புலவர் இராமமூர்த்தி.

TirumalTemple

தமிழ் நூல்களுள் மிகவும் பழைய நூல், ‘தொல்காப்பியம்!’ வரலாற்று ஆதாரங்களாக விளங்கும் பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களுள் இதுவே மிகவும் தொன்மையான இலக்கண நூல்! இதன் பாயிரம் …

‘வடவேங்கடம் தென்குமரி
ஆயிடை
தமிழ் கூறும் நல்லுலகத்து,
…….புலம்தொகுத்தோனே!”
என்று பாடுகிறது. இதன் மூலம் கி.மு.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வேங்கடமாமலை தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட திசை எல்லையாக  இருந்ததை அறிந்து கொள்ளலாம்.

மேலும், புறநாநூறு 381 ஆம் பாடலில்,
“வீங்கு நீர் அருவி வேங்கடம் ”
என்றும்,

385 ஆம் பாடலில்,
”வேங்கட விறல் வரைப் பட்ட
ஒங்கல் வானத்து உறை”
என்றும்,

389 ஆம் பாடலில்,
”கல்லிழி அருவி வேங்கடம்”
என்றும்,

391 ஆம் பாடலில் ,
”வேங்கட வரைப்பின்
வடபுலம்”
என்றும் வேங்கட மலை பற்றிய செய்திகள் அமைந்துள்ளன.

மேலும், அகநானூற்றின் 27-ஆம் பாடலில்,
”வடவயின் வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை”
என்றும்,
61 ஆம் பாடலில்,
”விழவுடை விழுச்சீர்
வேங்கடம்”
என்றும்,
83 ஆம் பாடலில்,
”வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும்”,
என்றும்,
85 ஆம் பாடலில்,
“வென் வேல் திரையன்
வேங்கட நெடுவரை”
என்றும்,
141 ஆம் பாடலில்,
”தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய வேங்கட
வைப்பு”
என்றும்,
211 ஆம் பாடலில்,
”பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்,
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்” ‘
என்றும்,
213 ஆம் பாடலில்,
”நெடுங்கோட்டு ஓங்குவெள்
ளருவி வேங்கடத்து உம்பர்”
என்றும்
265 ஆம் பாடலில்
“செந்நுதல் யானை வேங்கடம் தழீஇ”
என்றும்,
393 ஆம் பாடலில்,
”தேன் தூங்கு உயர்வரை நல் நாட்டு உம்பர்
வேங்கடம் ”
என்றும், பாட ப்பெற்ற வடதிசை வேங்கடம் பற்றிய அறிமுகம் மிகவும் பழங்காலத்திலேயே வேங்கடவன் வழிபாடு குறித்து, நமக்கு அறிவிக்கிறது! இவற்றுள் விழவுடை விழுச்சீர் வேங்கடம் ” என்ற தொடர் அக்காலத்திலேயே திருவேங்கட மாமலையில் திருவிழாக்கள் நடைபெற்றன என்பதை அறிவிக்கின்றது.

இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்,
புகார்க் காண்டம், வேனிற் காதையில்,
”நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு ”
என்ற பகுதி, நெடியோன் குன்றம் என்று திரு வேங்கட மா மலையைக் குறிக்கிறது.

அடுத்து,மதுரைக் காண்டம் காடுகாண் காதையில்,
கோவலனிடம் மாங்காட்டு மறையோன் கூறுவதாக ஒரு பகுதி உள்ளது, அதில்
”சேரநாட்டிலிருந்து, சோழ நாட்டின் திருவரங்கத்தில் பள்ளிகொண்ட பெருமாளாகவும் திருவேங்கட மாமலையில், நின்ற திருக் கோலத்தில் காட்சி தரும் நெடுமாலாகவும் பக்தர்க்கு அருள் புரியும் திருமாலைக் காட்டுவாயாக!” என்று என் கண்களை என்மனம் வற்புறுத்துகின்றது என்று மாங்காட்டு மறையோன் கூறுகிறான்.

அதிலிருந்து திருமாலின் திருமேனி அழகு நாடெங்கும் பெரிதும் விரும்பிப் போற்றப் பெற்றது. என்பதை அறியலாம் அப்பகுதி,
”வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவில் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போல
பகைஅணங்கு ஆழியும், பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
நலம்கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
என்கண் காட்டு என்று என்உளம் கவற்ற,
வந்தேன்” என்பதாகும்.

இவற்றால் வடவேங்கட மாமலை ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நிலைத்த அடையாளமாய்க் குறிக்கப் பெற்று விளங்கியதைப் புரிந்து கொள்ளலாம்!

 

 

 

 

புலவர் இரா. இராமமூர்த்தி,
ஆலந்தூர்- சென்னை 600 016
மின்னஞ்சல்: rawmurthee@gmail.com

படம் உதவி: விக்கிபீடியா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.