Blog

  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 44

    –சு. கோதண்டராமன்.

    ரிஷிகள் வேண்டிய செல்வம்

    atllUXQ

     

    (இதுவரை வேதத்தில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள மூன்று சொற்களான, தேவ, யக்ஞ, ருதம் ஆகியவற்றைப் பற்றிப் பார்த்தோம். இனி வேதத்தின் வேறு சில குறிப்பிடத் தகுந்த விஷயங்கள் பற்றிப் பார்க்கலாம்.)

    ரிக் வேதத்தின் முதல் மந்திரம் அக்னியை வேண்டுவது. அதில் அக்னி செல்வம் தருபவராகப் போற்றப்படுகிறார். இதைத் தொடர்ந்து பல இடங்களில் அக்னியைச் செல்வத்தின் தலைவராகவும் செல்வம் தருபவராகவும் கூறுகிறது வேதம்.

    அக்னி மட்டுமல்ல, வாயு, இந்திரன், அஸ்வினி தேவர்கள், சூரியன், உஷை ஆகிய எந்தத் தெய்வத்தை வேண்டினாலும் அவர்களிடம் “எங்களுக்குச் செல்வம் கொடு” என்ற கோரிக்கை முன் வைக்கப் படுகிறது.

    இவ்வாறு நூற்றுக்கணக்கான இடங்களில் இந்தப் பிரார்த்தனை திரும்பத் திரும்ப வருவதைப் பார்க்கும் போது ரிஷிகள் செல்வத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களே என வியப்புத் தோன்றும். இது பற்றி ஆராய்வோம்.

    செல்வம் என்பதற்கு அங்கு பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் – வஸு, ரயி, ரேக்ண, தனம், ராதஸ் முதலியவையாம். இவை அனைத்தும் ஒரு பொருட்சொற்கள்.

    செல்வம் என்றால் எத்தகைய செல்வம்? அவர்கள் பிரார்த்தனையில் எங்களுக்கு நீண்ட ஆயுள் கொடு, மக்கட்பேறு கொடு, உணவு கொடு என்பதோடு கூட செல்வமும் கொடு என்று வேண்டுவதால் செல்வம் என்பது மேலே கண்டவை அல்லாத வேறு ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என அறிகிறோம்.

    அது பணமா? அக்காலத்தில் பண்டமாற்று முறையே வழக்கில் இருந்ததால் பொருளாதாரப் பரிவர்த்தனைச் சாதனமாக தங்கமோ வெள்ளியோ பயன்படுத்தப்படவில்லை என்பதையும்  அறிகிறோம். அவர்கள் தங்கம் வெள்ளியை அறிந்திருந்தும் கூட எங்கும் தங்கம், வெள்ளி கொடு என்று வேண்டவில்லை.

    தெய்வங்களைப் போற்றும்போது பொன் வண்ணமுடையவர் என்று போற்றுகின்றனரே அன்றி ஆடவரோ, பெண்டிரோ தங்க நகை அணிந்து மகிழ்ந்ததற்குச் சான்றான குறிப்புகளும் அங்கு இல்லை. தெய்வத்திடம் கேட்டுப் பெற்ற செல்வத்தை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்தார்கள் என்ற விவரங்களும் இல்லை.

    எனவே அவர்கள் கோரிய செல்வம் என்பது வேறு ஏதோ ஒரு பொருளைக் குறிப்பதாக இருக்கவேண்டும் என்று தெரிகிறது. இன்னும் ஆராய்வோம்.

    ரிஷிகள் வேண்டிய மற்ற பொருள்களான உணவு, நீண்ட ஆயுள், மக்கட் பேறு இவை உலக வாழ்வின் பௌதிகத் தேவைகளை நிறைவு செய்து சந்தோஷம் தருவன. செல்வம் என்பது ஆனந்தம் தருவதாகக் கூறப்பட்டுள்ளது.

    இந்த இடத்தில் ஆனந்தம் சந்தோஷம் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டுமே தமிழில் மகிழ்ச்சி என்று மொழிபெயர்க்கப்பட்டாலும் இவற்றினிடையே நுட்பமான வேறுபாடு உண்டு. சந்தோஷம் என்பது திருப்தியடை என்ற பொருளுள்ள ‘துஷ்’ என்ற வேரிலிருந்து பிறந்தது. ஆனந்தம் என்பது மகிழ்ச்சி அடை எனப் பொருளுடைய ‘நந்த்’ என்ற தாதுவிலிருந்து தோன்றியது. நமக்கு ஒரு தேவை இருந்து அது நிறைவேறுவதால் ஏற்படும் திருப்திக்குப் பெயர் சந்தோஷம். தேவைகள் அற்ற நிலையில் உள்ளத்தில் தோன்றும் மகிழ்ச்சிக்குத்தான் ஆனந்தம் என்பது பெயர்.

    உதாரணமாக, பசியினால் வருந்தும் ஒருவனுக்கு உணவு கிடைத்தால் அவனது தேவை நிறைவடைகிறது. அந்த திருப்தி உணர்வு சந்தோஷமாகும். பசி முதலான உடல் தேவைகள் தீர்ந்த குழந்தை தனக்குத் தானே பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் அடையும் உணர்வு ஆனந்தம். அவ்வாறே மனநலம் சரியில்லாத ஒருவன் எந்தக் காரணமுமின்றி சிரித்துக் கொள்கிறான். அதுவும் ஆனந்தமே. (இந்த இரண்டாவது உதாரணம் வியப்பூட்டலாம். ஆனால் ஆதி சங்கரர் பஜகோவிந்தம் என்னும் நூலில் பிரம்மத்தில் ஈடுபட்ட ஞானியின் சித்தம் அளவற்ற ஆனந்தம் அடைவதாகவும் குழந்தைகள் போலவும் பித்தர்கள் போலவும் ரமிப்பதாகவும் கூறுகிறார்.)

    யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம் நந்ததி நந்ததி நந்தத்யேவ. 19

    யோகீ யோக நியோஜித சித்தோ ரமதே பாலோன்மத்தமதேவ 22

    கவிஞர்கள் இந்த ஆனந்தத்தைத்தான் பெரிதாக மதித்தார்கள். அன்றாட வயிற்றுப் பாட்டுக்குக் காணி நிலத்துக்கு மேல் ஆசைப்படாத பாரதி, அங்கே கத்தும் குயிலோசை சற்றே வந்து காதிற் பட வேண்டும் என்கிறார். கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலாவை உணர்ந்து இன்பம் காண்கிறார். பார்க்கும் மரங்களில், காக்கைச் சிறகினில் எல்லா இடங்களிலும் இறைவனைக் கண்டு ஆனந்தம் அடைகிறார்.

    ஆங்கிலக் கவிஞர் வேர்ட்ஸ்வொர்த் தன் கவிதையில் குறிப்பிடுகிறார்.

    I gazed—and gazed—but little thought

    What wealth the show to me had brought:

    நான் அந்த டாபோடில் மலர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அது எனக்கு எத்தகைய செல்வம் தந்தது என்பதை அப்பொழுது உணரவில்லை.   பின்னர் வீட்டில் தனிமையில் நாற்காலியில் சாய்ந்து அமைதியான மன நிலையில் இருந்தபோது அது என் உள்ளத்தை ஆனந்தத்தால் நிறைத்து மலர்களுடன் நடனமாடச் செய்தது என்று கூறுகிறார்.

    நம்மைச் சுற்றிலும், இறைவனால் படைக்கப்பட்ட அழகான இயற்கைச் சூழல் அமைந்துள்ளது. இதைப் பார்த்து ஆனந்திக்கும் மனம் வேண்டும். ரசிக்கும் மனம் இல்லாவிட்டால் எந்தப் பொருளும் ஆனந்தம் தராது. அது மட்டும் இருந்துவிட்டால் எந்தப் பொருளிலும் அழகைப் பார்க்க முடியும். அத்தகைய மனம் தம்மிடம் என்றும் மாறுதலின்றி இருக்க வேண்டும் என்று ரிஷிகள் விரும்புகிறார்கள். அதைத்தான் அவர்கள் செல்வம் என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் என்றும் குறையாத இச்செல்வம் பிறரால் களவாடப்பட முடியாதது. இது ஒன்று இருந்து விட்டால் உலகத் தேவைகளில் ஒரு சில குறைந்திருந்தாலும் குறையாகத் தோன்றாது.

    இதோ இந்தக் கவிதையைப் பாருங்கள். மதுவாதா ருதாயதே என்று தொடங்கும் இது ரிக் முதல் மண்டலம்  90 வது சூக்தத்தில் உள்ளது.

    ருதத்தைப் பின்பற்றுபவனுக்குக் காற்று இனியது. நதிகள் இனிமையாக ஓடுகின்றன.

    செடிகொடிகள் எங்களுக்கு இனியவையாக இருக்கட்டும்.

    இரவும் பகலும் எங்களுக்கு இனியன. மண் இனியது. விண் இனியது.

    சூரியன் இனியவன், பசுக்கள் இனியன.

    இந்தக் கருத்தைத்தான் பாரதி தன் வசன கவிதையில் இப்படிப் பாடுகிறார்.

    இவ்வுலகம் இனியது, இதிலுள்ள வான் இனிமையுடைத்து.

    காற்றும் இனிது. தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது.

    ஞாயிறு நன்று, திங்களும் நன்று.

    வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.

    மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது.

    கடல் இனிது, மலை இனிது, காடு இனிது.

    ஆறுகள் இனியன.

    சூரியன் தன் தெய்வீக வசுக்களுடன் தோன்றுகிறான் என்னும் போது அது இயற்கை எழிலைத்தான் குறிக்கிறது என அறிகிறோம். வைகறைப் பொழுதை வியந்து போற்றும் ரிக் 1-113 இன் மொழிபெயர்ப்பை முன்பு பார்த்தோம். அதில் ஒரு பகுதியை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவோம்.

    உலகிற்கு ஒளிதரும் உஷையெனும் நங்கை

    இனிய சொற்களின் எழில்மிகு தலைவி

    பல நிறப் பாங்குடன் ஒளிர்வது கண்டோம்,

    கதவினைத் திறந்து, காட்டினள் செல்வம்.

    ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

    எனக்கு முன்னர் எத்தனையோ மாந்தர்

    எண்ணிலா விடியல் கண்டு களித்து

    எங்கோ போயினர், இன்று அவர் இல்லை.

    உஷையின் ஒளி கண்டு உள்ளம்    மகிழ்ந்திட

    இன்று கிடைத்தது எமக்கொரு வாய்ப்பு.

    புதிய மக்கள் நாளை வருவர்

    விடியலின் எழிலை வியந்து போற்றுவர்.

    பாரதியும் வேர்ட்ஸ்வொர்த்தும் மற்றும் உயர்ந்த கவிஞர்கள் பிறரும் எதைச் செல்வம் என்று கருதினரோ, அந்த இயற்கையின் எழில் வளத்தை ரசித்து, அதனால் அடையும் ஆனந்தத்தையே செல்வம் என்று ரிஷிகள் கருதினர் என்று அறிகிறோம். மழையைக் குறித்தும் புயற் காற்றைக் குறித்தும் பிற இயற்கைத் தோற்றங்களைக் குறித்தும் அவர்கள் பாடிய கணக்கற்ற பாடல்கள் இதை நமக்கு உணர்த்துகின்றன.

    இந்த ரயி (செல்வம்)ஒருவருக்குக் கிடைக்கப் பெற்றால் அவருக்கு வாழ்க்கையாகிய போர்க் களத்தில் தோல்வி என்பதே இல்லை. அவருக்குப் பகைவர்கள் இல்லை.

                ஜயத்திற்கு மூலமாயிருப்பதும், பகைவர்களைத் தாழ்த்துவதுமான ரயியை எங்களுக்கு அளிக்கவும். குதிரை மீது செய்யப்படும் போரிலோ அல்லது கைகலந்து செய்யும் போரிலோ அந்தச் செல்வத்தால் நாங்கள் பகைவர்களை வெல்வோமாக. 1.8.1,2

    இவ்வுலக வாழ்க்கை மட்டுமல்ல. வாழ்க்கையின் இறுதி லட்சியமாகிய ஒளியை அடையவும் இந்த  ரயி உதவும் என்பது இதை ஒளியை அறிய உதவும் செல்வம் (ஸ்வர்விதம் ரயிம்) 8.13.5 என்று குறிப்பிடுவதிலிருந்து தெரிகிறது.

    Picture Source: http://viralscape.com/city-nature-cinemagraphs/

    Share
  • முதிர் குமரன்!

    -றியாஸ் முஹமட், கத்தார்

    வயதுக்கு வந்து பல வருடமாச்சு
    மீசையோடு வெள்ளை முடியும்
    எட்டிப் பார்த்தாச்சு !

    வெட்கமாக இருக்கு வெளியுலகத்துக்கு
    தெரிந்து போச்சு நானும் ஒரு
    முதுமைக் குமரன்
    என்று…!

    கூடப் படித்தவர்கள்
    எல்லாம்
    குடித்தனம் போயாச்சு!

    குழந்தை, குட்டிகளோடு
    கூடி வருகையில்,
    மனசு துடிக்கிறது,
    எரி மலையாக வெடிக்கிறது…!

    என் பள்ளிப் பருவத்திலேயே
    தாய்க்கு வந்தது வாதம்,
    கை, கால்களை
    முடக்கி வாழ்க்கையைச்
    சிதைத்து விட்டது!

    மூத்த தங்கை வயதுக்கு வந்து,
    இருபது வருடங்களாச்சு !

    கல்யாணச் சந்தையில்
    காலூன்ற நிற்கும்,
    இளைய தங்கை வேறு…!

    தங்கைகளை நினைத்து,
    உறங்கும் அம்மாவின்
    அழுகையும் அதிகமாச்சு !

    அவளின் மூச்சும்
    வரவரக் குறைந்து போயாச்சு !

    எங்கள் ஏழ்மை வாழ்வு
    கண்டு குடும்பத்தாரும்,
    அயலவரும்
    எட்டிப் போயாச்சு !

    எங்க வீட்டு எச்சி தின்னு
    வளர்ந்த செல்லப்
    பூனையும் வீட்டுச்சுவர்
    ஏறிப் போயாச்சு !

    குடும்பச் சுமையைக் குறைக்க
    முதுகுச் சுமை ஏற்றியாச்சு !

    வாழ்ந்தும் வாழாமலேயே,
    உடம்பு தளர்ந்து,
    இளமையும் போயாச்சு !

    இனிமேல் என்ன இருக்கு சுமக்க…?

    என் தங்கைகளைக்
    கரை சேர்க்கும் வரை….
    கனவுகளைக் கண்களில்
    சுமந்து கொண்டு
    வாழும்
    நானும் ஒரு
    முதிர் குமரன்தான்!

     

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

    தஞ்சை வெ.கோபாலன்

    எம்.ஜி.ஆர் எனும் இந்த மூன்றெழுத்து மந்திரச்சொல் தமிழ்நாட்டு சினிமா ரசிகர்கள் மனதில் ஒரு எழுச்சியை உண்டாக்கியது. இதன் தாக்கம் பின்னாளில் இவர் அரசியலில் முக்கியத்துவம் பெற்றபோது அந்த எழுச்சி பல மடங்கு பெருகி இவரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. திரையுலக நாயகன் எனும் முறையிலாகட்டும், அரசியல் தலைவர் என்ற வகையிலாகட்டும் இவரது தோற்றத்தினாலும், பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சில் போல தன் இரு விரலை விரித்து வெற்றிக் குறி காட்டி, புன்னகை மன்னனாய் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். திரையில் கதாநாயகனாக வந்து தீனர்களைக் காக்கும் அனாதரட்சகனாக நடித்ததை உண்மை வாழ்க்கையிலும் மக்கள் அவரை அதுபோலவே உணரத் தலைப்பட்டுவிட்டார்கள். திரையில் நல்லவனாக, ஏழைகளுக்கு இரங்கி உதவி புரிபவனாக, பெண்களின் மானம் காக்கும் மாவீரனாக, சகோதர பாசம் நிறைந்தவராக, தந்தை தாய் நலன் பேணும் நல்ல மகனாக இவர் திரையில் தோன்றியவாறே நிஜ வாழ்விலும் இருப்பவர் எனும் எண்ணம் நிரந்தரமாக மக்கள் மனங்களில் தங்கிவிட்டது.

    mgrphotogallery81954 இவர் மலைக்கள்ளன் எனும் திரைப்படத்தில் நடிக்க கோவைக்குச் சென்று நடித்துவிட்டு ரயிலில் சென்னை திரும்புவதற்காக கொச்சின் விரைவு ரயிலில் கோவை ரயில் நிலையத்தில் முதல் வகுப்பில் ஏறி அமர்கிறார். அவருடன் ஸ்ரீராம் எனும் நடிகர், ஜி.வரலட்சுமி எனும் நடிகை ஆகியோரும் இருக்கின்றனர். இவருக்கு அடுத்த பெட்டியில் எர்ணாகுளத்திலிருந்து பயணம் செய்து வந்து கொண்டிருந்த பள்ளி மாணவனாக இருந்த நான் ஜன்னல் புறம் சென்று இவர் முதுகைத் தொட்டு அழைத்து ‘என்ன படத்தில் நடிக்கிறீர்கள்?” என்றேன். இன்றைய நிலைமையாக இருந்தால் என்னை அங்கேயே ஒருவழி செய்திருப்பார்கள். அவர் அமைதியாகத் திரும்பி “மலைக்கள்ளன்” என்றார். நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை எழுதிய அந்த நாவலை நான் படித்திருந்ததால் இன்ன வேஷமா என்று வினவ, அவர் ஆம் என்று தலையாட்டினார். அதற்குள் ஸ்ரீராம் கீழே இறங்கி ஏதோ வாங்க வெளியே வந்தார். அவருடன் ஜி.வரலட்சுமியும் இறங்கினார். ரசிகர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். நான் எம்.ஜி.ஆர். இருந்த ஜன்னல் அருகிலேயே நின்று பேச்சு கொடுத்தேன். திரும்பிப் பார்த்த அவர் புன்னகை செய்து, போதும் என்பதை அறிவுறுத்தினார். அவர் பார்வையில் கோபமோ, எரிச்சலோ இல்லை என்பது புரிந்தது. அவர் நடிப்பில் எனக்கு அத்தனை ஈடுபாடு இல்லையாயினும், அவருடைய இந்த அன்பான நடவடிக்கை என்னை அவர்பால் ஈர்த்தது. இதுவே முதன் முதல் அவரிடம் என் மரியாதை உருவானது.

    1956ஆம் ஆண்டு. திருச்சியில் தி.மு.க. இரண்டாவது மாநில மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில்தான் தி.மு.க. தேர்தலில் நிற்க வேண்டுமா வேண்டாமா என்று வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அந்த மாநாட்டில் மிகப் பெரிய அறிவுபூர்வமான கருத்தரங்கம்; அதில் தி.மு.க.வின் பெருந்தலைவர்கள் ஒவ்வொரு தலைப்பில் பேசினார்கள். ஈ.வி.கே.சம்பத் திராவிட நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்று பேசினார். அதைப்போல், திராவிட நாட்டின் பல்வேறு கொள்கைகள் குறித்துப் பலரும் பேசினார்கள். மாநாட்டுப் பந்தல் நிறைந்த கூட்டம். தலைவர்கள் பேச்சுக்கு ஒன்றும் பெருத்த ஆரவாரமோ, வரவேற்போ இருந்ததாக உணரவில்லை. ஒப்புக்கு திராவிடநாடு எனும் கற்பனை நாட்டின் நிறைவேற்ற முடியாத பல கொள்கை அறிவிப்புகள் வந்து கொண்டிருந்ததைத் தவிர அதில் குறிப்பிடும்படி எதுவும் இல்லை. அப்போது எம்.ஜி.ஆர். அந்த பந்தலுள் நுழைந்தார். கொட்டகை நிறைந்த மக்கட்கூட்டம் எழுந்து நின்று உற்சாக கைதட்டலுடனும், ‘விசில்’ ஒலியுடன் வரவேற்பு கொடுத்தது. காலம்சென்ற என்.ஜி.ஓ. சங்கத் தலைவர் சிவ.இளங்கோ மற்றும் அவர் நண்பர்களுடன் மாநாட்டில் உட்கார்ந்திருந்த எனக்கு இது ஒரு புதுமை. பிரபலமான தலைவர்களுக்கு இந்த அளவு வரவேற்பு இல்லாத நிலையில், போயும் போயும் திரைப்பட புகழ் மட்டுமா இவருக்கு இப்படிப்பட்ட வரவேற்பைக் கொடுத்திருக்க முடியும்? இல்லை இதன் பின்னால் ஏதோவொரு கவர்ச்சி, ஏதோவொரு நம்பிக்கை மக்களுக்கு இவர்மீது வந்திருக்க வேண்டும். அது என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் எனக்கு ஏற்பட்டது.

    சென்னையில் ஒரு குப்பத்துப் பகுதி. இவரது பட ஷூட்டிங் அந்த மீனவர் குப்பத்துக்கு அருகில் நடந்தது. அங்கிருந்த ஏழை எளிய குடிசை வாசிகள் இவர் ஓய்வில் இருக்கும் சமயம் அருகில் சென்று ஏதோ பேச்சுக் கொடுக்க, அவரும் அன்போடு அவர்களுடன் கலந்துரையாடிய காட்சி, இது என்ன இவர் ஒரு வித்தியாசமான மனிதராகத் தென்படுகிறாரே என்று எண்ணத் தோன்றியது.

    ஒரு சமயம் பத்திரிகையொன்றில் இவரது புகைப்படம் வெளியானது. வயது முதிர்ந்த கிழவி, மகா ஏழையாக இருக்க வேண்டும், பொக்கை வாய், இவர் அருகில் சென்று இவர் முகத்தருகே திருஷ்டி கழித்து கைகளைத் தன் முந்தலையில் வைத்து சொடுக்கி திருஷ்டி கழித்தாள். அடுத்த கணம் இவர் தன் ஜிப்பா பைக்குள் கைவிட்டு கையில் வந்த கரன்சி தாள்களை இந்த அம்மையின் கையில் கொடுத்து அவரைத் தழுவிக் கொண்டார். இது நடிப்பா, இந்த மனிதரின் உள்ளார்ந்த அன்பா? பத்திரிகைகளும், இவரைப் பிடிக்காதவர்களும் இதை நடிப்பு என்றனர். பெரும்பாலோர், இதுதான் இந்த மனிதரின் உண்மையான முகம் என்றனர். நான் பின்னதை ஏற்றுக் கொண்டேன்.

    முதலமைச்சராக இருந்த அண்ணாதுரை அவர்கள் அகாலமாக மரணமடைந்துவிட்டார். அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தது. அண்ணா இருக்கும்போதே நாவலர் நெடுஞ்செழியனை அழைத்து, மாநாட்டுக்கு “தம்பீ வா! தலைமையேற்க வா!” என்று அழைத்த வாசகம் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. ஆகையால் அவர்தான் அடுத்த தலைவர் என்று நாடே எதிர்பார்த்திருந்த நிலையில், தலைமைக்குப் போட்டி எழுந்தது. அப்போது எம்.ஜி.ஆர். விரும்பியவரே தலைவராக முடிந்தது என்றால், இந்த தனி மனிதனுக்கு அந்தக் கட்சியிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி ஊடுறுவியிருந்த செல்வாக்கு நாட்டுக்கு நன்கு புரிந்தது.

    ஏதோவொரு சினிமா படப்பிடிப்புக்காக இவர் கோவா கடற்கரையில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் சார்ந்திருந்த கட்சியின் போராட்டமொன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது மக்கள் மனங்களில் எழுந்த சந்தேகம், இவர், தான் சார்ந்த நடிப்புத் தொழிலுக்கு முதலுரிமை தருவாரா, அரசியலுக்கா என்று பார்த்துக் கொண்டிருந்தனர். கட்சிக்காரர்கள் கட்சிப்பணிதான் என்பர்; கலா ரசிகர்களோ அவர் சார்ந்த நடிப்புத் தொழில்தான் என்பர். இவர் இரண்டாவது நிலைப்பாட்டை எடுத்தார், அதனால் வீண் கசப்புக்களை எதிர்கொண்டார். ஆனாலும் அவர் தொழில் மீது வைத்திருந்த பற்று கட்சிப் பற்றைக் காட்டிலும் அதிகம் என்பதை வெளிப்படுத்தினார். அந்த வகையில் தன்னுடைய நம்பகத் தன்மையை இவர் மக்களுக்குச் சொல்லாமல் புரியவைத்தார் என்பதே என் எண்ணம்.

    ஆதியில் இவர் ஒரு காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜ் மீது மாறாத மரியாதை வைத்திருந்தார். அந்த வகையில் இவர் கதரே அணியவும் தொடங்கினார். 1953இல் இவரது அரசியல் நிலைப்பாட்டில் ஒரு மாற்றம் வந்தது. காங்கிரசில் ஆர்வம் கொண்டிருந்த இவர் தி.மு.க.வை நாடி வந்தார். அதற்குக் காரணம் சி.என்.அண்ணாதுரை எனும் மாமனிதர்தான். அவரே சொன்னார் எம்.ஜி.ஆரிடம். இவர் முகத்தைக் காட்டினால் போதும் லட்சக் கணக்கில் கட்சிக்கு வாக்குகள் வந்து குவியும் என்று. ஆம்! அதுதான் சரியான கணிப்பு, அதை சிலர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதால் வந்தது கட்சியில் பிணக்கு.

    1967இல் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். கட்சியின் பொருளாளர் ஆனார். 1967இல் சொந்த முறை விரோதம் காரணமாக இவர் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி உயிர் பிழைத்தார். இவர் கழுத்தில் கட்டோடு படுத்திருக்கும் படம் சுவரொட்டிகளில் கண்டதுமே அவர் சாந்திருந்த கட்சிக்கு வாக்குகள் பேய்மழைபோல கொட்டித் தீர்த்து, அவர்கள் மாபெரும் வெற்றியை ஈட்டினார்கள் என்பது நாடு கண்ட வரலாற்று உண்மை. இப்படித் தனிமனிதனின் துன்பம் ஒரு கட்சியின் ஏற்றத்துக்கு வழிவகுத்தது என்றால் அவர் மக்கள் மனங்களில் எத்தனை ஆழமாகப் பதிந்திருக்கிறார் என்பதுதானே?

    ஒரு முறை தஞ்சையில் காவல்துறையில் விருது பெற்ற அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கும் அணிவகுப்பு மாலை 4 மணிக்கென்று ஏற்பாடாகியிருந்தது. நான் 3 மணி சுமாருக்கு அந்த போலீஸ் திடல் இருக்கும் கலெக்டர் அலுவலக சாலை வழியாக என்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு வேறோரு சுற்றுப் பாதை வழியாகச் செல்லப் பணிக்கப்பட்டேன். சாலை வெறிச்சோடிக் கிடந்தும் அந்த திசையில் இருந்த என் அலுவலகம் செல்ல முடியாமல் சுற்றி வரும்படி நேர்ந்தது வருத்தமளித்தது. ஆனால் எம்.ஜி.ஆர். ஒரு முறை தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் திறந்த ஜீப்பில் வந்து கொண்டிருந்தார். எங்கள் குடியிருப்புப் பகுதி பாலத்தடியில் நாங்கள் பலர் பேசிக்கொண்டு நின்றிருந்ததைப் பார்த்து, அவர் ஜீப் நின்றது. புன்னகையோடு எங்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு வணங்கியதைக் கண்டு எங்களுக்கு திகைப்பு. நட்புரிமையோடு அவர் நடந்து கொண்டது ஒரு அரசியல் வாதிக்கே உரிய சாமர்த்தியமாகக் கூட இருக்கலாம். அதை உண்மை நட்புபோல நடந்துகொண்ட அந்த அருமையான காட்சி எங்கள் மனங்களில் அவர் நீங்கா இடம் பெற்றுவிட்டார்.

    அவர் காலமானார் எனும் செய்தி கேட்டு எங்களுக்கே ஏற்பட்ட சொந்த இழப்பைப் போல உணர்ந்தோம். இதற்கு முன்பு மகாத்மா காந்தி சுடப்பட்ட போதும், ஜவஹர்லால் நேரு காலமானபோதும், பெருந்தலைவர் இறந்து போனார் எனும் செய்தியைக் கேட்டபோதும் ஏற்பட்ட அதே உணர்வு எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து மனிதர் மாண்டார் எனும்போதும் உள்ளத்தை வருத்தியது, துக்கத்தை ஏற்படுத்தியது; அப்போதுதான் தெரிந்தது அவர் எங்கள் மனங்களில் எத்தனை உறுதியாக அமர்ந்திருக்கிறார் என்று. காலங்கள் மாறலாம்; கோலங்கள் மாறலாம், ஆனால் மனங்களில் படிந்த இதுபோன்ற உணர்வுகள் மட்டும் என்றென்றும் மாறாதிருக்கும்.

    முந்தைய காலங்களில் ஒரு தனி மனிதரின் புகழையும், பெருமைகளையும் உலகுக்கு அறிவிக்க அவரது மெய்க்கீர்த்தியை எழுதி கருங்கல்லில் வடித்து வைப்பார்கள். அப்படிப்பட்ட மெய்க்கீர்த்தியாக எம்.ஜி.ஆர். என்ற‌ இந்த தனிமனிதரின் புகழ், பெருமை அனைத்தையும் தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோர், குறிப்பாக ஏழை, எளியவர்கள், பெண்மணிகள், இளைஞர்கள், குழந்தைகள் ஆகியோர் தத்தமது நெஞ்சங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள். அது சென்ற தலைமுறையோடு முடிந்துபோன செய்தியல்ல, இந்த தலைமுறைக்கும் தொடர்ந்து அதே உணர்வை தந்து கொண்டிருக்கிறது என்பதை அவரது பழைய படங்கள் இப்போதும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோத பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து தெரியவருகிறது. இது ஏதோ மார்லன் பிராண்டோவையோ, கிளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த படங்களையோ பார்க்கும் உணர்வில் அல்ல, எம்.ஜி.ஆர். எனும் நம் காலத்தில் வாழ்ந்த ஒரு மாமனிதனின் புகழுக்கு மரியாதை செய்கிறோம் எனும் உணர்வில்தான் பார்க்கிறார்கள். காலத்தால் அழிக்கமுடியாத இடத்தை அந்த மனிதர் பெற்றிருந்தார் என்பதுதான் முக்காலும் உண்மை.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(139)

    —சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    xx20150120_135655அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களுடன் இணைவதில் பெருமகிழ்வடைகிறேன்.

    ஒரு மாத கால இடைவெளியின் பின்னால் இம்மடலை வரைந்து கொண்டிருக்கிறேன். இந்த ஒரு மாத காலமும் என்ன செய்து கொண்டிருந்தேன் ?

    ஓடி ஓடி இயந்திரம் போல் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தப் புலம்பெயர் வாழ்வில் சில நேரங்களில் காட்சி மாற்றம் தேவைப்படுகிறது.

    தேவைப்படும் அனைத்தையும் இலகுவாக அதிக சிரமமின்றி (பெரும்பான்மையாக) பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிலையிலிருந்து சற்றே மாறுபட்டு நம்பிக்கையை மூலாதாரமாக வைத்து அன்றைய வாழ்விற்கான தேவைகளின் தேடலில் ஈடுபடுவோரின் மத்தியில் இருக்கும் போதுதான் வாழ்வின் யதார்த்தம் புரிகிறது.

    ஏறத்தாழ நான்குவார விடுமுறையில் தமிழின் பிறப்பிடமான தமிழகத்திற்கு எனது வருடாந்தர விஜயத்தை மேற்கொண்டிருந்தேன்.

    சென்னைப் புத்தகத் திருவிழா ! அப்பப்பா… இத்தனை பெரிய அலைமோதும் வாசகர் கூட்டத்தைக் கண்டதும்தான் என்னதான் இணையத்தின் தாக்கம் இருந்தாலும் நூல்களை கையில் வைத்துப் படிக்கும் எமது வாசகர்களின் ரசனை குறையவில்லை என்பது புரிந்தது.

    தமிழின் தலைநகரமல்லவா ? அங்கே தமிழை ரசித்துப் படிக்கும் உள்ளங்களுக்கு பஞ்சம் இருக்குமா, என்ன ?

    x20150120_144342ஜனவரி 18ம் நாள் சென்னைப்புத்தக விழா வெளியீட்டரங்கிலே எனது நூல்களின் பதிப்பு நிறுவனமும் எனது நண்பர்களான ரவி, லேனா தமிழ்வாணன் அவர்களின் நிறுவனமுமான மணிமேகலைப் பிரசுரத்தாரின் வெளியீட்டு விழா.

    வழமையாக வருடம் ஒரு நூல் வெளியிடும் எனக்கு இவ்வருடம் சிறிது ஓய்வு. கடந்த ஜூலை மாதம் நடந்தேறிய எனது மகனின் திருமண வைபவத்தின் ஏற்பாடுகளில் மூழ்க வேண்டி இருந்ததால் இவ்வருடம் எனது நூல் தயாராகவில்லை.

    இருப்பினும் எனது நண்பர்களின் அன்பு அழைப்பின் பெயரால் நானும் எனது மனைவியும் சிறப்பு விருந்தினராக அவ்விழாவில் கலந்து கொண்டோம்.

    பெருந்திரளான வாசகர்கள். அரங்கத்தில் அமர்ந்திருந்த அறிஞர்கள், அவர்களோடு அரங்கத்தில் பெருமையுடன் வீற்றிருந்த 38 நூல்களின் 38 நூலாசிரியர்கள்.

    ஆமாம் 38வது புத்தக விழாவில் மணிமேகலைப்பிரசுரம் 38 நூல்களை வெளியிட்டிருந்தது.

    விழாத்தலைவராக பிரதம நீதியரசர் திரு. தமிழ்வாணன்; சிறப்பு விருந்தினர்களாக வேலூர் VIT நிறுவனத்தின் அதிபர் ஆ.ப.விஸ்வநாதன், முன்னனி திரை நட்சத்திரம் திருமதி. வடிவுக்கரசி எனப் பலர் மேடையிலே வீற்றிருந்தார்கள்.

    நண்பர் திரு ரவி தமிழ்வாணன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நண்பர் திரு லேனா தமிழ்வாணன் அவர்களின் வரவேற்புரையோடு சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துரைகளோடு நூலாசிரியர்கள் அனைவரும் கெளரவிக்கப்பட்டார்கள்.

    அருமையானதொரு நிகழ்வில் பங்கு பற்றிய அற்புத உணர்வோடு நானும் மனைவியும் வீடு திரும்பினோம்.

    அது மட்டுமா ?

    xxx20150120_135603நண்பர்கள் காந்தி கண்ணதாசன், எஸ்.வி சேகர், பாண்டியராஜன், ஆன்மீக உணர்வாளர் பி.என்.பரசுராமன் எனப் பலரோடும் அன்பான சம்பாஷணைகள். அவ்வாற்றல் மிகுந்தவர்களின் அனுபவ ஆற்றில் ஒரு சிறிய நீச்சல்.

    செட்டிநாடு தந்த இளவல் அருமைக்குமரன், காமெடி கிங், அசத்தல் மன்னன் ஆன்மீகப் பேச்சாளர், நகைச்சுவைப்புயல் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் என்னினிய தம்பி தேவகோட்டை இராமநாதனின் இனிய சந்திப்பு.

    அப்பப்பா ! தம்பியின் அன்பை என்ன கூறுவேன் ? காலை 4 மணிக்கு செட்டிநாட்டிலிருந்து புறப்பட்டு மதியம் மூன்று மணிக்கு என்னை அண்ணாநகரில் சந்தித்து விட்டு மீண்டும் மாலை இரயிலில் செட்டிநாட்டுக்குப் புறப்பட்ட என் தம்பியின் அன்பிற்கு ஈடாக எதைக் கொடுத்துவிட முடியும் ?

    இத்தகைய அன்பானவர்களின் உறவைக் கொடுத்து எனது உள்ளத்தைச் செழிப்பாக வைத்திருக்கும் அந்த அண்ணாமலையானின் பாதங்களை வணங்குவதே நான் செய்யக்கூடியது.

    தமிழகத்தில் நான் காணும் அன்றாட ஆட்டோ சாரதிகள், கார்ச் சாரதிகள் என்பவர்கள் அனைவரிடமிருந்தும் நான் கற்றுக்கொள்பவை ஏராளம்.

    நம்பிக்கையின் ஆதாரத்தில் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஆரம்பம் அலாதியானது. வாழ்க்கையின் மூலத்தின் யதார்த்தம் எமக்குப் புரியும் வகையில் பல நிகழ்வுகளின் பின்னனி எமக்குப் பாடமாக அமைகிறது.

    மாடமாளிகைகள் ஒருபுறம், மண்குடிசைகள் மறுபுறம். விலையுயர்ந்த வெளிநாட்டுக் கார்கள் ஒருபுறம், செருப்பு அணிய வழியில்லாத ஏழை மக்கள் மறுபுறம் என சென்னையின் வாழ்க்கை போதிக்கும் பாடங்கள் ஆயிரமாயிரம்.

    இந்த அரிய அனுபவச் செழிப்புகள் என் இதயத்தின் அனுபவப் புத்தகத்தில் ஆழமாய்ப் பதிந்திருக்கும்.

    என் மனதின் இனிய உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பத்திற்காக என் அன்பான நன்றிகள்.

    மீன்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • சொக்குதே மனம்… சுத்துதே ஜெகம்!

    — கவிஞர் காவிரிமைந்தன். 

     

    Baghdad Thirudan

     

    எம்.ஜி.ஆர். வைஜயந்திமாலா இணைந்து நடித்த பாக்தாத் திருடன் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடலின் பல்லவியில் நிச்சயம் ஒரு மயக்கம் உண்டு!

    ஜி.கோவிந்தராஜுலு நாயுடு இசையில் கட்டுண்ட நாகம்போல் நாமும் மாறலாம்! இனிமை அதிலுண்டு! இயற்றியவர் மருதகாசி பி.சுசீலாவின் குரலில் …சொக்குதே மனம்!!

    அந்தப்புர சங்கதிகளின் அடிநாதமாய் விளங்கும் பெண்மையை வைத்தே காய்கள் நகர்த்துவதும் ஒருவித ராஜதந்திரம் என்றது அந்தக்காலம்!

    எந்த காலத்திலும் ஆட்சியிலிருப்பவர்களும் அதிகாரத்திலுப்பவர்களும் எளிதில் அகப்பட்டுக்கொள்வது இந்த போதையில்தானே!

    திரைப்படங்களில் இந்தக் காட்சியில் பாடல் இடம்பெறுவது எழுதப்படாத விதியாகவே அன்றுமுதல் இன்றும் தொடர்கிறது!

    ஆட்டம் பாட்டம் … அதற்கிடையில் கதையின் நகர்வு… இசையின் துள்ளல் நம்மைக் கிறங்க வைக்க… எழுத்தில் வடித்துவிடும் கவிஞர்களின் கற்பனா சக்தியில்… திரைக்கதை… மூலக்கதை எல்லாம் முன்மொழியப்படும்…

    சொல்லப்போனால் திரைப்படத்தின் முடிவு வருவதற்கு முன் வருகின்ற பாடலாகவே இதுபோன்ற பாடல்கள் இடம்பெறும்!

    திருமதி.பி.சுசீலா அவர்களின் குரலில் இந்தப் பாடல் எனக்கென்னவோ… சொல்லத் தெரியாத இன்பத்தை தந்துவிடுகிற பாடல் என்றே சொல்லத் தோன்றுகிறது!

    அமர்க்களம்… அட்டகாசம்… என்பதெல்லாம் நிறைவுபெறாத வார்த்தைகள் என்றே நினைக்கிறேன்!

    பூத்து குலுங்குதே புது உணர்வு காணுதே… ஏ…
    காத்திருந்த என் பருவ காலமிதே… ஆ…
    எதிர் பார்த்திருந்த
    இன்ப நாள் வந்ததே தன்னாலே
    பார்வையிலே காதல் அலை
    பொங்குதே உன்னாலே…

    சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
    தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
    தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
    சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
    தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
    தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்

    கொலைகார வேடன் வலை கண்டதாலே
    நிலை மாறி வந்த இள மானும் நானே
    என்னாசைத் தங்கமே அஞ்சாத சிங்கமே
    நீ தஞ்சமே
    சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
    தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
    தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்

    கருவண்டின் முன்னே களிப்போடு ரோஜா
    கண்ணாலே பேசி செய்யுதே தமாஷா
    எண்ணாதே லேசா என் காதல் பாதுஷா
    ஏன் தாமதம்
    சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
    தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
    தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்

    அழகின் கஜானா உந்தன் ஜனானா
    அதற்கேற்ற மைனா வந்ததே தானா
    மௌனம் ஏன் வீணா திரும்பாதே போனா
    ஆலம்பனா
    சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
    தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
    தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்

    படம்: பாக்தாத் திருடன்
    பாடல்: மருதகாசி
    இசை: ஜி.கோவிந்தராஜுலு நாயுடு
    குரல்: பி.சுசீலா

             MarudhakasiG. Govindarajulu Naidususheela

    எம்.ஜி.ஆருடன் டி.ஆர்.ராமச்சந்திரன் இசைகோஷ்டியாக வேடமிட…நம்பியாரை நோக்கி நாட்டியமாடுகிற நங்கையாக திருமதி. வைஜயந்திமாலா வேகம்காட்டி ஆடும் ஆட்டம் சிறப்பானது!

    பலமுறை கேட்டிருந்தாலும் பாக்தாத் திருடன் பாடல்.. மறுமுறை கேட்கத்தூண்டும் அதிசயம் என்ன?

    காணொளி: https://www.youtube.com/watch?v=ud8-90yS0Ks

    ஜெயா தொலைக்காட்சியில் இப்பாடலின் பல்லவியை நினைவூட்டி அமைக்கப்பட்டிருக்கும் இசைநிகழ்ச்சியும் அதனை வழங்கிவரும் திருமதி.பிரியாசுப்பிரமணியன் அவர்களது குரலிலும் இந்த மையல் தொடர்வது குறிப்பிடத்தக்கது!

     

     

    Share
  • ராம்லீலா மைதானத்தில் ஒரு வெற்றி விழா!

    பவள சங்கரி

    தலையங்கம்

    images (1)சிறுபான்மை அரசின் முதல்வராகப் பதவி வகித்த, அரவிந்த் கேஜரிவால் அவர்கள் 6-ஆவது தில்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, நம் இந்தியச் சரித்திரத்தில் நிலையான ஓரிடத்தைப் பெற்றுள்ளார். ‘ஆம் ஆத்மி’ என்றால் மக்களுக்கான கட்சி என்ற பொருளுக்கேற்ப மக்களால் பெருவாரியாக வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி கட்சியில் உள்ள 67 சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி வயது 43 என்ற வகையில் எப்போதும் வயதானவர்களே அரசியலில் இருக்கிறார்கள் என்ற நிலையில் மாற்றம். அடுத்ததாக 67 சட்ட மன்ற உறுப்பினர்களில் 43 பேர் பட்டதாரியாகவும், அதற்கு மேலும் படித்தவர்கள். 24 பேர் மட்டும் 12ம் வகுப்பு வரை படித்தவர்களாக உள்ளார்கள். 67 சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதும் மிகப்பெரிய குற்றப்பின்புலம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம். கேஜரிவால் உள்பட பலர் மீது கிரிமினல் குற்றங்கள் சுமத்தப்பட்ட போதும் அந்தக் குற்றங்கள் மக்களுக்காகப் போராடியதற்காகச் சுமத்தப்பட்டவையே. மேலும் ரூ18,000 மட்டுமே சொத்து உள்ளவரும் இன்று சட்ட மன்ற உறுப்பினராக ஆக்கப்பட்டுள்ளார். பலருடைய சொத்து மதிப்பு 2 கோடி ரூபாயும், அதற்கு சற்று அதிகமாகவும் உள்ளது. ஒரே ஒருவரின் சொத்து மதிப்பு மட்டும் 80 கோடியாக உள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய கருத்து என்னவென்றால், 2013 -2015,இல் இவர்களுடைய சொத்து மதிப்பும், வருமானமும் 4 சதவிகித வளர்ச்சியே கண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் அறிக்கை – 2013இல் குறிப்பிட்டதை தங்களுடைய 49 நாட்கள் ஆட்சியிலேயே நிறைவேற்ற முயன்றார்கள். பொது விநியோகத்தில் மேம்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் விநியோகம், உணவு எண்ணை மற்றும் பருப்பு இணைக்கப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன, தினசரி ஒவ்வொரு இணைப்பிற்கும் 700 லிட்டர் இலவச குடிநீர் வழங்குதலும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம். குறைக்கப்பட்ட அல்லது மானிய விலையில் தட்டுப்பாடற்ற யூரியா மற்றும் உரங்களும், விவசாயப் பெருமக்களுக்குக் கிடைக்க வழி செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். பேருந்துகளுக்கு, இயற்கை எரிவாயுவை உபயோகப்படுத்துவதை நடைமுறைப்படுத்துவது, அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளை ஒழுங்குபடுத்துவது என்று அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டால், தில்லி மட்டுமன்றி நாடே வளமான ஆட்சியை மகிழ்ந்து கொண்டாடலாம். இதேநேரத்தில் மாநில உரிமை பெறாத சமயத்தில் இந்திய அரசின் ஒன்றியமாக இருக்கும்பொழுது ஆட்சியில் அமர இருக்கும் இக் கட்சி எதிர்கொள்ள இருக்கும் சவால்களை சந்தித்து களைந்து வெற்றி பெறும் என்று நம்புவோம். வெல்க பாரதம்!

    Share
  • வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 28-ஆம் ஆண்டு விழா – அழைப்பிதழ்

     வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும்
    வளைகுடாப் பகுதி தமிழ் மன்றமும்
    இணைந்து வழங்கும் 

    பேரவையின் தமிழ் விழா 

    FeTNA 2015
    City National Civic Auditorium,
    San Jose, California

    July 2 – 5, 2015

    வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை

     

     

    www.fetna2015.org / www.fetna.org

     

    காணொளி: தமிழ் மன்றம் வரவேற்பு

    Share
  • சுட்டும் விழிச்சுடர்!

    பவள சங்கரி

    சுட்டும் விழி
    தாய்மையைக் கொண்டாடுவோம்!

    தாய்மை என்பது ஒரு பெண்ணிற்கு வரம். ஒரு பெண்ணின் வாழ்க்கை பூரணத்துவம் பெறுவதே அவளுடைய தாய்மைக்குப் பிறகுதான். இன்றைய சூழலில் பெண்களுக்கு தாய்மைப் பேறு கிடைப்பதில் பல இடர்பாடுகள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்களும் இருக்கின்றன. குழந்தை உருவானவுடன் அது நல்லபடியாகப் பிறக்க வேண்டுமே என்ற கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. முதல் மூன்று மாதக் காலங்களிலிருந்தே தாயின் எண்ணங்கள் குழந்தைக்கும் செல்கிறது. தாய்மைக் காலத்தில் தாய் மன அழுத்தத்தில் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் அதன் பாதிப்பு இருக்கலாம் என்கிறது ஆய்வுகள். குழந்தை உருவானவுடன் தாய், தந்தை, குழந்தை என அம்மூவருக்குமான தொடர்பு ஏற்படுவதை நம்மால் மனப்பூர்வமாக உணர முடியும்.

    சமீபத்திய ஆய்வுகள், மகப்பேறு காலங்களில் பெண்களுக்கு மன அழுத்தம் காரணமாக பாதிப்புகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றன. ஏழு நாடுகளில், பத்தொன்பது மையங்களில், ஆய்வு செய்ததில் 8,200 க்கும் அதிகமான பெண்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர். மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பிரசவ நேரத்தில், முன்சூல் வலிப்பு, கர்ப்பகால நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரலாம் என்கின்றனர். 10 முதல் 20 சதவிகித தாய்மார்கள், மன அழுத்தம், பதட்டம், இறுமுனை கோளாறு ஆகியவைகள் பிரசவ காலத்திலும்,அதன் பிறகு ஓராண்டிற்கும், பலவிதமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள். ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் சரிவும் இதற்குக் காரணமாகலாம் என்கின்றனர் வல்லுநர்கள். பிறக்கப்போகும் குழந்தையையும் பாதிக்கும் இந்த நோய்க்கான காரணமும் அதன் தீர்வும் குறித்து சிந்திக்க வேண்டிய காலகட்டம் இது.

    அபிமன்யு, பிரகலாதன் கதைகள் நாம் அறிந்ததே.

    கண்ண பரமாத்மாவின் சகோதரி சுபத்திரையின் கர்பத்தில் உருவான குழந்தை அபிமன்யு. இத்தருணத்தில் தம் சகோதரனிடம், யுத்த தர்மங்கள் குறித்து அறிய விரும்பினாள் சுபத்திரை. அப்போது கண்ணன், போர்க்களத்தில், வீரர்களின் அணிவகுப்பை வகைப்படுத்தி வியூகமாக அமைத்து, எதிரியை வெல்லும் முறைகளைத் தெளிவாக விளக்குகிறார். குறிப்பாக, பத்ம வியூகத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தவர், அதனை உடைத்து உள்ளே நுழையும் முறையையும் விவரித்துக் கொண்டிருந்தபோது, இடையில் சிறிது நிறுத்துகிறார். அப்போது, ‘உம்… அப்புறம்?’ என்ற குரல் எங்கிருந்தோ கேட்டது. அது சுபத்திரையின் கர்ப்ப வாசத்திலிருந்த அபிமன்யுவின் ஆர்வக் குரல் என்பது கண்ணனுக்குத் தெரியும். ஆனால் அதற்கு மேல் அவன் கதையைத் தொடரவில்லை. அதற்கான காரணமும் இருந்தது. தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே புகும் வழிமுறையைப் புரிந்துகொண்டதால், பிற்காலத்தில் தைரியமாகப் போர்க்களம் வந்துவிட்டான் அபிமன்யு. பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே நுழையும் ரகசியம் மட்டும்தான் அபிமன்யுவுக்குத் தெரியும். அதிலிருந்து வெளியே வரும் உத்தி தெரியாது என்பதால், அவனைப் பாதுகாப்பாக வெளியே மீட்டுக் கொண்டுவருவதற்கு உதவியாக வந்திருந்தான் பீமன். ஆனால், போர்க்களத்தில் சயத்ரதன் செய்த மாய வேலைகளால், உள்ளே நுழைந்துவிட்ட அபிமன்யு, அங்கேயே சிக்கிக்கொண்டான். பீமனின் பக்கபலமும் அவனுக்குக் கிடைக்கவில்லை. இப்படிப் போகிறது பாரதப் போரின் 13 ஆம் நாளில், கௌரவர்களின் சேனாதிபதி துரோணர் அமைத்த பத்ம வியூகத்தை உடைத்தெறியும் நோக்கில் வீரதீரப் போர் புரிந்துகொண்டிருந்த அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவின் கதை….

    அதே போன்று இரணியன் என்னும் அசுரனின் மனைவி கருவுற்றிருந்த காலத்தில், முனிவரின் போதனைகளை, பக்திக் கதைகளைக் கேட்டுக் கேட்டு, கருக்குழந்தையான பிரகலாதன், பக்தப் பிரகலாதனாக, திருமாலடியானாக மாறிய கதையும் நாமறிவோம்.

    இவற்றையெல்லாம், பகுத்தறிவாளர்கள் பலவாறாக எள்ளி நகையாடினாலும், கர்ப்ப காலத்தில் தாயின் மன நிலையின் தொடர்பாகத்தான் பிறக்கும் குழந்தையின் குணநலன்கள் அமைகிறது என்பது நாம் யதார்த்த வாழ்வில் காணும் நிலை. இன்று குழந்தைகளை அதிகமாக ஆட்டிப்படைக்கும், ஆட்டிசம் போன்ற கொடிய பிரச்சனைகளுக்கான காரணமாக தாயின் மன அழுத்தமாகவும் இருக்கலாம் என்பதைச் சில ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் கருவுற்றிருக்கும் ஒரு பெண் நல்ல அமைதியான சூழலில், நிம்மதியான மன நிலையில் இருக்கும்போது குழந்தை அதேபோன்று எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் பிறப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். ஆனால் கூட்டுக் குடும்பப் பாரம்பரியம் சிதைந்துவிட்ட இன்றைய சூழலில், பணிக்குச் செல்லும் பெண்களுக்கு குழந்தைப் பேறு ஒரு சவாலாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே பலர் குழந்தை பெற்றுக்கொள்வதை முடிந்த வரை தள்ளிப் போட்டுவிடுகின்றனர். இதனாலேயே பலருக்கு கரு உருவாகுவதில் பல பிரச்சனைகள் வந்துவிடுகிறது. கர்ப்ப காலத்தில் உடல் நலம் பேணுவதில் பெரும் சிரமமும் ஏற்படுகிறது.

    imagesமுதல் மூன்று மாதங்களில் இருக்கும் தாயின் சிந்தனை குழந்தைக்கும்செல்கிறது. இதனால் ஆரம்பத்தில் இருந்தே அந்தக் குழந்தையின் மீதான அன்பை சிந்தனையில் வெளிப்படுத்துதல் நலம் என்கின்றனர். முதல் மூன்று மாதத்தில் மசக்கையால், வாந்தி, மயக்கம், உணவு ஏற்றுக்கொள்ளாமை போன்றவைகள் பாடாய்ப்படுத்தும்போது, வீட்டில் பெரியவர்கள் உடனிருந்தால், வாய்க்குப் பிடித்த சத்தான உணவை சமைத்துக்கொடுப்பதோடு, ஓய்வெடுக்கவும் வழியமைத்துக்கொடுப்பார்கள். ஆனால் பணிக்குச் செல்லும் பெண்களோ, ஓய்வெடுக்கவும் வழியில்லாமல், சரியான உணவும் உட்கொள்ள இயலாமல் உடலளவிலும், மனதளவிலும் சோர்ந்துவிடுகிறார்கள். இது கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கிறது. மென்மையான இசையையும், நல்ல சொற்பொழிவுகள் அல்லது கதைகள் போன்றவற்றைக் கேட்பதால் குழந்தைக்கும் அமைதியான மனோநிலை இயல்பாகிவிடுவதோடு, தீய பழக்கங்களுக்கும் அக்குழந்தை ஆட்படுவதில்லை. ஆனால் சதாசர்வமும் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டு, மன அழுத்தத்திற்கும் ஆளாகும் பெண்களால் கருவில் இருக்கும் குழந்தைக்கும் சிரமங்கள் ஏற்படுகின்றன. கர்ப்ப காலத்தில் தான் விரும்பும் சூழலில் இருப்பதோடு, பிடித்த உணவு வகைகளை உண்பது என அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதும் அவசியம். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் படபடப்பை இது போன்ற இதமான சூழல்களால் மட்டுமே சரிசெய்ய முடியும். ஏனைய புற விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து, குழந்தையைப் பற்றிய ஆக்கப்பூர்வமான சிந்தைகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டியது அவசியம். ஆனால் சதாசர்வ காலமும் பணியைப் பற்றிய சிந்தையிலேயே ஊறிக்கிடக்க வேண்டிய சூழலில் இருக்கும் பெண்களுக்கு வெகு எளிதாகவே சலிப்பு தட்டி விடுகிறது.

    கருவில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று அறியும் ஆவல் தவிர்க்கபட முடியாதது என்றாலும், அதுவே ஒரு மனப்பாரமாகிவிடாமல் பார்த்துக்கொள்வது நலம். பெற்றோர் பிரசவ நேரத்தில் வந்தால் போதும். குழந்தை பிறந்தவுடன், குழந்தையைப் பராமரிக்கத் தேவையாக இருக்கும் என்று எண்ணுபவர்கள் கர்ப்ப காலத்தில் உதவியின்றி சிரமம் மேற்கொள்கின்றனர். கர்ப்பிணிப் பெண்கள் காலையில் சீக்கிரம் உணவு உண்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமல் இருப்பதால் அடிக்கடி மயக்கம் வருவதும் கட்டுப்படும். அத்தோடு வீட்டில் தயாரிக்கப்படும் பழச்சாறு, முளை கட்டிய பயறுகள் போன்றவற்றை அன்றாடம் எடுத்துக்கொள்வதும் அவசியம். ஆனால் வீட்டில் தயாரிக்க நேரமின்மையால் பலர் இன்று கடையில் தயாரித்த, கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் பொருட்கள் கலந்த பழச்சாறுகள் மற்றும் துரித உணவு வகைகளை உண்ணும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால் ஆரோக்கியம் கெட்டுவிடுவதால், மன ரீதியான பிரச்சனைகளுக்கும் வழிவகுத்துவிடுவதோடு மன அழுத்தம் ஏற்படவும் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.

    நம் இந்தியாவில் கர்ப்பிணிப் பெண்களில் 15 விழுக்காட்டினர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பக்காலத்தில் இரத்தச் சோகை ஏற்பட்டால் குறைப்பிரசவம் நிகழவோ, குழந்தை நோய்வாய்ப்படவோ வாய்ப்பாகிவிடும். இரத்த சோகையால் இதயத் துடிப்பில் மாற்றம் மற்றும் எளிதில் சோர்வு, படபடப்பு போன்றவை ஏற்படும். சரியான ஊட்டச்சத்து மிக்க உணவை சாப்பிட்டால் இந்தப் பிரச்சனை சரியாகும்.

    ஒரு பெண்ணைத் தன் கர்ப்ப காலத்தில் தாய் வீட்டிற்கு அனுப்பி வைப்பது நம் பாரம்பரிய வழக்கம். காரணம், அந்த நேரத்தில் அவளுக்கு தாயின் அரவணைப்பு கட்டாயம் தேவைப்படுவதால்தான். ஆனால் இன்றைய சூழலில் பெரும்பாலான பெண்கள் பணி நிமித்தம் தூர தேசங்களுக்கோ அல்லது வேற்று மாநிலங்களுக்கோச் சென்று தங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும்போது, உடல் ஆரோக்கியம் இரண்டாம்பட்சமாகப் போக வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. இன்று பெரும்பாலானவர்கள் அதிகபட்சமாக இரண்டு அல்லது ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்கிறார்கள். அந்தக் குழந்தை ஆரோக்கியமாகவும், நல்ல சமுதாயத்தை உருவாக்கக்கூடியவராகவும் இருக்க வேண்டியது அவசியம். இதற்கான முழு பொறுப்பும் அக்குழந்தையின் பெற்றோரையேச் சாரும். அந்த வகையில் ஒரு தாய் தன் கர்ப்ப காலத்தில் அக்குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதற்காக எந்த விதமான ஒரு சில தியாகங்களையும் செய்யத் தயங்க வேண்டியதில்லை. மனமும், உடலும் முழு ஆரோக்கியமாக உள்ள நல்ல தாய்மார்களால் மட்டுமே நல்ல குழந்தைகளை உருவாக்க முடியும். நல்ல சமுதாயம் மலர வேண்டுமென்றால் அதற்கு தாய்மார்களின் பங்கு இன்றியமையாதது என்பதை ஒவ்வொரு தாயும் உணர வேண்டியது அவசியம்! தாய்மையைக் கொண்டாடுவோம்!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    crazy

    காரியம் அற்றசோர்வு வீரன் உனக்கெதற்கு
    சூரிகள் விண்ணிடை சேர்ப்பாரோ ! -பாருய்யா(என்னைப் பார் அய்யா!),
    தேரையும் போரையும் தேர்ந்தெடுத்த என்னைக்கேள்,
    நூறை ஒடுக்க நிமிர்… கிரேசி மோகன்….

    Share
  • பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பிரபஞ்சப் பெரு வெடிப்பு எப்படி ஏற்பட்டது ?

     
     

    jay

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப்பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது.

    விஞ்ஞான மேதை ஜான் ஹெர்ச்செல் [1792-1871]

    விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன! அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது! எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க, இயற்கை ஒருபோதும் நம்மை விடுவ தில்லை!

    ஸெனேகா (முதல் நூற்றாண்டு ஞானி) 

    பிரபஞ்சப் பெரு வெடிப்பை விளக்கிய ரஷிய விஞ்ஞானி

    பிரபஞ்சத்தின் பிறப்புக் கோட்பாடுகளில் ஒன்றான ‘பெரு வெடிப்பு நியதியை ‘ [Big Bang Theory] உறுதியாக நம்பி அதை விருத்தி செய்த முன்னோடிகளான, ரஷ்ய விஞ்ஞானி அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann], அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble], பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரெட் ஹாயில் [Fred Hoyle] ஆகியோருள் முக்கியமானவர் ரஷ்ய விஞ்ஞானி, ஜார்ஜ் காமாவ்.

    பிரபஞ்சத்தின் முழுத் தோற்றத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதன் மூலமான நுண்ணிய பரமாணுக்களையும், விரிந்து குமிழி போல் உப்பும் அதன் பிரமாண்ட வடிவத்தையும் பற்றிய எல்லாக் கருத்துக்களைத் தனித்தனியாக அறிய வேண்டும்! பிரபஞ்சத்தின் முதல் தோற்றம் ஒரு மாபெரும் வெடிப்பில் [Big Bang Theory] உண்டானது என்பதற்கு முதன் முதல் நிரூபணத்தைக் காட்டியவர் ஜார்க் காமாவ்! அதாவது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஓர் பேரளவு வெடிப்பு நிகழ்ச்சியில் [Colossal Explosion] பிரபஞ்சம் தோன்றி விரிவடைந்து வந்துள்ளது என்ற ஒரு கருத்தை ஆதரித்து, அதற்கு விளக்கம் அளித்து மெய்ப்பித்தவர்களில் முதல்வர், ஜார்ஜ் காமாவ்! பெரு வெடிப்புக்குப் பின்பு பிரபஞ்சம்,  பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சை [Background Microwave Radiation] உண்டாக்கி யிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறி, அதையும் நிரூபித்தும் காட்டினார்!

    1936 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜார்ஜ் காமாவின் மிக்க விஞ்ஞானச் சாதனைகள் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றியும், விண்மீன்களின் பிறப்பு, வளர்ச்சியைப் பற்றியும் சார்ந்திருந்தன. 1939 இல் விரியும் பிரபஞ்சத்தின் மாதிரிக் [Model of the Expanding Universe] கோட்பாட்டை ஆதரித்து அதை அபிவிருத்தி செய்தார். அத்துடன் நெபுளாக்களின் பிறப்பு [Origin of Nebulae], ராட்சதச் செம்மீன்கள் [Red Giant Stars] சக்தியை உற்பத்தி செய்யும் முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்தார். விண்மீன்கள் வெடிக்கும் போது, அவற்றிலிருந்து நியூட்ரினோ துகள்கள் [Neutrino Particles] வெளியேறுவதை 1940 இல் ஆய்வு செய்து, தான் ஆக்கிய பூதநோவாவின் நியூட்ரினோ நியதியை [Neutrino Theory of Supernova] வெளியீடு செய்தார்.

    ஜார்ஜ் காமாவின் விஞ்ஞானச் சாதனைகள்

    1948 இல் விஞ்ஞானி ரால்·ப் ஆல்·பருடன் [Ralph Alpher] காமாவும் சேர்ந்து, யூகிப்பட்ட பெரு வெடிப்புக்கு [Postulated Big Bang] நிகழ்ச்சிக்கு முன்பு, பிரபஞ்சத்தின் நிலைமை என்ன என்று ஆராய்ந்ததில் எஞ்சிய நுண்ணலை வெப்பவீச்சு [Residual Microwave Radiation] இருப்பதைக் கண்டார்கள்! அவர்களது அவ்வரிய கண்டுபிடிப்பு மெய்யானது என்று 1965 இல் பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், தாமும் கண்டு உறுதிப்படுத்தினர்!

    விண்வெளியை வில்லாய் வளைக்க முடியுமா ? பிரபஞ்சத்தின் முடிவுக்கும் ஒழுங்கீனக் கோட்பாடு எனப்படும் ‘என்ட்ராப்பி நியதிக்கும் ‘ [Theory of Entropy] என்ன தொடர்பு ? அண்ட வெளியில் ஊடுறுவிச் செல்லும் ராக்கெட் ஏன் சுருங்குகிறது ? விண்மீன்கள் வெடிப்பதற்கு ஆதி அடிப்படையும், அவற்றுக்குக் காரணங்கள் என்னவென்று நாம் அறிந்து கொண்டதின் விளைவென்ன ? சந்ததியின் மூலவிகள் [Genes] புரியும் விந்தைப் புதிர்களைப் பற்றி நவீன விஞ்ஞானம் கண்டு பிடித்தவை என்ன ? உலகத்தைப் பற்றி நாம் அறிந்ததை, ‘இலக்கங்களின் விதிப் பிரச்சனைகள் ‘ [Problems in Laws of Numbers] எவ்விதத்தில் பாதிக்கின்றன ? இத்தனை வினாக்களையும் தான் எழுதிய ‘ஒன்று, இரண்டு, மூன்று…முடிவின்மை ‘ [One, Two, Three…Infinity] என்னும் நூலில் எழுப்பியவர், ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் [George Gamow]! ரஷ்யாவிலே பிறந்து அமெரிக்கக் குடியினராகிய ஜார்ஜ் காமாவ் அணுக்கரு பெளதிகம் [Nuclear Physics], பிரபஞ்சவியல் [Cosmology] பெளதிகம், மூலக்கூறு உயிரியல் ரசாயனம் [Molecular Biochemistry] ஆகிய முப்பெரும் பெரு வெடிப்பு நியதியின்படி, பிரபஞ்சம் முதற் சில இம்மி வினாடிகளில் [microseconds] அதி விரைவாக விரிந்து விட்டது! ஒரே ஓர் உச்சவிசை [Force] மட்டும் முதலில் இருந்து, பிரபஞ்சம் விரிந்து போய்க் குளிர்ந்ததும் அந்த ஒற்றை விசையே, பின்னால் நாமறிந்த ஈர்ப்பியல் விசை [Gravitational Fprce], மின் காந்த விசை [Electromagnetic Force], அணுக்கரு வலுத்த விசை [Strong Nuclear Force], அணுக்கரு நலிந்த விசை [Weak Nuclear Force] ஆகிய நான்கு பிரிவுகளாய் மாறியது!

    சோப்புக் குமிழிபோல் உப்பிடும் பிரபஞ்சம்

    விஞ்ஞானிகள் ஒளித்துகள் யந்திரவியலையும் [Quantum Mechanics], ஈர்ப்பியலையும் ஒருங்கே பிணைக்கும் ஒரு பொது நியதியைத் தேடி வருகிறார்கள்! இதுவரை யாரும் அதைக் கண்டு பிடிக்க முடிய வில்லை! புதிதான ‘இழை நியதி ‘ [String Theory]. அவ்விரண்டையும் பிணைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஈர்ப்பியல் விசையை மற்ற மூன்று வித விசைகளுடன் பிணைத்துக் கொள்ளத் ‘இழை நியதி ‘ முயல்கிறது! ஆனால் பெளதிக விஞ்ஞானிகள் இப்போது இந்த நான்கு வித விசைகளையும் ஒருங்கே பிணைத்து விளக்கும் ‘மகா ஐக்கிய நியதி ‘ [Grand Unified Theory, GUT] ஒன்றைத் துருவிக் கண்டு பிடிக்க முற்பட்டு வருகிறார்கள்!

    சோப்புக் குமிழிபோல் உப்பிடும் [Inflationary Model] பிரபஞ்சம், அந்நிலை முடிந்ததும் மெதுவாகவே விரிகிறது! கோளமாய் விரியும் பிரபஞ்சத்தின் விளிம்பு திறந்த வெளிக்கும், மூடிய வெளிக்கும் இடையே அமைகிறது! பிரபஞ்சம் திறந்த வெளியாக இருந்தால், எப்போதும் அது விரிந்து, விரிந்து, விரிந்து போய்க் கொண்டே யிருக்கும்! மூடிய விளிம்பாகப் பிரபஞ்சம் இருந்தால், அதன் விரிவு நிலை ஒரு காலத்தில் நின்று விடும்! பிறகு அது சுருங்க ஆரம்பித்து, திணிவு அடர்த்தி மிகுந்து, இறுதியில் வெடித்துச் சிதறிவிடும்! பிரபஞ்சம் மூடிய கோளமா அல்லது திறந்த வெளியா என்பது அதன் திணிவு [Density], அன்றி பளு அடர்த்தியைச் [Concentration of Mass] சார்ந்தது! பிரபஞ்சம் அடர்த்தி மிகுந்த பளுவைக் கொண்டிருந்தால், அதனை மூடிய கோளம் என்று கூறலாம்!

    பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்பு எந்த நிலை இருந்தது என்று, ஸ்டீஃபன் ஹாக்கிங் [Stephen Hawking] போன்ற விஞ்ஞான மேதைகள் கேள்வி எழுப்பி யிருக்கிறார்கள்! பெரு வெடிப்பு நியதியில் பிரபஞ்சத்தின் முற்கால நிலை பற்றி எந்த விளக்கமும் இல்லை! காலக் கடிகாரமே பெரு வெடிப்பிற்கு பின்பு ஓட ஆரம்பித்திருக்கலாம்! ஆகவே பெரு வெடிப்புக்கு முன்பு என்ன இருந்திருக்கும் என்று எழும் கேள்விகளுக்கு ஒருகாலத்தில் பதில் கிடைக்கலாம் !

    பெரு வெடிப்பு நியதியை மெய்ப்படுத்தும் நிகழ்ச்சிகள்

    பிரபஞ்சம் பெரு வெடிப்பிற்குப் பிறகு விரிந்து கொண்டே குளிர்ந்து போகிறது. பெரு வெடிப்பிற்கு ஓரு வினாடி கழித்துப் புரோட்டான்கள் உண்டாயின. முதல் மூன்று நிமிடங்களில் புரோட்டான், நியூட்ரான்களும் பிணைந்து, ஹைடிரஜனுடைய ஏகமூலமான [Isotope] டியூடிரியம் [Deuterium], அடுத்து எளிய மூலகங்களான ஹீலியம், லிதியம், பெரிலியம், போரான் [Helium, Lithium, Beryllium, Boron] ஆகியவை உண்டாயின! விண்வெளியில் மித மிஞ்சிய அளவு ஹீலியம் இருப்பது, பெரு வெடிப்பு நியதியை மெய்ப்படுத்தி உறுதிப் படுத்துகிறது. டியூடிரியம் பிரபஞ்சத்தில் பேரளவில் பரவி யிருப்பது, அகிலத்தின் அண்டத் திணிவைக் [Density of Matter] கணிக்க அனுகூலமாய் இருக்கிறது!

    பெரு வெடிப்பு ஏற்பட்டு ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபஞ்சத்தின் உஷ்ணம் 3000 டிகிரி C அளவுக்குக் குறைந்தது! அப்போது புரோட்டான்களும் எலக்டிரான்களும் சேர்ந்து ¨ஹைடிரஜன் அணுக்கள் உண்டாயின. ஹைடிரஜன் அணுக்கள் ஒளியின் குறிப்பிட்ட சில அலை நீளங்கள், நிறங்கள் ஆகியவற்றை எழுப்பவோ அன்றி விழுங்கவோ செய்யும்! அவ்வாறு உண்டான அணுக்கள், தனித்த எலக்டிரான்ளுக்கு இடையூறு செய்யும், ஒளியின் மற்ற அலை நீளங்களை வெகு தூரத்திற்கு அப்பால் தள்ளி விடுகின்றன. இந்த மாறுதல் வெப்பவீச்சை விடுவித்து இன்று நாம் காணும்படிச் செய்கிறது! பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்ந்த அந்த ‘அகிலவியல் பின்புல வெப்பவீச்சு ‘ [Cosmic Background Radiation] சுமார் 3 டிகிரி Kelvin [3 K (-273 C/-454 F)]. 1964 இல் முதன் முதல் அகிலவியல் பின்புல வெப்பவீச்சைத் தேடிக் கண்டு பிடித்த அமெரிக்க வானியல் மேதைகள் இருவர்: ஆர்னோ பென்ஸையாஸ், ராபர்ட் வில்ஸன் [Arno Penzias & Robert Wilson].

    பெரு வெடிப்புக்குப் பிறகு பின்புல வெப்ப வீச்சு

    1989-1993 ஆண்டுகளில் தேசிய வானியல் விண்வெளி ஆணையகம், நாசா [NASA, National Aeronautics & Space Administration] ‘அகிலப் பின்புல உளவி ‘ [Cosmic Background Explorer, COBE] என்னும் விண்வெளிச் சிமிழை [Spacecraft] ஏவி, அண்ட வெளியில் அகிலப் பின்புல வெப்பவீச்சைத் தளப்பதிவு [Mapping] செய்தது. அந்த தளப்பதிவு ‘பெரு வெடிப்பு நியதி ‘ முன்னறிவித்தபடி மிகத் துள்ளியமாக பின்புல வெப்ப வீச்சு அடர்த்தியை [Intensity of the Background Radiation] உறுதிப் படுத்தியது! அத்துடன் அகிலவியல் பின்புல வெப்பவீச்சு சீராக நிலவாது [Not Uniform], சிறிது மாறுபட்டுக் காணப் பட்டது! அந்த மாறுதல்கள் பிரபஞ்சத்தில் காலக்ஸிகள் [Galaxies], மற்ற அமைப்பாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாய்க் கருதப் படுகின்றன!

    பின்புல வெப்பவீச்சு பிரபஞ்சப் பெரு வெடிப்பிற்குப் பிறகு எஞ்சிய நீண்ட கால விளைவு! ஜெர்மன் விஞ்ஞானி மாக்ஸ் பிளான்க் [Max Planck (1858-1947)] கருங்கோளக் கதிர்வீச்சை [Black Body Radiation] ஆராய்ந்து எழுதிய, ‘பிளான்க் கதிர்வீச்சுக் கணிப்பாடு [Planck ‘s Radiation Formula] மூலம் உட்சிவப்பு, நுண்ணலை, வானலை [Infrared, Microwave, Radio Waves] ஆகியவற்றின் அலை நீளங்களைத் தனியே கணக்கிட்டு விடலாம்! அவற்றின் கூட்டமைப்பே பின்புலக் கதிர்வீச்சுகளின் அடர்த்தியாகக் [Intensity of Background Radiation] காணப் படுகிறது. ‘ஓர் குறித்த உஷ்ண நிலையில் கதிர்வீச்சு அடர்த்திக்கும், அதன் அலை நீளத்திற்கும் உள்ள ஓர் ஒப்பான உறவை ‘ மாக்ஸ் பிளான்க் வளைகோடு முன்னறிவிக்கிறது. பெரு வெடிப்பின் பின் தங்கிய பின்புலக் கதிர்வீச்சு 3 டிகிரி K [-270 C/-450 F] உஷ்ண நிலையில், மாக்ஸ் பிளான்க் முன்னறிவித்த வளைகோட்டை வியக்கத் தக்கவாறு ஒத்துள்ளது! ஏறக்குறைய பின்புலக் கதிர்வீச்சு பிரபஞ்சத்தில் எத்திசையிலும் ‘சம வெப்பநிலை ‘ [Isotropic State] கொண்டுள்ளதாக அறியப் படுகிறது.

    ஆழ்வெளியில் ஒளிவீசும் பால்மய காலக்ஸி, நெபுளாக்கள்

    ஆதியின் முதல் பிரளயமாய்த் தோன்றிய பெரு வெடிப்பின் [Big Bang] விளைவாய் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்தவையாக காலக்ஸிகள் கருதப் படுகின்றன! பிரபஞ்ச வெளியில் விண்மீன் மந்தைகள் கொண்ட காலக்ஸிகள் சீரான அமைப்புத் தீவுகளாய் உண்டாக வில்லை! அகிலத்தின் ஆக்கிரமிப்பு விசையான ஈர்ப்பியல் [Gravitation] பண்பு இழுத்து இணைத்துக் கொண்ட தீவுக் கூட்டங்களாய் அவை தென்படுகின்றன! ஒரு பில்லியன் ஒளிமயத் தீவுகள் அல்லது விண்மீன் பூத மந்தைகள் [Giant Clusters of Stars] பிரபஞ்சத்தில் உள்ளதாக ஊகிக்கப் படுகிறது. அந்த ஒளிமயத் தீவுகளே காலக்ஸிகள் [Galaxies] என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுபவை.

    fig-1f-the-forces-of-nature.jpg

    ஒவ்வொரு காலக்ஸியிலும் 100 பில்லியன் விண்மீன்கள் கூடி யுள்ளன என்று கணிக்கப் பட்டுள்ளது! அத்தகைய ஒரு சுய ஒளிமீனே நமக்குச் சுடர்தரும் பரிதி! நமது சூரிய மண்டலம் நகரும் காலக்ஸியைக் கொண்ட பால்மய வெளியில் [Milky Way] ஏராளமான மற்ற காலக்ஸிகளும் இருக்கின்றன! காலக்ஸிகளின் இடைவெளிகள் நினைத்துப் பார்க்க முடியாத தொலைவு தூரம்! நமது பால்மய வீதிக்கு நெருங்கிய காலக்ஸி 1.9 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது! [Light Years -Distance light covers in a year at the rate of 186000 miles/sec]. காலக்ஸித் தீவுகள் நீள்வட்ட உருவத்திலோ அல்லது சுருள் வடிவத்திலோதான் [Elliptical or Spiral Shape] தோன்றும்! ஒருவித ஒழுங்கு வடிவமும் இல்லாத காலக்ஸிகள், பிரபஞ்சத்தில் மிக மிகக் குறைவு.

    பிரபஞ்ச விரிவு பற்றி மாறான ஐன்ஸ்டைன் கருத்து.

    1915 ஆம் ஆண்டில் ஒப்பியல் நியதியை ஆக்கிய ஆரம்ப சமயத்தில் ஐன்ஸ்டைன் பிரபஞ்சம் நிலையானது என்று நம்பினார்! பெரு வெடிப்பு நியதி வெளியாகி, பிரபஞ்சம் சோப்புக் குமிழிபோல் உப்பி விரிகிறது என்னும் கருத்தை முதலில் ஐன்ஸ்டைன் ஒப்புக் கொள்ளத் தயங்கினார்! அவரது பொது ஒப்பியல் நியதித் தளவியல் சமன்பாடுகளின் தீர்வுகளிலிருந்து பெரு வெடிப்பு நியதி தோன்ற ஓர் கூட்டமைப்பு[Framework] உருவானது. ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின் இன்றும் ஒப்பியல் நியதியின் பல விபரங்கள் மாற்றப் பட்டு வருகின்றன! நியதிச் சமன்பாட்டில் பிரபஞ்சம் விரிகிறதா அல்லது சுருங்குகிறதா என்பதை விளக்க வந்த இடத்தில்,  ஐன்ஸ்டைன் ஓர் நிலை யிலக்கத்தைச் [Constant] சேர்த்ததால், விரிவும் சுருக்கமும் கழிவு பட்டுப் போயின! பின்னால் பிரபஞ்சம் விரிகிறது என்ற கருத்துக்கள் உறுதியான போது, அகில நிலை யிலக்கத்தைச் [Cosmological Contant] இடையில் நுழைத்தது, ‘தனது மாபெரும் தவறு ‘ என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒப்புக் கொண்டார்!

    Big Bang Events -1

    (தொடரும்)

    *********************

    தகவல் :

    Picture Credit : 1. Astronomy (August 21, 2007) 2.  Universe 6th Edition (2002)  3. National Geographic Encyclopedia of Space (2005) 5. 50 Years of Space (2004)

    1.  Astronomy Magazine : 50 Greatest Mysteries of the Universe (Aug 21, 2007)

    2.  Universe By Roger Freedman & William Kaufmann III (2002)

    3.  National Geographic Encyclopedia of Space By Linda Glover.

    4.  The World Book Atlas By World Book Encyclopedia Inc (1984)

    5.  Scientific Impact of WMAP Space Probe Results (May 15, 2007)

    6.  BBC News – Hubble Obtains Deepest Space View By Dr. David Whitehouse, Science Editor (Jan 16, 2004)

    7.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301192&format=html (பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள்)
    8.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310231&format=html (ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நெபுளாக்கள்!
    9.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40211102&format=html (பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow1904-1968)

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) November 15, 2007

    Share
  • சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து..- கவியரசு கண்ணதாசன் – விஸ்வநாதன் ராமமூர்த்தி

    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து..

    மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்புலன்கள் கொண்ட மனிதன் அவைகளை அடக்கியாளுகின்றானா? அல்லது அவைகளுக்குள் அடங்கிப் போகின்றானா? ஆறறவில் ஆறாம் அறிவாம் பகுத்துணர்வால் இன்னும் பக்குவப்படுகின்றானா? இல்லை.. ஆசையென்னும் தீயால் அவனே அவதிப் படுகின்றானா? இவை அனைத்தும் கலந்த கலவையே மனித வாழ்க்கை என்று இறைவன் எழுதி வைத்தானா?

    தன்னைச் சுற்றியிருக்கும் தாவரங்கள்.. மரம், செடி, கொடி என பசுமை நிறம்காட்டி வண்ணவண்ணப் பூக்களுடன் காட்சிதரும் இயற்கை தன் அழகையெல்லாம் இதமாக அள்ளி வழங்க.. சோலைவனங்களும், நிழல்தரும் மரங்களும்.. அவற்றுள் கூடுகட்டி வாழும் பறவைகளும்.. பச்சைக்கிளிகளும்.. குழலோசை போல் குரல்கொடுக்கும் குயில்களும் வசந்தகால வரவல்லவா?

    kav

    விண்ணோக்கிப் பார்க்கும்போது எண்ணிலா இயற்கையின்பம்.. மேகக்கூட்டங்களும் – வானவில் தோற்றங்களும், கண்சிமிட்டும் நட்சத்திரங்களும், கவிதை சொல்ல உலா வரும் நிலவும், கட்டுக்கடங்காத கனலைக் கொட்டியபடியே இவ்வுலகம் இயங்கிட கடமையாற்றும் கதிரவனும் – சற்றே விண்ணிலிருந்து மண்ணுலகு நோக்கி வந்துவிழும் மழைத்துளியும் – எல்லாம் இயற்கையின் சீதனமா? நாம் இன்புறவே நலம்பாடும் செல்வங்களா? உயர்ந்துநிற்கும் மலைத்தொடர்கள்.. அவற்றினிடையே கொட்டுகின்ற வெள்ளிநீர்வீழ்ச்சிகள்.. துள்ளிக்குதித்து வரும் நதிமகள்கள்.. பாயும் இடமெல்லாம் பச்சைவயல்களென வரிசை வரிசையாய் அழகு ஒய்யாரமாய் பவனி வரும் – இவ்வுலகை மூன்று மடங்காக விஸ்வரூபம் எடுத்து தாங்கிநிற்கும் கடல் அன்னையும், கடற்கரையோரமெல்லாம் பாடும் அலைகளென நுரை சிந்தும் நூதனமும் எழுதப்படிக்கத் தெரியாதவரையும் ரசித்து மகிழச் செய்துவிடும் இயற்கை வளங்கள் அல்லவா?

    ஒரு கவிஞன் தான் எழுதும் பாடலில் இந்த அழகையெல்லாம் தான் ரசித்ததோடு மட்டுமின்றி கவிதைமொழிபெயர்ப்பும் தந்துவிடுகிறான். அப்படி கண்ணதாசன் காட்டும் திரைப்பாடலிது.. பி.சுசீலாவின் குரலில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் புதிய பறவைக்காக .. இந்த மந்தகாருசப் பாடல் நம் மனதைத் தடவிக்கொண்டே இருக்கிறது!

    இந்த மண்ணின் மரபுமாறாமல்.. பெண் தன் ஆசைகளை உவமைநயம் காட்டித்தான் உணர்த்துவாள்.. என்னும் உன்னதத்தையும் உள்ளடக்கிய பாடல்!

    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே..
    கதாநாயகி தான் பாடும் இப்பாடலில் கவிஞரின் கற்பனைச் சிறகுகள் விரிந்து பறந்து வழங்கியிருக்கும் சொற்கோலங்களில் கொஞ்சம் சொக்கிப் போகலாமே! அற்புத இசைக்கோர்வையில் பல்லவிமுதல் சரணங்கள் எல்லாம் உற்சாக மழை பொழிகிறது!

    எல்லாம் சரி.. எத்தனையோ பறவைகளிருக்க.. பச்சைக்கிளிகளைக்கூட விட்டுவிட்டு சிட்டுக்குருவியை பல்லவியில் ஏன் தேர்ந்தெடுத்தார் கண்ணதாசன் என்கிற கேள்விக்கு பதில் என்ன? தன் அலகுகளால் ஒன்றையொன்று அழகாய் முத்தமிட்டுக்கொள்ளும் பேரழகை.. அதுவும் தவிர.. அத்தகு எண்ணிக்கையம் மற்ற பறவைகளிலிருந்து சிட்டுக்குருவியை முன்னிலைப்படுகிறது! அட.. சிட்டுக்குருவி லேகியம் என்றுகூட விற்பனை செய்கிறார்களே! கண்ணதாசனே.. உனது பாடலில்தான் எத்தனை எத்தனை ரகசியங்கள்?

    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
    செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
    மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே
    மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே ஹோய்
    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
    செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
    ஆ..ஆ..ஆ..ஹாஹா…ஹா..ஹா..
    பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
    பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
    பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
    பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
    எடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
    என்னென்னமோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்
    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
    செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
    ஆ..ஆ..ஆ..ஹாஹா…ஹா..ஹா..
    ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
    ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
    இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
    இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா…ஹோய்
    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
    செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
    திரைப்படம் – புதிய பறவை..
    பாடல் – கண்ணதாசன்
    இசை – விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் – பி. சுசீலா

    —
    என்றும் அன்புடன்,
    காவிரிமைந்தன்
    (மு.இரவிச்சந்திரன்)
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
    சென்னை 600 075
    தற்போது – ருவைஸ், அபுதாபி..
    00971 50 2519693

    Share
  • ஒரு மரத்தின் சாபம்!

    -றியாஸ்முஹமட், கத்தார்

    ஓட்டமாவடியின்
    வரலாற்றைத் தேட
    ஏடுகளைப்
    புரட்டாதீர்கள்
    என் முதுகுப்
    பட்டையைப் புரட்டுங்கள்!                    tree

    பல நூற்றாண்டுகளாகத்
    தீபவம்சம் போல்
    வாழ்ந்தேன்!

    தீ வைத்தீர்
    குழி பறித்தீர்
    வழி மறித்தீர்
    கோஷமிட்டீர்
    கதை முடித்தீர்!

    நீங்கள்
    பதுங்கு குழிகளிலும்
    பள்ளிகளிலும்
    படுத்திருக்கும் போது
    நான்தானே
    தன்னந்தனியாக
    முச்சந்தியில்
    தனித்திருந்து
    விழித்திருந்தவன்!

    உங்கள் பாதுகாப்புக்கு
    முதல் ‘ஊர்காவற்படை’
    வீரன்
    நானல்லவா….?!

    திறந்து பாருங்கள்
    என்
    இதயக் கிளைகளை
    அது பல
    துப்பாக்கி ரவைகளுக்கும்
    குண்டுகளுக்கும்
    பதில் சொல்லியிருக்கும்!

    இலங்கை முதல்
    இந்திய இராணுவம் வரை
    குண்டடித்துப்
    பந்தடித்தார்கள்.
    விட்டு கொடுத்தேனா..?

    இல்லை
    உங்கள் ஊரைக்
    காட்டிக் கொடுத்தேனா..?

    ஏன் கொடுத்தீர்கள்
    இத் தண்டனையை?
    தூக்குக் கிடைத்தாலும்
    ஒரே நாளில்
    போயிருக்கும்
    என் உயிர்!

    கூலிப் படை
    வைத்துக்
    கொலை வெறியோடு
    வெட்டி வீழ்த்தினாய்!

    என்
    எச்சிக் கொட்டையை
    விழுங்கித்தானே
    உங்கள் பிரதேசம்
    பசுமை பெற்றது
    எழில் கொஞ்சும்
    அழகைப் பெற்றது!

    அரசியல் என்கிறாய்
    அபிவிருத்தி என்கிறாய்
    நிறுத்து
    உன் பேச்சை!

    இல்லை
    நிறுத்தி விடுவேன்
    உன் மூச்சை!

    நன்றி
    உள்ளவன் நான்!
    நன்றி மறந்தவர்கள்
    நீங்கள்!

    சாபம்
    விடுகின்றேன்
    உங்கள்
    அரசியல்வாதிகளுக்கு!

    உங்கள்
    மரணத்திலும்
    எடுத்து விடாதீர்கள்
    என் மரக்
    கட்டையை!

     

    Share
  • மனமாற்றம் வேண்டும்…!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    எழுத்தாளர் என்கின்றார் எழுதுவோருள்
    இவர்தானாம் மாமன்னர் செப்புகின்றார்
    “பழுத்தபழம்” போற்பேசும் இவரோயிங்கு
    படைத்தவையின் பட்டியலோ பூஜ்ஜியம்தான்!
    அழுத்தமுடன் எதைச் சொன்னார் புதுமையாக….?
    அசலுண்மை கடல் நீரா உப்பு என்றார்
    வெளுத்த நிறம் பாலென்றார்  வானில் நீந்தும்
    வெண்ணிலாவின் ஒளி தண்மை என்று சொல்வார்….!

    “நா” மெத்தத் தடித்ததனால் “நான்” நானென்று
    நலங்கெட்டவார்த்தைகளைக் கொட்டுகின்றார்!
    “பா” மெத்தப்படைத்தளித்த பாவாணர் போல்
    பல மேடைகண்டவர் போல் பகருகின்றார்!
    காமத்தைக் கருவாக கொண்டு ஏதோ
    கண்டபடி நாலைந்தைக் கிறுக்கியுள்ளார்
    நாமத்தை அச்சினிலே “பெரிதாய்ப்” போட
    நாய்படாப் பாடுபல படுகின்றாரே…..!

    பெண்ணழகைக் கவி செய்வார் பெண்களே இப்
    பெருவுலகில் பேறென்றும் சாற்றி நிற்பார்!
    பெண்ணொருத்தி எழுத்துலகில் முன்னே நிற்கப்
    பித்தரிவர் “பெருமனது” இடங் கொடாது
    வண்டமிழைக் கொண்டு இவர்வசைகள் பாடி
    வருத்தமுறச் செய்திடுவார் வார்த்தையாலே
    மண்டைதனில் கனம் கொண்டார் அறிவைத்தீட்டி
    மனமாற்றம் பெற்றுய்ய வேண்டுகிறேன்…..!

     

    Share
  • வசந்த காலங்கள்

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    சிந்தனைச் சுழல்கள் என் இதயத்தை வலம் வந்து கொண்டிருந்தன. கடந்து போன என் வாழ்க்கையிலே நடந்து முடிந்த சம்பவங்கள் எத்தனையோ! நான் அநாதையாய் ஆகி விட்ட பின்னும் அன்போடு பராமரிக்கப்பட்டேன். பெற்றோரின் அரவணைப்பைக் காண முடியாத பாவியாகி விட்ட போதிலும் அந்த சுகங்களைக் காணும் பாக்கியத்தை இறைவன் அளித்திருந்தான்.

    ஆமாம்! எனது மாமியினதும் மாமாவினதும் பாசப்பிணைப்பில் நான் பராமரிக்கப்பட்டேன். அன்பை, ஆதரவை ஏன் அனைத்தையும் பெற்றேன். குறைகளின்றியே இன்று  குமரிப் பருவத்தையும் அடைந்து விட்டேன். அந்த மாமி மாமாவின் அன்பை நினைக்கையிலே என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறையும். என் மாமிக்கு ஒரே ஒரு மகன் தான் இருந்தான். அழகும் அறிவும் கொண்ட என் மச்சான் ருவைஸ் மிகவும் கெட்டிக்காரன். என்னோடு போட்டி போட்டுக் கொண்டே எந்நேரமும் படிப்பான். படிப்பில் மட்டும் தான் போட்டி. மற்றபடி நானும் அவனும் மிக அன்பாகவே இருந்தோம். பாடசாலையில் கூட ஜெபரீன், ருவைஸ் என்றால் எல்லோருக்குமே தெரியும். படிப்பிலே எம்மைத் தவிர யாரும் முந்திக் கொண்டதேயில்லை. மாமிக்கும், மாமாவுக்கும் சந்தோஷம் நிறைந்து வழியும். கண்ணை இமை காப்பது போலக் காத்து வந்தார்கள். இறைவனருளால் நானும் மச்சானும் ஒன்றாகவே படித்து ஒன்றாகவே பல்கலைக்கழகம் சென்று ஒன்றாகவே டாக்டர்களாக வெளியேறினோம்!

    “என்ன ஜெபரீன் யோசிக்கிறீங்க ?” என்று கேட்டவாறே மச்சான் என்னருகில் வந்தததும் நான் யோசனைகளில் இருந்து விடுபட்டேன். “இல்ல….அடுத்த மாசம் களுத்துறைக்கு மாற்றம் கிடைச்சிருக்கு. அதுதான் யோசிக்கிறேன்” என்றேன். “உம்மா கூடச் சொன்னாங்க… என்னையும் உங்களோட  துணைக்குப் போகட்டாம்” என்றார் மச்சான். ஒரு நாளும் இல்லாதவாறு மச்சான் என்னை உற்று நோக்கி அவ்வார்த்தைகளைச் சொன்னதும் எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. இவ்வளவு நாட்களாக இப்படி வெட்கம் வந்ததில்லை. ஆனால் நேற்றில் இருந்து மனமெங்கும் ஒரே பரபரப்பாகவே இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது. எனக்கு களுத்துறைக்கு இடமாற்றம் கிடைத்ததையிட்டு மாமியும் மாமாவும் முடிவு ஒன்றை எடுத்திருந்தார்கள்.

    ஆமாம்! என்னை மச்சானுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டு ஒன்றாகவே களுத்துறையில் குடியிருத்தவே அவர்கள் நினைத்தார்கள். இதை என்னிடம் மாமி சொல்லிய போது …நான் பதில் சொல்லாமலே  தலை குனிந்தேன். மௌனம் சம்மதத்துக்கு அறிகுறிதானே ! மாமி சிரித்து  விட்டு போய் விட்டார். மச்சானிடமும் அதைச் சொல்லித்தானே இருப்பார்கள். அதுதான் மச்சான் ஒரு நாளும் இல்லாதவாறு இப்படி பார்க்கிறார்! எனக்கு வழமை போல உட்கார்ந்து மச்சானுடன் கதைக்க முடியவில்லை….எழுந்து நிற்கிறேன்.

    “என்ன நான் துணைக்கு வருவது ஜெபரீனுக்கு விருப்பமில்லையா…? இன்னும் யோசிக்கிறீங்களே!” என்றார் மச்சான்.எனக்கு வெட்கத்தில்  வார்த்தை வரவில்லை. நான் ரூமிற்குள் ஓடி விட்டேன். இதைக் கண்ட மாமி சிரித்துக் கொண்டே எமக்கு திருமணம் செய்யும் நாள் பற்றி ஆலோசித்தார்கள். இறைவன் நாட்டம் வேறு மாதிரி இருந்தது! விரைவில் மச்சானை லண்டனுக்கு வரும் படி அழைப்பு வந்திருந்தது. புலமைப் பரிசிலில் அவர் எடுபட்டிருந்தார். மேற்படிப்புக்காக லண்டன் செல்ல அவர் சின்ன வயதில் இருந்தே ஆசைப்பட்டார். அவரின் ஆசைகள் எனக்குத் தெரியும். மாமிக்கு எப்படியும் திருமணத்தை முடித்து விட வேண்டும் என்கிற ஆசை! ஆனால் மச்சானுக்கோ திருமணம் முடிந்தவுடன் என்னைப் பிரிய வேண்டுமே என்ற துயரம். அதனால் நான் தான் சொன்னேன் “மச்சான் படித்து விட்டு வரட்டுமே ” என்று. அது ஒருவாறு தீர்மானமாகி முடிவாகியது. மச்சான் லண்டனுக்குப் புறப்படும் போது என் விழிகள் ஏனோ குளமாகின. என் ரூமிற்குள் வந்த மச்சான் நான் அழுவதைக் கண்டு துடித்து விட்டார். “ஜெபரீன் …! படிக்கத்தானே போறேன்.மூணே மூணு  வருஷம். அப்புறம் வந்து இந்த ஜெபரீனோடேயே இருப்பேன்! ” என்று என் கைகளைப் பற்றி முத்தமிட்டார். அந்த அரவணைப்பும் ஆறுதலும் அப்போது எனக்குத் தேவைப்பட்டது. சிறுபிள்ளை போல நான் மச்சானின் மார்பில் முகம் புதைந்து அழுதேன். நேரம் போனதே தெரியாமல் நான் மச்சானோடு பேசிக்கொண்டு இருந்தேன். மனம் தைரியம் பெற்றது! அவர் லண்டனுக்குப் போய்விட்டார். காலம் தான் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே!

    இன்று வீடு மிகவும் கோலமாக இருந்தது. ருவைஸ் வந்ததும் திருமணம் தான்! எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்கள். ருவைஸ் மச்சான் நாளைக் காலை கொழும்பு வந்து அங்கிருந்து மட்டக்களப்பிற்கு ரயிலில் வருவதாக அறிவித்திருந்தார். எப்போது விடியும் என்று நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு விடிந்த பின் அசந்து தூங்கி விட்டேன்! வீட்டிலே பெரிய சலசலப்புக் கேட்டு துடித்து எழும்பிய போது தான் அந்தக் கோரச் சத்தம் எனக்கு எட்டியது! மட்டக்களப்பிற்கு வந்த புகையிரதம் பொலன்னறுவைக்கு  அண்மையில் தடம் புரண்டதால் பல பிரயாணிகள் இறந்ததாகச் செய்தி கிடைத்தது! எனக்கு  எதுவுமே தெரியவில்லை. மயங்கிச் சாய்ந்தேன். நான் விழித்துப் பார்த்த போது புதிய இடத்திலிருப்பது எனக்கு தெரிந்தது. என்னைச் சுற்றிலும் பல ஆட்கள் நிறைந்து நின்றனர்.நடந்தது நினைவுக்கு வந்தது. என் விழிகள் மச்சானைத் தேடின. “உன் மச்சானுக்கு ஒன்னும்மில்ல ஜெபரீன். அவன் பஸ்ஸில தான் வந்திருக்கான்” என்று சொல்லவும் மச்சான் என்னருகில் வரவும்  சரியாக இருந்தது. அழுகையை அடக்க முடியாமல் நான் மீண்டும் மச்சானைக் கண்டு அழத் தொடங்கினேன். என்னை எல்லோரும் தேற்றினார்கள்.வீட்டிற்கு வந்த போது அந்த இனிய நாளை எண்ணி நான் புதிய ஜெபரீனானேன்! மச்சான்  என்னை குறும்புடன் நோக்கினார். நான் இப்போது வெட்கப்படவில்லை! வசந்த காலங்கள் தொடர்ந்தும் என் வாழ்வில் வீசுவதை எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே தொழுவதற்கு ஆயத்தமானேன்.

    Share
  • கொங்குநாட்டுப் பெண்களின் மரபும் மாற்றங்களும்

    ஆர்.ச.வின் பார்வையில்

    ஆர்.சண்முக சுந்தரம்

    வாழ்க்கைப் போராட்டம் என்பது தென் மாவட்டங்களில் கடலோடும் கரையோடும், நதியோடும் வயலோடும் தொடர்புடையதாய் அமைந்தது. ஆங்காங்கே பெற்ற வெற்றி தோல்விகளின் விளைவாய்,அந்தந்தப் பகுதி மக்கள் வாணிகத்திற்கும் உடல் உழைப்பிற்கு விலை பேசும் இலங்கை, ,மலேசியா பர்மா , இந்தோனேஷியா என்று குடிபெயர்ந்து போகும் கொடுமைகளுமாய் மாறியது.

    ஆனால் கொங்கு நாட்டில் வாழ்க்கைப் போராட்டம் மண்ணோடு நடக்கும் போராட்டமாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. கொங்கு மண்ணில் பிறந்தவர் கண் முன் தரிசாகவோ விளைநிலமாகவோ இருக்கிற பூமியைக் காண்கிறார். அது அவரிடம் ஆயிரம் கதைகள் பேசுகிறது. எங்கே உன் ஆற்றல் என்று கேள்வி கேட்டு அவரை உலுக்கி எழுப்புகிறது. அதல பாதாளமாயினும் நீரைக் காணாமல் ஓயமாட்டேன் என்று கிணற்றோடு நடத்தும் போராகிறது

    கடலும் மனிதனும் என்ற தென் மாவட்ட வாழ்க்கைப் போராட்டத்தில் தோற்கிற மனிதனை, அவன் துயர்களை மட்டுமே உருவாக்கிக் காட்ட முடிகிறது. அது இயற்கை மனிதனுக்கு விதித்திருக்கும் வரம்பு. ஆனால் கொங்கு நாட்டில் போராட்டம் மண்ணோடு. அதில் ஆற்றல் உள்ளவன் ஜெயிக்கிறான். மண்ணை வென்ற மாட்சிமை மனிதனுக்குள் தனிப் பெருமிதத்தை உருவாக்குகிறது.

    நேரிய பார்வையும்,நிமிர்ந்த போக்கும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத பெருமிதத்தையும் அவனுக்கு வழங்குகிறது. அந்த மானுடப் பெருமிதத்தின் ஒளியும் நிழலுமான அம்சங்கள் கூடவே உண்டு. எல்லாவற்றிகும் காரணமாவது மண் மீது அவன் காணும் வெற்றி

    அதை வெளிக்கொணர்வதில் ஆர் .ஷண்முக சுந்தரம் வெகு இயல்பான வெற்றி கண்டவர். வட்டார வழக்கை வைத்து நாவல் எழுதிய சிலரில் பலர் வழக்கு மொழியைக் கையாண்டாலாயே போதும். வட்டாரச்சித்திரப்பை தந்து விட்டதாகத் திருப்தி காண்பர். ஆனால் அந்தப் பகுதியின் வித்தும் வேரு விழுதுகளுமான பண்புகளை, இயல்புகளை சிருஷ்டிப்பவர் விரல் விட்டு எண்ணுமளவு கூட இல்லை. அவர்களில் இடம் மான ஆர் .ஷண்முக சுந்தரம் தனிச் சிறப்பானது

    புனைவு, நாவலில் என் திறமையைப்பார் என்று காட்டிக்கொள்ளாத பண்பு ஒரு வட்டாரம் யுகம் யுகமாய்ச் சுமந்த சோகம், மகிழ்ச்சி, ஏக்கம், வெற்றிச்செருக்கு இவற்றை முழுவதும் கணித்துணர்ந்து வெளிக்காட்டும் நடை அவருக்கு கை வந்தது.

    மிடுக்கு, இடக்கு, மேதைமையை புலப்படுத்தும் செருக்கு இவை உண்மைக்கு புறம்பானவை என்று மௌனமாக அவர் வைக்கும் விமர்சனம் அது.அவர் ஒரு பகுதி மக்களின் உண்மையான வாழ்க்கை ஓட்டத்தைக் காட்ட முனைந்தவர். அவர்கள் இதயத்துடிப்பு என்ன வென்பதை அறிய மிகவும் உழைத்தவர்.

    கொங்கு நாட்டு மனிதர்களின் பின்னணி கொங்கு நாட்டுப் பெண்கள். அவர்களே அந்தப் பகுதியின் முதுகெலும்பானவர்கள். அவர்களை வெகு எளிமையான கலை நேர்த்தியுடன் கண் முன் நடமாடும் உயிரோவியங்களாக அவர் சித்தரித்த பாங்கைத தமது ஆய்வியல் பார்வையோடு அணுகுகிறார் துணைப் பேராசிரியர்.டாக்டர்.ஜவாஹர் பிரேமா லதா அவர்கள்.விரைவில் தாரிணி பதிப்பகத்தில் வெளியாக உள்ள அந்தப் படைப்பின் சில அறிமுகப் பக்கங்கள் இவை.

    கொங்குநாட்டுப் பெண்களின் மரபும் மாற்றங்களும்

    டாக்டர் ஜவாஹர் பிரேமலதா

    doc jawa

    கொங்கு நாட்டில் சிறு விவசாயிகள் கையகல நிலத்தைக் கொண்டு வாழ்வின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில், குடும்பத்தைக் கரையேற்றப் படாதபாடு படுகிறார்கள். அவர்களோடு சேர்ந்து அவர்களது பெண்களும் மண்ணில் சரிக்குச் சமமாகப் பாடுபடுகிறார்கள். மனித வாழ்க்கை அவர்கள் வாழும் மண்ணில் வேர்கொண்டிருக்கிறது. மண்ணின் தன்மையோடு தன்னை இணைத்துக்கொண்ட கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையை அவர்களுக்குரிய பின்னணியைக் கொண்டு ஆர்.ச. படைத்துச் சென்றுள்ளார்.ஆடுமாடு மேய்த்தல், விவசாயம் செய்தல், கூலி வேலைக்குச் செல்லல், குடும்பத்தை நிர்வகித்தல் எனப் பெண்கள் ஓய்வு ஒழிச்சலின்றி உழைக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.

    இச்சூழலில் கொங்கு கிராமத்தைச் சார்ந்த நகரப்பகுதியான கோவையின் தொழில் வளர்ச்சி, பிற மக்களின் வருகை, புதுத் தொழில்கள், நகரத்துக்குச் சென்று பணிபுரியும் மக்களின் பொருளாதாரப் பின்னணி, பல நிலைகளிலிருந்து ஏழை எளிய கிராம மக்களின் வாழ்வை நெருக்குதலுக்கு உள்ளாக்குகின்றன. எனினும், கொங்குப் பெண்கள் மண்ணையும், உழைப்பையும் உயிர் மூச்சாகக் கருதிப் போராடுகின்றனர். மண்ணில் காலூன்றிப் பாடுபட்டு, அம்மண்ணையே தெய்வமாகக் கருதி, அம்மண்ணிற்கே உரமாகிப் போகும் மானுடவாழ்வில் மண்ணுக்கும் மனிதனுக்கும் இடையே பாலமாக நின்று பெண்கள் நிலைத்திருத்தலுக்காகப் பாடுபடுகிறார்கள்.

    காலங்கள் கடந்து போனாலும், நாகரிகம் தொழில்வளர்ச்சி என்ற பெயரில் உள்ளே நுழைந்தாலும் கொங்குப் பெண்களிடம் உடலுழைப்பும், மனஉறுதியும், கற்புநெறியும் கனன்று கொண்டிருக்கிறது. கொங்குப் பெண்கள் குடிப்பெருமையைக் கட்டிக் காக்கும் வல்லமை உடையவர்களாகத் திகழ்கின்றனர். நடுவு நிலைமை பழிக்கும் அஞ்சும் குணம், கடின உழைப்பு, மரபைக் காக்கும் மேன்மை, சுயமாகச் சிந்திக்கும் தன்மை, நியாயமென்று தோன்றிவிட்டால் எதையும் யாரையும் எதிர்க்கும் துணிவு, வெற்றி தோல்வி கருதாது இறுதிவரை போராடும் மாண்பு போன்ற பண்புகளின் ஒட்டுமொத்த வடிவமாக ஒவ்வொரு கொங்குப் பெண்ணும் திகழ்வதை ஆர்.ச. துல்லியமாகப் பதிவு செய்துள்ளார். கொங்கு மண் கடினத்தன்மை உடையது.

    வானம் பார்த்த பூமியாதலால் காலந்தோறும் உழைக்க வேண்டியசூழல் உள்ளது. இதனால், பொருளாதாரத் தேவையை நிர்வகிக்கும் பெண்கள் சற்றுக் கறாராகவே நடந்துகொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே ஆம் மண்ணைப் போலவே அவர்களின் மனமும் இறுகிப் போயிருக்கிறது. உழைக்கும் வர்க்கத்துப் பெண்களாதாதலால் தன்மானம் உடையவர்களாக யாருக்கும் தலைவணங்காதவர்களாகத் திகழ்கிறார்கள். எனவே, கற்பு நிலையில் மிக உறுதி படைத்தவர்களாக, நெஞ்சுறுதி மிக்கவர்களாக, குடும்ப மானம் தன் கையில் என்ற உணர்வுடையவர்களாகத் தென்படுகின்றனர்.

    உழைப்பே அவர்களின் மூச்சு. மண்ணில் காலூன்றப் பாடுபட்டு, அம்மண்ணையே தெய்வமாகக் கருதி அம்மண்ணிற்கே உரமாகிப் போகும் மானுட வாழ்வில் மண்ணுக்கும் மனிதனுக்குமிடையே பெண்கள் பாலமாகத் திகழ்கின்றனர். உடல் உழைப்பு, மன உறுதி, அலட்சியப் போக்கு, நியாயமென்று தோன்றிவிட்டால் எவரையும் எதிர்க்கும் துணிவு, வெற்றி தோல்வி கருதாது இறுதிவரை போராடும் துணிவு போன்ற குணங்களின் ஒட்டுமொத்த வடிவம்தான் கொங்குப் பெண்கள். ஆணுக்குப் பின்னிருந்து செயல்படுபவர்கள் அல்லர் இவர்கள். சுயமாகச் சிந்தித்து செயல்படும் வல்லமை உடையவர்கள்.

    கிராமங்களில் ஒருவரைப் பற்றி ஒருவர் கருத்து பரிமாறிக் கொள்ளும் நிலை உள்ளது. நான்குபேர் சேர்ந்தால் மற்றவர்களைப் பற்றி கவலைப் படுகின்றனர். ஆனால், நகர்ப்புறத்தில் இதைக் காண முடிவதில்லை. கள்ளங்கபடமற்ற, எதிர்பார்ப்புத் தன்மையற்ற உறவுகளை ஆர்.ச. புதினம் அன்பினை அடித்தளமாகக் கொண்டு, தனது சுற்றங்களை அரவணைத்துச் செல்லும் பெண்களை மிகுதி. உறவுகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி தனது சுயநலத்திற்கு அவர்களை மூலதனமாக்கிக் கொள்ளும் போலித்தனமான மாந்தர்கள் இல்லை. அறிவியலின் ஆக்கமும், கல்வி நாகரிக வளர்ச்சி போன்றவை பல தாக்கங்களை மாற்றங்களை கொங்குமக்கள் வாழ்வில் ஏற்படுத்தியிருந்தாலும், கொங்கு மண்ணிற்கே உரித்தான கற்பு உறுதியும், துணிச்சலும், தனித்த ஆளுமையும் உடையவர்களாகப் கொங்குப் பெண்கள் திகழ்கின்றனர்.

    கொங்கு மண் கடினத்தன்மையுடையது. இதில் உழைத்து உழைத்து உரமேறிய பெண்கள், மண்ணைப் போலவே நெஞ்சுறுதி மிக்கவர்கள். குடும்ப மானத்தைக் காக்க தயங்காதவர்கள். பழிக்கும் அஞ்சும் குணம் படைத்தவர்கள். சகமனிதர்கள் மீது கரிசனம் உடையவர்கள். அதேசமயம், உறவுகளைப் பகடைக் காய்களாகத் தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளாதவர்கள், போலித்தனம் அற்றவர்கள், கற்பில் உறுதியும், துணிச்சலும், தனித்த ஆளுமையும் உடையவர்கள்.

    ஆர்.ச. தன் நாவலுக்கானப் பாத்திரங்களைக் கொங்கு மக்களின் வாழ்க்கையிலிருந்தே எடுத்துக் கொண்டிருக்கிறார். இப்பாத்திரங்கள் கற்பனை மாந்தர்கள் அல்லர். அச்சு அசலான உண்மை மாந்தர்கள்.வெளிநாட்டிலிருந்து இந்தியாவிந்கு பணி புரிய வந்த தாமஸ்மன்றோ தான் பார்த்த கொங்குப் பெண்களைப் பதிவு செய்திருக்கிறார்.

    கி.பி.1800ல் கொங்குநாட்டை ஆட்சிபுரிந்த தாமஸ் மன்றோ அவர்கள் கொங்குநாட்டுப் பெண்களைப் பற்றி இவ்வாறு வர்ணிக்கிறார். தமிழ்நாட்டுப் பெண், அதுவும் கொங்குநாட்டின் ஒரு பகுதியான சேலத்திலுள்ள ஓமலூரிலுள்ள ஒரு பெண்ணைப் பற்றிய நிகழ்ச்சியைக் குறித்துத் தன் தந்தைக்குக் கடிதம் எழுதுகிறார் மன்றோ (1796 மே,10).

    ‘. . . இந்தப் பகுதி மக்களின் வறுமைக்குக் காரணம் அரசாங்கம்தான். அவர்களின் சோம்பலோ, கொளுத்தும் வெயிலோ அல்ல. அவர்களிடையே பல சாதிப் பிரிவுகள் உள்ளன; வேலையில் ஈடுபடும் ஊக்கம், வெவ்வேறு சாதி மக்களிடம் வெவ்வேறு அளவில் உள்ளது; தீர்வையை நிர்ணயிக்கும்போது நிலத்தின் திறனையும் கணக்கில் கொள்ள வேண்டும். பிராமணர்கள் எல்லா வகையான விவசாய வேலைகளையும் செய்யலாகார். ஏர் உழுவதைத் தவிர; அவர்களுடைய பெண்கள் வயல் வேலைகளில் ஈடுபடுவதில்லை. எனவே அவர்களுக்குப் பாதியளவு அல்லது முக்கால்வாசித் தீர்வைதான்……………..‘சில சாதிகளைச் சார்ந்த பெண்கள், ஆண்கள் செய்யும் அனைத்து (விவசாய) வேலைகளையும் செய்கிறார்கள்; மற்ற சாதிப் பெண்கள் ஏர் உழுவதைத் தவிர பிற வேலைகளைச் செய்வார்கள்; வேறு சில சாதிப் பெண்கள் எந்த வகையான விவசாய வேலைகளிலும் ஈடுபடுவதில்லை.

    இதில் நல்லதொரு அம்சம் என்னவென்றால் ஆண்-பெண் என்று இருவகையினரும் ஊக்கமுடன் வேலை செய்யும் சாதியினர்தான் எண்ணிக்கையில் அதிகம். இந்த சாதியில் பெண்கள்தான் எல்லா நிர்வாகத்தையும் கவனித்துக் கொள்கின்றனர்; அவர்களின் உத்தரவுகளை ஆண்கள் மறுத்துச் சொல்வதில்லை. பெண்கள்தான் வாங்குவது, விற்பது, கடன் கொடுப்பது, கடன் வாங்குவது போன்ற சமாச்சாரங்களைக் கவனிக்கிறார்கள். தீர்வை சம்பந்தமாகக் கச்சேரிக்கு வரும் ஆண், வீட்டிலிருந்து கிளம்பும் முன், தன் மனைவியிடமிருந்து உத்தரவுகளை வாங்கிக் கொண்டுதான் வருகிறான். கச்சேரிக்கு வந்து, தனது முறையீட்டில் காரியம் ஆகவில்லை என்றால், அது எவ்வளவு சிறிய சங்கதியாக இருந்தாலும், வீட்டிற்கு வந்தபின் அவனுக்குக் ‘கச்சேரி’ இருக்கும்.

    ‘அடுத்த நாள் அந்தப் பெண் என்ன செய்கிறாள். ? கணவனை வீட்டில் இருக்கச் சொல்கிறாள்; சீற்றத்துடன் கச்சேரிக்குக் கிளம்புவாள் அங்கிருந்தே வருவாய்த் துறையின் அனைத்து அலுவலர்களையும் திட்டிக்கொண்டு வருவாள். கச்சேரிக்கு வந்ததும் ஒரு மணி நேரத்திற்கு நாடக பாணியில் ஏற்ற இறக்கத்துடன் பேச ஆரம்பிப்பாள். தன் புருஷன் மீது இந்த ‘ராஸ்கோல்’ ஆட்கள் அநியாயமாகத் தீர்வையை ஏற்றிவிட்டார்கள் என்று பேசுவாள். முடிவுரையாகச் சொல்லுவாள்: ‘மாடுங்க இல்லாம நான் ஏர் உழ முடியுமா? எப்படித் தங்கம் வாங்க முடியும்? இந்தப் புடவையை விற்றா வாங்க முடியும்?’- அரைகுறையாக உடுத்தியிருக்கும் அழுக்கடைந்த புடவையைச் சுட்டிக் காட்டுவாள்.

    ‘அவள் வேண்டுகோள் என்னவோ, அது நிறைவேறினால் முகத்தில் சிரிப்புடன் அங்கிருந்து கிளம்புவாள். இல்லாவிட்டால் அவள் குரல் ஓங்கி ஒலிக்கும். நீண்ட நாள் பழக்கத்தால், அந்தச் சமயங்களில் அவளுடைய குரல் ஆண் குரலைவிட வேகமாக ஒலிக்கும். கச்சேரியில் இருப்பவர்கள் கேலியாகச் சிரிப்பார்கள்.

    ‘வீட்டிற்கு வந்ததும் ராசியில்லாத கணவனைப் பார்ப்பாள். அவள் வாதம் சரியோ தப்போ, தன் ஆதங்கத்தைக் கொட்டுவாள். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம் – அன்றிரவு அவள் வழக்கம் போலத் தூங்குவாள். அடுத்த நாள் விடியற்காலையில் அவள் வீட்டுப்பக்கம் யாராவது போனால் அவளைக் காண முடியும். முன்தினம் எதுவும் நடக்காதது போல நுhல் நூற்றுக் கொண்டிருப்பாள்.

    நான் பார்க்கவில்லையானாலும், கேள்விப்பட்டிருக்கிறேன். பாதையில் சரியாக வழி புலப்படாத அந்த இருட்டு நேரத்தில் அவள் நூற்றுக் கொண்டிருப்பாள். இப்படிப்பட்ட விவசாயக்குடிப் பெண்கள்தான் இந்தியாவில் உற்பத்தியாகும் துணிகளுக்கு நூல் நூற்றுத் தருபவர்கள்.’”

    Share