-மலர் சபா

மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

கவுந்தி அடிகள் மாதரியிடம் கண்ணகியைப் போற்றும் வகை கூறி உரைத்தல்

“மங்கலம் வாய்க்கப்பெற்ற
இம்மங்கையைத்
தூய நீரினால் நீராட்டி,
சிவந்த கயல் போன்ற கண்களில்
அஞ்சனம் தீட்டி,
மணம்மிக்க இவள் கூந்தலில்
சில மலர்களைச் சூட்டி,
தூய புடவை உடுத்தி,
முன்னோர் கூறிய சிறப்பனைத்தும் வாய்ந்த
தோழியாகவும், செவிலியாகவும்,
தாயும் ஆகி இவளைக் காப்பாயாக!

இங்கே என்னோடு தங்கியிருந்த
இந்த இளைய கொடி போன்ற நங்கையின்
அழகுவாய்ந்த சிறு பாதங்களின் அடிகளை
மண்மகளும் கண்டாள் இல்லை
சூரியனின் கடுமையான கதிர்களின் வெப்பத்தால்
துன்புற்று வாடிய தன் கணவன் துயர்கண்டு
நடுங்கி வருந்தியிருக்கிறாள் இவள்;
அது தவிரத் தன் நாவே உலர்ந்து போகும்படித்
தான் வாடியதை ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை

தன் கணவனுக்கு இனிய மனைவியாய் விளங்கும்
பெண்கள் தமக்கு இன்றியமையாததாக விளங்கும்
கற்பு நெறி தன்னை அணியாகப் பூண்டுள்ள
இவள் சிறப்புமிக்கப் பெண்தெய்வம்!
இவளைத் தவிர சிறப்புமிக்க
வேறோர் பெண்தெய்வத்தை நான் கண்டதில்லை

இத்தகைய கற்பிற் சிறந்த
பெண்கள் வாழும் நாட்டில்
வானம் பொய்க்காது;
நிலத்தின் வளமும் குன்றாது;
நீண்ட நிலமதை ஆள்கின்ற
அரசர் தம் கொற்றமும் சிதையாது;
இத்தகைய நல்வாக்குகளை
நீ கேட்டதில்லையோ?” எனக்
கவுந்தி அடிகள் மாதரியிடம் கூறினார்.

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 131 – 148
http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
<http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–>
pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–
<http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–>

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *