலிந்த நிலையில் அதைக் காப்பாற்றும் நோக்குடன், கலைவாணர் அவர்கள் உரிமையேற்று எடுத்து நடத்த முனைப்பட்ட நேரம்,

ஒரு நபர் கலைவாணரிடம், அய்யா எனக்கு நன்றாக நடிக்கத் தெரியும். எனக்கு வாய்ப்புக் கொடுத்தால், நான் (சிவாஜி ) கணேசனை விட நன்றாக நடிப்பேன் என்று சொல்கிறார். இதைக் கேட்ட கலைவாணர் அருகில் இருந்த நண்பருக்கு கோபம் வந்துவிட்டதாம்.

என்ன சொன்னாய்? கணேசனை விட நன்றாக நடிப்பியா? எனக் கடிந்து கொள்ள,

கலைவாணர் நண்பரைத் தடுத்து, என்ன தப்பிருக்கிறது அவன் சொன்னதில் என்று கேட்டு,

உனக்குத் தெரியுமா? கணேசனை விட அவனுக்கு நடிக்கத் தெரியாமல் வேண்டுமானால் இருக்கலாம்!

ஆனால், கணேசனை விட அவனுக்குப் பசி இருக்கிறது என்று சொன்னாராம்!

இது தான் தமிழர் பண்பாடு!

ஒருவன் பசியைப் புரிந்து கொள்ளும் மனநிலை என்பது தெய்வத்திற்குச் சமமானது!

asuraகலைவாணர் அவர்கள் நடித்த ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சியில் பிச்சைக்காரனுக்கு மனைவி பிச்சையிட வரும்போது ஒருமையில் அழைப்பார். அதைப் பார்த்த கலைவாணர், தன் மனைவியைக் கடிந்து, மரியாதையாகப் பேசச்சொல்லுவார்! இப்படி தான் நடித்த காட்சிகளில் கூட, மற்றவர் மனம் புண்படக்கூடாது என்பதும், தானம் செய்வதன் நோக்கம் ஒரு இருமாப்பைத் தரக் கூடாது எனவும் அறிவுறுத்துகிறாரென்றால்,

அந்தப் பண்பாடல்லவா நாம் கற்க வேண்டிய பால பாடம்!

இப்படித்தான், இன்னொரு முறை கலைவாணர் அவர்கள் சென்னையில் இருந்தபோது, ஒரு நாயனக் குழுவினர், கலைவாணரை அணுகி, நாயனம் நன்கு வாசிக்கும் திறமை பெற்றவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, தங்களுக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததை ஏற்று, தன் வீட்டிற்கு மாலை வருமாறு கலைவாணர் அந்தக் குழுவிடம் கூற, அவர்கள் அன்று மாலை கலைவாணர் இல்லம் வருகின்றனர். கலைவாணரும் தன் நண்பர்களை கச்சேரி கேட்கலாம் வாருங்கள் என்று அழைத்ததை ஏற்று நண்பர்கள் கூட, கச்சேரி ஆரம்பமாயிற்று!

வாசிக்க ஆரம்பித்தால் ஒரே அபஸ்வரமாகவே இருக்க, வந்தவர்கள் நெளிகிறார்கள். கலைவாணரோ, நல்லா வாசிக்கிறீர்களே….இன்னும் வாசிங்க….இன்னும் வாசிங்க என்று உற்சாகப் படுத்த,

நண்பர் ஒருவர் கலைவாணரைப் பார்த்து….என்ன வாசிக்கிறான்? இன்னும் வாசி…வாசி என்று உற்சாகமூட்டுகிறீர் என்று கேள்வி கேட்க, கலைவாணர் சொன்னாராம்…..அட பைத்தியக்காரர்களே அவன் பசி…பசின்னு கத்துறான்…..உங்களுக்கு அவன் மொழி புரியவில்லை! ஆனால், எனக்குப் புரிகிறது! உடனே பணம் கொடுத்து அனுப்பிவிட்டால், அவன் திறமை மீது அவனுக்கு நம்பிக்கை குன்றிவிடும். ஆதலால், அவனைப் பெருமைப்படுத்தி, அவன் பசியைப் போக்க நினைத்தேன் என்றார்!

என்ன நண்பர்களே….உங்கள் இதயத்தைத் தொட்டுச் சொல்லுங்கள்!

இந்த ஈர நெஞ்சம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்று?
ஆகத் தொடங்கிய பாடல் வரிகளாக இன்றைய வாழ்க்கை இருக்க,

அதற்கு மாறாக நம் பண்பாடு இருக்க வேண்டுமென்று வாழ்ந்து காட்டிய அய்யா என்.எஸ்.கே அவர்கள் வாழ்க்கை இருக்க, மாறுவதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்ற கேள்வியுடன்

சிகரத்தை நோக்கி பயணிப்போம்…….

அன்புடன்
சுரேஜமீ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.