கவிஞர் காவிரிமைந்தன்.

அமுதவல்லி

 

ஆடைகட்டி வந்த நிலவோ …

நிலவுக்கு ஆடைகட்டிய முதல் கவிஞன் தமிழனாகத்தான் இருக்க முடியும்! அதுவும் பண்பாடு, கலாச்சாரம், இவற்றை தன் வரிகளில்கூட விட்டுக்கொடுக்காத பட்டுக்கோட்டையார் வரைந்த பாடல்! டி.ஆர்.மகாலிங்கம் – பி.சுசீலா குரல்களில் அமுதவல்லி திரைப்படத்தில் அமர்க்களமாய் அமைந்த பாட்டு! விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் விளைந்த பாட்டு!

சில பாடல்கள் இன்னார் பாடியதால்தான் பெருமை பெறுகின்றன என்று சொன்னால் அது மிகையில்லை. அவ்வகையில் டி.ஆர்.மகாலிங்கம் தவிர வேறு எந்தக் குரல் இப்பாடலுக்கு பொருத்தமானதாய் அமைந்திருக்க முடியும்? இசையமைப்பாளர் இசைவடிவம் தேர்ந்தெடுப்பதுபோலவே இன்னார் பாடினால் இந்தப் பாடல் நன்றாக வரும் … ஏற்புடையதாக இருக்கும் என்று முடிவு செய்வதிலும்கூட வெற்றியின் ரகசியம் அமைந்திருக்கிறது!

மடைதிறந்த வெள்ளமாய் கவிதையெனச் சொல்லும் திறம் என்ன சொல்ல? இப்பாடல் மெட்டுக்காக எழுதப்பட்டதா… அல்லது எழுதப்பட்டபின் இசையமைக்கப்பட்டதா என்பது உருவாக்கியவர்களுக்கே வெளிச்சம்… கேட்கின்ற போது மனம் துள்ளச் செய்வது என்னமோ நிச்சயம்!!

காலங்கள் பல கடந்தாலும் காவியமாய் உலவும் பாட்டு! கனிவாய் சொல்லமுதம் சுகமாய் பெருகிடும்போது கேட்காத உள்ளம் ஏது? தெம்மாங்கின் நடைகலந்த இசையமைப்பில் தென்றல் தீண்டும் சுகம் தரும் கீதமிது!!

ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும்
மலர் ஜாடையில் சிரிக்கும்
இவள் காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ

துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
கிளை தான் இருந்து கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி தானே
கண்ணாளன் உனைக் கலந்தானந்தமே பெற
காவினில் வாழும் கிளி நானே
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை

அந்தி வெய்யில் நிறத்தவளோ
குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ
உந்தி உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி மணம் சிந்தி வரும் தென்றல் தானோ
இன்பம் தந்த மயில் இவள் தானோ
ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ

ஆஹா…ம்ம்…லாலா…
அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
அஞ்சி அஞ்சி ஓடுவதில் லாபமில்லை
வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை

இதயம் கனிந்து எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
நன் நேரமிதே
மனம் மீறிடுதே
நன் நேரமிதே
மனம் மீறிடுதே
மனம் மாளிகை ஓரம் ஆடிடுவோம்
[ஆடை கட்டி வந்த நிலவோ]

“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
திரைப்படம்: அமுதவல்லி
கவிஞர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியோர்: டி ஆர் மகாலிங்கம், பி சுசீலா
காணொளி: https://youtu.be/G8QcPKPYc2Y

“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஆடைகட்டி வந்த நிலவோ …

  1. கவித்துவமான பழம் பாடல்களைத் தேர்ந்து தருகிற கவிஞர் காவிரிமைந்தனுக்குப் பாராட்டுக்கள்.
    மீ.விசுவநாதன்

  2. என்னை உங்களுக்கு தெரிந்திருக்கும். V.S என்று அழைப்படும் நான் வீரப்பபுரம் தெருவில் இருந்தேன். கிட்டு, நீலகண்டன், விஸ்வனாதன் இவர்கள் என் வகுப்புத் தோழர்கள். தங்கள் கட்டுரை படித்தேன். அருமை. என் பள்ளி நாட்கள் கண் முன் தோன்றச் செய்தமைக்கு நன்றிகள் பல.

    அன்புடன்,
    வெ சுப்ரமணியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *