படக்கவிதைப் போட்டி – 249

அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
முகம்மது ரபி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (15.03.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
உயர் துணை…
பிள்ளை யதற்குப் பாதுகாப்புப்
பெற்ற தாய்போல் வேறில்லை,
அள்ளிக் கொடுக்க இலாதபோதும்
அன்பது உண்டே அளவிலாதே,
கள்ளம் கபடம் தாய்மையிலிலை
காட்டு வழியிலும் பயமில்லை,
உள்ளம் நிறைந்த அன்போடே
உயர்ந்த துணையே தாய்தானே…!
செண்பக ஜெகதீசன்…
படக்கவிதை போட்டி 249
முழங்கையில் தளிர் மழலை
முன்னேற்றப் பாதைக் காணும்
வண்ண முக்காடிட்ட முகத்தழகி
பின்னோக்கிக் காணும் அவள் குழவி
எவரேனும் தொடர்கிறாரோ
என்றொருப் பார்வையா
பிற்காலம் எப்படியோ
என்கின்ற பிரம்மிப்பா
பொற்காலம் உனதுதான்
பொங்கி நகைப் புதுப் பொலிவே
கிஞ்சித்தும் தளராதே
எழும்பி நில் கடலலையே!!!
சுதா மாதவன்
நேர் கொண்ட பார்வை
அன்னையர்க் குலப் பெண் தெய்வமென
ஆலயந்தனிலே வைப்பதாய்ச் சொல்லிப்
புழக்கடைத் தனிலே பூட்டிடுவார்- பெண்ணைக்
கினற்றுத் தவளை ஆக்கிடுவார்!
முரட்டு உலகின்றுக் காப்பதாய்ச் சொல்லி
இருட்டு வாழ்க்கைத் தந்திடுவார் – மூடர்
குருட்டுத்தனம் பல செய்திடுவார் – அவற்றைப்
புனிதம் என்றே காட்டிடுவார்!
கைவளை அழகென்று சொல்லி – பெண்ணுக்குக்
கைவிலங்கிட்டே முடக்கிடுவார்
கொடியவர் பார்வைப் பழுதென்று கூறி
முக்காட்டிட்டு அவர் திறம் மூடிடுவார்!
தாயினத்தைத் துரத்தும் கயமைகளை – உன்
பார்வைத் தீயால் பொசுக்கிவிட
முண்டாசுக் கவிஞனின் வாரிசென
நேர் கொண்ட பார்வை காட்டிடுவாய்…
கொஞ்சி பேசி
அள்ளி அணைத்த
கரங்கள் யாவும்
தீயாய் பரவி வரும்
தோற்று நோய் வந்ததென்று
என்னை தீண்ட மறுத்ததே
வயிற்றில் சுமந்து
உயிர் தந்தவள்
அள்ளும் பகலும் போராடி
நோய் கொண்டு போக முயன்ற
எனதுயிரை மீட்டு தந்தவள்
தாய் என்னும் வரம் தந்த
தெய்வ குழந்தை நான் என்று
என்னை சுமக்க தயங்கவில்லையே
வேண்டி பெற்ற உறவு இது
இல்லை என்றாலும்
உயிர் உள்ளவரை என்றும் நம்மை
தொடர்ந்து வரும் உறவு இது
முகத்தை மூடியே நீ வந்து நின்றாலும்
கண்களை மூடி ஊரே சொல்லும்
முத்தாய் மூன்றெழுதில்
நீ “அம்மா” என்று