பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: இனநலம் நன்குடையவாயினும் என்றும்மனநலம் ஆகாவாம் கீழ்
மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்
உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் – மிக்க
இனநலம் நன்குடைய வாயினும் என்றும்
மனநலம் ஆகாவாம் கீழ்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
மிக்கு பெருகி மிகு புனல் பாய்ந்தாலும்
உப்பு ஒழிதல் செல்லா ஒலி கடல் போல் மிக்க
இன நலம் நன்கு உடையஆயினும் என்றும்
மன நலம் ஆகாவாம் கீழ்
பொருள் விளக்கம்:
மிகுந்த வெள்ளப்பெருக்கெடுத்து மிகுதியான அளவில் ஆற்றின் நன்னீர் கடலில் கலந்தாலும், தனது உப்பின் தன்மை நீங்காது ஆர்ப்பரிக்கும் கடலினைப் போல, மிகுந்த பண்பு நிறைந்தோருடன் இணைந்து பழகி வாழும் சூழ்நிலையிலும், என்றுமே தனது மனதின் கயமைத்தனத்தை கைவிடாது இருப்பார்கள் கீழ்த்தரமான குணத்தைக் கொண்ட மக்கள்.
பழமொழி சொல்லும் பாடம்: பண்பு நிறைந்தோரோடு சேர்ந்து வாழும் வாய்ப்பினைப் பெற்றிருந்தாலும், பண்பற்றோர் தமது குணத்தை உயர்த்திக் கொள்ளாது தங்கள் இயல்பிலேயே சிறுமைக் குணத்துடன் இருப்பார்கள்.
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது. (குறள்: 823)
அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராக வாழாமல் பண்பற்றவர்கள் தனது சிறுமைக் குணத்தைக் கைவிடாதவர்களாக இருப்பார்கள் என்று வள்ளுவம் குறிப்பதும் இதனையே.