-மேகலா இராமமூர்த்தி

பரிதியால் சிவந்த செக்கர் வானத்தின் சீரிய கோலத்தைப் படம்பிடித்து வந்திருப்பவர் திருமிகு நித்தி ஆனந்த். இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு இராமலக்ஷ்மி. மங்கையர் இருவருக்கும் என் மனங்கனிந்த நன்றி!

முகிலூடே எட்டிப்பார்த்துப் பரிதியார் புன்னகை பூத்திருக்க, ஓடங்கள் மௌனமாய்ப் பார்த்திருக்க, காதலியாள் கரம்பற்ற வரம் கேட்கிறானோ இந்த வாலிபன்? கவிஞர்களிடம் கேட்டுத் தெளிவுபெறுவோம் வாருங்கள்!

*****

”கடமை முடித்துக் கதிரவன் விடைபெற, பேச்சிலே காதலர்கள் தமைமறந்து மூழ்கிட என்றும் தொடரும் பயணமிது” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

தொடரும் பயணங்கள்…

இன்றைய கடமை முடிந்ததென
இனிமேல் ஓய்வெனக் கதிரவனும்
சென்று கொண்டே வான்வீதியில்
செம்மை காட்டினான் வனப்பாக,
என்றுமாய்ப் பேச்சிலே காதலர்கள்
ஏக்கமாய்ப் படகுகள் கரையினிலே,
என்றும் தொடரும் பயணமிவை
என்பதை மனதில் கொள்வாயே…!

*****

”வறுமையே சீதனமாய்க் கொண்டு, நாடோடியாய்த் திரிந்தலையும் இல்லாதோரின் வாழ்வில் காரிருள் நீக்கிப் புது உதயம் தோன்றச் செய்வோம்” என்றுரைக்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

புது உதயம்

காடுவெட்டிக் கழனியாக்கி
கதிர்நெல்லை விளைவித்தார்!
பட்டினியே உணவென்று வாழ்கின்றார்…

பள்ளம் மேடு சீராக்கி
வீடுகட்டி வாழவைத்தார்!
நாடோடியாக நாளும் திரிந்தலைந்து நிற்கின்றார்…

பாடுபட்டு,
நாளுமிங்கே கரஞ்சிவந்து வேலை செய்தும்
வறுமையதே சீதனமாய் வாழுகின்றார்…

நிலையான வாழ்வு
நிரந்தரமாய் ஊதியம் என்றவரின்
வாழ்வினிலே காரிருளை நீக்கிக்
கரம் பற்றி மேலுயர்த்தி வாழவைக்கும்
புது உதயம் கண்டிடுவோம்!
புதியதோர் உலகம் செய்வோம்…

*****
”கடல்தேடி ஓடும் நதியாய் இவன் மனம்தேடி வந்த இந்த வஞ்சி, வாழ்க்கையெனும் பாதையில் தொடர்ந்திட அவன் நீட்டிய உதவிக்கரம் பற்றிட முனைந்தாளோ?” என்று வினா எழுப்புகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

அலை கடல்
ஓடித் திரிந்த களைப்பில்
கரை ஒதுங்கிய கட்டுமரம்
கிழக்கில் இருந்து பகலெங்கும்
பயணம் செய்த அலுப்பில்
அந்தி சாய்ந்ததோ மேற்கில்
நிலவு உதிக்க நிழலும் மறைய
பகலை மெல்ல இரவு விழுங்கிட
நிறம் மாறியதே நீல வானம்
மாலை சுடும் முன்னே
மனதை புரிந்துகொள்ள
மாலை வரை பேசி நின்ற காதலர்கள்
கடற்கரையில்

கூடு தேடித் திரும்பும் பறவைகளாய்
பிறந்த வீடு சென்று சேர்ந்திட
துவங்கியதே இவர்கள் பயணம்
அவன் பாதையைப் பின்தொடர்ந்த
அவள் கால்கள் இடறிட
உன்னைத் தாங்கி வழிநடத்திட
உதவிக்கரம் நீட்டினானோ?
துணையாய் நீ வருவாயா என
விழியாலே வினா எழுப்பி
உதவிக்கரம் நீட்டினானோ?

மழை பொழிந்து வழிந்தோடும் நதி
கடல் தன்னைத் தேடியே
காதல் பொங்கி வழிந்தோட
கடல் தேடி ஓடும் நதியாய்
அவன் மனம் தேடி வந்த வஞ்சி இவள்
இரவு பகல் பாராமல்
வாழ்க்கை எனும் பாதையில்
என்றும் தொடர்ந்திட
உதவிக்கரம் நீட்டிய
கரங்களைப் பற்றிட முனைந்தாளோ?

*****

இனிய இயற்கைக் காட்சியின் பின்னணியில், கரம்கோத்திட விழையும் இளம் உள்ளங்களை அழகாய்ப் பாட்டில் படம் பிடித்திருக்கும் கவிஞர்களைப் பாராட்டுகின்றேன்.

அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

செந்தழலாய்ப் பகலவன்
தங்கநிறச் சந்திரன்
பாய்ந்தோடும் பரிகளாய்
வானத்து மேகங்கள்

நெடுந்தூரக் கருங்கரை
அதைத் தாங்கும் மணல்தரை
ஓய்வெடுக்கும் தோணிகள்
இரவைத் தொடும் வானிலை

இவையெல்லாம் சாட்சி
என்னுடனே வா
என்கின்றானோ காதலன்?

உயிரே உனக்குத்தான்
உன்னுடனே வருகின்றேன்
உலகாளும் உன்னதக் காவியம்
ஒருங்கிணைந்து படைத்திட
புகைப்படமே நீயும் சொல்
காட்சி புனைந்தது நீதானே?

பகலவனும், முகிலினமும், அம்புலியும் சாட்சிகளாய்க் காட்சிதர என்னோடு வா என்றழைக்கும் காதலனையும், அவனோடு பயணிக்கப் புறப்படும் வஞ்சியையும் வாகாய்க் கண்முன் நிறுத்தியிருக்கும் புகைப்படமிது என்று பாராட்டும் திருமிகு. சுதா மாதவனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்து மகிழ்கின்றேன்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.