(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

(மீ.விசுவநாதன்)

அத்யாயம்: 12

“திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி”

avs1

அவன் 1966ம் வருடம் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் மாதத்தில் திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் ஏழாவது வகுப்பில் சேர்ந்தான். அவனது வீட்டில் இருந்து இருபது நிமிடத்தில் அந்தப் பள்ளியை அவன் அடைந்து விடுவான். அந்தப் பள்ளியின் தோற்றமே ஒரு பெரிய கல்லூரியைப் போன்றிருக்கும். அழகான முகப்பும், ஏராளமான வேப்பமரங்களும், நாவல் மரமும் நிறைந்து படிக்கத் தூண்டும் சூழல் கொண்டது இந்தப் கல்விச் சாலை. பள்ளிக்குள் நுழைந்தவுடனேயே இடது பக்கத்தில் ஒரு அழகான சுடலை மாடன் சிலை இருக்கும். வலதுபுறம் மிகப்பரந்த வெளியும் சுற்றுச் சுவரின் பக்கத்தில் வரிசையாக வேப்ப மரங்களும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். முகப்புக் கட்டிடத்திற்குப் பின்புறம் ஒரு மேடை உண்டு. அதன் அருகில்தான் நூல்நிலையம் இருந்தது. பகல் உணவுக்குப் பின்பும், ஓய்வு வேளைகளிலும் அவன் அந்த நூல் நிலையத்தில் அமர்ந்து கதைப் புத்தகங்களைப் படிக்கவே விரும்புவான். சிலவேளைகளில் நண்பர்களுடன் சறுக்குமரம் விளையாடுவதும் உண்டு.

அவனுக்கு பச்சை நிறத்தில் அரைக்கால் டிராயரும், அரைக்கை வெள்ளைச் சட்டையும்தான் சீருடைகள். டிராயரின் இரண்டு பக்கத்துப் பைகளும் தட்டை, முறுக்கு, சீடை, நெல்லிக்காய், கடலை மிட்டாய் போன்ற தின்பண்டங்களை அடைத்து வைக்கும் “கோடவுனாகவே” அவனுக்குப் பயன்பட்டன.

இந்தப் பள்ளியின் தலைவர்களாக R. S. A. சங்கர ஐயர், A. வேலாயுத முதலியார், K. R. சுந்தரம் ஐயர் அகியோர் இருந்தனர். பிறகு இன்று வரை K. S. ராமன் தலைவராக இருக்கிறார். அதன் செயலாளர்களாக தியாகி. ய்க்யேஸ்வரசர்மா, சந்திரவிலாஸ் A. விஸ்வநாத ஐயர், ஸ்டோர் ராஜாமணி ஐயர் ஆகியோர் இருந்தனர், அதன் பிறகு1973ம் ஆண்டுமுதல் K. S. சங்கரசுப்ரமணியன் செயலாளராக இருந்து வருகிறார். பள்ளியின் வளர்ச்சிக்காக “வித்யா சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கி இன்று வரை நேர்மையான நிர்வாகம் என்ற பெயரை இப்பள்ளிக்கு அளித்து வருகின்றனர். இந்த வித்யாசங்கத்தின் இன்றைய தலைவராக K. S. ராமனும், செயலாளராக K. S.சங்கரசுப்ரமணியனும், பொருளாளராக M. ராகவனும், சங்க உறுப்பினர்களாக K. S. சுந்தரம், R. சங்கர், ராதிகா ராமன் ஆகியோருடன் பள்ளித் தலைமை ஆசிரியர் P. சுப்பையா, நூலக மேலாளர் L. ராமகிருஷ்ணன், ஆசிரியை உஷா போன்றோரும் இருக்கின்றனர்.

“தலைமை ஆசிரியர் N. ரங்கநாத ராவ்”


avsஅவனுக்கு அப்பா அந்தப் பள்ளியில்தான் தலைமைக் கணக்கராக வேலை பார்த்து வந்தார். அவன் அந்தப் பள்ளியில் சேர்ந்த நேரத்தில் “N. ரங்கநாத ராவ்”தான் தலைமை ஆசிரியராக இருந்தார். நன்றாகச் சலவை செய்த மடிப்புக் கலையாத பச்சை நிறத்தில் முழுப் “பேன்ட்”ம், முழுக்கை வெள்ளைச் சட்டையும் அணித்து சரியான நேரத்தில் பள்ளியில் அவர் இருப்பார். கண்டிப்பானவர், அதேசமயம் கனிவானவர். அவரது கண்களில் அறிவின் தெளிவும், உறுதியும் இருக்கும். நல்ல ஆங்கிலப் புலமை உள்ளவர்.

1967ம் வருடம் அப்போதைய முதல் மந்திரி அண்ணாத்துரையைப் பள்ளிக்கு அழைத்திருந்தனர். அன்று வரவேற்புரையை தலைமை ஆசிரியர் ரங்கநாதராவ் நிகழ்த்தினார். மிகத் தெளிவோடும், நகைச்சுவையோடும் பேசியதை மாணவ, மாணவிகள் உற்சாகமாகக் கைகளைத் தட்டி ரசித்தனர். முதலமைச்சர் பேசும் பொழுது தலைமை ஆசிரியர் ரங்கநாதராவ் உரையின் அழகைப் பாராட்டினார். அதே போல 1971ல் கல்வி அமைச்சராக இருந்த இரா.நெடுஞ்செழியன் பள்ளிக்கு வந்திருந்த பொழுது தலைமை ஆசிரியர் மிகச் சிறப்பாகப் பேசியதும், கல்வி அமைச்சர்”கலையே வளர் தொழில் மேவிடு கவிதை புனை தமிழா, இலையே உணவிலையே இனியிலையே என்னும் எளிமை, இனிமேல் இலை எனவே முரசறைவாய் முரசறைவாய்” என்ற பாரதிதாசனின் கவிதையை ஓசை நயத்தோடு கூறியதும் அவனுக்குப் பசுமையாக நினைவிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் நடைபெறும் “இறை வணக்கம்” (Prayer) நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் ஏதேனும் ஒரு நல்ல கருத்தை மாணவர்களுக்குச் சொல்லுவார். மாணவர்கள் அமைதியாகக் கேட்பார்கள். அப்படி ஒரு காந்த சக்தி அவருக்கு இருந்தது. ஒரு முறை அவர் உரை நிகழ்த்தும் முன்பு “ஏமாறாதே ஏமாற்றாதே” என்ற திரைப்படப் பாடல் ஒலி காற்றில் மிதந்து வந்தது. மாணவர்களின் கவனம் அந்தப் பாடலில் சென்றதை அறிந்த தலைமை ஆசிரியர் ரங்கநாதராவ் அந்தப் பாடலையே அன்றைய உரைக்குக் கருவாக எடுத்துக் கொண்டு ஒரு ஐந்து நிமிடங்கள் பேசினார். எப்படி வாழ்வில் கவனமாக இருக்கவேண்டும் என்ற பொருளில் அமைந்த அந்த அவரது அற்புதமான உரையை அவன் இப்பொழுதும் அசைபோடத்தான் செய்கிறான். ஆசிரியர்கள் எப்படி ஒரு மாணவனின் வாழ்க்கையை நன்கு அமைத்துத் தருகிறார்கள், மாணவர்கள் அதை எப்படி உள்வாங்கிக் கொண்டு மேலே மேலே உயருகிறார்கள் என்ற கேள்விகளுக்கு இது போன்ற நிகழ்வுகளே சரியான பதில்கள். அவன் அவனுடைய தலைமை ஆசிரியரான “ரங்கநாதராவ்”வை அவர் உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்த சமயம் சென்று பார்த்து அவரை வணங்கி வந்தான். “கண்ணா…நீ என் மாணவன். இன்று நீ நன்னா இருப்பதைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாருக்கு” என்று அவர் அன்போடு அவன் தலையில் கைவைத்து ஆசிசெய்தார்.”சார்…அது உங்களைப் போன்ற ஆசிரியர்கள் போட்ட பிச்சை” என்றான்.

அவனது வீட்டிற்கு மூன்று வீடுகள் தள்ளி மேல்புறத்தில் உள்ள கடேசி வீட்டில்தான் அவர் குடி இருந்தார். ஆசாரமான மாத்வ குடும்பம். தெய்வ நம்பிக்கை மிக்கவர். தினமும் காலையில் ஏழு மணிக்கெல்லாம் ஆற்றங்கரையில் குளித்து, இடுப்பில் நார்மடிப் பட்டு கட்டி, வலது கையில் ஒரு செப்புச் சொம்பில் தண்ணீரும் கொண்டு எதோ மந்திரங்களை முணுமுணுத்தபடியே வருவார். காலையில் வீட்டில் அவர் பூஜை செய்யும் வேளை “டன்டட டட்டன் டன்டன்டன் டன்டட டட்டன் டன்டன்டன்” என்ற சந்தத்தில் “சேன்டி” அடிக்கும் மங்கல இசை அவனது வீட்டிற்குக் கேட்கும். அப்பொழுது மணி சரியாக ஏழேமுக்கால் என்று சொல்லிவிடலாம். அனேகமாக அவர் பள்ளிக்கு நடந்தேதான் வருவார். அவர் பள்ளிக்குச் செல்லும் முன்பாக அவனுக்கு அப்பாவை அவர் கூட்டிவரச் சொல்லி பள்ளியில் வேலை செய்யும் சுடலை முத்துவையோ, தளவாயையோ, பூதத்தானையோதான் அனுப்புவார். சில நாட்களில் பள்ளிக் காவலாளியாக இருந்த ஆதிமூலத் தேவரையோ அனுப்புவார். அந்த நேரத்தில் அவனோ, அவனுக்கு அக்காவோ வீட்டு நடையில்(முன் வாசலில்) இருப்பார்கள். அவர்களிடம், “அம்பி..அப்பாவ ஹெட்மாஸ்டர் ஐயா வரச்சொன்னாவ…அப்பாட்டச் சொல்லுதியா ” என்று அவர்கள் அன்பாகக் கூறுவார்கள். அப்படி அழைக்கும் ஆதிமூலத் தேவரை அவனுக்குப் பிடித்திருந்தது.

“பள்ளிக் காவலாளி ஆதிமூலத் தேவர்”

ஆதிமூலத்தேவரின் குரலில் ஒரு ஆண்மை இருக்கும். நல்ல நம்பிக்கையான தொழிலாளி. அவனுக்கு அப்பாவுக்கும்avs2 ஆதிமூலத் தேவரிடம் மிகுந்த அன்புண்டு. அவனுக்கு அப்பா பள்ளியின் சம்பள தினத்தன்று அம்பாசமுத்திரம் அரசுக் கருவூலத்தில் இருந்து பள்ளியில் வேலை பார்பவர்களுக்கான சம்பளப் பணத்தை வாங்கி வருவார். அப்பொழுது அப்பாவுக்குத் துணையாக பூதத்தானோ, ஆதிமூலத் தேவரோதான் சைக்கிளில் கூடவே சென்று வருவார்கள். அவனுக்கு அப்பா அவர்களுக்கு நண்பன்தான். அப்படிப் பழகுவார். பூதத்தான் மூக்குப்பொடி போடுவார். அந்தக் கையை வீட்டுத் திண்ணைச் சுவரில் தேய்க்கும் பொழுது,” ஒய்..பூதத்தான் இப்படி செவரெல்லாம் நாசமாக்காதேயும்….ஒரூ துண்டக் கைல வைச்சுக்கப் படாதோ….” என்று அவனுக்கு அம்மா சொல்லுவாள். “அப்படியே பழகிடுச்சில்லேம்மா…” என்று பூதத்தான் நெளிவார்.

அருகில் இருக்கும் ஆதிமூலத்தேவர்,” அம்மா சொல்லுதாவல்லா…அந்த நல்லதக் கேட்டுக் கிடுமே…” என்று பூதத்தானைப் பார்த்துக் கூறுவார். அவர்கள் ஹெட்மாஸ்டர் வீட்டிற்கு வரும்பொழுதெல்லாம் அவனுடைய வீட்டுத் திண்ணையில் அமர்ந்துதான் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் முறை அவனுக்குப் பிடித்திருந்தது.

ஆதிமூலத் தேவர் பள்ளியில் இருந்து ஓய்வு பெற்றபின் அவருக்கான ஓய்வூதியப் பணத்தை அரசாங்கத்திடம் இருந்து விரைவில் பெற்றுத் தர அவனுக்கு அப்பா மிகுந்த உதவி செய்தார். அதனால் அவருக்கு அவனது குடும்பத்தினர் மீதே ரொம்பவும் ஒரு விஸ்வாசம் இருந்தது. அவர் பணி ஓய்வு பெற்றபின் காலை பதினோரு மணிக்கு மேல்தான் தாமிரபரணிக்குக் குளிக்கச் செல்வார். தனது வழுக்கைத் தலையில் நிறைய எண்ணை தடவி இருப்பார். கூடவே ஒரு ஆட்டுக் குட்டியையும், அதற்கான ஒரு சிறிய இலைகள் உள்ள குழையையும் ஒரு கையிலும், மறு கையில் ஒரு வெள்ளைத் துண்டை இரண்டாக மடித்து வைத்தபடியம் மெதுவாக நடந்து செல்வார். சில விடுமுறை நாட்களில் அவனும் அவனது நண்பர்களும் வாய்க்கால் பாலத்தின் சுவர்களில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அவனுக்கருகில் வந்து, “அம்பி ..இப்படி செவர்கட்டைல ஒக்கராதேயும்…தண்ணிக்குள்ள விழுந்திர மாட்டீரா” என்று கனிவோடு எச்சரிப்பார்.

ஒரு நாள் அவன், ஆதிமூலத் தேவர் ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மண்டபத்தை அவர் ஒருவராகவே சுத்தம் செய்வதை பார்த்தான். அந்த மண்டபச் சுவர்களில் நன்றாகப் படம் வரைபவர்களைக் கொண்டு அழகான படங்களை வரையச் சொன்னார். ஸ்ரீ கிருஷ்ணருக்கு முன்னால் இருக்கும் கல்விளக்கில் எண்ணை விட்டு தினமும் தீபம் ஏற்றினார். அந்த மண்டபத்தில் யாரேனும் அசுத்தம் செய்பவர்களைக் கண்டால் அவர்களிடம், “எலேய்…இங்கயா வந்து அசுத்தம் பண்ணுதே..ஒங்க வீட்ல பண்ணுவயாலே..இது சாமி இருக்கற இடம்ல .. சுத்தமா இருக்கட்டும்…” என்று சண்டை போடுவார். அதனாலேயே, அவரின் கண்டிப்பாலேயே அந்த இடம் இன்றும் சுத்தமாக இருக்கிறது. அவர் செய்த பணியை யாரேனும் இன்றும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஆற்றங்கரையில் படி இறங்கும் இடத்தில் ஒரு அரச மரமும், நெல்லி மரமும், வேம்பு மரமும் நட்டு வைத்தார். அது இன்று வானுயர ஓங்கி நிற்கிறது. அதன் அடியில் ஒரு சிறிய விநாயகர் சிலையும் வைத்து இன்று வருவோர் போவோர் எல்லாம் வணங்கி வருகின்றனர் என்றால் அதற்குஆதிமூலத் தேவரின் நல்ல உழைப்பும், பக்தியுமே காரணம். அவர் எப்போதுமே அந்த கிருஷ்ண மண்டபத்தின் மேலேதான் படுத்திருப்பார். அப்படி ஒருநாள் படுத்திருந்தவர் மீண்டும் எழுந்திருக்கவே இல்லை. தாமிரபரணியை நேசித்தவருக்கு அதன் கரையிலேயே, திறந்த வெளியிலேயே அமைதியான மரணம் அமைந்து விட்டது. அந்த ஸ்ரீகிருஷ்ண மண்டபத்தையும், கரையில் வானுயர நிற்கும் அரசமரத்தையும் இப்பொழுதும் அவன் பார்க்கத்தான் செய்கிறான். ஆதிமூலத் தேவரை நினைத்துக் கொள்கிறான்.

(14.05.2015) இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “” அவன், அது , ஆத்மா” (12)

  1. ஆதிமூலத் தேவரை கண் முன்னே மீண்டும் கொண்டுவந்ததற்கு மிக்க நன்றி.  அருமையான மலரும் நினைவுகள். தொடரட்டும் நற்பணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *