Featuredஇலக்கியம்கட்டுரைகள்

நூல் மதிப்புரை – தமிழ் இனி மெல்ல…

நூல் மதிப்புரை

தமிழ் இனி மெல்ல…(புதினம்)

ஆசிரியர்: திரு. மகாதேவன் (ஒரு அரிசோனன்)

தமிழ் இனி மெல்ல…’ எனும் இப்புதினத்தின் ஆசிரியர் திரு. மகாதேவன், தமிழகத்திலுள்ள காரைக்குடியில் பிறந்தவர். இளம் வயதுமுதலே தமிழின்பால் மிகுந்த ஆர்வம் கொண்டு கதைகள், கட்டுரைகள் முதலியவற்றை எழுதியிருக்கின்றார். தன் தமிழார்வத்திற்குக் காரணமே தன் தாய்வழிப்பாட்டிதான் என்று மகிழ்ச்சிப்பெருக்கோடு குறிப்பிடும் அவர், ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்த தன்பாட்டியின் தமிழிலக்கண இலக்கிய அறிவையும், ஆன்மிக அறிவையும் எண்ணி இன்றும் வியக்கின்றார். தமிழல்லாது, ஆங்கிலம், ஹிந்தி மொழிகளிலும் நல்ல புலமையுடையவர் திரு. மகாதேவன்.

சிதம்பரத்திலுள்ள, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டம்பெற்று, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (Indian Space Research Organization) ஆராய்ச்சியாளராய்ச் சிலகாலம் பணிசெய்திருக்கின்றார். அப்போது தன்னுடைய உயரதிகாரியாய், ’எளிமையின் உறைவிடமான’ மேனாள் இந்தியக் குடியரசுத்தலைவர் மாண்புமிகு திரு. அப்துல்கலாம் பணிபுரிந்ததைப் பெருமிதத்துடன் நினைவுகூருகின்றார்.

பின்பு, மேற்படிப்பிற்காக அமெரிக்கா வந்த திரு. மகாதேவன், லெக்சிங்டனிலுள்ள (Lexington), யூனிவர்சிட்டி ஆப் கெண்ட்டக்கியில் (University of Kentucky) இயந்திரப் பொறியியலில் (Mechanical Engineering) முதுகலைப்பட்டம் பெற்று (M.S), இன்டெல் நிறுவனத்திலும், பின்னர் மோட்டோரோலா நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். தன் பணிக்காலத்தில் குறைக்கடத்தி பொதிகட்டுதல் (‘Semi-conductor packaging’) ஆராய்ச்சியில் 6 சட்டக் காப்புரிமைகள் (patents) வாங்கிய சாதனையாளர் அவர் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் அரிசோனா (Arizona) மாகாணத்தில் வசித்துவரும் திரு. மகாதேவன்,   ஒரு அரிசோனன் என்ற புனைபெயரில் பல சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றைத் திண்ணை, தமிழ் இந்து, வல்லமை, இணையவெளி போன்ற இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார். தன்னுடைய முதல் புதினமான, தமிழ் இனி மெல்ல…’வை, நூலாகக் கடந்த பிப்ரவரி மாதம், சென்னையில் அறிஞர்கள் பலர் முன்னிலையில் வெகுசிறப்பாய் வெளியீடு செய்திருக்கின்றார். இப்புதினத்தை, “The Golden Scroll” [Story of a language and its people] எனும் பெயரில் ஆங்கிலத்திலும் வெளியிட்டிருக்கிறார் என்பதை வாசகர்களுக்கு மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றேன்.

தமிழ் இனி மெல்ல…’ புதினத்திற்குள் இனி மெல்ல நுழைவோமா?

திராவிடக் குடும்பத்தின் மூத்த மொழியும், இலக்கிய இலக்கண வளமும்,tamil ini mella1 - Copy பிறமொழிகளின் சார்பின்றித் தனித்தியங்கும் திறனும் பெற்ற செம்மொழியான நம் தமிழ்மொழியின் நிலை இன்னும் 400 ஆண்டுகளுக்குப் பின் (25-ஆம் நூற்றாண்டில்) எவ்வாறிருக்கும் என்பதைத் தொலைநோக்குப் பார்வையுடன் கணித்து நம் சிந்தனைக்கு விருந்தாய்ச் சுவைநிறைந்த புதினமாய்த் ’தமிழ் இனி மெல்ல…’வை ஒளிரச் செய்திருக்கின்றார் ’ஒரு அரிசோனன்’.

பள்ளி, கல்லூரிகளில் தமிழ்வழிக்கல்வி என்பதே (இன்றைய) தமிழகத்தில் அருகிவருவதை நாமறிவோம். வருங்காலத்தில் இந்நிலை மேலும் சீர்கேடடையலாம்; தமிழ் பயிற்றுவிப்பதற்கும் பயில்வதற்கும்கூட ஆட்கள் இல்லாத நிலை உருவாகலாம். அதன் விளைவாய் நம் அன்னைத்தமிழ் வலுவிழந்து பொலிவிழந்து, (அங்குமிங்குமாய்) ஒருசிலரே பயன்படுத்தும் கூற்றுமொழியாகிவிடலாம் (dialect) என்றும், தமிழின் இடத்தை (தமிழக மக்களின் அமோக ஆதரவுடன் கோலோச்சும்) ஆங்கிலமும், பாரதத்தின் செல்வாக்குமிக்க மொழியான இந்தியும் எடுத்துக்கொண்டு தமிழுக்கே அவை ’கூற்று’ (எமன்) மொழிகளாகிவிடக்கூடும் எனும் எச்சரிக்கை மணியை இப்புதினத்தின் மூலம் ஓங்கி ஒலித்திருக்கின்றார் ஆசிரியர்.

இரண்டு பாகங்களைக் கொண்ட இப்புதினத்தின் முதல் பாகம் 2411-ஆம் ஆண்டின் தமிழகத்தைக் கதைக்களமாகக் கொண்டிருக்கின்றது. (ஆசிரியரின் அனுமானப்படி) அப்போது தமிழகத்தில் தமிழைப் பேச்சுமொழியாக மட்டுமே அறிந்திருப்போர், ’எடுபிடிகளாய்’ உரிமைகள் ஏதுமற்ற கீழ்நிலையிலும், ஆங்கிலம், இந்தி ஆகியவற்றில் புலமைபெற்றோர் பதவிகளிலும் அதிகாரங்களிலும் மேம்பட்டு, எடுபிடிகளை அடிமைகளாய் நடத்தும் உரிமைக் குடிமக்களாயும்’ இருப்பர்.

பணம் படைத்தவன் ’ஆண்டான்’; ஏழையாய்ப் பிறந்தவன் ’அடிமை’ எனும் இன்றைய நிலைமாறி, ஆங்கிலமும் இந்தியும் அறிந்தவன் ஆண்டான்; தமிழ் மட்டும் அறிந்தவன் ’உரிமைகளற்ற’ அடிமை எனும் நிலையைக் கற்பனை செய்யும்போதே நெஞ்சு ‘பகீர்’ என்கிறது. அப்படியோர் இழிநிலை நம் தமிழுக்கு வந்துவிடுவோமோ? எனும் பதற்றமும், அச்சமும் புதினத்தைப் படிக்கும் நமக்கு ஏற்படுகின்றது.

இனி, கதை மாந்தர்களைச் சந்தித்து வருவோம்!

சென்னையிலிருக்கும் சீன நிறுவனமொன்றில் பெரிய பொறுப்பிலிருக்கும் ’உரிமைக் குடிமக்கள்’ பிரிவைச் சேர்ந்த ஷிஃபாலி எனும் பெண்மணி, அவளுடைய அருமை மகளும், கல்லூரி மாணவியுமான நிமிஷா, அவர்கள் வீட்டில் எடுபிடிகளாக வேலைசெய்யும் தமிழ்மட்டுமே அறிந்த காமாட்சி, அவளுடைய தம்பியான சிறுவன் ஏகாம்பரநாதன் ஆகியோரை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். ஒருவர் மொழியை ஒருவர் அறிந்துகொள்ள இயலாத அச்சூழ்நிலையின் சிரமத்தைப் போக்குவதற்கு மொழிமாற்றுக்கருவி (translator) உதவுகின்றது.

25-ஆம் நூற்றாண்டில், தமிழ்நாடு ’தக்கன்கண்ட்’ என்றும், சென்னை ’ஷெனாய்’ என்றும், தஞ்சை ’தஞ்ஜூ’ என்றும், கொடைக்கானல் ’கோட்கல்’ என்றும், காரைக்குடி ’காரைகுட்’ என்றும் நவீனப் பெயர்களுடன் திகழும் எனப் புதினம் உரைப்பது, ஊரின் பெயர்களில்கூடத் தமிழில்லாது போய்விடும் அவலநிலையை நமக்கு நன்கு உணர்த்துகின்றது.

முப்பரிமாண அலைவரிசைகள், ஹோலோகிராம்கள் எனத் தொழில்நுட்பங்கள் உச்சத்தைத் தொட்டிருக்கும் எதிர்காலச்சூழலில், மக்கள் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதெல்லாம் நின்றுபோய்க் கடவுளரை வீட்டு வரவேற்பறையிலேயே (தொலைக்காட்சிகள் வாயிலாய்த்) தரிசிக்கத் தொடங்கிவிடுகின்றனர். அதனால் வழிபாட்டுத்தலங்களெல்லாம் வெறும் சுற்றுலாத்தலங்களாக மாறிவிட்டிருக்கின்றன.

இவ்வாறு, புதுமையான உத்திகளோடு நகரும் கதையில், தன் தாய் ஷிஃபாலியை வேலை நிமித்தமாய்ச் சீனாவுக்கு வழியனுப்புவதற்காகத் தஞ்ஜூவிலுள்ள ஹோட்டல் ராஜ்ராஜில் தங்கியிருக்கின்றனர் நிமிஷா, காமாட்சி, மற்றும் ஏகாம்பரநாதன். தான் சீனாவிலிருக்கும்போது தன் மகளைக் கண்ணுங்கருத்துமாய்க் கவனித்துக்கொள்ளவும், வீட்டைப் பாதுகாக்கவும், ’அழகேசன்’ எனும் எடுபிடிப் பிரிவைச் சேர்ந்த மல்யுத்தவீரன் ஒருவனை நியமிக்கிறாள் ஷிஃபாலி. தஞ்ஜூ பெரிய கோயிலில் பணியாளனாய் வேலைசெய்துவரும் மற்றொரு எடுபிடியான ’ஈஸ்வரன்’, சுயமுயற்சியால் இந்தி பேசக் கற்றுக்கொண்டிருப்பதால் ஷிஃபாலியின் கருணைக்குப் பாத்திரமாகி, அவள் தயவால் சமீபத்தில் இழந்த தன் பணியை மீண்டும் பெற்றிருக்கிறான்.

விமானநிலையத்தில் ஷிஃபாலிக்கு விடைகொடுத்துவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பும் நிமிஷா, காமாட்சி, ஏகாம்பரநாதன் ஆகியோர், தம் வாழ்வில் என்றும்காணாத (விண்வெளிசார்) அதிசய நிகழ்வொன்றைச் சந்திக்கின்றனர். அதன் விளைவாய் மின்சாரம், தொலைபேசி, அலைபேசி, விமான சேவை, வாகனப் போக்குவரத்து என அனைத்தும் முடங்கிவிட, மீண்டும் அவர்கள் 18-ஆம் நூற்றாண்டுக்கே (வாழ்க்கை வசதிகளின் அடிப்படையில்) சென்றுவிடக் காண்கிறோம்.

மக்களின் அன்றாட வாழ்க்கைமுறையையே புரட்டிப்போட்டுவிட்ட அவ்வரிய நிகழ்வையும், அதன் பின்னணியிலான வானியல் காரணிகளையும் புதினத்தில் மிக நேர்த்தியாக விளக்கித் தானொரு சிறந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் என்பதை நிரூபித்துள்ளார் ’ஒரு அரிசோனன்’.

தங்களுடைய வாழ்க்கை வசதிகளனைத்தையும் ஓரிரவில் தொலைத்துவிட்ட நிமிஷா, காமாட்சி, ஏகாம்பரநாதன் முதலியோர் ஈஸ்வரனின் சொந்தஊரான ஒரு கிராமத்திற்குச் சென்று தங்கள் வாழ்க்கைப்பயணத்தைத் தொடருகின்றனர். ஒருநாள், அக்கிராமத்திற்கு அருகிலிருக்கும் கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயிலில் ஈஸ்வரன், அழகேசன், ஏகாம்பரநாதன் மூவரும் இறைவனை வழிபட்டுக்கொண்டிருக்க, அப்போது அங்கே திடீர் நிலநடுக்கமேற்பட்டு, ஓர் அரிய பொன்ஓலைச்சுருள் எதிர்பாராமல் அவர்கள் கைகளுக்குக் கிடைக்கின்றது.

அதில் என்ன எழுதியிருக்கிறது எனும் ஆவல் அதைப் படிக்கும் ஈஸ்வரனுக்கு மட்டுமல்ல…புதினத்தைப் படிக்கும் நமக்கும் ஏற்படும் வண்ணம் பரபரப்பாய்ப் புதினத்தின் முதல் பாகத்தை நிறைவுசெய்து, நம் கேள்விக்கான விடையை இரண்டாம் பாகத்தில் ஒளித்து வைத்திருக்கின்றார் ஆசிரியர்.

’சயின்ஸ் ஃபிக்‌ஷன்’ என்று சொல்லக்கூடிய விதத்தில் 25-ஆம் நூற்றாண்டின் ’அல்ட்ரா மாடர்ன்’ தமிழகத்தை முதல் பாகத்தில் நம் கண்முன் நிறுத்திய புதினம், இரண்டாம் பாகத்தில் பல நூற்றாண்டுகள் நம்மைப் பின்னோக்கிப் பயணிக்கவைத்து, கி.பி. பத்து மற்றும் பதினோராம் நூற்றாண்டுத் தமிழத்திற்கு அழைத்துச்சென்று, தமிழகத்தின் மாமன்னர் இராஜராஜரின் பொற்கால ஆட்சியைக் காணும் நல்வாய்ப்பை நமக்கு நல்கியிருக்கின்றது.

இராஜராஜரின் வீரம், தமிழார்வம், மதிநுட்பம் போன்ற குணங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? அவ்வேங்கையின் மைந்தரான முதலாம் இராஜேந்திரரும் தந்தையை ஒத்த பெருவீரராய்த் திகழ்கின்றார்!

இரண்டாம் பாகத்தில், அடுத்து குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்கள் இராஜராஜரின் ஆசிரியரான கருவூர்த்தேவர், தேவரின் மாணவரும், உறவினருமான சிவசங்கர சிவாசாரியார் இருவரும். எளிமை, புத்திக்கூர்மை, தீர்க்கதரிசனம் முதலிய அபூர்வ குணங்கள் நிரம்பப்பெற்ற கருவூரார், சோழநாட்டிற்குச் சிறந்ததோர் ஆலோசகராய்த் திகழ்கின்றார். தமிழ்மீது அளவிறந்த பற்றுக்கொண்ட அவர், தமிழைச் சோழ நாடெங்கும் பரப்பவேண்டும் என்னும் வேணவா கொண்டு இராஜராஜரை வழிநடத்துகின்றார்.

சிவசங்கர சிவாசாரியாரே இரண்டாம் பாகத்தின் நாயகன் என்று சொல்லுமளவிற்கு அப்பாத்திரத்தை நுட்பத்தோடு திறம்படச் செதுக்கியிருக்கின்றார் ஆசிரியர். சிவன்கோயிலில் பூசைசெய்யும் சிவாசாரியாராக வரும் அந்த இளைஞர், அறியாத கலைகளில்லை எனும்படிச் சகலகலாவல்லவராய்த் திகழ்கின்றார். முக்கியமான போர் ஒன்றை வழிநடத்திச்செல்லும் அவர், தம் புதிய உத்திகளால் எதிரிகளை உதிரிகளாக்கி, இராஜராஜரிடம் பாராட்டுப்பெறுவதை நாமே நேரில் நின்று காண்பதுபோல் வெகுசிறப்பாக விவரித்துள்ள ஆசிரியருக்கு என் பாராட்டுக்கள்! விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத வகையில் கதை சாதுரியமாய் நகர்த்தப்பட்டிருக்கின்றது. முதல் பாகத்தின் கதாபாத்திரங்களை இரண்டாம் பாகத்தின் பாத்திரங்களோடு ஆசிரியர் அழகாக இணைத்துக்காட்டியிருப்பது இரசிக்கத்தக்கது.

முதலாம் இராஜேந்திரர் முடிசூட்டிக்கொள்ளும் அரிய காட்சியைக் காணும் வாய்ப்பையும் கதை நமக்கு அளித்திருக்கின்றது. ஆயினும் இராஜராஜர் (கருவூராரின் விருப்பத்தின்படித்) தொடங்கிய தமிழ்ப்பணிகள் என்னவாயின? இராஜராஜருக்குப்பின் இராஜேந்திரர் அவற்றை ஆர்வத்தோடு தொடர்ந்தாரா? போன்ற  வினாக்கள் நம்மிடம் குறுகுறுக்கின்றன.

அதுபோல், முதல்பாகத்தில் ஈஸ்வரன் பொன்ஓலைச்சுருளை படித்துக்கொண்டிருக்கும்போது நாம் அவனிடம் விடைபெற்றுக்கொண்டு வந்தோமல்லவா? அவ்வோலையின் மூலம் தமிழர்களின் பண்டைச்சிறப்பைப் படித்தறிந்த ஈஸ்வரன், நிமிஷா உள்ளிட்டோர் அதன்பின் எவ்வாறு நடந்துகொண்டனர் எனும் கேள்வியும் பிறக்கின்றது.

நம் உள்ளத்து வினாக்களை ஊகித்தறிந்த ஆசிரியர், ”உங்கள் வினாக்கள் அனைத்திற்குமான விடைகளைத் தாங்கிப் புதினத்தின் மூன்றாம், நான்காம் பாகங்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றன; அவற்றையும் படித்து மகிழுங்கள்!” என்று முறுவலோடு பதிலிறுக்கின்றார்.

நண்பர்களே! தாய்த்தமிழைக் காக்க உடனடியாக நாம் செய்யவேண்டிய கடமைகளைப் பொட்டில் அடித்ததுபோல் இப்புதினம் நமக்கு உணர்த்திச் செல்கின்றது. நம்முடைய அதீத ஆங்கில மோகம் நம்மை எங்கு கொண்டுபோய் விடுமோ? எனும் தமிழார்வலர்களின் உள்ளக் குரலையே இப்புதினம் எதிரொலிப்பதாய் உணர்கின்றேன்.

மிடுக்கான எழுத்துநடை, கதைச் சம்பவங்களைக் கச்சிதமாய்க் கோத்திருக்கும் பாங்கு ஆகியவற்றைக் காணும்போது ஆசிரியரின் தேர்ந்த எழுத்துவன்மை தெற்றெனப் புலனாகின்றது.

ஆங்கில மோகத்தால் மழுங்கிவரும் நம் தமிழுணர்ச்சியைக் கூர்தீட்டிக்கொள்ள, இதுபோன்ற புதினங்களை நாம் படிக்கவேண்டியது அவசியம். எனவே, ’தமிழ் இனி மெல்ல…’ எனும் இப்புதினத்தை விரைவாகவே வாங்கிப் படிப்போம்! தாய்த்தமிழை அழிவுப் பாதையிலிருந்து மீட்டெடுக்க உறுதி கொள்வோம்!

காலத்தின் தேவையறிந்து சிறந்த புதினத்தைப் படைத்தளித்திருக்கும் ஆசிரியர் ஒரு அரிசோனனைப் பாராட்டி, இதுபோல் மேலும் பல ஆக்கங்களைத் துடிப்புடன் அவர் நல்கிட வேண்டும் என்று வாழ்த்துவோமாக!

புதினத்தை வாங்க விரும்புவோர் ஆசிரியரை அவருடைய மின்னஞ்சலில் தொடர்பு கொள்க!

ஆசிரியரின் மின்னஞ்சல் முகவரி: oruarizonan@gmail.com

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க