Blog

  • நான் அறிந்த சிலம்பு – 166

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    கவுந்தியும் மாடலனும் கோவலனுக்குக் கூறிய ஆறுதல் உரைகள்

    மாதவம் செய்த கவுந்தியடிகளும்
    மாமறையோன் மாடலனும்
    கோவலனிடன் இவ்வாறு கூறினர்:             kovalan
    இங்கே இங்ஙனம் தங்கியிருப்பது
    துறவறம் மேற்கொண்ட
    முனிவர்களுக்கு மட்டுமேயல்லாது
    இல்லறத்தில் ஈடுபட்டவர்களுக்குப் பொருந்தாது

    இந்நகரில் இருக்கும் வணிகர்
    உன் பெருமையறிந்து உன்னை ஏற்றுக் கொள்வர்
    எனவே இவ்விடத்தை விடுத்து நீங்குக.
    சூரியனின் கதிர்கள் மேற்கில் மறையும்முன்
    உன் காதலி அவளோடு மதுரை நகர் புகுக.

    மாதரி என்னும் ஆயர்குல முதுமகள் கவுந்தியை வணங்குதல்

    அந்த நேரத்தில்
    அறம் செய்வதைப் பெரிதும் விரும்புகின்ற
    அறம் செய்பவர்கள் நிறைந்துள்ள
    புறஞ்சேரி எனும் மூதூரில் குடிகொண்டுள்ள
    பூப்போன்ற கண்களையுடைய
    ‘இயக்கி’ எனும் பெண் தெய்வத்திற்குப்
    பால் அன்னம் படைத்துவிட்டுத்
    திரும்பிக்கொண்டிருந்த
    அன்பும் பண்பும் நிறைந்த
    ஆயர்குல முதுமகள் மாதரி என்பவள்
    கவந்தியடிகளைக் கண்டு
    அவரடி தொழுது நின்றாள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 107 -119
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
    <http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–>
    pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–
    <http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–>

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • உன்னையறிந்தால் ….. ! (5)

    உனையறிந்தால்11
    குழந்தைகளும் விஞ்ஞானிகள்தாம்

    நிர்மலா ராகவன்

    நம்மைச் சுற்றி இருப்பவைகளை அறிவதுதான் விஞ்ஞானம். இந்த விந்தைக்குத்தான் ஐம்புலன்களும் பயன்படுகின்றன.
    தாய் அணைத்தால், பிறந்த குழந்தை உடனே அழுகையை நிறுத்திவிடும். ஏனெனில், அவளுடைய மணம் அதற்குப் பரிச்சயமான ஒன்று. கண்களைத் திறந்த உடனேயே வெளிச்சம் இருக்கும் திசையை நோக்கித் தலையை திருப்பும். கிலுகிலுப்பையால் ஓசை எழுப்பினாலோ, தாய் அருமையாகப் பேசினாலோ, அழுகையை மறந்து பார்க்கிறது. எது கையில் அகப்பட்டாலும் இறுகப் பற்றிக்கொள்கிறது. அதாவது, நுகர்தல், பார்த்தல், கேட்டல், தொடுதல் ஆகியவைகளைப் பயன்படுத்தி தன்னைச் சுற்றி இருப்பவைகளை அறிய முயல்கிறது.

    தவழத் தொடங்கியதும், தரையில் கிடக்கும் எந்தப் பொருளையும், பூச்சியையும் துரத்திப் பிடித்து, வாயில் போட்டுக்கொள்ளப் பார்க்கும். தாய் தடுத்தால், ஒரே ரகளைதான். (இந்தப் பெரியவர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை! சுவை என்பதை பின் எப்படித்தான் அறிவதாம்!– குழந்தை வெறுத்துப்போய் அழுவதன் அர்த்தம் இதுதான்).

    குழந்தைகளுக்கு அறிவு வளருவதற்குப் பல்வேறு அனுபவங்கள் அமைய வேண்டும். அவைகளை நாம்தான் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

    நான்கு நாள் குழந்தையாக இருந்த என் பேரனை நான் முழங்காலிலிட்டுக் குளிப்பாடும்போது, அலுப்பாக இருந்தது. யாருக்காவது, எதையாவது சொல்லிக் கொடுத்தே பழக்கமில்லையா? இயல்பாக, சோப்புக்கட்டியை எடுத்து, குழந்தையைத் தொட வைத்தேன். `இது கெட்டியா இருக்கு, பாத்தியா? Solid!’ பிறகு நீரில் அவன் கையை அளையவிட்டு, ஓசை எழுப்பி, `இது Liquid. எப்படிச் சத்தம் கேக்கறது, பாரு!’ பின்பு, கையை என் மூக்கின்கீழ் கொண்டுவந்து, `இது Gas. ஹை! காத்து மாதிரி இருக்குடா!’ என்று ஆரம்பித்தேன்.

    வீட்டில் குழந்தை முதன்முதலாகக் குளிக்கும் அழகைப் பார்க்க வெளியே நின்றிருந்த என் குடும்பத்தினர் பெரிதாகச் சிரித்தார்கள், “இப்போதுமா physics?” என்று. நான் அயரவில்லை. அதற்குப் புரிகிறதோ, இல்லையோ, எனக்குப் பொழுது போயிற்று. நாலைந்து நாட்கள் அதே பாடம்தான்.

    கண்ணை மூடிக்கொண்டு இருக்கிற சிசுவிடம் பேசுவது முட்டாள்தனமோ என்று தோன்ற, அடுத்த நாள் எதுவும் பேசாது, நீரை மொள்ள ஆரம்பித்தேன். குழந்தையின் தோள் உயர உயர எழுந்தது, `இன்று ஏன் என் கையை எதன்மேலும் வைக்கவில்லை?’ என்று கேட்பதுபோல்.

    அனைவரையும் கூவி அழைத்து, “என்னைக் கேலி செய்தீர்களே! இப்போது பாருங்கள்!” என்று என் வெற்றியைக் காட்டினேன். கண் மூடி இருந்தால் என்ன! தொடுதல், கேட்டல் இரண்டும்தான் இருக்கின்றனவே!

    மூன்று மாதக் குழந்தையிடம், “குருவி கீச்சுக் கீச்சுனு கத்தறதே! கேக்கறதா?” என்று நாம் எடுத்துக் கொடுத்தால், உன்னித்துக் கவனிக்கும். ஸ்கூட்டர், ஆகாய விமானம், ரயில் போன்ற வாகன ஒலிகளையும் இப்போது அறிமுகப்படுத்தலாம்.

    `வயதானால், தானே தெரிந்துவிட்டுப் போகிறது! இதையெல்லாமா சொல்லிக் கொடுப்பார்கள்!’ என்கிறீர்களா?
    குழந்தை தானே தெரிந்து கொள்வதற்குமுன் நாம் சொல்லிக்கொடுத்தால், அதன் செவிப்புலன் கூர்மையாகி, ஆர்வம் அதிகரிக்கும். இதனால்தான் பிறந்த குழந்தைகளிடம் பேசும்போது, நீட்டி முழக்கி, நாமே குழந்தைபோலப் பேசுகிறோம்.

    சிதம்பரத்தில் இசை நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தேன். அவரது ஒன்றரை வயதுக் குழந்தை பேசவேயில்லை என்பதைக் கவனித்து, `நீ குழந்தையுடன் பேசமாட்டாயா?’ என்று அவருடைய இளம் மனைவியிடம் கேட்க, `அவள் பேசினால், நானும் பேசுவேன்,’ என்ற பதில் வந்தது.

    நான் குழந்தையிடம் என் பாடத்தை ஆரம்பித்தேன். “நேத்திக்கு கோயிலுக்குப் போனியா? அப்பாகூட போனியா? ஸ்கூட்டரிலே போனியா? ஸ்கூட்டர் எப்படிப் போச்சும்மா? டுர்..!’ வாக்கியங்கள் சிறியதாக இருந்தால் நலம்.
    குழந்தை மகிழ்ந்து சிரித்து, `டுர்..!’ என்றாள். அதுவரைக்கும் பேசாதவள், அன்று தூக்கத்தில் பாடினாள் என்று மகிழ்ந்தார்கள் பெற்றோர்.

    இரு பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தால், அதில் சிறு குழந்தையின் கவனம் போகாது. அசையாமல் கிடக்கும். அதுவே, தன் முகத்தைப் பார்த்துப் பேசுகிறார்கள் என்று தெரியும்போது, புரிகிறதோ, இல்லையோ, மனமகிழ்ச்சியைக் காட்ட, பொக்கைவாயைத் திறந்து சிரிக்கும்.

    குழந்தை மருத்துவர் ஒருவர் என்னிடம் கூறினார், `ஒங்களைமாதிரி பாட்டிகிட்டே வளர்ற பிள்ளைங்கதான் நல்லாப் பேசும்!’
    வளவளவென்று பேசவேண்டாம். ஆனால், மொழித் திறனையாவது வளர்த்து வைப்போமே!

    எட்டு வயதுக் குழந்தைகள் நிறைய பேசும். சற்று கண்டித்து, `வாயைவிட கண்ணையும், காதையும் அதிகமாகப் பயன்படுத்து,’ என்று இப்பருவத்தில் அறிவுரை கூறலாம். எதையும் கூர்ந்து கவனித்தல் விஞ்ஞானத்துக்கு இன்றியமையாத திறன்.

    பார்ப்பவைகளை எல்லாம் விளக்குங்கள். வீட்டுக்கு வெளியே நடக்கும்போது, “கீ..ழே புல்லு — பச்சைக் கலர்.., மே..லே வானம். அது நீ..லம். பச்சை, நீலம். சூரியன் பாத்தியா? கண்ணைக் கூசலே?” இப்படி விளையாட்டுப்போல், நமக்கு எளிதான, ஆனால் குழந்தை அறிந்திராதவற்றை ஒவ்வொன்றாக விவரித்தால், குழந்தை மகிழும். எதையும் கூர்ந்து கவனிக்கும் திறனுடன், வளர்ப்பவர்கள்மீது கொண்டுள்ள நெருக்கமும் அதிகமாகும்.

    இதேபோல், மரத்தாலான சாமான்கள், உலோகப்பொருட்கள், துணி போன்றவைகளைத் தொட்டுத் தடவி, தட்டி ஓசையெழுப்பினால், சருமத்தின் ஆர்வமும் தூண்டப்படாதா!

    சூடான, கூரான, அல்லது மின்சாரம் கசியும் பொருளைத் தொட்டு வைத்தால் என்ன ஆவது என்ற பதைப்புடன், `ஒண்ணையும் தொட்டு. விஷமம் பண்ணக்கூடாது!’ என்று மிரட்டுகிறாள் தாய். (`தாய்’ என்று இங்கே குறிப்பிடுவது பொதுப்படையாகத்தான்). எதையும் அறியவேண்டும் என்ற ஒரு குழந்தையின் இயல்பான ஆர்வத்துக்குத் தன்னையும் அறியாமல் முட்டுக்கட்டை போடுகிறாள்.

    மாறாக, கைபொறுக்கும் சூட்டில் ஒருவயதுக் குழந்தையின் விரல் நுனியை வைத்து, `ஊ..!’ என்று சொல்லிக் கொடுத்தால், வலி ஏற்படுத்தும் அனுபவம் இது என்று புரிந்துகொள்ளும். கீழே விழுந்து அடிபட்டுக்கொண்டால், `ஊ..!’ என்று வலியைப் புலப்படுத்தும்.

    எதையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இயற்கையாகவே அமைய, `இது எப்படிப்பா?’ என்று ஒரு குழந்தை கேட்கும்போது, `அம்மாவைக் கேளு,’ என்று அப்பா பொறுப்பைத் தட்டிக்கழித்து விடுகிறார். அம்மாவோ, `ஒனக்குப் பதில் சொல்லி முடிக்கிறதுக்குள்ளே பொழுது சாஞ்சுடும்!’ என்று ஏளனத்தில் இறங்குகிறாள்.

    ஏதோ, நம்மையும் மதித்துக் கேட்கிறானே என்று, நமக்குத் தெரிந்த வகையில் எளிமையாகச் சொல்லிக் கொடுத்தாலே போதும். பெரிய விளக்கம் எலாம் தேவையில்லை. எப்படியும், ஒரு குழந்தைக்குத் தெரிவதைவிட நிறையத்தான் தெரிந்திருக்கும் நமக்கு. எதையும் அறியும் ஆர்வத்தைத் தூண்ட இது போதும். வயதானால், தானே ஆசிரியர்களைக் கேட்டுத் தம் அறிவை வளர்த்துக் கொள்வார்கள்.

    ஆசிரியர்களும் பெற்றோர் மாதிரித்தானா! கவலையை விடுங்கள். வாசகசாலைகள் இருக்கவே இருக்கின்றன!
    நம் அறியாமையால், அல்லது அலட்சியத்தால் இயற்கையாகவே அமைந்த ஐம்புலன்களின் ஆற்றல்களை நாம் கணிசமாகக் குறைத்து அல்லது அழித்து விடுகிறோம். இளமையிலேயே ஆர்வம் குன்றிவிட்டதால், பள்ளிப்பருவம் வந்தாலும், இவர்களுக்கு எதிலும் ஆர்வம் இருப்பதில்லை.

    `என் தாய் முட்டாள்!’ என்று சில மாணவிகள் என்னிடம் குறைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவு மனம் நொந்திருந்தால், அப்படிக் கூறுவார்கள்!

    உங்களைவிட அனுபவசாலியாக உங்கள் மகனோ, மகளோ ஆகும்போது, தாம் கற்று அறிந்ததை ஆர்வத்துடன் உங்களுடன் பகிர்ந்துகொள்வார்கள். முற்பகல் செய்யின்…

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(72)

    -செண்பக ஜெகதீசன்

    என்பி லதனை வெயிற்போலக் காயுமே
    யன்பி லதனை யறம். (திருக்குறள்-77: அன்புடைமை)

    புதுக் கவிதையில்…

    எலும்பில்லா உயிரினங்களை
    வாட்டி வதைத்துக் கொல்லும்
    வெயில்…

    அன்பில்லாதவனை
    அழித்திடுமே அறம்…!

    குறும்பாவில்…

    எலும்பில்லா உயிர்களை
    வெயில் அழிக்கும்,
    அறமழிக்கும் அன்பில்லாதவரை…!

    மரபுக் கவிதையில்…

    உடலில் எலும்புகள் ஏதுமின்றி
    வெயிலில் செல்லும் உயிரினங்கள்
    சுடரும் கதிரவன் ஒளியதனின்
    சூடு தாங்கிடா தழிந்தொழியும்,
    இடரே வாழ்வில் என்றென்றும்
    இல்லை யென்றால் அன்பதுதான்,
    தடங்கல் வந்திடும் வழியினிலே
    தண்டனை தந்திடும் அறமதுவே…!

    லிமரைக்கூ…

    எலும்பில்லா உயிரினங்கள் சென்றால் புறம்
    எரித்துக் கொன்றிடும் வெயில்,
    அன்பில்லா மனிதனை அழித்திடுமே அறம்…!

    கிராமிய பாணியில்…

    வெயிலுவெயிலு கோடவெயிலு
    கொன்னுபோடும் கோடவெயிலு,
    எலும்பில்லாத உயிரயெல்லாம்
    எரிச்சிக்கொல்லும் கோடவெயிலு…

    அதுபோல
    அன்புவேணும் மனுசனுக்கு,
    அன்புயில்லா மனுசனத்தான்
    அறக்கடவுள் அழிச்சிருமே
    அந்த
    வெயிலப்போல அழிச்சிருமே…
    வெயிலுவெயிலு கோடவெயிலு
    கொன்னுபோடும் கோடவெயிலு…!

     

    Share
  • அப்பாவின் பேய்க் கதைகள்!

    -ரோஷான் ஏ.ஜிப்ரி

    சிறுபிராயம் முதல் எனக்குக்
    கதைகளில் கொள்ளைப் பிரியம் என்பதால்
    எப்பவும் அப்பா ஏதாவதொரு கதையினைச்
    சொல்லிக்கொண்டிருப்பார்!

    முதலில் பயங்காட்டுவதாய் வரும்
    ’பேய்’க்கதையில் தொடங்கி
    அரச கதை, பின் நரிக்கதை
    சிங்கம் புலிக்கதை, ’கிரீஸ்’ மனிதன் கதை
    மொழிகடந்த தெருக்கதைகள் என
    அது ஒவ்வொன்றும்
    நீண்ட கதைகளால் ஆன கதைகள்!

    அவற்றைக் கேட்க
    இனிமையாகவும், சுவரஸ்யமாகவும்,
    பயங்கரமானதாகவும் இருந்தன
    கற்பனையில் கதைகளைக்
    கட்டிச் சமைத்துக் கதைப்பது கேட்க
    அப்போது பிடித்தமானதாய் இருந்தது!

    ஆனால் பின்வந்த காலங்களில்
    அப்பாவின் கதைகள்
    சப்பையாகவும், குப்பையாகவும்
    சகிக்க முடியாதபடி இருந்தன கேட்க!

    பொய்க்குக் கூட பொருந்தவுமில்லை
    எனக்குப் புத்தி பிடிபட்ட விடயம்
    அப்பாவுக்குப் பிடிபடாமல் இருந்திருக்கலாம்
    அப்பா சொல்லிக் கொண்டிருக்கிறார்
    என்பதற்காக
    எல்லாக் கதைகளையும்
    கேட்டுக் கொண்டிருக்க முடியாது இல்லையா?

    இன்றும் அப்படித்தான்
    அப்பா கதை சொல்லத் தொடங்கினார்
    குறுக்கிட்ட நான்
    அப்பாவிடம் சொன்னேன்
    ”இது எனது முறை”
    நான் ஒரு கதை சொல்கிறேன் என்று!

    அப்பா காதுகளைக் கூர்மையாக்கினார்
    என் கதை கேட்க
    நான் சொன்னேன்
    அப்பாவுக்குரிய மரியாதையுடன்
    ”நீங்கள் ஓய்வெடுங்கள்!” என்று!

     

    Share
  • அதுவரும்!

    -ரோஷான் ஏ.ஜிப்ரி

    ஒரு பறைவையின் இறகு உதிர்வது போல்
    ஒரு பூவின் இதழ் விரிவதுபோல்
    சிறு பசியில் குழந்தை அழுவதுபோல்
    பெரும் நிசியில் மௌனம் நுழைவதுபோல்
    அதுவரும்…

    இருண்ட வானம் கலைவதுபோல்
    மிரண்டகாளை அலைவதுபோல்
    மூர்க்கத்தனத்தின் பிரளயத்தோடும்
    பார்க்க இயலாப் பரபரப்போடும்
    அதுவரும்…

    தவணை கேட்க மறுத்த நொடியாய்த்
    தலையணையோடு சரித்தபடியாய்த்
    தாலாட்டுக் கேட்டுச் சிரித்தவடிவாய்த்
    தாயவள் வயிற்றில் தரித்தபடியாய்
    அதுவரும்…

    துயரத்தின் உயரத்தையும்
    நீளத்தின் ஆழத்தையும்
    வாழ்க்கையின் கோலத்தையும்
    அறிந்துணர்ந்து மனிதன் ஆராய
    அதுவரவேண்டும்!

    அது வந்தால்தான்
    வாழ்க்கையின் மெய், பொய்
    இரண்டையும் இனம்பிரிக்க ஏதுவாகும்!

    இங்கு இருப்பவனுக்கும்,
    மண்ணைப் பிரிப்பவனுக்கும்
    அடுத்தவனுக்குக் குழியைப் பறிப்பவனுக்கும்
    அவனவனின் அனுமதியின்றியே
    அதுவரும்…

    அவனோ நீங்களோ நானோ அழைக்காமல்
    மரணம் என்னும்
    மலர்ச்செண்டு கொண்டு
    நம்மை நாடி அடைய
    அதுவரும்!

     

    Share
  • அயல்நாட்டு நிச்சயதார்த்தம்!

    -ரா.பார்த்தசாரதி

    தாயும் தந்தையும்  ஜாதகம் பார்த்தார்கள்
    உன்னை எனக்கு  முடிவு  செய்கிறார்கள்
    ஆம் உன்னை ஸ்கைப்பில் காண விரும்பினேன்
    உன் பெற்றோர் அனுமதியுடன் தொடர்பு கொண்டேன்!

    நான்  கடின உழைப்பால் முன்னேறினேன்
    பிறர் உதவி கொண்டு முன்னேறமாட்டேன்
    நீயும் என்னைப்போல் இருக்கவேண்டும் என நினைப்பேன்
    எதையும் தனித்து நின்று சமாளிக்க வேண்டுமென  எதிர்பார்ப்பேன்!

    உரையாடும்போது  உன் குடும்ப நிலையைக் கூறுகின்றாய்
    உன் எதிர்காலப் படிப்பிக்கும் அடி போடுகின்றாய்
    உன் குடும்பத்திற்கு ஒரு பங்கு அளிக்க வேண்டுகிறாய்
    நீயும் நானும் வாழ்கையில் சரிபாதி என்கிறாய்!

    வரும் முன்னே பல எதிர்பார்ப்புக்கள், கட்டளைகள்
    இதற்கெல்லாம்  ஒத்துக்கொண்டால்தான்  திருமணம்
    நிச்சயிக்கப்பட்டும்  நின்றுபோன திருமணங்கள்
    எதையும் சாதரணமாகக் கருதும் இக்காலத் திருமணங்கள்!

    திருமணம் என்பது சொர்க்கத்தில்  நிச்சயிக்கப்படுகிறதா?
    தாய் தந்தையர் பார்த்து  நிச்சயிக்கப்படுகிறதா?
    ஆண், பெண்  நேரிடை    சந்திப்பில் முடிவாகிறதா?
    ஜாதகத்தால்  நல்ல ஜோடிகள் புறக்கணிக்கப்படுகிறதா?

    திருமண  வயது வந்தாலே  ஆண், பெண்ணிற்குப் பல எண்ணங்கள்
    எதையும் பிறர் நிலையில் நின்று நினைக்காத  மனிதர்கள்
    இரு கைகள் இணைந்தால்தான் வாழ்க்கை என உணர்ந்தவர்கள்
    வரதட்சணை இல்லாத திருமணங்களே சிறந்த திருமணங்கள் !

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 12-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான ஒளிப்படத்தைத் தந்திருக்கும் திரு. பிரேம்குமார் சச்சிதானந்தம், இப்படத்தைத் தேர்வுசெய்திருக்கும் திருமிகு. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் வல்லமையின் நன்றி.

     man

    பச்சைப்பசேல் என்ற வயல்வெளி, அருகே மாற்றுத் திறனுடைய பெரியவர் ஒருவர், அவரின் இருபுறமும் இளைய பாரதத்தினர் இருவர், இம்மக்களின் உள்ளம்போல் உயரப் பறக்கும் பலூன்கள் என்று பலவகை வண்ணக்கலவையோடு கூடிய இப்புகைப்படம் நம் உள்ளத்தில் பல்வேறு சிந்தனைகளை எழுப்பவே செய்கின்றது.

    அதோ… அந்தப் பெரியவரின் முகத்தைப் பாருங்கள்! அதில் ஏதோவோர் உறுதி பளிச்சிடுவதைக் காணமுடிகின்றது. அவர் முகத்தின் உறுதி அகத்திலும் இல்லாமலா போய்விடும்?

    ஐயா!

    உடலின் ஊனம் தனைக்கண்டு
    உள்ளம் தளரா மனங்கொண்டு
    திடமாய் உழைத்தால் உயர்வுண்டு
    தடைகள் கடக்க வழியுண்டு
    மாற்றுத் திறனை உடையவரே
    முயன்றால் ஒருநாள் இவ்வுலகை
    மாற்றும் திறனும் நீர்பெறுவீர்
    மாநிலம் போற்றும் நிலைபெறுவீர்

    என்று அவருள் நம்பிக்கை விதைகளை நாமும் தூவுவோம்!

     இனி, படக்கவிதைப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளில் கருத்தாழமுள்ளவற்றை முதலில் காண்போம்!

    ***

    பலூனே உயரப் பறக்கும்போது அதனினும் பலமுள்ள மனிதன் துவளலாமா? எனப் பொருத்தமாய்க் கேள்வி எழுப்பும் திரு. கனவு திறவோனின் வரிகள்…

    காற்றடைத்த பலூனே
    உயரப் பறக்கும் போது
    உயிரடைத்த
    உடம்பு
    விழுந்தா விடும்
    மண்ணில்?
    எழுந்து நிற்க
    கால்கள் வேண்டாம்
    தூக்கி நிறுத்த
    துணைகள் வேண்டாம்
    இதயம் போதும்!
    மிரள வேண்டாம் நண்பா
    என் கவிதைக்குள் உன்னைக்
    காட்சியாக்கி
    ஊருக்குள் உன் உரத்தை
    உரக்கச் சொல்வேன்…
    துணிந்து வா நண்பா!

    ***

    ’காலம் எங்கே போய்விடும்; அது என்னையும் வாழ வைத்திடும்’ என்ற மாற்றுத் திறனாளியின் மனோதிடத்தைக் காட்டும் திரு. ரா. பார்த்தசாரதியின் வரிகள்…

    என்னைப் போன்ற மாற்று திறனாளிக்கு  மனதில் பலமுண்டு 
    வாழ்க்கையில்  முன்னேற  எனக்கு என்றும் திறனுண்டு 
    வாழ்க்கையில் ஏமாற்ற பலரும், சிலரே உதவி செய்வதுண்டு 
    எங்கே சென்றிடும் காலம்! அது  என்னையும்  வாழவைக்கும் !

    ***

    ”ஊனம் உடலிலிருந்தால் என்ன? உண்மையாக உழைத்து உயர்பவர்கள் நாங்கள்!” என்று வீரமுழக்கமிடும் பெரியவரின் பெற்றியைப் போற்றும் திருமிகு. ஸ்ரேயாரேவதியின் வரிகள்…

    பச்சை பசுமைகளில் பேரப்பிள்ளைகள் !
    ஊனமாக இருந்தாலும் உண்மையாக உழைத்திடுவோம் !
    இன்பமாக வாழ்ந்திடவே விற்றிடுவோம் வண்ண பலூன்கள் !
    ஒற்றுமையாய் இருந்தால்தான் கோடிநன்மை அடைந்திடலாம்!
    அறிந்திடுங்கள் மானிடரே! நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்களே!

    ***

    ’நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமுமிருக்க, ஊனமொரு தடையில்லை’ என்று கம்பீரமாய் முறுவலிக்கும் மாமனிதனைக் கவிதையில் காட்டியிருக்கும் திரு. ரோஷான் ஏ. ஜிப்ரியின் வரிகள்…

    வானவெளி பெருத்த ஒன்று
    உணர்ச்சிக்கு தோணவில்லை
    ஊனமிது வருத்தமென்று
    பலூன் விற்றோ,வடை விற்றோ
    வாழ விழியிருக்கு
    கங்கில் தெறித்த களம்மீண்ட எந்தனது
    நெஞ்சில் உரமிருக்கு நீ எதற்கு கலங்குகிறாய்…
    […]

    மூங்கில் பிடிக்குள்
    முறுவலிப்பாய் இருக்கின்றேன்
    தேங்கி அடங்கிடாமல்
    தேடலுக்காய் நடக்கின்றேன்

    ***

    மாலையிலே தான்கொண்ட போதைமயக்கம் தன்வாழ்க்கைப் பாதையையே மாற்றிப் பரிதவிக்கவிட்டதை வேதனையோடு நினைவுகூரும் பெரியவரைப் பாட்டில் காட்டியிருக்கும் திரு. கட்டாரியின் வரிகள்…

    மசண்டப் பொழுது சாய – போதயில
    மல்லாக்க நானுஞ் சாய…
    என்னப்போல ஏத்திவந்த – ஒரு
    எளந்தாரி லாரிக்காரன்..
    காங்கிரீட்டு பாலத்தோட
    கழட்டிப் போனாங் எங்கால…..
    ஊனக்கால மூணுகாலா
    உத்தவுக பழிச்சிப் பாட..
    காரச்செவரு..சாணித்திண்ண
    கழனி தோட்டம் எல்லாம் போக..
    கப்பிரோடுக் கால்நடையா
    கருவேலஞ் செடி தெளிநெழலு….
    நாந்திணிச்ச நாறக்காத்து– எந்
    நாஞ்சிவிட்ட மூச்சுக்காத்து
    ரப்பரு மூட்டைக்குள்ள ரம்மியமா
    சிரிச்சியாட….
    நாம்பெத்த புள்ள ரெண்டும்
    நடுவீதி வந்திருச்சே…..

    ***

    ’நிலையில்லா வாழ்க்கையிலே மனிதருக்குள் பேதமும் வெறுப்பும் எதற்கு? ஆருயிர்க்கெலாம் அன்புசெயலன்றி மனித வாழ்வின் பயனேது?’ என்ற உயர்தத்துவங்களை உதிர்க்கும் காயம்பட்ட மனமொன்றைக் கண்முன்னே நிறுத்தும் திருமிகு. துஷ்யந்தியின் வரிகள்…

    குழந்தைக்கு இருக்கும்
    கள்ளமில்லா அன்பு உள்ளம்
    படித்தவர்க்கு பாரிலே
    இல்லாது போனதேன்..???

    உதறிவிட்ட உறவுகளால் நான்
    தெருவோரம் நின்றாலும்
    அன்பு காட்ட மறுக்கவில்லை
    மாசில்லா மழலைகள்…!

    வாழுகின்ற காலத்தில்
    பிறர் வாழ்விற்கு வாசனை
    சேர்க்க முடியாவிடினும்,
    பிறர் வாழ்வின் வாசனையை
    போக்காது காப்போமே…!

    “மண்ணிலே பிறந்ததெல்லாம்
    மண்ணுக்கே சொந்தமாம்”
    இதையுணர்ந்து ,
    வாழும் சில நொடிகளை
    மகிழ்வுடன் வாழ்வோமே.!!!

    ***

    கற்சிலைக் கடவுளரின் இரும்பு உண்டியலை நிரப்பும் மக்கள், பேசும் நற்சிலைகளாய் வீதியில் நிற்கும் ஏழைமாந்தர்க்கு உண்டி கொடுத்து அவர்தம் வயிற்றை நிரப்புவதில்லை! கடவுளரும் இக்கொடுமையைக் கண்ணெடுத்துப் பார்ப்பதில்லை! எனும் கசப்பான உண்மையைக் கவினுற விளம்பும் திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கரின் வரிகள்…

    திருவிழாக் கோயிலில்
    காற்றுப்பலூன் விற்க
    வந்தோம் வயிற்றுப்பசி
    மட்டுமே ஜெயிக்க
    நிற்கிறோம் கால்கடுக்க..!
    உச்சி வெய்யிலிலே
    வாடிப்போகுது பிஞ்சுமனம்
    நெஞ்சில் ஈரம்
    இருப்பவர் வாங்குங்க
    அண்ணாச்சி ஒண்ணாச்சும் …!

    கோயிலுக்குள் கூட்டம்
    பக்திக்குக் குறைவில்லை
    இரும்பு உண்டியல்
    நிறைந்தாலும் நிறையும்
    ஏழைகள் வயிறு
    ஒருநாளும் நிறையாதே
    பக்தர்கள் கண்களில்
    சிலைக்கு மட்டுமே இடம்
    சிலையாக நிற்கும்
    எங்கள் பக்கமும்
    திரும்பட்டுமே மனம்..!
    முடிந்தால் கல்லுச்சாமி
    நீ எங்கிருக்கே
    எங்களுக்கும் காமி…!

    ***

    ’ஊன்றுகோல் இல்லை ஐயா…இது எனது மூன்றாம் கால்! விரிந்த மனத்தின் வெளிச்சத்தைக் காட்டவே இப்புகைப்படம்; என் ஊனத்தைப் பறைசாற்ற அன்று!” என்று மிடுக்காய்ப் பேசும்  மானுடனைப் போற்றும் திரு. மெய்யன் நடராஜின் வரிகள்…

    ஊன்றுகோல் என்றே உவமானம் சொல்லாதீர்
    மூன்றுகால் என்றே முடிவெடுங்கள் –தோன்றும்
    நிலைபார்க்கும் நீங்கள் நினைக்கும் வகைஎன்
    அலையில்லை வாழ்க்கை அமிழ்து 

    பேரக் குழந்தைகள் பேருதவி யால்நெஞ்சு
    ஈர வயலாய் எழில்பூத்து – சாரல்
    மழைபோல் மனம்நனைக்கும் மட்டில்லா அன்பால்
    தழைத்திருக்கும் வாழ்க்கை வயல்.
    […]
    வகையற்று வாடும் வரலாற்று சோக 
    புகைப்பட மல்ல இதுவே –முகைபோல் 
    விரிந்த மனசின் வெளிச்சத்தைக் காட்ட 
    தெரிந்த உணர்வின் திறம்.

    ***

    ’மன ஊனம் கொளலே தீது! உடல் ஊனம் முன்னேற்றத்திற்கென்றும் தடையாயிருந்திடாது!’ எனும் உற்சாகச் செய்தியை வரலாற்றுச் சாதனையாளர்கள் வாயிலாய் அறியத்தரும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் வரிகள்…

    மன ஊனத்தைவிட
    உடல் ஊனம்பெரிதல்ல
    […]
    பீதோவன்செவிடாகிருந்த
    நிலையில்தான் 
    சாகாவரம் பெற்ற ராகங்களை
    உருவாக்கினார்
    கவிஞர் மில்டன்
    பார்வையற்ற நிலையில்தான்
    சொர்க்கம் இழக்கப்படல் 
    என்கின்றகாவியம் எழுதினார்
    ஜூலியஸ்சீசர்
    காக்கா வலிப்பு  நோய்
    இருந்தபோதும் மாவீரனாய்
    திகழ்ந்தார்
    இவர்கள்யாரும் யாரிடமும்
    அனுதாபத்தை
    எதிர்பார்க்கவில்லை
    […]
    இதோஇந்த மனிதனும் அப்படியே
    தன் மகன்களின்
    சந்தோஷத்தில் மகிழ்ச்சி கொள்ளும்
    மன உறுதி கொள்கின்றார்

    ***

    உழைப்பின் உயர்வைக் கண்டுமகிழ்ந்து காற்றாடியாய்க் காற்றில் பறக்கும் நெஞ்சத்தை நேயமுடன் விவரிக்கும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகள்…

    போரின் வக்கிரங்கள் கொண்டு போயின
    வீரியமிக்க காளையின் காலையும் தான்!
    ஊன்று கோல்கள் ஆகிய மூங்கில்
    ஈன்றது அவன் தைரியத்தை மீண்டும்!
    […]
    உழைத்த கரங்கள் மண்ணில் மீண்டும்
    விதைத்த முளைகள் பயிர் கொண்டு பசுமை!
    பசுமை வயலில் மட்டுமா விளைந்தது
    தேசுடன் அவன் மனதிலும் தான்!
    பாசமாய் அவன் பெற்ற செல்வங்கள்
    மாசிலா அன்புடன் ஊன்றுகோல்களாய் அவனைச் சூழ்ந்திட
    லேசாகிக் கரைந்து மறைந்தன அவன் மனதின் ஊனங்கள்!
    […]
    நீலவானில் நீந்தும் காற்றாடி ஆன அவன் இதயம்!
    சீலமாய் உரைத்தது பகிரங்கமாக …ஒரு பழமொழி
    “
    முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்” என்றே
    பச்சை
    வயல்களும் நீலவானமும் சாட்சியமாக…

    ***

    அருமையான கவிதைகளைப் படைத்தளித்திருக்கும் கவிஞர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கின்றேன்!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைச் சந்தித்துவருவோம் வாருங்கள்!

    காலில்லை என்று சோர்ந்துபோகாமல், கோலின் துணையோடு, தாளை(உழைப்பு) நம்பிப் புறப்படும் பெரியவரின் மனத்தில் ஊடாடும் ஆசைகளை இயல்பாய்க் கொணர்ந்திருக்கும் கவிதையொன்றைக் கண்ணுற்றேன்.

    அக்கவிதை…

    ஒற்றைக்கால் இல்லையென
    ஒருநாளும் சோர்ந்ததில்லை
    அற்றைக்கிரை தேடுதற்கு
    அதிகாலைக் கிளம்பிவிட்டேன் !

    பெற்றமகன் துணையிருக்க
    பெருமகிழ்வு கூடிடுதே
    விற்றிடுவேன் பலூனூதி
    விரட்டிடுவேன் வறுமைதனை !

    உற்றதுணை யாயெனக்கு
    உதவுமிரு ஊன்றுகோலே
    பற்றற்ற வாழ்க்கையிதே
    பழக்கமாக ஆயிற்றே !

    கற்காத காரணத்தால்
    கவலையென்னை வாட்டுவதால்
    கற்பிப்பேன் பிள்ளைக்கு
    கடமையது எந்தனுக்கு !

    குற்றுயிராய்க் கிடந்தாலும்
    குனிவுவர விடமாட்டேன்
    நற்பேரும் நானெடுப்பேன்
    நன்மைகளும் செய்திடுவேன் !

    சுற்றியுள்ள பசும்வயலும்
    சுவர்க்கம்தான் எங்களுக்கு
    வற்றாத வரமாக
    வசமாகும் வானமுமே ….!!

    இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு. சியாமளா ராஜசேகரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்க் குறிப்பிட விரும்புகின்றேன்.

    ***

    ’சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு’ என்பார் வள்ளுவப் பேராசான். ஆம்! வாழ்வில் துயரமும், துன்பமும் வரிசைகட்டி நிற்கும்போதுதான் அயராத நெஞ்சுரம் வேண்டும்; அதுவே துன்பத்தைத் தூர்த்தெறியும் கோடரி. அவ்வகையில், பிறரின் அனுதாபம் வேண்டாத, வீரவுணர்ச்சிமிக்க மாற்றுத் திறனாளியைத் தன் கவிதையெனும் உளிகொண்டு சிறப்பாய்ச் செதுக்கியிருக்கும் திரு. ருத்ரா. இ. பரமசிவனை இவ்வாரத்தின் பாராட்டுக்குரிய கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    மூங்கில் எலும்புகள்
    முட்டு கொடுத்தது
    இந்த உலகத்தின் 
    மொத்த கனத்தையும்
    துணிக்கட்டு

    துணிச்சலில் நெய்த துணியில்.
    இன்னும்
    கனவு பாக்கியிருக்கிறது
    […]
    சொர்க்கத்தையும்
    கடவுள்களையும்
    அதோ பார்க்கிறேன்
    வண்ண வண்ணப் பலூன்களாய்.
    எங்களைக்கொல்ல‌
    உங்களுக்கு துப்பாக்கி குண்டுகள்
    தேவையில்லை.
    “
    த்சோ த்சோ”…போதும்
    அந்த காலின் மிச்சத்தையா தேடுகிறீர்கள்.
    அதை நான் 
    அவன் சற்று வலியில் ஓய்ந்தால் 
    எடுத்துக்கொள்ளட்டுமே
    என்று இரவல் கொடுத்திருக்கிறேன்
    ஒலிம்பிக் வீரன்
    “
    பீலே”வுக்கு.

    ***

    ஊக்கத்தோடு ஆக்கங்களைத் தொடர்ந்து படைத்தளித்துவரும் அனைத்துக் கவிஞர்களுக்கும் என் நன்றி!

     

    Share
  • ஆடைகட்டி வந்த நிலவோ …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    அமுதவல்லி

     

    ஆடைகட்டி வந்த நிலவோ …

    நிலவுக்கு ஆடைகட்டிய முதல் கவிஞன் தமிழனாகத்தான் இருக்க முடியும்! அதுவும் பண்பாடு, கலாச்சாரம், இவற்றை தன் வரிகளில்கூட விட்டுக்கொடுக்காத பட்டுக்கோட்டையார் வரைந்த பாடல்! டி.ஆர்.மகாலிங்கம் – பி.சுசீலா குரல்களில் அமுதவல்லி திரைப்படத்தில் அமர்க்களமாய் அமைந்த பாட்டு! விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் விளைந்த பாட்டு!

    சில பாடல்கள் இன்னார் பாடியதால்தான் பெருமை பெறுகின்றன என்று சொன்னால் அது மிகையில்லை. அவ்வகையில் டி.ஆர்.மகாலிங்கம் தவிர வேறு எந்தக் குரல் இப்பாடலுக்கு பொருத்தமானதாய் அமைந்திருக்க முடியும்? இசையமைப்பாளர் இசைவடிவம் தேர்ந்தெடுப்பதுபோலவே இன்னார் பாடினால் இந்தப் பாடல் நன்றாக வரும் … ஏற்புடையதாக இருக்கும் என்று முடிவு செய்வதிலும்கூட வெற்றியின் ரகசியம் அமைந்திருக்கிறது!

    மடைதிறந்த வெள்ளமாய் கவிதையெனச் சொல்லும் திறம் என்ன சொல்ல? இப்பாடல் மெட்டுக்காக எழுதப்பட்டதா… அல்லது எழுதப்பட்டபின் இசையமைக்கப்பட்டதா என்பது உருவாக்கியவர்களுக்கே வெளிச்சம்… கேட்கின்ற போது மனம் துள்ளச் செய்வது என்னமோ நிச்சயம்!!

    காலங்கள் பல கடந்தாலும் காவியமாய் உலவும் பாட்டு! கனிவாய் சொல்லமுதம் சுகமாய் பெருகிடும்போது கேட்காத உள்ளம் ஏது? தெம்மாங்கின் நடைகலந்த இசையமைப்பில் தென்றல் தீண்டும் சுகம் தரும் கீதமிது!!

    ஆடை கட்டி வந்த நிலவோ
    கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
    இவள் ஆடை கட்டி வந்த நிலவோ
    கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
    குளிர் ஓடையில் மிதக்கும்
    மலர் ஜாடையில் சிரிக்கும்
    இவள் காடு விட்டு வந்த மயிலோ
    நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ

    துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
    சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை
    எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
    தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
    கிளை தான் இருந்து கனியே சுமந்து
    தனியே கிடந்த கொடி தானே
    கண்ணாளன் உனைக் கலந்தானந்தமே பெற
    காவினில் வாழும் கிளி நானே
    துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
    சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை

    அந்தி வெய்யில் நிறத்தவளோ
    குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ
    உந்தி உந்தி விழும் நீரலையில்
    ஓடி விளையாடி மணம் சிந்தி வரும் தென்றல் தானோ
    இன்பம் தந்த மயில் இவள் தானோ
    ஆடை கட்டி வந்த நிலவோ
    கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ

    ஆஹா…ம்ம்…லாலா…
    அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
    அஞ்சி அஞ்சி ஓடுவதில் லாபமில்லை
    வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
    மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை

    இதயம் கனிந்து எதையும் மறந்து
    இருவர் மகிழ்ந்து உறவாட
    நன் நேரமிதே
    மனம் மீறிடுதே
    நன் நேரமிதே
    மனம் மீறிடுதே
    மனம் மாளிகை ஓரம் ஆடிடுவோம்
    [ஆடை கட்டி வந்த நிலவோ]

    “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
    திரைப்படம்: அமுதவல்லி
    கவிஞர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    பாடியோர்: டி ஆர் மகாலிங்கம், பி சுசீலா
    காணொளி: https://youtu.be/G8QcPKPYc2Y

    “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

     

    “ஆழ்ந்து படித்தென்ன! , ஆராயா(து) ஆவைப்போல்,
    வீழ்ந்து கிடப்போர்க்கே விஷ்ணுபதம், -சூழ்ந்த
    அனன்யபக்தி யோடு அவன்தாள் பற்றல்,
    வினய விசிஷ்டாத் விதம்”….கிரேசி மோகன்….

    Share
  • வல்லமை டாட் காம் பற்றி என்னுடைய கருத்து!

    வல்லமை டாட் காம் பற்றி என்னுடைய கருத்தை கீழே கொடுத்திருக்கிறேன்.

    வல்லமை டாட் காமில் முதன் முறையாக நுழைந்தேன். பார்த்தேன். திகைத்தேன். !கடல் மாதிரி இருக்கிறது. சிந்தனை, செயல், முன்னேற்றம் என்ற மூன்றையும் தாரக மந்திரமாக கொண்ட வல்லமை பலருக்கு உபயோகமாகயிருக்கிறது என்பதைப் பார்த்தாலே தெரிகிறது. அதில் பிரசுரமாகும் கட்டுரைகள், கதைகள், கவிதைகள், நிழற்படங்கள், தலையங்கம், நேர்காணல்கள், சமையல் பகுதி, ஓவியங்கள், ஒலி வெளி, காணொளி மற்ற பகுதிகள் பிரமிக்க வைக்கின்றன. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் “ பிரமாதம் “ என்பேன்.

    எவ்வளவு பயனுள்ள கட்டுரைகள், பொருள் பொதிந்த தலையங்கம் , சுவைக்க சுவைக்க திகட்டாத கவிதைகள் , எண்ணிறந்த படைப்புகள் ! எல்லாவற்றையும் படிக்க ஒருவருக்கு நேரம் இருக்குமா என்பது சந்தேகம்தான். ஒரு நாளுக்கு ஒருமுறையாவது எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது வலையத்தில் நுழையலாம். விரும்பியதை படிக்கலாம். தொடர்ச்சியாக வல்லமையை ஒருவர் படித்து கொண்டு வந்தால் அவருடைய தமிழ் வளமாகும் என்பது திண்ணம். ஆர்வம் இருந்தால் கவிதையை உருவாக்கலாம். ஐந்து வயதில் இவ்வளவு முன்னேறியிருப்பது சாதனைதான். ஆண் வெற்றியாளருக்குப் பின்னால் ஒரு பெண்ணும், ஒரு பெண் வெற்றியாளருக்குப் பின்னால் ஒரு ஆணுமிருப்பதை போல் வல்லமையின் சாதனைக்கு, வெற்றிக்குப் பின்னால் ஆசிரியர் குழுமம் இருக்கிறது. அவர்களுடைய கடின உழைப்பு புரிகிறது. அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். வல்லமை மேலும் மேலும் விருட்சமாக வளர என் வாழ்த்துக்கள்.

    என். ஸ்ரீதரன்

    Share
  • ஆறாம் ஆண்டு தொடக்கம்

     
    நான்கு எழுத்திற்கு ஓர் சிறப்புண்டு,
    வல்லமை என்கிற பெயருண்டு

    ஆறாம் ஆண்டு அடியெடுத்து வைத்து,
    ஒப்பற்ற மின்னிதழாய் தரணியில் நிலைத்து ,

    கவிஞர்களும், எழுத்தாளர்களும் ஒத்துழைப்பினை நல்கட்டும்
    நற்றமிழின் நல்லிதழாய், என்றும் திகழட்டும் ,

    ரா.பார்த்தசாரதி

    Share
  • மனங்கனிந்த வாழ்த்துகள்

    ஆறாம் ஆண்டு அடியெடுத்து வைத்த “வல்லமை”க்கு வாழ்த்துக்கள்.

     

    இந்த “ஆறு” பெருகி
    எழுத்துக்களின்
    காவிரிக்கும்
    பூவிரிக்கும்
    தமிழின் மணம் விரிக்கும்.
    “சொல் பொருது”இரங்கும்
    மல்லல் பேர் யாறாய்
    நம் மனம் உள் பொருந்தி
    மகிழ்ச்சி நிறைக்கும்.
    இயக்கும் ஆசிரியர் குழுவுக்கும் படைப்பாளி நண்பர்கள் யாவருக்கும் என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.

    அன்புடன் ருத்ரா

     

    Share
  • ஆறாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    வல்லமை மின்னிதழ், 6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்தத் தருணத்தில், நாம் கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார்ப்போம். இன்று வரை சுமார் 8 ஆயிரம் இடுகைகள், 9.7 ஆயிரம் பின்னூட்டங்கள், 2.2 லட்சம் வாசகர்கள், 8.1 லட்சம் பக்க நோக்குகள் ஆகியவற்றுடன் வல்லமை தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

    161 நாடுகளிலிருந்து வாசகர்கள்,வல்லமைக்கு வந்திருந்தாலும், 70 நாடுகளுக்கும் மேலிருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வந்துள்ளார்கள். இந்தியா, அமெரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, கனடா, அமீரகம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி நாடுகள், இதே வரிசையில் முதல் 10 இடங்களை வகிக்கின்றன.

    Vallamai_6th_year_300x1251

    கடந்த ஓராண்டில் வல்லமை, 4 போட்டிகளை நடத்தியுள்ளது. என் பார்வையில் கண்ணதாசன், மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் ஆகிய கட்டுரைப் போட்டிகளைக் கவிஞர் காவிரி மைந்தன் மற்றும் அவர் நண்பர்களுடன் இணைந்து நடத்தி முடித்துள்ளது. எழுத்தாளர் வையவனின் ஆலோசனைப்படி, பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்ற மாதாந்திரக் கட்டுரைப் போட்டியை அறிவித்துத் தொடர்ந்து நடத்தி வருகிறது. வாராந்தரப் படக்கவிதைப் போட்டியை வாசகர்களின் அமோக ஆதரவுடன் நடத்தி வருகிறது. தேமொழியின் யோசனையை ஏற்றுத் தொடங்கப்பட்ட இந்தப் போட்டிக்காக, சாந்தி மாரியப்பன் படங்களைத் தேர்ந்தெடுத்து அளிக்க, மேகலா, இதற்கான நடுவராக இருந்து, உரியவர்களை நன்முறையில் தேர்ந்தெடுத்து வருகிறார்.

    வாரந்தோறும் ஒருவரை வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறோம். அந்த வகையில் கடந்த ஆண்டு முழுவதும் சிறந்த ஆற்றலாளர்களை அடையாளம் கண்டு கவுரவித்துள்ளோம். இந்தப் பணியை அன்பர்களின் பரிந்துரைகள் அடிப்படையில், ஆசிரியர் குழுவுடன் கலந்தாலோசித்துத் தேமொழி சிறப்பாகத் தொடர்கிறார்.

    இந்த ஓராண்டில் பல்வேறு தொடர்களை வல்லமை வெளியிட்டுள்ளது. சொற்சதங்கை – கவியுள்ளம் – காற்று வாங்கப் போனேன் (கே.ரவி), திருமால் திருப்புகழ் – கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம் (கிரேசி மோகன்), இசைக்கவியின் இதயம் (இசைக்கவி ரமணன்), என்னதான் இருக்கிறது வேதத்தில் (சு.கோதண்டராமன்), அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (சுபா), ஐந்து கை ராந்தல் (வையவன்), சுட்டும் விழிச்சுடர் (பவளசங்கரி), இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (சக்தி சக்திதாசன்), கவியரசு கண்ணதாசன் (காவிரி மைந்தன்), அவன், அது , ஆத்மா – காலம் (மீ.விசுவநாதன்), உன்னையறிந்தால் (நிர்மலா ராகவன்), நான் அறிந்த சிலம்பு (மலர்சபா), குறளின் கதிர்களாய் (செண்பக ஜெகதீசன்), தேகமும் யோகமும் (கவியோகி வேதம்), காதல் நாற்பது (ஜெயபாரதன்), ஓலைத் துடிப்புகள் (கவிஞர் ருத்ரா), சிகரம் நோக்கி (சுரேஜமீ)… எனத் தொடரும் தொடர்கள், வல்லமைக்கு வளமையும் பெருமையும் சேர்ப்பவை.

    இவையல்லாமல், நாகேஸ்வரி அண்ணாமலை உள்ளிட்ட பலரும் வெவ்வேறு நடப்புகளைக் குறித்துப் பத்திகளை எழுதி வருகிறார்கள். ஆய்வறிஞர்களும் பேராசிரியர்களும் தங்கள், ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி வருகிறார்கள். இவை வாசகர்களின் சிந்தனைக்கு விருந்து படைத்து வருகின்றன.

    கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுத்து வடிவில் மட்டுமின்றி,ஒலி வடிவிலும் வல்லமையில் கேட்க முடியும். கே.ரவி, இசைக்கவி ரமணன், ஆர்.எஸ்.மணி உள்ளிட்ட பலரின் பாடல்கள், வல்லமை நேயர்களின் நெஞ்சம் கவர்ந்தவை. எழுத்தும் ஒலியும் இணை சேர்ந்து வருவதைப் போல், எழுத்தும் ஓவியமும் சு.ரவியின் ஆக்கங்களில் இணை சேர்ந்து, வாசகர்களை வசீகரிக்கின்றன.

    வல்லமையின் இடுகைகளின் தொகுப்பினை ஒவ்வொரு நாளும் உங்கள் மின்னஞ்சல் பெட்டிக்கே கொண்டு சேர்க்கும் வசதியும் வல்லமையில் உண்டு. சிறிது காலம் செயல்படாமல் இருந்த இந்த வசதி, நம் தள நிர்வாகி ஸ்ரீநிவாசன் அவர்களின் உதவியால், இப்போது மீண்டும் செயல்படுகிறது. வாசகர்களும் படைப்பாளர்களும் வல்லமை முகப்பில் பின்னூட்டங்களுக்கு மேலே உள்ள பெட்டியில் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை இட்டு, வல்லமையின் எல்லா இடுகைகளையும் அறியலாம்.

    வல்லமையின் சீரிய வளர்ச்சியில் பலருக்கும் பங்கு உண்டு. கனிவும் அர்ப்பணிப்பும் மிகுந்த திருமதி பவளசங்கரி தலைமையிலான ஆசிரியர் குழுவினர், எங்கள் ஆலோசகர்கள், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அனைவருக்கும் எமது நன்றிகள். வல்லமைக்குச் சிறப்பான படைப்புகளை அளித்து வரும் படைப்பாளர்கள், ஓவியர்கள், இவற்றைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்கள், கூகுள் – ஃபேஸ்புக் – ஃபிளிக்கர் – வாட்ஸ் அப் குழுமங்களில் துடிப்பாக இயங்கி வரும் அன்பர்கள் யாவருக்கும் நன்றிகள்.

    இந்த இனிய தருணத்தில் இசைக்கவி ரமணன் அவர்களின் கனிந்த வாழ்த்து, நமக்கு உற்சாகம் ஊட்டுகிறது.

    இணையதளம் என்றாலும் இனிமையினால் நற்பண்பால்
    இதயதள மாகிவிட்ட வல்லமையே வாழ்க!
    அணைத்தபடி அனைவரையும் அரவணைத்துச் செல்லுகின்ற
    அன்னையவள் கரம்போன்ற வல்லமையே வாழ்க!

    கணப்பாகக் குளிர்நீக்கும்! கடுங்கோடைப் பொழுதினிலே
    கற்கண்டுப் பனித்துளியாய்க் கால்நனைத்து மனம்குளிரும்!
    பிணைப்பாகி, ஒரு குழுமம் பெருங்குடும்ப மாகியதே!
    பிரிவில்லா உறவொன்றில் நெஞ்சமெல்லாம் நெகிழ்கிறதே!

    ஏதேதோ மரம்கொடிகள் எத்தனையோ மலர்வகைகள்
    எல்லோர்க்கும் தனித்தனியாய் சேர்ந்திருக்க இடமுண்டு!
    காதலுண்டு கவிதையுண்டு வாதமுண்டு பேதமுண்டு
    கடுகளவும் பகையின்றிக் கைகுலுக்கும் பண்புண்டு!

    எனத் துல்லியக் கவிபாடி, நம் உள்ளங்களை அள்ளிய தெள்ளியர், அவர்.

    பல்லாண்டு வாழ்க! பலநூறு காண்க!
    பைந்தமிழின் களஞ்சியமாய்ப் பலவிதமாய் விரிக!
    வல்லோரின் சங்கமத்தில் வளரட்டும் வல்லமை
    வழிநெடுகத் துணையாக வாழ்த்தட்டும் சிவனுமை!

    என்ற அவரின் வாழ்த்து, வல்லமைக்கு மேன்மேலும் வலிமை ஊட்டுகிறது. அவரது கூற்றின்படி, பைந்தமிழின் களஞ்சியமாய் விரிவோம். பாரெங்கும் தொண்டுகள் புரிவோம்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    craz

    ”நிறத்துக்கு நீலம், நினைப்புக்கு லீலை,
    கருத்துக்கு கொள்மனமே கீதை, -சிரத்துக்குள்,
    சீர்மல்கும் சீதரனை சிந்திக்க ஜீவன்கண்
    ணீர்மல்க ஆன்மாவா கும்….

    ”பார்த்தோர் பசுமையாய், பாராதோர் பூதமாய்,
    சேர்த்தணைக்கும் பெட்டைக்கு சேவலாய், -ஆர்த்தொலிக்கும்,
    சங்கில் மவுனமாய், சக்கரத்தில் சீற்றமாய்,
    எங்கும் திகழ்வோனை ஏத்து….கிரேசி மோகன்

    Share
  • சாட்சி கணபதி பெருமாள்!

    craz

    காட்சி அளிக்கின்றார் கீழத் திருப்பதியில்
    மாட்சிமை மாம(ன்)அல மேலுமண, -சாட்சியாய்:
    நாம கணபதியை நாம வணங்கினால்,
    ஷேமம் ஜரகண்டி ஸ்பீட் ….கிரேசி மோகன்….

    “மாண்டு பிறந்திடும் மானுட வாழ்க்கையில் –
    யாண்டும் இருப்பு எழுத்தொன்றே -ஆண்டு –
    விழாகாணும் வல்லமைக்கு வாயார நன்றி –
    (ஆசிரிய )குழாமுக்கோர் ஒபோட்டுக் கூவு “….கிரேசி மோகன் ..

    Share