“இன்று வைகாசி அனுஷம்”….பெரியவா பிறந்த நாள்….
சபாஷ் கேசவ்….
“நல்லதோர் வீணை நமக்காக நாட்டையில்,
வல்லமை தந்திட வாசிப்பு; -இல்லற,
சம்சாரிக் காய்வந்த, சங்கரர் கண்களில்,
மின்சார ஜோதி மினுக்”…..கிரேசி மோகன்….
“இன்று வைகாசி அனுஷம்”….பெரியவா பிறந்த நாள்….
சபாஷ் கேசவ்….
“நல்லதோர் வீணை நமக்காக நாட்டையில்,
வல்லமை தந்திட வாசிப்பு; -இல்லற,
சம்சாரிக் காய்வந்த, சங்கரர் கண்களில்,
மின்சார ஜோதி மினுக்”…..கிரேசி மோகன்….
”எந்தவேலை செய்தாலும் தொந்தரவாய்த் தோணுதே,
இந்தநிலை ஏனெனக்கு நந்தலாலா: -அந்தநாளில்,
ஆளாள் குறைதீர்க்க ஆதரித்தோய், இன்றுமட்டும்
வாளா(து) இருப்பதேன் வா”….கிரேசி மோகன்….
”பெண்பால் புணர்ச்சியாய், வெண்பா வடிவத்தில்,
என்பால் எழுந்தருளும் எம்பிரானே, -உன்போல்,
பொழுதை கழிக்க, புவியிலில்லை தெய்வம்,
தொழுது கிடப்பதே தொண்டு”….கிரேசி மோகன்….
கள ஆய்வுகளில் அறியப்படும் உண்மைகளின் அடிப்படையில் வரலாற்றை உருவாக்கும் நோக்குடன் “தமிழறிஞரும் வரலாற்றறிஞருமான முனைவர் மா. இராசமாணிக்கனார்” பெயரில் முனைவர் இரா. கலைக்கோவனால் திருச்சிராப்பள்ளியில் 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆய்வு அமைப்பே டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம். நிறுவனரான இவரே வரலாற்றாய்வு மையத்தின் இயக்குநரும் ஆவார். நடப்புலகில் பொது அங்கீகாரமோ புகழோ கிடைக்க வழியில்லாத வரலாற்றாய்வுத் துறையில் 33 ஆண்டுகள் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குநரான முனைவர் இரா. கலைக்கோவன் அவர்களுக்கும் இப்பணி வாழ்வாதாரம் அல்ல. தொழில்முறையில் இவர் ஒரு கண் மருத்துவர். இவரது முயற்சி ஆல் போல வளர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கல்வெட்டு ஆய்வுகள், ஐம்பதிற்கும் மேற்பட்ட புத்தக வெளியீடுகள், 25 “வரலாறு” ஆய்விதழ்கள், 119 வரலாறு.காம் மின்னிதழ் பதிப்புகள், 1356 வரலாற்றுக் கட்டுரைகள் எனப் பல எல்லைகளைக் கடந்துள்ளனர் வரலாற்றாய்வு மையத்தினர். இச்சாதனைகளை நினைவுகூரும் விதத்தில் டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பணிகளை முன்னிறுத்திக் கௌரவிக்கும் இதழாக தற்பொழுது வெளிவந்திருக்கும் மையத்தின் இம்மாதத்தின் திங்களிதழ் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றின் பால் கொண்ட ஆர்வம் காரணமாக 25 ஆவது “வரலாறு” ஆய்விதழ் வெளியாகும் வரை வரலாற்றாய்வு மையத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றுள்ள முனைவர் இரா. கலைக்கோவன் அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவித்துப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.
1. பதிவு செய்யப்படாத கல்வெட்டுகளைக் கண்டறிந்து பதிப்பித்தல்
2. தமிழ்நாட்டுக் கலை வரலாற்றை முழுமையுற உருவாக்கல்
3. ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் புதிய தரவுகளை வழங்கும் ஆண்டு ஆய்விதழ் வெளியிடல்
4. களஆய்வில் நம்பிக்கையுடைய இளம் ஆய்வாளர்களை வழிநடத்தல்
5. உலகளாவிய தமிழர்களுக்கு இலக்கியம், வரலாறு குறித்த ஆர்வத்தையும் ஆய்வு நோக்கையும் விதைத்தல்
6. கோயில்கள் வரலாற்றுக் களங்கள் என்பதால் அது குறித்த விழிப்புணர்வைச் சமுதாயத்தில் பரவச் செய்தல்
ஆகியவை வரலாற்றாய்வு மையத்தின் குறிக்கோள்கள்.
திருச்சி, ஸ்ரீரங்கம் கோவில் கருடாழ்வார் சன்னிதியில், கருவூலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில், உண்மையை அறிவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் இடம்பெற்ற முனைவர் இரா.கலைக்கோவன், மூன்று நாள் அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சி செய்தார்.
இவர் பங்கேற்ற பற்பல களஆய்வுப்பணி தொடர்பான செய்திகள் மாதம் ஒருமுறையாவது நாளிதழ்களில் இடம் பெறத் தவறுவதில்லை … சமீபத்தில் வெளியான செய்திகள் சில …
செவந்திலிங்கபுரத்தில் அரியவகை ஐய்யனார் சிற்பம் கண்டெடுப்பு – ஏப்ரல் 23, 2015, தினமணி
அரசு ஆதரவு, நல்ல பொருளாதாரப் பின்புலமுள்ள பெரிய பல்கலைக்கழகங்களும் நிறுவனங்களும் சாதித்ததைக் காட்டிலும், பெரிய அளவில் பொருளாதாரப் பின்புலம் ஏதும் இல்லாமல் தன்னார்வ ஊழியர்கள் மற்றும் ஆர்வலர்கள் உதவியுடன் கடந்த முப்பத்து மூன்றாண்டுகளில் வரலாற்றாய்வு மையம் சாதித்துள்ள வரலாற்றுப் பணி குறிப்பிடத் தக்கது. மையத்தின் ஒரு முக்கிய ஆய்வாளருமான 67 வயதாகும் முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களின் இப்பணியைப் பாராட்டி, சென்ற ஏப்ரல் (2015) மாதத்தில் கும்பகோணம் ரோட்டரி கிராண்ட் நிறுவனம் “வாழ்நாள் சாதனையாளர்” விருது அளித்து முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களைக் கௌரவப்படுத்தியுள்ளது.
ஏற்புரையில் முனைவர் இரா.கலைக்கோவன், ‘கோரிக்கைகளுக்காக மட்டும் கோயில்களை அணுக வேண்டாம்!’ என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார். தமிழர் அனைவரும் இவ்வேண்டுகோளை சிரமேற்கொண்டால் தமிழகத் தொல்பொருள் ஆய்வும், தமிழக வரலாற்று ஆய்வும் நல்ல உயர்ந்த நிலையை அடைந்து தமிழகத்திற்கு பெருமைகள் பல சேர்க்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
இந்த வேண்டுகோளை இவர் பலகாலமாக தமிழக மக்களிடம் முன்வைத்துவருகிறார். “வரலாறு” ஆய்விதழின் எட்டாம் இதழில் அவர் கீழ் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“குடமுழுக்கு, திருப்பணி என்ற சொற்களைக் கேட்டாலே அஞ்சுமளவிற்குத் திருக்கோயில்கள் இவற்றால் சீரழிக்கப்படுவது கண்கூடு. எவ்வளவோ எடுத்துரைத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் கருத்தில் கொள்ளாமலிருப்பது ஏனென்று தெரியவில்லை. இந்தக் கொடுமைகளை எப்படித் தடுப்பதென்றும் விளங்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள ஆய்வாளர்கள்தான் இதற்கொரு முடிவுகட்டவேண்டும். மக்களுக்குக் கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றின் முக்கியத் துவத்தை விளங்க உரைப்பதுடன், எக்காரணம் கொண்டும், அவை குடமுழுக்குக் கோலாகலங்களின் பூச்சுகளுக்கும், சிதைவுகளுக்கும் ஆளாகாது காப்பாற்றிடல் வேண்டும். ஆங்காங்கே உள்ள ஆய்வமைப்புகளும் இப்பணியில் முழுமூச்சாய் ஈடுபடுவது அவசியமாகும். இன்றொரு விதி செய்யத் தவறினோமாயின், இனி எந்நாளும் கல்வெட்டுகளைக் கோயில்களில் காண்பது குதிரைக்கொம்புதான். வாருங்கள் தோழர்களே, கையிணைப்போம். இந்த நாட்டின் வரலாற்றை அழிவினின்று காப்போம்.”
வரலாற்றாய்வு மையத்தின் போற்றத்தக்க மற்றொரு கோணம், பொறியியல் வல்லுநர்களையும் கணிப்பொறி வல்லுநர்களையும் கட்டுமானத் தொழிலதிபர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் வரலாற்று மாணவர்களாக மாற்றி தமிழக வரலாறு, கல்வெட்டு, களப்பணி ஆகியவற்றில் ஆர்வம் கொள்ளச் செய்து பலரை வரலாற்று ஆய்வாளர்களாகவும் அறிஞர்களாகவும் மாற்றி வருவதே. தமிழறிஞரும் வரலாற்றறிஞருமான முனைவர் மா. இராசமாணிக்கனார் பெயரில் ஆய்வு மையம் அமைத்து தமிழக வரலாற்றிற்கு இன்றியமையாத வகையில் ஆய்வுத்தொண்டுகள் பல ஆற்றி வரும் மையத்தின் இயக்குநர் மருத்துவர் இரா. கலைக்கோவன் அவர்கள் தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார் அவர்களின் மைந்தர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
என்ற குறள் காட்டும் நெறியினைப் பின்பற்றி, தமது தந்தையாரின் வரலாற்று ஆய்வுப்பணியை முன்னெடுத்துச் செல்லும் மருத்துவர் இரா. கலைக்கோவன் அவர்களின் பணிகளை வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
தொடர்புக்கு:
http://www.varalaaru.com
https://www.facebook.com/varalaarumagazine
varalaaru.editor@gmail.com
நன்றி:
படங்களும் தகவல்களும் www.varalaaru.com தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டன.
கல்வெட்டு செய்தி, சிற்பம் படங்களை தந்துதவியவை ‘தினமணி’ மற்றும் ‘தி இந்து தமிழ்’ நாளிதழ்கள்
’தமிழ் இனி மெல்ல…’ எனும் இப்புதினத்தின் ஆசிரியர் திரு. மகாதேவன், தமிழகத்திலுள்ள காரைக்குடியில் பிறந்தவர். இளம் வயதுமுதலே தமிழின்பால் மிகுந்த ஆர்வம் கொண்டு கதைகள், கட்டுரைகள் முதலியவற்றை எழுதியிருக்கின்றார். தன் தமிழார்வத்திற்குக் காரணமே தன் தாய்வழிப்பாட்டிதான் என்று மகிழ்ச்சிப்பெருக்கோடு குறிப்பிடும் அவர், ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த தன்பாட்டியின் தமிழிலக்கண இலக்கிய அறிவையும், ஆன்மிக அறிவையும் எண்ணி இன்றும் வியக்கின்றார். தமிழல்லாது, ஆங்கிலம், ஹிந்தி மொழிகளிலும் நல்ல புலமையுடையவர் திரு. மகாதேவன்.
சிதம்பரத்திலுள்ள, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டம்பெற்று, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (Indian Space Research Organization) ஆராய்ச்சியாளராய்ச் சிலகாலம் பணிசெய்திருக்கின்றார். அப்போது தன்னுடைய உயரதிகாரியாய், ’எளிமையின் உறைவிடமான’ மேனாள் இந்தியக் குடியரசுத்தலைவர் மாண்புமிகு திரு. அப்துல்கலாம் பணிபுரிந்ததைப் பெருமிதத்துடன் நினைவுகூருகின்றார்.
பின்பு, மேற்படிப்பிற்காக அமெரிக்கா வந்த திரு. மகாதேவன், லெக்சிங்டனிலுள்ள (Lexington), யூனிவர்சிட்டி ஆப் கெண்ட்டக்கியில் (University of Kentucky) இயந்திரப் பொறியியலில் (Mechanical Engineering) முதுகலைப்பட்டம் பெற்று (M.S), இன்டெல் நிறுவனத்திலும், பின்னர் மோட்டோரோலா நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். தன் பணிக்காலத்தில் குறைக்கடத்தி பொதிகட்டுதல் (‘Semi-conductor packaging’) ஆராய்ச்சியில் 6 சட்டக் காப்புரிமைகள் (patents) வாங்கிய சாதனையாளர் அவர் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் அரிசோனா (Arizona) மாகாணத்தில் வசித்துவரும் திரு. மகாதேவன், ’ஒரு அரிசோனன்’ என்ற புனைபெயரில் பல சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றைத் திண்ணை, தமிழ் இந்து, வல்லமை, இணையவெளி போன்ற இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார். தன்னுடைய முதல் புதினமான, ’தமிழ் இனி மெல்ல…’வை, நூலாகக் கடந்த பிப்ரவரி மாதம், சென்னையில் அறிஞர்கள் பலர் முன்னிலையில் வெகுசிறப்பாய் வெளியீடு செய்திருக்கின்றார். இப்புதினத்தை, “The Golden Scroll” [Story of a language and its people] எனும் பெயரில் ஆங்கிலத்திலும் வெளியிட்டிருக்கிறார் என்பதை வாசகர்களுக்கு மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றேன்.
’தமிழ் இனி மெல்ல…’ புதினத்திற்குள் இனி மெல்ல நுழைவோமா?
திராவிடக் குடும்பத்தின் மூத்த மொழியும், இலக்கிய இலக்கண வளமும்,
பிறமொழிகளின் சார்பின்றித் தனித்தியங்கும் திறனும் பெற்ற செம்மொழியான நம் தமிழ்மொழியின் நிலை இன்னும் 400 ஆண்டுகளுக்குப் பின் (25-ஆம் நூற்றாண்டில்) எவ்வாறிருக்கும் என்பதைத் தொலைநோக்குப் பார்வையுடன் கணித்து நம் சிந்தனைக்கு விருந்தாய்ச் சுவைநிறைந்த புதினமாய்த் ’தமிழ் இனி மெல்ல…’வை ஒளிரச் செய்திருக்கின்றார் ’ஒரு அரிசோனன்’.
பள்ளி, கல்லூரிகளில் தமிழ்வழிக்கல்வி என்பதே (இன்றைய) தமிழகத்தில் அருகிவருவதை நாமறிவோம். வருங்காலத்தில் இந்நிலை மேலும் சீர்கேடடையலாம்; தமிழ் பயிற்றுவிப்பதற்கும் பயில்வதற்கும்கூட ஆட்கள் இல்லாத நிலை உருவாகலாம். அதன் விளைவாய் நம் அன்னைத்தமிழ் வலுவிழந்து பொலிவிழந்து, (அங்குமிங்குமாய்) ஒருசிலரே பயன்படுத்தும் கூற்றுமொழியாகிவிடலாம் (dialect) என்றும், தமிழின் இடத்தை (தமிழக மக்களின் அமோக ஆதரவுடன் கோலோச்சும்) ஆங்கிலமும், பாரதத்தின் செல்வாக்குமிக்க மொழியான இந்தியும் எடுத்துக்கொண்டு தமிழுக்கே அவை ’கூற்று’ (எமன்) மொழிகளாகிவிடக்கூடும் எனும் எச்சரிக்கை மணியை இப்புதினத்தின் மூலம் ஓங்கி ஒலித்திருக்கின்றார் ஆசிரியர்.
இரண்டு பாகங்களைக் கொண்ட இப்புதினத்தின் முதல் பாகம் 2411-ஆம் ஆண்டின் தமிழகத்தைக் கதைக்களமாகக் கொண்டிருக்கின்றது. (ஆசிரியரின் அனுமானப்படி) அப்போது தமிழகத்தில் தமிழைப் பேச்சுமொழியாக மட்டுமே அறிந்திருப்போர், ’எடுபிடிகளாய்’ உரிமைகள் ஏதுமற்ற கீழ்நிலையிலும், ஆங்கிலம், இந்தி ஆகியவற்றில் புலமைபெற்றோர் பதவிகளிலும் அதிகாரங்களிலும் மேம்பட்டு, எடுபிடிகளை அடிமைகளாய் நடத்தும் ’உரிமைக் குடிமக்களாயும்’ இருப்பர்.
பணம் படைத்தவன் ’ஆண்டான்’; ஏழையாய்ப் பிறந்தவன் ’அடிமை’ எனும் இன்றைய நிலைமாறி, ஆங்கிலமும் இந்தியும் அறிந்தவன் ஆண்டான்; தமிழ் மட்டும் அறிந்தவன் ’உரிமைகளற்ற’ அடிமை எனும் நிலையைக் கற்பனை செய்யும்போதே நெஞ்சு ‘பகீர்’ என்கிறது. அப்படியோர் இழிநிலை நம் தமிழுக்கு வந்துவிடுவோமோ? எனும் பதற்றமும், அச்சமும் புதினத்தைப் படிக்கும் நமக்கு ஏற்படுகின்றது.
இனி, கதை மாந்தர்களைச் சந்தித்து வருவோம்!
சென்னையிலிருக்கும் சீன நிறுவனமொன்றில் பெரிய பொறுப்பிலிருக்கும் ’உரிமைக் குடிமக்கள்’ பிரிவைச் சேர்ந்த ஷிஃபாலி எனும் பெண்மணி, அவளுடைய அருமை மகளும், கல்லூரி மாணவியுமான நிமிஷா, அவர்கள் வீட்டில் எடுபிடிகளாக வேலைசெய்யும் தமிழ்மட்டுமே அறிந்த காமாட்சி, அவளுடைய தம்பியான சிறுவன் ஏகாம்பரநாதன் ஆகியோரை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். ஒருவர் மொழியை ஒருவர் அறிந்துகொள்ள இயலாத அச்சூழ்நிலையின் சிரமத்தைப் போக்குவதற்கு மொழிமாற்றுக்கருவி (translator) உதவுகின்றது.
25-ஆம் நூற்றாண்டில், தமிழ்நாடு ’தக்கன்கண்ட்’ என்றும், சென்னை ’ஷெனாய்’ என்றும், தஞ்சை ’தஞ்ஜூ’ என்றும், கொடைக்கானல் ’கோட்கல்’ என்றும், காரைக்குடி ’காரைகுட்’ என்றும் நவீனப் பெயர்களுடன் திகழும் எனப் புதினம் உரைப்பது, ஊரின் பெயர்களில்கூடத் தமிழில்லாது போய்விடும் அவலநிலையை நமக்கு நன்கு உணர்த்துகின்றது.
முப்பரிமாண அலைவரிசைகள், ஹோலோகிராம்கள் எனத் தொழில்நுட்பங்கள் உச்சத்தைத் தொட்டிருக்கும் எதிர்காலச்சூழலில், மக்கள் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதெல்லாம் நின்றுபோய்க் கடவுளரை வீட்டு வரவேற்பறையிலேயே (தொலைக்காட்சிகள் வாயிலாய்த்) தரிசிக்கத் தொடங்கிவிடுகின்றனர். அதனால் வழிபாட்டுத்தலங்களெல்லாம் வெறும் சுற்றுலாத்தலங்களாக மாறிவிட்டிருக்கின்றன.
இவ்வாறு, புதுமையான உத்திகளோடு நகரும் கதையில், தன் தாய் ஷிஃபாலியை வேலை நிமித்தமாய்ச் சீனாவுக்கு வழியனுப்புவதற்காகத் தஞ்ஜூவிலுள்ள ஹோட்டல் ராஜ்ராஜில் தங்கியிருக்கின்றனர் நிமிஷா, காமாட்சி, மற்றும் ஏகாம்பரநாதன். தான் சீனாவிலிருக்கும்போது தன் மகளைக் கண்ணுங்கருத்துமாய்க் கவனித்துக்கொள்ளவும், வீட்டைப் பாதுகாக்கவும், ’அழகேசன்’ எனும் எடுபிடிப் பிரிவைச் சேர்ந்த மல்யுத்தவீரன் ஒருவனை நியமிக்கிறாள் ஷிஃபாலி. தஞ்ஜூ பெரிய கோயிலில் பணியாளனாய் வேலைசெய்துவரும் மற்றொரு எடுபிடியான ’ஈஸ்வரன்’, சுயமுயற்சியால் இந்தி பேசக் கற்றுக்கொண்டிருப்பதால் ஷிஃபாலியின் கருணைக்குப் பாத்திரமாகி, அவள் தயவால் சமீபத்தில் இழந்த தன் பணியை மீண்டும் பெற்றிருக்கிறான்.
விமானநிலையத்தில் ஷிஃபாலிக்கு விடைகொடுத்துவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பும் நிமிஷா, காமாட்சி, ஏகாம்பரநாதன் ஆகியோர், தம் வாழ்வில் என்றும்காணாத (விண்வெளிசார்) அதிசய நிகழ்வொன்றைச் சந்திக்கின்றனர். அதன் விளைவாய் மின்சாரம், தொலைபேசி, அலைபேசி, விமான சேவை, வாகனப் போக்குவரத்து என அனைத்தும் முடங்கிவிட, மீண்டும் அவர்கள் 18-ஆம் நூற்றாண்டுக்கே (வாழ்க்கை வசதிகளின் அடிப்படையில்) சென்றுவிடக் காண்கிறோம்.
மக்களின் அன்றாட வாழ்க்கைமுறையையே புரட்டிப்போட்டுவிட்ட அவ்வரிய நிகழ்வையும், அதன் பின்னணியிலான வானியல் காரணிகளையும் புதினத்தில் மிக நேர்த்தியாக விளக்கித் தானொரு சிறந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் என்பதை நிரூபித்துள்ளார் ’ஒரு அரிசோனன்’.
தங்களுடைய வாழ்க்கை வசதிகளனைத்தையும் ஓரிரவில் தொலைத்துவிட்ட நிமிஷா, காமாட்சி, ஏகாம்பரநாதன் முதலியோர் ஈஸ்வரனின் சொந்தஊரான ஒரு கிராமத்திற்குச் சென்று தங்கள் வாழ்க்கைப்பயணத்தைத் தொடருகின்றனர். ஒருநாள், அக்கிராமத்திற்கு அருகிலிருக்கும் கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயிலில் ஈஸ்வரன், அழகேசன், ஏகாம்பரநாதன் மூவரும் இறைவனை வழிபட்டுக்கொண்டிருக்க, அப்போது அங்கே திடீர் நிலநடுக்கமேற்பட்டு, ஓர் அரிய பொன்ஓலைச்சுருள் எதிர்பாராமல் அவர்கள் கைகளுக்குக் கிடைக்கின்றது.
அதில் என்ன எழுதியிருக்கிறது எனும் ஆவல் அதைப் படிக்கும் ஈஸ்வரனுக்கு மட்டுமல்ல…புதினத்தைப் படிக்கும் நமக்கும் ஏற்படும் வண்ணம் பரபரப்பாய்ப் புதினத்தின் முதல் பாகத்தை நிறைவுசெய்து, நம் கேள்விக்கான விடையை இரண்டாம் பாகத்தில் ஒளித்து வைத்திருக்கின்றார் ஆசிரியர்.
’சயின்ஸ் ஃபிக்ஷன்’ என்று சொல்லக்கூடிய விதத்தில் 25-ஆம் நூற்றாண்டின் ’அல்ட்ரா மாடர்ன்’ தமிழகத்தை முதல் பாகத்தில் நம் கண்முன் நிறுத்திய புதினம், இரண்டாம் பாகத்தில் பல நூற்றாண்டுகள் நம்மைப் பின்னோக்கிப் பயணிக்கவைத்து, கி.பி. பத்து மற்றும் பதினோராம் நூற்றாண்டுத் தமிழத்திற்கு அழைத்துச்சென்று, தமிழகத்தின் மாமன்னர் இராஜராஜரின் பொற்கால ஆட்சியைக் காணும் நல்வாய்ப்பை நமக்கு நல்கியிருக்கின்றது.
இராஜராஜரின் வீரம், தமிழார்வம், மதிநுட்பம் போன்ற குணங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? அவ்வேங்கையின் மைந்தரான முதலாம் இராஜேந்திரரும் தந்தையை ஒத்த பெருவீரராய்த் திகழ்கின்றார்!
இரண்டாம் பாகத்தில், அடுத்து குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்கள் இராஜராஜரின் ஆசிரியரான கருவூர்த்தேவர், தேவரின் மாணவரும், உறவினருமான சிவசங்கர சிவாசாரியார் இருவரும். எளிமை, புத்திக்கூர்மை, தீர்க்கதரிசனம் முதலிய அபூர்வ குணங்கள் நிரம்பப்பெற்ற கருவூரார், சோழநாட்டிற்குச் சிறந்ததோர் ஆலோசகராய்த் திகழ்கின்றார். தமிழ்மீது அளவிறந்த பற்றுக்கொண்ட அவர், தமிழைச் சோழ நாடெங்கும் பரப்பவேண்டும் என்னும் வேணவா கொண்டு இராஜராஜரை வழிநடத்துகின்றார்.
சிவசங்கர சிவாசாரியாரே இரண்டாம் பாகத்தின் நாயகன் என்று சொல்லுமளவிற்கு அப்பாத்திரத்தை நுட்பத்தோடு திறம்படச் செதுக்கியிருக்கின்றார் ஆசிரியர். சிவன்கோயிலில் பூசைசெய்யும் சிவாசாரியாராக வரும் அந்த இளைஞர், அறியாத கலைகளில்லை எனும்படிச் சகலகலாவல்லவராய்த் திகழ்கின்றார். முக்கியமான போர் ஒன்றை வழிநடத்திச்செல்லும் அவர், தம் புதிய உத்திகளால் எதிரிகளை உதிரிகளாக்கி, இராஜராஜரிடம் பாராட்டுப்பெறுவதை நாமே நேரில் நின்று காண்பதுபோல் வெகுசிறப்பாக விவரித்துள்ள ஆசிரியருக்கு என் பாராட்டுக்கள்! விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத வகையில் கதை சாதுரியமாய் நகர்த்தப்பட்டிருக்கின்றது. முதல் பாகத்தின் கதாபாத்திரங்களை இரண்டாம் பாகத்தின் பாத்திரங்களோடு ஆசிரியர் அழகாக இணைத்துக்காட்டியிருப்பது இரசிக்கத்தக்கது.
முதலாம் இராஜேந்திரர் முடிசூட்டிக்கொள்ளும் அரிய காட்சியைக் காணும் வாய்ப்பையும் கதை நமக்கு அளித்திருக்கின்றது. ஆயினும் இராஜராஜர் (கருவூராரின் விருப்பத்தின்படித்) தொடங்கிய தமிழ்ப்பணிகள் என்னவாயின? இராஜராஜருக்குப்பின் இராஜேந்திரர் அவற்றை ஆர்வத்தோடு தொடர்ந்தாரா? போன்ற வினாக்கள் நம்மிடம் குறுகுறுக்கின்றன.
அதுபோல், முதல்பாகத்தில் ஈஸ்வரன் பொன்ஓலைச்சுருளை படித்துக்கொண்டிருக்கும்போது நாம் அவனிடம் விடைபெற்றுக்கொண்டு வந்தோமல்லவா? அவ்வோலையின் மூலம் தமிழர்களின் பண்டைச்சிறப்பைப் படித்தறிந்த ஈஸ்வரன், நிமிஷா உள்ளிட்டோர் அதன்பின் எவ்வாறு நடந்துகொண்டனர் எனும் கேள்வியும் பிறக்கின்றது.
நம் உள்ளத்து வினாக்களை ஊகித்தறிந்த ஆசிரியர், ”உங்கள் வினாக்கள் அனைத்திற்குமான விடைகளைத் தாங்கிப் புதினத்தின் மூன்றாம், நான்காம் பாகங்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றன; அவற்றையும் படித்து மகிழுங்கள்!” என்று முறுவலோடு பதிலிறுக்கின்றார்.
நண்பர்களே! தாய்த்தமிழைக் காக்க உடனடியாக நாம் செய்யவேண்டிய கடமைகளைப் பொட்டில் அடித்ததுபோல் இப்புதினம் நமக்கு உணர்த்திச் செல்கின்றது. நம்முடைய அதீத ஆங்கில மோகம் நம்மை எங்கு கொண்டுபோய் விடுமோ? எனும் தமிழார்வலர்களின் உள்ளக் குரலையே இப்புதினம் எதிரொலிப்பதாய் உணர்கின்றேன்.
மிடுக்கான எழுத்துநடை, கதைச் சம்பவங்களைக் கச்சிதமாய்க் கோத்திருக்கும் பாங்கு ஆகியவற்றைக் காணும்போது ஆசிரியரின் தேர்ந்த எழுத்துவன்மை தெற்றெனப் புலனாகின்றது.
ஆங்கில மோகத்தால் மழுங்கிவரும் நம் தமிழுணர்ச்சியைக் கூர்தீட்டிக்கொள்ள, இதுபோன்ற புதினங்களை நாம் படிக்கவேண்டியது அவசியம். எனவே, ’தமிழ் இனி மெல்ல…’ எனும் இப்புதினத்தை விரைவாகவே வாங்கிப் படிப்போம்! தாய்த்தமிழை அழிவுப் பாதையிலிருந்து மீட்டெடுக்க உறுதி கொள்வோம்!
காலத்தின் தேவையறிந்து சிறந்த புதினத்தைப் படைத்தளித்திருக்கும் ஆசிரியர் ஒரு அரிசோனனைப் பாராட்டி, இதுபோல் மேலும் பல ஆக்கங்களைத் துடிப்புடன் அவர் நல்கிட வேண்டும் என்று வாழ்த்துவோமாக!
புதினத்தை வாங்க விரும்புவோர் ஆசிரியரை அவருடைய மின்னஞ்சலில் தொடர்பு கொள்க!
ஆசிரியரின் மின்னஞ்சல் முகவரி: oruarizonan@gmail.com
-துஷ்யந்தி, இலங்கை
வாழ்க்கையை ரசிக்க
வைகறையைத் தேடிவந்தேன்
வருடிச்சென்றது என் மேனியில்
சில்லென்ற காற்று…! 
சிலிர்ந்தது என் மேனி
குளிர்ந்தது உள்ளம்
தெளிந்த நதியின் நடையில்
தொலைகின்றது என் மனம்!
பஞ்சணைப் படுக்கையாய்
புல்லினங்கள் மேனி தடவ
ஏதேதோ எண்ணங்கள்
அரவணைக்கக் கண்டேன்…!
பாடித்திரியும் பறவைகள்
காதிலே காதல் கானம் சொல்ல
வண்டினங்கள் பூவை வட்டமிட்டு
ரீங்காரமிட…
காதலின் கோலத்தைக்
கணப்பொழுதில் கண்டேன்…!
நதி நீரில் மீனினங்கள்
மேலேழுந்து பாய்கையில்
நானும் கூட மீனினமாக
பிறக்கவில்லையே…என்று
கற்பனையில் ஓர் ஆதங்கம்!
அந்திவானம் ஒளியிரங்க
நதிநீரில் கதிரவனின் மேனிபடப்
பறவைகள் வானத்தில் வட்டமிடக்
கங்கையின் கோலத்தை
என்னவென்று சொல்ல…!
பட்டாம்பூச்சியாய் நானும் மாறி
நதிநீரை முகத்தில் தெளிக்க
நினைவுகளும் மறந்துபோக
மயங்கிவிட்டேன் இயற்கையில்!!
-சரஸ்வதி ராசேந்திரன்
தேடி உன்னைச் சரண் அடைந்தேன்
திருத்தணிகை முருகா!
தீமைகளைத் தகர்த் தெறிவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே! 
பாடி உன்னைச் சரணடைந்தேன்
பழனிமலை முருகா!
கோடி நலம் செய்திடுவாய்!
குறைகள் எல்லாம் தீர்ப்பாய்!
பாவங்களைப் போக்கிடப்பா
பச்சை மலை முருகா!
வல்வினைகள் போக்கிடுவாய்
வைகாசி விசாகனே!
அமைதியைத் தந்திடுவாய்
அழகர் மலைக் குமரா!
சிரத்தையுடன் வேண்டுகிறோம்
சிக்கல் சிங்கார வேலா!
விரைந்து நீ வந்திடு
விராலிமலை வேலவா!
பக்தர்களின் குறை தீர்த்திடு
பவழமலைஆண்டவனே!
பால் காவடி, பன்னீர்க் காவடி புஷ்பக் காவடியாம்
பக்தர்கள் வந்து நின்றோம் உன் காலடிக்கு!
-ரோஷான் ஏ.ஜிப்ரி
என் உறுதிகளைப் பறித்தவனிடமிருந்து
காப்பாற்ற முடியாமல் போன
வாழ்வின் இருப்பை நொந்தபடி
நேற்றின் அவமானத்தோடான
அலைச்சலிலிருந்து மீள அயர்கிறேன்!
இன்றும் ஒரு கனவு
விழிமடல் மூட விரிகிறது முன்…
முதற் பரிமாணத்தில் தந்திரம் மிக்க நரியாகிப்
பின் மெல்லச் சாத்தான்களாவது
விடாமுயற்சியின் பலன்களிலொன்று!
என் கனவுக்குள் வருபவர்களுக்கு
எடுத்தெறிய வேண்டிய
சாத்தான்களின் சபையை
நிறைத்திருந்தன நரிக்கூட்டம்!
நரிகள் ஓதிய வேதங்கள் ஏதும்
பலிக்கவில்லை செவிடென இருந்த
அரசக் கடவுளின்முன்!
பின் இன்னொரு காட்சி
தொடர் கனவின் பிரதியாய் விரிகிறது…
ஒருபக்கம்
வாலுயர்த்திக் கொம்புகளை ஆட்டியவாறு
விஷத்துடன் கொடுக்ககலக்
கருந்தேள்கள் வாசலெங்கும்
மண்மேய்ந்து உலாவ
மறுபக்கம் நாக்கிழும் புழுக்கள்
திரிந்தன எம் நிலமெங்கும்
புனித மண்தேடி…
தாவிக் கழித்துக் குருத்துப்புல் கொறித்த
முயல் குட்டிகள் இல்லிடமற்றுக்
கறியாடுகளாய் உலையேறுகின்ற
கனவிலிருந்து விழித்தபோது
கட்சி இலச்சினையோடு பல்லிளித்தபடி
நரிமுகத்துடன் ஒரு சாத்தான் என் முன் நின்றது
இம்முறையும் அவனது தேவையொன்றின் நிமித்தம்!
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை
கவுந்தி அடிகள் மாதரியிடம் கண்ணகியைப் போற்றும் வகை கூறி உரைத்தல்
“மங்கலம் வாய்க்கப்பெற்ற
இம்மங்கையைத்
தூய நீரினால் நீராட்டி,
சிவந்த கயல் போன்ற கண்களில்
அஞ்சனம் தீட்டி,
மணம்மிக்க இவள் கூந்தலில்
சில மலர்களைச் சூட்டி,
தூய புடவை உடுத்தி,
முன்னோர் கூறிய சிறப்பனைத்தும் வாய்ந்த
தோழியாகவும், செவிலியாகவும்,
தாயும் ஆகி இவளைக் காப்பாயாக!
இங்கே என்னோடு தங்கியிருந்த
இந்த இளைய கொடி போன்ற நங்கையின்
அழகுவாய்ந்த சிறு பாதங்களின் அடிகளை
மண்மகளும் கண்டாள் இல்லை
சூரியனின் கடுமையான கதிர்களின் வெப்பத்தால்
துன்புற்று வாடிய தன் கணவன் துயர்கண்டு
நடுங்கி வருந்தியிருக்கிறாள் இவள்;
அது தவிரத் தன் நாவே உலர்ந்து போகும்படித்
தான் வாடியதை ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை
தன் கணவனுக்கு இனிய மனைவியாய் விளங்கும்
பெண்கள் தமக்கு இன்றியமையாததாக விளங்கும்
கற்பு நெறி தன்னை அணியாகப் பூண்டுள்ள
இவள் சிறப்புமிக்கப் பெண்தெய்வம்!
இவளைத் தவிர சிறப்புமிக்க
வேறோர் பெண்தெய்வத்தை நான் கண்டதில்லை
இத்தகைய கற்பிற் சிறந்த
பெண்கள் வாழும் நாட்டில்
வானம் பொய்க்காது;
நிலத்தின் வளமும் குன்றாது;
நீண்ட நிலமதை ஆள்கின்ற
அரசர் தம் கொற்றமும் சிதையாது;
இத்தகைய நல்வாக்குகளை
நீ கேட்டதில்லையோ?” எனக்
கவுந்தி அடிகள் மாதரியிடம் கூறினார்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 131 – 148
http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
<http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–>
pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–
<http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–>
-துஷ்யந்தி, இலங்கை
பாரதிகண்ட புதுமைப் பெண்
ஆணுக்குச் சரிநிகர் சரி பாதி
என்றதோடு நின்றிடவில்லை
ஒருபடி மேல் சென்றுவிட்டாள்!
நீர் மேல் நிலையில்லா
நீர்க்குமிழியாம் வாழ்க்கை
அதில் காற்றோடு ஒட்டிய
தூசுகளே பந்தங்கள்!
நீரின் மேல் வள்ளம் போல்
பந்தங்களோடு தடை தாண்டி
வெற்றி இலக்கை அடைவதே
வாழ்வின் உண்மைத் தத்துவம்!
உரிமை பெற்றோம் என
ஒதுங்கி வாழ்ந்திடாது
இன்ப துன்பங்களில்
தோள் கொடுப்போம் – வரும்
விளைவுகளைச் சமமாய்
முகம் கொடுக்கக் கற்றிடுவோம்!
இணைந்த கைகள் எழுப்பும் ஒலி
தனித்த கையில் வருவதில்லை
ஆணவம் நம்மிடை இருக்கும்வரை
வெற்றி நம்மிடம் வருவதில்லை!!
-ரோஷான் ஏ.ஜிப்ரி
வேர் அறுந்த வலியுடன்
வசித்தல் என்பது எனக்கு
வாழ்வாகிற்று…
உறவற்ற அன்றில் நான்
ரணங்களின் குறிப்புகளோடு
அழித்து அழித்து எழுதப்பட்டிருக்கின்றன
எனது நாட்கள்!
சொப்பனங்களில் லயித்து
வெகுமதிகளில் சுகித்து
ஒரு பறவையாய்ச் சிறகடிக்க
இறக்கைகள் கத்தரிக்கப்படுவதற்கு முன்
எனக்கும் இருந்ததொரு எண்ணம்!
மன்னிக்க…
வசீகரங்களைத் தூவி நீ வாழ்த்த
ஏற்று வணங்கி வரவேற்கும் நிலையில்
இப்போது என் இருப்பு இல்லை!
உன் பூங்கொத்துகளைச் சுமக்க
மனசின் கை
ஆசையோடு அணுகுகிற போதும்,
வலிமை இழந்த தகிப்பில்
மீள்கிறேன் பழைய இடத்திற்கே!
என் இரவுகளைப் பருகிப்பருகித்
தனிமைப் பூதமாகும் இனி…
வாசலே வீடாயிருக்கும்
என் இல்லிடத்திற்கு வா!
காதலோடு அல்ல…
ஒரு கூடைக் கைக்குட்டைகளோடு !
-துஷ்யந்தி, இலங்கை
மண்ணிலே பிறந்தோம்
மனிதர்களாய் வளர்ந்தோம்
மனதிலே இறைவனை
மறவாமல் நினைத்தோம்!
மதங்களை ஆக்கினோம்
மனிதனாய் வாழ்வதற்கே!
மரணித்து மரணித்து தினம்
மடிந்திடவா மதங்கள் எமக்கு?
மனித உடலிலே இறைவனவன்
மாறாத நிறமாய்க் குருதி தந்தானே…
மானிடா அதை மறந்ததேனோ?
மண்ணிலே பிறந்ததெல்லாம்
மண்ணுக்கே உரிமையல்லவா?
மாறாக அதைக் கையில் எடுக்க
மனம் வந்தது எப்படி மனிதா?
மாற்றங்கள் நம் மனதில் வரட்டும்
மனிதம் நம்மில் குடிகொள்ளட்டும்
மதங்களில் பிரிவுகள் அழிந்திடட்டும்
மக்களெல்லாம் இன்பத்திலே
மகிழ்ந்திடட்டும்!!
-பா. ராஜசேகர்
மனத்தெண்ணம்
வெளிக்கொணர்ந்து
பகிர்ந்துண்ணும்
சுதந்திரம்!
கருத்துக்கள்
முரண்படினும்
பிறர் புண்படுத்தாச்
சுதந்திரம் !
பிறர் மானம்
மரியாதை
கெட இடங்கொடாச்
சுதந்திரம் !
உடல் பொருளும்
தனி மனிதம்
சேதமில்லாத
சுதந்திரம் !
அண்டையர்
மத நம்பிக்கை
பழித்திடாச்
சுதந்திரம் !
துரத்துகின்ற
வாதங்கள்
பிடிவாதமாகாச்
சுதந்திரம் !
எதிர்வாதம்
மதிப்பளிக்கும்
மிதவாதமான
சுதந்திரம் !
கருத்துக்கும்
கற்புண்டு
கண்ணியமான
சுதந்திரம்!
அடிப்படை
உரிமைகளில்
பொறுப்பானது
சுதந்திரம்!
சிந்தனைகள்
சீர்தூக்கச் சேதிகளைச்
செப்பனிடும்
சுதந்திரம் !
பிறர் மனம்
மதிப்போம்
கருத்துரிமை
காப்போம் !
நிர்மலா ராகவன்
கேள்வி: என் மகளைச் சிறுவயதிலிருந்தே சுதந்திரமாக, அவள் விருப்பப்படியெல்லாம் நடக்கப் பழக்கிவிட்டேன். ஆனால், பதினைந்து வயதிலும் தன் விருப்பப்படிதான் நடப்பேன், நான் எதுவும் கேட்கக்கூடாது என்று பிடிவாதம் பிடிக்கிறாள். டீன் ஏஜ் பிள்ளைகளை எப்படி வழிக்குக் கொண்டுவருவது?
விளக்கம்:
பால்ய விவாகமும், தந்தையின் தொழிலையே கற்று, மகன் பரம்பரைத் தொழிலில் ஈடுபட்டபோதும், `பருவ வயது 13 – 18’ என்றெல்லாம் தனியாகப் பிரிக்கப்படவில்லை. பன்னிரண்டு வயதுக்குட்பட்டவர்கள் மட்டும் குழந்தைகளாகக் கருதப்பட்டார்கள். (ஆனால், அந்தந்த வயதுக்கு மீறிய பொறுப்புகளும் அவர்கள்மீது திணிக்கப்பட்டன).
சுமார் 65 ஆண்டுகளாகத்தான் பதின்ம வயதினர் குழந்தைகளும் இல்லை முதிர்ச்சியுற்ற பெரியவர்களும் இல்லை, இவர்கள் வேறு ஒரு பிரிவினர் என்று ஒப்புக்கொள்ளப்பட்டு, அவர்களுடைய உளவியலைப்பற்றி நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இந்த வயதினர், `நியாயம்’, `அநியாயம்’ என்ற முறையில்தான் எந்த பிரச்னையையும் அணுகுவர். எளிதில் உணர்ச்சிவசப்படுவர். உடலிலும், மனதிலும் மாற்றம். ஆனால், இதைச் சரிவர விளக்குவார் யாருமில்லை. `இதையெல்லாமா சொல்லித் தருவார்கள்!’ என்று கூசியபடி விளக்கினால், இந்த விஷயத்தில் வேண்டாத ஆர்வம்தான் வரும். அபாயமான விளைவுகளை உண்டாக்கும் செயல்களில் ஈடுபடத் தூண்டும் துணிச்சலும் இந்தப் பருவத்தினருக்கு இயற்கையிலேயே எழுகிறது.
இதையெல்லாம் புரிந்துகொண்டு, சிறு வயதிலிருந்தே குழந்தைகளையும் ஒரு பொருட்டாக மதித்துப் பெற்றோர் நடக்க வேண்டும்.
குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பும்போது, யாராவது வீட்டில் இருக்க வேண்டுவது அவசியம். எப்போதாவது வெளியில் போகவேண்டிய அவசியம் நேர்ந்தால், அவர்களுக்கு ஒரு சிறு குறிப்பு — எங்கே போயிருக்கிறீர்கள், எப்போது திரும்புவீர்கள், சாப்பிட என்ன, எங்கே வைத்திருக்கிறீர்கள் — இப்படி. இதைப் படிக்கும்போது, பெற்றோர் தம் கூடவே இருப்பதுபோல உணர்வார்கள் குழந்தைகள்.
`என் மகள் (வயது 17) வெளியே போகும்போது, நான் கேட்காவிட்டாலும், போகுமிடத்தைத் தெரிவித்துவிட்டுத்தான் போகிறாள். அவளுடைய சிநேகிதர்களை வீட்டுக்கு அழைத்து வந்து, அறிமுகம் செய்து வைக்கிறாள்!’ என்று என்னிடம் கூறி அதிசயப்பட்டாள் என்னுடன் வேலை பார்த்த ஒரு மாது. என்னைவிட ஏழு வயது பெரியவள். இந்த தாய், மகள் சிறுமியாக இருந்தபோது, இதேபோன்ற கரிசனத்தை (நான் சீக்கிரமே திரும்பி விடுவேன், அனாவசியமாக கவலைப்படக்கூடாது), மரியாதையை அவளுக்கு வழங்கியிருக்கிறாள் என்று ஊகித்துச் சொன்னேன். தான் பெற்றதைத் திருப்பி அளிக்கிறாள் பெண். இதில் அதிசயப்பட என்ன இருக்கிறது?
பெற்றோருக்குத் தம் குழந்தைகளின் நண்பர்களைப்பற்றி ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். பண்டிகை நாட்களின்போது, நண்பர்களை வீட்டுக்கு அழைக்கச் சொல்லுங்கள். ஒரு சிலர், உங்கள் குடும்பத்தில் வழக்கமாக அனுசரிக்கப்படும் மரியாதை, தைரியம், ஒழுக்கம் போன்ற சில கொள்கைகளிலிருந்து மாறுபட்டிருக்கக்கூடும். அவர்களைப்பற்றிப் பிறகு பேசுங்கள். ஆத்திரமின்றி, நட்புணர்வோடு. நாம் கொண்டிருக்கும் அக்கறை குழந்தைகளுக்குப் புரியும்.
உதாரணமாக, ஒரு பெண் பதினைந்து வயதிலேயே கர்ப்பத்தடை மாத்திரையை எடுத்துக் கொள்கிறாள். அவளுடன் ஊர்சுற்றுவதில் ஒத்துப்போகாத தோழியை `பழைய காலம்! அம்மாவின் கட்டுப்பாட்டுக்குப் பணிந்து போகிறவள்!’ என்று பலவாறாகப் பழிக்கிறாள். திரும்பத் திரும்ப இப்படியே செய்தால், எவரையும் தன் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறாள்.
அவள் நினைத்தபடியே, பெண்ணும் அம்மாவுடன் சண்டைக்குப் போகிறாள், `என் வயதொத்த பெண்கள் எல்லாம் சுதந்திரமாக இருக்கிறார்கள். நான் சந்தோஷமா இருந்தா ஒங்களுக்குப் பொறுக்காதே! என் சிநேகிதிகளோட அம்மா இவ்வளவு மோசம் இல்லே!’ என்று.
தாய் தானும் உணர்ச்சிவசப்பட்டுக் கத்தினால், காரியம் கெட்டுவிடும். ஏன் தெரியுமா?
பதின்ம வயதுப் பையனாக இருந்தால், முன்பின் யோசியாமல், ஏதோ உணர்ச்சிவசத்தில் தப்பு செய்கிறான். வயது வந்தவர்களோ, நன்றாக யோசித்து, கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பெண்ணின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, நிறையப் புகழ்ந்து, அவளை வசப்படுத்தப் பார்ப்பார்கள்.
பதினைந்து வயதில் ஒரு பெண்ணுக்கு உடல் வளர்ந்திருக்கிற அளவுக்கு உலக விவரம் புரிவதில்லை. மனதளவில் அவள் குழந்தைதான். யாராவது, `ஒன்னைப் பாத்தா சின்னப்பொண்ணா தெரியல. என்னமா வளர்ந்திருக்கே! எவ்வளவு விஷயம் தெரிஞ்சு வெச்சிருக்கே! புத்திசாலி!’ என்றெல்லாம் புகழும்போது, மயங்கிவிடுகிறாள்.
(எத்தனை வயதானாலும், நம்மை முகத்துக்கு நேர் புகழ்கிறவர்கள் ஏதாவது ஆதாயம் எதிர்பார்த்துத்தான் அப்படிச் செய்கிறார்கள். அப்படி யாராவது புகழ்ந்தால், `நன்றி,’ என்றுவிட்டு, போய்க்கொண்டே இருக்க வேண்டும். பத்து வயதிலேயே உங்கள் குழந்தைக்கு இதைச் சொல்லிவைங்கள். அதிகம் ஏமாற மாட்டார்கள்).
இப்படி, உலகத்தின் நடப்புகளைப் பக்குவமாக எடுத்துச் சொன்னால், பெண் யோசிக்க ஆரம்பிக்கிறாள். எப்போதும் நம் நன்மையைத்தான் கோருவாள் தாய் என்ற நம்பிக்கையுடன், `ஓ! அதான் என் ஃப்ரெண்ட் என்னைப் பாத்து பொறாமைப்படுகிறாளா!’ என்று தெளிந்து, எந்தக் குழப்பத்திலும் சிக்காமல் தப்புகிறாள்.
ஆம், `சுதந்திரம்’ என்ற பெயரில் மனம்போன போக்கில் நடப்பவர்கள் எப்போதும், தன்னைக் கட்டுப்படுத்த யாருமில்லையே என்ற ஏக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
எது சரி, எது தவறு என்று விளக்க ஒரு பெண்ணோ, பிள்ளையோ தவறு செய்யும்வரை காத்திருக்க வேண்டாம். உங்களுடன் தனியாகப் பிரயாணம் செய்யும்போதோ, வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும்போதோ, பொதுவாக இந்த வயதினருக்கு ஏற்படும் மன உளைச்சல்களையும், அவைகளை எப்படித் தவிர்க்கலாம் என்பதையும் பேச்சுவாக்கில் சொல்லுங்கள்.
உதாரணமாக, சிறு வயதிலிருந்தே தாயிடம் அனுமதி கேட்டு விளையாடப் போகும் வழக்கமுடைய பெண், `இருட்டுவதற்குள் வர வேண்டும்,’ என்று தாய் சொன்னபடி நடந்திருக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். பதினைந்து வயதிலும், `என் சிநேகிதி வீட்டில் ஒரு பார்ட்டி. டீன் ஏஜ் பையன்களும் வருவார்கள். நான் போகட்டுமா?’ என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?
`எங்க காலத்திலே..,’ என்று ஆரம்பித்தால், `போர்!’ என்று முகத்தைச் சுருக்கிக் கொள்வார்கள்.
`ஆண்பிள்ளை,’ என்ற வார்த்தை காதில் விழுந்ததுமே ஏதேதோ கற்பனை செய்து, அதிலேயே பயந்து கத்தும் தாய் தன் மகளின் மதிப்பில் தாழ்ந்து விடுகிறாள்.
`வேண்டாம். அப்பா கோபிப்பார்,’ என்னும் தாயோ தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறாள்.
முன்கூறியபடி விளக்கிவிட்டு, `ஒனக்கு என்மேல வருத்தம். தெரியும். இன்னும் நாலு வருஷம் போனா, நான் ஒன் நன்மைக்குத்தான் சொன்னேன்னு புரியும்!’ என்று, அவளுடைய உணர்வுக்கு ஆதரவு கொடுத்துப் பேசுங்கள். (`உங்கள் மனநிலை எனக்குப் புரிகிறது,’ என்று கூறினால், நம்மை எவ்வளவு எதிர்ப்பவரும் சற்று அடங்கிவிடுவார்).
உணர்ச்சிபூர்வமான இந்த வயதினர் தெரியாத்தனமாக ஏதாவது பிழை புரிந்துவிட்டு, ஆத்திரமும், அவமானமும் அடைவது சகஜம். தவறு செய்வது மனித இயல்பு என்று ஒவ்வொரு முறையும் பக்கபலமும், பாதுகாப்பும் அளியுங்கள். முடிந்தால், அந்த வயதில் நீங்கள் அதேபோல் எதையாவது செய்துவிட்டு, அதை மறைக்கப் பார்த்ததை நகைச்சுவையுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனக்குப் பிடித்த தேங்காய் துவையலை கல்லுரலில் அரைக்கச் சொன்னார்கள் என் பாட்டி. அவர்கள் புளி நிறையப் போடுவார்கள். எனக்குப் புளித்தால் பிடிக்காததால், பாதியை எடுத்து, கல்லுரலின் பின் பக்கத்தில், சுவரருகே ஒட்டிவிட்டேன், யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி. `புளிப்பே இல்லையே! பாதி புளியை ஒளிச்சு வெச்சுட்டியா?’ என்று பாட்டி சந்தேகப்பட்டுக் கேட்டபோது, `இல்லவே இல்லை,’ என்று சாதித்து விட்டேன்!
பொய்தான். என்ன செய்வது!
அது பாட்டிக்கும் புரிந்ததால்தானே சிரித்தார்கள்! என் வயதில் அவர்கள் என்ன தில்லுமுல்லு செய்தார்களோ!
தொடருவோம்
-பா வானதி வேதா. இலங்காதிலகம்
வாருங்கள் தமிழ்புரிக்குச் செல்வோம்!
வேருங்கள் சுய அறிவால்
சேருங்கள் தீந்தமிழ் வரிகள்
எங்கும் வெளியிடாத ஓவியம்
எங்கும் பாடாத பாடல்
எங்கும் ஆடாத நடனம்
எங்கும் எழுதாத வரிகள்
எங்கும் தேவையாம் கொடுங்கள்!
தொல்காப்பியம் தண்டியலங்காரம் புலமைப்
பல் நூல்கள் புரட்டுங்கள்!
வல்லமையாய்ப் புதிதாய் வார்த்திடுங்கள்
கல்லுதல் செய்தே வரைந்தவைகள்
எல்லாம் பழையன என்றால்
கொல்லையில் வீசுவதா சொல்லுங்கள்!
வள்ளுவன் பாரதியின் பழையவைகள்
ஊரதிரத் தேரோடுது பாருங்கள்!
மல்லாட்டம் தமிழோடு போடுங்கள்!
கல்லாதாரும் கற்றவரும் விளங்க
வில்லவனாகிக் காதலையும் வரையுங்கள்!
வில்லங்கமின்றிக் கவி இலக்கணம்
நல்லங்கமாக்கி நெஞ்சக் கிண்ணத்தால்
துல்லியமாய் வெல்லமாய் ஊற்றுங்கள்!
எல்லோரும் மேதை என்பார்கள்!
சொல்வளம் பஞ்சமற்ற புலவராகுங்கள்!
(கல்லுதல்- தோண்டுதல்; வில்லவன் – மன்மதன்)
42. நியாண்டர்தால் அருங்காட்சியகம் – டூசல்டோர்ஃப், ஜெர்மனி (3)
சுபாஷிணி
நியாண்டர்தால் அருங்காட்சியகம் ஒரு தகவல் சுரங்கமாக திகழ்கிறது. மனித இனத்தின் படிப்படியான வளர்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ச்சியான இக்காலகட்டத்தில் பண்டைய பழங்கூறுகளையும் அதன் பொதுத் தன்மைகளையும் வெளிப்படுத்தும் ஒரு காட்சிக்கூடமாகவும் இந்த அருங்காட்சியகம் விளங்குகிறது.
கற்கால மனிதர்களின் ஈமச்சடங்கு முறைகளை ஆராயும் போது உலகின் பல மூலைகளில் இவ்வகைச் சடங்குகளில் இருக்கும் ஒற்றுமைக் கூறுகளைக் காண முடிகிறது. பூகோள ரீதியாக மனிதர்கள் நிலப்பரப்பில் பிரிக்கப்பட்டிருந்தாலும் அடிப்படையில் மனித மனம் ஒரே வகையில் சிந்திப்பதை பொதுக்கூறுகளாகக் காணமுடிகிறது. உதாரணமாக, பெருங்கற்காலத்தில் இறந்து போன மனிதர்களின் நினைவாக அமைக்கப்பட்ட கற்திட்டை வடிவங்களைக் கூறலாம். ஐரோப்பிய நிலப்பரப்பில் பிரித்தானியாவில் வரலாற்றாய்வாளர்கள் சுட்டும் stonehenge வடிவங்களை இவ்வகையில் இருக்கும் ஒற்றுமையாகக் குறிப்பிடலாம். இதே போன்ற ஈமக்கிரியை தொல் வடிவங்களைத் தமிழக நிலப்பரப்பிலும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மற்றொரு ஈமக்கிரியை தொல்வடிவம் வட்டக் கல் என்பது. நான் சென்னைக்கு புற நகர்ப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்த ஒரு வரலாற்றுப்பயணத்தில் இவற்றை நேரடியாகக் காணும் வாய்ப்பைப் பெற்றேன். அதே போல கொடுமணல் அகழ்வாய்வுப் பகுதியிலும் இதே போன்ற வடிவங்களைக் கண்டேன்.இதே போன்ற மெகாலித்திக் காலகட்டத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கபப்ட்ட Mystical Circle எனப்படுபவை பிரித்தானிய தீவுகளில் இருப்பதையும் இங்கே புகைப்படங்களுடன் கூடிய தகவல் வழி இங்கு வருவோர் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.
தாய் தெய்வ வழிபாடு என்பது தொண்மையான ஒரு வழிபாட்டு முறை. பழம் நாகரிகங்கள் அனைத்திலும் ஏதாகினும் ஒரு வகையில் தாய் தெய்வ வழிபாடு என்பது அமைந்திருந்தது என்பதும் அவற்றின் உருவப் படிமங்களும் உலகின் பல நாடுகளில் அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பதும் வரலாற்று உண்மை.
இதன் தொடர்பில் ஐரோப்பிய நிலப்பரப்பில் கண்டெடுக்கப்பட்ட தொண்மையான தாய்தெய்வ வடிவங்களை இந்த அருங்காட்சியகத்தில் சிறு தொகுப்பில் காணமுடிகின்றது. ஆஸ்திரிய நிலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 25,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாய்தெய்வ வடிவத்தின் ரெப்ளிக்கா ஒன்றினை இந்த அருங்காட்சியகத்தில் காணலாம். இதன் அசல் வடிவம் ஆஸ்திரியாவின் வீன் அருங்காட்சியகத்தில் இருக்கின்றது. இதனைப் போலவே உக்ரயேன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட 22,000 ஆண்டு பழமையான ஒரு தாய்தெய்வ வடிவமும் இங்கு உள்ளது.
உலகில் வேறெங்கும் சென்று ஆச்சரியங்களைத் தேடவேண்டியதில்லை. நம் உடலே ஆச்சரியங்கள் பல கொண்ட ஒரு அற்புதப் புதையல் தான். நம் உடலில் இருக்கும் பாகங்களில் ஒவ்வொன்றும் ஒரு செயலைச் செய்தாலும் பிராதன முக்கியத்துவத்தைப் பெறுகின்ற மூளையானது ஆச்சரியத்தும் மேல் ஆச்சரியம் நிறைந்த ஒன்றாக இருக்கின்றது. காலங்காலமாக நிகழ்ந்த பரிணாம வளர்ச்சியில் மனித உடலின் வளர்ச்சியில் மனித மூளையில் அளவின் வளர்ச்சி என்பதும் அடங்கும். மூளைவின் அளவு பெரிதாகப் பெரிதாக அதன் திறன்களும் அதிகரிக்கின்றன. சிந்தனையின் ஆழமும் சிந்தனைப் பதிவின் திறமும் மூளையின் அளவு பெரிதாகும் போது அதற்குத் தகுந்தார் போல பெரிதாகின்றன. இந்த அருங்காட்சியகத்தில் ஒரு பகுதியில் மனித மண்டை ஓடுகளும் மூளை பற்றிய ஆய்வுகளும் அமைந்துள்ள பகுதியில் இத்தகைய தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.
மனித இனம் விலங்கினமாக இருந்து பின்னர் வேட்டையாடும் திறனை அமைத்துக் கொண்டு குடும்பம், சமூகம் என வளர்ந்து விவசாயத்தையும் கற்றுக் கொண்டு, அதனை பெருவாரியாக விரிவாக்கி, நாடு, நகரம், அரசியல், ராஜ்ஜியம் என இருந்து பின்னர் மொழி, கலை, வழிபாடு, சடங்குகள், மாந்திரீகம், தத்துவம் என தன் ஆளுமையை விரிவாக்கிக் கொண்டு, வர்த்தகம், தொழில் நுட்பம் என்றும் உயர்வடைத்து விட்டது. இந்தத் தொடர் வளர்ச்சி பல போராட்டங்களைக் கடந்து வந்த ஒரு வரலாற்று நிகழ்வு. இது பல தேடுதல்களும் மாற்றங்களும் இருந்தமையால் மட்டுமே சாதிக்க முடிந்த ஒரு வளர்ச்சி.
மாற்றங்களை விரும்பாத, தேடுதலில் ஈடுபடாத ஒரு இனம் வளர்ச்சி பெற முடியாது. மனித இனத்தின் தேடுதல் தொடர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.
Was ist der Mensch? (மனிதன் என்பர் யார்?)
Was soll ich tun? (நான் என்ன செய்ய வேண்டும்?)
Was kann ich wissen? (நான் என்ன தெரிந்து கொள்ள முடியும்?)
Was darf ich hoffen? (நான் எதை எதிர்ப்பார்த்திருக்க முடியும்?)
-Immanuel Kant

நமது தேடலையும் தொடர்வோம். அடுத்த கட்டுரையில் மற்றுமொரு நாட்டில் வேறொரு அருங்காட்சியகத்தில்!