Blog
-

அரங்கம் -15.03.2020
1. ஹென்ரிக் இப்சன் குறித்த அறிமுகம் 2. அவரது படைப்புகள் குறித்த காணொளி 3. "A Doll's House" நாடகத்தின் சில காட்சிகள் திரையிடல் 4. கருத்து பரிமாறல்
-

காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை & அறிவியல் கல்லூரியில்
அண்ணாகண்ணன்
காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரா கலை & அறிவியல் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவைத் தொடக்க விழா & பயிலரங்கில், 16.03.2020 அன்று, நிறைவுப் பேருரை ஆற்றுகிறேன். வாய்ப்புள்ளோர் வருக.
-

சிலம்பொலி பரப்பிய செம்மல்!
-மேகலா இராமமூர்த்தி
”நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு” என்று சிலம்பின் பெருமையைப் புலப்படுத்தினார் மகாகவி பாரதி.
சிலப்பதிகாரத்தை நினைக்கும்போதே இரண்டு சான்றோர்களின் பெயர்களும் உடனே நம் நினைவுக்கு வரும். அவர்களில் ஒருவர், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள். மற்றொருவர், சிலம்பொலி சு. செல்லப்பன் அவர்கள். இவ்விருவரில் இரண்டாமவரான சிலம்பொலி செல்லப்பனாரின் வாழ்க்கையையும் தமிழுக்கு அவர் ஆற்றியிருக்கும் அரும்பணிகளையும் கருதுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
தம்முடைய 22ஆம் அகவை தொடங்கி தாம் மண்ணுலகை விட்டகன்ற 91ஆம் அகவை வரை தமிழுக்காகத் தளராமல் உழைத்தவர் செல்லப்பனார். நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையத்தில் 1928ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 24-ஆம் நாள் சுப்பராயன், பழனியம்மாள் இணையருக்கு மகனாய்ப் பிறந்தார் அவர். கணிதத்தில் பட்டம்பெற்றுக் கணித ஆசிரியராகத் தமது பணியைத் தொடங்கியவர், தமிழிலக்கியங்கள்மீது கொண்ட தணியாத காதலால், தமிழில் முனைவர்ப் பட்டம் பெற்றார்.
கவிதையைப் பற்றிக் குறிப்பிடும் ஆங்கிலக் கவிஞரான வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் , “Poetry is the spontaneous overflow of powerful feelings” என்பார். ”மடைதிறந்த வெள்ளமென உள்ளத்து உணர்வுகளைச் சொற்களில் பாய்ச்சுவதே கவிதை” என்று கவிதைக்கு வேர்ட்ஸ்வொர்த் வகுத்தளித்த இலக்கணத்தைத் தம் சொற்பொழிவுகளிலும் சாத்தியமாக்கிக் காட்டியவர் செல்லப்பனார்.
சிலப்பதிகாரம் எனும் தலைப்பில் 1953ஆம் ஆண்டு இராசிபுரம் இலக்கிய மன்ற விழாவில் செல்லப்பனார் ஆற்றிய பொழிவைக் கேட்டுப் பெரிதுவந்த சிறந்த தமிழறிஞரும் வழக்குரைஞரும் தம் பேச்சுத்திறத்தால் ’சொல்லின் செல்வர்’ எனும் பட்டம் பெற்றவருமான ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் ’சிலம்பொலி’ என்னும் சிறப்புப் பெயரை செல்லப்பனாருக்குச் சூட்டி மகிழ்ந்தார்.
சிலப்பதிகாரம் பற்றி முழுமையாய் ஆய்வுசெய்து ’சிலம்பொலி’ என்னும் தலைப்பில் 1975இல் ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டார் செல்லப்பனார்.
சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் இந்நூலுக்கு அளித்துள்ள முன்னுரையில்,
”கண்ணகி காப்பியம் தமிழினத்தின் தேசியச் சொத்து. அதை மக்கள் மத்தியில் பரப்ப அயராது பாடுபட்டுவரும் சிலம்பொலி செல்லப்பனாருக்கு என் வாழ்த்துகள். அன்பிலும் பண்பிலும் சிறந்தவராதலால் சிலம்பு பற்றிய இவரது பேச்சிலும் எழுத்திலும் அவை எதிரொலிக்கின்றன” என்று குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கின்றார்.
கலைஞர் கருணாநிதி அவர்கள் அளித்த பாராட்டுரையில்,
“அவர் இந்நூலை வெளியிட்ட பிறகு சிலம்பொலி செல்லப்பனாக ஆனவர் அல்லர்; அவர் சிலம்பொலி செல்லப்பனாகவே இருந்த காரணத்தால்தான் அவர் எழுதிய நூலுக்குச் சிலம்பொலி என்ற பெயர் வந்திருக்கிறது. இந்த நல்ல எழுத்தாளர், நல்ல ஆற்றலாளர், நல்ல தமிழ் வல்லுநர் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
இளங்கோ அடிகள் அருளிய சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும், சிலப்பதிகாரச் சிந்தனைகள், பெருங்குணத்துக் கண்ணகி ஆகியவை சிலம்பு குறித்துச் செல்லப்பனார் எழுதிய பிற நூல்களாகும்.
மணிமேகலை தெளிவுரை என்ற தலைப்பில் மணிமேகலைக் காப்பியம் முழுமைக்கும் அருமையானதொரு தெளிவுரையை எழுதி வெளியிட்டுள்ள செல்லப்பனார், நல்ல குறுந்தொகையில் நானிலம், மலர்நீட்டம் (திருக்குறள் ஆய்வுக்கட்டுரைகள்), காப்பியக் கம்பரும் புரட்சிக் கவிஞரும், பெருங்கதை ஆராய்ச்சி, நெஞ்சை அள்ளும் சீறா (நான்கு தொகுதிகள்), மூன்றும் நான்கும் (திரிகடுகம் , நான்மணிக்கடிகை தெளிவுரை) உள்ளிட்ட ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார்.
1990-ஆம் ஆண்டு வடசென்னைத் தமிழ் வளர்ச்சிப் பேரவையின் சார்பில் பத்துப்பாட்டு நூல்களையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் 18 கூட்டங்களில் தொடர் சொற்பொழிவுகளாக நிகழ்த்தியுள்ளார். இத்தொடர் சொற்பொழிவுகளிலிருந்து பத்துப்பாட்டு பற்றிய பேச்சுக்கள் தனியே தொகுக்கப்பட்டு, ‘சங்க இலக்கியத் தேன்’ என்ற தலைப்பில் மூன்று அரிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நூலுக்குப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் அளித்துள்ள ஆய்வுரையில்,
“இந்த நூலை முற்றும் படித்துச் சுவைத்த நான், சிலம்பொலியாரின் தேமதுர நயம் காட்டும் உரையை அவர் நிகழ்த்திக் கேட்பதுபோலவே உணர்ந்து மகிழ்ந்தேன். சுருங்கச் சொல்வதெனில், இவ்விரிவுரை ஒவ்வொன்றும், கொற்கை வெண்முத்துகளைத் தங்கத் தாம்பாளத்தில் கொட்டிவைத்துப் பரிசளித்தது போன்றும், இனிய மாதுளையின் செந்நிற மணிகளை வெள்ளித் தட்டில் நிரப்பி உண்ணத் தந்தது போன்றும் உளம் மகிழ்வித்தது.
இந்நூலைப் படித்தபோது, பல கல் தொலைவு பயணம் செய்து மேடையேறி உரையாற்ற முற்படும் புலவனுக்கு நறுமண முல்லையால் தொடுத்ததொரு மாலை அணிவித்தது போன்றும், கடுங்கோடையின் வெப்பத்தால் களைப்புற்ற ஒருவனுக்குக் குளிர் இளநீரில் நுங்கினைப் பெய்துவைத்துத் தேனும் கலந்து பருகிடத் தந்தது போன்றும் உணர்ந்தேன்; உவகையுற்றேன்.
சிலம்பொலி செல்லப்பன் சொலல்வல்லன்; சோர்விலன்; அஞ்சான் என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்.” என்று குறிப்பிட்டுச் சிலம்பொலி செல்லப்பனாரைப் பெரிதும் புகழ்கின்றார்.
சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமண்டபத்தில் மணிமேகலை என்ற தலைப்பில் பதினெட்டு பொழிவுகளைப் பதினெட்டு மாதங்கள் தொடர் சொற்பொழிவுகளாக நிகழ்த்தியிருக்கின்றார் செல்லப்பனார்.
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணி குறித்து, வடசென்னைத் தமிழ் வளர்ச்சிப் பேரவையில் ஓராண்டுக் காலம் பதினைந்து பொழிவுகள் நடாத்தியிருக்கின்றார்.
இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும், கந்தபுராணம் திருவிளையாடற்புராணம் போன்ற புராண நூல்களையுமே அறிஞர் பெருமக்கள் தொடர் பொழிவுகளாக நிகழ்த்திவந்த அன்றைய காலச்சூழலில், ஐம்பெருங்காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், கிறித்தவ இலக்கியமான தேம்பாவணி, இசுலாமிய இலக்கியமான சீறாப்புராணம், புலவர் குழந்தையின் இராவண காவியம், பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் போன்றவற்றையெல்லாம் தொடர்சொற்பொழிவுகளாகச் செல்லப்பனார் ஆற்றியிருப்பது, சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட அவருடைய இலக்கிய ஈடுபாட்டையும், மக்களுக்கு அதிகம் அறிமுகமில்லாத இலக்கியச் செல்வங்களை அவர்களிடம் கொண்டுசேர்ப்பதில் அவருக்கிருந்த அளவற்ற ஆர்வத்தையும் அங்கை நெல்லியெனப் புலப்படுத்துவன.
இவையல்லாது நூற்றுக்கணக்கான மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு பேருரையாற்றிய பெருந்தகையாளர் சிலம்பொலி செல்லப்பனார். சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு, கோவையில் நடைபெற்ற உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு ஆகிய மூன்று மாநாடுகளின் சிறப்பு மலர்களைத் தயாரிக்கும் பொறுப்பினை ஏற்று அப்பணிகளைச் செவ்வனே செய்து முடித்த செம்மல் அவர்.
பிற அறிஞர்களின் நூல்களுக்குச் சிலம்பொலியார் எழுதிய ஆய்வு அணிந்துரைகளின் எண்ணிக்கை மட்டுமே ஆயிரத்துக்கு மேற்பட்டதாகும். தமிழகத்தில் இவரிடம் அணிந்துரை வாங்காத நூலாசிரியர்களே மிகவும் குறைவு என்று சொல்லிவிடலாம்.
மன்னராட்சி காலத்தில் போர்க்களத்தில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாராட்டிப் பரணி பாடுவார்கள்.
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி (இலக்கண விளக்கம்: 839)அதுபோல் ஆயிரம் நூல்களுக்குமேல் அணிந்துரை வழங்கிச் சாதனை படைத்துள்ள செல்லப்பனார் மீதும் நாம் புதியதோர் பரணி பாடலாம்.
இவ் அணிந்துரைகள் ’சிலம்பொலியார் அணிந்துரைகள்’ எனும் பெயரில் ஆறு தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. செய்திக் கருவூலமாக, கருத்துக் களஞ்சியமாக இவை திகழ்கின்றன எனில் மிகையில்லை.
சான்றாக, குழந்தைக் கவிஞர் என்று போற்றப்பட்ட அழ. வள்ளியப்பா அவர்கள் எழுதிய ’சிரிக்கும் பூக்கள்’ எனும் குழந்தைகளுக்கான கவிதை நூலுக்கு செல்லப்பனார் எழுதிய அணிந்துரையின் ஒரு பகுதியினைக் காண்போம்.
”குழந்தை இலக்கியம் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புதுவரவு. அவ்வாறாயின், தமிழில் இதற்கு முன்னர்க் குழந்தை இலக்கியம் இருந்ததில்லையா? தொல்காப்பியம் ‘பிசி’ என்னும் ஓர் இலக்கிய வகையைக் குறிப்பிடுகிறது.
’பிசி’ என்பது விடுகதை. விடுகதை சிறுவர்களுக்குரியது. எனவே, சங்க காலத்திற்கு முன்பிருந்தே குழந்தைப் பாடல்கள் இருந்தன என்பர் ஆய்வாளர். விடுகதைகள் குழந்தைகட்கு விருப்பமூட்டுவன என்றாலும் அவை குழந்தைகட்கே உரியன என்று கூறமுடியாது.
கிபி 12-ஆம் நூற்றாண்டளவில் ஔவையார் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி என்ற நூல்களையும், அதிவீரராம பாண்டியர் வெற்றிவேற்கை எனும் நூலையும் பாடியுள்ளனர். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய உலகநாதர் உலகநீதியைப் பாடினார். இவை குழந்தைகட்குக் கற்பித்து வரப்படுகின்றன என்றாலும், இன்று நாம் கண்டுவரும் குழந்தை இலக்கிய வகையில் இவை அடங்குமெனக் கூறுதற்கில்லை.
குழந்தைகட்கே உரிய, குழந்தைகள் பாடியும் ஆடியும் பயன்கொள்ளத்தக்க கவிதைகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தாம் எழுந்தன. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்கள் கி.பி. 1901-இல் குழந்தைகட்கெனத் தனித்த கவிதைகளை எழுதினார். அவர் ஆசிரியராயிருந்தமையால், மேனாட்டில் இருந்ததுபோன்ற தனித்த குழந்தைக் கவிதைகள் தமிழில் இல்லையென்ற குறையை உணர்ந்து, அக்குறை நீங்கும்வண்ணம் அருமையான பாடல்களை இயற்றினார்.
இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்துதான் பாடநூல்கள் அல்லாத குழந்தைகட்கென்றே தனியாக எழுதப்பட்ட பாடல் நூல்கள் வெளிவரலாயின. இவ்வகையில் முன்னோடியாக விளங்கியவர் அழ. வள்ளியப்பா அவர்களே!
அவர் எழுதிய குழந்தைக் கவிதைகள் அடங்கிய ’மலரும் உள்ளம்’ முதற்றொகுதி 1954இல் வெளிவந்தது. 1961இல் ’மலரும் உள்ளம்’ இரண்டாந்தொகுதி வெளிவந்தது. இன்று நூற்றுக்கணக்கானோர் அவர் நடையைத் தம் நடையாகவும், அவர் உத்தியைத் தம் உத்தியாகவும் கைக்கொண்டு கவிதைகள் எழுதிவருகின்றனர்.
ஊரென்றால் ’உறையூர்’, பூவென்றால் ’தாமரை’ என்பதுபோல, குழந்தைக் கவிஞர் என்றாலே அஃது ’அழ. வள்ளியப்பா’வைக் குறிப்பதாகவே அமைந்துவிட்டது. கவிமணி குழந்தை இலக்கியத்திற்கு வித்திட்டார். ஆனால் முளைத்து வளர்ந்துள்ள குழந்தைக் கவிதையெனும் ஆலின் அடிமரமாகவும், ஆணிவேராகவும் இருப்பவர் அழ. வள்ளியப்பாவே ஆவார்.”
இவ்வாறு குழந்தை இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, அதில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பங்கு என்று ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையாக நீண்டு செல்கின்றது, மலரும் உள்ளம் நூலுக்குச் செல்லப்பனார் வழங்கியிருக்கும் அணிந்துரை.
இந்த அணிந்துரைத் தொகுதிகள், தமிழக அரசின் சிறந்த அணிந்துரை இலக்கிய நூல்களாகத் தெரிவு செய்யப்பட்டுப் பரிசு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பட்டங்கள் பல செல்லப்பனாரின் புலமைக்குச் சான்றாய் அவரை வந்தடைந்தன. செந்தமிழ் அருவி, செந்தமிழ்க் களஞ்சியம், குறள்நெறிக் காவலர், இலக்கியச் செல்வர், சிந்தனைச் செல்வர், தமிழ்நலக் காவலர் என்பன அவற்றில் சில. பாவேந்தர் விருது, கம்பர் விருது, கலைஞர் விருது, தமிழ் வாகைச்செம்மல் விருது, தமிழ்ச் சான்றோர் விருது என ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் அன்னாருக்கு வழங்கப்பட்டமையால் பெருமையுற்றன.
தமிழில் எந்தத் தலைப்பில் பேசச் சொன்னாலும் எவ்விதக் குறிப்புகளும் கையில் இல்லாமல், கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், நெடுநேரம் திறம்படப் பேசுவதில் வல்லவர் செல்லப்பனார். தமிழகத்தில் மட்டுமன்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியசு, ஐக்கிய அரபு நாடுகள் எனப் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்துத் தேமதுரத் தமிழோசையை உலகமெலாம் பரப்பி மகாகவி பாரதியின் கனவை நனவாக்கிய பெருமகனார் அவர்.
தமிழைப் பிழையின்றி எழுதவேண்டும் என்பதிலும் மிகுந்த ஆர்வமும் கவனமும் கொண்டவரான செல்லப்பனார், தினமணி நாளேட்டில் ஏதேனும் சொற்குற்றம் கண்டவிடத்தும், பொருட்குற்றம் கண்டவிடத்தும், நக்கீரராய் மாறி, தொலைபேசியில் அப்பத்திரிகையின் ஆசிரியர்களை அழைத்து, அதனைச் சுட்டிக்காட்டித் திருத்தும் மாண்பாளர் என்பதைத் தினமணி, அவரது மறைவையொட்டி வெளியிட்ட இரங்கற் கட்டுரையில், நன்றியோடு நினைவுகூர்ந்திருக்கின்றது.
சிலம்பைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பும் நோக்கத்துடன் ‘சிலப்பதிகார அறக்கட்டளை’ என்னும் அமைப்பை 2014-ஆம் ஆண்டு நிறுவினார் செல்லப்பனார். சிலப்பதிகார மாநாடுகள், கருத்தரங்குகள், கூட்டங்கள் முதலியவற்றை நடத்துவது, சிலப்பதிகாரத்தின் புகழைப் பரப்புவோர்க்கு ஆண்டுதோறும் ‘இளங்கோ விருது’ வழங்கிச் சிறப்பிப்பது போன்றவை இவ் அறக்கட்டளையின் முக்கியச் செயற்பாடுகள் ஆகும்.
தரமிகு பேச்சாலும் திறமிகு எழுத்தாலும் அன்னைத் தமிழுக்கு அணிசெய்த உயர்தமிழரான சிலம்பொலி செல்லப்பனாரையும் அவருடைய அருந்தமிழ்ப் பணிகளையும் என்றும் போற்றுதல் நம் கடன்.
*****
http://silambolichellappan.com/page4.php
https://ta.wikipedia.org/wiki/சிலம்பொலி_செல்லப்பன்
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/ 2019/apr/07/ இந்த-வாரம்-கலாரசிகன் -3128451.html
http://www.tamilvu.org/library/nationalized/pdf/82-a.zhavalliyappa/seerikkumpookkal.pdf
-

பசுமரத்தாணி
பாஸ்கர் சேஷாத்ரி
நான் கிட்டத்தட்ட ஆறு வயதில் அந்தப் பள்ளியில் சேர்ந்தேன். அறுபதுகளின் ஆரம்பத்தில் மயிலாப்பூரில் தொடக்கப் பள்ளிகள் பெரிதாக இல்லை. அப்போது கூட இந்த கான்வென்ட் மோகம் உண்டு. இருந்த சில பள்ளிகளில் இது தான் குறைவான கட்டணம். மாசம் பத்து ருபாய். அப்போதைய அதன் பெயர், மாண்டிசோரி ஸ்கூல். சோலையப்பன் தெரு பிரபலமாக இது ஒரு காரணம். அந்தக் காலத்திலேயே சறுக்கு மரம், சீசா போன்ற விளையாட்டு விஷயங்களும் உண்டு . இடமும் கொஞ்சம் பெரிது. நிறையக் கூரை வேய்ந்த இடம். கொஞ்சம் கொஞ்சமாய்ச் செலவு செய்து, நார்க்கூரை செய்தார்கள் . அப்போது அது தான் பிரபலம், குறைந்த கட்டணம் .
மிஸ் டீச்சர்களின் ஆதிக்கம் ஆரம்பித்த காலம். எந்த வசதியான குழந்தை கூட பயப்படும் இடம் ஸ்கூல் டீச்சர் தான்- எல்லோரையும் அங்கு அப்போது துரத்தியது ஆங்கில மோகம்தான் . மாண்டிசோரி என்றால் ஒரு கௌரவம். ஒரு அரை நிஜார். ஏதோ ஒரு சட்டை. என்னவோ ஒரு படிப்பு. வீட்டை விட்டுத் துரத்த, இந்தப் பள்ளி ஓர் உபாயம். படிப்பெல்லாம் ஒரு சாக்கு. இரு பாலர்க்கும் பொதுவான பள்ளி. அந்தப் பள்ளியின் மகிமை சில வருடங்களுக்குப் பின், நான் வேறு பள்ளியில் சேர்ந்த பின் தான் தெரிந்தது.
எல்லாம் விளையாட்டுக் காலங்கள். எப்படித்தான் இந்த விளையாட்டுகள் எல்லாம் ஒரு பொதுவான விஷயமாய் இருந்தன என்ற ஆச்சரியம் பல வருடங்களுக்குப் பின் வந்தது. சுதந்திர உலகம் எல்லோரையும் ஒரு சிருஷ்டிகர்த்தாவாக மாற்றி வருகிறது. இதில் பெரிதான இடம், பள்ளிகளுக்கு உண்டு. எந்த மக்கு மாணவனுக்கும் ஒரு பள்ளியின் நினைவுகள் இனிமை தான். எனக்கும்தான். ஒரு புகார் கிடையாது. ஒரு விவகாரம் கிடையாது. எல்லாம் இனிமையான நாட்கள்.
அஞ்சு வருஷ படிப்பு.பள்ளி மாறும்போது கூட வேதனை எதுவும் பற்றிக்கொள்ளவில்லை. ஆனால் நினைவுகள் பின்னாளில் தொற்றி அதற்கு உருவம் கொடுத்துச் சலனம் கொடுத்தது. சீருடை எல்லாம் பின்னால் தான் வந்தது. யாரையும் கூட்டிச் செல்ல எந்த வாகனமும் இல்லை . இரண்டு சைக்கிள் வந்தால் அதிகம் . பணக்காரக் குழந்தைகள் மிஞ்சிப் போனால் கை ரிக்க்ஷாவில் வரும்
வாழ்வில் எல்லாவற்றையும் கைகோர்த்து ரசித்த காலங்கள் அவை. முப்பது வருடங்களுக்குப் பின், குமுதம் பத்திரிகையில் பரிசு கிடைத்த என் கவிதைக்கு பின் புலம் இந்த நினைவுதான் .இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த பள்ளியை மூடப் போகிறார்கள் என்ற செய்தி அறிந்த போது கொஞ்சம் வயிறு பிசைந்தது. நேரில் போய்ப் பார்த்தேன் வகுப்பறைகள் கொஞ்சம் தான் மாறிப் போய் இருந்தன ..
.சரோஜாவும் ஆஷாவும் ராம்சாயும் பாச்சாவும் என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தார்கள். அந்தக் கண்களோடு வந்துவிட்டேன்.
—
-

அந்தக் குழந்தை
சு. திரிவேணி
கோவைவேலை நேரம் முடிந்த மாலை
சுமையற்ற பை, ஜன்னலோர இடமென
மகிழ்ச்சிகளின் அணிவகுப்பு!
நிர்மலமான விழிகளும்
நெகிழ்த்தும் புன்னகையுமாய்
ஈர்த்த அந்தக் குழந்தைக்கு
அதைப் போலவே குட்டியாய்
இருந்த என் பை பிடித்துப் போனது.
என் முகம் பார்த்து, விரல் தொட்டு,
கரம் பிடித்து எனப் பையை நோக்கிப்
பயணித்து வசப்படுத்திக் கொண்டது,
புதிதாய் முளைக்கும் பற்களின் குறுகுறுப்புக்குப்
பையை இரையாக்க முயன்றது.
கடித்துப் பிடித்துக் கொண்டு
குண்டுக் கைகளால் மத்தளம் தட்டியது.
ஒருமுறை தவறவிட்டு
வாங்கி விடுவேனோ என
ஐயத்துடன் முகம் பார்த்தது.
எடுத்து அதனிடமே கொடுத்ததும்
பரிசாய்ப் புன்னகை கிடைத்தது.
இறங்குமிடம் வந்ததும் –
சேயறியாமல் தாய் மூலம்
வந்தடைந்தது என் பை.
திரும்பிப் பார்த்தேன்-
பையை ஏக்கத்தோடு தேடியது குழந்தை.
மடியிலிருந்த பை கனக்கத் தொடங்கியிருந்தது! -

பழகத் தெரிய வேணும் – 7
நிர்மலா ராகவன்
இன்று இப்படி. அன்றோ!
இந்தியா சுதந்திரம் வாங்கியபோது என் சுதந்திரம் பறிபோயிற்று. என்னை ஆரம்பப்பள்ளியில் சேர்த்துவிட்டார்கள்.
மதராஸ், டி.நகரில் இருந்த ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி அது. தரையில் போட்டிருந்த மரப்பலகைமேல் சப்பணம் கட்டி உட்காருவோம். எதிரில் மேசையெல்லாம் கிடையாது. மடியில் சிலேட்டு இருக்கும். பலப்பம்தான் எழுதுகோல். ஆசிரியர் பார்க்காத சமயங்களில் திருட்டுத்தனமாக எச்சிலைத் தொட்டு அழிப்பதில் ஓர் ஆனந்தம்.
கணக்கு என்றால் மனக்கணக்குதான். வகுப்பில் எல்லாரையும் நிற்கவைத்து, ‘பதில் சொல்கிறவர்கள் மட்டும் உட்காரலாம்’ என்றதால், பல கைகள் ஒரே சமயத்தில் உயரும்.
ஐயோ, பையன்!
ஆறே வயதானாலும், பள்ளியில் ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்ளக்கூடாது என்ற கடுமையான உத்தரவு இருந்தது. அதனால் பயந்து, அதே பள்ளியில் படித்த அண்ணன்-தங்கையர்கூட ஒருவரையொருவர் அறியாததுபோல் நடப்பர்.
பையன் யாராவது அருகே வந்தால், பெண்கள் என்னமோ, பிசாசைக் கண்டு பயந்து ஓடுவதைப்போல் நடப்போம், ‘பாய்’ (BOY) என்று கூவியபடி. நான் கற்ற முதல் ஆங்கில வார்த்தை அதுதான் என்று நினைக்கிறேன். (பெண்களைப் பார்த்து ஆண்கள் ஓடவில்லையே, ஏன்?)
சிறு வயதிலிருந்தே இப்படிப் பிரித்து வைத்துவிட்டால், திருமணமானபின்னரும்கூட ஒரு பெண் கணவருடன் இயல்பாகப் பழக இயலாதுபோக நேரிடுகிறது.
சாயந்திர வேளைகளில் என் அண்ணனுடன் விளையாட எங்கள் வீட்டுக்கு வரும் பிற பையன்கள் தோட்டத்தில் ஓடிப் பிடித்து விளையாடும்போது, என்னை வருந்தி அழைப்பார்கள். அவர்களைவிட உருவத்தில் மிகச் சிறியவளாக இருந்த என்னை எளிதாகத் தோற்கடிக்கலாம் என்கின்ற அவர்களது திட்டம் புரியாது, நானும் மகிழ்ச்சியுடன் சேர்ந்துகொள்வேன்.
முதன்முறையாக வருபவனைப் பார்த்து, “உன் பேர் என்ன?” என்று மிரட்டலாகக் கேட்பேன். மரியாதையுடன் கைகளைக் கட்டிக்கொண்டு, ஆங்கிலத்தில் தந்தை பெயரின் முதல் எழுத்துடன் முழுப்பெயரையும் சொல்வான்.
மறுநாள் பள்ளியில் பார்க்க நேர்ந்தால், முன்பின் அறியாதவர்கள்போல் கடந்துவிடுவோம். மாலையில், மீண்டும் நண்பர்கள், சண்டை, அழுகை, அம்மாவிடம் முறையீடு. (`அழுகுண்ணி ஆட்டம் ஆடறான்!)
ஒரு முறை, மழையில் வெகுவாக நனைந்துவிட்ட பெண்ணின் சட்டையைக் கழற்றி விட்டாள் ஆசிரியை, காய்ச்சல் வந்துவிடப்போகிறதே என்ற கரிசனத்துடன். ஆண்கள் எதிரில் வெற்று மார்புடன் உட்கார நேர்ந்த அவமானம் தாங்காது, சிறுமி அன்று முழுவதும் கதறி அழுதாள்.
நான்காவது வகுப்பில் மேசை, நாற்காலி!
அது மட்டுமா?
எழுதுவதற்குப் பேனா! மிகப் பெருமையாக இருந்தது. இனி, எச்சிலைத் தொட்டு அழித்துவிட்டதைப் பார்த்துவிட்டு, ஆசிரியர் திட்டமாட்டார்.
பேனா என்றால், மரத்தாலான நீண்ட பிடியில் கூரான முனையுடன்கூடிய ஒரு உலோகம், மைக்கூடு. அவ்வளவுதான். அவ்வப்போது மைக்கூட்டில் பேனாவின் நுனியை விட்டு எழுத வேண்டும். காகிதத்தில் மை புள்ளியாக புள்ளியாக விழுந்து தொலைக்கும். எப்படிச் சரியாக எழுதுவது என்று பிடிபடுவதற்குள் இடைநிலைப்பள்ளியை அடைந்தேன்.
எட்டு வயதில் ஒரு கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு வாங்கினாலும் வாங்கினேன், `வருங்காலத்தில் எழுத்தாளராக வேண்டும், அப்போது என் பெயர் எல்லாருடைய கண்ணிலும் படுமே!’ என்ற அடக்கமுடியாத ஆசை எழுந்தது. (அடுத்த பத்தாண்டுகள், `உபயோகமா ஏதாவது பண்ணேன்!’ என்று அம்மா கெஞ்சியதைப் பொருட்படுத்தாது, கிறுக்கித் தள்ளினேன். யோசிக்கும்போது நன்றாக இருப்பதைப்போல் தோன்றும். எழுதியபின் எனக்கே சகிக்காது).
அடுத்து, பெங்களூர் கமலாபாய் பள்ளியில் ஆறாம் வகுப்பு. அங்கு மையை உள்ளே அடைத்திருக்கும் பேனாவை உபயோகிக்கவேண்டும். சற்று நிம்மதி. ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து பள்ளிவரை மைக்கூட்டை பத்திரமாக எடுத்துக்கொண்டு போக வேண்டியதில்லை.
ஒன்றன்பின் ஒன்றாக, உயர்ந்த ரகப் பேனாக்களாக அம்மா வாங்கித் தருவார்கள், மகள் ஆசையாக எழுதுகிறாளே என்று.
‘பன்மை ஏன்?’ என்று கேட்கிறீர்களா?
எனக்கிருந்த படபடப்பில், அடிக்கடி பேனா கீழே விழுந்து, கூர்முனை வளைந்து போய்விடும். அம்மாவிடம் கூறப் பயந்து, அதையே வைத்துக்கொண்டு எப்படியோ சமாளிப்பேன்.
‘ஒழுங்கீனம் பிடிச்ச பிள்ளை’ என்று ஆசிரியைகள் ஒருமொத்தமாகத் திட்டுவார்கள். (பல வருடங்கள் கழித்து, ‘நீ முன்னுக்கு வருவேன்னு அப்பவே தெரியும்,’ என்று கட்டி அணைத்தார்கள். திட்டி முன்னுக்குக் கொண்டுவர முயலும் கலாசாரம்!)
‘கையெழுத்து மோசம்!’ என்ற ஆசிரியரின் குறிப்பைப் பார்த்துவிட்டு, புதிய பேனா வாங்கித் தருவார்கள். (அதனால் கையெழுத்து அப்படியொன்றும் சிறந்துவிடவில்லை).
என் எண்ண ஓட்டத்திற்கு சிறு கையால் ஈடுகொடுக்க முடியவில்லை. அடித்து, அடித்து எழுதுவேன். பேனா என்ன பண்ணும், பாவம்!
புகுமுக வகுப்பில் புகுந்தேன், பெங்களூர் மவுண்ட் கார்மல் பெண்கள் கல்லூரியில்.
தமிழாசிரியை, “உங்கள் வகுப்பில் எல்லாருடைய கையெழுத்தும் மகா மோசம். இரட்டைக் கோடுகள் போட்டிருக்கும் காகிதத்தில் தினமும் ஒரு பக்கம் எழுதிக் கொண்டுவாருங்கள்,” என்று கட்டளையிட்டார்.
‘அவமானம்!’ என்று பல பெண்கள் அழுதனர். இரு மாணவிகள் மட்டும் தப்பித்தனர். அதில் நானும் ஒருத்தி.
முதலில் தமிழில் எழுதிப் பழகியதால், ஆங்கில எழுத்து அழகாக இல்லை என்று, பிற வகுப்புகளில் நிறைய திட்டு வாங்கினேன்.
கையெழுத்தைக் குறைகூறினார்களே! அதை எப்படி நல்லவிதமாக மாற்றிக்கொள்வது என்று சொல்லத் தெரியவேண்டாம்?
‘ஒரு பக்கமாவது அடித்துத் திருத்தாமல் எழுத வேண்டும்’ என்று உறுதி செய்துகொண்டபின், ஒழுங்காக எழுத முடிந்தது.
மலேசியாவில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தபோது, தங்கத்தினால் ஆன பேனா முனையைப் பயன்படுத்தினேன். காகிதத்தில் வழுக்கிக்கொண்டு போகும். ஆனால், அடிக்கடி மொக்கையாகிவிடும்.
‘கையெழுத்து மோசமாக இருந்தால், படைப்பும் அப்படித்தானே இருக்கும்!’ என்று பத்திரிகை ஆசிரியர் நிராகரித்துவிட்டால்? பேனாவின் நுனியை அவ்வப்போது மாற்ற வேண்டியிருந்தது.
மாற்றும்போது, ‘இது வேண்டுமா?’ என்று கடைக்காரர் வளைந்த நுனியைக் காட்டி விசாரிப்பார்.
‘என்ன விலை இருக்கும்?’ என்று கேட்டுவிட்டு, அலட்சியமாக மறுத்துவிடுவேன்.
என் எதிரிலேயே, பதினெட்டு காரட் தங்கத்தால் செய்யப்பட்ட முனையை குப்பைத்தொட்டியில் வீசிவிடுவார்.
மலேசியாவில் தங்கம் மிகுதியாகக் கிடைத்ததால், 1960, 1970-களில் அதற்கு மதிப்பு கிடையாது. அதன் விலை இப்படி ஏறும் என்று அன்று தெரியாமல் போய்விட்டதே!
பல வருடங்களுக்குப்பின் கணினி. (முதலிலேயே கண்டுபிடித்திருக்கக் கூடாதோ? நான் எத்தனையோ வசவுகளிலிருந்து தப்பித்திருக்கலாம்).
ஆரம்பத்தில் கற்பது கடினமாக இருந்தாலும், அடித்துத் திருத்தும் வேலையெல்லாம் இல்லாமல் இருப்பது பெரிய சௌகரியம். எங்கேயோ, மூன்றாம் பக்கத்தில் இருப்பதை முதலில் கொண்டு வந்து, எப்படி எப்படியோ புரட்டிப்போட்டு, கதையையோ, கட்டுரையையோ எனது திருப்திக்கேற்ப மாற்ற முடிகிறது.
இப்போதும், அவ்வப்போது பேனா பிடிக்கிறேன், கடைகண்ணியில் வாங்கவேண்டிய சாமான்களுக்கான பட்டியல் போடும்போது.
காசோலையில் கையெழுத்திடும்போது, `கிறுக்கலான என் கையெழுத்தை யாரால் காப்பி அடித்துவிட முடியும்!’ என்ற பெருமிதம் எழுகிறது.
‘காசு கொடுக்கமாட்டோம், கையெழுத்து நன்றாக இல்லை,’ என்று சொல்லிவிடுவார்களோ?
-

நெல்லைத் தமிழில் திருக்குறள்-124
நாங்குநேரி வாசஸ்ரீ
124. உறுப்புநலன் அழிதல்
குறள் 1231
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்இங்ஙன நம்மள உட்டுப்போட்டு தூரதொலைவு போயிட்டாகளேன்னு நேசம் வச்சவர நெனச்சி அழுதவளோட கண்ணு அழகுகெட்டு பூக்களுக்கு முன்ன வெக்கப்பட்டு கெடக்கதுங்க.
குறள் 1232
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்பசல படந்து கண்ணீரு உட்டு இருக்க கண்ணுங்க நேசம்வச்சவரு எங்கிட்ட பாசமா இல்லங்கத சொல்லிக்காட்டிப் போடும்.
குறள் 1233
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்கூடி இருந்த நேரம் சந்தோசத்துல பெருத்த என் தோளுங்க இப்பம் எளச்சி அவரு பிரிஞ்சதக் காட்டிக்குடுக்குதுங்க.
குறள் 1234
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்அவுக என்னயவுட்டு பிரிஞ்சதால பழைய அழகு கெட்டு வாடி இருக்க என் தோளுங்க இப்பம் வளவி கழண்டு விழுத அளவு மெலிஞ்சு போச்சுது.
குறள் 1235
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்வளவி கழண்டு பழைய அழகு கெட்டுநிக்க என் தோளுங்க அவரு என்னயப் பிரிஞ்ச கொடுமய ஊருக்கு சொல்லுதுங்க.
குறள் 1236
தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக்
கொடியார் எனக்கூறல் நொந்துஎன் தோள் மெலிஞ்சு வளவி கழண்டு விழுததக் கண்ட பொறத்தியார் அவரக் கொடியவருனு சொல்லுததக் கேக்க சங்கடமா இருக்கு.
குறள் 1237
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்துமனசே! வாடி வதங்கி இருக்க என் தோள் மெலிஞ்சு நான் படுத சங்கடத்த அவுகளுக்கு சொல்லி பெரும பட்டுக்கிடுவயோ?
குறள் 1238
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்இறுக அணைச்சிக்கிட்டிருக்க என் கைய பைய வெலக்குததுக்குள்ளார தங்க வளவி போட்டிருக்க அவ நெத்தியில பசலை வண்ணம் படர்ந்துபோச்சு.
குறள் 1239
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்இறுக அணைச்சு இருக்கையில இடையில குளுந்த காத்து(காற்று) உள்ளார நுழைஞ்சுச்சு. அதக்கூட பொறுக்க ஏலாம அவ கண்ணு பசல பூத்துப் போச்சு.
குறள் 1240
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டுபிரிஞ்ச சங்கடத்துல நெத்தியில பசலை பூத்ததப் பாத்து அவ கண்ணோட பசலையும் சங்கடப்பட்டுப் போச்சு.
-

வால்டன்
செல்வன்
1845ம் ஆண்டு….தத்துவஞானியும், எழுத்தாளருமான ஹென்றி டேவிட் தெரோ தன் சக எழுத்தாளர் ரால்ப் வால்டோ எமர்சனுக்கு சொந்தமான காட்டுப்பகுதி ஒன்றில் ஒரு பரிசோதனை மேற்கொண்டார்.
நல்ல வேலை, வருமானம் அனைத்தையும் விட்டுவிட்டு காட்டுபகுதிக்கு சென்று இரண்டு ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்தால் எப்படி இருக்கும்? அதையும் நகர்ப்புற வாழ்க்கையையும் ஒப்பிட்டால் என்ன தெரிந்து கொள்ளமுடியும்?
ஒரே ஒரு கோடரியை மட்டும் கடன்வாங்கிக்கொண்டு கையில் ஒரு பைசா இல்லாமல் காட்டுக்கு சென்ற தெரோ அங்கே சின்ன காட்டேஜ் ஒன்றை தானே கட்டினார். நாற்காலி, கட்டில் எல்லாம் அவரே மரத்தில் செதுக்கினார். கட்டிடம் கட்டிமுடிக்கும்வரை அவர் கொண்டுபோன புத்தகங்களை அவர் படிக்கவில்லை. அதன்பின் தான் கொண்டுபோன ஹோமரின் இலியாட் நூலை படித்தார். காட்டுபகுதியில் பீன்ஸ், உருளைக்கிழங்கை தானே பயிரிட்டார்.
அதன்பின் அன்றைய “நவீன (1845ம் ஆண்டு)” வாழ்க்கைமுறையை விமர்சித்து “புதிய பொருளாதார கொள்கை” ஒன்றை உருவாக்கினார்
உணவு, இருப்பிடம், எரிபொருள்…இதை தவிர மனிதனுக்கு வேறு எதுவும் அவசியமில்லை.
தேவைகளை மிக சுருக்கிகொண்டால் ஏராளமான நேரம் கிடைக்கும்.
மனிதனின் மிகப்பெரிய செல்வம் நேரம் தான் என தெரோ நம்பினார். பணத்தை அவர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரன், அவன் இறக்கும் தருவாயில் “உன்னிடம் இருக்கும் எல்லா பணத்தையும் கொடு. இன்னும் ஒரே ஒரு ஆண்டு கூடுதலாக வாழ முடியும்” என்றால் அந்த டீலை மறுக்கவா போகிறான்?
“என் தேவைகளை உணவு, இருப்பிடம், எரிபொருள் என மட்டுமே சுருக்கியதால் ஒரு வாரத்துக்கு தேவையான பணத்தை ஒரே நாளில் சம்பாதிக்கமுடிகிறது. மற்றவர்களுக்கு வாரம் இரு நாள் விடுமுறை. எனக்கு ஆறு நாள் விடுமுறை” என்கிறார்.
தெரோ விடுமுறை நாட்களில் காடுகளில் நடப்பார். அருகே இருக்கும் கிராமங்களுக்கு செல்வார். அவரை காணவரும் நண்பர்களிடம் உரையாடுவார். தப்பி ஓடும் அடிமைகளை ரயில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பிவைப்பார். வால்டன் குளத்தில் மீன்பிடிப்பார். நூல்களை படிப்பார்.
“இந்த அளவு மகிழ்ச்சியாக நான் என்றுமே இருந்ததில்லை. அறுபது ஏக்கர் நிலம், ஏகபட்ட குதிரைகள், மாடுகள் என வைத்து வாழும் விவசாயிகள் வாரம் ஏழு நாளும் உழைக்கிறார்கள். வாழ்நாள் முழுக்க வேலை செய்தே உழைத்து இறந்துவிடுகிறார்கள். அதற்கு பரிசாக அவர்களுக்கு கிடைப்பது நல்ல வேலைப்பாடு உள்ள வீடு, கட்டில், ஜன்னலில் திரைகள்..இவைதான். தன் வாழ்நாளை முழுக்க இதற்காக இழக்கிறோம் என அவர்கள் உனர்வதில்லை..”
“குதிரை வண்டி இருந்தால் நேரம் மிச்சமாகும். நான் நடந்துபோகிறேன். நேரம் கூடுதலாக பிடிக்கதான் செய்கிறது. ஆனால் ஒரு குதிரைவண்டி, குதிரைகள், தீனி..இதை எல்லாம் வாங்க ஒரு ஆண்டு வருமானத்தை இழக்கவேண்டும். பெரியவீடு, ஆடம்பரங்கள் எல்லாம் சம்பாதிக்க நம் வாழ்நாளில் விலைமதிப்பில்லாத ஆண்டுகளை இழந்துதான் பெறுகிறோம். காலத்தை கணக்குபோட்டால் இவை எல்லாம் மிகப்பெரிய இழப்புகள் தான்..”
1845 வாழ்க்கைமுறையையே இப்படி விமர்சித்தவர் இப்போது இருந்தால் என்ன சொல்லி இருப்பார் என யோசித்தால் சிரிப்புதான் வருகிறது.
நாம் வாங்கும் ஆடம்பரபொருள் எல்லாமே நம் வாழ்க்கையின் விலைமதிக்கமுடியாத ஆண்டுகளை இழந்து பெறப்படுபவைதான். அந்த பொருள்களால் நமக்கு கிடைக்கும் பலன்கள் நிச்சயம் நாம் இழக்கும் காலத்தை விட மதிப்பு குறைவானவையே.
வாரத்தில் ஆறுவிடுமுறைநாட்கள்-> அம்பானிக்கும், ஜெப் பிசோசுக்கும் இன்னும் கிடைக்காத ஆடம்பரம்தானே?
இரு ஆண்டுகள் காடுகளில் வசித்துவிட்டு நகர்ப்புறம் திரும்பி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்து பல நூல்களை எழுதி மறைந்தார் தெரோ. அவரது வனப்பகுதி அனுபவங்கள் வால்டன் எனும் நூலாக வெளிவந்தது. 19ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த இலக்கியங்களில் ஒன்று வால்டன்.
-

படக்கவிதைப் போட்டி – 249
அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
முகம்மது ரபி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (15.03.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
-

படக்கவிதைப் போட்டி 248-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
பரிதியால் சிவந்த செக்கர் வானத்தின் சீரிய கோலத்தைப் படம்பிடித்து வந்திருப்பவர் திருமிகு நித்தி ஆனந்த். இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு இராமலக்ஷ்மி. மங்கையர் இருவருக்கும் என் மனங்கனிந்த நன்றி!
முகிலூடே எட்டிப்பார்த்துப் பரிதியார் புன்னகை பூத்திருக்க, ஓடங்கள் மௌனமாய்ப் பார்த்திருக்க, காதலியாள் கரம்பற்ற வரம் கேட்கிறானோ இந்த வாலிபன்? கவிஞர்களிடம் கேட்டுத் தெளிவுபெறுவோம் வாருங்கள்!
*****
”கடமை முடித்துக் கதிரவன் விடைபெற, பேச்சிலே காதலர்கள் தமைமறந்து மூழ்கிட என்றும் தொடரும் பயணமிது” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.
தொடரும் பயணங்கள்…
இன்றைய கடமை முடிந்ததென
இனிமேல் ஓய்வெனக் கதிரவனும்
சென்று கொண்டே வான்வீதியில்
செம்மை காட்டினான் வனப்பாக,
என்றுமாய்ப் பேச்சிலே காதலர்கள்
ஏக்கமாய்ப் படகுகள் கரையினிலே,
என்றும் தொடரும் பயணமிவை
என்பதை மனதில் கொள்வாயே…!*****
”வறுமையே சீதனமாய்க் கொண்டு, நாடோடியாய்த் திரிந்தலையும் இல்லாதோரின் வாழ்வில் காரிருள் நீக்கிப் புது உதயம் தோன்றச் செய்வோம்” என்றுரைக்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.
புது உதயம்
காடுவெட்டிக் கழனியாக்கி
கதிர்நெல்லை விளைவித்தார்!
பட்டினியே உணவென்று வாழ்கின்றார்…பள்ளம் மேடு சீராக்கி
வீடுகட்டி வாழவைத்தார்!
நாடோடியாக நாளும் திரிந்தலைந்து நிற்கின்றார்…பாடுபட்டு,
நாளுமிங்கே கரஞ்சிவந்து வேலை செய்தும்
வறுமையதே சீதனமாய் வாழுகின்றார்…நிலையான வாழ்வு
நிரந்தரமாய் ஊதியம் என்றவரின்
வாழ்வினிலே காரிருளை நீக்கிக்
கரம் பற்றி மேலுயர்த்தி வாழவைக்கும்
புது உதயம் கண்டிடுவோம்!
புதியதோர் உலகம் செய்வோம்…*****
”கடல்தேடி ஓடும் நதியாய் இவன் மனம்தேடி வந்த இந்த வஞ்சி, வாழ்க்கையெனும் பாதையில் தொடர்ந்திட அவன் நீட்டிய உதவிக்கரம் பற்றிட முனைந்தாளோ?” என்று வினா எழுப்புகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.அலை கடல்
ஓடித் திரிந்த களைப்பில்
கரை ஒதுங்கிய கட்டுமரம்
கிழக்கில் இருந்து பகலெங்கும்
பயணம் செய்த அலுப்பில்
அந்தி சாய்ந்ததோ மேற்கில்
நிலவு உதிக்க நிழலும் மறைய
பகலை மெல்ல இரவு விழுங்கிட
நிறம் மாறியதே நீல வானம்
மாலை சுடும் முன்னே
மனதை புரிந்துகொள்ள
மாலை வரை பேசி நின்ற காதலர்கள்
கடற்கரையில்கூடு தேடித் திரும்பும் பறவைகளாய்
பிறந்த வீடு சென்று சேர்ந்திட
துவங்கியதே இவர்கள் பயணம்
அவன் பாதையைப் பின்தொடர்ந்த
அவள் கால்கள் இடறிட
உன்னைத் தாங்கி வழிநடத்திட
உதவிக்கரம் நீட்டினானோ?
துணையாய் நீ வருவாயா என
விழியாலே வினா எழுப்பி
உதவிக்கரம் நீட்டினானோ?மழை பொழிந்து வழிந்தோடும் நதி
கடல் தன்னைத் தேடியே
காதல் பொங்கி வழிந்தோட
கடல் தேடி ஓடும் நதியாய்
அவன் மனம் தேடி வந்த வஞ்சி இவள்
இரவு பகல் பாராமல்
வாழ்க்கை எனும் பாதையில்
என்றும் தொடர்ந்திட
உதவிக்கரம் நீட்டிய
கரங்களைப் பற்றிட முனைந்தாளோ?*****
இனிய இயற்கைக் காட்சியின் பின்னணியில், கரம்கோத்திட விழையும் இளம் உள்ளங்களை அழகாய்ப் பாட்டில் படம் பிடித்திருக்கும் கவிஞர்களைப் பாராட்டுகின்றேன்.
அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…
செந்தழலாய்ப் பகலவன்
தங்கநிறச் சந்திரன்
பாய்ந்தோடும் பரிகளாய்
வானத்து மேகங்கள்நெடுந்தூரக் கருங்கரை
அதைத் தாங்கும் மணல்தரை
ஓய்வெடுக்கும் தோணிகள்
இரவைத் தொடும் வானிலைஇவையெல்லாம் சாட்சி
என்னுடனே வா
என்கின்றானோ காதலன்?உயிரே உனக்குத்தான்
உன்னுடனே வருகின்றேன்
உலகாளும் உன்னதக் காவியம்
ஒருங்கிணைந்து படைத்திட
புகைப்படமே நீயும் சொல்
காட்சி புனைந்தது நீதானே?பகலவனும், முகிலினமும், அம்புலியும் சாட்சிகளாய்க் காட்சிதர என்னோடு வா என்றழைக்கும் காதலனையும், அவனோடு பயணிக்கப் புறப்படும் வஞ்சியையும் வாகாய்க் கண்முன் நிறுத்தியிருக்கும் புகைப்படமிது என்று பாராட்டும் திருமிகு. சுதா மாதவனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்து மகிழ்கின்றேன்.
-

எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் கணினித் தமிழ்க் கருத்தரங்கம்
அண்ணாகண்ணன்
சென்னை, எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில், 12.03.2020 அன்று கணினித் தமிழ்க் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில், தமிழிணையம் – தேவைகளும் வாய்ப்புகளும் என்ற தலைப்பில் நான் உரையாற்றுகிறேன். மேலும் பலரும் பங்கேற்கின்றனர். அழைப்பிதழ் காண்க, வாய்ப்புள்ளோர் வருக.
-

மன்னாரில் நாடாளுமன்றத் தேர்தல்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
மன்னார் மாவட்டச் சைவ மக்களுக்குச் சைவ வேட்பாளர் ஒருவர் தருக
1. நானாட்டான் பிரிவில் அருவி ஆற்றங்கரையில் பாழடைந்த சைவக் கோயிலுக்கு அருகில் சட்டத்தை மீறித் தூண் அமைத்து மரியாளுக்கு உருவச்சிலையை திடீரெனச் சாலையோரத்தில் உருவாக்கியுள்ளார்கள். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
2. திருக்கேதீச்சரக் கற் கோயிலை உடைத்து மன்னார்க் கோட்டையையும் ஊர்காவற்துறைக் கடல் கோட்டையையும் கட்டிய போர்த்துக்கேயர் காலம் தொடக்கம் நேற்று அருவி ஆற்றங் கரையில் மரியாள் சிலையை வைத்த காலம் வரை மன்னார் மாவட்டம் முழுவதையும் கத்தோலிக்க மயமாக்கும் முயற்சியில் வெற்றிபெற்றே வருகின்றனர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
3. திருக்கேதீச்சரம் கோயில் வாயிலில் மாந்தைச் சந்தியில் 1964 வைத்தியநாதன் – எமிலினியாசுப்பிள்ளை உடன்பாட்டை மீறி 2010 தொடக்கம் உலூர்தம்மாள் தேவாலயத்தைக் கட்டினர். சைவர்களின் மனத்தில் ஆறாப் புண் தந்ததே இந்த நிகழ்வு. சிங்களவர் ஒப்பந்தங்களை மீறுகிறார்கள் என ஆயர் இராயப்பு மதகுரு இம்மானுவேல் போன்றோர் செனீவா உள்ளிட்ட உலக அரங்குகளில் கூறுவர். மன்னாரில் ஆயரே உடன்பாடுகளை அப்பட்டமாக மீறுவர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
4. கட்டையடம்பன் அரசுப் பள்ளியில் கத்தோலிக்க அருள் நங்கை முதல்வராக இருந்து கொண்டு சைவப் பிள்ளைகள் நெற்றியில் நீறும் பொட்டும் அணியக்கூடாது பூ வைக்கக்கூடாது என்று அராஜகமாக ஆணையிட்டார். பின் கல்வி வலயத்தார் தலையிட்டனர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
5. மூன்றாம் பிட்டியில் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக உங்கள் ஆதரவுடன் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையை மறித்து முள்கம்பி வேலி அமைத்தார். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை. சைவ அன்பர் தலையிட்டு நான்கே நாள்களில் பாதையைத் திறந்தார்.
6. முழுக்க முழுக்கச் சைவர்கள் வாழும் வெள்ளாங்குளம் கிராமத்தில் தேவன்பிட்டிக் கத்தோலிக்கர் எட்டு அடி உயரச் சிலுவையை நிறுவினர். பின்னர் வெள்ளாங்குளம் வந்தனர், சைவக் கோயில்களைத் தாக்கினர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை. களத்துக்கு வந்தவர், சைவருக்கு ஆறுதல் கூறியவர் சைவ அன்பரும் தமிழகச் சைவ அன்பர்களுமே.
7. வண்ணான்குளம் கிராமத்தில் பெரும்பான்மையாகச் சைவர்கள் வாழும் அவ்வூரில் சைவர்கள் செல்லும் கோயில்களின் பெயர்ப் பலகையை அகற்றினர் கிறித்தவர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
8. சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அரச காணியில் எவ்வித உரிமமும் இன்றிக் கத்தோலிக்கக் கோயில் ஒன்றைப் பாதிரியார் கட்டியதும் அல்லாமல் அங்கு வாழ்கின்ற சைவர்களை மிரட்டுவதற்குக் கத்தோலிக்கர்களை அழைத்துச்சென்றாரே காணொளி ஆதாரம் உண்டே. சைவர்களைக்கு ஆறுதல் சொல்ல யார் வந்தார்கள்? சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
9. அரசின் நிதி பெற்று, எந்த அநுமதியும் பெறாமல் சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அந்தத் தேவாலயத்தையும் சைவர்களுக்காக ஒதுக்கிய நிலப் பகுதியையும் இணைத்து மதில் கட்டக் கத்தோலிக்கர் முயன்றபோது தடுக்கச் சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
10. ஆள்காட்டிவெளி, தள்ளாடி என சைவக் கிராமங்களில் பிள்ளையார் கோயில்களை உடைப்பதும், சைவர்கள் மீளக் கட்டியதை மீண்டும் உடைப்பதுமாக மதவெறியர் நல்லிணக்கத்தைக் குலைக்க முற்படுகையில் சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
11. சைவர்களின் நந்திக்கொடியைக் காலால் மிதித்தார்கள். மகாசிவராத்திரிக்கான வளைவை உடைத்தார்கள். வன்னித் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் கண்டிக்கவிலலை, நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கவில்லை. உடைத்த குண்டர்களுக்கு மறைமுகமாக அளித்த ஆதரவும் தமிழர் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர் அவர்களைப் பிணையில் எடுத்த சோக நிகழ்வும் மன்னார் மாவட்டச் சைவர்களை, உங்களுக்கு வாக்களித்த சைவர்களைத் துயரத்தில் சோகத்தில் துன்பத்தில் மீறாத அழுகையில் ஆழ்த்தியுள்ளது. சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
12. தலைமன்னாரில் சைவர்களின் எதிர்ப்பை மீறி சாலை வாயிலில் கத்தோலிக்க வளைவு கட்ட முயன்றார்கள். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை. வழக்கு நீதிமன்றத்தில்.
13. திருக்கேதீச்சர சைவச் சின்ன வளைவு ஏ32 வாயிலில் கிறித்தவ அடையாளச் சிலை ஒன்றை வைத்துள்ளார்கள். சைவர்களை அவமதிக்கிறார்கள். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
14. கற்கடந்த குளம் கற்குளம் எனப் பல ஊர்களில் சைவர்கள் கணிசமாக வாழ்ந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் நிதி பெற்று ஏ32 சந்திப்புச் சாலைகளில் கிறித்தவச் சின்ன வளைவுகள் கட்டி உள்ளார்களே. சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
15. செட்டியார்மகன், அருகிலுள்ள கிராமம். 100 சைவக் குடிகள். நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் துணைத்தலைவராக உள்ள மெதடிஸ்த திருச்சபையினர் 70 குடிகள் வரை மதம் மாற்றி உள்ளனர். செபக் கூடங்களை அமைத்தனர். சைவக் கோயில்களை இடித்தனர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
16. கத்தோலிக்கரும் முகமதியரும் மன்னார் மாவட்டச் சைவர்களைக் குறிவைத்து மதம் மாற்றுகிறார்கள். சைவர்கள் தமக்காகப் பேச, குரல் கொடுக்கத் தலைமை இன்றித் தவிக்கிறார்கள்.
17. வெற்றி பெற்றபின் உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மன்னார் மாவட்டச் சைவர்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இழைத்து வரும் கொடுமைகளை அநீதிகளை குற்றங்களை தீமைகளை சைவ வாக்காளர் இப்பொழுது அடுக்கடுக்காகச் சொல்கிறார்கள். என் செய்தோம் என் செய்தோம் என உங்களுக்கு வாக்களித்த தம் தவறை உணர்ந்து தலையில் அடித்து அழுகிறார்கள்.
18. மன்னார் மாவட்டச் சைவ மக்களுக்குத் தலைவராகச் சைவர் நலம் காக்கும் சைவ சமயத்தவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் சைவர்களுக்கு எதிரான இந்தக் கொடுமைகள் குறையும். சைவர்களின் எதிர்ப்புக் குரல் வலுவடையும்.
19. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மன்னாரைச் சேர்ந்த சைவர் நலம் பேணும் சைவ சமயத்தவரான கட்சி உறுப்பினர் ஒருவரை 2020 நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்துக. அவ்வாறு அமையாத பட்சத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளருக்கு வாக்களித்து என் செய்தோம் என் செய்தோம் என வாக்களித்த தம் தவறை உணர்ந்து தலையில் அடித்து அழுவோர் தமக்குத் தலைமை தாங்கித் தம் துயர் தீர்க்கும் மன்னார் மாவட்டச் சைவர் ஒருவருக்கே வாக்களிப்பர்
-

நெல்லைத் தமிழில் திருக்குறள்-123
நாங்குநேரி வாசஸ்ரீ
123. பொழுதுகண்டு இரங்கல்
குறள் 1221
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுதுபொழுதே! நீ சாயங்காலமா (மாலைப்பொழுது) இல்ல. நேசம் வச்சிருக்க பொம்பளப்பிள்ளைங்க உசிரக்குடிக்குத அந்திக் காலமா இருக்க.
குறள் 1222
புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் துணைமயங்கி நிக்க சாயங்காலமே (மாலைப் பொழுதே). நீயும் என்னயப் போல சங்கடப்படுதியோ. உன் தொணையும் என்னைய நேசிக்கவரு கணக்கா ஈவுஇரக்கங்கெட்டதோ.
குறள் 1223
பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்மொத(முன்பு) அவுக என் பக்கத்துல இருக்கையில பசல படர்ந்து இருந்த இந்த சாயங்காலப் பொழுது இப்பம் நான் வெசனப்பட்டு உசிர வெறுக்கது கணக்கா சங்கடத்த அதிகமா கொண்டுவருது.
குறள் 1224
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்என்னைய நேசிக்கவுக இல்லாத இந்நேரத்துல கொன்னுபோடுததுக்காவ வருத பகையாளி கணக்கா சாயங்காலப் பொழுது வருது.
குறள் 1225
காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகைகாலப் பொழுதுக்கு நான் செஞ்ச நன்மதான் என்ன? சாயங்காலத்துக்கு நான் செஞ்ச கெடுதி தான் என்ன?
குறள் 1226
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்சாயங்கால நேரம் இத்தன செரையக் குடுக்கும்னு என்னைய நேசிக்கவரு என்னையப் பிரிஞ்சுபோவுமுன்ன பக்கத்துல இருக்கையில நான் அறிஞ்சுக்கிடல.
குறள் 1227
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்நேசம் ங்குத இந்த நோய் காலையில மொட்டுவச்சி பகலில வளந்து சாயங்காலம் பூவா பூத்து நிக்கும்.
குறள் 1228
அழல்போலும் மாலைக்குக் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படைஇடையன் ஊதுத புல்லாங்குழல், தணலா சுடுத இந்த சாயங்கால நேரத்துக்கு தூதா மட்டும் இல்லாம என்னையக் கொல்ல வந்த படைக்கருவியோட ஓச கணக்காவும் ஒலிக்குது.
குறள் 1229
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்துபுத்திய மழுங்கடிக்க சாயங்காலப் பொழுது வருதப்போ இந்த ஊரும் புத்திகெட்டு என்னையப் பொல சங்கடத்தால வெசனப்படும்.
குறள் 1230
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயுமென் மாயா உயிர்பொருள் சம்பாரிக்க அவுக போனப்போ சாவாம நின்ன என் உசிரு மயக்குத இந்த சாயங்காலப் பொழுதுல மடிஞ்சு போவுது.
-

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-14
தி. இரா. மீனா
கோல சாந்தய்யா
பசு வளர்ப்பது இவரது காயகம். புகழ் பெற்ற வசனகாரராகப் போற்றப்படுகிறார். ”புண்ணியாரண்ய தகன பீமேஸ்வரலிங்கா” இவரது முத்திரையாகும். பக்தியின் தன்மை, குருவின் உயர்வு, முதலியவற்றை உள்ளடக்கியவை இவரது வசனங்கள். தன் காயகம் தொடர்பான சில வழக்குகளைப் பயன்படுத்தியுள்ளார். ”சென்னபசவபுராண”, “சூத்திரரத்னாகர” முதலான நூல்களில் இவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
1. “கோலும் ஓடும் ஏந்தி சிவலீலை செய்து
உணவின் ஆசைக்கு அலைவது சிறுவர் செயல்
அது சிவனின் நிலையன்று
வீண் பேச்சை விட்டு மந்திரத்தின் நிலையறிவாய்
புண்யாரண்யதகன பீமேஸ்வரலிங்க நிரங்கசங்கனே”2. “நீட்டல் மழித்தல் எதுவாக இருப்பினும்
சொல்லும் செயலும் சீர்பட்டிருந்தால் போதும்
அவனே பரஞ்சோதி குருவாவான்,நீயறிவாய்
புண்யாரண்யதகன பீமேஸ்வரலிங்க நிரங்கசங்கனே”3. “தூய்மை நீர் இருந்து என்ன பயன்
கொண்டுவர கலயமில்லாத போது?
வெற்று மனிதர் அறிவுரைகள் சொல்லி என்ன பயன்
தனக்கென அடையாளம் ஒன்று இல்லாத போது?
தன் எல்லையைத் தானறிந்து நடப்பது போல
உன்னையே நீயறிவாய்
புண்யாரண்யதகன பீமேஸ்வரலிங்க நிரங்கசங்கனே”4. “பக்தரானால் எந்தக் களங்கம் ஏற்பட்டாலும்
எண்ணங்கள் சுத்தமாக இருக்கவேண்டும்
பக்தனுக்கன்றி பிறருக்குத் துன்பங்கள் வருவதில்லை
வீரனுக்குத் தடையுண்டே தவிர முடவனுக்கு ஆயுதத்தின்
வலிமையான தாக்கமேது?
உன்னையறிந்தவன் தன்னைத் தானறிய வேண்டுமென்பதால்
உன்னையே நீயறிவாய்
புண்யாரண்யதகன பீமேஸ்வரலிங்க நிரங்கசங்கனே ”5. “செய்ததைச் சொல்வதெதற்கு? காத்துவிட்டுக் கொல்வதெதற்கு?
ஊன்றியதைப் பறிப்பதெதற்கு? கட்டியதை உடைப்பதெதற்கு?
செய்து செய்து மனம் வருந்தவோ
கொடுத்து கொடுத்து உறுதி குறையவோ வேண்டாம்
அச்செயலால் உன்னையே நீயறிவாய்
புண்யாரண்யதகன பீமேஸ்வரலிங்க நிரங்கசங்கனே ”கஜேஸ மசணய்யா
நாயகன் நாயகி பாவனை இவருடையதாகும்.இவர் மனைவி மசணம்மாவும் வசனக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்யாண் சரணர்களோடு அனுபவ மண்டபத்தில் பங்கேற்றவர். மனஹள்ளி கிராமத்தில் தங்கி அங்கேயே இலிங்கத்தில் ஐக்கியமானவர். அக்கிராமத்தில் இவர் பெயரில் ஒரு கோயிலிருப்பது குறிப்பிடத்தக்கது. “மகாலிங்க கஜேஸ்வரா” இவரது முத்திரையாகும்.
1. “அவனைப் பார்த்த பொழுதில்
திசைகளை மறந்தேன் எப்படியானது இது?
அவன் சொன்னதைக் கேட்க உடலெங்கும்
வியர்த்தது, இது எப்படி?
அவன் என் கை பற்றினான்
சேலையின் கொசுவம் எப்படித் தளர்ந்தது?
என் மகாலிங்க கஜேஸ்வரனை இன்று அணைக்க
நினைக்கையில் என்னையே மறந்ததெப்படி?”2. “என் கடைக்கண் சிவந்தது
தோள்கள் சோர்வாயின
பவளமாலை வெண்மை நிறமானது
முத்துமாலை என்னையெரித்தது
இன்று என் மகாலிங்க கஜேஸ்வரன்
புறத்தை விட்டு அகத்தில் சேர்ந்தானே”3. “விரும்பியவரைக் கொல்வதற்கு ஆய்தமெதற்கு?
உன்னைப் பிடிக்கவில்லை எனச் சொல்வது போதாதா?
அவருடனிருந்தால் ஆலங்கட்டி போலக் கரையலாமே
மணல் பொம்மையினடியில் நீர் ஊற்றியது போல
அவர் உடனிருந்தால் கரைந்து விடலாமே
மகாலிங்க கஜேஸ்வரனின் சரணர்களைப் பிரிந்ததால்
நெய்விட்டு அக்னியை அணைத்தது போலானேனே !”4. “மேல் குடியயைச் சேர்ந்தவனின் நிழல்
கீழ்க் குடியைச் சேர்ந்தவனில் குளத்தில் விழுந்தால்
அந்நிழல் கீழ்ச்சாதியாகுமோ?
உலக மனிதர்களோடு கூடிச் சரணர் நடனமாடினால்
தீட்டு வந்திடுமோ?சம்சாரிகளின் பேச்சை வேரோடு
நீக்குவான் மகாலிங்க கஜேஸ்வரன் “
கஜேஸமசணய்யாவின் புண்ணிய ஸ்திரி மசணம்மா
கஜேஸமசணய்யாவின் மனைவி இவர். பசவேசரின் கொள்கையில் கணவன், மனைவி இருவருக்குமே நிறைந்த ஈடுபாடுண்டு. தங்கள் ஊரான கர்ஜகியை விட்டு கல்யாண் வருகின்றனர். ”மசணய்யா பிரியகஜேஸ்வரா“ இவரது முத்திரையாகும்.
“பொன்னை மறந்து இலிங்கம் விரும்ப வேண்டுமென்பார்கள்
பொன்னும் இலிங்கமும் எதிரியா?
கன்னியை மறந்து இலிங்கம் விரும்ப வேண்டுமென்பார்கள்
கன்னியும் இலிங்கமும் எதிரியா?
மண்ணை மறந்து இலிங்கம் விரும்ப வேண்டுமென்பார்கள்
மண்ணும் இலிங்கமும் எதிரியா?
மெய்யை மறந்து இலிங்கம் விரும்ப வேண்டுமென்பார்கள்
மெய்யும் இலிங்கமும் எதிரியா?
புலன்களை மறந்து இலிங்கம் விரும்ப வேண்டுமென்பார்கள்
புலன்களும் இலிங்கமும் எதிரியா?
உலகத்தை மறந்து இலிங்கம் விரும்ப வேண்டுமென்பார்கள்
உலகமும் இலிங்கமும் எதிரியா?
கோபமடக்கினால் இலிங்கத்தைப் பார்க்கலாம்
அறிவால் அறியப்படுவது இன்பம்
மசண்ணய்யப் பிரிய கஜேஸ்வரனே”
[தொடரும்]



