என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 44

–சு. கோதண்டராமன்.

ரிஷிகள் வேண்டிய செல்வம்

atllUXQ

 

(இதுவரை வேதத்தில் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள மூன்று சொற்களான, தேவ, யக்ஞ, ருதம் ஆகியவற்றைப் பற்றிப் பார்த்தோம். இனி வேதத்தின் வேறு சில குறிப்பிடத் தகுந்த விஷயங்கள் பற்றிப் பார்க்கலாம்.)

ரிக் வேதத்தின் முதல் மந்திரம் அக்னியை வேண்டுவது. அதில் அக்னி செல்வம் தருபவராகப் போற்றப்படுகிறார். இதைத் தொடர்ந்து பல இடங்களில் அக்னியைச் செல்வத்தின் தலைவராகவும் செல்வம் தருபவராகவும் கூறுகிறது வேதம்.

அக்னி மட்டுமல்ல, வாயு, இந்திரன், அஸ்வினி தேவர்கள், சூரியன், உஷை ஆகிய எந்தத் தெய்வத்தை வேண்டினாலும் அவர்களிடம் “எங்களுக்குச் செல்வம் கொடு” என்ற கோரிக்கை முன் வைக்கப் படுகிறது.

இவ்வாறு நூற்றுக்கணக்கான இடங்களில் இந்தப் பிரார்த்தனை திரும்பத் திரும்ப வருவதைப் பார்க்கும் போது ரிஷிகள் செல்வத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களே என வியப்புத் தோன்றும். இது பற்றி ஆராய்வோம்.

செல்வம் என்பதற்கு அங்கு பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் – வஸு, ரயி, ரேக்ண, தனம், ராதஸ் முதலியவையாம். இவை அனைத்தும் ஒரு பொருட்சொற்கள்.

செல்வம் என்றால் எத்தகைய செல்வம்? அவர்கள் பிரார்த்தனையில் எங்களுக்கு நீண்ட ஆயுள் கொடு, மக்கட்பேறு கொடு, உணவு கொடு என்பதோடு கூட செல்வமும் கொடு என்று வேண்டுவதால் செல்வம் என்பது மேலே கண்டவை அல்லாத வேறு ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என அறிகிறோம்.

அது பணமா? அக்காலத்தில் பண்டமாற்று முறையே வழக்கில் இருந்ததால் பொருளாதாரப் பரிவர்த்தனைச் சாதனமாக தங்கமோ வெள்ளியோ பயன்படுத்தப்படவில்லை என்பதையும்  அறிகிறோம். அவர்கள் தங்கம் வெள்ளியை அறிந்திருந்தும் கூட எங்கும் தங்கம், வெள்ளி கொடு என்று வேண்டவில்லை.

தெய்வங்களைப் போற்றும்போது பொன் வண்ணமுடையவர் என்று போற்றுகின்றனரே அன்றி ஆடவரோ, பெண்டிரோ தங்க நகை அணிந்து மகிழ்ந்ததற்குச் சான்றான குறிப்புகளும் அங்கு இல்லை. தெய்வத்திடம் கேட்டுப் பெற்ற செல்வத்தை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்தார்கள் என்ற விவரங்களும் இல்லை.

எனவே அவர்கள் கோரிய செல்வம் என்பது வேறு ஏதோ ஒரு பொருளைக் குறிப்பதாக இருக்கவேண்டும் என்று தெரிகிறது. இன்னும் ஆராய்வோம்.

ரிஷிகள் வேண்டிய மற்ற பொருள்களான உணவு, நீண்ட ஆயுள், மக்கட் பேறு இவை உலக வாழ்வின் பௌதிகத் தேவைகளை நிறைவு செய்து சந்தோஷம் தருவன. செல்வம் என்பது ஆனந்தம் தருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் ஆனந்தம் சந்தோஷம் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டுமே தமிழில் மகிழ்ச்சி என்று மொழிபெயர்க்கப்பட்டாலும் இவற்றினிடையே நுட்பமான வேறுபாடு உண்டு. சந்தோஷம் என்பது திருப்தியடை என்ற பொருளுள்ள ‘துஷ்’ என்ற வேரிலிருந்து பிறந்தது. ஆனந்தம் என்பது மகிழ்ச்சி அடை எனப் பொருளுடைய ‘நந்த்’ என்ற தாதுவிலிருந்து தோன்றியது. நமக்கு ஒரு தேவை இருந்து அது நிறைவேறுவதால் ஏற்படும் திருப்திக்குப் பெயர் சந்தோஷம். தேவைகள் அற்ற நிலையில் உள்ளத்தில் தோன்றும் மகிழ்ச்சிக்குத்தான் ஆனந்தம் என்பது பெயர்.

உதாரணமாக, பசியினால் வருந்தும் ஒருவனுக்கு உணவு கிடைத்தால் அவனது தேவை நிறைவடைகிறது. அந்த திருப்தி உணர்வு சந்தோஷமாகும். பசி முதலான உடல் தேவைகள் தீர்ந்த குழந்தை தனக்குத் தானே பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் அடையும் உணர்வு ஆனந்தம். அவ்வாறே மனநலம் சரியில்லாத ஒருவன் எந்தக் காரணமுமின்றி சிரித்துக் கொள்கிறான். அதுவும் ஆனந்தமே. (இந்த இரண்டாவது உதாரணம் வியப்பூட்டலாம். ஆனால் ஆதி சங்கரர் பஜகோவிந்தம் என்னும் நூலில் பிரம்மத்தில் ஈடுபட்ட ஞானியின் சித்தம் அளவற்ற ஆனந்தம் அடைவதாகவும் குழந்தைகள் போலவும் பித்தர்கள் போலவும் ரமிப்பதாகவும் கூறுகிறார்.)

யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம் நந்ததி நந்ததி நந்தத்யேவ. 19

யோகீ யோக நியோஜித சித்தோ ரமதே பாலோன்மத்தமதேவ 22

கவிஞர்கள் இந்த ஆனந்தத்தைத்தான் பெரிதாக மதித்தார்கள். அன்றாட வயிற்றுப் பாட்டுக்குக் காணி நிலத்துக்கு மேல் ஆசைப்படாத பாரதி, அங்கே கத்தும் குயிலோசை சற்றே வந்து காதிற் பட வேண்டும் என்கிறார். கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலாவை உணர்ந்து இன்பம் காண்கிறார். பார்க்கும் மரங்களில், காக்கைச் சிறகினில் எல்லா இடங்களிலும் இறைவனைக் கண்டு ஆனந்தம் அடைகிறார்.

ஆங்கிலக் கவிஞர் வேர்ட்ஸ்வொர்த் தன் கவிதையில் குறிப்பிடுகிறார்.

I gazed—and gazed—but little thought

What wealth the show to me had brought:

நான் அந்த டாபோடில் மலர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அது எனக்கு எத்தகைய செல்வம் தந்தது என்பதை அப்பொழுது உணரவில்லை.   பின்னர் வீட்டில் தனிமையில் நாற்காலியில் சாய்ந்து அமைதியான மன நிலையில் இருந்தபோது அது என் உள்ளத்தை ஆனந்தத்தால் நிறைத்து மலர்களுடன் நடனமாடச் செய்தது என்று கூறுகிறார்.

நம்மைச் சுற்றிலும், இறைவனால் படைக்கப்பட்ட அழகான இயற்கைச் சூழல் அமைந்துள்ளது. இதைப் பார்த்து ஆனந்திக்கும் மனம் வேண்டும். ரசிக்கும் மனம் இல்லாவிட்டால் எந்தப் பொருளும் ஆனந்தம் தராது. அது மட்டும் இருந்துவிட்டால் எந்தப் பொருளிலும் அழகைப் பார்க்க முடியும். அத்தகைய மனம் தம்மிடம் என்றும் மாறுதலின்றி இருக்க வேண்டும் என்று ரிஷிகள் விரும்புகிறார்கள். அதைத்தான் அவர்கள் செல்வம் என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் என்றும் குறையாத இச்செல்வம் பிறரால் களவாடப்பட முடியாதது. இது ஒன்று இருந்து விட்டால் உலகத் தேவைகளில் ஒரு சில குறைந்திருந்தாலும் குறையாகத் தோன்றாது.

இதோ இந்தக் கவிதையைப் பாருங்கள். மதுவாதா ருதாயதே என்று தொடங்கும் இது ரிக் முதல் மண்டலம்  90 வது சூக்தத்தில் உள்ளது.

ருதத்தைப் பின்பற்றுபவனுக்குக் காற்று இனியது. நதிகள் இனிமையாக ஓடுகின்றன.

செடிகொடிகள் எங்களுக்கு இனியவையாக இருக்கட்டும்.

இரவும் பகலும் எங்களுக்கு இனியன. மண் இனியது. விண் இனியது.

சூரியன் இனியவன், பசுக்கள் இனியன.

இந்தக் கருத்தைத்தான் பாரதி தன் வசன கவிதையில் இப்படிப் பாடுகிறார்.

இவ்வுலகம் இனியது, இதிலுள்ள வான் இனிமையுடைத்து.

காற்றும் இனிது. தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது.

ஞாயிறு நன்று, திங்களும் நன்று.

வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.

மழை இனிது, மின்னல் இனிது, இடி இனிது.

கடல் இனிது, மலை இனிது, காடு இனிது.

ஆறுகள் இனியன.

சூரியன் தன் தெய்வீக வசுக்களுடன் தோன்றுகிறான் என்னும் போது அது இயற்கை எழிலைத்தான் குறிக்கிறது என அறிகிறோம். வைகறைப் பொழுதை வியந்து போற்றும் ரிக் 1-113 இன் மொழிபெயர்ப்பை முன்பு பார்த்தோம். அதில் ஒரு பகுதியை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவோம்.

உலகிற்கு ஒளிதரும் உஷையெனும் நங்கை

இனிய சொற்களின் எழில்மிகு தலைவி

பல நிறப் பாங்குடன் ஒளிர்வது கண்டோம்,

கதவினைத் திறந்து, காட்டினள் செல்வம்.

ஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்

எனக்கு முன்னர் எத்தனையோ மாந்தர்

எண்ணிலா விடியல் கண்டு களித்து

எங்கோ போயினர், இன்று அவர் இல்லை.

உஷையின் ஒளி கண்டு உள்ளம்    மகிழ்ந்திட

இன்று கிடைத்தது எமக்கொரு வாய்ப்பு.

புதிய மக்கள் நாளை வருவர்

விடியலின் எழிலை வியந்து போற்றுவர்.

பாரதியும் வேர்ட்ஸ்வொர்த்தும் மற்றும் உயர்ந்த கவிஞர்கள் பிறரும் எதைச் செல்வம் என்று கருதினரோ, அந்த இயற்கையின் எழில் வளத்தை ரசித்து, அதனால் அடையும் ஆனந்தத்தையே செல்வம் என்று ரிஷிகள் கருதினர் என்று அறிகிறோம். மழையைக் குறித்தும் புயற் காற்றைக் குறித்தும் பிற இயற்கைத் தோற்றங்களைக் குறித்தும் அவர்கள் பாடிய கணக்கற்ற பாடல்கள் இதை நமக்கு உணர்த்துகின்றன.

இந்த ரயி (செல்வம்)ஒருவருக்குக் கிடைக்கப் பெற்றால் அவருக்கு வாழ்க்கையாகிய போர்க் களத்தில் தோல்வி என்பதே இல்லை. அவருக்குப் பகைவர்கள் இல்லை.

            ஜயத்திற்கு மூலமாயிருப்பதும், பகைவர்களைத் தாழ்த்துவதுமான ரயியை எங்களுக்கு அளிக்கவும். குதிரை மீது செய்யப்படும் போரிலோ அல்லது கைகலந்து செய்யும் போரிலோ அந்தச் செல்வத்தால் நாங்கள் பகைவர்களை வெல்வோமாக. 1.8.1,2

இவ்வுலக வாழ்க்கை மட்டுமல்ல. வாழ்க்கையின் இறுதி லட்சியமாகிய ஒளியை அடையவும் இந்த  ரயி உதவும் என்பது இதை ஒளியை அறிய உதவும் செல்வம் (ஸ்வர்விதம் ரயிம்) 8.13.5 என்று குறிப்பிடுவதிலிருந்து தெரிகிறது.

Picture Source: http://viralscape.com/city-nature-cinemagraphs/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.