அண்ணாகண்ணன்

வல்லமை மின்னிதழ், 6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்தத் தருணத்தில், நாம் கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார்ப்போம். இன்று வரை சுமார் 8 ஆயிரம் இடுகைகள், 9.7 ஆயிரம் பின்னூட்டங்கள், 2.2 லட்சம் வாசகர்கள், 8.1 லட்சம் பக்க நோக்குகள் ஆகியவற்றுடன் வல்லமை தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

161 நாடுகளிலிருந்து வாசகர்கள்,வல்லமைக்கு வந்திருந்தாலும், 70 நாடுகளுக்கும் மேலிருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வந்துள்ளார்கள். இந்தியா, அமெரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, கனடா, அமீரகம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி நாடுகள், இதே வரிசையில் முதல் 10 இடங்களை வகிக்கின்றன.

Vallamai_6th_year_300x1251

கடந்த ஓராண்டில் வல்லமை, 4 போட்டிகளை நடத்தியுள்ளது. என் பார்வையில் கண்ணதாசன், மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் ஆகிய கட்டுரைப் போட்டிகளைக் கவிஞர் காவிரி மைந்தன் மற்றும் அவர் நண்பர்களுடன் இணைந்து நடத்தி முடித்துள்ளது. எழுத்தாளர் வையவனின் ஆலோசனைப்படி, பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்ற மாதாந்திரக் கட்டுரைப் போட்டியை அறிவித்துத் தொடர்ந்து நடத்தி வருகிறது. வாராந்தரப் படக்கவிதைப் போட்டியை வாசகர்களின் அமோக ஆதரவுடன் நடத்தி வருகிறது. தேமொழியின் யோசனையை ஏற்றுத் தொடங்கப்பட்ட இந்தப் போட்டிக்காக, சாந்தி மாரியப்பன் படங்களைத் தேர்ந்தெடுத்து அளிக்க, மேகலா, இதற்கான நடுவராக இருந்து, உரியவர்களை நன்முறையில் தேர்ந்தெடுத்து வருகிறார்.

வாரந்தோறும் ஒருவரை வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறோம். அந்த வகையில் கடந்த ஆண்டு முழுவதும் சிறந்த ஆற்றலாளர்களை அடையாளம் கண்டு கவுரவித்துள்ளோம். இந்தப் பணியை அன்பர்களின் பரிந்துரைகள் அடிப்படையில், ஆசிரியர் குழுவுடன் கலந்தாலோசித்துத் தேமொழி சிறப்பாகத் தொடர்கிறார்.

இந்த ஓராண்டில் பல்வேறு தொடர்களை வல்லமை வெளியிட்டுள்ளது. சொற்சதங்கை – கவியுள்ளம் – காற்று வாங்கப் போனேன் (கே.ரவி), திருமால் திருப்புகழ் – கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம் (கிரேசி மோகன்), இசைக்கவியின் இதயம் (இசைக்கவி ரமணன்), என்னதான் இருக்கிறது வேதத்தில் (சு.கோதண்டராமன்), அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (சுபா), ஐந்து கை ராந்தல் (வையவன்), சுட்டும் விழிச்சுடர் (பவளசங்கரி), இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (சக்தி சக்திதாசன்), கவியரசு கண்ணதாசன் (காவிரி மைந்தன்), அவன், அது , ஆத்மா – காலம் (மீ.விசுவநாதன்), உன்னையறிந்தால் (நிர்மலா ராகவன்), நான் அறிந்த சிலம்பு (மலர்சபா), குறளின் கதிர்களாய் (செண்பக ஜெகதீசன்), தேகமும் யோகமும் (கவியோகி வேதம்), காதல் நாற்பது (ஜெயபாரதன்), ஓலைத் துடிப்புகள் (கவிஞர் ருத்ரா), சிகரம் நோக்கி (சுரேஜமீ)… எனத் தொடரும் தொடர்கள், வல்லமைக்கு வளமையும் பெருமையும் சேர்ப்பவை.

இவையல்லாமல், நாகேஸ்வரி அண்ணாமலை உள்ளிட்ட பலரும் வெவ்வேறு நடப்புகளைக் குறித்துப் பத்திகளை எழுதி வருகிறார்கள். ஆய்வறிஞர்களும் பேராசிரியர்களும் தங்கள், ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி வருகிறார்கள். இவை வாசகர்களின் சிந்தனைக்கு விருந்து படைத்து வருகின்றன.

கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுத்து வடிவில் மட்டுமின்றி,ஒலி வடிவிலும் வல்லமையில் கேட்க முடியும். கே.ரவி, இசைக்கவி ரமணன், ஆர்.எஸ்.மணி உள்ளிட்ட பலரின் பாடல்கள், வல்லமை நேயர்களின் நெஞ்சம் கவர்ந்தவை. எழுத்தும் ஒலியும் இணை சேர்ந்து வருவதைப் போல், எழுத்தும் ஓவியமும் சு.ரவியின் ஆக்கங்களில் இணை சேர்ந்து, வாசகர்களை வசீகரிக்கின்றன.

வல்லமையின் இடுகைகளின் தொகுப்பினை ஒவ்வொரு நாளும் உங்கள் மின்னஞ்சல் பெட்டிக்கே கொண்டு சேர்க்கும் வசதியும் வல்லமையில் உண்டு. சிறிது காலம் செயல்படாமல் இருந்த இந்த வசதி, நம் தள நிர்வாகி ஸ்ரீநிவாசன் அவர்களின் உதவியால், இப்போது மீண்டும் செயல்படுகிறது. வாசகர்களும் படைப்பாளர்களும் வல்லமை முகப்பில் பின்னூட்டங்களுக்கு மேலே உள்ள பெட்டியில் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை இட்டு, வல்லமையின் எல்லா இடுகைகளையும் அறியலாம்.

வல்லமையின் சீரிய வளர்ச்சியில் பலருக்கும் பங்கு உண்டு. கனிவும் அர்ப்பணிப்பும் மிகுந்த திருமதி பவளசங்கரி தலைமையிலான ஆசிரியர் குழுவினர், எங்கள் ஆலோசகர்கள், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அனைவருக்கும் எமது நன்றிகள். வல்லமைக்குச் சிறப்பான படைப்புகளை அளித்து வரும் படைப்பாளர்கள், ஓவியர்கள், இவற்றைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்கள், கூகுள் – ஃபேஸ்புக் – ஃபிளிக்கர் – வாட்ஸ் அப் குழுமங்களில் துடிப்பாக இயங்கி வரும் அன்பர்கள் யாவருக்கும் நன்றிகள்.

இந்த இனிய தருணத்தில் இசைக்கவி ரமணன் அவர்களின் கனிந்த வாழ்த்து, நமக்கு உற்சாகம் ஊட்டுகிறது.

இணையதளம் என்றாலும் இனிமையினால் நற்பண்பால்
இதயதள மாகிவிட்ட வல்லமையே வாழ்க!
அணைத்தபடி அனைவரையும் அரவணைத்துச் செல்லுகின்ற
அன்னையவள் கரம்போன்ற வல்லமையே வாழ்க!

கணப்பாகக் குளிர்நீக்கும்! கடுங்கோடைப் பொழுதினிலே
கற்கண்டுப் பனித்துளியாய்க் கால்நனைத்து மனம்குளிரும்!
பிணைப்பாகி, ஒரு குழுமம் பெருங்குடும்ப மாகியதே!
பிரிவில்லா உறவொன்றில் நெஞ்சமெல்லாம் நெகிழ்கிறதே!

ஏதேதோ மரம்கொடிகள் எத்தனையோ மலர்வகைகள்
எல்லோர்க்கும் தனித்தனியாய் சேர்ந்திருக்க இடமுண்டு!
காதலுண்டு கவிதையுண்டு வாதமுண்டு பேதமுண்டு
கடுகளவும் பகையின்றிக் கைகுலுக்கும் பண்புண்டு!

எனத் துல்லியக் கவிபாடி, நம் உள்ளங்களை அள்ளிய தெள்ளியர், அவர்.

பல்லாண்டு வாழ்க! பலநூறு காண்க!
பைந்தமிழின் களஞ்சியமாய்ப் பலவிதமாய் விரிக!
வல்லோரின் சங்கமத்தில் வளரட்டும் வல்லமை
வழிநெடுகத் துணையாக வாழ்த்தட்டும் சிவனுமை!

என்ற அவரின் வாழ்த்து, வல்லமைக்கு மேன்மேலும் வலிமை ஊட்டுகிறது. அவரது கூற்றின்படி, பைந்தமிழின் களஞ்சியமாய் விரிவோம். பாரெங்கும் தொண்டுகள் புரிவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “ஆறாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

  1.  நன்கு துடிப்புடன் எழுதியுள்ளீர்கள் சகோதரர் அண்ணாகண்ணன் அவர்களே. வாழ்க உம் பணி!
     யோகியார்

  2. நண்பர் அண்ணாகண்ணன்,

    வல்லமையில் வாரந்தோறும் வரும் எனது பல்வேறு விஞ்ஞானக் கட்டுரைகள், [அண்டவெளிப் பயணங்கள், அணுசக்தி] மின்னூலில் உள்ள சீதாயண நாடகம், சாக்ரடீஸ், ஆப்ரகாம் லிங்கன், நெப்போலியன், கலில் கிப்ரான் கவிதைகள், தாகூரின் கீதாஞ்சலியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    சி. ஜெயபாரதன்

  3. நல்ல பகுதிகள் பல கொழிக்கும் வல்லமை பல்லாண்டு வாழ்க. அதற்காக உழைக்கும் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

  4.  பல்லாண்டு வாழ்க. அண்ணா கண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

  5.    அன்றும்  இன்றும்  என்றும்
       அகலா  தரமே   தாரகமாய்
       நல்ல கொள்கை கொணடதால்
       வல்ல  வாகை  சூடினாய்
       ஆறாம் ஆண்டில்அடிவைத்தாய்
       ஏற்றம் பல பெற ஏற்றினேன்வாழ்த்துப்பா

    சரஸ்வதிராசேந்திரன்

  6. மின்னிதழியலில் எல்லோரையும் “அண்ணாந்து”பார்க்க வைத்தவர்
    அன்பிற்குரிய நம் அண்ணாகண்ணன் அவர்கள்.”வல்லமை” ஆறாண்டு சாதனையில் அறுபது ஆண்டுகளின் இலக்கிய அடர்த்தி தெரிகிறது. அவர் வழிகாட்டலில் வல்லமை மேலும் மேலும் சுடர்க!

    அன்புடன் ருத்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.