இந்த வார வல்லமையாளர்!
ஜூன் 1, 2015
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு வரலாற்றாய்வாளர் இரா. கலைக்கோவன் அவர்கள்
கள ஆய்வுகளில் அறியப்படும் உண்மைகளின் அடிப்படையில் வரலாற்றை உருவாக்கும் நோக்குடன் “தமிழறிஞரும் வரலாற்றறிஞருமான முனைவர் மா. இராசமாணிக்கனார்” பெயரில் முனைவர் இரா. கலைக்கோவனால் திருச்சிராப்பள்ளியில் 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆய்வு அமைப்பே டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம். நிறுவனரான இவரே வரலாற்றாய்வு மையத்தின் இயக்குநரும் ஆவார். நடப்புலகில் பொது அங்கீகாரமோ புகழோ கிடைக்க வழியில்லாத வரலாற்றாய்வுத் துறையில் 33 ஆண்டுகள் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குநரான முனைவர் இரா. கலைக்கோவன் அவர்களுக்கும் இப்பணி வாழ்வாதாரம் அல்ல. தொழில்முறையில் இவர் ஒரு கண் மருத்துவர். இவரது முயற்சி ஆல் போல வளர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கல்வெட்டு ஆய்வுகள், ஐம்பதிற்கும் மேற்பட்ட புத்தக வெளியீடுகள், 25 “வரலாறு” ஆய்விதழ்கள், 119 வரலாறு.காம் மின்னிதழ் பதிப்புகள், 1356 வரலாற்றுக் கட்டுரைகள் எனப் பல எல்லைகளைக் கடந்துள்ளனர் வரலாற்றாய்வு மையத்தினர். இச்சாதனைகளை நினைவுகூரும் விதத்தில் டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பணிகளை முன்னிறுத்திக் கௌரவிக்கும் இதழாக தற்பொழுது வெளிவந்திருக்கும் மையத்தின் இம்மாதத்தின் திங்களிதழ் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றின் பால் கொண்ட ஆர்வம் காரணமாக 25 ஆவது “வரலாறு” ஆய்விதழ் வெளியாகும் வரை வரலாற்றாய்வு மையத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றுள்ள முனைவர் இரா. கலைக்கோவன் அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவித்துப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.
1. பதிவு செய்யப்படாத கல்வெட்டுகளைக் கண்டறிந்து பதிப்பித்தல்
2. தமிழ்நாட்டுக் கலை வரலாற்றை முழுமையுற உருவாக்கல்
3. ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் புதிய தரவுகளை வழங்கும் ஆண்டு ஆய்விதழ் வெளியிடல்
4. களஆய்வில் நம்பிக்கையுடைய இளம் ஆய்வாளர்களை வழிநடத்தல்
5. உலகளாவிய தமிழர்களுக்கு இலக்கியம், வரலாறு குறித்த ஆர்வத்தையும் ஆய்வு நோக்கையும் விதைத்தல்
6. கோயில்கள் வரலாற்றுக் களங்கள் என்பதால் அது குறித்த விழிப்புணர்வைச் சமுதாயத்தில் பரவச் செய்தல்
ஆகியவை வரலாற்றாய்வு மையத்தின் குறிக்கோள்கள்.
திருச்சி, ஸ்ரீரங்கம் கோவில் கருடாழ்வார் சன்னிதியில், கருவூலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்த நிலையில், உண்மையை அறிவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் இடம்பெற்ற முனைவர் இரா.கலைக்கோவன், மூன்று நாள் அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சி செய்தார்.
இவர் பங்கேற்ற பற்பல களஆய்வுப்பணி தொடர்பான செய்திகள் மாதம் ஒருமுறையாவது நாளிதழ்களில் இடம் பெறத் தவறுவதில்லை … சமீபத்தில் வெளியான செய்திகள் சில …
செவந்திலிங்கபுரத்தில் அரியவகை ஐய்யனார் சிற்பம் கண்டெடுப்பு – ஏப்ரல் 23, 2015, தினமணி
அரசு ஆதரவு, நல்ல பொருளாதாரப் பின்புலமுள்ள பெரிய பல்கலைக்கழகங்களும் நிறுவனங்களும் சாதித்ததைக் காட்டிலும், பெரிய அளவில் பொருளாதாரப் பின்புலம் ஏதும் இல்லாமல் தன்னார்வ ஊழியர்கள் மற்றும் ஆர்வலர்கள் உதவியுடன் கடந்த முப்பத்து மூன்றாண்டுகளில் வரலாற்றாய்வு மையம் சாதித்துள்ள வரலாற்றுப் பணி குறிப்பிடத் தக்கது. மையத்தின் ஒரு முக்கிய ஆய்வாளருமான 67 வயதாகும் முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களின் இப்பணியைப் பாராட்டி, சென்ற ஏப்ரல் (2015) மாதத்தில் கும்பகோணம் ரோட்டரி கிராண்ட் நிறுவனம் “வாழ்நாள் சாதனையாளர்” விருது அளித்து முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களைக் கௌரவப்படுத்தியுள்ளது.
ஏற்புரையில் முனைவர் இரா.கலைக்கோவன், ‘கோரிக்கைகளுக்காக மட்டும் கோயில்களை அணுக வேண்டாம்!’ என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார். தமிழர் அனைவரும் இவ்வேண்டுகோளை சிரமேற்கொண்டால் தமிழகத் தொல்பொருள் ஆய்வும், தமிழக வரலாற்று ஆய்வும் நல்ல உயர்ந்த நிலையை அடைந்து தமிழகத்திற்கு பெருமைகள் பல சேர்க்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
இந்த வேண்டுகோளை இவர் பலகாலமாக தமிழக மக்களிடம் முன்வைத்துவருகிறார். “வரலாறு” ஆய்விதழின் எட்டாம் இதழில் அவர் கீழ் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“குடமுழுக்கு, திருப்பணி என்ற சொற்களைக் கேட்டாலே அஞ்சுமளவிற்குத் திருக்கோயில்கள் இவற்றால் சீரழிக்கப்படுவது கண்கூடு. எவ்வளவோ எடுத்துரைத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் கருத்தில் கொள்ளாமலிருப்பது ஏனென்று தெரியவில்லை. இந்தக் கொடுமைகளை எப்படித் தடுப்பதென்றும் விளங்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள ஆய்வாளர்கள்தான் இதற்கொரு முடிவுகட்டவேண்டும். மக்களுக்குக் கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றின் முக்கியத் துவத்தை விளங்க உரைப்பதுடன், எக்காரணம் கொண்டும், அவை குடமுழுக்குக் கோலாகலங்களின் பூச்சுகளுக்கும், சிதைவுகளுக்கும் ஆளாகாது காப்பாற்றிடல் வேண்டும். ஆங்காங்கே உள்ள ஆய்வமைப்புகளும் இப்பணியில் முழுமூச்சாய் ஈடுபடுவது அவசியமாகும். இன்றொரு விதி செய்யத் தவறினோமாயின், இனி எந்நாளும் கல்வெட்டுகளைக் கோயில்களில் காண்பது குதிரைக்கொம்புதான். வாருங்கள் தோழர்களே, கையிணைப்போம். இந்த நாட்டின் வரலாற்றை அழிவினின்று காப்போம்.”
வரலாற்றாய்வு மையத்தின் போற்றத்தக்க மற்றொரு கோணம், பொறியியல் வல்லுநர்களையும் கணிப்பொறி வல்லுநர்களையும் கட்டுமானத் தொழிலதிபர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் வரலாற்று மாணவர்களாக மாற்றி தமிழக வரலாறு, கல்வெட்டு, களப்பணி ஆகியவற்றில் ஆர்வம் கொள்ளச் செய்து பலரை வரலாற்று ஆய்வாளர்களாகவும் அறிஞர்களாகவும் மாற்றி வருவதே. தமிழறிஞரும் வரலாற்றறிஞருமான முனைவர் மா. இராசமாணிக்கனார் பெயரில் ஆய்வு மையம் அமைத்து தமிழக வரலாற்றிற்கு இன்றியமையாத வகையில் ஆய்வுத்தொண்டுகள் பல ஆற்றி வரும் மையத்தின் இயக்குநர் மருத்துவர் இரா. கலைக்கோவன் அவர்கள் தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார் அவர்களின் மைந்தர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
என்ற குறள் காட்டும் நெறியினைப் பின்பற்றி, தமது தந்தையாரின் வரலாற்று ஆய்வுப்பணியை முன்னெடுத்துச் செல்லும் மருத்துவர் இரா. கலைக்கோவன் அவர்களின் பணிகளை வாழ்த்திப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் பெருமை கொள்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
தொடர்புக்கு:
http://www.varalaaru.com
https://www.facebook.com/varalaarumagazine
varalaaru.editor@gmail.com
நன்றி:
படங்களும் தகவல்களும் www.varalaaru.com தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்டன.
கல்வெட்டு செய்தி, சிற்பம் படங்களை தந்துதவியவை ‘தினமணி’ மற்றும் ‘தி இந்து தமிழ்’ நாளிதழ்கள்
இந்த வார வல்லமையாளர்
வல்லமைமிகு வரலாற்றாய்வாளர் இரா. கலைக்கோவன் அவர்களுக்கு
என் மனமார்ந்த பாராட்டுகள்..
தமிழின் தொன்மையியல்
உலகிற்கு ஒளிபரவ
தமிழ் வரலாற்றாய்வாளர்களே
முன்னணியில் நிற்கிறார்கள்.
ஃபாசில்களும் கார்பன் டேட்டிங்கும்
சொல்லாத நுட்பங்கள் கூட
அந்த உளியின் ஒலியில்
இன்னும் நமக்கு கேட்கும்.
அவருக்கு மட்டுமே கேட்கும்
அந்த அதிர்வெண்கள் மூலம்
நம் செம்மொழியின்
செம்மையை உலகத்துக்குக் காட்டும்
அவர் ஒப்பற்ற பணி ஓங்குக.
அன்புடன் ருத்ரா