கருக்கல்
—மாதவன்.
செல்வி பட்டென்று விழித்துக் கொண்டபோது வாசலில் மெல்லியகுரல் கேட்டது.
“இந்தா புள்ள செலுவி”
அது சரசுவின் கிசுகிசுப்பான குரல். செல்வி மெல்ல எழுந்துசென்று கதவைத் திறந்து தலைநீட்டினாள்.
“தோ ஒரும்சம் சரசு. இப்பம் வந்திடறேன்”
என்று கூறியபடி செல்வி கலைந்திருந்த தனது புடவையை சரிசெய்துகொண்டாள். தலைமுடியைச் சுருட்டிக் கொண்டையிட்டபடி எரவாணத்தில் சொருகியிருந்த டார்ச் லைட்டை உருவி கையிலெடுத்துக்கொண்டாள். படுக்கையில் சின்ராசு வாய்பிளந்து தூங்கிக்கொண்டிருந்தான். இரவு அவன் செய்த சேட்டைகள் நினைவுக்கு வந்து சிரிப்பையும் வெட்கத்தையும் ஒருங்கே கொடுத்தது.
டவுன் மார்க்கெட்டில் லோடு வண்டி ஓட்டுகிறான். எங்கோ தொலைவிற்கு சென்று இரவு ஒருமணிக்குத்தான் வீடுவந்தான்.
“ஏம்யா, சொந்தமா வண்டி வாங்கி ஓட்டுனா இன்னுங்கொஞ்சம் கூட காசு வருமில்லை”?
“ம்… வரும். ஒங்கப்பாரு கரட்டான்டிபட்டியில ஊரு தலைவருதான? வரையில ஒரு வண்டியயும் கூடவே வாங்கியாந்துருக்கலாம்ல”?
“அது சரி. ஒமக்கு என்னிய கட்டிக்குடுத்ததே பெருசாம்”
“பார்ரா.. ஏனாம் ? அப்புடி எதுல புள்ள ஒனக்கு கொறவெச்சிருக்குறேன்னு கேக்குறேன்”? என்றபடி முரட்டுத்தனமாக முயங்கினான் பிரியத்தைப்போலவே வாய்ப்பேச்சும் அதிகம் அவனுக்கு.
எழுப்பி சொல்லாமல் சென்றால் காலையில் கன்னாப்பின்னாவென கத்துவான். ஆனால் செல்விக்கு தூங்குபவர்களை எழுப்புவதே பிடிக்காது.
மெல்லப் படியிறங்கி, ஓசையின்றி கதவைச்சாத்தினாள். வீட்டையொட்டிய சந்தில் சரசுவும் குஞ்சக்காவும் நின்றுகொண்டிருந்தார்கள்.
“ஏம்புள்ள வெரசா வரதில்ல. வெடிஞ்சுப்புடுச்சின்னா ஆருக்கு கஷ்டம்” என்று கடிந்துகொண்டாள் குஞ்சக்கா.
“இல்லக்கா… ராத்திரி அவுரு வர லேட்டாயிருச்சா ? கொஞ்சம் அசத்திப்புடுச்சிக்கா”…
“ஆமாம்போ”… என்றபடி சலித்துக்கொண்டே அவள் முன்னால் செல்ல சரசுவும் செல்வியும் பின்தொடர்ந்தார்கள்.
குஞ்சக்காள் கணவன் கத்தாரில் இருக்கிறான். நாலைந்து வருடத்திற்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவான். அந்த சமயங்களிலெல்லாம் குஞ்சக்காவின் தலையில் கிரீடம் ஏறிக்கொள்ளும். மற்ற நாட்களில் சிடுசிடுவென இருப்பவள் கணவன் லீவில் வந்திருக்கும் நேரத்தில்மட்டும் அத்தனை மகிழ்ச்சியாக பேசிச்சிரிப்பாள். அவள் வீட்டில் கறிக்குழம்பு மணப்பதெல்லாம் அந்த சமயங்களில் மட்டும்தானென்று சரசு சொல்லிக் கேட்டிருக்கிறாள்.
சரசு கேட்டாள், “என்ன புள்ள ராமுச்சூடும் அண்ணன் தூங்கவிடலியாக்கும்?”
“ச்சீ நிப்பாட்டுடீ. எல்லாத்துக்கும் உண்டானதுதான. நாளைக்கி நீ கட்டிகிட்டூ போயி மட்டும் வேற என்னத்தை செய்யப்போறியாம்?”
“அதெல்லாம நடக்குறப்ப பாத்துக்கலாஞ் செலுவி. என் தேங்காப்பல்லுக்குன்னு எவனாச்சும் மாங்காப்பல்லு கெடைக்காமலா போயிருவான்” என்று கூறிய சரசுவின் வார்த்தைகளில் வருத்தமிருந்தது.
சரசுவிற்கு முன்பற்கள் எந்தி வாய் மூடமுடியாதபடி இருக்கும். நன்றாக இருந்தாலே சொல்லத்தேவையில்லை. எத்தனையோ இடம் வந்துபோயிற்று. ஒன்றும் தகையவில்லை. சரசுவிற்கு என்ன பதில்சொல்வதென்று தெரியாமல் அமைதியாக நடந்தாள் செல்வி.
“வெரசா வாங்கடீ வாளக்கொமரிங்களா”, என்று முன்னால் சென்ற குஞ்சக்கா நின்று இவர்களை விரட்ட இருவரும் வேகமாக நடக்கத்துவங்கினார்கள்.
மண்டபத்தில் விடிவிளக்கு எரிந்துகொண்டிருந்த பிள்ளையார் கோவில் கடந்து பாயம்மாவீட்டுச் சந்துநுழைந்தபோது சனியன்பிடித்த நாய் ஒன்று விடாமல் குரைத்தது. ஒன்று தொடங்கியதும் தொடர்ந்து பக்கத்துத்தெரு நாய்களும் சேர்ந்துகொண்டு சகட்டுமேனிக்கு குரைக்கத்தொடங்கின.
சரசு முன்னால் நகர்ந்து “டேய்.. டேய்.. ச்சும்மாயிரு. ஆளுதெரியாதா ஒனக்கு” என்று குரல்கொடுக்க அது சற்றே அச்சத்துடன்வந்து சரசுவை முகர்ந்துவிட்டு நகர்ந்தது. வீட்டிற்குள்ளிருந்து பாயம்மாள் முனகினாள்.
“யாருலே அது?”
“நாந்தான் பாயம்மோவ், சரசு” அதன்பிறகு பாயம்மாவிடமிருந்து பதில் வரவில்லை.
ஊர்நடுவே பஸ்டாப்பை ஒட்டிய அமைதிவழியும் ஆலமர மேடையில் யாரோ ஒன்றிரண்டு வயசாளிகள் உறக்கம்வராமல் புரண்டுகொண்டிருந்தார்கள். அதுவரை பிரச்சனையில்லை. தெருவிளக்கு வெளிச்சம் இருக்கும். மேடையை தான்டிவிட்டால் கும்மிருட்டுத்தான். இருளை தொட்டதும் குஞ்சக்கா தனது டார்ச் விளக்கை ஒளிரச்செய்தாள். செல்வியும் சரசுவும் கூடவே.
இருளில் நின்றிருந்த பள்ளிக்கூடத்தை கடக்கும்போது மைதானத்தின் மரங்கள் காற்றில் அசைந்தது உடலில் நடுக்கத்தைக் கொடுத்தது.
சட்டென்று கருவேலம்புதரிலிருந்து எதுவோ வேகமாக ஓடியது. செல்விக்கு குலைநடுங்கியது. அவளுக்கு இதெல்லாம் புதிது. அவள் புதூருக்கு திருமணமாகி வந்தே ஒருமாதம்தான் ஆகிறது. இந்த ஒருமாதமும் இதே அவஸ்தைதான். அதுவும் வந்த முதல்வாரத்தில் விருந்துச்சோறு தின்று வயிறு காற்றடைந்து கெட்டுக்கிடந்தது. இரவாகி பொழுது விழும்வரை நரகமாகக் கழிந்த நாட்கள் அவை.
அவள் பிறந்த ஊரான கரட்டான்டிபட்டியில் இத்தனை பிரச்சனைகள் இல்லை. அங்கே சிறிய மலை ஒன்று இருப்பதால் அதன் பின்புறம் மறைவாக ஒதுங்குவது மிகப்பெரிய சவுகரியமாக இருந்தது. விடியும் வரை ஆண்கள் யாரும் மலைப்பக்கம் வரமாட்டார்கள்.
குஞ்சக்கா ஓரிடத்தில் சற்று நின்றாள். சரசுவும் செல்வியும் அவளருகே சென்று சேர்ந்துகொண்டார்கள்.
“என்னாச்சுக்கா”
“ஒன்னுமில்ல புள்ளைங்களா.. சாரை ஒன்னு குறுக்கால போச்சு. அதான் சித்த நின்னேன்”
“எங்க எங்க”? என்று சரசு துள்ளினாள்.
“ந்தா.. சார ஒன்னுஞ்செய்யாதுன்னு எத்தன வாட்டி சொல்லிருக்குறேன். குதிக்காம வாடி. அசலூருக்காரிகூட அலுங்காம வாரா. உள்ளூருக்காரிக்கு என்ன நோப்பாளம் வந்துச்சின்னு கேக்குறேன்.”
வாய்க்கால் பாலம் கடந்து அடைந்த தார்சாலையில் குளிர்ச்சி பூசியிருந்தது. அங்கங்கே தலையில் வெளிச்சப்புள்ளி சுமந்து அலைந்துகொண்டிருந்தன மினுக்கட்டாம் பூச்சிகள். பக்கத்து ஊரான பாலையூர் மசூதியிலிருந்து பாங்கொலி சன்னமாக கேட்டது. இன்று தாமதமாகிவிட்டது. வழக்கமாக திரும்பிச்செல்லும்போதுதான் இந்த பாங்கொலியை கேட்கநேரும். தூரத்தில் பைப்பாஸ் ரோட்டில் லாரிகள் விரையும் சப்தம் கேட்டது. சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்துக்கொண்டு சாலையோரமாக ஆளுக்கொரு பக்கமாக மூவரும் …
செல்விக்கு அழவேண்டும்போலிருந்தது. சின்ராசிடம் ஜாடைமாடையாக சொல்லியாயிற்று. புரிகிறாமாதிரி தெரியவில்லை. மாமியார் ஒரேவரியில் முடித்துக்கொண்டாள்.
“இந்த ஊருக்கு நா வாக்கப்பட்டு வந்து எத்தன வருசமாச்சுன்னு ஒனக்குத்தெரியுமா ? இன்னிவரை எனக்கு அதான். நம்மூரு பொம்பளைங்க எல்லாத்துக்கும் அதேதான். இல்ல நீதா சமீந்தாரு ஊட்லயிருந்து வந்தியோ?”
அவள் கூறியதும் உண்மைதான். ஊரில் ஒன்றிரண்டு மச்சுவீட்டில்தான் கழிவறைகள் இருக்கிறது. மற்றெல்லோருக்கும் இப்படிப் பொதுவெளிதான்.
குஞ்சக்கா ஒருமுறை சொன்னாள்.
“கவர்மென்டுல கட்டடம் கட்டியுட்ருக்காங்க புள்ள. கூறில்லாத பயலுவ. ஊர் எல்லையில சுடுகாட்டுல கொண்டுபோயில்ல கட்டிவச்சிருக்கானுங்க. வெடிஞ்சும் வெடியமின்ன பொம்பளையாளுங்க எப்புடிப் போவாங்கன்னு யோசன வேணுமா இல்லியா ? என்னையெல்லாம் இந்த ஊரே வாயாடின்னுதான் பேசும். ஆனா அதுக்காவ பேயிபிசாசுங்ககூடபோயி என்னத்தை வாயாட ? பத்தாததுக்கு எளந்தாரிப்பயலுவ எல்லாரும் அங்க இருந்த தண்ணிக்கொழாயையெல்லாம் ஒடச்சு எடைக்கி போட்டு சாராயம் குடிச்சுப்புடுச்சிங்க.”
சரசுவிற்கு முடிந்திருக்கவேண்டும். எழுந்து நின்றுகொண்டு சுற்றிலும் பார்த்தபடியிருந்தாள். திடீரென பளாரென்று ஹெட்லைட் வெளிச்சமும் பெரிய ஹாரன் சவுன்டுமாக செவலூர் செல்லும் முதல் பஸ் வந்தது.
செல்வியும் குஞ்சக்காவும் அவசரமாக எழுந்து சாலையின் விளிம்பில் நின்றுகொண்டார்கள். ஹாரன் அளவிற்கு வேகமில்லாமல் நிதானமாக வந்தது பஸ்.
டீசல் வாசனையும் வெளிச்சமும் ஜன்னல் தலைகளுமாக அது கடந்தபின் மறுபடி சூழ்ந்த இருள் முன்னைவிடக் கருமையாக இருந்தது. செல்விக்கு ஜன்னல் தலைகளைக் கண்டு அவமானம் பிடுங்கியது. வானத்தில் இப்போது நட்சத்திரங்கள் மறையத்தொடங்கின.
சரசு அவசரமாக கீச்சுக்குரலில் கத்தினாள்.
“யக்கா யக்கா ஆளுக வராங்க.”
பட்டென்று மறுபடி எழுந்துகொண்டார்கள். நல்லவேளை சப்பாணிதான் இரண்டு மாட்டை வயலுக்கு ஓட்டிசென்றான். இவர்களை கடக்கும்போது மாட்டின் கழுத்துமணி ஓசைஅதிகமாக கேட்டது.
காலை ஒருபக்கமாக இழுந்தபடி இவர்களைப்பார்த்தும் பாராததுபோல ட்ரோய் ட்ரோய் என்று மாடுகளை ஓட்டிச்சென்றான். அவன் தலைமறையும்வரை அடிவயிற்றுச் சங்கடத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆண்களுக்கு பிரச்சனையில்லை. விடிந்தபிறகுகூட கம்மாயி பக்கம் ஒதுங்கிவிட்டு தம்புரான் கேணி பம்புசெட்டிலோ கம்மாயித்தண்ணியிலோ கழுவிக்கொண்டு வீடுசேர்ந்துவிடுவார்கள்.
பெண்களெல்லாம் கம்மாயிபக்கம் செல்லமுடியாது. அங்கிருக்கும் தீமரம்தான் காரணம். போனவாரம் சுப்பன் அதனடியில்தான் ரத்தம்கக்கி இறந்துகிடந்தான். டாக்டர் மாரடைப்பு என்றார். ஆனால் ஊருக்குள் கருப்பு அடித்துவிட்டதாகத்தான் பேசிக்கொண்டார்கள். சப்பாணி கண்ணைவிட்டு மறைய மறுபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்துகொண்டார்கள்.
இது ஒரு இம்சை. சிலநாட்களில் சுலபத்தில் வெளியேறாது. நம் சங்கடங்களெல்லாம் அதற்கெப்படித் தெரியும் ? ஆனால் உந்துதல் இருந்தாலும் இல்லாவிட்டால் உட்கார்ந்துவிட்டுத்தான் போகவேண்டும். இந்த கருக்கலை விட்டால்மறுபடி இரவுதான் சந்தர்ப்பம் வாய்க்கும். நடுவில் வயிறு சங்கடம் செய்தால்தான் நிரம்பச்சிரமம். கொள்ளை படல் மறைவில் மூத்திரம்போகத்தான் சாத்தியம்.
இதுமாதிரியான நேரங்களில் சின்ராசு செல்வியின் முகம் பார்ப்பதை தவிர்த்துவிடுவான்.
“கோவிச்சுக்காத புள்ள. இருக்குறதே பொறம்போக்கு குடிசை. கக்கூசு எல்லாம் கட்டமுடியாது. டவுனுல வீடு பார்த்துக்கிட்ருக்குறேன். கொஞ்சநாளிக்கி அட்சசு பண்ணிக்க செலுவி” என்று உறுதியாக சொல்லிவிட்டான்.
சின்ராசு நல்லவன். இவள்மீது மிகுந்த பிரியமுள்ளவன். தினசரி வரும்போது டவுனிலிருந்து இவளுக்குப் பிடித்த காராச்சேவு எல்லாம் வாங்கிவந்த்து தருவான். ஆரம்பத்தில் செல்விக்கு தன் அப்பாமீதுதான் கோபமாக வந்தது. வெளிவாசல் போகக்கூட சாத்தியமில்லாத ஊரில் கட்டிக்கொடுத்துவிட்டாரே என்று.
சரசு ஒருமுறை சொன்னது ஞாபகம் வந்தது.
“வெய்யக்காலத்துல தொல்லயில்ல செலுவி. மழக்காலந்தான் ரெம்பக்கஷ்டம். மேல மழத்தூத்தும். கீழச் சேறு வளுக்கும். பூச்சிங்களா ஊறிட்டுத்திரியும். தேளுக்கும் பூராணுக்கும் தப்பிச்சி ஒக்காந்து எந்திரிச்சி போவுறதுக்குள்ள பாதி உசுரு போயிரும்”
செவலூர் பஸ் மறுபடி அதே ஹாரன் சத்தமும் லைட் வெளிச்சமுமாக ஊரிலிருந்து திரும்பியபோது மீண்டும் எழுந்துகொண்டார்கள். குஞ்சக்கா கெட்டவார்த்தை ஒன்றைச் சொல்லி காறித்துப்பினாள்.
பஸ் வேகமாக கடந்துசென்றபின்பு டாட்டா எஸு ஒன்றும் எதிர்ப்புறமாக ஊர்நோக்கிச்சென்றது. வானில் மெல்ல வெளிச்சம் வரத்தொடங்கிவிட்டது. குஞ்சக்கா கேட்டாள்.
“முடிஞ்சிருச்சா செலுவி. கெளக்கு வெளுத்துட்டு. ஜனம்மெல்லாம் வர ஆரம்பிச்சிரும் வெரசாக் கெளம்பு” என்று எச்சரித்தபடி எழுந்து நின்றுகொண்டாள்.
சரசுவும் குஞ்சக்காளும் நிற்க தான் மட்டும் உட்கார்ந்திருக்க என்னமோ போலிருந்தது செல்விக்கு. அவளும் மெல்ல எழுந்துகொண்டாள். மறுபடி வந்த வழியில் நடந்தபோது ஊர் விழித்துக்கொண்டுவிட்டது. ஆலமர மேடையில் நாலைந்துபேர் வாயில் ஆலங்குச்சியை மென்றபடி உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். மரத்தின்மேல் கணக்குவழக்கின்றி கிளிகள் கத்தியபடி பறந்துகொண்டிருந்தன. டாட்டா ஏஸில் ஆறுமுகஞ்செட்டியார் தக்காளி கூடைகளை ஏற்றிக்கொண்டிருந்தார்.
மேலத்தெருவில் ஊர்த்தலைவர் வீட்டு காரின் முன் கண்ணாடியில் பனிபடர்ந்து நீர்க்கோடுகளாக வழிந்திருந்தன. பிள்ளையார்கோவில் சிமெண்ட்டுத்தரை கழுவப்பட்டு ஈரமாக இருந்தது. பாயம்மாள் சந்தில் அந்த நாய் சாதுவாக படுத்துக்கொண்டிருந்தது. கொஞ்சநேரம் முன்பு ஆக்கிரோஷமாக குரைத்தது அதுதான் என்று சொன்னால் யாராலும் நம்பமுடியாது.
வீட்டிற்கும் முன்பாக சந்தில் சின்ராசு மினிடோரைத் துடைத்தபடி நின்றுகொண்டிருந்தான். செல்வியை பார்த்து சங்கடமாக ஒரு புன்னகை செய்தான். செல்வி கொள்ளைக்குச்சென்று இரண்டு சொம்பு தண்ணீர் விட்டுக்கொண்டு அடுப்பை பற்றவைத்து டீ போட்டு கொண்டுவந்து சின்ராசிடம் கொடுத்தாள். சின்ராசு டீயை வாங்கிக்கொண்டு அவள் கைகளைப் பிடித்துக்கொண்டான்.
இந்த பிரியத்திற்காக எதைவேண்டுமானாலும் பொறுத்துக்கொள்ளலாமென்று தோன்றியது அவளுக்கு. வீடுகளில் எப் எம் ரேடியோக்கள் அலறத்தொடங்கின. கிராமங்களின் வளர்ச்சி மேம்பாட்டிற்கான புதிய திட்டமொன்றிற்கு பிரதமர் 200 கோடி ஒதுக்கியிருப்பதாக ரேடியோச் செய்திகள் தெரிவித்தன.
