மீ. விசுவநாதன்

vallamai111-300x150

படகில் பயணம் ! பரந்து விரிந்த
கடலில் இரவின் கலையின் நடனம் !
சுடலைச் சிவனும் சுகமாய் உமையும்
இடமாய் அமர்ந்த எழில். (41) 09.02.2015

பசுதெய்வம் ! தட்டாமல் பால்தரும் எந்தச்
சிசுக்குமே ! சாணந் திரட்டிப் பொசுக்க
விபூதி கிடைக்கும் ; விரும்பி வணங்கும்
கபோதிக்கும் தீருங் கலி. (42) 10.02.2015

பசுவும் பசுமேய்க்கும் பாலனும் ஒன்றாய்
விசும்புக் குலத்தின் வினைகள் நசுக்கும்
பசுபதிகள் ; பாலோடு பக்தி சுரக்கும்
பசுபற்றப் பாடம் படி. (43) 11.02.2015
(ஓவியர் “கேசவ்” வரைந்த ஓவியம் பார்த்து எழுதிய வெண்பா)

மாயக் குதிரை மனதைப் பிடித்தவன்
மாயவன் கண்ணன் மடியிலே தோய்கிறான் !
காயில் இனிப்பும் கனியில் கசப்புமே
வாயில் உணர்ந்தே வளர். (44) 12.02.2015
(ஓவியர் “கேசவ்” வரைந்த ஓவியம் பார்த்து எழுதிய வெண்பா)

கரிவண்ணக் கண்ணன் களிநடை போட்டு
விரிகூந்த லோடு வெளியில் தெரிகிறான் !
வானமே நீர்த்தொட்டி வாரிமழை கொட்டல்போல்
தானுமே ஆவான் தனி. (45) 13.02.2015
(ஓவியர் “கேசவ்” வரைந்த ஓவியம் பார்த்து எழுதிய வெண்பா)

கடல்தாண்டிப் போகாதே கட்டாயம் பாவம்
உடனே வருமென்றார் ; ஊரூர் கடந்து
கடல்தாண்டிப் போன “கவியனு மானால்”
இடரெல்லாம் நீங்கும் எனக்கு. (46) 14.02.2015

பஞ்சமா பூதம் படைத்த இறைவனைக்
கொஞ்சமா திட்டுறோம் ; கொள்ளையாய் வஞ்சத்தைக்
கூசாமல் செய்கிறோம் ; குட்டுப் படுகையில்
ஏசாமல் ஏற்றே இரு. (47) 15.02.2015

மூச்சுக்குத் தேவை முறையான காற்றோட்டம் !
பேச்சுக்கும் அப்படியே ! பிள்ளைகள் பாசத்தால்
கண்ணை மறைத்துக் கடமை தவறினால்
அண்ணே அமைதிக்கே ஆப்பு. (48) 16.02.2015

கண்ணனின் வெண்பசு காட்டுது வால்கொடை !
பெண்மையின் ஆண்மையும் பேராழி வண்ணமும்
உண்மையின் பேரெழில் ! உத்தவ நண்பனை
எண்ணத்தில் வைத்தே இரு. (49) 17.02.2015
(ஓவியர் “கேசவ்” வரைந்த ஓவியம் பார்த்து எழுதிய வெண்பா)

சிவசிவ என்று சிலநொடி கூட
இவனுளம் நிற்காது ; இந்தத் தவநெறி
கிட்டத் தெரியாக் கிறுக்க னிதயமும்
வெட்ட வெளியாம் சிவம். (50) 18.02.2015

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *