நாங்குநேரி வாசஸ்ரீ

123. பொழுதுகண்டு இரங்கல்

குறள் 1221

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது

பொழுதே! நீ சாயங்காலமா (மாலைப்பொழுது)  இல்ல. நேசம் வச்சிருக்க பொம்பளப்பிள்ளைங்க உசிரக்குடிக்குத அந்திக் காலமா இருக்க.

குறள் 1222

புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை

மயங்கி நிக்க சாயங்காலமே (மாலைப் பொழுதே). நீயும் என்னயப் போல சங்கடப்படுதியோ. உன் தொணையும் என்னைய நேசிக்கவரு கணக்கா ஈவுஇரக்கங்கெட்டதோ.

குறள் 1223

பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்

மொத(முன்பு) அவுக என் பக்கத்துல இருக்கையில பசல படர்ந்து இருந்த இந்த சாயங்காலப் பொழுது இப்பம் நான் வெசனப்பட்டு உசிர வெறுக்கது கணக்கா சங்கடத்த அதிகமா கொண்டுவருது.

குறள் 1224

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்

என்னைய நேசிக்கவுக இல்லாத இந்நேரத்துல கொன்னுபோடுததுக்காவ வருத பகையாளி கணக்கா சாயங்காலப் பொழுது வருது.

குறள் 1225

காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை

காலப் பொழுதுக்கு நான் செஞ்ச நன்மதான் என்ன? சாயங்காலத்துக்கு நான் செஞ்ச கெடுதி தான் என்ன?

குறள் 1226

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்

சாயங்கால நேரம் இத்தன செரையக் குடுக்கும்னு என்னைய நேசிக்கவரு என்னையப் பிரிஞ்சுபோவுமுன்ன பக்கத்துல இருக்கையில நான் அறிஞ்சுக்கிடல.

குறள் 1227

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்

நேசம் ங்குத இந்த நோய் காலையில மொட்டுவச்சி பகலில வளந்து சாயங்காலம் பூவா பூத்து நிக்கும்.

குறள் 1228

அழல்போலும் மாலைக்குக் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை

இடையன் ஊதுத புல்லாங்குழல், தணலா சுடுத இந்த சாயங்கால நேரத்துக்கு தூதா மட்டும் இல்லாம என்னையக் கொல்ல வந்த படைக்கருவியோட  ஓச கணக்காவும் ஒலிக்குது.

குறள் 1229

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து

புத்திய மழுங்கடிக்க சாயங்காலப் பொழுது வருதப்போ இந்த ஊரும் புத்திகெட்டு என்னையப் பொல சங்கடத்தால வெசனப்படும்.

குறள் 1230

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயுமென் மாயா உயிர்

பொருள் சம்பாரிக்க அவுக போனப்போ சாவாம நின்ன என் உசிரு மயக்குத இந்த சாயங்காலப் பொழுதுல மடிஞ்சு போவுது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *