Blog

  • ” அவன், அது , ஆத்மா” (12)

    (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    (மீ.விசுவநாதன்)

    அத்யாயம்: 12

    “திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி”

    avs1

    அவன் 1966ம் வருடம் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் மாதத்தில் திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் ஏழாவது வகுப்பில் சேர்ந்தான். அவனது வீட்டில் இருந்து இருபது நிமிடத்தில் அந்தப் பள்ளியை அவன் அடைந்து விடுவான். அந்தப் பள்ளியின் தோற்றமே ஒரு பெரிய கல்லூரியைப் போன்றிருக்கும். அழகான முகப்பும், ஏராளமான வேப்பமரங்களும், நாவல் மரமும் நிறைந்து படிக்கத் தூண்டும் சூழல் கொண்டது இந்தப் கல்விச் சாலை. பள்ளிக்குள் நுழைந்தவுடனேயே இடது பக்கத்தில் ஒரு அழகான சுடலை மாடன் சிலை இருக்கும். வலதுபுறம் மிகப்பரந்த வெளியும் சுற்றுச் சுவரின் பக்கத்தில் வரிசையாக வேப்ப மரங்களும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். முகப்புக் கட்டிடத்திற்குப் பின்புறம் ஒரு மேடை உண்டு. அதன் அருகில்தான் நூல்நிலையம் இருந்தது. பகல் உணவுக்குப் பின்பும், ஓய்வு வேளைகளிலும் அவன் அந்த நூல் நிலையத்தில் அமர்ந்து கதைப் புத்தகங்களைப் படிக்கவே விரும்புவான். சிலவேளைகளில் நண்பர்களுடன் சறுக்குமரம் விளையாடுவதும் உண்டு.

    அவனுக்கு பச்சை நிறத்தில் அரைக்கால் டிராயரும், அரைக்கை வெள்ளைச் சட்டையும்தான் சீருடைகள். டிராயரின் இரண்டு பக்கத்துப் பைகளும் தட்டை, முறுக்கு, சீடை, நெல்லிக்காய், கடலை மிட்டாய் போன்ற தின்பண்டங்களை அடைத்து வைக்கும் “கோடவுனாகவே” அவனுக்குப் பயன்பட்டன.

    இந்தப் பள்ளியின் தலைவர்களாக R. S. A. சங்கர ஐயர், A. வேலாயுத முதலியார், K. R. சுந்தரம் ஐயர் அகியோர் இருந்தனர். பிறகு இன்று வரை K. S. ராமன் தலைவராக இருக்கிறார். அதன் செயலாளர்களாக தியாகி. ய்க்யேஸ்வரசர்மா, சந்திரவிலாஸ் A. விஸ்வநாத ஐயர், ஸ்டோர் ராஜாமணி ஐயர் ஆகியோர் இருந்தனர், அதன் பிறகு1973ம் ஆண்டுமுதல் K. S. சங்கரசுப்ரமணியன் செயலாளராக இருந்து வருகிறார். பள்ளியின் வளர்ச்சிக்காக “வித்யா சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கி இன்று வரை நேர்மையான நிர்வாகம் என்ற பெயரை இப்பள்ளிக்கு அளித்து வருகின்றனர். இந்த வித்யாசங்கத்தின் இன்றைய தலைவராக K. S. ராமனும், செயலாளராக K. S.சங்கரசுப்ரமணியனும், பொருளாளராக M. ராகவனும், சங்க உறுப்பினர்களாக K. S. சுந்தரம், R. சங்கர், ராதிகா ராமன் ஆகியோருடன் பள்ளித் தலைமை ஆசிரியர் P. சுப்பையா, நூலக மேலாளர் L. ராமகிருஷ்ணன், ஆசிரியை உஷா போன்றோரும் இருக்கின்றனர்.

    “தலைமை ஆசிரியர் N. ரங்கநாத ராவ்”


    avsஅவனுக்கு அப்பா அந்தப் பள்ளியில்தான் தலைமைக் கணக்கராக வேலை பார்த்து வந்தார். அவன் அந்தப் பள்ளியில் சேர்ந்த நேரத்தில் “N. ரங்கநாத ராவ்”தான் தலைமை ஆசிரியராக இருந்தார். நன்றாகச் சலவை செய்த மடிப்புக் கலையாத பச்சை நிறத்தில் முழுப் “பேன்ட்”ம், முழுக்கை வெள்ளைச் சட்டையும் அணித்து சரியான நேரத்தில் பள்ளியில் அவர் இருப்பார். கண்டிப்பானவர், அதேசமயம் கனிவானவர். அவரது கண்களில் அறிவின் தெளிவும், உறுதியும் இருக்கும். நல்ல ஆங்கிலப் புலமை உள்ளவர்.

    1967ம் வருடம் அப்போதைய முதல் மந்திரி அண்ணாத்துரையைப் பள்ளிக்கு அழைத்திருந்தனர். அன்று வரவேற்புரையை தலைமை ஆசிரியர் ரங்கநாதராவ் நிகழ்த்தினார். மிகத் தெளிவோடும், நகைச்சுவையோடும் பேசியதை மாணவ, மாணவிகள் உற்சாகமாகக் கைகளைத் தட்டி ரசித்தனர். முதலமைச்சர் பேசும் பொழுது தலைமை ஆசிரியர் ரங்கநாதராவ் உரையின் அழகைப் பாராட்டினார். அதே போல 1971ல் கல்வி அமைச்சராக இருந்த இரா.நெடுஞ்செழியன் பள்ளிக்கு வந்திருந்த பொழுது தலைமை ஆசிரியர் மிகச் சிறப்பாகப் பேசியதும், கல்வி அமைச்சர்”கலையே வளர் தொழில் மேவிடு கவிதை புனை தமிழா, இலையே உணவிலையே இனியிலையே என்னும் எளிமை, இனிமேல் இலை எனவே முரசறைவாய் முரசறைவாய்” என்ற பாரதிதாசனின் கவிதையை ஓசை நயத்தோடு கூறியதும் அவனுக்குப் பசுமையாக நினைவிருக்கிறது.

    ஒவ்வொரு நாளும் நடைபெறும் “இறை வணக்கம்” (Prayer) நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஏதேனும் ஒரு நல்ல கருத்தை மாணவர்களுக்குச் சொல்லுவார். மாணவர்கள் அமைதியாகக் கேட்பார்கள். அப்படி ஒரு காந்த சக்தி அவருக்கு இருந்தது. ஒரு முறை அவர் உரை நிகழ்த்தும் முன்பு “ஏமாறாதே ஏமாற்றாதே” என்ற திரைப்படப் பாடல் ஒலி காற்றில் மிதந்து வந்தது. மாணவர்களின் கவனம் அந்தப் பாடலில் சென்றதை அறிந்த தலைமை ஆசிரியர் ரங்கநாதராவ் அந்தப் பாடலையே அன்றைய உரைக்குக் கருவாக எடுத்துக் கொண்டு ஒரு ஐந்து நிமிடங்கள் பேசினார். எப்படி வாழ்வில் கவனமாக இருக்கவேண்டும் என்ற பொருளில் அமைந்த அந்த அவரது அற்புதமான உரையை அவன் இப்பொழுதும் அசைபோடத்தான் செய்கிறான். ஆசிரியர்கள் எப்படி ஒரு மாணவனின் வாழ்க்கையை நன்கு அமைத்துத் தருகிறார்கள், மாணவர்கள் அதை எப்படி உள்வாங்கிக் கொண்டு மேலே மேலே உயருகிறார்கள் என்ற கேள்விகளுக்கு இது போன்ற நிகழ்வுகளே சரியான பதில்கள். அவன் அவனுடைய தலைமை ஆசிரியரான “ரங்கநாதராவ்”வை அவர் உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்த சமயம் சென்று பார்த்து அவரை வணங்கி வந்தான். “கண்ணா…நீ என் மாணவன். இன்று நீ நன்னா இருப்பதைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாருக்கு” என்று அவர் அன்போடு அவன் தலையில் கைவைத்து ஆசிசெய்தார்.”சார்…அது உங்களைப் போன்ற ஆசிரியர்கள் போட்ட பிச்சை” என்றான்.

    அவனது வீட்டிற்கு மூன்று வீடுகள் தள்ளி மேல்புறத்தில் உள்ள கடேசி வீட்டில்தான் அவர் குடி இருந்தார். ஆசாரமான மாத்வ குடும்பம். தெய்வ நம்பிக்கை மிக்கவர். தினமும் காலையில் ஏழு மணிக்கெல்லாம் ஆற்றங்கரையில் குளித்து, இடுப்பில் நார்மடிப் பட்டு கட்டி, வலது கையில் ஒரு செப்புச் சொம்பில் தண்ணீரும் கொண்டு எதோ மந்திரங்களை முணுமுணுத்தபடியே வருவார். காலையில் வீட்டில் அவர் பூஜை செய்யும் வேளை “டன்டட டட்டன் டன்டன்டன் டன்டட டட்டன் டன்டன்டன்” என்ற சந்தத்தில் “சேன்டி” அடிக்கும் மங்கல இசை அவனது வீட்டிற்குக் கேட்கும். அப்பொழுது மணி சரியாக ஏழேமுக்கால் என்று சொல்லிவிடலாம். அனேகமாக அவர் பள்ளிக்கு நடந்தேதான் வருவார். அவர் பள்ளிக்குச் செல்லும் முன்பாக அவனுக்கு அப்பாவை அவர் கூட்டிவரச் சொல்லி பள்ளியில் வேலை செய்யும் சுடலை முத்துவையோ, தளவாயையோ, பூதத்தானையோதான் அனுப்புவார். சில நாட்களில் பள்ளிக் காவலாளியாக இருந்த ஆதிமூலத் தேவரையோ அனுப்புவார். அந்த நேரத்தில் அவனோ, அவனுக்கு அக்காவோ வீட்டு நடையில்(முன் வாசலில்) இருப்பார்கள். அவர்களிடம், “அம்பி..அப்பாவ ஹெட்மாஸ்டர் ஐயா வரச்சொன்னாவ…அப்பாட்டச் சொல்லுதியா ” என்று அவர்கள் அன்பாகக் கூறுவார்கள். அப்படி அழைக்கும் ஆதிமூலத் தேவரை அவனுக்குப் பிடித்திருந்தது.

    “பள்ளிக் காவலாளி ஆதிமூலத் தேவர்”

    ஆதிமூலத்தேவரின் குரலில் ஒரு ஆண்மை இருக்கும். நல்ல நம்பிக்கையான தொழிலாளி. அவனுக்கு அப்பாவுக்கும்avs2 ஆதிமூலத் தேவரிடம் மிகுந்த அன்புண்டு. அவனுக்கு அப்பா பள்ளியின் சம்பள தினத்தன்று அம்பாசமுத்திரம் அரசுக் கருவூலத்தில் இருந்து பள்ளியில் வேலை பார்பவர்களுக்கான சம்பளப் பணத்தை வாங்கி வருவார். அப்பொழுது அப்பாவுக்குத் துணையாக பூதத்தானோ, ஆதிமூலத் தேவரோதான் சைக்கிளில் கூடவே சென்று வருவார்கள். அவனுக்கு அப்பா அவர்களுக்கு நண்பன்தான். அப்படிப் பழகுவார். பூதத்தான் மூக்குப்பொடி போடுவார். அந்தக் கையை வீட்டுத் திண்ணைச் சுவரில் தேய்க்கும் பொழுது,” ஒய்..பூதத்தான் இப்படி செவரெல்லாம் நாசமாக்காதேயும்….ஒரூ துண்டக் கைல வைச்சுக்கப் படாதோ….” என்று அவனுக்கு அம்மா சொல்லுவாள். “அப்படியே பழகிடுச்சில்லேம்மா…” என்று பூதத்தான் நெளிவார்.

    அருகில் இருக்கும் ஆதிமூலத்தேவர்,” அம்மா சொல்லுதாவல்லா…அந்த நல்லதக் கேட்டுக் கிடுமே…” என்று பூதத்தானைப் பார்த்துக் கூறுவார். அவர்கள் ஹெட்மாஸ்டர் வீட்டிற்கு வரும்பொழுதெல்லாம் அவனுடைய வீட்டுத் திண்ணையில் அமர்ந்துதான் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் முறை அவனுக்குப் பிடித்திருந்தது.

    ஆதிமூலத் தேவர் பள்ளியில் இருந்து ஓய்வு பெற்றபின் அவருக்கான ஓய்வூதியப் பணத்தை அரசாங்கத்திடம் இருந்து விரைவில் பெற்றுத் தர அவனுக்கு அப்பா மிகுந்த உதவி செய்தார். அதனால் அவருக்கு அவனது குடும்பத்தினர் மீதே ரொம்பவும் ஒரு விஸ்வாசம் இருந்தது. அவர் பணி ஓய்வு பெற்றபின் காலை பதினோரு மணிக்கு மேல்தான் தாமிரபரணிக்குக் குளிக்கச் செல்வார். தனது வழுக்கைத் தலையில் நிறைய எண்ணை தடவி இருப்பார். கூடவே ஒரு ஆட்டுக் குட்டியையும், அதற்கான ஒரு சிறிய இலைகள் உள்ள குழையையும் ஒரு கையிலும், மறு கையில் ஒரு வெள்ளைத் துண்டை இரண்டாக மடித்து வைத்தபடியம் மெதுவாக நடந்து செல்வார். சில விடுமுறை நாட்களில் அவனும் அவனது நண்பர்களும் வாய்க்கால் பாலத்தின் சுவர்களில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அவனுக்கருகில் வந்து, “அம்பி ..இப்படி செவர்கட்டைல ஒக்கராதேயும்…தண்ணிக்குள்ள விழுந்திர மாட்டீரா” என்று கனிவோடு எச்சரிப்பார்.

    ஒரு நாள் அவன், ஆதிமூலத் தேவர் ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மண்டபத்தை அவர் ஒருவராகவே சுத்தம் செய்வதை பார்த்தான். அந்த மண்டபச் சுவர்களில் நன்றாகப் படம் வரைபவர்களைக் கொண்டு அழகான படங்களை வரையச் சொன்னார். ஸ்ரீ கிருஷ்ணருக்கு முன்னால் இருக்கும் கல்விளக்கில் எண்ணை விட்டு தினமும் தீபம் ஏற்றினார். அந்த மண்டபத்தில் யாரேனும் அசுத்தம் செய்பவர்களைக் கண்டால் அவர்களிடம், “எலேய்…இங்கயா வந்து அசுத்தம் பண்ணுதே..ஒங்க வீட்ல பண்ணுவயாலே..இது சாமி இருக்கற இடம்ல .. சுத்தமா இருக்கட்டும்…” என்று சண்டை போடுவார். அதனாலேயே, அவரின் கண்டிப்பாலேயே அந்த இடம் இன்றும் சுத்தமாக இருக்கிறது. அவர் செய்த பணியை யாரேனும் இன்றும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஆற்றங்கரையில் படி இறங்கும் இடத்தில் ஒரு அரச மரமும், நெல்லி மரமும், வேம்பு மரமும் நட்டு வைத்தார். அது இன்று வானுயர ஓங்கி நிற்கிறது. அதன் அடியில் ஒரு சிறிய விநாயகர் சிலையும் வைத்து இன்று வருவோர் போவோர் எல்லாம் வணங்கி வருகின்றனர் என்றால் அதற்குஆதிமூலத் தேவரின் நல்ல உழைப்பும், பக்தியுமே காரணம். அவர் எப்போதுமே அந்த கிருஷ்ண மண்டபத்தின் மேலேதான் படுத்திருப்பார். அப்படி ஒருநாள் படுத்திருந்தவர் மீண்டும் எழுந்திருக்கவே இல்லை. தாமிரபரணியை நேசித்தவருக்கு அதன் கரையிலேயே, திறந்த வெளியிலேயே அமைதியான மரணம் அமைந்து விட்டது. அந்த ஸ்ரீகிருஷ்ண மண்டபத்தையும், கரையில் வானுயர நிற்கும் அரசமரத்தையும் இப்பொழுதும் அவன் பார்க்கத்தான் செய்கிறான். ஆதிமூலத் தேவரை நினைத்துக் கொள்கிறான்.

    (14.05.2015) இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

    Share
  • காலம் (5)

    மீ. விசுவநாதன்

    vallamai111-300x150

    படகில் பயணம் ! பரந்து விரிந்த
    கடலில் இரவின் கலையின் நடனம் !
    சுடலைச் சிவனும் சுகமாய் உமையும்
    இடமாய் அமர்ந்த எழில். (41) 09.02.2015

    பசுதெய்வம் ! தட்டாமல் பால்தரும் எந்தச்
    சிசுக்குமே ! சாணந் திரட்டிப் பொசுக்க
    விபூதி கிடைக்கும் ; விரும்பி வணங்கும்
    கபோதிக்கும் தீருங் கலி. (42) 10.02.2015

    பசுவும் பசுமேய்க்கும் பாலனும் ஒன்றாய்
    விசும்புக் குலத்தின் வினைகள் நசுக்கும்
    பசுபதிகள் ; பாலோடு பக்தி சுரக்கும்
    பசுபற்றப் பாடம் படி. (43) 11.02.2015
    (ஓவியர் “கேசவ்” வரைந்த ஓவியம் பார்த்து எழுதிய வெண்பா)

    மாயக் குதிரை மனதைப் பிடித்தவன்
    மாயவன் கண்ணன் மடியிலே தோய்கிறான் !
    காயில் இனிப்பும் கனியில் கசப்புமே
    வாயில் உணர்ந்தே வளர். (44) 12.02.2015
    (ஓவியர் “கேசவ்” வரைந்த ஓவியம் பார்த்து எழுதிய வெண்பா)

    கரிவண்ணக் கண்ணன் களிநடை போட்டு
    விரிகூந்த லோடு வெளியில் தெரிகிறான் !
    வானமே நீர்த்தொட்டி வாரிமழை கொட்டல்போல்
    தானுமே ஆவான் தனி. (45) 13.02.2015
    (ஓவியர் “கேசவ்” வரைந்த ஓவியம் பார்த்து எழுதிய வெண்பா)

    கடல்தாண்டிப் போகாதே கட்டாயம் பாவம்
    உடனே வருமென்றார் ; ஊரூர் கடந்து
    கடல்தாண்டிப் போன “கவியனு மானால்”
    இடரெல்லாம் நீங்கும் எனக்கு. (46) 14.02.2015

    பஞ்சமா பூதம் படைத்த இறைவனைக்
    கொஞ்சமா திட்டுறோம் ; கொள்ளையாய் வஞ்சத்தைக்
    கூசாமல் செய்கிறோம் ; குட்டுப் படுகையில்
    ஏசாமல் ஏற்றே இரு. (47) 15.02.2015

    மூச்சுக்குத் தேவை முறையான காற்றோட்டம் !
    பேச்சுக்கும் அப்படியே ! பிள்ளைகள் பாசத்தால்
    கண்ணை மறைத்துக் கடமை தவறினால்
    அண்ணே அமைதிக்கே ஆப்பு. (48) 16.02.2015

    கண்ணனின் வெண்பசு காட்டுது வால்கொடை !
    பெண்மையின் ஆண்மையும் பேராழி வண்ணமும்
    உண்மையின் பேரெழில் ! உத்தவ நண்பனை
    எண்ணத்தில் வைத்தே இரு. (49) 17.02.2015
    (ஓவியர் “கேசவ்” வரைந்த ஓவியம் பார்த்து எழுதிய வெண்பா)

    சிவசிவ என்று சிலநொடி கூட
    இவனுளம் நிற்காது ; இந்தத் தவநெறி
    கிட்டத் தெரியாக் கிறுக்க னிதயமும்
    வெட்ட வெளியாம் சிவம். (50) 18.02.2015

    Share
  • சிவபிரதோஷம்!

    -மீ.விசுவநாதன்

    மணிக்கணக்காய் கண்மூடி உன்னை
         மனதினிலே கண்முன்னால் காணத்
    துணிவில்லை பொறுமையுமே இல்லை  sivamjpg
         துளிகூட பக்தியுளம் பேணாப்
    பிணியாளன் என்னும்பேர் பெற்றேன்
         பித்தனுனை எண்ணுவது மில்லை
    அணியணியாய் நற்கவியால் உன்னை
           அன்போடு போற்றுவது மில்லை!

    பெற்றோரைத் திட்டியவன்; ஊரில்
         பெரியோர்சொல் கேட்காமல் நித்தம்
    நெற்றிநீரைப் பூசாமல் காலி
         நெற்றியாக வைத்தவனின் உள்ளம்
    பற்றியவா! பரமசிவா! உன்னைப்
           பக்திசெயா மூடனுக்கும் ஞானம்
    பற்றிடவே அருள்செய்தாய்! அந்தப்
           பரந்தமனம் எனக்கில்லை ஈசா!      

    (அறுசீர் விருத்தம் வாய்பாடு: காய், காய், மா, காய், காய், மா )

     

    Share
  • என்வீட்டுப் பூனை!

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    ஒரு பூனை
    அடுப்படிச் சாம்பலில்குட்டி போட்டுக்
    கதறித் துடிப்பதாகக்
    கனவு கண்டு
    நித்திரையினைத் தொலைத்தேன்
    நிம்மைதியினை  இழந்தேன்…!

    காக்கா கோழிகளின்
    சங்கீத ராகம்
    என் காதுகளைக் குடையவே
    முற்றத்துப் பக்கம் பாதங்கள்
    கோலம் வரைந்தன
    கண்கள் நிஜங்களைத்
    தேடி அழைந்தன …!

    என் ராக் கனவுகள் –
    என்னை
    ஏமாற்ற வில்லை
    துரோகமிழைக்கவுமில்லை…!
    சில முக நூல் உறவுகளைப் போல்
    மன சந்தோஷத்தால்
    என் இதய மலர்
    சிரித்துக் கொட்டியது
    அழகான குட்டிகளின்
    பிறப்பினைக் கண்டு
    வருகையைக்  கண்டு…!

    நீண்ட தொல்லைகளுக்குப்
    பின் இன்றுதான்
    என் சுவாச மூச்சுக்கு
    மன நிம்மதி கிடைத்தது !

    இரவு நேர இருளில்
    அந்த உடுப்புப் பெட்டிக்குள்
    எலிகளின் அட்டகாசமா…?
    அல்லது
    விளையாட்டு பொம்மைககளின்
    குரலோசைகளா…?
    அல்லது
    உணர்வுகளின் சப்தங்களா…?

    உன் சுவாசம்பட்ட
    வீட்டுச் சந்துபொந்துகள்
    மூலை முடுக்குக்குகள்
    சூரியனைக் கண்ட பனிபோல
    மாறத் தொடங்கியுள்ளன

    உடம்பினைப் போர்த்திய
    துண்டினைப் பார்த்து
    உன் இதயம் –
    அழுது வடிவதேன்..?

    அதனால்தான் போலும்
    உன் உள்ளத்துக் கதவுகளை
    அடிக்கடி மூடித்
    திறந்து எனக்குள்
    உண்ணாவிரதம்செய்தனவோ?
    ஹர்த்தால் ஆர்ப்பாட்டம் புரிந்தனவோ ?

    என் ஜீவன் –
    எலி, பல்லி, கரப்பத்தான்
    நுலும்பு கொசு, எறும்பு
    எதுவுமே அற்ற
    படுக்கையில் மனநிம்மதி நாடி
    உறங்க அழைந்தேன்!

    உன் குட்டிகளைக் கண்ட
    சின்ன எலிகளெல்லாம்
    உன்னைப் போலவே
    மரம் விட்டு மரம் தாவும்
    மந்திகளைப் போலவே
    இடம்மாறித் தடம் மாறிப்போயின
    நிலை மாறி..!

    சில கனவுகள் பலிக்கும்
    நினைவுகள் நிறைவேறும்
    என்ற நம்பிக்கைகள்
    எனக்குள் வாழ்கின்றன
    என் எதிர்பார்ப்புகளின்  இலட்சியங்களில்
    ஆரம்பமாகும்
    திசைகாட்டும் கப்பலைப்போல்
    என் வீட்டுப் பூனைகளும் …!

     

    Share
  • என்னை விட்டுப்பிரிந்த தந்தையின் நினைவாக…

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    எந்தையே எம்முயிரே
    எங்கு நீ சென்றாயோ ?
    சிந்தை நாம் கவல்கின்றோம்
    சோர்வுற்று வாழ்கின்றோம்
    உந்தன் பிரிவாலின்று
    உறு துணை இழந்துநாம்
    வெந்தழலில் புழுவாக
    வேதனையால் துடிக்கின்றோம்!

    மந்த மாருதமாய் நீயே
    மகிழ்வித்தாய் எங்களையே
    சந்தனத் தோப்பாக
    செழிப்புறயெம் வாழ்க்கையும்
    பந்தபாசம் பாசறையில்
    பயில்வித்தாய் எங்களைநீ
    விந்தைமிகு அன்பிற்கே
    வரைவிலக்கணம் ஆனாய்நீ!

    சாய்ந்தமரு தெம்பதியில்
    சகலருமே எப்பொழுதும்
    தூய்மையுறும் உன்னன்பைத்
    துளியேனும் தயக்கமின்றி
    நேயமுடன் மதித்துனது
    நேர்மைநல் லாற்றலோடு
    வாய்மையரும் பண்புகளை
    வாழ்த்திநிதம் மகிழ்ந்தனரே!

    மருத்துவத்தால் பல்லாயிரம்
    மக்களது நோய்தீர்த்த
    அருந்தந்தையே உம் பிரிவால்
    ஆறாகுமெம் வேதனைக்கு
    அருமருந்து இனிநாங்கள்
    ஆரிடம்தான் பெற்றிடலாம்?
    கருணையிறை அருளொன்றே
    கைகொடுக்கும்; ஆறுகிறோம்!

    சன்மார்க்க நெறிபேணிச்
    சாந்தமுடன் நீ வாழ்ந்தாய்
    உன்சேவை மனப்பான்மை
    உள்ளொன்று புறமொன்று
    முன்னொன்று பின்னொன்று
    மிழற்றுகிற பழக்கமின்றி
    நன்னெறிகள் பேணி நிதம்
    நலம்பெறவே வாழ்ந்தாய்நீ!

    சேர்பகையே வந்தாலும்
    சத்தியத்தில் தவறாது
    நேர்மையே நல் கிடவே
    நடத்திடுவாய் என்றென்றும்
    ஓர்மையிறை எண்ணமே
    உன்துணையாம் என்றேநீ
    கூறிய அறி வுரைகளின்னும்
    காதுகளில் ஒலிக்கிறதே!

    அரும்சுவர்க்கத் தலைவாசல்
    அதைவிடவும் அருந்தந்தை
    பெருந்தகுதி உயர்வாமே
    பெருமானார் பொன்மொழியைக்
    கருத்தில்நாம் ஆழமாய்க்
    கொண்டழகாய்  உன்பெயரைத்
    துருப்பிடிக்கா தென்றுமே
    தூய்மையுறக் காத்திடுவோம்!

    கலைமகளாய் நானென்றும்
    கவின்இஸ்லாம் வழியினிலே
    கலைஇலக்கியப் பணிகளையே
    கட்டுப்பாடு ஒழுக்கமுடன்
    நிலையாகத் தொடர்ந்தாற்ற
    நெஞ்சுறுதி தந்தநீயே
    நிலைகலங்க எமைவிட்டே
    நீத்தாயே இவ்வுலகை!

    என்னெழுது கோலுனது
    ஆத்மாவின் சாந்திக்காய்க்
    கண்ணீரை மையாக்கிக்
    கரைபுரளும் பாசத்தைப்
    பொன்னரிய எழுத்தாக்கிப்
    பிரார்த்தனை மாலையாய்
    இன்றிங்கே தொடுகிறதே
    இறையருள்கவே ஆமின்!

     

    Share
  • பொறுத்திருந்து பார்ப்போம்

    -கவிஞர் ருத்ரா

    நிழலைத் தேடி நடக்கிறேன்
    நேற்றுச் சொற்பொழிவில்தான் சொன்னார்கள்
    எனக்குள்ளே
    மாந்தோப்பும் தென்னைமரங்களும் இருக்கின்றன என்று!

    கடவுள் தேடிக் கைகூப்பினேன்
    முதுகுக்குப்பின்னே
    எல்லாவேதங்களையும் மூட்டைகட்டி வைத்திருப்பதாய்
    ஏதோ ஒரு ஆனந்தா சொன்னார்

    காதலில் விழுந்தேன்
    அவள் சிதறிய புன்முறுவலே போதுமானது
    மின்னல் விழுதூன்ற‌
    தலையணை முகட்டினிலே
    தூக்கம் தொலைத்த ஆரண்யங்கள்

    வாழ்க்கை என்பதற்கு அர்த்தம் கேட்டேன்
    அகராதி புரட்டப்போனவர்கள்
    கல்லறைகளில் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்

    என்னைச்சுற்றி
    என்னையும் சேர்த்துத்தான்
    அநியாயங்களும் அக்கிரமங்களும்
    மலிந்து போயினவே
    என்ன செய்ய‌?
    என்று அவர்களைக்கேட்டேன்

    கையில் நிறைய
    வில் அம்புகளையும்
    மழுவாயுதங்களையும்
    கோடரிகளையும் கலப்பைகளையும்
    சங்கு சக்கரங்களையும்
    மயிற்பீலி கிரீடங்களையும்
    கொடுத்தார்கள்
    நீயே அவதாரம் எடுத்துக்கொள் என்று
    ’சரி’ என்று கிளம்பினேன்
    நில்!
    இதையும் எடுத்துக்கொள்!

    என்ன இது?
    அரிதாரம் என்றார்கள்!
    இதோ
    அதை அங்கே தூவுகிறேன்
    நம் சட்டமன்றங்களிலும் நீதி மன்றங்களிலும்
    பொறுத்திருந்து பார்ப்போம்!

     

    Share
  • ”அன்னையே சரணம்”

    images

    அன்பு ராம்னாத், வாட்ஸ்-அப்பில் சங்கரரின் ‘’மாத்ரு பஞ்சகம்’’ அனுப்பியமைக்கு நன்றி….கேட்ட குஷியில்….

    ”அழுதாலும் பிள்ளைக்(கு) அவள்தான் பொறுப்பு
    பழுதான பின்பும் பரிவை -விழுதாய்ப்
    பொழிவாள் எமது பராசக்தி, நெஞ்சே
    தொழுவாய் அவளைத் தொடர்ந்து”….
    ”கன்னலுன் இன்மொழி மின்னலுன் கண்ணொளி
    பின்னலோ பாம்புக்(கு) அடைமொழி -உன்னிலே
    தன்னை மறந்து தவம்செய்யும் பக்தர்க்கு
    எண்ண உருவம் எதற்கு”….
    ”அச்சுறுத்தும் பூதமா? அன்றிமாத்ரு பூதமா?
    எச்சரிக்கை யோடுன்னை உச்சரிப்பதா? -நச்சரவம்
    மாண்டோர் கபாலங்கள் பூண்டோன் இடபாகி
    வேண்டாமே வேஷ விருப்பு”….

    ”நானார் அறிதல் நமக்கெதற்கு அன்னையே
    நீயார் உணர்தலே நற்கதி -தாயார்
    மகனைத் தொலைப்பாளா மாதா தவிக்கின்றேன்
    அகலா(து) இருப்பாய் அணத்து”….

    ”நின்றிட பூமா நகர்ந்திட ஸ்ரீதேவி
    ஒன்றிக் கலந்திட நீளாவாம் -மன்றில்
    நடமாட காளி நலம்பாட வாணி
    அடநமக்கு ஆயிரம்மா யி”….

    ”குடைபோல் விரிந்த புடவைக் கொசுவம்
    இடையில் சொருகி இளையப் -பிடியாய்
    கபாலீசன் கோவிலில் கற்பகத்தைக் கண்டு
    உபாசித் தடைவீர் உயர்வு”….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”ஆனந்தம் இன்று அனன்யபக்தி நேற்றுவரை,
    கோநந்த லாலாக்கள் கொண்டாட்டம்:-வானந்தனை,
    வில்லாய் வளைத்து விளையாட்டு காட்டுகிறான்,
    புள்ளாய் பறக்கும் பசுக்கு’’….கிரேசி மோகன்….

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    – தேமொழி.

    பழமொழி:  இனநலம் நன்குடையவாயினும் என்றும்மனநலம் ஆகாவாம் கீழ்

     

    மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்
    உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் – மிக்க
    இனநலம் நன்குடைய வாயினும் என்றும்
    மனநலம் ஆகாவாம் கீழ்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    மிக்கு பெருகி மிகு புனல் பாய்ந்தாலும்
    உப்பு ஒழிதல் செல்லா ஒலி கடல் போல் மிக்க
    இன நலம் நன்கு உடையஆயினும் என்றும்
    மன நலம் ஆகாவாம் கீழ்

    பொருள் விளக்கம்:
    மிகுந்த வெள்ளப்பெருக்கெடுத்து மிகுதியான அளவில் ஆற்றின் நன்னீர் கடலில் கலந்தாலும், தனது உப்பின் தன்மை நீங்காது ஆர்ப்பரிக்கும் கடலினைப் போல, மிகுந்த பண்பு நிறைந்தோருடன் இணைந்து பழகி வாழும் சூழ்நிலையிலும், என்றுமே தனது மனதின் கயமைத்தனத்தை கைவிடாது இருப்பார்கள் கீழ்த்தரமான குணத்தைக் கொண்ட மக்கள்.

    பழமொழி சொல்லும் பாடம்: பண்பு நிறைந்தோரோடு சேர்ந்து வாழும் வாய்ப்பினைப் பெற்றிருந்தாலும், பண்பற்றோர் தமது குணத்தை உயர்த்திக் கொள்ளாது தங்கள் இயல்பிலேயே சிறுமைக் குணத்துடன் இருப்பார்கள்.

    பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
    ஆகுதல் மாணார்க் கரிது. (குறள்: 823)

    அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராக வாழாமல் பண்பற்றவர்கள் தனது சிறுமைக் குணத்தைக் கைவிடாதவர்களாக இருப்பார்கள் என்று வள்ளுவம் குறிப்பதும் இதனையே.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    ”அனன்யபக்தி ஆவுக்(கு) அளிக்கும் பிருந்தா
    வனன்யகண்ணா காலை வணக்கம், -தினம்யென்
    கணினியில் பிறந்திடுவோய், கேசவ் வரைந்திடுவோய்,
    ManyMany HappyReturns மால்’’….கிரேசி மோகன்….

    Share
  • இலக்கியத்தில் ஆலயங்கள்: திருப்பதியின் தொன்மை

    –புலவர் இராமமூர்த்தி.

    TirumalTemple

    தமிழ் நூல்களுள் மிகவும் பழைய நூல், ‘தொல்காப்பியம்!’ வரலாற்று ஆதாரங்களாக விளங்கும் பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களுள் இதுவே மிகவும் தொன்மையான இலக்கண நூல்! இதன் பாயிரம் …

    ‘‘வடவேங்கடம் தென்குமரி
    ஆயிடை
    தமிழ் கூறும் நல்லுலகத்து,
    …….புலம்தொகுத்தோனே!”
    என்று பாடுகிறது. இதன் மூலம் கி.மு.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வேங்கடமாமலை தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட திசை எல்லையாக  இருந்ததை அறிந்து கொள்ளலாம்.

    மேலும், புறநாநூறு 381 ஆம் பாடலில்,
    “வீங்கு நீர் அருவி வேங்கடம் ”
    என்றும்,

    385 ஆம் பாடலில்,
    ”வேங்கட விறல் வரைப் பட்ட
    ஒங்கல் வானத்து உறை”
    என்றும்,

    389 ஆம் பாடலில்,
    ”கல்லிழி அருவி வேங்கடம்”
    என்றும்,

    391 ஆம் பாடலில் ,
    ”வேங்கட வரைப்பின்
    வடபுலம்”
    என்றும் வேங்கட மலை பற்றிய செய்திகள் அமைந்துள்ளன.

    மேலும், அகநானூற்றின் 27-ஆம் பாடலில்,
    ”வடவயின் வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை”
    என்றும்,
    61 ஆம் பாடலில்,
    ”விழவுடை விழுச்சீர்
    வேங்கடம்”
    என்றும்,
    83 ஆம் பாடலில்,
    ”வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும்”,
    என்றும்,
    85 ஆம் பாடலில்,
    “வென் வேல் திரையன்
    வேங்கட நெடுவரை”
    என்றும்,
    141 ஆம் பாடலில்,
    ”தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய வேங்கட
    வைப்பு”
    என்றும்,
    211 ஆம் பாடலில்,
    ”பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்,
    மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்” ‘
    என்றும்,
    213 ஆம் பாடலில்,
    ”நெடுங்கோட்டு ஓங்குவெள்
    ளருவி வேங்கடத்து உம்பர்”
    என்றும்
    265 ஆம் பாடலில்
    “செந்நுதல் யானை வேங்கடம் தழீஇ”
    என்றும்,
    393 ஆம் பாடலில்,
    ”தேன் தூங்கு உயர்வரை நல் நாட்டு உம்பர்
    வேங்கடம் ”
    என்றும், பாட ப்பெற்ற வடதிசை வேங்கடம் பற்றிய அறிமுகம் மிகவும் பழங்காலத்திலேயே வேங்கடவன் வழிபாடு குறித்து, நமக்கு அறிவிக்கிறது! இவற்றுள் விழவுடை விழுச்சீர் வேங்கடம் ” என்ற தொடர் அக்காலத்திலேயே திருவேங்கட மாமலையில் திருவிழாக்கள் நடைபெற்றன என்பதை அறிவிக்கின்றது.

    இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்,
    புகார்க் காண்டம், வேனிற் காதையில்,
    ”நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
    தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு ”
    என்ற பகுதி, நெடியோன் குன்றம் என்று திரு வேங்கட மா மலையைக் குறிக்கிறது.

    அடுத்து,மதுரைக் காண்டம் காடுகாண் காதையில்,
    கோவலனிடம் மாங்காட்டு மறையோன் கூறுவதாக ஒரு பகுதி உள்ளது, அதில்
    ”சேரநாட்டிலிருந்து, சோழ நாட்டின் திருவரங்கத்தில் பள்ளிகொண்ட பெருமாளாகவும் திருவேங்கட மாமலையில், நின்ற திருக் கோலத்தில் காட்சி தரும் நெடுமாலாகவும் பக்தர்க்கு அருள் புரியும் திருமாலைக் காட்டுவாயாக!” என்று என் கண்களை என்மனம் வற்புறுத்துகின்றது என்று மாங்காட்டு மறையோன் கூறுகிறான்.

    அதிலிருந்து திருமாலின் திருமேனி அழகு நாடெங்கும் பெரிதும் விரும்பிப் போற்றப் பெற்றது. என்பதை அறியலாம் அப்பகுதி,
    ”வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
    ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை
    விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
    இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து
    மின்னுக்கோடி யுடுத்து விளங்குவில் பூண்டு
    நன்னிற மேகம் நின்றது போல
    பகைஅணங்கு ஆழியும், பால்வெண் சங்கமும்
    தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
    நலம்கிளர் ஆரம் மார்பில் பூண்டு
    பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
    செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
    என்கண் காட்டு என்று என்உளம் கவற்ற,
    வந்தேன்” என்பதாகும்.

    இவற்றால் வடவேங்கட மாமலை ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நிலைத்த அடையாளமாய்க் குறிக்கப் பெற்று விளங்கியதைப் புரிந்து கொள்ளலாம்!

     

     

     

     

    புலவர் இரா. இராமமூர்த்தி,
    ஆலந்தூர்- சென்னை 600 016
    மின்னஞ்சல்: rawmurthee@gmail.com

    படம் உதவி: விக்கிபீடியா

    Share
  • ஓலைத்துடிப்புகள் (4)

    கவிஞர் ருத்ரா

    oolaisuvadi
    கண்டிகும் அல்லமோ கொண்க‍ நின் கேளே?
    தெண்டிரை பாவை வௌவ‌
    உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே.

    கற்பனை நயம் மிக்க வரிகளால் நம்மைக்கவர்ந்த சங்கத்தமிழ்ப்புலவர் அம்மூவனார் எழுதிய ஐங்குறு நூற்றுப்பாடல் (125) இது. தெள்ளிய திரை என்று பொருள் படும் கடல் அலைகளின் நுண்மையான விளையாட்டு மிகவும் உற்று நோக்கத்தக்கது.அம்மூவன் எழுதிய “தெண்டிரை பாவை” எனும் சொல் கடல் விஞ்ஞானத்தில் அலைகளின் நுணுக்கமான இயக்கங்களை குறிக்கிறது. அதில் கிடைக்கும்”தெள்ளிய மண்ணில்” பாவை செய்து விளையாடும் தலைவியின் பால் மணம் மாறாத மனத்துள்ளும் சுரக்கும் காதலின் பிஞ்சு ஊற்றில் ஒரு பிரளயமே ஒளிந்திருக்கிறது என்பதைக் காட்டவே இந்த சங்கநடைக் கவிதையை யாத்து உள்ளேன்.

    (தலைவின் துயரம் கண்டு பொருள் தேடச்சென்ற தலைவனை நோக்கி
    சொல்லுவது போல் பாடப்பட்ட தோழியின் கூற்று.)

    இலஞ்சி பழனத்தவள்

    இலஞ்சி பழனத்தவள் விழிமுன் விரிய‌
    முட்சுரம் கற்சுரம் நளி எரி வெங்கடம்
    கடாஅய்ச் செல்லும் இருப்பணைத் தோள!
    அலைபடு முன்னீர்க் கரையக் கரைபடு
    வௌவல் பௌவம் வளை முரல் ஆர்ப்ப‌
    அழியுறு நெஞ்சில் அளியை ஆனோய்!
    தொண்டிரை தந்த தொண்டி ஊர்பு
    தெண்டிரை வண்டல் பாவை அழிய‌
    மண்டிரை வெறியாட்டு வெருவி அழூஉம்
    அளியள் காண்குவை.விரைதி விரைதி.
    குவளையுள் குவளை பல்மழை தூஉய்
    மடப்பு மீக்கூர வெண்கணீர் பெய்யும்
    ஐது அமை இறையவள் வெஃகிய காட்சி
    முதிர் தகையன்று அறிதி அறிதி.
    பால் இழி தாமரை காமர் புரையா
    ஒண்ணுதலி.மற்று ஏதும் ஓரா மன்னே.
    பாவை கையில் மற்றொரு பாவை
    படுத்தன்ன கரைவாள் தேற்ற வருதி.
    பஞ்சாய்க் கோதை மகள் அல்ல இவளே.

    ===============================================

    பொழிப்புரை

    ===============================================

    இலஞ்சி பழனத்தவள் விழிமுன் விரிய‌
    முட்சுரம் கற்சுரம் நளி எரி வெங்கடம்
    கடாஅய்ச் செல்லும் இரும்பணைத் தோள!
    அலைபடு முன்னீர்க் கரையக் கரைபடு
    வௌவல் பௌவம் வளை முரல் ஆர்ப்ப‌
    அழியுறு நெஞ்சில் அளியை ஆனோய்!

    உறுதி மிக்க மூங்கில் போன்ற தோள் வலிமை மிக்க தலைவனே!இலஞ்சி எனும் அடர்நிழல் தவளும் நீர்ச்சுனைகள் நிறைந்த ஊரின் கனிச்சோலைகள் போல் கண்ணேதிரே எழிற்கோலம் காட்டும் உன் காதலியின் முகம் தோன்றும்படி கல்லும் முள்ளும் கலந்து வெம்மை மிகுந்த காட்டுவழியில் கடந்து செல்கிறாய்.கடலின் அலைகள் அரித்து அரித்து மண்திட்டாய் நிற்கும் கரை கூட கரைந்து போய்விடுகிறது. நிலப்பகுதியை பறித்துக்கொள்ளும் கடல் சங்குகளின் ஒரு வித ஒலியோடு ஆர்ப்பரிக்கிறது.அது போல் உன் நெஞ்சம் தலைவியை நினைத்து வேதனை உறுகிறது.

    தொண்டிரை தந்த தொண்டி ஊர்பு
    தெண்டிரை வண்டல் பாவை அழிய‌
    மண்டிரை வெறியாட்டு வெருவி அழூஉம்
    அளியள் காண்குவை.விரைதி விரைதி.
    திணையின் திரிதரு திரள்நெரி மயக்கமனைய‌
    நின் ஆறலைக்கண்ணும் ஆழி சூழ்ந்தது.

    கடல் அலைகளின் சீற்றம் மிகக்கடுமையானது.தொள் என்றால் குழி பறி என்று பொருள்.அப்படி குழி பறித்த அலைகளே தொண்டி எனும் பட்டினத்தை உருவாக்கும்.தொண்டி எனும் ஊர் அப்படி உருவானதே அங்கே அந்த அலைகள் இன்னும் சில விளையாடல்களைச் செய்கின்றன.ஆழத்திலிருந்து மிகக்குழைவான வண்டல் மண்ணை தெள்ளியெடுத்து கரையில் குவிக்கிறது.தலைவி அதனோடு சிறுபிள்ளை போல் பொம்மை செய்து விளையாடுகிறாள்.ஆனால் அதே அலைகள் சீற்றத்தோடு அப்பொம்மையை பறித்துக்கொண்டு போய்விடுகிறது.மண்திரை அதாவது கரையை மண்கலந்து நீராட்டும் அலைகள் இப்படி வெறியோடு விளையாடுவது கண்டு தலைவி அச்சமுற்று அழுது கலங்குகிறாள்.அவள் பொம்மை அழிந்துபோனது பொறுக்காமல் அழுகிறாள்.இங்கே அது வெறும் பொம்மை அல்ல.உன்னை உன் நினைவைக் கொண்டு புனைந்த வடிவு அது.எனவே விரைவில் வந்து அவளை தேற்று.கொடிய பாலையின் வழித்தடங்களில் அலையும் உனக்கு இவளது கடற்கரை விளையாட்டு ஒரு திணை மயக்கம் திரண்டு நெரிக்கும் துன்பத்தை கொடுக்கிறது.

    குவளையுள் குவளை பல்மழை தூஉய்
    மடப்பு மீக்கூர வெண்கணீர் பெய்யும்
    ஐது அமை இறையவள் வெஃகிய காட்சி
    முதிர் தகையன்று அறிதி அறிதி.
    பால் இழி தாமரை காமர் புரையா
    ஒண்ணுதலி.மற்று ஏதும் ஓரா மன்னே.
    பாவை கையில் மற்றொரு பாவை
    படுத்தன்ன கரைவாள் தேற்ற வருதி.
    பஞ்சாய்க் கோதை மகள் அல்ல இவளே.

    அவள் அழுகையில் கண்ணுக்குள் கண் பூப்பது போல் குவளைக்குள் குவளைகள் குவிந்து அடர்மழையை கண்ணீராய் பொழிகிறது. இன்னும் காதலின் முதிர்ச்சி பெறாமல் மடம் எனும் சிறு பிள்ளைத்தனம் மட்டுமே அந்த வெள்ளைமனத்தில் பொங்கும் வெண் கண்ணீரில் அவள் மூழ்குகின்றாள்.ஐது எனும் மென்மை படர்ந்த அழகிய‌ முன்னங்கைகளை உடைய அவள் வெட்கமுறுவது ஒரு ஒப்பற்ற எழில் மிகு காட்சி ஆகும்.பால் வழியும் தாமரை முகம் அவளது முகம்.ஆனாலும் காமம் புகாத அந்த பிஞ்சுக்காதலில் ஒளி சுடரும் நெற்றியில் கூர்ந்து சிந்திப்பதால் ஏற்படும் சுருக்கங்கள் ஏதுமில்லை.
    இருப்பினும் அவள் ஒரு சிறுமி போல் தான் இருக்கிறாள்.தெரிந்து கொள்.ஒரு மரப்பாய்ச்சியின் கையில் இன்னொரு மரப்பாய்ச்சி போல் இருக்கிறாள். அந்த மண் பொம்மை கரைந்ததற்கு அழுதுகொண்டே இருக்கும் அவளை விரைவாய் வந்து தேற்று.பொம்மைகளோடு ஒன்றிப்போனாலும் இவள் பொம்மை அல்ல. அதுவும் பஞ்சாரை எனும் கோரைப்புல்லைக்கொண்டு கூந்தல் முடித்த பொம்மைப் பெண் அல்ல‌.

    தொடருவோம்…

    Share
  • ’88’

    — மாதவன்.

    வெளியே மழை சத்தமின்றி பெய்துகொண்டிருந்தது. ஒருமாதிரி ஊதாநிறத்தில் கண்ணாடி ஜன்னல்களில் கோடுகளாக வழிந்துகொண்டிருந்தது.

    அமில மழை இப்படித்தான் பலவிதவண்ணங்களில் பெய்கின்றது. மூன்றுநாள் முன்பு இளம்பச்சை நிறத்தில் பெய்தது. பார்வைக்கு மிக அழகாக ஓவியச்சிதறல்போல தெரிந்தாலும் அதன் ஆபத்தை வார்த்தைகளில் விளக்கிவிட முடியாது.

    இந்த அமில மழையின் ஒரேயொரு துளி கூட இரும்புமாதிரியான கடினமான உலோகங்களையே கரைத்துவிடக்கூடியது. சென்றவாரத்தின் ஒரு மழையில் அப்படித்தான் அந்த முட்டாள் நாய்க்குட்டி வெளியில் சென்று கருகி இறந்துபோனது.

    இத்தனைக்கும் இந்த வீடு, வீடென்று இதை சொல்லிவிட முடியாது. இது ஒரு பெரிய ஹால் என்றுகூட சொல்லுவது பொருத்தமில்லை. வேண்டுமென்றால் ஒரு ஆராய்ச்சிக்கூடம் என்று சொல்வது சரியாக இருக்கும்.

    தனித்தனியான அறைகளெல்லாம் கிடையாது. பரந்துவிரிந்த பெரிய கூடம். இதன் மேற்கூரை மேலே செல்லச்செல்ல கூர்மையாக இருக்கும்படி அமைக்கப்படிருக்கிறது.

    அமில மழையால் அரித்துப்போய்விடாதபடி ஒருவித கலவையான உலோகத்தால் உருவாக்கப்பட்டது. இந்தக்கூரை மட்டும் இல்லையென்றால் இங்கிருக்கும் 88 உயிர்களும்… சாரி… இப்போது 87 தான். எபோதோ அமிலமழையில் கருகிக்கரைந்திருப்போம்.

    எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சென்ற வருடம் கிபி 2065 கிறிஸ்துமஸ் தினத்திற்கு இரண்டுநாள் முன்பு என் கணவர் வீட்டிற்கு வந்தார். என்னால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால் அவர் இதுவரை எந்த பண்டிகைதினத்திற்கும் வீட்டில் இருந்ததில்லை.

    இஸ்ரோ நாசா என்று அவர் பணிபுரியாத நாடுகளே இல்லை. ஆமாம் அவர் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர். மனிதர்கள் ஐநூறு வருடங்கள்வரை உயிர்வாழும் மருந்து கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் என்று சொன்னால் ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும்.

    வீட்டிற்கு வந்து சிலநாட்கள் பித்துக்குளிபோலத்தான் சுற்றிக்கொண்டிருந்தார். எப்போதும் எங்கள் வீட்டின் மாடியிலுள்ள லேபில் மணிக்கணக்காய் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்.

    ஏதோ புதிய விண்கலம் ஒன்று தாயாரித்துக்கொண்டிருப்பதாக என்னிடம் கூறினார். திருமணம் ஆனதிலிருந்தே அவரைப்பற்றியும் அவரது ஆராய்ச்சிகள் மீதான பைத்தியம் பற்றியும் எனக்குத்தெரியுமென்பதால் விட்டுவிட்டேன்.

    திடீரென்று ஒருநாள் அவரது இன்னும் சில நண்பர்களும் வந்திறங்கியபோது நான் கொஞ்சம் பயந்துபோனேன். கேட்டதற்கு ஏதேதோ சொல்லி சமாளித்தார். நாட்கள் செல்லச்செல்ல இன்னும் சிலநண்பர்கள் குடும்பசகிதமாக எங்கள் வீட்டிற்கு வந்தபோது நான் நச்சரிக்கத்தொடங்கினேன்.

    அவர் அரசாங்கத்திற்கு எதிராக ஏதோ ஆய்வு செய்கின்றாரோ என்னும் எனது சந்தேகத்தை ஒளிவுமறைவின்றி அவரிடம் சொல்லிவிட்டேன். அப்போதுதான் தயங்கித்தயங்கி அவர் சொன்னார். அவரை நாசாவிலிருந்து பணிநீக்கம் செய்துவிட்டதாக. அவர் என்னிடம் படிக்கச்சொல்லித் தந்த நாசாவின் கடிதத்தின் சாராம்சம் இதுதான்.

    ஒரு ஆய்வின் முடிவில் என் கணவர் சமர்ப்பித்த தியரியின்படி, இயற்கை அழிவின் காரணமாகவும் புவிவெப்பமயமாவதன் தொடர்ச்சியின் விளைவாகவும், 2066 மார்ச் மாத வாக்கில், நம் பால்வீதிமுழுக்க ஒரு வித அமில மழை பொழிந்து பூமி அழியப்போகிறது என்று சொல்லியிருக்கிறார்.

    அந்த தியரியைப்படித்த நாசா குழுவினர் இவருக்கு மனநலம் சரியில்லை என்று சொல்லி இடைக்கால பணிநீக்கம் செய்திருக்கிறது. அதனால் தான் இந்த கிறிஸ்த்மஸிற்கு மனிதர் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

    அப்புறம் ஒருநாள் எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள மைதானத்தில் பெரிய பெரிய உலோகத்தகடுகள் எல்லாம் வைத்து மிகப்பெரிய தட்டைவடிவில் ஏதோ ஒன்றை இணைத்து உருவாக்கினார்கள்.

    வந்திருந்த நண்பர்கள் அனைவருமே பெரியபெரிய அறிவியல் மேதைகள். அவர்கள் எல்லோருமே அதிகம் யோசித்தார்கள், அதிகம் பேசினார்கள். அதிகம் சிகரெட் புகைத்தார்கள்.

    பிறகு ஒருநாள் அந்த பறக்கும் தட்டை, ஆமாம் அப்படித்தான் அதை அழைத்தார்கள். அந்த பறக்கும் தட்டை சோதனை ஓட்டம் பார்த்தார்கள். இரண்டு அடிகள் மேலெழும்பி தொப்பென்று விழுந்துவிட்டது. மறுபடி யோசனைகள் பேச்சுக்கள் சிகரெட்டுகள்.

    இறுதியாக ஒரு நன்னாளில் அது பறக்கத்தொடங்கியபோது ராணுவ அதிகாரிகள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். என் கணவரும் நண்பர்களும் என்ன சொன்னார்களோ அவர்கள் சிரித்துக்கொண்டே திரும்பிச்சென்றுவிட்டார்கள்.

    நாங்கள் மொத்தம் 88 பேர்கள் இருந்தோம். அதில் நான்கு நாய் ஒரு முயல் மூன்று பூனைகளும் அடக்கம். அந்த தட்டு அவ்வளவுதான் தாங்குமென்று சொன்னார்கள்.

    சூரிய ஒளி சக்தியாலும் பேட்டரிகளாலும் பெட்ரோல் எரிபொருளாலும் அது பயணிக்கும் என்றார்கள். செவ்வாய்க்கு அருகில் ஏதோ ஒரு வாயில் நுழையாத பெயருள்ள புதிய கிரகம் என்றார்கள். என்னென்னவோ ஒளியாண்டுகள் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். பறக்கும் தட்டில் விண்வெளியில் பயணிக்கும்போது காலம் நின்றுபோய்விடும் எனவே பிரச்சனையில்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

    எனக்கு இவை எதிலும் ஆர்வமோ புரிதலோ இல்லை. நான் உண்டு என் மகள் ஜெஸ்ஸி உண்டு என்று இருந்தேன்.

    அந்த ஆண்டின் பிப்ரவரி கடைசியில் அமிலமழை பொழியத்துவங்கியபோதுதான், அதில் நனைந்து சில பனிக்கரடிகள் கருகிச்சாம்பலாய் கிடந்ததை டிவியில் பார்த்தபோதுதான் என் கணவரை எல்லோருமே ஆச்சரியமாகப் பார்த்தோம்.

    ஆனால் அவர் இதெல்லாம் பெரிய விஷயமில்லை என்பதுபோல சாதாரணமாக இருந்தார். தட்டிலிருந்த எங்களில் சில சீனர்களும் அரேபியர்களும் யூதர்களும் இந்தியர்களும் என்று ஓரளவு எல்லா தேசத்தவர்களும் இருந்தார்கள்.

    எனக்கு என் தாய்மொழி தவிர வேறு எதுவும் தெரியாததால் அமைதியாகவே இருந்தேன். செயற்கைக்கோள்மூலம் அவ்வப்போது எடுக்கப்படும் படங்களை வைத்துப்பார்த்ததில் எங்கள் பயணத்தின் இரண்டாம் நாளே பூமி சாம்பல்மேடாக இருந்ததைக்கண்டோம். எல்லோரும் கணத்த மவுனத்தோடு அழுதுகொண்டிருந்தோம். தனியாக தப்பித்து உயிர்வாழ்வது குறித்த குற்றவுணர்வும் பயமும் எல்லோரையும் வாட்டியது.

    பயணத்தின் பத்தாம்நாள் பறக்கும்தட்டில் கோளாறு ஏற்பட்டது. பிரபஞ்ச வெளியில் மெல்ல தக்கத்தக்கி ஆடத்தொடங்கியது. என் கணவர் ஏதேதோ கணக்குப்போட்டுப்பார்த்துவிட்டு உதட்டைச்சுழித்தார். பெருத்த ஆயாசம் தெரிந்தது அவர் முகத்தில். சாட்டிலைட் படங்கள் மேப்புகள் எல்லாவற்றையும் விரித்து நண்பர்களோடு ஆலோசித்தார்.

    என்னென்னவோ வாக்குவாதமெல்லாம் வந்தது. பளீரென்று ஏதோ யோசனை வந்ததுபோல என் கணவர் ஒரு ஐடியாவைக்கூற சந்தோஷமாக எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள்.

    அதிர்ஷ்டவசமாக வழியில் அகப்பட்ட ஒரு பிரம்மாண்டமான விண்கல்லில் தட்டை இறக்கி கோளாறையெல்லாம் சரிசெய்துவிட்டுப்பிறகு புறப்படுவதுதான் திட்டம்.

    தட்டை விண்கல்லில் இறக்கி சோதனைசெய்ய ஒரு ரோபோவை களமிறக்கியதில் ஆக்ஸிஜனுக்கோ தாவரத்திற்கோ நீருக்கோ எந்த ஒரு உயிருக்கோ வழியில்லாத இடம் அது என்று புரிந்தது. வேறுவழியின்றி ஆக்ஸிஜன் மாஸ்க்குகளோடு இங்குவந்து இறங்கினோம்.

    ரெடிமேட் ஆக தயார் செய்து வைத்திருந்த உலோகத்தகடுகள் கொண்டு இணைத்து இந்த ஆய்வுக்கூடத்தையும் உருவாக்கியாயிற்று.

    தினமும் தூங்கி எழுந்ததும் என் கணவர் அவர் நண்பர்கள் கூட இன்னும் சிலர் அனைவரும் சென்று பறக்கும்தட்டை சரிசெய்ய முயற்சிப்பதும். பிறகு களைத்ததும் திரும்பிவருவதுமாக நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இரவுபகல் என்றெல்லாம் எதுவுமின்றி எப்போதும் அரையிருட்டாகவே இருந்தது. ஒரு இருநூறு தப்படி நடந்தால் நாங்கள் இறங்கியிருக்கும் விண்கல்லின் விளிம்பு வந்துவிடும்.

    அமிலமழையற்ற நாட்களில் நான் ஜெஸ்ஸியை அழைத்துக்கொண்டு மிதந்து அங்கு சென்று அங்கிருக்கும் ஒரு கூரான பாறையைப் பிடித்துக்கொள்வேன்.

    தலைக்குமேலே நட்சத்திரங்களை பார்த்துப்பழகிய ஜெஸ்ஸிக்கும் எனக்கும், எங்கள் கால்களுக்குகீழே ஒளிரும் நட்சத்திரக்கூட்டங்கள் பெரிய பரவசம்.

    அவை ஒவ்வொன்றிற்கும் நாங்கள் பெயர்வைத்திருக்கிறோம். ஜெஸ்ஸிக்கு எல்லாப்பெயர்களும் மனப்பாடம். ஏதேனும் நட்சத்திரத்தைக்காட்டி கேட்டால் சரியாக பெயர் சொல்லிவிடுவாள். சுற்றிலும் எடையற்று அங்கங்கு மிதக்கும் சிறுசிறுகற்களை நகர்த்தியபடி விளையாடிக்கொண்டிருப்போம். ஜெஸ்ஸிக்கு அதில் மிகுந்த விருப்பமுண்டு.

    இன்று கொட்டும் மழையைப்பார்த்தால் இன்னும் இரண்டுநாட்களுக்கு விடாதுபோலத்தெரிகிறது. வெளியில் செல்லாவிட்டாலும் நாய்க்குட்டியுடனாவது ஜெஸ்ஸி பொழுதை போக்கிக்கொண்டிருந்தாள். இப்போது அதுவும் இல்லை.

    கையிருப்பில் இருக்கும் உணவும் நீரும் சிக்கனமாக உபயோகித்தால் இன்னும் ஒருமாதம் வரை வரும். அதற்குப்பிறகு? கொஞ்சம் மழை ஓய்ந்தபின்பு வெளியில் சென்றவர்களெல்லாம் வந்தார்கள். அவர்களில் ஒருசிலர் வாய்விட்டு அழுதார்கள்.

    பறக்கும் தட்டின் ஏதோ ஒரு சிறிய பகுதி பர்மனென்ட் ஆக சிதைந்துவிட்டதாம். அனேகமாக சரிசெய்ய முடியாதென்றுதான் புலம்பிக்கொண்டிருந்தார்கள். என் கணவர் வெற்றுமுயற்சியாக எல்லோரையும் சமாதானம் செய்துகொண்டிருந்தார்.

    நான் ஜெஸ்ஸியோடு வெளியேறி அந்த விளிம்பிற்கு மிதந்தேன். ஜெஸ்ஸி என் கழுத்தை இறுகக்கட்டியிருந்தாள். விளிம்பிற்குச்சென்றதும் ஜெஸ்ஸி கேட்டாள் “நாம எப்ப மம்மி நம்ம வீட்டுக்குப்போவோம்”?

    நான் பதில் சொல்லாமல் அவளுக்கு நட்சத்திரங்களை வேடிக்கை காண்பித்தேன்.

    மெல்ல குளிர்காற்று வீசியது …

    Share
  • அறிவு

    -ரோஷான் ஏ.ஜிப்ரி, இலங்கை

    படைத்தவன் அளித்த பரிசது செறிவு
    பகுத்தறிவென்றோர் பெறுமதி அறிவு
    மனிதனாய் ஆனாய் என்பதை அறியா
    மண்ணதில் வீணாய்ப் போவது சரியா?

    படித்தரம் உள்ள வெகுமதி தெரிவு நீ
    பாரினில் அறிவு உயர்வெனக் கருதினி
    தேர்வுகள் வந்தால் எழுதிட வினை
    திறமைக்கு அறிவு இருக்குது துணை!

    தேடலை நன்று திறம்படச் சொல்லு
    திறனது கொண்டு எழுந்து நீ நில்லு
    நெருக்கடி நேர்ந்திட நிமிர்த்திடும் ஏணி
    நீந்தி நீ சேர்ந்திட அறிவது தோணி!

    அறிவது சேர்ந்தால் உனக்கது கைவாள்
    ஆற்றலில் தேர்ந்தால் உலகினில் மெய்யாள்
    எதிரிக்கும் வாய்ப்பை அறிவினால் கொடுத்து
    ஏழ்மையின் வாழ்வை ஏற்றத்தில் நிறுத்து
    அறிவதைக் கொண்டு வாழ்வதைத் துலக்கு
    ஆளுமை வென்று பூமியைப்  பெருக்கு!

    அறிவைக் கூட்டு ஆணவம் கழிபடும்
    அறிவைத் தீட்டு பாறையும் வழிவிடும்
    அறிவது சமுத்திரம் பரந்ததோர் ஆழி
    அறிந்திடு சரித்திரம் படிப்பதால் தேடி
    திரைகடல் ஓடியும் திரவியம் தேடு – இதைத்
    தெரிந்தபின் உண்டா உனக்கொரு கேடு?

    பொறுமையைக் கொஞ்சம் மனதினில் அள்ளி வை
    பொய், புறம் நஞ்சு எரித்திடக் கொள்ளி வை
    கர்வத்தை மெல்லக் கடைசியில் தள்ளி வை
    கருணையை வெல்ல ஆளில்லை சொல்லி வை
    அடுத்ததோர் இலக்கு அறிந்திடப் புள்ளி வை
    அறிவென்ற கணக்குப் படிப்பென்று பள்ளி வை!

     

    Share
  • ஐந்து கை ராந்தல் (13)

    வையவன்

    தனது சொந்தப் பொறுப்பில் ஒர்க்ஷாப் வந்த முதலாவது நாளை அவன் வெகு இயல்பாக ஏற்றுக் கொண்டான். பிரீதாவிடம் பேசி விட்டு வந்ததில் ஒரு தெளிவு கிடைத்தது.

    தாமு…அம்மா… வெற்றிவேல்… பிரீதா எல்லோரும் அக்கரையில் நின்ற நிழல் உருவங்கள் ஆயினர்.
    ஒர்க்ஷாப் அவனைக் கம்பீரமாக ஸ்வீகரித்தது. அது என்னவோ பந்தயக் குதிரை போன்று, ‘என்னை ஏற்று அடக்கு’ என்று குரல் கொடுப்பது போன்று தென்பட்டது.

    ‘நான் எழுத்தாளன் என்ற கர்வத்தை வெளியே இறக்கி விடுகிறேன்.’
    ‘எனக்கு ஒர்க்ஷாப்பைப் பற்றி ஒன்றும் தெரியாத அச்சத்தை அகற்றி வைக்கிறேன்.’
    ‘எனது வேலையும் எனது தொழிலும் இதுதான். இதை நான் வணங்குகிறேன்.’
    மந்திரம் ஜபிப்பது போல் மனசிற்குள் சொல்லி விட்டு அவன் ஒர்க்ஷாப்பைத் திறந்தான்.

    பத்து நிமிஷத்தில் ஆபீஸ் அறையைச் சுத்தம் செய்கிறவன் வந்து பெருக்கி குப்பை வாரிவிட்டுச் சென்றான்.
    தாமு செய்வது மாதிரி ஒரு கட்டு ஊதுவத்தியைக் கொளுத்தி அங்கிருந்த ஸ்டாண்டில் செருகினான்.
    மேஜை டிராயரைத் திறந்தான்.

    எடுத்த எடுப்பில் ஒரு பச்சை ஃபைல் தென்பட்டது. அதை எடுத்துத் திறந்தான். அதன் முதலாவது காகிதம். பவர் ஆஃப் அட்டர்னி சர்ட்டிபிகேட்டின் நகல். பாங்கில் ஒர்க்ஷாப் அக்கவுண்டில் பணம் எடுக்கவும் போடவும் முழு அதிகாரத்தை தாமுவுக்கு சிவா வழங்கியிருந்தான்.

    அந்த சுதந்திரம் எப்படிப்பட்ட விலங்கு!
    யோசித்தவாறே சிவா அடுத்த காகிதத்தைப் புரட்டினான்.

    ஒர்க்ஷாப்பின் மாதாந்திர வரவு செலவு பட்ஜெட். முதல் வரியிலேயே அவனுக்கு உடம்பு சிலிர்த்தது.
    கே.சிவா – மானேஜிங் பார்ட்னர் – மாதாந்திர சன்மானம் ரூபாய் நாலாயிரத்து ஐநூறு.

    பிரீதாவின் சொற்கள் ஒரு மந்திரம் போன்று அவனுள் ஒரு கிளர்ச்சியை இப்போது உண்டாக்கின.
    “யு ஆர் எ மேன். மனுஷ்யன்”
    அவள் சொன்னாள். தாமு அவனை மனிதனாக்கி யிருந்தான்.

    காலை எட்டு மணிக்கெல்லாம் அவனுக்கு வியர்த்தது, எழுந்து சென்று ஃபானைச் சுழல விட்டான். ஆனால் இதெல்லாம் எதற்கு? மாதா மாதம் நாலாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு தான் தாமுவினால் விலை கொடுத்து வாங்கப் பட்டிருக்கிறோமோ?
    அவன் பைலின் ஒவ்வொரு காகிதத்தையும் புரட்டிப் பார்த்தான். ஒர்க்ஷாப்பின் பேரில் கரண்ட் அக்கவுண்ட்டில் லட்சத்து சொச்சம் ரூபாய் இருந்தது.

    அவன் விரும்பினால் அந்த தொகை முழுவதையும் எடுத்தாள முழு அதிகாரமும் அவனுக்கு வழங்கப் பட்டிருந்தது. ஒர்க்ஷாப்பின் இண்டு இடுக்கு விவரங்களை யெல்லாம் பார்த்தவுடனே அவன் புரிந்து கொள்கின்ற மாதிரி குறித்து வைத்திருந்தான்.

    இந்த விவரங்களை எழுதித் தயாரிக்க அவனுக்கு இரண்டு நாட்கள் பிடித்திருக்கும். ஏன் இப்படி மெனக்கெட்டான்?
    எந்த நோக்கம்? ஒரு வேளை அப்படி எதுவும் இல்லையா?

    எட்டே காலுக்கு சீனியர் மெக்கானிக் செங்குட்டுவன் வந்தான். ஒன்பது மணிக்குள் ஒவ்வொருவராகத் தொழிலாளர்கள் வந்தனர்.

    தாமு இல்லை. அவனது ஆக்ஞை அரூபமாக அந்த ஒர்க்ஷாப்பில் பிரசன்னமாயிருந்தது. சிவா ஒர்க்ஷாப்பில் ஐக்கியமானான்.

    திஷ்யா, ப்ரீதா, தாமு, அம்மா வேள்வித் தீயின் ஜ்வாலை முன் ஒளியும் சுடரும் தவிர்த்து வேறு யாவும் அர்த்தமிழப்பது போன்று எல்லோரும் மறைந்து விட்டனர்.

    நீ மனிதன் என்ற வாக்கு மட்டும் இயங்கு சக்தியாக மிஞ்சிற்று. சொன்னவளை கூட மறந்து விட்டான். அம்பாஸிடர்.. பென்ஸ்.. டயோட்டா… போன் கால்கள்.. கடிதங்கள்.. ஹார்ன் ஒலிகளை இயந்திரங்களில் புத்துயிர் பாய்ச்சும் பந்தயம் அப்படி ஒன்றும் சலிப்பாக இல்லை.

    பத்து மணிக்கு திஷ்யாவின் தம்பி பிரேம் வந்தான்.

    “அக்கா ஒங்களை வீட்டுக்கு வரச் சொன்னாங்க. அர்ஜெண்டாம்.”
    “என்ன விஷயம்? ‘அந்த வண்டி அரை மணியிலே ரெடியாயிடும். வர்றேன் போ”

    பதினோரு மணி ஆயிற்று. அவன் திஷ்யாவையும் பிரேம் வந்து போனதையும் மறந்து விட்டான். வண்டியின் டோர் ட்ரபிள் அவனை ஈர்த்துப் பிடித்திருந்தது.

    வேலை முடிந்து வண்டி ‘ரிலீஸ்” ஆன போது கூட நின்று கவனிப்பதில் கால் மெக்கானிக்காக ஆகி இருந்தான்.
    மீண்டும் பிரேம் வந்தான்.

    “அடடா… மறந்தே போய்ட்டேன். செங்கு… பத்து நிமிஷம் வீடு வரைக்கும் போயிட்டு வந்துடறேன்!”
    “சட்ணு வாங்க சார்… இன்னிக்கு பாங்குக்கு போவணும். இன்னிக்கு ஸ்பேர்பார்ட்ஸ்காரன் பில்லை கிளியர் பண்ணிடணும்.”
    சிவா வழக்கப்படி கால் நடையாகப் புறப்பட்டான்.

    “சார்…”
    செங்கு கூப்பிட்டான்.
    “என்ன?”
    “ஐயாவுது வண்டி சும்மாதானே கெடக்குது. எடுத்துட்டுப் போங்க… ஜல்தி வரவேணாம்?”
    “எனக்கு டிரைவ் பண்ணத் தெரியாதே!”
    செங்கு முகம் சப்பென்று போய் விட்டது.

    கற்றுக் கொள்ள வேண்டும். மோட்டார் பைக் மட்டுமல்ல. கார்.. வேன்… ட்ரக்… லாரி.. எல்லாவற்றையும் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும்.
    “சைக்கிள் விடுவீங்களா?”
    “ஓ”…
    “நம்ப வண்டியை எடுத்துக்கிணு போங்க”

    சிவா செங்குவின் சைக்கிளை மிதித்து சாலையில் கலந்த பின்புதான் ஒர்க்ஷாப்பின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டான்.
    திஷ்யா எதற்கு வரச் சொல்லி இருக்கிறாள்? ஆள் அனுப்பியது அசாதாரணமாகப் பட்டது.

    இந்த அசாதாரணம் அவன் முதல் தடவை வந்தபோது தனக்கு உறைக்காததை எண்ணினான். ஒர்க்ஷாப்பில் ஒரு வேலையின் போதையுள்ளதும் அது இரண்டு மணி நேரத்தில் தன்னைக் கவர்ந்ததும் புரிந்தது.

    வீட்டில் யாரும் இல்லை. திஷ்யா மட்டும் தனியாக இருந்தாள். புண்ணியகோடி ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டார். குழந்தைகள் எல்லாம் ஸ்கூலுக்குப் போயிருந்தன.

    நேராக அவள் வீட்டுப் போர்ஷனுக்குப் போய் சாயம் போய் கோடுகளும் பெயரும் கீறியிருந்த பச்சை ஸ்டீல் சேரில் உட்கார்ந்தான். அந்த அனுபவம் அவனுக்கு நூதனமாக இருந்தது. அவன் இதுவரை அவள் வீட்டுப் போர்ஷனுக்குள் நுழைந்ததே இல்லை.

    திஷ்யா அவன் வந்ததை லட்சியம் செய்யாத மாதிரி முகக் கண்ணாடியைத் துடைத்தவாறிருந்தாள்.
    “வரச் சொன்னியாமே!”
    அவள் அவனுக்குப் பதிலளிக்கவில்லை.

    “பிரேம்… டெய்லர் கிட்டே உன் பேண்ட் குடுத்தியே, அது ரெடியாண்ணு பார்த்துவிட்டு வா!”
    “அது முந்தா நேத்திக்கு சாயங்காலமே ரெடியாயிடுச்சு… என்னாப்பா வரவில்லையேண்ணு கேட்பானேன்னு நான் ஸ்கூல் விட்டு வர்றப்ப கடையைச் சுத்திக்கிட்டு வந்தேன்!”

    “எவ்வளவு கூலி?”
    “அறுபது.”
    அவள் பழைய மர பீரோவைத் திறந்து சின்ன பிளாஸ்டிக் பர்ஸை எடுத்தாள். ஆறு பத்து ரூபாய் நோட்டை நீட்டினாள்.
    பிரேம் இருக்கட்டுமே, தைத்த பாண்ட்டை அப்புறம் வாங்கட்டும் என்று சிவாவுக்குத்தோன்றிற்று.

    “அவ்வளவு தூரம் போகணும்!” என்று பொருமினான் பிரேம்.
    “என் சைக்கிளை எடுத்துட்டுப் போறியா… எப்ப வருவே?” என்று சிவா கேட்டான்.

    “வேண்டாம்… அவன் பஸ்ஸில் போய் வரட்டும்” என்று உன் உதவி தேவையில்லை என்ற உதாசீனத்தோடு சொல்லிவிட்டு அவள் ஓர் ஐந்து ரூபாய் நோட்டைத் தந்தாள்.

    அவன் போய்விட்டான்.
    “அவனை ஏன் அனுப்பினே?”
    திஷ்யாவின் பார்வை சிவாவினுள் குத்தூசி மாதிரி இறங்கிற்று.

    “ஐயா… ரொம்ப பிஸி ஆய்ட்டிங்க.”
    “மெய்தான். தாமு ஒர்க்ஷாப்பை ஹாண்ட் ஓவர் பண்ணிட்டு காலையே மதனபள்ளி போய்ட்டாரு.”
    “விஷயத்துக்கு வா. அப்புறம் இன்ஸல்ட் பண்ணலாம். இன்னிக்கு ஸ்க்ரீன் டெஸ்டாம். ஒடனே அக்ரிமெண்ட்லே சைன் பண்ணுவாங்களாம்.”
    ஒரு சினிமா ஸ்கிரீனில் அந்தக் கண்களையும் உதடுகளையும் மானசீகமாக ஒரு விஸ்வரூபத்தில் பார்த்தான்.

    “நீ என்ன முடிவு பண்ணியிருக்கே.”
    “வெண்டைக்கா.”
    “பொறுமையாச் சொல்லு”
    “செத்துப் போவேன்”
    “அது ஒரு பெரிய நஷ்டமில்லேங்கறார், ஒங்க அப்பா.”

    “அவர் நஷ்டப்படட்டும்னு நான் சாகப் போறதில்லே. அவருக்கு லாபம் வரணும்னு வாழப் போறதுமில்லே.”
    “நீ ஏன் சினிமாவிலே நடிக்க மாட்டேங்கறே?”
    “நெஜம்மா கேக்கறியா?”
    “ரியலா”
    “எனக்கு வேஷம் போடப் பிடிக்கலே. நான் என்னவோ அது எனக்குப் போறும். என் ஒடம்பையும் மனசையும் நான் பஜார்லே விக்கத் தயாராயில்லே.”

    “ஒங்கப்பா ‘கம்பல்’ பண்றாரே?”
    “அவர், எதுக்கு பண்ணணும்?”
    “பைசா ரூபாய். சாதனை. அலைச்சல். பறப்பு. அதிருஷ்டம் எல்லா அங்கலாய்ப்புக்கும் அதானே முற்றுப்புள்ளி. சினிமாவிலே அது ஏராளமாக கெடைக்கும்.”
    “முற்றுப்புள்ளி அவருதா ஒண்ணுதா?”

    மீண்டும் ஒருமுறை அவள் நீ என்று தனக்கும் அவனுக்கும் ஒரு கொக்கி வைத்ததைக் கவனித்தான்.
    “நான் உனக்கு யாரு திஷ்யா?”
    அவள் உதடுகள் கோபத்தில் அழகாய்ச் சிவந்தன. அற்புதமாய்த் துடித்தன. ஒரு நிமிஷம் அவள் உதட்டைக் கடித்துத் தின்றாள்.

    “ஸோ யூ வித்ட்ரா?”
    “எதையும் நான் வித்ட்ரா பண்ணலே. எங்ஙகயாவது கமிட் பண்ணியிருந்தாத்தானே வித்ட்ரா பண்ணிக்க”
    திஷ்யாவின் முகம் சாம்பிற்று.

    “ஸாரி திஷ்யா, ஒன்னை டீஸ் பண்ஙணணும்னு சொல்லலே. ஆனா ஒங்க வீட்டு விவகாரத்திலே குறுக்கிட எனக்கு என்ன ரைட் இருக்கு?”
    அவளது கரிய இமைகள் அவன் மனசை அள்ளி தன் கூட்டில் தன் சிறகில் வைத்துப் பொத்திக் கொள்வது போன்று படபடத்தன.

    “இது ஒரு ப்ளாக்மெய்ல் சிவா!”
    “ப்ளாக் மெய்லா?”
    “ஆமா, என் வாயாலே ஒரு வாக்கு மூலம் வர வைக்கணும்ங்கற ப்ளாக் மெய்ல்.”

    “இப்பதான் நீ மொதல் முறையா சொல்றே-அதுவும் ரொம்ப லேட்டா”
    அவன் நாற்காலியிலிருந்து எழுந்தான். அவன் தன்னை நெருங்கப் போகிறான் போகிறான் என்ற கூச்சத்தில் அவள் பின் வாங்கினாள். அந்த விளக்கத்தின் அர்த்தத்தில் அவனுக்கு முகம் சிவந்தது.

    “யூ ஆர் ஏ மேன்! மனுஷ்யன்” எங்கிருந்தோ பிரீதாவின் குரல் ஒலி.
    “நீ பொய் சொல்றே சிவா!”
    “நோ.”
    “ஒனக்கும் எனக்கும் என்னன்னு ஒனக்கு எப்பவோ, தெரியும். எப்ப ஒனக்குத் தெரிஞ்சதோ அப்பவே எனக்கும் தெரிஞ்சு போச்சு.”

    “இல்லே; அப்ப தெரிஞ்சது வேற. இப்ப தெரியறது வேற” அவன் பெருமூச்சு விட்டான்.
    “ஐ டோண்ட் வாண்ட்டு ஆர்க்யூ” என்ன சொல்வது என்று புரியாமல் அவன் குழம்பினான்.
    “எத்தனை மணிக்கு உனக்கு கேமரா டெஸ்ட்”

    “பனிரெண்டு மணிக்கு கார் வருமாம்” அவன் கடிகாரத்தைப் பார்த்தான். இன்னும் அரைமணி நேரம்தான் இருந்தது.
    “நான் கீழேயிறங்கி சைக்கிளைத் தள்ளிகிட்டு ரோடுக்குப் போறேன். அங்கே பஸ்ஸ்டாப் கிட்டே வா.”
    “என்னமாவது கொண்டு வரட்டுமா?”

    அந்த குழந்தைத்தனமான கேள்வியைக் கண்டு அவன் சிரித்தான்.
    “ஏன் சிரிக்கிறே?”
    “நீ என்னோட ஓடிவந்துடறியா?”
    “நான்சென்ஸ்” என்றாள் திஷ்யா.

    “பின்னே ஏன் கேட்கறே?”
    “அப்படி ஏதாவது ப்ளான் பண்றியோன்னு கேட்டேன்” என்று விளக்கினாள் திஷ்யா.
    “நான்சென்ஸ்” என்று திருப்பிச் சொன்னான் சிவா. அவள் பதிலளிக்கவில்லை.

    தொடரும்

    Share