வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-14
தி. இரா. மீனா
கோல சாந்தய்யா
பசு வளர்ப்பது இவரது காயகம். புகழ் பெற்ற வசனகாரராகப் போற்றப்படுகிறார். ”புண்ணியாரண்ய தகன பீமேஸ்வரலிங்கா” இவரது முத்திரையாகும். பக்தியின் தன்மை, குருவின் உயர்வு, முதலியவற்றை உள்ளடக்கியவை இவரது வசனங்கள். தன் காயகம் தொடர்பான சில வழக்குகளைப் பயன்படுத்தியுள்ளார். ”சென்னபசவபுராண”, “சூத்திரரத்னாகர” முதலான நூல்களில் இவரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
1. “கோலும் ஓடும் ஏந்தி சிவலீலை செய்து
உணவின் ஆசைக்கு அலைவது சிறுவர் செயல்
அது சிவனின் நிலையன்று
வீண் பேச்சை விட்டு மந்திரத்தின் நிலையறிவாய்
புண்யாரண்யதகன பீமேஸ்வரலிங்க நிரங்கசங்கனே”
2. “நீட்டல் மழித்தல் எதுவாக இருப்பினும்
சொல்லும் செயலும் சீர்பட்டிருந்தால் போதும்
அவனே பரஞ்சோதி குருவாவான்,நீயறிவாய்
புண்யாரண்யதகன பீமேஸ்வரலிங்க நிரங்கசங்கனே”
3. “தூய்மை நீர் இருந்து என்ன பயன்
கொண்டுவர கலயமில்லாத போது?
வெற்று மனிதர் அறிவுரைகள் சொல்லி என்ன பயன்
தனக்கென அடையாளம் ஒன்று இல்லாத போது?
தன் எல்லையைத் தானறிந்து நடப்பது போல
உன்னையே நீயறிவாய்
புண்யாரண்யதகன பீமேஸ்வரலிங்க நிரங்கசங்கனே”
4. “பக்தரானால் எந்தக் களங்கம் ஏற்பட்டாலும்
எண்ணங்கள் சுத்தமாக இருக்கவேண்டும்
பக்தனுக்கன்றி பிறருக்குத் துன்பங்கள் வருவதில்லை
வீரனுக்குத் தடையுண்டே தவிர முடவனுக்கு ஆயுதத்தின்
வலிமையான தாக்கமேது?
உன்னையறிந்தவன் தன்னைத் தானறிய வேண்டுமென்பதால்
உன்னையே நீயறிவாய்
புண்யாரண்யதகன பீமேஸ்வரலிங்க நிரங்கசங்கனே ”
5. “செய்ததைச் சொல்வதெதற்கு? காத்துவிட்டுக் கொல்வதெதற்கு?
ஊன்றியதைப் பறிப்பதெதற்கு? கட்டியதை உடைப்பதெதற்கு?
செய்து செய்து மனம் வருந்தவோ
கொடுத்து கொடுத்து உறுதி குறையவோ வேண்டாம்
அச்செயலால் உன்னையே நீயறிவாய்
புண்யாரண்யதகன பீமேஸ்வரலிங்க நிரங்கசங்கனே ”
கஜேஸ மசணய்யா
நாயகன் நாயகி பாவனை இவருடையதாகும்.இவர் மனைவி மசணம்மாவும் வசனக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்யாண் சரணர்களோடு அனுபவ மண்டபத்தில் பங்கேற்றவர். மனஹள்ளி கிராமத்தில் தங்கி அங்கேயே இலிங்கத்தில் ஐக்கியமானவர். அக்கிராமத்தில் இவர் பெயரில் ஒரு கோயிலிருப்பது குறிப்பிடத்தக்கது. “மகாலிங்க கஜேஸ்வரா” இவரது முத்திரையாகும்.
1. “அவனைப் பார்த்த பொழுதில்
திசைகளை மறந்தேன் எப்படியானது இது?
அவன் சொன்னதைக் கேட்க உடலெங்கும்
வியர்த்தது, இது எப்படி?
அவன் என் கை பற்றினான்
சேலையின் கொசுவம் எப்படித் தளர்ந்தது?
என் மகாலிங்க கஜேஸ்வரனை இன்று அணைக்க
நினைக்கையில் என்னையே மறந்ததெப்படி?”
2. “என் கடைக்கண் சிவந்தது
தோள்கள் சோர்வாயின
பவளமாலை வெண்மை நிறமானது
முத்துமாலை என்னையெரித்தது
இன்று என் மகாலிங்க கஜேஸ்வரன்
புறத்தை விட்டு அகத்தில் சேர்ந்தானே”
3. “விரும்பியவரைக் கொல்வதற்கு ஆய்தமெதற்கு?
உன்னைப் பிடிக்கவில்லை எனச் சொல்வது போதாதா?
அவருடனிருந்தால் ஆலங்கட்டி போலக் கரையலாமே
மணல் பொம்மையினடியில் நீர் ஊற்றியது போல
அவர் உடனிருந்தால் கரைந்து விடலாமே
மகாலிங்க கஜேஸ்வரனின் சரணர்களைப் பிரிந்ததால்
நெய்விட்டு அக்னியை அணைத்தது போலானேனே !”
4. “மேல் குடியயைச் சேர்ந்தவனின் நிழல்
கீழ்க் குடியைச் சேர்ந்தவனில் குளத்தில் விழுந்தால்
அந்நிழல் கீழ்ச்சாதியாகுமோ?
உலக மனிதர்களோடு கூடிச் சரணர் நடனமாடினால்
தீட்டு வந்திடுமோ?சம்சாரிகளின் பேச்சை வேரோடு
நீக்குவான் மகாலிங்க கஜேஸ்வரன் “
கஜேஸமசணய்யாவின் புண்ணிய ஸ்திரி மசணம்மா
கஜேஸமசணய்யாவின் மனைவி இவர். பசவேசரின் கொள்கையில் கணவன், மனைவி இருவருக்குமே நிறைந்த ஈடுபாடுண்டு. தங்கள் ஊரான கர்ஜகியை விட்டு கல்யாண் வருகின்றனர். ”மசணய்யா பிரியகஜேஸ்வரா“ இவரது முத்திரையாகும்.
“பொன்னை மறந்து இலிங்கம் விரும்ப வேண்டுமென்பார்கள்
பொன்னும் இலிங்கமும் எதிரியா?
கன்னியை மறந்து இலிங்கம் விரும்ப வேண்டுமென்பார்கள்
கன்னியும் இலிங்கமும் எதிரியா?
மண்ணை மறந்து இலிங்கம் விரும்ப வேண்டுமென்பார்கள்
மண்ணும் இலிங்கமும் எதிரியா?
மெய்யை மறந்து இலிங்கம் விரும்ப வேண்டுமென்பார்கள்
மெய்யும் இலிங்கமும் எதிரியா?
புலன்களை மறந்து இலிங்கம் விரும்ப வேண்டுமென்பார்கள்
புலன்களும் இலிங்கமும் எதிரியா?
உலகத்தை மறந்து இலிங்கம் விரும்ப வேண்டுமென்பார்கள்
உலகமும் இலிங்கமும் எதிரியா?
கோபமடக்கினால் இலிங்கத்தைப் பார்க்கலாம்
அறிவால் அறியப்படுவது இன்பம்
மசண்ணய்யப் பிரிய கஜேஸ்வரனே”
[தொடரும்]
