மகன் தினம்!
-கனவு திறவோன்
அடிக்கடி வருகிறார்கள்
டாக்டரும்
வக்கீலும்
மத்தியஸ்தரும்
அக்காக் குருவியும்
மழையும்
வெயிலும்
காற்றும்
காப்பகத்தில் இருக்கும்
அம்மாவைப் பார்க்க!
மாதத்திற்கு ஒருமுறை
மணியார்டர் தரும்
தபால்காரரும்
வருகிறார்
கடைசி வரை
மகன் மட்டும் வரவில்லை!
*******
அம்மா உயிரோடு இருக்கும் போது
ஆதரவற்றோர் விடுதியிலும்
செத்தபிறகு
கங்கைக் கரையிலும்
அன்னையர் தினம்
அனுசரிக்கும் மகன்!
**************
ஆ சிரமத்தில்
இருந்த தாயைப்
பார்க்கத் தனயன் வந்தான்
கைகளைப் பிடித்துக் கன்னத்தில் ஒற்றியவள்
கண்களிலிருந்து வழிந்த நீர்
ப்ரைலி மொழியில் எழுதியது…
‘மகன் தினம்’ என்று ஒன்றிருந்தால்
அன்றாவது ஒரு நாள்
உன்னைப் பார்க்க
உன் வீட்டிற்கு வரலாமே?!