Blog

  • சிகரம் நோக்கி … (5)

    சுரேஜமீ

    peak11

    வந்த நாள் முதல் இந்த நாள் வரை
    வானம் மாறவில்லை; வான்
    மதியும் மீனும் கடல் காற்றும்
    மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
    நதியும் மாறவில்லை!

    மனிதன் மாறிவிட்டான்!! – கண்ணதாசன்

    கவிஞனின் சிந்தனைத் தெளிவு, கற்றவர் அறிந்திட்டால், வாழும் மண்ணே சொர்க்கம் எனலாம். அறிய மறுக்கிறோமா அல்ல தன் தேவை எதுவரினும், தரணியைக் கெடுத்தேனும் பெற்றிட எண்ணும் அறியாமை நிழல் நம்மைத் தடுக்கிறதா? விடை சொல்ல மறுக்கும் ஒவ்வொரு கணமும், இப்புவியில் ஏதேனும் ஓரிடத்தில் ஒரு சீற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

    இதுவரை நாம்

    சென்ற கட்டுரையின் தொடர்ச்சியாக, இப்புவியின் இருப்பைக் கெடுக்கும் இயற்கையின் தலையாய பிரச்சினைகளைப் பட்டியலிட்டு அலசுவதில், முதல் நான்கு நிலைகளாக,

    1. மக்கள் தொகை
    2. காலநிலை மாறுபாடுகள்
    3. பல்லுயிர்ப் பெருக்கங்களின் இழப்புகள்
    4. வேதிப்பொருட்களின் சுழற்சி

    பற்றி சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டோம். மற்ற காரணிகளைப் பற்றி சுருக்கமாக இந்தக் கட்டுரையில், உங்கள் சிந்தனைக்குச் சில செய்திகளை இட்டுச் செல்ல விரும்புகிறேன்.

    5. தண்ணீரின் தேவை

    இந்த உலகம் மூன்றில் ஒரு பங்கு நீரால் சூழப்பட்டு இருந்தாலும், மக்களுக்குத் தேவையான சுத்தமான அல்லது சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரின் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒன்றும் வியப்பான செய்தி அல்ல. உலக ஆராய்ச்சி வல்லுநர்கள் விடுக்கும் எச்சரிக்கை என்ன தெரியுமா? உலக மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை என்பதும், இதே நிலை நீடித்தால், மிகக் கடுமையான விளைவுகளைச் சந்தித்து, மூன்றில் இரண்டு பங்கு மக்கள் குடிநீருக்காக தன்னை வருத்தும் நிலையும், அது சார்ந்த சமூகக் குற்றங்களும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

    நண்பர்களே, இது ஏதோ படித்துவிட்டு நகர்ந்து செல்லக் கூடிய செய்தி அல்ல! சற்று யோசியுங்கள். என்றாவது எதிர்பார்த்து இருப்போமா நாம் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் காலத்தை? உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? வளைகுடா நாடுகளில் குடிநீரின் விலை திரவ எரிபொருளை விட (Petrol) அதிகம் என்பது!

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவன் ஒரு குறளில் தண்ணீரின் இன்றியமையாமையை இப்படிக் கூறுகிறான்!

    துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை!

    விவசாயிகள் உணவுப் பொருள் உற்பத்தி செய்வதற்காக மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஒரு நல்ல உணவாகவும் பயன்படுகிறது வான் மழை என்று சொன்னால், அதை நாம் சிறப்பாகச் சேமிக்க வேண்டாமா? இதன் உட்பொருளே, நாம் நீரைச் சேமிக்க வேண்டும் என்பதுதான்!

    வான்மழை நமக்கு மட்டுமல்ல! புவியில் உருவாகும் அனைத்து உயிரினங்கள் மற்றும் தாவரங்களுக்கும் இன்றியமையாதது என்று சொன்னால், நாம் இனி ஒரு கணம் கூட மரங்களை வெட்டுவதற்கும்,, நீர்நிலைகளை மூடுவதற்கும், இயற்கையை அழிப்பதற்கும் அனுமதிக்கக் கூடாது என முடிவெடுத்து, குறைந்த பட்சம், இருக்கும் இயறகையைக் காப்பாற்றி, நீரின் அவசியத்தையும், அதை எப்படிச் சேமிப்பது என்பதோடு மட்டும் நின்று விடாமல், உபயோகிக்கப் பட்ட கழிவு நீரைக்கூட, தாவரங்களுக்குச் சென்றடையும் வகையில் செய்யவேண்டும்.

    முடிந்த வரை ஒவ்வொரு மனிதனும், எங்கெங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் மரம் நட்டு, பாதுகாத்து, வான்மழை செழிக்க வகை செய்ய வேண்டும்!

    6. கடல்நீர் அமிலமயமாதல்

    அபரிமிதமான தொழிற்சாலைகளின் வளர்ச்சியும், அதன் விளைவாக வெளியாகும் கரியமில வாயுவின் அதிகப்படியான உற்பத்தியும், கடல்வாழ் உயிரினங்களைக் கிட்டத்தட்ட அதன் அரிச்சுவடு கூட இல்லாமல், அழித்திடும் நிலையை உருவாக்கி இருக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு இணையாக அதன் தேவைகளை நிறைவு செய்வதற்கு, தொழிற்சாலைகள் தேவை என்பதில் இரு கருத்து இல்லை. ஆனால், அவைகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் பற்றிய அறிவுபூர்வமான சிந்தனை தேவை என்பதையும் நாம் அறிய வேண்டும்.

    குறிப்பாக, கரியமில வாயுவின் 25% கடலில் கலப்பதாகவும், அதன் காரணமாக ஏற்படும் அமிலங்கள், கடந்த 250 வருடங்களில் சுமார் 30% கடற்பரப்பில் அமிலத் தன்மையை உருவாக்கி இருக்கிறதென்றும், இன்னும் நூறு வருடங்களில், இது ஐந்து மடங்கு அதிகரிக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    7. மாசு படிதல் (Pollution)

    ஒரு நல்ல வெள்ளை நிறக் கைக்குட்டையைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டுக்கு அருகில் இருக்கும் சாலையில், ஒரு இரண்டு நிமிடம் நடந்து செல்லுங்கள். அதன்பின்னர், உங்கள் முகத்தைக் கைக்குட்டையால் துடையுங்கள். இப்போது, கைக்குட்டையின் நிறத்தைப் பாருங்கள். என்ன புரிகிறதா? நிறம் மாறி இருக்கிறதா? இந்த நிறம் மாற்றத்திற்கான காரணத்தை என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? எதைக் கொடுத்தாவது, நம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற கட்டாயம், நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து, குடிக்கும் நீர் வரை இந்த அண்டத்தை மாசு படித்தியிருக்கிறதென்றால், அதற்கு முழுக்காரணமும்; நம் நவீன வாழ்க்கை முறைதான் என்றால் நீங்கள் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். நாம் உபயோகப்படுத்தும் வீட்டு சாதனங்கள் தொடங்கி, வாகனத்திற்கு உபயோகிக்கும் திரவ எரிபொருட்கள், கனரக தாதுக்கள், நெகிழிப் பொருட்கள் மற்றும் செயற்கை இழைபொருட்கள், நம் சுற்றுச் சூழலில், அளவுக்கதிகமான நச்சுத்தன்மையை ஏற்படுத்தி, நம் வாழ்விற்கு சவாலாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இயற்கை வளத்தையும் அழிக்கிறது.

    என்றைக்கு மனதளவில் நாம் தெளிந்த சிந்தனையோடு, இயற்கையின் வரத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறோமோ, அன்றுதான் நம்மால், ஒரு சுகாதாரமான, இயற்கையோடு ஒன்றிய வாழ்விற்கு, நம்மைத் தயார்படுத்தி, மனித வாழ்வின் பயனை நுகரமுடியும் என்பதை நாம் உணரவேண்டும்.

    நண்பர்களே நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், நமக்கோ இயற்கைக்கோ ஊறு நேராமல் இருந்தால், அதுதான், இந்த உலகிற்கு நாம் செய்யும் ஒப்பற்ற உதவி என்பதோடு மட்டுமல்ல, வளரும் சமுதாயத்திற்கு நாம் காட்டும் வழி என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது! இயற்கைப் பிரச்சினைகளைப் பற்றிய இந்த சிந்தனைகள், எவ்வளவு உணர்ச்சி பூர்வமானவை என்பதை நான் அறிவேன்.

    இணைந்த கைகளாக இருப்போமேயானால், இந்த பூமி நம்மை வாழ்த்தும்!

    தொடர்ந்து சிந்திப்போம்…..சிகரம் நோக்கி!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”சுந்தரி மாடுடன், சுந்தரன் கோகுலன்
    எந்திரிப்பான் நித்தம் எழுங்காலை: -தந்திடுவான்
    வைக்கோலாய் மாடுண்ண, வாய்க்குப் பதமருள்வான்:
    மைக்கேல் மதனகாம ராஜ்”….கிரேசி மோகன்….

    Share
  • சாஹித்ய அகாடமி

    கிரேசி மோகன்

     

    crazy1

     

    crazy

     

     

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி: ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக் கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே

     

    ஒட்டிய காதல் உமையாள் ஒருபாலாக்
    கட்டங்கம் வெல்கொடி கொண்டானும் கொண்டானே
    விட்டாங் ககலா முழுமெய்யும் கொள்பவே
    நட்டாரை ஒட்டி யுழி

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    ஒட்டிய காதல் உமையாள் ஒரு பாலா
    கட்டங்கம் வெல் கொடி கொண்டானும் கொண்டானே
    விட்டு ஆங்கு அகலா முழு மெய்யும் கொள்பவே
    நட்டாரை ஒட்டியுழி

    பொருள் விளக்கம்:
    மனமொத்த அன்பு கொண்ட உமையவளை தன்னுடைய ஒரு பகுதியாக, கட்வங்கத்தடி கொண்டு பகையழித்து வெற்றிக்கொடி நாட்டும் சிவனும் கொண்டான். (அதுபோல,) தனது உடலை விட்டு நீங்காது உடலுடன் முற்றுமாக இணைந்துவிட்டவரைப் போன்றே தனது நட்புக்குரியவரைக் கருதி அன்புடையவர் நட்பு பாராட்டுவர்.

    பழமொழி சொல்லும் பாடம்: அன்புடையவரின் நட்பின் திறமானது, தான் வேறு நண்பர் வேறென்ற எண்ணம் இல்லாததாக, நண்பரது வாழ்வின் இன்பதுன்பங்களை தன்னுடையதாகவேக் கருதும் சிறந்த நட்பாக இருக்கும்.

    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு (குறள்: 788)

    நழுவும் ஆடையைத் தடுத்து மானம் காக்க உதவும் கை போல, நண்பருக்கு வந்த துன்பத்தை தனதாகக் கருதி உதவச் செல்வதே நட்பென வள்ளுவர் கூறிய நட்பின் திறம் இப்பழமொழி கூறும் கருத்துடன் பொருந்துகின்றது.

     

     

    Share
  • புறநானூற்றில் பொருள்வேறுபாடு!

    — புலவர் இரா. இராமமூர்த்தி.

     

    சங்ககால இலக்கியங்களுள் அறிஞர் பலரின் உள்ளம் கவர்ந்த பாடல் ஒன்று உண்டு! அது வாகைத்திணையின், துறையாகிய ‘மூதின் முல்லை’ யைச் சார்ந்தது! புறநானூற்றின் 191, 279, 288, 306, 308, 312 ஆகிய எண்ணுடைய பாடல்கள் , மூதின்முல்லை என்ற துறையைச் சார்ந்தவை! இவற்றுள் 279-ஆம் பாடலில் பழங்குடியில் பிறந்த பெண்ணின் வீரம் மிக்க பேருள்ளம் வெளிப் படுகிறது!

    அந்தப் பாடலில் பலநாள் நடைபெற்ற ஒரு போரைப் பற்றிய நிகழ்வுகள் குறிக்கப் பெற்றுள்ளன! அனைவரும் அறிந்து போற்றிய பாடல்தான் அது! இப்பாடலை, அக்காலச் சான்றோர்கள், பாண்டித்துரைத் தேவர், மு. இராகவையங்கார், வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதி போன்றோர் மிகவும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். அப்பாடலின் சிறப்பை உணர்ந்த ஐயனாரிதனார் தம் புறப்பொருள் வெண்பா மாலையில்,

    ”வந்த படைநோனாள் வாயின் முலை பறித்து
    வெந்திற லெஃக மிறைக் கொளீஇ – முந்தை
    முதல்வர்கல் தான்காட்டி மூதின் மடவாள்
    புதல்வனைச் செல்கென்றாள் போர்க்கு! ” (பு.வெ.மா.175)

    என்று மூதின்முல்லைத் துறைக்கு இலக்கணம் வரைந்துள்ளார்! இதனைத் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் வெட்சித் திணைத் துறைகளுள் ‘மறங்கடை கூட்டிய மகளிர் நிலை கூறியதற்கும், ‘வாள்வாய்த்துக் கவிழ்தல் என்பதற்கும் மேற்கோள் – என்று குறித்துள்ளார்!

    tamil-sangam-war

    அப்புகழ் பெற்ற பாடல்:-
    பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார்
    திணை: வாகை துறை: மூதின் முல்லை

    கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே;
    மூதின் மகளிர் ஆதல் தகுமே;
    மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
    யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே;
    நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன், 5
    பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;
    இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
    வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,
    பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
    ஒருமகன் அல்லது இல்லோள், 10
    செருமுக நோக்கிச் செல்க என விடுமே!

    இப்பாடலுக்கு பழங்காலத்தில் புறநானூற்று உரையாசிரியர் ஒருவகைப் பொருள் உரைத்தனர்! டாக்டர். உ.வே. சா. பதிப்பில், ‘மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை யானை எறிந்து, காலத்து ஒழிந்தனனே” என்ற தொடருக்கு, ‘நேற்றைய முன் நாள் நடந்த போருக்குச் சென்ற இவள் தமையன், யானையுடன் போராடிப் போர்க்களத்தில் மாண்டனன்’ என்ற பொருள் உள்ளது! அடுத்து, ‘நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன், பெருநிரை விலக்கி, ஆண்டுப் பட்டனனே ‘ என்ற தொடருக்கு , ”நேற்று நடந்த போரில் இவள் கணவன் பெரிய குதிரைப்படைகளை விலகியோடச் செய்து, அப்போர்க்களத்திலேயே உயிரிழந்தான்”என்ற பொருள் உள்ளது! ‘

    அடுத்த பாடலடிகளுக்கு – ‘தன் அண்ணனையும் கணவனையும் இழந்த அப்பெண், இன்றும் போர்ப்பறை ஒலிப்பதைக் கேட்டாள்! மிகவும் விருப்பம் கொண்டாள்! போர்க்களத்துக்கு யாரை அனுப்புவது? என்றெண்ணி மயங்கினாள்! தனக்காதரவாகத் தான் பெற்ற ஒரேஒரு மகன்மட்டுமே உள்ளான் என்பதையும் எண்ணி மயங்கினாள்! அந்தச் சிறுமகனையும் எண்ணெய் பூசித் தலைவாரி, வெள்ளைநிற ஆடை அணிவித்து, வேலைக் கையில் கொடுத்துப் ”போர்முனை நோக்கிப் போ” என்று கூறினாளாம் என்னே அவள் வீரம்!

    அக்காலப் பெண்டிர் திருமணம் ஆனபின் கணவனுடன் அவன் இல்லத்தில்தான் வாழ்வாள் என்பதற்க்குச் சங்க இலக்கியங்களில் ஆதாரங்கள் பல உள்ளன! பிறந்த வீட்டில் பொற்கிண்ணத்தில், பாற்சோறு பிசைந்து ஊட்டும் செவிலியைப் புறக்கணித்து, பொற்சிலம்பு கலகலக்க ஓடோடிச் சென்று அவள் பெற்றோரின் ஏவல்களை மறுத்து விளையாடிய சிறுவிளையாட்டி அவள்! செல்வவளம் மிக்க வீட்டில் பிறந்த அப்பெண், திருமணம் ஆனா பிறகு தன் புகுந்த வீட்டில் எவ்வாறு வாழ்கிறாள் என்று பார்த்து வருமாறு செவிலித்தாயைப் பெற்றதாய் அனுப்புகிறாள்! அவளோ, பெண்ணின் புகுந்த வீட்டில் அப்பெண் குடும்பம் நடத்தும் சிறப்பைப் பெரிதும் பாராட்டுகிறாள். கணவனின் குடும்பத்தின் வறுமையை ஏற்றுக்கொண்டு, தன் பிறந்த வீட்டின் செல்வவளத்தைச் சிறிதும் கருதாமல் ஒருவேளை பட்டினியும், மறு வேளை சிறிதே உணவும் உண்டு வறுமையை ஏற்று வாழும் மெல்லிய மன வலிமையை உடையவளாய் அன்பும், இன்பமும் பொங்கும் இன்முகத்துடன் வாழ்கிறாள்!’

    இது நற்றிணையில் அமைந்த”பிரசங்கலந்த” எனத்தொடங்கும் 110-ஆம் பாடலின் பொருள். இப்பாடலில் செவிலி ,
    ”ஏவல் மறுக்கும் சிறுவிளையாட்டி
    அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள் கொல்?” என்று வியந்து போகிறாள்!

    ”கொண்ட கணவன் குடி வறனுற்றெனக்
    கொடுத்ததந்தை கொழுஞ்சோ றுன்னாள்,
    ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
    பொழுதுமறுத் துண்ணும் சிறு மதுகையளே!”
    என்ற செவிலியின் கூற்றில் பெண்மனத்தின் திண்மை பெரிதும் பாராட்டப் படுகிறது! இதனால் திருமணம் ஆனபின்னர் எல்லாப் பெண்டிரும் புகுந்த வீட்டிலேதான் வாழ்ந்தனர் என்பது புலனாகின்றது. புகுந்த வீட்டில் மாமனார், மைத்துனர், கணவன் , மகன் என்ற ஆண் உறவினர்கள் மட்டுமே இருப்பார். மகனைப் பெற்ற தாயின் இல்லத்தில் போருக்குச் செல்லும் ஆடவர்கள் மாமனார், கணவனின் தமையன், கணவன், மகன் ஆகியோரே யாவர்!

    ஆதலால், இப்புறநானூற்றுப் பாடலில் ” மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை ” என்ற தொடரில் தன்னை என்பது, அவள் மாமனார், அல்லது கணவனுக்கு அண்ணனையே குறிக்கும் ஆதலால் இவள் தந்தை என்பதும், அண்ணன் என்பதும் நடை முறைக்குப் பொருந்தாத பொருளாகும் ஆகவே இவள் தன்னை என்பது மாமனாரையே குறிக்கும் அடுத்து இவள் கொழுநன் என்பது இவள் கணவனைக் குறிக்கும் என்பது பொருத்தமே. இவளை, ஆண் துணையாக ஒருமகன் அல்லது இல்லோள் என்று ஒக்கூர் மாசத்தியார் பாடுகிறார். இவள் அந்த ஒரும் சிறு மகனையும் போர்க்களம் நோக்கிச் செல்க என அனுப்புவதால் , இவள் பண்டைய வீரக்குடிவழிவந்த பெண் என்பதைக் குறிக்கிறது . இதனையே மாசாத்தியார், ”மூதின் மகளிர் ஆதல் தகுமே !” என்று பாராட்டுகிறார்!

    இதனால் பிறந்தவீடும் புகுந்த வீடும் வீரம் மிக்க பெண்களைப் பெற்றவை என்பது மரபின் சிறப்பைப் புலப்படுத்துகிறது! இப்பாடலுக்குப் பொருள் கொண்டவர்கள் சற்றே மாறுபட்ட பொருள் கூறினர் என்பதை ஆய்ந்து பார்த்தால் புலனாகும்!

     

     

     

     

    திருச்சி புலவர் இராமமூர்த்தி
    ஆலந்தூர், சென்னை 600 016

     

    Share
  • எப்படிச் சாத்தியம்?

    -கனவு திறவோன்

    சிரித்துப் பேசியிருக்கிறோம்
    அழுது பேசியிருக்கிறோம்
    கடிந்து பேசியிருக்கிறோம்
    அடித்துப் பேசியிருக்கிறோம்

    அணைத்துப் பேசியிருக்கிறோம்
    பிணைந்து பேசியிருக்கிறோம்
    ஃபோனில் பேசியிருக்கிறோம்
    வாட்ஸ் அப்பில் பேசியிருக்கிறோம்

    ஃபேஸ்புக்கில் பேசியிருக்கிறோம்
    கண்களால் பேசியிருக்கிறோம்
    பார்த்துப் பேசியிருக்கிறோம்
    பார்க்காமல் பேசியிருக்கிறோம்

    பார்க்கில் பேசியிருக்கிறோம்
    பீச்சில் பேசியிருக்கிறோம்
    ஆடிப் பேசியிருக்கிறோம்
    பாடிப் பேசியிருக்கிறோம்

    நடந்து பேசியிருக்கிறோம்
    கடந்து பேசியிருக்கிறோம்
    போகிற போக்கில் பேசியிருக்கிறோம்
    மௌனமாய்ப் பேசியிருக்கிறோம்

    செய்கையில் பேசியிருக்கிறோம்
    ஏன்?
    பேசாமலும் பேசியிருக்கிறோம்
    இப்போது
    “பேசாமல் போ!” என்கிறாய்
    எப்படிப் போவேன்?

     

    Share
  • ஓலைத்துடிப்புகள் (5)

    கவிஞர் ருத்ரா

    oolaisuvadi

    “கடவுள் வழங்கு கையறு கங்குல்”

    மேலே கண்ட சொற்றொடர் கொண்டிருக்கும் பொருள் அகலமானது ஆழமானது. இயற்கையில் உள்ள மறைபொருள் அவ்வப்போது அந்தந்தக் காட்சிகளில் உணர்த்தும் இயல்புகள் மனித சிந்தனையில் கடந்து உள் செல்லும்; நிற்கும். கடவுள் என்ற சொல் தெய்வம் என்று பொருள் படுவதைவிட இத்தகைய நுண்மை நோக்கிய இயற்கை உணர்வுகள் வெளிப்படுவதை சங்கச் செய்யுட்களில் நிறையவே காணலாம்.

    இருப்பினும் “ஓதல் அந்தணர் வேதம் பாட”என்ற வரிகளோடு பொறுத்திப்பார்க்கும்போது சங்கத் தமிழ்ப்புலவர்களின் மெய்யறிவும் இறை உள்ளுணர்வும் எத்துணை நுண்மாண் நுழைபுலம் கொண்டிருக்கிறது என்று புலப்படும்.

    பிறமம் அதாவது முதல் பிறப்பும் அந்த முதல் அண்டப் பொருளும் என்ன? என்ற கேள்விகளில் தான் வேதாந்தம் இன்னும்
    இறுதியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க இயலாமலும் அல்லது வைக்காமலேயே அதைத் தேடிக்கொண்டிரு என்ற உட்குறிப்பில் அப்படியே சிந்தித்துக்கொண்டிரு என்றும் இருப்பதாக நாம் கொள்ளலாம். எனவே ஊர்மக்கள் ஒட்டுமொத்தமாய் தூங்கிக்கிடக்கும் அந்த இரவு தான் கடவுள் நிலை என்பதும் தத்துவ வல்லுனர்கள் கூறும் அந்த “வெறுமை” நிலை தான் கடவுள் தன்மையைக்காட்டும் நிலை என்றும் நாம் புரிந்து கொள்கிறோம். கையறு நிலை என்பது மிக மிக ஆழமான அருமையான சொல்.கடவுள் திட உருவமாய் நம் முன் தோன்றி அருளும் வலிமையில்லாத ஒரு “நிழல் இருள்” தோற்றமே நம் ஆழ்துயில் நிலையில் இருப்பது. இதில் பலப்பல வண்ணங்கள் காட்டும் தோற்ற மயக்கமே (ஹாலுசினேஷன்) கடவுள் எனும் கருத்தோட்டமாக இருக்கிறது. இதை வெளிப்படுத்திய ஓதல் ஆந்தையார் என்ற புலவரும் “ஓதல்” தொழில் செய்பவராக இருக்கலாம். (ஆதனின் தந்தையார் அல்லது ஆதனை தந்தையாகக் கொண்டிருப்பவர் என்றும் நாம் கொள்ளலாம்) ஓதல் புரியும் ஆதனின் தந்தையே இப்புலவர் என்பதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன். ஓதல் ஓதம்… இதுவே வேதம் ஆகியிருக்குமோ?

    தமிழ் நாட்டின் தற்போதைய ஓதுவார்கள் அந்த “ஓதல் ஆந்தையாரின்” சுவடு பற்றியவர்களாக இருக்கலாம்.

    சரி.போகட்டும்.இப்போது “தலைவி” தலைவனோடு களவு (காதல்) இழைந்ததில் ஊர்ப்பழியாகி அந்த சுடுசொற்கள் (அலர்) அவளை மிகவும் துயர் உறச்செய்து பொறுக்க முடியாத நிலையில் நள்ளிரவில் வானத்தை உற்று நோக்குகிறாள்.வானம் ஒளியை அடையாது அல்லது மறைக்கப்பட்டு வலிமையற்ற(கையறு நிலையில்) ஒரு இருள் பிண்டமாக ஒரு “உருவெளி மயக்கப் பிழம்பாக”ப் பார்க்கிறாள். இதை கடவுள் என்பது ஒரு வழக்கம் என்கிறாற்போல் இச்சொல் வழங்கப்படுகிறது.இந்தப் பின்னணியில் நம் சங்கதமிழ்ச்சுவடிகளில் அதிர்ந்து கிடக்கும் ஒரு வகைத் துடிப்புகளையே இப்போது இயற்றியிருக்கிறேன்.

    பாடல் இதோ. பொழிப்புரை தொடரும். 

    கடவுள் வழங்கு கையறு கங்குல் 

    வேங்கை கொழுவிய திண்கான் குறியில்
    வேங்கை மார்பன் அன்றொரு திங்களில்
    தழீஇத் தந்த தண்சிறை நடுக்கம்
    ஊன் உருக்கி என்பு முறுக்கிய நெடுமலைப்
    பாம்பாய் ஆவி சுற்றி அடுபிணி செய்யும்.
    செருந்தி தாழ அந்துறை சினைப்பூ
    செயிர்த்தன்ன பயிர்க்கும் விழிபொத்தி.
    ஆங்கவன் நோக்கின் நாணிரைக் கொளீஇ
    துடீஇய துடீஇய நீள் இரவு கொல்லும்.
    கல் கனை செல்வன் காறி உமிழ்ந்தாங்கு
    புல்லிய ஊரின் பிணித்த தெருக்கூடல்
    அலரி படர்ந்து அறுவலி கூட்டும்.
    கரும்பு பிழி எந்திரம் வாய்படு நிலையின்
    நையக்கொண்டு துவல்பட வீழும்.
    தில்லை தழுவுநர் முள் கொல் நோதல்
    அன்ன அலரின் புண் படுத்தாங்கு
    அவியும் வாழும் புல்லென செத்து.
    “கடவள் வழங்கு கையறு கங்குல்”
    ஓதல் அந்தணர் சொல்லில் ஊழ்க்க‌
    பிணியா நின்று பிறள்தல் போலும்
    என் உடம்பொடு அவன் ஆருயிர் ஒக்கும்.
    திதலை அன்ன நிழற்பொறி படர்ந்த
    வெள்நெடு வானம் கறை கண்டாங்கு
    அலரி மூசும் அழல் வெங்காட்டின்
    அலைபடு புள்ளென‌ அழியும் என்கவினே.
    எக்கர் ஞாழல் குவி இணர் உகுக்கும்
    தாதுண் தும்பியும் அலர் ஒலி வெரிக்கும்.
    குவவு மணற் குடுமி கோவை தோறும்
    குருகு உடை ஓமை ஓடு கிடந்தன்ன‌
    எவ்வம் படர்க்கும் எரி ஒலி அலரே.

    ================================================

    Share
  • மகன் தினம்!

    -கனவு திறவோன்

    அடிக்கடி வருகிறார்கள்
    டாக்டரும்
    வக்கீலும்
    மத்தியஸ்தரும்
    அக்காக் குருவியும்
    மழையும்
    வெயிலும்
    காற்றும்
    காப்பகத்தில் இருக்கும்
    அம்மாவைப் பார்க்க!

    மாதத்திற்கு ஒருமுறை
    மணியார்டர் தரும்
    தபால்காரரும்
    வருகிறார்
    கடைசி வரை
    மகன் மட்டும் வரவில்லை!

    *******

    அம்மா உயிரோடு இருக்கும் போது
    ஆதரவற்றோர் விடுதியிலும்
    செத்தபிறகு
    கங்கைக் கரையிலும்
    அன்னையர் தினம்
    அனுசரிக்கும் மகன்!

    **************

    ஆ சிரமத்தில்
    இருந்த தாயைப்
    பார்க்கத் தனயன் வந்தான்
    கைகளைப் பிடித்துக் கன்னத்தில் ஒற்றியவள்
    கண்களிலிருந்து வழிந்த நீர்
    ப்ரைலி மொழியில் எழுதியது…
    ‘மகன் தினம்’ என்று ஒன்றிருந்தால்
    அன்றாவது ஒரு நாள்
    உன்னைப் பார்க்க
    உன் வீட்டிற்கு வரலாமே?!

     

    Share
  • ஐந்து கை ராந்தல் (14)

    வையவன்

    “எங்கே கூட்டிக்கிட்டுப் போறே?”
    “பேசாம வாயேன்”
    அவர்கள் ராயப்பேட்டையில் பஸ் ஏறி எலியட்ஸ் ரோட் ஸ்டாப்பிங்கில் இறங்கி ஆஸ்பத்திரியை நோக்கி நடந்தனர்.
    குவார்ட்டர்ஸுக்குப் போய்ப் பார்த்தான் சிவா. பிரீதா இல்லை. கதவு பூட்டியிருந்தது. பக்கத்தில் கேட்டான்.

    “டே ஷிப்ட்!”
    “எப்ப முடியும்?”
    “மாலை ஆறு மணி.”

    “அஞ்சு மணிக்குள்ளாரே கொழந்தைங்க எல்லாம் ஸ்கூல்லேருந்து திரும்பி வந்துடும்” என்று கவலையோடு சொன்னாள் திஷ்யா.

    இவள் தான் செத்துப் போவதாகச் சொன்னவள் என்று நினைத்தான் சிவா. அசந்தர்ப்பமாக அவனுக்குச் சிரிப்பு வந்தது. அதை திஷ்யா பார்த்து விட்டாள்.

    நர்ஸிங் ஹோமுக்குப் போகும் பாதையில் அவனை அவள் தொடர்ந்தவாறே கேட்டாள்.
    “என்ன சிரிப்பு?”
    “வீட்டைப் பூட்டினியா?” என்று பேச்சை மாற்றினான்.
    “இந்த ‘டெக்னிக்’ வேண்டாம். நீ எதுக்கு சிரிச்சே?”
    அவன் பதிலளிக்கவில்லை.

    “இவதானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாகப்போறேன்னு சொன்னவண்ணு நெனச்சியாக்கும்?”
    “அபாண்டம்”
    “செத்துட்டா கவலையில்லே. உயிரோட உள்ள வரைக்கும் உண்டு. போகட்டும். அந்த நர்ஸ்கிட்டே நீ என்ன கேக்கப்போறே? ஐடியாவா?”

    “எக்ஸாக்ட்லி”
    “ஒனக்குன்னு ஒரு ஐடியாவும் தோணலியா?”
    “நீ மேஜராயிட்டியா?”

    “ஏன், திருநீர்மலையிலே கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனைக்கறியா?”
    “அதுக்கில்லே; ஒன்னை கடத்திக்கிட்டுப் போனதா ஒங்கப்பா போலீஸ் கம்ப்ளெயிண்ட் குடுத்திடப் போறாரு.”
    “கவலைப்படாதே முந்தா நாளு எனக்கு பதினெட்டு முடிஞ்சு போச்சு. அந்த அளவுக்கு அவர் போகமாட்டார். ஒன் ஐடியா என்ன.. அதைச் சொல்லு.”
    “அதான் யோசிக்கிறேன்.”

    “சிவா, நான் எனக்கு ஒரு பிரச்னையா இருந்தது போயி ஒனக்கு ஒரு பிரச்னையாயிட்டனா?”
    சிவாவுக்கு அந்த நிராதரவில் மனசு விண்டு போயிற்று.

    “இந்த மாதிரி பேசாதே!” என்று வருத்தமாய்ச் சொன்னான். திஷ்யா மௌனமாய் விட்டாள்.

    ரிசப்ஷனில் அவர்களை நிற்க வைத்தாள் ரிசப்ஷனிஸ்ட். ஃபோனை எடுத்து நர்ஸிங்ஹோமின் உள்ளே எங்கோ பேசினாள்.
    “யார் வேணும்?”
    “நர்ஸ் பிரீதா.”

    “ப்ளீஸ் வெய்ட் தேர்” எதிரிலிருந்த பெஞ்சை சுட்டிக்காட்டினாள்.

    லாமினெட் வழவழப்பு மின்னிய அகலமான பெஞ்சில், மின் விசிறியும் சுற்றியிருந்த மர நிழலும் தந்த குளிர்ச்சியில் அவர்கள் உட்கார்ந்தபோது மனசு சற்று ஓய்ந்தது.

    பத்து நிமிஷத்தில் பிரீதா வந்தாள். நர்ஸ் உடையில் தலைக்கு ஹுட் வைத்து மலர்ந்து சிரித்துவரும் அவளைக் கண்டதும் ஒரு தேவதையைக் கண்ட ஆஸ்வாசமாக இருந்தது.

    “ப்ராப்ளமாணோ?”
    காலையில் தானே சொல்லியனுப்பினேன் என்ற தொனியில் சிரித்துக் கொண்டே கேட்டாள்.
    “தனியாப் பேசணும்” என்றான் சிவா.

    பிரீதா ரிஸ்ட்வாட்சைப் பார்த்தாள்.
    பெஞ்சில் உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் திஷ்யா நெளிந்தாள்.
    பிரீதா ரிஸப்ஷனிஸ்டை நெருங்கி “மேரி வந்நோ?” என்று கேட்டாள்.

    “ஓ… ஷி கேம் ஜஸ்ட் ஹாஃப் அன் அவர் அகோ.”
    “கனெக்ஷன் தரூ.”
    போனில் அந்த மேரி உடனே கிடைத்தாள்.

    “ஞானாணு ப்ரீத. எனிக்கொரு அர்ஜண்ட்ஜோலி. கேட்டோ. ரிலீவ் மீ ஃபர் ஹாஃப் அன் அவர், ஐயே நாட்டி! கஸ்ட் வன்னதா! ஷ்யூர்… இன்ஃபார்ம் தி சீஃப் ஐ’ல் மேனேஜ்.”
    பிரீதா போனை வைத்தாள்.

    “போகாம்.”
    அசோகமர நிழல் படர்ந்த சிமெண்ட் பெஞ்சு ஒன்று வெளியே காலியாக இருந்தது. மூவரும் அதில் போய் உட்கார்ந்தனர்.
    “ஒய் திஷ்யா ஈஸ் டல்?” என்று பிரீதா ஆரம்பித்தாள். திஷ்யா சிரிக்க முயன்றாள். சிவா மளமளவென்று விஷயத்தைச் சொன்னான்.

    “இவளுடைய அப்பா இவ சினிமாவிலே நடிக்கணும்னு கம்பெல் பண்றார். இவளுக்கு இஷ்டமில்லே. இன்னிக்கு ஸ்கிரீன் டெஸ்ட். வீட்டுக்கு வண்டி வர்றதா இருந்தது. இவ ஒர்க்ஷாப்புக்கு என்னை வரச்சொல்லி ஆள் அனுப்பினா. போனேன். அங்கிருந்து நேரா இங்கே வர்றோம்.”

    பிரீதா ஒவ்வொரு வார்த்தையையும் உன்னிப்பாகக் கேட்டாள்.
    “சினிமாவிலே ஆக்ட் பண்ண இஷ்டமில்லே! வாட் எ குட் கர்ல்!” பிரீதா சிலாகித்தாள்.

    “இதைச் சொல்ல ஈ காலத்திலே ஒரு மனோ திடம் வேணும்” என்று மலையாளத் தமிழில் சொன்னாள்.
    “அப்பா ரொம்ப கம்பெல் பண்றார். ஹி ஈஸ் மேட் ஆஃப்டர் மனி.”
    பிரீதா பெருமூச்சு விட்டாள்.

    “அவர்கிட்டே…” என்று அவள் பேச ஆரம்பிக்கும் முன் சிவா குறுக்கிட்டான்.
    “பேசிப் பார்த்துட்டேன். ஷி வில் டைன்னு கூடச் சொன்னேன்.

    அவர் அசையறதா தெரியலே!”
    திஷ்யா உதட்டைக் கடித்துத் தலை குனிந்தாள்.

    “நீ வீட்டை விட்டு வரான் தயாரோ?” என்று தடுமாறும் தமிழில் கேட்டாள். திஷ்யா இந்தக் கேள்வி தனக்கு என்று உணர்ந்து நிமிர்ந்தாள்.

    “எப்படி?”
    “என்னோட வந்து இரு.”
    “தெரியாமயா… திருட்டுத் தனமாவா…”
    “நோ. நீ வந்துடு. நான் அவர்கிட்டே போய்ப் பேசிக்கறேன்.”

    திஷ்யா தயங்கினாள்.
    “நாட் ஃபர் எவர். அவருடைய தவறு அவருக்குப் புரியற வரை.”

    “கொழந்தைகளுக்கெல்லாம் யார் சமைப்பாங்க? வீட்டை யார் கவனிச்சுக்குவாங்க? சிவா அவளுக்குப் பிரதிநிதியாகக் கேட்டான்.

    “இவ சினிமாவிலே ஆக்ட் பண்ண சம்மதிச்சிருந்தா வீட்டை யார் கவனிச்சுக்குவாங்க?”
    திஷ்யா அந்தக் கேள்வியில் இருந்த நியாயத்தை உணர்ந்தாள்.

    “இவ இல்லேன்னா அந்த வீடு என்னவாகும்னு அவருக்குத் தெரியணும். லெட்ஸ் டு ஒன் திங். இவங்க ரிலேடிவ்ஸ் யாரும் கிட்டே இல்லியா?”
    “வியாசர்பாடியிலே சித்தி இருக்காங்க. அவங்க ரொம்ப கஷ்டப்படறாங்க. பெங்களூர்லே அத்தை இருக்காங்க. அங்கே வீடு சின்னது. எல்லாரும் அங்கே போக முடியாது” என்றாள் திஷ்யா.

    “நான் சொல்ல வந்தது அது இல்லே. அவங்க எல்லோரும் என் க்வார்ட்டர்ஸுக்கு வரட்டுமே!”
    சிவா திஷ்யாவைப் பார்த்தான்.

    “இட்ஸ் டூ மச் ஃபர் யூ” என்று திஷ்யா சொன்னாள். அப்படி வரட்டுமே என்று சொன்ன வார்த்தைக்கே அவள் மனசிலவ் நன்றி நிரம்பிவிட்டது. பிரீதா மீது வைத்திருந்த ஓரிரு தப்பபிப்ராயங்களும் அதில் மூழ்கிப் போயின.

    ‘பட் திஸ் ஈஸ் மோர் தான் டூ மச் ஃபர் எ கர்ல்M!”
    சிவாவைப் பார்த்து சிரித்து கொண்டே பிரீதா தொடர்ந்தாள்.

    “இந்த ஆண்களுக்கு விக்கிறதுக்கு பெண்ணைத் தவிர இப்ப வேற எதுவும் கெடைக்கலே.”
    “எல்லா ஆண்களுக்குமல்ல” என்று உஷ்ணமாக மறுத்தான் சிவா.

    “ஆல் அஃப் யூ அட்மிட் இட்! ஒய் காண்ட் சம் ஒன் ஃபைட் இட்? ஏன் ஒர்த்தர் கூட இதுக்குப் போராடலே.”
    “அதான் வந்திருக்கேன்.”

    “இன்னிக்கு சாயங்காலமா நான் வீட்டுக்கு வர்றேன். நீயும் நானும் அவர்கிட்டே பேசுவோம். இப்ப இவ நம்ம க்வார்ட்டஸ்ல இருக்கட்டும். அவர் பிடிவாதம் பிடிச்சா கொழந்தைகளை இவ போயி அழைச்சிட்டு வரட்டும்.”
    திஷ்யா குறுக்கிட்டாள்.

    “இல்லே. நான் வீட்டுக்குப் போறேன். நீங்க ரெண்டு பேரும் சாயங்காலம் வாங்க. பேசிப்பாருங்க. ஒத்துக்கலேன்னா கௌம்பி வர்றேன்” என்று நிறுத்தினாள் சிவாவைப் பார்த்து.
    “நல்லது” என்றான் சிவா.

    “ஐ அக்சப்ட். நானும் சிவாவும் சாயங்காலம் வர்றோம்.”
    சிவா எழுந்தான்.

    “நானும் வர்றேன். லெட்ஸ் ஹாவ் எ கூல்டிரிங்க்” என்று அவர்களை வழியனுப்ப வந்தாள் பிரீதா.
    பஸ்ஸில் வரும்போது திஷ்யா கேட்டாள்.

    “ஏன் நீ இங்கே போகப் போறோம்னு மொதல்லே சொல்லலே?”
    “சொல்லியிருந்தா ஒனக்குப் பிடிச்சிருக்காது. நீ அந்த பிரீதாவை அநாவசியமா வெறுத்தே!”
    “சீச்சீ… அவ நல்லவள்.”

    தொடரும்

    Share
  • கூலித்தொழிலாளி !

    -பா. ராஜசேகர்

    மூட்டையை
    முதுகில் தூக்க,
    துயரங்கள்
    மனதை தாக்க
    உயரத்துச்
    சூரியனும்
    உதிரத்தைச்
    சூடாக்கும்!

    எளிதாக்கும்
    பசிமயக்கம்
    இதயத்தைச்
    சோர்வாக்கும்!

    உச்சி வெயில்
    வேளையிலும்
    கும்மிருட்டைக்
    கண்பார்க்கும்!

    தள்ளாடும்
    கால்கள் கூட
    வீரத்தை
    வேவு பார்க்கும்!

    ஆடி ஓடி
    உழைத்த காலம்
    மேலோங்கிப்
    போனதய்யா!

    இளமையிலே
    சிறுகச் சேர்த்துக்
    குஞ்சுகளைப்
    பறக்க வைத்து

    இறக்கை கட்டும்
    காலம் இப்போ
    குஞ்சுகளும்
    பறந்து போச்சு!

    இளமை
    மறைஞ்சு போச்சு!
    வாழ்க்கையோ
    கவலையாச்சு!

    சொந்தம்தான்
    போனதென்பேன்
    நம்பிக்கை
    போகவில்லை!

    தன்கையே
    தனக்குதவி!
    தன்னம்பிக்கை
    உதவலாச்சு!

     

    Share
  • எகிப்திய நீதிமன்றங்களும் இந்திய நீதிமன்றங்களும்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    எகிப்தில் 1952 வரை மன்னராட்சி இருந்தது.  மன்னராட்சி என்றால் ஒரு மன்னர் இருந்தாலும் அவர் பிரிட்டனின் மேற்பார்வையில்தான் நாட்டை ஆண்டுவந்தார்.  பிரிட்டனை எதிர்த்துப் போராடி 1952-இல் எகிப்து சுதந்திரம் அடைந்தது.  இராணுவ ஜெனரல்களான முகம்மது நயிப், நாசர், சதாத், முபாரக் என்று பலர் ஜனாதிபதியாக எகிப்தை ஆண்டனர்.  1978-இல் ஜனாதிபதியாகப் பதவியேற்ற முபாரக் 29 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனாதிபதி பதவியில் அமர்ந்து பல விதமாகச் சொத்து சேர்த்துப் பின் தன் மூத்த மகனையே தனக்குப் பிறகு பதவியில் அமர்த்த முடிவுசெய்தார்.  அதுவரை அவரது ஆட்சியைச் சகித்துக்கொண்டிருந்த எகிப்து மக்கள் அவரை எதிர்த்துப் புரட்சி செய்தனர்.  2011 ஜனவரியில் ஆரம்பித்த இந்தப் புரட்சி மூலம் முபாரக் பதவியிலிருந்து இறக்கப்பட்டு ஒரு வழியாக எகிப்து மக்களுக்கு அவருடைய பிடியிலிருந்து விடுதலை கிடைத்தது.  இந்த மக்கள் புரட்சிக்கு இராணுவம் மிகவும் துணைபுரிந்தது.  மக்களை முபாரக்கின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதை விட முபாரக் தங்களுக்கு இசைவாக நடந்துகொள்ளவில்லை என்பதுதான் ராணுவம் மக்களின் இந்தப் புரட்சிக்கு உதவியதற்கு முக்கிய காரணம்.  ஆறு மாதங்கள் இராணுவம் முபாரக்கின் உதவி ஜனாதிபதியை பதவியில் அமர்த்திக்கொண்டு ஆட்சி நடத்தியது.  உலகத்தின் கண்களுக்கு எகிப்தில் ஜனநாயக அரசு நடக்கிறது என்று காட்டுவதற்காகத் தேர்தலை நடத்தினர் ராணுவ அதிகாரிகள்.  முஸ்லீம் பிரதர்ஹுடைச் சேர்ந்த மோர்ஸிக்கு நல்ல மெஜாரிட்டி கிடைத்து அவர் பதவிக்கு வருவார் என்று ராணுவம் நினைக்கவில்லை.  மேலும் மோர்ஸி ராணுவத்தின் அரசியல் தலையீட்டை ஒத்துக்கொள்ளவில்லை.  அதனால் அவரை ராணுவம் பதவியிலிருந்து இறக்கியதோடு அவர் மீது பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவருக்கு இப்போது மரண தண்டனையும் கொடுத்திருக்கிறது.

    எகிப்து நீதிமன்றங்கள் யார் பதவியில் இருக்கிறார்களோ அவர்களுக்குத் தகுந்த மாதிரியான தீர்ப்புகள் வழங்கி வருகின்றன.  முபாரக் பதவியில் இருந்தபோது அவர் சொல்வதைத்தான் கேட்டன.  அப்போது முபாரக்கால் மோர்ஸி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  முபாரக்கைப் பதவியிலிருந்து இறக்கி மோர்ஸி ஜனாதிபதி பதவி ஏற்றவுடன் மோர்ஸி அரசு அவரைக் குற்றவாளி என்று தீர்மானித்து நீதிமன்றத்தில் கூண்டுக்குள் வைத்து அவர் மீதுள்ள வழக்குகளை விசாரித்து அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.  அவர் பதவியில் இருந்தபோது அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அதே நீதிமன்றம் அவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டதும் அவருக்கு எதிராகத் தீர்ப்பு அளித்தது.

    இப்போது மோர்ஸியை ராணுவம் பதவியிலிருந்து இறக்கி அவர் மீது பல குற்றங்களைச் சுமத்தி அவருக்குத் தூக்குத் தண்டனை வழங்கியிருக்கிறது.  எகிப்தில் யார் பதவியில் இருக்கிறார்களோ அவர்கள் சொல்படிதான் நீதிமன்றம் நடப்பதாகத் தெரிகிறது.  மோர்ஸி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும்வரை எகிப்து உண்மையான ஜனநாயக நாடு அல்ல.  முபாரக் தேர்தல் நடத்தினாலும் அவர்தான் 90 சதவிகிதத்திற்கு மேல் ஓட்டுக்கள் வாங்கி ஜெயித்துக்கொண்டிருந்தார்.  மோர்ஸிதான் முதல் முதலாக உருப்படியான தேர்தல் மூலம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவரை ராணுவம் தன் இழுப்புக்கு வளைக்க முயன்றது.  அதற்கு அவர் ஒத்துழைக்காததால் அவரைப் பதவியிலிருந்து இறக்கியதும் அல்லாமல் குற்றவாளியாக்கி தூக்குத் தனடனையும் கொடுத்திருக்கிறது.  எகிப்தாவது ராணுவத்தின் கீழ் செயல்படுகிறது.  இந்தியாவிலும் அல்லவா பதவியில் இருப்பவர்கள் சொல்வதன்படி நீதிமன்றம் நடக்கிறது.

    ஜெயலலிதா வழக்கில் சிறப்பு நீதிமன்றம் எல்லா ஆதாரங்களையும் சிறப்பாக ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியது.  உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது அரசியல் தலைவர்கள் தலையீட்டால் அந்தத் தீர்ப்பிற்கு நேர் எதிர்மாறான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது போல் தெரிகிறது.  அரசு வழக்கறிஞருக்கு அவர் கருத்தை வெளியிட ஒரே நாள் ஒரு நாள் அவகாசம்தான் கொடுக்கப்பட்டது.  அதையும் எழுத்து மூலமாகத்தான் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையும் வழங்கப்பட்டது.  அப்படியும் அவருடைய எந்த வாதத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.  இதில் வருமானம் பற்றிய கூட்டலில் தவறு வேறு.  இந்த அடிப்படையில் தீர்ப்பை வழங்கியிருக்கிறது உயர் நீதிமன்றம்.  அரசியல் தலையீடு இல்லாமல் யாரும் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்க முடியாது.  சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோதும் மோதிதான் பதவியில் இருந்தார்.  ஆனால் இரண்டாவது தீர்ப்பு வந்தபோது தலைமை மாறவில்லை என்றாலும் நிலைமை மாறிவிட்டது.  இப்போது நிலம் கையகப்படுத்தும் சட்டம் போன்ற, எதிர்க் கட்சிகளின் ஆதரவில்லாத சட்டங்களை, நிறைவேற்றுவதற்கு மோதிக்கு ஜெயலலிதாவின் உதவி தேவைப்படுகிறது.  மோதி பதவிக்கு வந்து சில மாதங்களிலேயே ‘எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ‘மோதி ஒரு சிறந்த அரசியல்வாதி;  நீதித்துறையில் தலையிடுவதே இல்லை’ என்று கூறினார்.  ஊழலை ஒழிப்பதாகக் கூறிப் பதவிக்கு வருபவர்கள் பின்னால் அரசியல் ஆதாயத்திற்காக  மகாஊழல் புரிந்தவர்களுக்குத் துணை போகிறார்கள்.  வருமானம் பற்றிய கூட்டலில் தவறு இருப்பதை வெகு எளிதாகக் காட்டி மேல்முறையீடு செய்து நீதியை நிலைநாட்டலாம்.  ஏனோ கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதில் தயக்கம் காட்டுகிறது.  இதிலும் அரசியல் .விளையாடுகிறது போலும்.

    எகிப்து போன்ற சர்வாதிகார அல்லது ராணுவ ஆட்சி நடக்கும் நாடுகளில் நீதிமன்றங்கள் தன்னிச்சையாகச் செயல்படாமல் அரசியல்வாதிகளின் ஆணையை ஏற்று நடக்கலாம்.  ஆனால் ஜனநாயக நாடாகத் தன்னைப் பறைசாற்றிக்கொள்ளும் இந்தியாவிலுமா நீதித்துறை இப்படி நடக்க வேண்டும்?

    இறைவனே!  இந்தியாவிற்கு விமோசனமே இல்லையா?  இருக்கிறது என்றால் எப்போது?

    Share
  • தேகமும் யோகமும்- பகுதி-8…

     உங்களுக்கு உறுதுணையாக ஒரு யோக நூல்

    கவியோகி வேதம்

    yoga

                ,’யோகம்’-என்பது ஒரு பரவச நிலை.!யோகம் என்பது ஒரு வைகறைக்குளிர்ச்சி!சூரிய ஒளியில் குளிக்கும் காலைப் பறவைகளின் சிறகு விரிந்தநிலை!ஆம்! பூமியை உதைத்து வேகம் எடுக்கும் அதிர்ஷ்ட விமான நிலையே யோகம்.பிரபஞ்சத்தை விழுங்கிக் கொண்டே இங்கேயே சொர்க்கம்காணும் ஆநந்த ஆவிநிலையும் யோகம்தான். புரிகிறதா? யோகம் சித்தியானபிறகு உங்கள் உள்ளே ஸ்புரிக்கும் .கள்ளினும் செம்மாந்த நிலை அது!.கவிதையுள் முக்குளிக்கும் விதிர்விதிர்க்கும் களிப்பு நிலை அது!

                    பேரானந்தச் சொட்டு உங்கள் மூளைக்குள் விழுந்தால் நீங்களும் யோகத்தில் நீந்தலாம்! புதிய அமுதம் மாந்தலாம்! பிறர்க்கும் உதவலாம்.எந்த நோயையும் நீங்களே தீர்க்கலாம்.சித்திகளை ஏந்தலாம்!ஏன்?..தெய்வீகத் தன்மையைஉங்கள் கண்ணுக்குள், நரம்புக்குள்,ஏன்? உடலுக்குள்ளேயே அருந்தலாம்!புரிகிறதா? இதுதான் யோகம். இவ்வளவுதான் யோகம்!

                   ..கடினமே இல்லை.முயன்று முயன்று அந்தப் பரவசத்தில் முங்கத் தயாராகுங்கள்!  என்ன!உங்களுக்கு அந்த யோக வழியைக்காட்ட  ஒருநல்ல ஆசான் தான் தேவை. முயலுங்கள். தினசரி உங்களுக்குத் தெரிந்த மூச்சுப்பயிற்சி, அல்லது காயத்ரியுடன் சேர்ந்து கனிந்த பிராணாயாமம் ஒரு முப்பது எண்ணம் செய்து பாருங்களேன்! அட்டகாசமான ஒருமைப்பாடுதான் இதற்கு முக்கியத் தேவை.. கொஞ்சம் யோகாசனமும் செய்யுங்கள். அது உங்கள் நரம்புகளை ஒரு யோக நிலைக்குத் தயார்ப்படுத்தும். உடம்பும் உஷ்னம் ஆகாது. அதற்காகக் கன்னாபின்னா என்று செய்யாதீர்கள். காஞ்சி மகா முனிவரே , ‘அட! யோகமா? செய்வீர்! ஆயின் ஒரு குருவைக் கெட்டியாகப்பிடித்துக்கொண்டு அவர் மூலமே தினசரி அவர் சொல்படி நிதானமாகச் செய்வீர் , உடல் உஷ்ணம் ஆகாதபடி..’என உபதேசித்திருக்கின்றார்.

      உதாரணத்திற்கு, இந்த யோகம்திருவல்லிக்கேணியில்  1960களில்  வசித்த ‘சித்தேஸ்வர்’ என்னும் ,யோகிக்கு எளிதில் கைவந்தது. அவர் குரு மூலமாக.

     தீவிரமாக அவர் முதலில் நம் பிள்ளையாரைத்தான் தீவிரமாக உபாசனை செய்தார். அந்த தும்பிக்கைக் கடவுள் ஆச்சர்யமாக அவரது யோக உடலுக்குள் புகுந்துகொண்டு நான் சொன்னபடி எழுது ‘உலக மக்களுக்காக  யோகப்பயிற்சிகளின் மொத்த வடிவையும், செய்முறைகளையும் உனக்குத் தொகுத்துத் தருகின்றேன் ‘ என்று சொல்லி அவரை நடுராத்திரியில் எழுப்பி எழுத  வைத்தார் .. முதலில் அந்த யோகப் பெருங்கனலின் துளி வீச்சை உள் வாங்கிக் கொண்டார்இந்த ஞானி.,..இந்தத் திருவல்லிக்கேணி யோகி!.

    தான் அடைந்த பெரும் சொத்தைத்,தான் எவ்வாறு தன் புத்தியில் தேக்கி,உடம்பில் உருவேற்றிப் ‘பூரணநிலை’தனை அடைந்தாரோ,அந்த ஞானக்கல்வியைப்பிறர்க்கும் உபதேசிக்கத் துணிந்தார் தன் அற்புதச்சீடர் “விஜயகுமார்’ மூலமாக!

                  ..மனிதனின் நிலை எவ்வாறு யோகம் மூலம்(தொடர்ந்து பயிற்சி பெற்றால்)படிப்படியாக தெய்வ நிலை அடைகிறது என்பதைத் தன் அனுபவம் வழியே சொற்களாக,புரிகிற சிறு சிறு பூங்காப் பாதையாக விவரிக்கிறார் சுவாமி, யோகிசித்தேஸ்வரர் ‘ யோகமும் மனிதனின் நிலையும்’ என்ற  ஒரு புத்தகம் மூலம்..இது திருவல்லிக்கேணியில் உள்ள எல்லா புத்தகக் கடையிலும் கிடைக்கும்.

                  ..தன் குரு சொன்னதை அவ்வப்போது உரைகளாகத் தொகுத்து,தெளிவான தலைப்புகளாகப் பிரித்து நமக்குத் தருகிறார்  அவர். நடை கொஞ்சம்  எளிமையும் கடினமும்(சம்ஸ்க்ருத) கலந்து இருந்தாலும் யான் சொன்னதுபோல் நிச்சயம் நாமும் யோகம் பயில வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு, தினசரி சாதனை செய்பவர்க்கு இந்நூல்  பயன்படும். .

                  ..யோகத்தின் அடிப்படைத் தத்துவம் என்ன?தேகத்தின் உணர்வுத் தத்துவம் எப்படி மேன்மேல் யோகத்தின் பிடிக்குள் அகப்படுகிறது,பரவச நிலையில் “உள் ஆழ்ந்த மனித மூளை எவ்வாறு செயல்படுகிறது?எப்படி “சித்திகளை’  விளைவிக்க முனைகிறது,ஒவ்வொரு சொல்லும் எவ்வாறு “அருள்வாக்காக” மாறுகிறது,அதன்மூலம் கைவரப்பெற்ற உள்ளங்கையின் ஆன்மசக்தி எவ்வாறு பிறமாந்தரின் எல்லா நோய்களையும் தீர்க்கவல்லதாக மாறுகிறது என்றெல்லாம் படிப்படியாக,அழகாக,தெளிவாக  இந்த நூல் மூலம் நீங்கள் அறியலாம்..வாழ்க இந்த அற்புத யோக நூல்!.

     உங்களுக்கு ஒரு நல்ல குரு கிட்டினாலும், அவர் தனது ஆன்மிக சக்திகளை உங்கள் உள்ளே பாய்ச்சி உங்களை யோகத்துக்குத் தயார் படுத்தினாலும் படித்து அறிய, சாதனை செய்ய உறுதுணையாக ஒரு யோக நூல் தேவை என்பதற்காக இந்த ரகசியம் சொன்னேன். நிச்சயம் இதைப்  படிக்கவும். யோகத்திற்கும் தியானத்திற்கும் தயார் ஆகுங்கள்.

     தொடரும்

    Share
  • காதல் நாற்பது – 38

    ajay

    முதலில் தந்த முத்தங்கள்

    மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    முதன்முறை அவர் முத்தமிட்டது

    எழுதிச் செல்லும்

    இந்தக் கை விரல்களை

    மட்டுமே !

    அதன்பின் மிக்கத் தூய்மை யாகி

    வெண்மை ஆனது

    அந்தக் கரம் !

    மெதுவாய் வரவேற்பேன்

    பிறரது வாழ்த்துகளை.

    தேவதையர் அசரீரி எழும்போது

    “ஆதரிப்பு நிரலில்”

    எழுதி வைப்பேன் உடனே !

    முதல் முத்தத்தைக் காட்டிலும்

    பளிச்செனத் தெரியும்

    மோதிர மொன்றை

    இங்கு நான் அணிய முடியாது

    பழுப்பு நிறக் கற்களில் !

    இரண்டாம் முத்தமிட வந்தது

    எனது நெற்றியில்,

    தவறிப் போய்

    பாதி நெற்றியில் விழாமல்

    பாதிக் கூந்தலில் பட்டது !

    அத்தகைய பரிசுக்கும் அப்பாற் பட்டது

    காதலின் புனிதம் !

    அதுவே

    காதலுக் குரிய கிரீடம் !

    புனிதச் சுவையோடு அளித்த

    மூன்றாவது முத்தம் என்

    மூடிய உதட்டிலே !

    முழுமை யாகப் பதிந்தது அது

    பழுப்பு நிறத்தில் !

    அந்த நாள் முதல் கூறினேன்

    பெருமித மோடு

    “என் காதல் அது !

    எனக்கே உரியது அது !”

    ************

    Poem -38

    Sonnets from the Portuguese

    By: Elizabeth Browning

    First time he kissed me, he but only kissed

    The fingers of this hand wherewith I write;

    And ever since, it grew more clean and white,

    Slow to world-greetings, quick with its “Oh, list,”

    When the angels speak. A ring of amethyst

    I could not wear here, plainer to my sight,

    Than that first kiss. The second passed in height

    The first, and sought the forehead, and half missed,

    Half falling on the hair. O beyond meed!

    That was the chrism of love, which love’s own crown,

    With sanctifying sweetness, did precede.

    The third upon my lips was folded down

    In perfect, purple state; since when, indeed,

    I have been proud and said, “My love, my own.”

    **********

    Share
  • வள்ளுவ மாலை

    -சுரேஜமீ

    மானம்போய் வாழும் நிலைவேண்டார் மாந்தர்
    மனமேகும் என்றும் திருக்குறளை – போகும்
    நிலம்யாவும் சொல்லும் மறையொத்த நீதியும்      valluvar
    நேர்நின்று வெற்றி காண!

    கூட்டல் அறிந்து போக்கும் கழித்தலும்
    வேட்டல் பெருக்கி வாழ்தல் வகுக்கும்
    யாத்தல் திருக்குறளைப் போற்றிட – வந்திடும்
    சேர்த்தல் நிலைக்கும் மேல்!

    தெய்வம் மறுத்தாலும் தேடின வந்திடுமே
    செய்யும் வினையாவும் வள்ளுவம் ஏகிட
    பெய்யும் மழையொப்பத் தானாய் வரும்நலம்
    மெய்யிது காண்பீர் பணிந்து!

    வையத்து நோயெலாம் உள்ளத்தின் பாவமாம்
    எண்ணத்தில் போரிடும் தூயவை வென்றிட
    ஏற்றத்தில் வைத்துத் திருக்குறள் பற்றிட
    தோன்றும் புகழுடை வாழ்வு!

    தர்மமும் தானமும் பற்றிட வாழ்வினில்
    பெற்றவர் உற்றவர் நன்மையும் கண்டிடத்
    தூயநற் சிந்தனை தூண்டிடும் நல்லதை
    வள்ளுவம் வழிநின்று செய்!

     

    Share
  • கருக்கல்

    —மாதவன்.

     

    செல்வி பட்டென்று விழித்துக் கொண்டபோது வாசலில் மெல்லியகுரல் கேட்டது.

    “இந்தா புள்ள செலுவி”

    அது சரசுவின் கிசுகிசுப்பான குரல். செல்வி மெல்ல எழுந்துசென்று கதவைத் திறந்து தலைநீட்டினாள்.

    “தோ ஒரும்சம் சரசு. இப்பம் வந்திடறேன்”

    என்று கூறியபடி செல்வி கலைந்திருந்த தனது புடவையை சரிசெய்துகொண்டாள். தலைமுடியைச் சுருட்டிக் கொண்டையிட்டபடி எரவாணத்தில் சொருகியிருந்த டார்ச் லைட்டை உருவி கையிலெடுத்துக்கொண்டாள். படுக்கையில் சின்ராசு வாய்பிளந்து தூங்கிக்கொண்டிருந்தான். இரவு அவன் செய்த சேட்டைகள் நினைவுக்கு வந்து சிரிப்பையும் வெட்கத்தையும் ஒருங்கே கொடுத்தது.

    டவுன் மார்க்கெட்டில் லோடு வண்டி ஓட்டுகிறான். எங்கோ தொலைவிற்கு சென்று இரவு ஒருமணிக்குத்தான் வீடுவந்தான்.

    “ஏம்யா, சொந்தமா வண்டி வாங்கி ஓட்டுனா இன்னுங்கொஞ்சம் கூட காசு வருமில்லை”?

    “ம்… வரும். ஒங்கப்பாரு கரட்டான்டிபட்டியில ஊரு தலைவருதான? வரையில ஒரு வண்டியயும் கூடவே வாங்கியாந்துருக்கலாம்ல”?

    “அது சரி. ஒமக்கு என்னிய கட்டிக்குடுத்ததே பெருசாம்”

    “பார்ரா.. ஏனாம் ? அப்புடி எதுல புள்ள ஒனக்கு கொறவெச்சிருக்குறேன்னு கேக்குறேன்”? என்றபடி முரட்டுத்தனமாக முயங்கினான் பிரியத்தைப்போலவே வாய்ப்பேச்சும் அதிகம் அவனுக்கு.

    எழுப்பி சொல்லாமல் சென்றால் காலையில் கன்னாப்பின்னாவென கத்துவான். ஆனால் செல்விக்கு தூங்குபவர்களை எழுப்புவதே பிடிக்காது.

    மெல்லப் படியிறங்கி, ஓசையின்றி கதவைச்சாத்தினாள். வீட்டையொட்டிய சந்தில் சரசுவும் குஞ்சக்காவும் நின்றுகொண்டிருந்தார்கள்.

    “ஏம்புள்ள வெரசா வரதில்ல. வெடிஞ்சுப்புடுச்சின்னா ஆருக்கு கஷ்டம்” என்று கடிந்துகொண்டாள் குஞ்சக்கா.

    “இல்லக்கா… ராத்திரி அவுரு வர லேட்டாயிருச்சா ? கொஞ்சம் அசத்திப்புடுச்சிக்கா”…

    “ஆமாம்போ”… என்றபடி சலித்துக்கொண்டே அவள் முன்னால் செல்ல சரசுவும் செல்வியும் பின்தொடர்ந்தார்கள்.

    குஞ்சக்காள் கணவன் கத்தாரில் இருக்கிறான். நாலைந்து வருடத்திற்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவான். அந்த சமயங்களிலெல்லாம் குஞ்சக்காவின் தலையில் கிரீடம் ஏறிக்கொள்ளும். மற்ற நாட்களில் சிடுசிடுவென இருப்பவள் கணவன் லீவில் வந்திருக்கும் நேரத்தில்மட்டும் அத்தனை மகிழ்ச்சியாக பேசிச்சிரிப்பாள். அவள் வீட்டில் கறிக்குழம்பு மணப்பதெல்லாம் அந்த சமயங்களில் மட்டும்தானென்று சரசு சொல்லிக் கேட்டிருக்கிறாள்.

    சரசு கேட்டாள், “என்ன புள்ள ராமுச்சூடும் அண்ணன் தூங்கவிடலியாக்கும்?”

    “ச்சீ நிப்பாட்டுடீ. எல்லாத்துக்கும் உண்டானதுதான. நாளைக்கி நீ கட்டிகிட்டூ போயி மட்டும் வேற என்னத்தை செய்யப்போறியாம்?”

    “அதெல்லாம நடக்குறப்ப பாத்துக்கலாஞ் செலுவி. என் தேங்காப்பல்லுக்குன்னு எவனாச்சும் மாங்காப்பல்லு கெடைக்காமலா போயிருவான்” என்று கூறிய சரசுவின் வார்த்தைகளில் வருத்தமிருந்தது.

    சரசுவிற்கு முன்பற்கள் எந்தி வாய் மூடமுடியாதபடி இருக்கும். நன்றாக இருந்தாலே சொல்லத்தேவையில்லை. எத்தனையோ இடம் வந்துபோயிற்று. ஒன்றும் தகையவில்லை. சரசுவிற்கு என்ன பதில்சொல்வதென்று தெரியாமல் அமைதியாக நடந்தாள் செல்வி.

    “வெரசா வாங்கடீ வாளக்கொமரிங்களா”, என்று முன்னால் சென்ற குஞ்சக்கா நின்று இவர்களை விரட்ட இருவரும் வேகமாக நடக்கத்துவங்கினார்கள்.

    மண்டபத்தில் விடிவிளக்கு எரிந்துகொண்டிருந்த பிள்ளையார் கோவில் கடந்து பாயம்மாவீட்டுச் சந்துநுழைந்தபோது சனியன்பிடித்த நாய் ஒன்று விடாமல் குரைத்தது. ஒன்று தொடங்கியதும் தொடர்ந்து பக்கத்துத்தெரு நாய்களும் சேர்ந்துகொண்டு சகட்டுமேனிக்கு குரைக்கத்தொடங்கின.

    சரசு முன்னால் நகர்ந்து “டேய்.. டேய்.. ச்சும்மாயிரு. ஆளுதெரியாதா ஒனக்கு” என்று குரல்கொடுக்க அது சற்றே அச்சத்துடன்வந்து சரசுவை முகர்ந்துவிட்டு நகர்ந்தது. வீட்டிற்குள்ளிருந்து பாயம்மாள் முனகினாள்.

    “யாருலே அது?”

    “நாந்தான் பாயம்மோவ், சரசு” அதன்பிறகு பாயம்மாவிடமிருந்து பதில் வரவில்லை.

    ஊர்நடுவே பஸ்டாப்பை ஒட்டிய அமைதிவழியும் ஆலமர மேடையில் யாரோ ஒன்றிரண்டு வயசாளிகள் உறக்கம்வராமல் புரண்டுகொண்டிருந்தார்கள். அதுவரை பிரச்சனையில்லை. தெருவிளக்கு வெளிச்சம் இருக்கும். மேடையை தான்டிவிட்டால் கும்மிருட்டுத்தான். இருளை தொட்டதும் குஞ்சக்கா தனது டார்ச் விளக்கை ஒளிரச்செய்தாள். செல்வியும் சரசுவும் கூடவே.

    இருளில் நின்றிருந்த பள்ளிக்கூடத்தை கடக்கும்போது மைதானத்தின் மரங்கள் காற்றில் அசைந்தது உடலில் நடுக்கத்தைக் கொடுத்தது.

    சட்டென்று கருவேலம்புதரிலிருந்து எதுவோ வேகமாக ஓடியது. செல்விக்கு குலைநடுங்கியது. அவளுக்கு இதெல்லாம் புதிது. அவள் புதூருக்கு திருமணமாகி வந்தே ஒருமாதம்தான் ஆகிறது. இந்த ஒருமாதமும் இதே அவஸ்தைதான். அதுவும் வந்த முதல்வாரத்தில் விருந்துச்சோறு தின்று வயிறு காற்றடைந்து கெட்டுக்கிடந்தது. இரவாகி பொழுது விழும்வரை நரகமாகக் கழிந்த நாட்கள் அவை.

    அவள் பிறந்த ஊரான கரட்டான்டிபட்டியில் இத்தனை பிரச்சனைகள் இல்லை. அங்கே சிறிய மலை ஒன்று இருப்பதால் அதன் பின்புறம் மறைவாக ஒதுங்குவது மிகப்பெரிய சவுகரியமாக இருந்தது. விடியும் வரை ஆண்கள் யாரும் மலைப்பக்கம் வரமாட்டார்கள்.

    குஞ்சக்கா ஓரிடத்தில் சற்று நின்றாள். சரசுவும் செல்வியும் அவளருகே சென்று சேர்ந்துகொண்டார்கள்.

    “என்னாச்சுக்கா”

    “ஒன்னுமில்ல புள்ளைங்களா.. சாரை ஒன்னு குறுக்கால போச்சு. அதான் சித்த நின்னேன்”

    “எங்க எங்க”? என்று சரசு துள்ளினாள்.

    “ந்தா.. சார ஒன்னுஞ்செய்யாதுன்னு எத்தன வாட்டி சொல்லிருக்குறேன். குதிக்காம வாடி. அசலூருக்காரிகூட அலுங்காம வாரா. உள்ளூருக்காரிக்கு என்ன நோப்பாளம் வந்துச்சின்னு கேக்குறேன்.”

    வாய்க்கால் பாலம் கடந்து அடைந்த தார்சாலையில் குளிர்ச்சி பூசியிருந்தது. அங்கங்கே தலையில் வெளிச்சப்புள்ளி சுமந்து அலைந்துகொண்டிருந்தன மினுக்கட்டாம் பூச்சிகள். பக்கத்து ஊரான பாலையூர் மசூதியிலிருந்து பாங்கொலி சன்னமாக கேட்டது. இன்று தாமதமாகிவிட்டது. வழக்கமாக திரும்பிச்செல்லும்போதுதான் இந்த பாங்கொலியை கேட்கநேரும். தூரத்தில் பைப்பாஸ் ரோட்டில் லாரிகள் விரையும் சப்தம் கேட்டது. சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்துக்கொண்டு சாலையோரமாக ஆளுக்கொரு பக்கமாக மூவரும் …

    செல்விக்கு அழவேண்டும்போலிருந்தது. சின்ராசிடம் ஜாடைமாடையாக சொல்லியாயிற்று. புரிகிறாமாதிரி தெரியவில்லை. மாமியார் ஒரேவரியில் முடித்துக்கொண்டாள்.

    “இந்த ஊருக்கு நா வாக்கப்பட்டு வந்து எத்தன வருசமாச்சுன்னு ஒனக்குத்தெரியுமா ? இன்னிவரை எனக்கு அதான். நம்மூரு பொம்பளைங்க எல்லாத்துக்கும் அதேதான். இல்ல நீதா சமீந்தாரு ஊட்லயிருந்து வந்தியோ?”

    அவள் கூறியதும் உண்மைதான். ஊரில் ஒன்றிரண்டு மச்சுவீட்டில்தான் கழிவறைகள் இருக்கிறது. மற்றெல்லோருக்கும் இப்படிப் பொதுவெளிதான்.

    குஞ்சக்கா ஒருமுறை சொன்னாள்.

    “கவர்மென்டுல கட்டடம் கட்டியுட்ருக்காங்க புள்ள. கூறில்லாத பயலுவ. ஊர் எல்லையில சுடுகாட்டுல கொண்டுபோயில்ல கட்டிவச்சிருக்கானுங்க. வெடிஞ்சும் வெடியமின்ன பொம்பளையாளுங்க எப்புடிப் போவாங்கன்னு யோசன வேணுமா இல்லியா ? என்னையெல்லாம் இந்த ஊரே வாயாடின்னுதான் பேசும். ஆனா அதுக்காவ பேயிபிசாசுங்ககூடபோயி என்னத்தை வாயாட ? பத்தாததுக்கு எளந்தாரிப்பயலுவ எல்லாரும் அங்க இருந்த தண்ணிக்கொழாயையெல்லாம் ஒடச்சு எடைக்கி போட்டு சாராயம் குடிச்சுப்புடுச்சிங்க.”

    சரசுவிற்கு முடிந்திருக்கவேண்டும். எழுந்து நின்றுகொண்டு சுற்றிலும் பார்த்தபடியிருந்தாள். திடீரென பளாரென்று ஹெட்லைட் வெளிச்சமும் பெரிய ஹாரன் சவுன்டுமாக செவலூர் செல்லும் முதல் பஸ் வந்தது.

    செல்வியும் குஞ்சக்காவும் அவசரமாக எழுந்து சாலையின் விளிம்பில் நின்றுகொண்டார்கள். ஹாரன் அளவிற்கு வேகமில்லாமல் நிதானமாக வந்தது பஸ்.

    டீசல் வாசனையும் வெளிச்சமும் ஜன்னல் தலைகளுமாக அது கடந்தபின் மறுபடி சூழ்ந்த இருள் முன்னைவிடக் கருமையாக இருந்தது. செல்விக்கு ஜன்னல் தலைகளைக் கண்டு அவமானம் பிடுங்கியது. வானத்தில் இப்போது நட்சத்திரங்கள் மறையத்தொடங்கின.

    சரசு அவசரமாக கீச்சுக்குரலில் கத்தினாள்.

    “யக்கா யக்கா ஆளுக வராங்க.”

    பட்டென்று மறுபடி எழுந்துகொண்டார்கள். நல்லவேளை சப்பாணிதான் இரண்டு மாட்டை வயலுக்கு ஓட்டிசென்றான். இவர்களை கடக்கும்போது மாட்டின் கழுத்துமணி ஓசைஅதிகமாக கேட்டது.

    காலை ஒருபக்கமாக இழுந்தபடி இவர்களைப்பார்த்தும் பாராததுபோல ட்ரோய் ட்ரோய் என்று மாடுகளை ஓட்டிச்சென்றான். அவன் தலைமறையும்வரை அடிவயிற்றுச் சங்கடத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆண்களுக்கு பிரச்சனையில்லை. விடிந்தபிறகுகூட கம்மாயி பக்கம் ஒதுங்கிவிட்டு தம்புரான் கேணி பம்புசெட்டிலோ கம்மாயித்தண்ணியிலோ கழுவிக்கொண்டு வீடுசேர்ந்துவிடுவார்கள்.

    பெண்களெல்லாம் கம்மாயிபக்கம் செல்லமுடியாது. அங்கிருக்கும் தீமரம்தான் காரணம். போனவாரம் சுப்பன் அதனடியில்தான் ரத்தம்கக்கி இறந்துகிடந்தான். டாக்டர் மாரடைப்பு என்றார். ஆனால் ஊருக்குள் கருப்பு அடித்துவிட்டதாகத்தான் பேசிக்கொண்டார்கள். சப்பாணி கண்ணைவிட்டு மறைய மறுபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்துகொண்டார்கள்.

    இது ஒரு இம்சை. சிலநாட்களில் சுலபத்தில் வெளியேறாது. நம் சங்கடங்களெல்லாம் அதற்கெப்படித் தெரியும் ? ஆனால் உந்துதல் இருந்தாலும் இல்லாவிட்டால் உட்கார்ந்துவிட்டுத்தான் போகவேண்டும். இந்த கருக்கலை விட்டால்மறுபடி இரவுதான் சந்தர்ப்பம் வாய்க்கும். நடுவில் வயிறு சங்கடம் செய்தால்தான் நிரம்பச்சிரமம். கொள்ளை படல் மறைவில் மூத்திரம்போகத்தான் சாத்தியம்.

    இதுமாதிரியான நேரங்களில் சின்ராசு செல்வியின் முகம் பார்ப்பதை தவிர்த்துவிடுவான்.

    “கோவிச்சுக்காத புள்ள. இருக்குறதே பொறம்போக்கு குடிசை. கக்கூசு எல்லாம் கட்டமுடியாது. டவுனுல வீடு பார்த்துக்கிட்ருக்குறேன். கொஞ்சநாளிக்கி அட்சசு பண்ணிக்க செலுவி” என்று உறுதியாக சொல்லிவிட்டான்.

    சின்ராசு நல்லவன். இவள்மீது மிகுந்த பிரியமுள்ளவன். தினசரி வரும்போது டவுனிலிருந்து இவளுக்குப் பிடித்த காராச்சேவு எல்லாம் வாங்கிவந்த்து தருவான். ஆரம்பத்தில் செல்விக்கு தன் அப்பாமீதுதான் கோபமாக வந்தது. வெளிவாசல் போகக்கூட சாத்தியமில்லாத ஊரில் கட்டிக்கொடுத்துவிட்டாரே என்று.

    சரசு ஒருமுறை சொன்னது ஞாபகம் வந்தது.

    “வெய்யக்காலத்துல தொல்லயில்ல செலுவி. மழக்காலந்தான் ரெம்பக்கஷ்டம். மேல மழத்தூத்தும். கீழச் சேறு வளுக்கும். பூச்சிங்களா ஊறிட்டுத்திரியும். தேளுக்கும் பூராணுக்கும் தப்பிச்சி ஒக்காந்து எந்திரிச்சி போவுறதுக்குள்ள பாதி உசுரு போயிரும்”

    செவலூர் பஸ் மறுபடி அதே ஹாரன் சத்தமும் லைட் வெளிச்சமுமாக ஊரிலிருந்து திரும்பியபோது மீண்டும் எழுந்துகொண்டார்கள். குஞ்சக்கா கெட்டவார்த்தை ஒன்றைச் சொல்லி காறித்துப்பினாள்.

    பஸ் வேகமாக கடந்துசென்றபின்பு டாட்டா எஸு ஒன்றும் எதிர்ப்புறமாக ஊர்நோக்கிச்சென்றது. வானில் மெல்ல வெளிச்சம் வரத்தொடங்கிவிட்டது. குஞ்சக்கா கேட்டாள்.

    “முடிஞ்சிருச்சா செலுவி. கெளக்கு வெளுத்துட்டு. ஜனம்மெல்லாம் வர ஆரம்பிச்சிரும் வெரசாக் கெளம்பு” என்று எச்சரித்தபடி எழுந்து நின்றுகொண்டாள்.

    சரசுவும் குஞ்சக்காளும் நிற்க தான் மட்டும் உட்கார்ந்திருக்க என்னமோ போலிருந்தது செல்விக்கு. அவளும் மெல்ல எழுந்துகொண்டாள். மறுபடி வந்த வழியில் நடந்தபோது ஊர் விழித்துக்கொண்டுவிட்டது. ஆலமர மேடையில் நாலைந்துபேர் வாயில் ஆலங்குச்சியை மென்றபடி உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். மரத்தின்மேல் கணக்குவழக்கின்றி கிளிகள் கத்தியபடி பறந்துகொண்டிருந்தன. டாட்டா ஏஸில் ஆறுமுகஞ்செட்டியார் தக்காளி கூடைகளை ஏற்றிக்கொண்டிருந்தார்.

    மேலத்தெருவில் ஊர்த்தலைவர் வீட்டு காரின் முன் கண்ணாடியில் பனிபடர்ந்து நீர்க்கோடுகளாக வழிந்திருந்தன. பிள்ளையார்கோவில் சிமெண்ட்டுத்தரை கழுவப்பட்டு ஈரமாக இருந்தது. பாயம்மாள் சந்தில் அந்த நாய் சாதுவாக படுத்துக்கொண்டிருந்தது. கொஞ்சநேரம் முன்பு ஆக்கிரோஷமாக குரைத்தது அதுதான் என்று சொன்னால் யாராலும் நம்பமுடியாது.

    வீட்டிற்கும் முன்பாக சந்தில் சின்ராசு மினிடோரைத் துடைத்தபடி நின்றுகொண்டிருந்தான். செல்வியை பார்த்து சங்கடமாக ஒரு புன்னகை செய்தான். செல்வி கொள்ளைக்குச்சென்று இரண்டு சொம்பு தண்ணீர் விட்டுக்கொண்டு அடுப்பை பற்றவைத்து டீ போட்டு கொண்டுவந்து சின்ராசிடம் கொடுத்தாள். சின்ராசு டீயை வாங்கிக்கொண்டு அவள் கைகளைப் பிடித்துக்கொண்டான்.

    இந்த பிரியத்திற்காக எதைவேண்டுமானாலும் பொறுத்துக்கொள்ளலாமென்று தோன்றியது அவளுக்கு. வீடுகளில் எப் எம் ரேடியோக்கள் அலறத்தொடங்கின. கிராமங்களின் வளர்ச்சி மேம்பாட்டிற்கான புதிய திட்டமொன்றிற்கு பிரதமர் 200 கோடி ஒதுக்கியிருப்பதாக ரேடியோச் செய்திகள் தெரிவித்தன.

    Share