Blog

  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (25)

    பவள சங்கரி

    முழுமையாக அந்த நொடியில் வாழுங்கள்!!

    “அந்த நொடியில் மகிழ்ச்சியாக இருங்கள், அது போதும். நமக்குத் தேவையானதெல்லாம் அந்த ஒவ்வொரு நொடி மட்டும்தான், அதற்கு மேல் இல்லை”

    அன்னை தெரசா

    images 5முதல் முறையாக என் அமெரிக்கப் பயணம். நடு இரவில் வீடு வந்து சேருகிறோம். நடுங்கச் செய்யும் கடுமையான குளிர். கும்மிருட்டு. இலையுதிர் காலப்பருவம். கம்பளிக்குள் நுழைந்துகொண்டு சுருண்டு விட்டாலும், காலையில் எழுந்து வெளியே வந்து பார்த்தபோது என் கண்களையே நம்ப முடியாத அளவிற்கு திரும்பிய புறமெல்லாம் தரை முழுவதும் செவ்வாடை போர்த்தது போன்ற அழகிய வண்ண இலைகள். நிமிர்ந்து பார்த்தால் மரங்களிலும் அதே அழகுக் காட்சி. எதிர்பார்க்காத இந்த அழகின் உச்சத்தில் அசந்துபோய் நின்றிருந்தேன். நடைபாதை முழுவதும் பட்டுக்கம்பளம் விரித்தது போன்று மெத்தென்ற இலைகளின் குவிப்பு. ஏதோ புதியதோர் உலகில் நுழைந்துவிட்டது போன்றதொரு பரபரப்பு. உலகமே மொத்தமாக உயிருடன் விழித்துக்கொண்டது போல ஒரு தோற்றம். என் மன உணர்வுகள் அத்தனையும் ஒருசேர விழிப்புணர்வு பெற்றிருந்தது. சூழ்நிலைகளைப் பற்றிய தெளிவான விழிப்புடன் இருந்தது மனது – நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமாக பாதிக்கக்கூடிய நிகழ்வுகளை மன நிறைவுடன் எதிர்கொள்வதற்கான பயிற்சியும் இதனை ஒத்ததுதான். ஏதோ ஒரு வகையில் மறைந்திருக்கும் விரும்பத்தகாத எண்ணங்கள் அல்லது அச்சப்படக்கூடியதோ, வெட்கப்படக்கூடியதோ, சங்கடப்படச்செய்வதோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ, சமாளிக்கவோ முடியாமல் போகக்கூடியதோ போன்ற சந்தர்ப்பங்களில், முழுமையான விழிப்புணர்வுடன் செயல்படுவதால் அது நம்மை அதன் விளிம்பில் கொண்டு நிறுத்திவிடும் என்றாலும் அந்த மாற்றம் நம்மை பயமுறுத்தவோ, சிரமப்படுத்தவோ அல்லது வேதனைப்படுத்தக்கூடிய வகையிலோ இல்லாமல், அந்தச் சூழலின் நிதர்சனத்தை யதார்த்தமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இலகுவாக்கிவிடும். முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் மனம் சம்மதிக்கும். இதனால் அதற்கான தீர்வும் தெளிவாகிவிடும். சுருங்கச் சொன்னால் அது சுகமான அனுபவமோ அல்லது சுமையான அனுபவமோ இரண்டையும் ஒன்று போல உணரும் உன்னதமான ஞானம் பெறுவோம்!

    build-success-from-scratch

    குறிப்பிட்ட அந்தச் சூழலின் முழுமையான ஆக்கிரமிப்பு, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியது. இது ஆழ்ந்த நித்திரையிலிருந்து சட்டென விழிக்கும் நிலை அல்லது வெகு நாட்களாக இருண்டு கிடக்கும் ஒரு பகுதியில் பளிச்சென்று வெளிச்சம் தோன்றுவது போல்தான். நம்மைச் சுற்றி எந்த மாற்றமும் நிகழவில்லை. ஆனால் மாற்றம் நிகழ்ந்ததெல்லாம் நம் மனதிற்குள்தான். அமைதியை நோக்கிய நம்முடைய உள்முகப் பயணம் மூலமாக சூழ்நிலைகளை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வல்லமை பெறுகிறோம். நம் பிரச்சனைகளைத் தள்ளி நின்று பார்த்து தீர்வு சொல்ல விழைகிறோம். முழுமையான விழிப்புணர்வுடன் தெளிவான சிந்தையும் வசப்படுகிறது. அதனால் ஏற்கனவே மறைந்திருந்த சில உண்மைகள் அப்பட்டமாக வெளியில் தெரிகிறது. இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு மனத்தெளிவு ஏற்படுகிறது. சாதாரண விசயங்களில்கூட அதிக நாட்டம் ஏற்படுவதைக் காண முடியும். இயற்கை எத்தனை அதிசயமும் அழகும் நிறைந்தது ! நம் சக மனிதர்களையும் இதே கண்ணோட்டத்தில் பார்க்க முடியும். அறியாமையையும், அழகையையும் சேர்த்தே அவர்களை ஒன்றுபோல நேசிக்க முடியும். தேவையில்லாத ஆய்வு செய்வதைவிட அவரவர்கள் இருக்கும் நிலையில் அப்படியே ஏற்றுக்கொள்ளச் செய்யும். எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வெளிப்படையான அன்பைச் செலுத்த முற்படும்போது நல்ல உறவுகள் மேம்படும்.

    மனக்கட்டுப்பாடு என்பதன் மூலம், மன அழுத்தம் ஏற்படுத்தக்கூடிய எந்த ஒரு பெரிய பிரச்சனையையும் சமாளிக்கும் சக்தி பிறக்கும். அதாவது வேதனைப்படுத்தக்கூடிய அந்த குறிப்பிட்ட எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் அதிகப்படியான முக்கியத்துவம் பெறாமல், நாம் அதற்கான எதிர்விளைவுகளை ஏற்படுத்தாமல், தெளிவான, பக்குவப்பட்ட பார்வையை ஏற்படுத்தும். உதாரணமாக நாம் ஒரு நாளைக்கு 24 மணி நேரங்களும் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் சுவாசிக்கிறோம் என்பதை உணராமலே தானாக அது நடக்கிறது. ஆனால் பரீட்சார்த்தமாக ஒரு சில நிமிடங்கள் மூச்சு உள்வாங்குவதிலும், வெளிவிடுவதிலும் ஆழந்த கவனம் செலுத்த ஆரம்பித்தால் அது நமக்கு மிகவும் ஒரு சிரமமான காரியமாகத் தெரியும். இப்படித்தான் தேவையில்லாமல் கவனம் செலுத்தும் நம்முடைய சில பிரச்சனைகளும். ஒதுக்க வேண்டியதை ஒதுக்கிவிட்டு, தேவையானதில் மட்டும் கவனம் செலுத்தும் கலையை பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னப்பறவை போல வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். நம் துன்பங்களை மனக்கட்டுப்பாடுடன் எதிர்கொள்ள ஆரம்பித்தால் அது நம் இருதயத்தை விசாலமாக்கி ஓய்விற்கான இடத்தையும் கொடுக்கும். நம் அச்சத்தையும், ஆவேசத்தையும் விட்டொழித்து, அமைதியான, யதார்த்தமான கோணத்தில் எதிர்கொள்ள ஆரம்பித்தால் வலியும், வேதனையும் குறைந்து ‘இதுவும் கடந்து போகும்’ என்ற உண்மையை உணரச் செய்யும்.

    வாழ்க்கையில் நல்ல நட்புகளும், உறவுகளும் மட்டுமே நம்மை உற்சாகமாக இருக்கச் செய்யும் மந்திரக்கோல்கள். அன்பும், பரிவும், பாசமும் நேர்மையான முறையில் பகிர்ந்து கொள்ளப்பட்டால், நட்பு மற்றும் உறவுகளுடன் வாழ்க்கைப் பயணம் இனிதாக அமையும். ஓக் மேண்டினோ கூறுவது போல,

    “அடுத்தவர்களை, இன்று அர்த்த சாமத்திற்குள் அவர்கள் இறந்து விடப்போகிறார்கள் என்பதுபோல நடத்துங்கள். உங்களுடைய முழுமையான அரவணைப்பையும், கருணையையும் மற்றும் புரிதல் என அனைத்தையும் ஒன்று திரட்டி, எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் அவருக்குச் செலுத்துங்கள். உங்களுடைய வாழ்க்கை திரும்பவும் அதே பழைய வாழ்க்கையைப் போன்று நிச்சயம் இருக்காது”

    மற்றவர்களிடம் கோபத்தில் நிலைத்திருப்பதோ, வெறுப்பு அல்லது சீற்றம் கொள்வதற்குமான முக்கிய காரணம் நம்மால் பெருந்தன்மையுடன், மன்னிக்கும் மனப்பக்குவமும் இல்லாமல் போய்விடுகிறது என்பதுதான். நிலையில்லாத இந்த வாழ்க்கையில், அவர்களோ நாமோ எந்த நேரத்திலும், அன்று இரவேகூட இறந்து போகலாம் என்பதை நினைக்கத் தவறிவிடுகிறோம். அடுத்தவர் மீது செலுத்தும் கோபமும், வெறுப்பும் நமக்கே சுமையாகி நம்மை வேதனைப்படச் செய்யும் என்பதே சத்தியம். அதை வெளிப்படுத்த சரியான தருணம் பார்த்துக்கொண்டு அலைந்திருக்க வேண்டிய சூழலில் நம்முடைய கடமைகளும் பாதிக்கப்படலாம். நமக்கே இது பெரும்பாரமாகிப் போய்விடும். ஒவ்வொரு நாளும் இரவு உறங்கச் செல்லும்முன் எவர் மீதும் கோபம், வெறுப்பு, பொறாமை, காழ்ப்புணர்ச்சி என எதுவும் நம் மனதில் தேங்கி, அதை சாக்கடையாக்கி அசுத்தப்படுத்தாமல் இருக்கிறது என்ற உறுதிப்பாடு கொள்ள வேண்டியது அவசியம். அதுவே அடுத்த நாள் சுத்தமான மன நிலையுடன், உற்சாகமாக நம்மை விழித்தெழச் செய்யும் என்பதே சத்தியம்.

    அதே சமயம், அடுத்தவருடைய உணர்வுப்பூர்வமான மிரட்டல்களுக்கும், கோபம் மற்றும் சுயநலப்போக்கின், அர்த்தமற்ற வெளிப்பாடுகளுக்கும் அடி பணிந்து விடாமல், அடுத்தவரை திருப்தி படுத்துவதற்காக நம் கடமையைத் தவறவிடுதலாலும் நிம்மதி இழக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

    இறுதியாக, நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது. அது நம்மை என்றும் வழி நடத்தும் என்ற பூரண நம்பிக்கையோடு நம் பயணத்தைத் தொடருவோமாக! தன் குஞ்சை சிறகினுள் பொத்தி வைத்துக் கொண்டு பறந்து செல்லும் கழுகு உயரமாகப் பறக்கும் வேளையில், கூர்மையான தன் பார்வையின் மூலம் தரையில் கிடக்கும் இரையைப் பார்த்தவுடன் சிறகு விரித்து கீழ் நோக்கிப் பறக்க யத்தனிக்கும் போது அந்த கழுகுக் குஞ்சு சிறகிலிருந்து விடுபட்டு விழுந்துவிடும். அப்போது அந்தத் தாய் கழுகு அதைவிட வேகமாகப் பறந்து வந்து அப்படியே அந்தக் குஞ்சை தரையில் விழுந்து மோதிவிடாமல், அணைத்து காப்பாற்றிவிடும். இது போலத்தான் நமக்கு மேல் இருக்கும் அந்த சக்தியும் நம்மை ஒரு எல்லையில், வீழ்ந்து விடாமல் காத்து நிற்கும் என்ற நம்பிக்கையுடன் நம் வாழ்க்கையை பூரணமாக வாழுவோம்! வெற்றி நிச்சயம்!

    முற்றும்

     படங்களுக்கு நன்றி:

    http://www.google.co.in/imgres?imgurl=http://www.dreamwisemarketing.com/wp-content/uploads/2013/07/SUCCESS_by_the_chosen_pessimist.jpg&imgrefurl=http://www.dreamwisemarketing.com/denver-marketing/5-keys-to-dm-success-releas/&h=600&w=750&sz=65&tbnid=4iU_waTlGMhgyM:&tbnh=90&tbnw=113&zoom=1&usg=__On3jVfdnfqsPgpX1iAeErHyLOGQ=&docid=v2lrJkem1G5GhM&sa=X&ei=H1QfUuGZIY7GrAfd4YDoBQ&ved=0CDQQ9QEwAQ&dur=402#imgdii=4iU_waTlGMhgyM%3A%3BTHrMwedrQaYndM%3B4iU_waTlGMhgyM%3A

    http://www.google.co.in/imgres?imgurl=http://www.insidegatlinburg.com/wp-content/fall-road.jpg&imgrefurl=http://www.insidegatlinburg.com/vacation-tips/when-do-the-leaves-change-color-in-the-fall/&h=2000&w=2956&sz=1248&tbnid=MujWZEXqWRb5cM:&tbnh=90&tbnw=133&zoom=1&usg=__BfmUgwk1LkzjV-JANvKiYv1jVtI=&docid=ME56hl4wOGktkM&sa=X&ei=CVMfUuTzHsaHrQfCkYGABA&ved=0CFkQ9QEwBw&dur=137#imgdii=_

     

    Share
  • “நடுத்தெரு நாராயணன்”

    தமிழ்த்தேனீ

    கனகா மிக ஆர்வமாக தன் கணவன் நாராயணனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள், என்னங்க நாளைக்கு காலையிலே 8 மணிக்கு நாம ரெண்டுபேரும் மந்தைவெளிக்கு போய்ட்டு வரணும்,

    என்னோட பெரியம்மா போன் பண்ணாங்க உங்களுக்கு கூட தெரியுமே என்னோட பெரியம்மா பொண்ணு அதாங்க அவங்க வீட்டுக்காரர் கூட பெரிய டாக்டர்  அமெரிக்காவுல இருக்காங்க,

    அவங்க இப்போ இந்தியாவுக்கு வந்திருக்காங்களாம், அவங்களுக்கு ரெண்டு பசங்க, நாளைக்கு அவங்களுக்கு அறுபதாம் கல்யாணம் அதுனாலே நாம ரெண்டுபேரும் போய் வாழ்த்திட்டு வரலாம் என்றாள்,

    நாராயணன் கனகாவிடம் ஆமாம் நமக்கு அறுபதாம் கல்யாணம் நடந்துதே அப்போ அவங்க வந்தாங்களா, என்றார்,

    ஏங்க அவங்க ரெண்டு பேரும் அப்போ அமெரிக்காவுல இருந்தாங்க, எப்பிடி வர முடியும் என்றாள் கனகா,

    சரி உங்க பெரியம்மாவாவது வந்தாங்களா என்றார் நாராயணன்,

    அவங்களும் வரலை, ஆனா நாம் போயிட்டுதான் வரணும், அவங்க எப்பிடி நடந்துகிட்டாலும் நாம விட்டுக்கொடுக்காம நடந்துக்குவோமே என்றாள் கனகா,

    சரி போய்ட்டு வரலாம், உனக்கும் உங்க உறவுக்காரங்களை எல்லாம் பாத்தா மாதிரி இருக்கும்னு ஒப்புக் கொண்டார் நாராயணன்,

    மறுநாள் காலை நாராயணனும் கனகாவும் கிளம்பினர், காரை ஓட்டிக்கொண்டே நாராயணன் ஆமாம் மந்தை வெளியிலே, எங்க நடக்குது அறுபதாம் கல்யாணம் என்றார்,

    இதோ பாருங்க எனக்கு அவங்க வீடு தெரியும் விலாசம் தெரியாது, ஆனா மந்தைவெளி பஸ் நிலையத்துக்கு போனா அங்கேருந்து அவங்க வீட்டுக்கு வழி தெரியும், நீங்க மந்தை வெளி பஸ்நிலையத்துக்கு காரை ஓட்டுங்க என்றாள் கனகா,

    சென்னை போக்குவரத்தில் நீந்தி மந்தைவெளி பஸ் நிலையத்தை அடைந்தவுடன், அங்கிருந்து நேரா போய் இடதுபக்கம் திரும்புங்க என்றாள், ஒரு ஓட்டுனரின் கவனத்தோடு அவள் சொல்லும் இடது பக்கம், வலது பக்கம் என்றெல்லாம் காதில் வாங்கிக் கொண்டு ஓட்டிக்கொண்டிருந்தார் நாராயணன்,

    அந்தசாலை ஒரு முட்டு சந்தில் சென்று முடிந்தது, மேலே போக வழியில்லாமல் காரை நிறுத்திவிட்டு கனகாவை ஏறிட்டார் நாராயணன்,

    கனகா கொஞ்சம் குழம்பியவளாய்  இங்கேதாங்க அவங்க வீடு,நான் அவங்க வீட்டுக்கு  10 வருஷத்துக்கு முன்னாடி வந்துருக்கேன்,ஆனா ஒரு அடையாளம் இருக்கு அவங்க வீட்டுக்கு முன்னாடி ஒரு குப்பை மேடு பெரியமலை மாதிரி இருக்கும் அப்பிடீன்னா, கோவம் கோவமாக வந்தது நாராயணனுக்கு,

    இது ஒரு அடையாளமா? எப்பவோ அந்தக் குப்பையெல்லாம் அள்ளிகிட்டுப் போயிருப்பாங்க,அவங்க வீட்டுக்கு ஏதாச்சும் பேரு இருக்குமே அதுவாவது நினைவுக்கு வருதா பாரு என்றார் நாராயணன்,

     இல்லைங்க அந்த வீட்டைப் பார்த்தா உடனே கண்டு பிடிச்சுடுவேன் என்றாள் கனகா,பொறுமை இழந்தவராய் காரை விட்டு இறங்கி ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் சென்று,ஏங்க இங்கே ஒரு குப்பைமேடு மலைமாதிரி இருந்துதாமே, அந்த இடம் எங்க இருக்கு என்று பலகீனமான குரலில் கேட்ட நாராயணனை,

    அந்த ஆட்டோஓட்டுனர் மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டு, ஏன் சார் பாத்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க, விலாசம் இல்லாம இது மாதிரி ஒரு அடையாளம்சொன்னா எங்கே போயி தேடறது, ஆனா நீங்க அதிர்ஷ்டக்காரங்க அப்பிடியே பின்னாலே போயி மூணாவது லெப்டுலெ திரும்புங்க அங்கே வரும் அந்தக் குப்பை மலை என்றார்,

    அதே போல அவர் சொன்னது போலவே பின்னால் சென்று மூணாவது லெப்டுலெ திரும்பியவுடன் வந்தது குப்பை மலை, 10 வருஷத்துக்கு முன் கனகா பார்த்த அதே குப்பை மலை, திடீர்னு மகிழ்ச்சியோடு கனகா அதோ பாருங்க அந்த வீடுதான் என்றாள்,

    அவளின் அறியாமையை கண்டு சிரிப்பதா, ஆட்டோக்காரர் சொன்னது போல தாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா, அல்லது 10 வருடமாக ஒரேஇடத்தில் குப்பை மலையை வைத்திருக்கும் அரசாங்கத்தை கண்டிக்காத மக்களின் அறியாமையை எண்ணி கோவப்படுவதா, என்று புரியாமல் திகைத்து நின்றார் நாராயணன்,

    நாதஸ்வரம் ஒலிக்க அந்த கல்யாண வீடு கலகலப்பாய் இருந்தது, வந்திருந்த உறவினர்கள் அனைவருமே சென்னை வாசிகள், எல்லோருமே அந்தக் குப்பை மலையை அடையாளம் வைத்துதான் வந்திருக்கின்றனரோ என்று யோசித்தார் நாராயணன், நாமெல்லாருமே எத்தனை வருடங்கள் ஆனாலும் நடுத்தெரு நாராயணர்கள் தானா?

    எங்கே போய்க்கொண்டிருக்கிறோம், எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம், என்று எண்ணியபடியே, மணமக்களை வாழ்த்திவிட்டு உணவின் சுவையையும், குப்பை மலையின் நாற்றத்தையும் ஒருசேர அனுபவித்துவிட்டு ஒரு பீடாவையும் வாயில் போட்டுக்கொண்டு அவர்கள் அளித்த தேங்காய்ப் பையையும் வாங்கிக்கொண்டு அவர்களிடம் விடைபெற்று வெளியே வந்து மறுபடியும் காரில் ஏறி உட்கார்ந்து நாட்டைக் கொஞ்சமும் கவனிக்காத அரசாங்கத்தை ஒரு முறை எண்ணி வருந்தி விட்டு,

    அந்தக் குப்பை மலையை பார்த்து ஒரு பெருமூச்சுவிட்டு, நாற்றம் தாங்காமல் காரை வேகமாக ஓட்ட ஆரம்பித்தார் நாராயணன்.

    Share
  • நாளை புத்தக வௌயீட்டு விழா அழைப்பிதழ் – ஈஸ்வரனின் சிறுகதைகள்

    மறவன்புலவு சச்சிதானந்தம்

    eswaran invite31.8.13 (1)

    அண்ணை, கண்ணீரை வரவழைத்தார் அந்த எழுத்தாளர் என்றார் தொலைப்பேசியில் அழைத்த திருமதி அங்கயற்கண்ணி.

    யார்? என்று கேட்டேன்.

    பெயர் சரியாக விளங்கவில்லை. இப்பொழுது (29.8.13 வியாழக்கிழமை காலை 0730 மணி) கேட்டுக் கொண்டிருக்கிறேன், இலங்கை வானொலியில் அவரது செவ்வி.

    அப்படி என்ன சொன்னார்? கேட்பவரை ஏன் அழ வைக்கிறார்?என்றேன்.

    உங்களைப் பற்றிச் சொன்னவை எனக்குக் கண்ணீரை வரவழைத்தன. நீங்கள் அவருக்குக் கொடுத்த உற்சாகமே, ஊக்கமே, ஆதரவே, வழிகாட்டலே அவரைச் சிறுகதை எழுத்தாளராக்கியதாம் என்று உணர்ச்சிவசப்பாட்டார் திருமதி அங்கயற்கண்ணி.

    அந்த எழுத்தாளர் காந்தளகத்தைப் பாராட்டினார். அங்கு பணி புரியும் திருமதி சசிரேகாவைப் பாராட்டினார். முன்பு தன் வாழ்க்கை அநுபவங்களை எழுதினாராம். இப்பொழுது சிறுகதைத் தொகுதி வெளிவந்திருக்காம், புகழ் பூத்த வானதிப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்களாம் என்றார் திருமதி அங்கயற்கண்ணி.

    ஓ.. ஈசுவரன் பேசுகிறாரா? அவர் என் நண்பர். வானொலியில் செவ்வியைக் கேட்டு முடிந்ததும் நேரே அவருடன் பேசுங்கள் எனக் கூறிய நான் திரு. ஈசுவரனின் தொலைப்பேசி எண் கொடுத்தேன்.

    ஈசுவரன் எனக்கு நண்பர். 1959இல் தொடங்கிய நட்பு. அவரது 72ஆவது பிறந்த நாளுக்குக் கொழும்பில் அவரது விருந்தோம்பலை ஏற்ற செய்தியை எழுதினேன்.

    நாளை மறுநாள் 31.8.13 சனிக்கிழமை மாலை 0630 மணி) . கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் ஈசுவரினின் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா, நான் கலந்துகொண்டு பாராட்டிப் பேச உள்ளேன்.

     

     

    Share
  • குறவன் பாட்டு – 8

    சச்சிதானந்தம்
    
    முயலுக்கு இரங்குதல்

     

    விரிந்தும் விரியாத கல்வாழை மலர்போன்ற,

    சுருண்டும் சுருளாத செவிமடலைச் சுழற்றி,

    உருகும் பனிபோல உடல்கொண்ட வெண்முயல்,

    மருளும் செவ்விழியால் இவ்வுலகைக் காணும்!                                                                               60

     

    முயலைக் கண்டு முயலைப் போலத்,

    துள்ளிக் குதித்து ஓடிச் சென்று,

    கயலைக் கண்ட கரடியைப் போலக்,

    கையால் அடித்து முயலைப் பிடித்தான்!                                                                                  61

     

    கண்கள் சிவந்த முயலைக் கண்டு,

    கனிந்து நின்றது குறவன் நெஞ்சம்,

    கொல்லத் துணிந்து பிடித்த முயலை,

    உள்ளம் இரங்கி அனுப்பி வைத்தான்.                                                                                                       62

     

    தேன் சேகரித்தல் 

     

    வானுயர்ந்த தருவின் மீது தேனுயர்ந்த கூடிருக்க,

    கறும்பாறை என்றதன்மேல் கருடனொன்று கால்பதிக்க,

    கோவம்கொண்ட குளவிகள் கருடன்மீது படையெடுக்க,

    பாறைதுரத்து தென்றெண்ணிப் பருந்துபயந்து பறந்தது!                                                               63

     

    சிதைந்து நின்ற தேன்கூட்டில், ஆழப்

    புதைந்திருந்த தேனெல்லாம், கிளையில் வடிந்து,

    அடிமரத்தில் பொன்னிறத்தில் ஒளிர, அதைப்

    பிசினென்றெடுத்துத் தேனென்றுணர்ந்து குறவன் சேகரித்தான்!                                              64

     

    பருந்தின் பயமும் பாசமும்

     

    பாறைதுரத்து தென்றெண்ணிப் பறந்துவந்த பருந்துதன்,

    கூடிருக்கும் பாறைமீதும் அமரபயந்து நின்றது!

    குஞ்சிருக்கும் கூடிருக்கும் பாறைதன்னைச் சுற்றியே,

    வட்டமிட்டு வட்டமிட்டு வானிலுயரப் பறந்தது!                                                                  65

     

    பாசமிக்க பருந்துதன் பயம் தெளிந்து நின்றது,

    குஞ்சினருகில் குதித்துக்குதித்து வந்தமர்ந்து கொண்டது!

    கண்திறக்காக் குஞ்சுகள் தாயின்வரவை உணர்ந்து,

    தேன்நிறைந்த தாயின்காலைக் கொத்திக்கொத்திச் சுவைத்தன!                                              66

     

    ஊனெடுத்துக் குஞ்சுக்கு ஊட்டுகின்ற பருந்துக்கு,

    தேனெடுத்துத் தெரியாமல் ஊட்டுகின்ற விருந்துக்கு,

    கானெடுத்த கவினெல்லாம் கண்டுகண்டு களிப்புற்று,

    தானெடுத்த பிறவிப்பயன் அடைந்திடுமே குறவனுயிர்!                                                               67

    Share
  • அரசு 12 துரைத்தனம்.

    இன்னம்பூரான்

    Cockroachawardராஜமாதா முப்பெரும்தேவி பொன்னம்மா தேவிஶ்ரீ மதுராபுரியை ஆண்ட ராணிமங்கம்மாவை விட பல திறன்களில் தலை சிறந்து விளங்குபவர். ரோமாபுரி இளவரசி. தாமரை மணாளனை அவரை சங்கத்தமிழ் பண்புக்கு இணங்க காதல் செய்த பின்னரே வரைவு செய்து கொண்டது உலகறிந்த விஷயம். அது அவர்களது உரிமை என்பதில் கடுகளவேணும் ஐயமில்லை. அழகான குழந்தைகள். ஆண் அரசாளும் என்கிறார்கள் சிலர். அவருடைய திருமகனார் இளங்குமரனுக்காக, அரியணை காத்திருக்கிறது. வடிவுக்கரசியான அவருடைய திருமகளோ, குடும்ப விளக்கு. எங்கிருந்தோ வந்த ஆணழகன் இளஞ்சேரலாதனை மணந்து பல வருடங்கள் ஆயின. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்றாள், ஒளவை பாட்டி. குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைகள் (பாலையையும் விட்டு விடவில்லை!) நாடோடி, நாடோடி இளஞ்சேரலாதனை நாடின. மணிமேகலையின் அமுதசுரபி தோற்றது, போங்கள். அலிபாபாவின் மாயவிளக்கு மங்கியதோ என்ற தோற்றம்! காசுகள் கொட்டின; மோஹராக்கள் ‘தக தக’வென்று மின்னின; திரவியம், கனகதாரா தோத்திரம் மொழிந்தவாறு, கூரையை பிய்த்துக்கொண்டு ‘கொட்டோ கொட்டு’ என்று இடைவிடாமல் பொழிந்தது; பொழிகிறது; பொழிந்து கொண்டே இருக்கும். இளஞ்சேரலாதன் அமர்ந்தவிடத்தில் அல்லது தேகாப்பியாசம் செய்யும் இடத்தில் அல்லது இளைப்பாறலும், தேறலும், விருந்தும் அளிக்கும் மன்றங்களில் மகிழ்வின் மணமும், செல்வத்தின் செல்வாக்கும் நிறைகுடங்களாக ததும்பி வழிகின்றன.

    என்றென்றும் ராஜ விசுவாசிகளில் ஒருவராக பரிமளிக்கும் குருக்ஷேத்திரத்தின் குறுநிலமன்னராகிய உலகநாதபெருமான் அவர்களிடம் தெற்கத்திய பத்திரிகை ஒன்று, இளஞ்சேரலாதனுக்கு குருக்ஷேத்திர பிராந்தியம் அள்ளி அள்ளி கொடுத்த நிலபுலனை பற்றியும், ஸ்தாவரசொத்தான பூமியயையே காசு பணமாக ரஸவாதம் செய்யப்பட்ட உத்திகளை பற்றியும், குருக்ஷேத்திர நாட்டின் உயர்/தாழ் ஊழியனனான கண்ணிய கமுக்கனார் தட்டிய முரசொலியின் ‘அபஸ்வர’ எதிரொலியை பற்றியும், ஒரு உரையாடல் நிகழ்த்தினார்கள். அவரோ ஜராசந்தன் போன்ற சண்டைக்கோழி. விடுவாரா? ஒரு உயர்/தாழ் ஊழிய சமூகத்தையே அருகில் வைத்துக்கொண்டு கருத்து முத்துக்கள் பல உதிர்த்தார். அவையாவன:

    தேசத்தின் மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு மைனர் குடியானவர்.
    குருக்ஷேத்திர தர்மம் மைனர் குடியானவர்களுக்கு, அதுவும் செல்வக் களஞ்சியங்களுடன் ‘தகாத’ இனம் சேரும் மைனர் குடியானவர்களுக்கு சலுகைகள் அளிக்கும்.

    ஆகவே மாப்பிள்ளை இளஞ்சேரலாதனுக்கு கொடுத்த சலுகைகள் தர்மத்தின் அடிப்படையே.
    இந்திரனா புகாரித்தான்? இந்திர பதவி உயர்ந்தது தான். ஆனால் இந்திரர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள் அல்ல. இந்திரனும் காசு பார்த்தான். அநீதி + அநீதி = நீதி! இது அறியாத தென்னாட்டுத் திருமாலே. உம்மை கண்டு பரிதாபம் கொண்டேன்.

    கமுக்கரின் குற்றச்சாட்டுகள் நீர்த்துப்போயின, ஐயா. செல்வக்களஞ்சியம் ஏன் புகாரிக்கவில்லை. அது எனக்கு புரியவில்லையே!!!

    கமுக்கரின் குற்றச்சாட்டுகளை, துரைத்தனத்தாரின் கமிட்டி நிராகரித்து விட்டதே. அதன் ரிப்போர்ட்டை நான் படிக்கவில்லை. அதனால் என்ன கெட்டுப்போச்சு? அது நிராகரித்திருக்கும்.கும்! கும்மோ கும்!!

    அப்படியானால் குமுக்கரை ஏன் அமுக்கவில்லை என்றா கேட்கிறீர்கள்! நான் அவசரப்படுபவன் அல்ல. என்னை போன்ற நடுநிலையாளர் கிடையாதாக்கும். கும்! கும் கும்!!

    மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு பண்பாளர். அவர் ராஜமாதாவின் மாப்பிள்ளை என்பதால் தான், பத்திரிகைகள் அவரை வாட்டுகின்றன. அலக்கழிக்கின்றன. என்னே அக்கிரமம்! மம்! மம்மோ மம்!!

    அசரீரி: “ மெய்யெல்லாம் மெய்யல்ல; பொய்யெல்லாம் பொய்யல்ல; மெய் என்பது பொய்யோ? பொய் என்பது மெய்யோ? பொய்யும் மெய்யும் கலந்துக்கட்டியோ? ஐயோ!”

    “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும்’ என்று அரசியல் அறியாமையினால், சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் பிழை இழைத்து விட்டார் போலும். எதற்கும் ஒரு செய்தி. அரசியல் பிழைத்தோர்க்கு ஆரூடம் கை வந்த கலை. ஜோசியம் கை கூடிய கலை. அதனால் தான் இந்த உலகநாதபெருமானின் அற்புத வாசகங்கள் வருமுன்னரே, ராஜமாதாவின் பிரதம விசுவாசியும், திவானும் ஆன மனோவசியனார் அவர்கள், பத்திரிகைகளுக்கு ஒரு அறைகூவல் விடுவித்தார். “பத்திரிகைகள் எதையும் விசாரிக்கட்டும்; ஆனால் தனிமனிதர்களை மீது பழி கூறலாகாது….”. அதாவது தவறு செய்தவன் தனிமனிதனாலும், சிஸ்டம் தவறியது என்பது உகந்த சொல் எனலாமோ? அவரது பொழிவை முழுதுமுச்சூடும் கேட்டோ/படித்தோ வசியமானவர்கள் உலகநாதபெருமானின் கூற்றை அனுபவித்து வரவேற்பார்கள்.

    ‘ஏழை குடியானவர்கள்’ பிழைப்பார்கள். விதர்பா ஏழை குடியானவர்கள் மடிவார்கள். குருக்ஷேத்திரத்தில் நிலபுலன் இழந்த ஏழை குடியானவர்கள் நெற்றியில் பட்டை நாமம் பளபளக்கிறது. மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் மைனர் குடியானவர் என்றால், ‘அமிதா பச்சன் ஒரு அறிமுக நடிகர்’ என்றார், ஒரு ட்விட்டர். மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு மைனர் குடியானவர் என்றால் முதுகலைஞர் கருணாநிதி அவர்கள் பால் மணம் மாறாத குழவி என்பர் சிலர்.
    வர்ரேன்…

    சித்திரத்துக்கு நன்றி: asifmeeran.blogspot.com

     

    Share
  • அசரீரி

     

    சு.கோதண்டராமன்

    தொலை பேசி பழுதாகி விட்டது. குறை பதிவு செய்யும் அலுவலக எண்ணை வேறு ஒரு தொலை பேசி மூலமாகத் தொடர்பு கொண்டேன். ஆளிலாக் குரல் கேட்டது.

    BSNL welcomes you

    பிஎஸ்என்எல் ஆப்கா ஸ்வாகத் கர்தா ஹே

    பிஎஸ்என்எல் உங்களை வரவேற்கிறது

    To proceed in English, press one

    ஹிந்தீ மேம் ஜான்காரீ கே லியே தோ தபாயேன்

    தமிழில் விவரங்கள் அறிய எண் மூன்றை அழுத்தவும்  

    அழுத்தினேன்.

    பழுதுபட்ட தொலைபேசியின் எஸ்டிடி கோடை டயல் செய்யவும்.

    செய்தேன்.

    நீங்கள் டயல் செய்த எஸ்டிடி கோட் 044. இதை உறுதிப்படுத்த எண் ஒன்றை அழுத்தவும்.

    அழுத்தினேன்.

    பழுதடைந்த தொலைபேசி எண்ணை டயல் செய்யவும்.

    செய்தேன்.

    நீங்கள் டயல் செய்த எண் ்்்் ்்்். இதை உறுதிப்படுத்த எண் ஒன்றை  அழுத்தவும்.

    அழுத்தினேன்

    உங்கள் தொலைபேசியில் எந்தப் பழுதும் இல்லை. பிஎஸ்என்எல்லின் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொண்டதற்கு நன்றி.

    ????????????

    ………………………………………. ……………………………………………………. ……………………………………………….       இதோ மற்றொரு நிகழ்ச்சி.

    வோட­ஃபோன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

    உங்களுக்கான ஸ்பெஷல் ஆஃபர். இப்பொழுது நீங்கள் வெறும் 34 ரூபாயில் பத்து நாட்களுக்கு இலவசமாக உங்கள் போன் மூலம் இண்டர்நெட் வசதி பெற முடியும்………………………………………………………………………………………………….. …………………..  (நீண்ட விளம்பரத்துக்குப் பின்)

    தமிழில் தொடர எண் மூன்றை அழுத்தவும்.

    அழுத்தினேன்.

    பில் சம்பந்தமான விஷயங்களுக்கு ஒன்றை அழுத்தவும்.

    இண்டர்நெட் இணைப்பு தொடர்பான விஷயங்களுக்கு 2ஐ அழுத்தவும்.

    3ஜி சம்பந்தமான விஷயங்களுக்கு 3ஐ அழுத்தவும்.

    கால் டைரக்ட் சம்பந்தமான விஷயங்களுக்கு 4 ஐ அழுத்தவும்.

    ……………………………

    ………………………………..

    ………………………………….

    மீண்டும் முந்திய மெனுவுக்குப் போக 9 ஐ அழுத்தவும்.

    வரிசையாகப் போய்க் கொண்டிருந்தது. நான் வாங்கிய புதிய சிம்மை செயல்படுத்த வேண்டியிருந்தது. அதற்கான வாய்ப்பே இல்லை. மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்து கவனமாகக் கேட்டேன். எனக்குத் தேவைப்பட்டது இல்லவே இல்லை.

    வேறு வழியில் அவர்களைத் தொடர்பு கொள்ளவே முடியாது போல இருக்கிறதே. சரி முயன்று பார்ப்போம் என்று கருதி எண் ஒன்றை அழுத்தினேன்.

    மீண்டும் பதிவு செய்யப்பட்ட குரல்.

    எங்கள் வாடிக்கையாளர் சேவை அதிகாரி பிற வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். தயவு செய்து காத்திருக்கவும்.

    அவர்களுக்காக நான் காத்திருக்கும் நேரம் வெட்டியாகக் கழியக் கூடாது என்ற பெரிய பொறுப்புடன், என்னை மகிழ்விக்க, இசை ஒலிக்கத் தொடங்கியது. ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை இசை தடைபட்டு,

    நீங்கள் எங்களுக்கு முக்கியமான வாடிக்கையாளர். தயவு செய்து காத்திருக்கவும். எங்கள் வாடிக்கையாளர் சேவை அதிகாரி உங்களைக் கவனிக்க வருவார்,

    என்று அறிவிப்பு. தொடர்ந்து இசை. பத்து நிமிடங்களுக்குப் பின் வேறு ஒரு அசரீரீக் குரல் கேட்டது.

    எங்கள் அதிகாரியுடனான உங்கள் உரையாடல் குறை தீர்த்தல் மற்றும் தர ஆய்வுச் சோதனைக்காகப் பதிவு செய்யப்படுகிறது என்பதை அறியவும்.

    …………

    …………..

    என் பெயர் சுபாஷிணி. நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்? (அப்பாடா, கடைசியில், மனிதக் குரல்!)

    முதல்லே, புகாரைக் காது கொடுத்துக் கேட்கிற மனிதக் குரலைக் கேட்க எந்த நம்பரை அழுத்த வேண்டும், சொல்லுங்க.

    என்ன சார் விஷயம்?

    நான் ஒரு புது சிம் வாங்கியிருக்கேன். அதை ஆக்டிவேட் பண்ணணும்.

    அதுக்கு நீங்க 172ஐத் தொடர்பு கொள்ளணும், சார்.

    அது எனக்கு முதலிலேயே தெரியும். அந்த நம்பருக்குத் தொடர்பு கொண்டால் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள உங்களுக்கு உரிமை இல்லைன்னு பதில் வருதே.  அந்தக் குறையை நான் யார் கிட்ட சொல்லி அழறது? குறை தீர்க்கும் நம்பர்னு போட்டிருக்கேன்னு இந்த நம்பரை டயல் செய்தால் ஒன்றை அழுத்தவும், இரண்டை அழுத்தவும்னு போய்க்கிட்டே இருக்கே தவிர என் புகாரைத் தெரிவிப்பதற்கான வழியையே காணுமே, அம்மா.

    மன்னிக்கணும் சார். உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?

    சொன்னேன்.

    நீங்க இப்ப பேசிக்கிட்டிருக்கிற நம்பர் உங்க பேர்லே தான் இருக்கா?

    இல்லே. என் மகன் பேர்லே இருக்கு.

    அவர் பேரை தெரிஞ்சுக்கலாமா?

    சொன்னேன்.

    அவருடைய விலாசம் சொல்லுங்க.

    சொன்னேன்.

    சரியா இருக்கு. இப்ப வாங்கின சிம் யார் பேரிலே வாங்கியிருக்கீங்க?

    சொன்னேன்.

    சரி சார். கம்ப்ளெய்ண்ட் புக் பண்ணிக்கிறேன். உங்க கம்ப்ளெய்ண்ட் நம்பர் 865348974562. மறுமுறை பேசும்போது இந்த நம்பரைக் குறிப்பிடுங்க. வேற ஏதாவது தேவையா?

    கொஞ்சம் இருங்க. நீங்க பாட்டுக்குப் படபடன்னு சொல்லிக்கிட்டே போனா, நான் எப்படி இத்தனை டிஜிட்டை ஞாபகம் வெச்சுக்கறது?

    சரி எழுதிக்கங்க சார்.

    இந்தப் பேச்சு முடிந்ததும் உங்களுக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். அதுக்கு மறக்காமப் பதில் அனுப்பிவிடுங்க சார். அதுக்குக் கட்டணம் கிடையாது. வோடஃபோன் சேவையைப் பயன்படுத்திக் கொண்டதற்கு நன்றி.

    தொலை பேசி அலுவலகங்கள் மட்டுமல்ல. குடிநீர்ச் சுத்திகரிப்பு யந்திரம் பழுது பார்ப்பு மையம்  போன்ற வேறு எந்த அலுவலகமானாலும் இதே நிலை தான்.

    யந்திரங்களை நாம் பயன்படுத்துகிறோமா? அல்லது அவை நம்மை ஆள்கின்றனவா?

     

    Share
  • திருவடி!…

    விசாலம்

    மகாவிஷ்ணு ஸ்ரீராமராகவும், ஸ்ரீகிருஷ்ணராகவும் அவதரித்தார் என்று தசாவதாரத்தில் காண்கின்றோம் .கண்ணன் பிறந்த கோகுலாஷ்டமி அன்று வீட்டில் குட்டிப்பாதங்களை மாக்கோலமாகப்போட்டு சின்னக்குழந்தை குதித்துக்குதித்து உள்ளே வருவதைப்போல் ஒரு கற்பனையும் செய்கின்றோம்.பெருமாளை விட பெருமாளின் திருவடிக்கு அதிக சக்தி தான் .கீதையில் கண்ணன்”என் திருவடிகளைச்சரணடைந்தால் பாபம் எல்லாம் போக்கி மோட்சம் அடைய அருள் புரிவேன் என்கிறார். பாரதியாரோ “கண்ணன் திருவடி எண்ணுக மனமே, திண்ணம் அழியா வண்ணம் தருமே  என்றும் பின் “தீர்ப்பான் இருளை பேர்ப்பான் கலியை ஆர்ப்பாரமரர் பார்ப்பார் தவமே” என்று பாடி திருவடியின் சிறப்பைச்சொல்கிறார், வளளுவரோ  “பற்றுக பற்றற்றான்  பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு   என்று குறளில் சொல்கிறார். அதாவது ஆசாபாசம் மாயை போன்றவை விலகுவதற்கு பற்றேதும் இல்லாத இறைவனின் திருப்பாதங்களைப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஹரித்துவார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் ஸ்ரீராமர் பாதம் விற்பார்கள். அதை பூஜை அறையில் வைத்து பூஜிப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். திருப்பதி ஸ்ரீ வெங்கடாசல்பதியின் பாத தரிசனுமும் காலை வேளையில் கண்டு அருள் பெற க்யூ வரிசை நீண்டு இருக்கும். ராமாயணத்தில் ராமர் கானகம் வந்த போது வேடனான் குஹ்ன் ஸ்ரீராமனின் திருவடிகளை வணங்கி அந்தத்திருவடிகளுக்கு பூஜையும் செய்கிறான். அவரது சகோதரன் பரதனோ தன் தாய் தனக்கு என்று வாங்கிக்கொடுத்த நாட்டை ஏற்க மறுத்து ராமரைப்பார்த்து திரும்பி வருமாறு மன்றாடுகிறான், ஆனால் ராமர் அதற்கு இஷடப்படாததால் அவரது திருவடிகளில் ஏறிய பாதுகைகளையே பதினான்கு வருடம் பூஜிக்கிறான். சமீபத்தில் கிருஷணரைப்பற்றி  பிருந்தாவன கீதையில்  சில விஷயங்கள் படித்தேன். அதில் யமுனையும், காளிங்கனும் மகாவிஷ்ணுவின் திருவடிகள் தங்கள் மேல் பட வேண்டும் என்று மிகவும் விரும்பினார்கள்.காளிங்கன் முற்பிறவியில் ஒரு கந்தர்வனாக இருந்தான். ஒரு முனிவரின் சாபத்தினால் ஐந்துதலை நாகமாக் பிறவி எடுத்தான் எப்படியும் திருமாலின் திருவடி தன் தலையில் பட்டு தனக்கு சாபவிமோசனம் ஆகிவிடும் என்று நம்பியிருந்தான். இதே போல் யமனின் தங்கை. சூரியபுத்திரி விஷ்ணு பாதங்களைத் தொட வேண்டும் என்று ஆசைக்கொண்டாள். அது என்ன சுலபமாகக் கிடைக்கக்கூடிய ஒன்றா?. கடும் தவத்தை மேற்கொண்டாள். காத்து ரக்ஷிக்கும் தெய்வமான விஷ்ணு உடனே தோன்றி தான் கிருஷ்ணராக அவதாரம் எடுக்கும் நேரத்தில் அவள் விருப்பம் நிறைவேறும் என கூறி மறைந்தார் .யமுனையும் பொறுமையாகக்காத்திருந்தாள் ஆவணி மாதம் அஷ்டமியில் ரோகிணி நட்சத்திரத்தில் கண்ணன் பிறந்தார். அவரது கட்டளைப்படி வசுதேவர் அவரை ஒரு கூடையில் வைத்தபடி யமுனைக்கரைக்கு வந்தவுடனேயே யமுனை மிகவும் மகிழ்ச்சியுடன் எங்கே கண்ணனின் பாதங்கள் நம் மேல் படாதா என்று ஏங்க ஆரம்பித்துவிட்டாள். மழைக்கொட்டித்தீர்த்தது.யமுனையின் வெள்ளம் அதிகரித்து வசுதேவரின் இடுப்பு, பின் தோள், என்று நிரம்பி கழுத்துவரை வந்துவிட்டது. அப்படியும் வசுதேவர் நம்பிக்கையை இழக்காமல் மேலே நடந்தார்.   பின் இன்னும் மேலே ஏற கண்ணன் யமுனையைத் தொடும்படி தன் குஞ்சுக்கால்களை கூடைக்கு வெளியே போட்டார். அந்தக்கமல பாதங்களை யமுனைத்தொட்டுவிட்டாள். ஒரே மகிழ்ச்சி. தன் தவத்தின் பலனைக்கண்டுமகிழ்ந்தாள். நன்றியை தெரிவித்து கிருஷ்ணர் அக்கரைக்கு போக ஏதுவாக வசுதேவருக்கு இரு பக்கமும் தன் வேகத்தைக்குறைத்து நல்ல பாதையை வகுத்து தந்தாள்.

    காளிங்கன் தனக்கு கண்ணனது திருவடிகள் கிடைக்கவில்லையே என்று அந்தப்பொய்கையிலேயே வசிக்க ஆரம்பித்தான். விஷத்தைகக்க்கினான் இதனால் காளிந்தி பொய்கையில் நீர் கெட்டு ஊர் ஜனங்கள் அங்குப்போகாமல் ஒதுங்கினர். பலரும் காளிங்கனைப்பார்த்து நடுங்கினர் கிருஷ்ணர் மாடுமேய்க்கச்சென்று சமயம் பார்த்து பலர் தடுத்தும் காளிந்திப்பொய்கையில் குதித்தார். காளிங்கனுக்கு மகிழ்ச்சி. தன்னுடைய ஐந்துதலையை விரித்து கிருஷ்ணரைத் தாங்கிக்கொண்டான். கிருஷ்ணரின் திருவடிகள் அவனது ஐந்துத்தலைகள் மேலும் நடனமாடியது. மகிழ்ச்சியில் விஷம் கக்கினான் பின் அவன் சாபம் நீங்க பழையபடி கந்தர்வனாகிவிடுகிறான். திருவடிகளுக்கு இறைவனை விட அதிக சக்தி இருக்கிறது. குருவின் பாதங்களை அலம்புகிறோம் பாத பூஜை செய்கிறோம் “அவனருளால் அவன் தாள் வணங்கி’  என்று அவர் பாதங்களை நாமும் சரணடைவோம்.

    Share
  • கண்ணனின் தங்கை

    பார்வதி இராமச்சந்திரன்

    art pi subadha kamsaகோகுலக் கண்ணன் தன் சின்னப்  பாதங்கள் பதித்து நம் இல்லங்கள்  தோறும் எழுந்தருளும் நன்னாள்  ‘ஸ்ரீஜெயந்தி’. நாடே விழாக்கோலம் பூண்டு, கண்ணன் அவதரித்த பொன்னாளைக் கொண்டாடும் தருணத்தில், சாக்தர்கள், ‘யசோதா கர்ப்ப சம்பூதாவாக’ அவதரித்த அன்னை ஸ்ரீதுர்க்கையின் திருஅவதார தினமாகவும் கோகுலாஷ்டமியைக் கொண்டாடுகின்றார்கள்.

    சாக்தத்தில் தேவியும் ஹரியும் ஒன்றேதான் என்கின்ற தத்துவத்தை புராண ரீதியாகக் கூறும் போது, நாராயணனின் சகோதரி சக்தி என்று கூறுகின்றோம். தசமஹா வித்யா தேவியரே, தசாவதாரம் எடுத்து அசுர சம்ஹாரம் செய்தனர் என்றும் கூறுகிறது சாக்தம். யோகமாயா தேவியான சக்தி, கண்ணனின் வளர்ப்புத் தாயான யசோதைக்கு மகளாக அவதரித்ததால், கண்ணனின் தங்கையாக அறியப்படுகின்றாள்.

    சிறையிருந்த வசுதேவர், தேவகி தம்பதியரின் ஏழாவது கர்ப்பத்தில் ஆதிசேஷன் பிரவேசித்தார். ஸ்ரீவிஷ்ணுவின் திருவுளப்படி, யோகமாயையான மஹாமாயையின் செயலால், அந்தக் குழந்தை, வசுதேவரின் முதல் மனைவியாகிய ரோகிணியின் கர்ப்பத்தில் சேர்ந்தது.

    கிருஷ்ணாவதாரத்திற்கு  முன்பாக, யோகமாயா தேவியை, ஸ்ரீ மஹாவிஷ்ணு, யசோதாவின் கர்ப்பத்தில் பிரவேசிக்குமாறு கூறினார். வசுதேவரால் மதுராவிற்கு கொண்டு வரப்பட்டவுடன் தேவியின் அவதார நோக்கம் நிறைவேறுமென்றும் திருவாய்மொழிந்தருளினார்.

    அவ்வண்ணமே அம்பிகை யசோதாவின்  கர்ப்பத்தில் பிரவேசித்தாள். நந்தகோபரின் திருமகளாய் அவதரித்தாள். யோகமாயையின் மாயாசக்தியால் புவனமுழுதும் அந்த இரவில் ஆட்கொள்ளப்பட்டது.

    வசுதேவர், கண்ணனை எடுத்துக் கொண்டு கோகுலத்தில் நுழைந்த போது, நள்ளிரவு நேரம். நந்தகோபனின் மனையை அவருக்கு எடுத்துக் காட்டும் முகமாக, சின்னக் குழந்தையாக அவதரித்திருந்த தேவி, மெல்ல அழுதாள். அழுகுரலை வைத்து, இல்லத்தை கண்டுபிடித்த வசுதேவர், திறந்திருந்த கதவுகளைக் கடந்து குழந்தையின் இருப்பிடத்தை அடைந்தார். திரிகுணாத்மிகாவான அம்பிகை, தாதியின் வடிவமும் தாங்கி, சின்னக் கண்ணனை வாங்கிக் கொண்டு, யசோதையின் பெண் குழந்தையை வசுதேவரிடம் சேர்ப்பித்தாள். வசுதேவர் மதுராவை அடைந்தார்.

    தேவகிக்கு எட்டாவதாக பெண் குழந்தை பிறந்தது, கம்சனின் காதுகளை எட்டியது. ‘ஒரு வேளை இது தேவர்களின் சூழ்ச்சியோ’ என்று சந்தேகித்த அவன், பெண் குழந்தையின் கால்களைப் பற்றித் தூக்கி, அதைக் கொல்வதற்காக, கத்தியை ஓங்கினான்.

    திடுமெனத் தோன்றிய பேரொளிப் பிரகாசம், சிறையை நிறைத்தது. குழந்தை வடிவம் நீங்கி, சக்ரம், சங்கம், கேடயம், கத்தி, அம்பு, வில், சூலம், தர்ஜனீ(அதட்டும் தோரணையில் ஆட்காட்டி விரல் இருப்பது) என்ற எட்டு மஹாயுதங்கள் விளங்கும் அழகிய திருக்கரங்கள் உடையவளாய், அஷ்டபுஜ மஹா துர்க்கையாகக் காட்சியளித்தாள் அன்னை. மிகுந்த கோபத்துடன், “மூடனே, உன்னைக் கொல்லப் போகிறவன், ஏற்கெனவே அவதரித்து விட்டான், உன் கொடுமைகளை நிறுத்தி, உன்னை  நீ காத்துக் கொள். உன்னை நானே கொன்றிருப்பேன். என் பாதங்களைப் பற்றியதால் விட்டு விட்டேன்” என்று கூறி விட்டு மறைந்தருளினாள். அதன் பின், மருத்கணங்களாகிய தேவர்களால் துதிக்கப்பட்டவளாக, பூமியில் கோயில் கொண்டருளினாள்.

     இவ்வாறு அம்பிகை ஸ்ரீகிருஷ்ணாவதாரத்திற்கு உதவியதற்கு, முன்பொரு முறை வசுதேவர், தம் குலகுருவான கர்கமஹரிஷியின் துணை கொண்டு பராசக்தியை, பூஜித்ததே காரணம் என்று தேவி பாகவதம், ஸ்காந்த புராணம் போன்றவை தெரிவிக்கின்றன.

    ஸ்ரீ துர்கா பிரபாவம், ஸ்ரீகிருஷ்ணருக்கு, மற்றொரு சமயத்திலும் துர்க்கை உதவியதை விவரிக்கின்றது.

    சத்ராஜித் என்னும் மன்னன் சூரிய பகவானின் அருளால், ‘ஸ்யமந்தகம்’ என்னும் ரத்தினம் பெற்றான். அது ஒவ்வொரு நாளும், ஒருவன் தூக்கக் கூடிய சுமை எவ்வளவோ அதைப் போல் எட்டு மடங்கு பொன்னை அளிக்கும். ஸ்ரீகிருஷ்ணர் ஒரு முறை அதைக் கேட்டதற்கு, சத்ராஜித் தர மறுத்து விட்டான். ஒரு நாள் சத்ராஜித்தின் தம்பி ப்ரஸேனன் அதை அணிந்து கொண்டு வேட்டைக்குச் சென்றான். அவனை ஒரு சிங்கம் கொன்றது. அந்த சிங்கத்தை, ஜாம்பவான் என்னும் கரடி வேந்தன் கொன்று, ஸ்யமந்தகத்தை எடுத்துச் சென்றான்.

    பிரஸேனனை, ரத்தினத்திற்காக ஸ்ரீகிருஷ்ணர் கொன்றிருக்கக் கூடும் என்ற அபவாதம் பரவியது. இதைச் சகிக்காத ஸ்ரீகிருஷ்ணர், படையுடன் பிரஸேனனைத் தேடிச் சென்றார். காட்டில், இறந்த பிரஸேனனையும், அவனருகில் இருக்கும் சிங்கத்தினையும் கண்டார். அருகிலிருக்கும் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஜாம்பவானின் இருப்பிடத்தை அடைந்தார். கரடியரசனான ஜாம்பவானின் குகைக்கு வெளியே யாதவ சேனையை நிறுத்தி விட்டு, தான் மட்டும் உள்ளே சென்றார். அங்கு இருந்த ஸ்யமந்தகத்தைக் கண்டு அதை எடுக்க முயலும் போது, ஜாம்பவானுக்கும் கிருஷ்ணருக்கும் கடும் போர் மூண்டது. 27 நாட்கள் போர் நீடித்தது. இறுதியில், ஜாம்பவானுக்கு, ஸ்ரீராமாவதாரத்தை நினைவுபடுத்தினார் கிருஷ்ணர். ஜாம்பவான் மகிழ்ந்து, ஸ்யமந்தகத்தை அவரிடம் ஒப்படைத்ததோடு, தன் மகள் ஜாம்பவதியையும் மணம் செய்து கொடுத்தான்.

    இதற்கிடையில், ஜாம்பவானின் குகைக்குள் கிருஷ்ணர் சென்றதும் வெளியில் காத்திருந்த யாதவ சேனையினர், பன்னிரண்டு நாட்களாகியும் கிருஷ்ணர் திரும்பாததால், அவர் ஏதோ ஆபத்திற்கு உள்ளாகிவிட்டதாகக் கருதிக் கொண்டு, வசுதேவரை அடைந்து விவரம் கூறினர்.

    வசுதேவர், துக்கத்தில் மூழ்கினார். அதன் பின் தேவரிஷியான நாரதரின் ஆலோசனைப்படி, ஒன்பது நாட்கள் துர்க்கா தேவியைப் பூஜித்தார். ஒன்பதாவது நாளின் நிறைவில், ஸ்ரீகிருஷ்ணர் ஜாம்பவதியுடனும், ஸ்யமந்தகத்துடனும் துவாரகையை அடைந்தார். ‘மஹாமாயா ஸ்வரூபிணியான துர்கா தேவியின் வழிபாடே தன் புதல்வனை உயிருடன் அழைத்து வந்தது’ என எண்ணி வசுதேவர் மகிழ்ந்தார். இவ்வாறு துர்கையின் பெருமை, ஸ்ரீதுர்கா பிரபாவத்தில் பேசப்படுகின்றது.

    ‘யோக மாயை’ என்றும் ‘மஹாமாயை’ என்றும் போற்றித் துதிக்கப்படும் ஸ்ரீதுர்க்கை, முப்பெருந்தேவியரின் ஒருங்கிணைந்த வடிவம் என்று போற்றப்படுகின்றாள்.

    பராசக்தியான‌ அம்பிகை நான்கு வித சக்திகளாக இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. போக சக்தியாக பவானியும், குரோத சக்தியாக காளியும், போர்ச் சக்தியாக துர்க்கையும், புருஷ சக்தியாக விஷ்ணுவும் அருளுகிறார்கள். அதைப் போல், பராசக்தியிடமிருந்து உதித்த பஞ்ச பிரகிருதி சக்திகளுள் அந்தக‌ரணத்திற்கு அதிஷ்டாத்ரி தேவியாக இருப்பவள் துர்க்கா.

    ‘துர்கை’ என்ற பதத்தை சாக்த பஞ்சாக்ஷரமாகக் கூறுவதுண்டு (த,உ,ர,க,ஆ என்று பிரிக்கலாம். த என்ற எழுத்து அசுரர்களின் நாசத்தையும், உ என்ற எழுத்து விக்ந நாசத்தையும், ர என்ற எழுத்து ரோக நாசத்தையும் கஎன்ற எழுத்து பாப நாசத்தையும், ஆ என்ற எழுத்து பய நாசத்தையும் குறிக்கின்றது.).

    ஸ்ரீ துர்கா சப்த ஸ்லோகி, ஸ்ரீ துர்கா ஸூக்தம் முதலான மந்திரங்களின் சக்தி அளவிடற்கரியது.

    தேவி அனைத்து விதமான தவிர்க்க முடியாத துக்கங்களிலிருந்தும் தன்னை வணங்குபவரைக் காக்கின்றாள். முடிவில் பிறவிக் கடலினில் இருந்தும் தாண்டுவிக்கின்றாள்.

    கோகுலாஷ்டமி தினத்தில், கண்ணனையும், கண்ணனின் தங்கையையும் பூஜித்து மகிழ்வோம்!!

    =====================================================================================================

    (படத்துக்கு நன்றி:http://2.bp.blogspot.com/_Gilf-Htg-us/SXhx3sPJjQI/AAAAAAAAABg/xkE5btcRQQc/s400/art+pi+subadha+kamsa.JPG)

    Share
  • அக்காவுக்குத் தெரிய வேண்டாம்!

          ஜோதிர்லதா கிரிஜா

    “சந்துரு சார்” என்று சுருக்கமாய் அழைக்கப்படும் தன் அலுவலர் சந்திரசேகரன் கொஞ்ச நாள்களாய்த் தன்னைப் பார்க்கிற பார்வையே சரி யில்லை என்று நளினிக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. சில ஆண்களைப் போல் அருவருப்பை உண்டாக்கும் பார்வையை அவள் மீது அவர் என்றுமே படரவிட்டவர் அல்லர்தான். ஒருகால், அம் மனிதன் தனக்கு எரிச்சல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக வலிய விளைவித்துக்கொண்ட கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுகிறாரோ என்னவோ என்னும் எண்ணமும் அவளுக்கு அவ்வப்போது வந்துகொண்டிருந்தது. எனினும், கடந்த சில மாதங்களாய் அவரது பார்வையில் ஒரு வேறுபாட்டை அவள் தெளிவாய்த் தெரிந்து கொண்டிருந்தாள். பார்வை தப்பானதாக இல்லாவிட்டாலும் அதில் ஓர் ஆழத்தையும் ஏதோ சொல்ல வந்து அதை ஒத்திப்போட்டுக்கொண்டு இருந்ததையும் உள்ளுணர்வாய் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவருக்கு நாற்பது வயது என்பதும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் புற்று நோய்க்கு தன் மனைவியைப் பறி கொடுத்தவர் என்பதும் அந்த அலுவலகத்து ஊழியர்கள் அனைவருக்கும் தெரியும். முப்பத்தைந்து வயதுக்குள் மனைவியைப் பறிகொடுத்துவிட்டு அதன் பின் மறுமணம் பற்றிச் சிந்திக்காமல் இருந்து வந்தவராய்த் தோன்றிய அவர் மீது எல்லாருக்குமே ஒரு மரியாதை இருந்தது. அவ்வலுவலகத்தைச் சேர்ந்த தலைமை எழுத்தர்கள், சக அலுவலர்கள் ஆகியோர் திருமண வயதில் தங்களுக்கு மகள்கள் இருந்த நிலையில் அவரை வளைத்துப் போட முயன்றது உண்டுதான்.  ஆனால், அந்த எண்ணம் தமக்கு இல்லை என்று அவர் திட்டவட்டமாய்ச் சொல்லிவிட்டார். இந்தத் தகவலும் எல்லாருக்குமே தெரியும்.

    இந்த நிலையில், தன்னை அவர் அண்மைக் காலமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த வித்தியாசமான பார்வை நளினியைப் பாதித்தது. அவளும் அதனால் அவர்பால் கவர்ந்திழுக்கப்பட்டாள் எனும் பொருளில் அன்று. அது அவளுக்குப் பிடிக்கவில்லை எனும் பொருளில்தான் அந்தப் பாதிப்பு இருந்தது.  வாயைத் திறந்து ஒரு மனிதர் தம் எண்ணத்தை வெளிப்படுத்தாத வரையில் வெறும் பார்வைக்கு என்ன விதமாய் எதிரொலிப்பது என்று அவள் மலைத்தாள். தன் மேலதிகாரியை எரிச்சலோடு திருப்பி முறைத்துப் பார்ப்பது என்பது அவளது கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. அப்படி யெல்லாம் ஓர் அலுவலகத்தில் பணி புரியும் ஓர் இளம் பெண் தன் அலுவலரை முறைத்துக்கொள்ள முடியாது. அது அறிவுடமையும் ஆகாது. எனவே அவர் வாய் திறந்து அந்தப் பார்வை மாற்றத்துக்கான காரணத்தைத் தாமாகவே வெளிபடுத்துகிற வரையில் பொறுமையாக இருக்க வேண்டியதுதான் என்று காத்திருப்பதைத் தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. எனவே அவள் காத்திருந்தாள்.

    இவ்வாறு அவரது பார்வை மாற்றத்தை அவள் கவனிக்கத் தொடங்கியதன் பின் சுமார் ஆறு மாதங்கள் கழித்து அவள் எதிர்பார்த்திருந்த அந்த நாளும் வந்தது.

    வாய்மொழிக் கடிதங்களை வழக்கம்போல் சொன்னதன் பிறகு, “மிஸ் நளினி! உங்க கிட்ட நான் ஒரு பெர்சனல் விஷயம் பேசணும். நீங்க சம்மதிச்சா நாம வெளியே எங்கேயாவது ஓட்டலுக்குப் போய் காப்பி குடிச்சுக்கிட்டே பேசலாம். இல்லே, அதுக்கு நீங்க சம்மதிக்கல்லேன்னா, நீங்க சொல்ற எந்த எடத்துக்கும் நான் வரத்தயார்…. இல்லாட்டி, இங்கேயே கூட நான் அதைச் சொல்ல முடியும்,” என்று சன்னமாய்ச் சற்றே பிசிறடித்த தயக்கமான குரலில் கூறிய நேரத்தில் பாதி சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அவர் அவளை நேரடியாய்ப் பார்க்காமல் தலையைக் குனிந்துகொண்டார்.

    இப்படி ஒரு பேச்சை எதிர்பார்த்திருதவளாதலின், எவ்வாறு அதற்கு எதிரொலிக்க வேண்டும் என்பது பற்றி யோசித்து ஏற்கெனவே முடிவு செய்துவைத்திருந்த அவள், “என்ன சொல்லப் போறீங்க, சார்? ஓரளவுக்கு நான் ஊகிச்சேன்.  ஆனா அதை உங்க வாயிலேர்ந்து கேட்டதுக்கு அப்புறம் என் பதிலை நான் சொல்றேன்!” என்ற நளினியை அவர் சட்டென்று தலை உயர்த்தி வியப்புடன் பார்த்தார். ஏனெனில், அவள் குரலில் தேசலோ, தடுமாற்றமோ துளியும் இல்லை. அவளும் அவரை நேரடியாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் வெட்கமோ, அது சார்ந்த செம்மையோ அறவே தென்படவில்லை என்பதையும் அவர் கவனிக்கத் தவறவில்லை. கம்பீரம், தேவையற்றுச் சிரிக்காதிருத்தல், அளவான புன்சிரிப்பு, அடக்கமான ஆடை, அணிகலன்கள் ஆகியவற்றின் வாயிலாகத் தான் ஒரு மாறுபட்ட பெண் என்பதை அவருக்கு உணர்த்தியிருந்த நளினி அந்தப் பொதுமையான எதிர்ச்செயல் மூலம் அவரை மேலும் வியப்புற வைத்தாள். அவர் அவளை மரியாதையுடன் பார்த்தார்.

    அவரது வலக்கையின் விரல் மேசையின் விளிம்பில் இருந்த சிவப்பு மின்விளக்கின் பொத்தானை அழுத்தியதை அவள் கவனிக்கத் தவறவில்லை. அலுவலகம் தொடர்பான கமுக்கமான கடிதங்களை வாய்மொழிகையில் அவர் அந்தப் பொத்தானை அழுத்தி அறையின் வெளியே சிவப்பு விளக்கு எரியச் செய்வது வழக்கம். அலுவலரின் அறைக்கு வெளியே சிவப்பு விளக்கு எரியும் போது யாரும் கதவைத் தட்டிவிட்டும் கூட உள்ளே வரக்கூடாது– உள்ளே வர அனுமதி கேட்கவும் கூடாது-  என்பது அலுவலக விதி.

    “சொல்லுங்க, சார்!”

    சந்திரசேகரனை அவளது எதிரொலி தயங்க வைத்தது. அவரது தலை தாழ்ந்துகொண்டது. என்ன முயன்றும் அவரால் அவளை நேருக்கு நேராய்ப் பார்க்க முடியவில்லை. எனினும், குரலைச் செருமிச் சரிப்படுத்திக்கொண்டு, “ நீங்களே சரியா ஊகிச்சுட்டீங்கன்னு நினைக்கிறேன்…” என்றார்.

    “நான் ஊகிச்சேனா இல்லையான்றதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், சார்.  நீங்க சொல்ல வந்ததைச் சொல்லுங்க!”

    அதன் பின் அவர் சற்றே தலை உயர்த்தி அவளை அரையாகப் பார்த்தார்: “நான் மனைவியை இழந்தவன்கிறது உங்களுக்குத் தெரியும். இல்லியா?”

    “தெரியும்.”

    “என் மனைவி தவறிப்போய் அஞ்சு வருஷம் ஆயிடிச்சு. எனக்குக் குழந்தைகள் இல்லேன்றதும் உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்.”

    “தெரியும், சார்.”

    “அஞ்சு வருஷமா மறுமணத்துல ஆர்வம் இல்லாமதான் இருந்தேன்.  ஆனா இப்படியே முழு வாழ்க்கையையும் கழிச்சுட முடியாதுன்னு தோணுது.. அதனால, மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிறதுன்ற முடிவுக்கு வந்திருக்கேன்…”

    “அது உங்க சொந்த விருப்பம். அது சரியான முடிவும்தான், சார்.”

    அவள் இவ்வாறு சொன்னதும், அவரது அரைப் பார்வை ஒரு நம்பிக்கையுடன் முழுப் பார்வையானது.

    “என் வயசு தெரியுமா உங்களுக்கு?”

    “தெரியும், சார். வர்ற மே மாசம் உங்களுக்கு நாப்பது முடியுது. உங்க பெர்சனல் ஃபைல் என்கிட்ட தானே இருக்கு? அதனால தெரியும்.”

    அவளது ஜாக்கிரதையான பதிலை அவர் தம்முள் மெச்சிக்கொண்டார்.

    “உங்களுக்கு இருபத்தேழு ஆகுது. இல்லியா?”

    “ஆமா.”

    “பதிமூணு வயசு வித்தியாசம்.  ஆனா இன்னும் எனக்கு ஒரு நரை முடி கூடக் கிடையாது…”

    நளினிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அதை மறைக்க அவள் முயலவில்லை.

    “சார்! ஒரு நிமிஷம்… உங்க ஆர்வத்துக்கு ரொம்ப நன்றி.  ஆனா அதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட சில விஷயங்களைச் சொல்லணும். முதல் உண்மை எனக்கு இதிலே ஆர்வம் கிடையாது…”

    “அப்படிச் சொல்லாதீங்க, நளினி! உங்க மேல எனக்கு ஒரு பிடிமானம் ஏற்பட்டிருக்கு. அதை லவ்னே சொல்லலாம். என் மனைவியை நான் லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கல்லே. அது என் அம்மா-அப்பா செஞ்சு வெச்சது…அதுக்காக நான் அவளை நேசிக்கல்லேன்னெல்லாம் பொய் சொல்ல மாட்டேன்.”

    “உங்க நேர்மையான பேச்சைப் பாராட்டுறேன், சார்! ஆனா, ஒரு நிமிஷம்… நான் இன்னும் பேசி முடிக்கல்லே. எங்க குடும்பத்தைப் பத்தி உங்க கிட்ட நான் பேச வேண்டியிருக்கு. நாங்க மொத்தம் அஞ்சு பேரு. நாலு பொண்ணுங்க. கடைசியா ஒரு தம்பி.  நான் மூணாவது பொண்ணு. எனக்கு அப்பா கிடையாது. எங்கப்பா செத்துப் போன போது எனக்குப் பதினஞ்சு வயசு. எனக்கு முந்தினவளுக்குப் பதினெட்டு.  எல்லாருக்கும் மூத்த அக்காவுக்கு இருபத்தொரு வயசு. கெட்ட வழக்கம் எதுவும் இல்லாத நல்ல அப்பா அவரு.  ஆனா ரொம்பப் படிக்காதவரு. ஒரு ப்ரைவேட் கம்பெனியில வாச்மேனா இருந்தவரு. அவரோட சொற்ப சம்பாத்தியத்துக்கு எங்களையெல்லாம் அவர் படிக்கவெச்சுக்கிட்டு இருந்ததே அதிகப்படி. அவர் காலமானதும் எங்களுக்கெல்லாம் கண்ணைக்கட்டிக் காட்டில விட்டது மாதிரி இருந்திச்சு. நிராதரவா உணர்ந்தோம். எங்கம்மா அப்படியே இடிஞ்சு போயிட்டாங்க. ஹார்ட் பேஷண்டாவும் ஆயிட்டாங்க. கையில சேமிப்பு எதுவும் இருக்கல்லே. இருந்த சொற்பத்துல அவங்களுக்கு வைத்தியம் பார்த்தோம். எல்லாமே கரைஞ்சிடிச்சு. ஆனா, எல்லாருக்கும் மூத்த எங்கக்காவுக்கு வேலை கிடைச்சிச்சு. மத்தவங்கல்லாம் படிச்சுக்கிட்டு இருந்தோம். அவளால தான் எங்க குடும்பம் அரையும் குறையுமாச்  சாப்பிட்டு வாழ்ந்திச்சு. சில நாள் ஒரு வேளைதான் சாப்பிட முடிஞ்சிச்சு. அவ வேலைக்கு வந்ததுக்கு அப்பால அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் அடுத்த அக்காவுக்கு வேலை கிடைச்சிச்சு. அதுக்கு ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் எனக்கு இந்தக் கம்பெனியில ஸ்டெனோ வேலை கிடைச்சிச்சு. எனக்கு அஞ்சு வருஷம் செர்வீஸ் ஆகுது.  அப்ப? எங்கக்காவுக்கு இப்ப முப்பத்து மூணு வயசு ஆகுது. அவளுக்கு இன்னும் கல்யாணம் பண்ணி வைக்க முடியல்லே. வரதட்சிணை வாங்குற பழக்கம் ரொம்பவே குறைஞ்சிடுச்சுன்னு பலரும் உளறிக்கிட்டு இருக்காங்க. அது பணக்காரக்குடும்பங்கள்ல தான் நடக்குது. அதனால, என்ன பிரயோசனம்? ஏழைங்களும், நடுத்தரக்குடும்பங்களும் இன்னும் இந்த வரதட்சிணைப் பேயால கஷ்டப்பட்டுக்கிட்டுத்தான் இருக்காங்க….நீங்க என்னை லவ் பண்றதாச் சொன்னீங்க. அதை நான் தப்புன்னு சொல்லமாட்டேன்.  நீங்க லவ் பண்ற பொண்ணோட வேண்டுகோளை நிறைவேத்தி வெச்சிங்கன்னா, உங்க லவ் உண்மையான லவ்னு நான் நம்புவேன், சார். யாரை நாம லவ் பண்றோமோ அவங்களோட சந்தோஷம்தானே நம்ம குறிக்கோளாய் இருக்கணும்? இல்லியா, சார்?”

    அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது அவருக்குப் புரியவே செய்தது. அவர் மேலும் மரியாதையுடனும் களங்கமற்ற அன்புடனும் அவளைப் பார்த்தவாறு இருந்தார்.

    “சொல்லுங்க, சார்.”

    “விஷயத்துக்கு வாங்க.”

    “புரியாதவங்களுக்குத் தானே சார் விஷயத்தைச் சொல்லிட்டு இருக்கணும்? சரி. என் வாயாலே சொல்லிடறேன். என் மேல நீங்க வெச்சிருக்கிற அன்பு உண்மையானதாய் இருந்தா எங்க மூத்த அக்காவை நீங்க கல்யாணம் பண்ணிக்கணும்! அவளைப் பார்த்துட்டே நீங்க சம்மதமோ மறுப்போ சொல்லலாம், சார். அவ என்னை விட அழகாய் இருப்பா. ரொம்ப நல்லவ சார் எங்கக்கா. கல்யாணமே வேண்டாம்னு இருக்கா சார் அவ.  எங்களுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வைக்கிறதுதான் அவளோட லட்சியமாம். ஏன்னா அவளுக்கு முப்பத்து மூணு வயசு ஆயிடிச்சாம். வரிசையாத்தான் பண்ணணும்னு முனைஞ்சா எல்லாருக்குமே வயசு ஆயிடுமாம். சொல்றா! தவிர, உங்க வயசுக்கு அவ அதிகம் பொருத்தமானவ. இல்லியா, சார்?”

    சந்திரசேகரன் கண்ணிமைக்காமல் நளினியைப் பார்த்தவாறு இருந்தார். முகத்தில் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. கடந்த ஆறு மாதகாலத்துக்கும் மேலாய் அவரது பார்வையில் தோன்றி இருந்த கள்ளம் காணாமல் போய் விட்டிருந்தது.

    “நீங்க சொன்னது ரொம்பவே சரி, மிஸ் நளினி! தன் அன்புக்கு உரியவளைச் சந்தோஷப்படுத்துறதுதான் ஒரு நல்லவனோட கடமை. நான் நல்லவன்னு உங்ககிட்டேருந்து செர்ட்டிஃபிகேட் வாங்கறதுல ஆர்வமுடையவனாய் இருக்கேன், மிஸ் நளினி!”

    “தேங்க்யூ, சார்! என்னிக்குப் பொண்ணு பார்க்க வர்றீங்க?”

    “நீங்க இவ்வளவு சொன்னதுக்குப் பெறகு, உங்க அக்காவைப் பார்க்காமயே என் பதில் ‘யெஸ்’ தான்! ஆனா அவங்க என்னைப் பார்க்கணுமில்லே? அதானால நீங்க என்னைக்கு வரச் சொல்றீங்களோ அன்னைக்ககு வர்றேன்.”

    “தேங்க்ஸ், சார்.  ஆனா மச்சினியை யாராச்சும் நீங்க, வாங்க, போங்கன்னு பன்மையில பேசுவாங்களா?”

    “மாட்டாங்கதான்! ஆனா அது எங்க கல்யாணத்துக்குப் பெறகு!” என்று அவர் சிரித்த சிரிப்பில் அவளும் கலந்துகொண்டாள்.

    இருவரும் சேர்ந்து இரைச்சலாய்ச் சிரித்தது வெளியே கேட்க, கதவுக்கு அருகே முக்காலியில் உட்கார்ந்திருந்த பியூன் கந்தசாமி, “ரெட் லைட்டைப் போட்டுக்கிட்டு கூத்தடிக்கிறாங்கப்பா உள்ளே ரெண்டு பேரும்!” என்றான்.

    இது பற்றி  அறியாத நளினி, “ஆனா நீங்க எனக்கு ஒரு சத்தியம் பண்ணித் தரணும்…” என்றாள்.

    “என்ன!”

    “இப்ப நாம பேசினது எதுவும் எங்க அக்காவுக்குத் தெரியவே கூடாது!”

    “சொல்லவே மாட்டேன்! நானென்ன மடையனா?” என்றார் சந்திரசேகரன்.

    Share
  • நினைவான பாரதியின் கனவு!

    பவள சங்கரி

    தலையங்கம்

    மத்திய அரசின் உணவு பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதில் அரசாங்கத்திற்கு பொது மக்களின் மனப்பூர்வமான வாழ்த்துகள்! இதற்கு உறுதுணையாக நின்ற மத்திய மாநில அரசு மற்றும் அரசியலாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வோம். பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்தோம் என்று காட்டக்கூடிய முதல் நடவடிக்கையாக இதைக் கருதலாம். 1960 மற்றும், 1940களிலும் ஏற்பட்ட பஞ்சங்கள் பற்றிய செய்திகளை இன்று நினைத்தாலும் கண்ணீர் மழையாகப் பொழிவதை மாற்றியமைத்து நாட்டின் 67 சதவிகித மக்கள் பயனடையும் வகையில் இந்த வளமானச் சட்டத்தை நிறைவேற்றி வயிற்று உணவிற்கு வழி செய்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி வகுத்த ஆட்சியாளர்களுக்கு நன்றி தெரிவிப்போம். இந்தத் திட்டத்திற்காக அரசு ரூ.1.25 லட்சம் கோடியை செலவிடவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. குச்சிக் கிழங்கைச் சாப்பிட்டும், விவசாயிகள் வறண்டு போன வயல்களில் எலியைப்பிடித்து சுட்டுத் தின்று பசியாறிய கொடுமைகளெல்லாம் இனி நடக்காது என்று உறுதியாக நம்புவோம். தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள் குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி அல்லது கோதுமை போன்றவைகளை இலவசமாக வழங்கியும் வழிகாட்டியுள்ளனர் என்பதையும் இந்த நேரத்தில் நினைவு கூறலாம். இந்தச் சட்டத்தின் நடைமுறை இடர்பாடுகளைக் களைந்து முழுமையாக இத்திட்டம் மக்களைச் சென்று அடைவதற்கு உண்டான வழிவகைகளையும் மேற்கொள்ள வேண்டும் . எந்த நாட்டிலும் இல்லாத வகையிலான ஒரு அற்புதமான திட்டம் இது என்பதில் ஐயமில்லை.

    ஆயினும், எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணம் காட்டும் நாம், அங்கு இருப்பது போல பணிரண்டாம் வகுப்பு வரையிலான கட்டாய இலவசக் கல்வியைக் கொண்டுவர வேண்டுமென்ற பொது மக்களின் ஆதங்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். கல்விக்கூடங்கள் அறச்சாலைகளாக இருப்பதைவிட்டு ஒரு வணிகத்தளமாக, தொழிலகமாக மாறிவிட்டது வேதனைக்குரிய விசயம். இப்போது இருக்கும் கட்டணங்களே அதிகமாக இருக்கும் நிலையில் மேலும் அதை அதிகப்படுத்திக்கொண்டே போவதும் அதற்கு மாநில அரசு நீதியரசர் தலைமையில் ஒருவரை நியமித்து ஆய்வுக்கு உட்படுத்தவும், அவரும் ஒரு மிகப்பெரிய தொகையைக் கட்டணமாக பெற்றோரின் மீது சுமத்துவதும், அதுவும் பத்தாது என்று பள்ளி நிர்வாகங்கள் கூறிக்கொண்டு சிலர் வழக்கு மன்றம் செல்வதும், சிலர் ஏற்றுக்கொள்வதும் வேடிக்கையான காட்சியாக உள்ளது. இதில் சில நிர்வாகங்கள் தன்னிச்சையாகவே கட்டணங்களை அதிகப்படுத்திக்கொள்வதும். குழந்தைகளின் பெற்றோர்கள் தெருவில் இறங்கி போராடுவதும் வாடிக்கையாகிக் கொண்டிருக்கிறது. இலவசப் பொருட்கள் நமக்குத் தேவையில்லை. தொலைக்காட்சிப் பெட்டியோ, காற்றாடி, மாவரைக்கும் இயந்திரம் என எந்த இலவசமும் வேண்டியதில்லை. கட்டாய இலவசக் கல்வித்திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது. மாற்று திட்டங்கள் மூலமாகவாவது பெற்றோரிடம் பணம் வசூலிப்பதையும் தடுக்க வேண்டுமென்றால் பணிரெண்டாம் வகுப்புவரை இருக்கும் அனைத்து கல்விக்கூடங்களையும் அரசுடமையாக்க வேண்டுவது மட்டுமே முழுமையான தீர்வாக இருக்க முடியும். இலவசப் பொருட்கள் வேண்டாம், இலவசக் கல்வியைக் கொடுத்து கண்ணைத் திறவுங்கள். மன்னர் மானியம் ஒழிக்கப்படவில்லையா?, வங்கிகள் தேசிய உடமையாக்கப்படவில்லையா?, பேருந்துகள் நாட்டுடமையாக்கப்படவில்லையா?. அதே போன்று மக்கள் நலவாழ்விற்காக, குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காக, அனைத்து கல்வி நிலையங்களும் தேசிய உடமையாக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் பேராவலாக இருக்கிறது என்பதையும் அரசு உணர வேண்டும்.

    Share
  • ராதை பிறந்தாள் !கோதை பிறந்தாள்!

    சத்திய மணி

     

    (ஸ்ரீஜெயந்தி வருமுன்னர் அவசரமாய் ராதைப் பிறந்தாளா?…ஆம் ராதை எங்கே
    கண்ணன் அங்கே…..)
    ராதை பிறந்தாள் குட்டி ராதை பிறந்தாள்images (1)
    புதுக் கீதங்கள் பிறந்ததம்மா
    கோதை பிறந்தாள் கிளிக் கோதை பிறந்தாள்
    இனிக் கண்ணனுக்கு சந்தோஷமா? ()

    கன்னித் தமிழோ இல்லை நெல்லைத் தமிழோ
    சென்னித் தமிழோ இல்லைச் சென்னைத் தமிழோ
    ஆசைத் தமிழோ இல்லை ஓசைத் தமிழோ
    பூசைத் தமிழோ இல்லைப் பாசத் தமிழோ
    கேட்கும் இனிமேல் அதைச் சேர்க்கும் கவிமேல்
    பூக்கும் மடிமேல் தம்பி பாடப் பழகு()
    ராக்கன் இசையோ இல்லை ஜாக்ஸன் இசையோ
    காக்கும் ரங்கனின் திருப் பாவை இசையோ
    நாக்கில் உதிர்க்கும் கண்ண தாசன் இசையோ
    நாட்டை எழுப்பும் மீசைக்காரன் இசையோ
    கேட்கும் மழலை இனி சேர்க்கும் குழலை
    தூக்கம் மடிமேல் தாலாட்டப் பழகு

     

     

    Share
  • கண்ணனின் கட்டளை!…

    பெருவை பார்த்தசாரதி

    images1966 ஆம் வருடம் கவிர் வாலி இயற்றிய ‘கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் கண்ணன் பிறந்தான்’ என்ற அருமையான திரையிசைப் பாடல் இன்று அனைவரது நினைவுக்கும் வரும். வருஷம் தோறும், ஆவணி மாதம், கிருஷ்ணபட்ச அஷ்டமி தினத்தை, கண்ணனின் அவதாரத் திருநாளாகக் கொண்டாடுகிறோம். அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டப் பிறந்த கண்ணனின் பிறந்த நாளன்று வல்லமை வாசகர் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கிருஷ்ணாவதார நோக்கமும், கிருஷ்ணலீலைகளும் யாவரும் அறிந்ததே. இதைப் பற்றிச் சொல்லாதவர்களும், எழுதாதவர்களும் கிடையாது என்றே கூறலாம். ஸ்ரீகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று, கிருஷ்ணாவதாரத்தில் நடந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றி அனைவரும் அறிந்திருந்தாலும், வித்தியாசமான கண்ணோட்டத்தில் அதன் உட்கருத்தை மட்டும் ஆறாய்வோம்.

    வசுதேவருக்கும், தேவகிக்கும் பிறந்த ஆறு குழந்தைகளை கம்சன் மிகவும் கொடூரமாக, முறட்டுத்துத்தனமாக, எப்படிக் கொன்றான் தெரியுமா?……அந்தப் பிஞ்சுக்குழந்தைகளின் இருகாலைப் பிடித்து உயரே சுழற்றி, அதன் தலையை சுவற்றில் அடித்துக் கொல்வானாம்.

    ஆறு குழந்தைகளை கொன்றபிறகு, ஏழாவது முறையாக தேவகியின் வயிற்றில் ஆதிசேடனுடைய அம்சம், கர்ப்பமாக வந்து தங்கியது. பகவான் துஷ்டர்களை அழிக்கும் பொருட்டு திருஅவதாரம் செய்யவேண்டிய காலம் நெருங்கி விட்டதை உணர்ந்து, மாயையை அழைத்து, பின் வருமாறு கட்டளையிடுகிறார்.  ‘நீ தேவகியின் வயிற்றில் வளரும் கருவை எடுத்து,  வசுதேவரின் முதல் மனைவியான ரோகினியின் வயிற்றிக்கு மாற்றி விடு, அதற்கு பதில் நான் தேவகியின் வயிற்றில் அவதாரம் செய்வேன்’ என்கிறார். அதேநேரத்தில் நந்தகோபரின் மனைவி யசோதையின் வயிற்றில் நீ பெண்ணாகப் பிறக்கவேண்டும்.  ஆண்டவன் கட்டளை அல்லவா, இந்த மாற்றம் ஒரு சில நொடியில் நடந்துமுடிந்ததை மானுடர்கள் ஒருவரும் அறிகிலர். கம்சனின் பயத்தால் தேவகியின் கர்ப்பம் கலைந்துவிட்டது என்று, மக்கள் தினமும் கம்சனை நிந்திக்கத் தொடங்கினர்.

    சில நாட்களுக்கு பிறகு தேவகி எட்டாவது முறையாக கருவுற்றாள் என்ற செய்தி அறிந்த கம்சன், முதலில் அவளையே கொன்றுவிட எண்ணுகிறான். அதன்பிறகு, பெண் கொலை, சகோதரி கொலை, கர்ப்பிணி கொலை என மூன்று கொடும்பாவங்களும் சேர்ந்து கொள்வதால் இந்த எண்ணத்தை கைவிடுகிறான். இந்த நேரத்தில்………

    இனிநடக்கப்போவதெல்லாம் ஆண்டவன் கட்டளையாயிற்றே!…..அதன்படிதான் எல்லாம் அரங்கேரவேண்டும். அப்போது மீண்டும் ஒரு மாற்றம் நிகழ்கிறது.  வசுதேவர் தேவகிக்குப் பிறந்த தெய்வக்குழந்தையை கோகுலத்து யசோதையிடம் விட்டு விட்டு, யசோதையிடம் இருக்கும் பெண்குழந்தையை மதுராபுரி தேவகிக்கும் ஒரே நேரத்தில் மாற்றம் செய்கிறார்.

    images (2)கண்ணிமைக்கும் நேரத்தில், மாற்றங்கள் சட்டென முடிவடைகிறது, பின்னர் கம்சனுக்கு எட்டாவது குழந்தை பற்றிய விஷயம் தெரிவிக்கப்பட்டவுடன், அவன் வாளை உறுவிக்கொண்டு, தேவகியின் கூச்சலைப் பற்றி கவலைப்படாமல், குழந்தையின் இரு கால்களைப் பற்றி, ஒரு சுழற்று சுற்றி ஓங்கி சுவற்றில் அடிப்பதற்க்கு முன்னால், மஹாசக்தியின் அம்சமல்லவா அந்த மாயக்குழந்தை,  கம்சனின் கைநழுவி வானத்தில் ஓரிடத்தில் நின்று,  “ஏ மூடனே, என்னை உன்னால் கொல்லமுடியாது, தெரிந்தோ, தெரியாமலோ எனது காலை பிடித்துவிட்டாய், காலைப்பிடித்தவனை நான் ஒருபோதும் கொல்லமுடியாது, எனது காலைப்பிடித்தால் அது சரணாகதிக்குச் சமம், அதனால் உன்னை மன்னித்துவிடுகிறேன். மேலும் ‘உன்னை கொல்வதற்கு ஒருவன் ஒருத்திக்கு மகனாய்ப் பிறந்து, வேறொருத்தியிடம் மகனாய் வளர்ந்து வருகிறான்’ என்று கூறி மறைகிறாள்”.

    இச்சொல்லைக் கேட்டபிறகு, கம்ஸனுக்கு மரணபயம் வந்து, அந்த  மரணபயமே கம்சனின் பாதி உயிரை எடுத்து விடுகிறதாம். மரண பயம் என்பது மரணத்தை விடக்கொடியது. இந்த பயமே, பலரை வாட்டி, வதைப்பதை நாம் எல்லோரது அனுபவத்திலும் காணலாம். மரணத்தை மனிதன் மறந்தாலும், அது நம்மை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொண்டிருக்குமாம்.

    ஆங்கிலப் படங்களில் வரும் சில மெய்சிலிர்க்கும் காட்சியைப் பார்த்திருக்கிறோம். படம் மிகச் சுவாரஸ்யமாகப் ஓடிக்கொண்டிக்கும்போது, வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, அனைவரையும் கொடுமைப் படுத்தி, உலகை அழிக்க சவால் விட்டுக் கொண்டிருப்பான். இதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாக கதாநாயகன் மிகச்சாதாரணமா, கண்ட்ரோல் ரூமை அடைந்து, அதன் மூலம் வில்லனின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதைப்போல்……

    images (1)இறைவன் உலகில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். வசுதேவர், குழந்தையாகிய பகவானைத் தலையில் கூடையில் வைத்து எடுத்துச் செல்வதற்காக எத்தனிக்கும்போது,  வசுதேவருடைய கைவிலங்குகள் மற்றும் கால்விலங்குகள் அவரை அறியாமலேயே கழன்று விலகும், சிறைக்கதவுகள் தானாகத் திறக்கும். வழிப்பயணத்தின் போது, ஆதிசேஷன் துணையாகவும், தனது படத்தை விரித்து குடையாக மழையிலிருந்து பகவான்சிசுவைப் பாதுகாப்பான், யமுனைநதி தனதுயிரைப் பிடித்து நிறுத்தி, நீரைப் பிரித்து,  தானே வழிவிடுவாள், இச்சம்பவத்தின் போது எல்லாமே மாயையின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். வசுதேவர், யாதொரு கவலையும் இல்லாமல், இறைவன் இட்ட கட்டளையை இச்சையுடன் நிறைவேற்றுகிறார்.

    இறைவனைச் சரணாகதி அடைந்து, அவனே கதி என்பதை ஏற்றுக் கொண்டால், மற்றதெல்லாம் நாம் நினைத்தபடி நடக்கும் என்பதுதான இந்நிகழ்ச்சியின் நீதி. 5000 வருடங்களுக்கு முன்பே இந்த மாற்றங்கள் நிகழ்ந்த போது, ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். வசுதேவரின் கை மற்றும் கால் விலங்குகள் எப்படி தாமாக விலகியதோ, பகவானைச் சரணந்தவர்களிடம், பிறப்பு, இறப்பு, வாழ்க்கை போன்ற துன்பங்கள் அனைத்தும் தாமாக விலகிவிடும். நித்தமும், அனுதினமும் கண்ணனைத் தியானிப்பவர்களுக்கு பிறவித் துன்பம் இல்லை என்பதுதான் கண்ணனின் பிறவித் தத்துவம். இந்நிகழ்ச்சிகளைக் கூர்ந்து படித்து கிரகித்துக் கொள்வதின் மூலம், இதன் உட்பொருள் அறியமுடியும்.

    இந்நிகழ்ச்சிகளின் உட்கருத்தைப் படம்பிடித்துக் காட்டுவது போல, சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் திருப்பாவையில் உள்ளடக்கிய 25 வது பாசுரத்தில் மிக அழகாகப் பாடியதைப் பார்போம்:-

    ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

    ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,

    தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த

    கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

    நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

    அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்

    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

    வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

    பொருள்:

    தேவகிக்கு மகனாய் பிறந்து அதே இரவில், யசோதையின் மகனாய் ஒளிந்து வளர்ந்துவர, அதைப் பொறுக்காது உன்னைக் கொல்ல நினைத்த, கம்ஸனின் வயிற்றில் நெருப்பாக நின்றாய்!, எங்கள் குறை தீர்க்கும்படி உன்னைப் பிரார்த்தித்து, வந்தோம், நாங்கள் விரும்பியதைத் தருவாயானால், லக்ஷ்மி தேவி விரும்பும் உன் குணச்செல்வத்தையும், உன் வீரத்தையும் நித்தமும் பாடி வருத்தம் நீங்கி மகிழ்ந்து கொண்டே இருப்போம்.

    images (3)இந்தப் பாசுரத்தில் அடங்கிய எண்ணற்ற தத்துவங்களைப் போல், மேலும் பல மகிமைகளையும், உட்கருத்துக்களையும் கிருஷ்ணாவதாரத்தின் அடிப்படைத் தத்துவம் உட்பட பல தகவல்களை, ஸ்ரீமத் பாகவதத்திலுள்ள,  பத்தாம் ஸ்கந்தத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இச்சம்பவத்தைப் போல் வெண்ணெய் திருடுதல், ராஸ நடனம் புரிந்து கோபியர்களின் உடைகளைக் களவாடுதல், புல்லாங்குழலில் கிருஷ்ணகானம் போன்ற கண்ணனின் ஒவ்வொரு லீலைகளுக்குள்ளும் பல உண்மைத் தத்துவங்கள் அடங்கி இருக்கிறது.

    கிருஷ்ண ஜெயந்தியன்று பாகவதம் முழுவதும் படித்தால் நலம்தரும், முடியாதவர்கள் பகவத்கீதை படிக்கலாம், அதுவும் முடியாதவர்கள் கிருஷ்ணாவதாரத்தில் நிகழ்ந்த கிருஷ்ணலீலைகளுள் ஒன்றையாவது படித்தால் அதைவிடப் புண்ணியம் வேறொன்றுமில்லை என்பது, நமது பூர்வாச்சார்யர்கள் மற்றும் மஹான்களின் கருத்தாகும்.

    “ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து”

    Share
  • கோகுலத்தில் கோலாகலம்!

     

    -கவிநயா

    கோகுலமே ஒரே நிசப்தமாக இருந்தது. கொலுசுச் சப்தம் கூட பூதாகரமாகக் கேட்பது போல் இருந்ததால், நிசப்தமான இடத்தில் குரலெழுப்பாமல் இரகசியக் குரலில் பேசிக் கொள்வது போல், சப்தம் எழுப்பாமல் கொலுசணிந்த பாதங்களை மெதுவாக எடுத்து வைத்து நடந்தாள், ராகினி.

    ராகினி அவள் அம்மாவுடன் கோகுலத்தில் வசிக்கும் அத்தை மகள் லலிதை வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள்.

    கிருஷ்ணன் பிறந்தது முதல் கோகுலத்தை விட்டு எங்கேயும் வருவதில்லை, லலிதை. அதனால் அவளை (கிருஷ்ணனையும்) பார்க்கும் ஆவலில், அம்மாவையும் இழுத்துக் கொண்டு இங்கேயே வந்து விட்டாள், ராகினி!

    ஆளரவமேயின்றி திறந்து கிடந்த வீடுகளை வியப்போடு வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தார்கள், இருவரும். பகல் நேரத்தில் இப்படி ஒரு நிசப்தமா? கொஞ்சம் அச்சமாகக் கூட இருந்தது இருவருக்கும்.

    இதோ… லலிதையின் வீடு!

    லலிதையின் வீடும், இவர்கள் பார்த்த மற்ற வீடுகள் போலவே திறந்துதான் கிடந்தது. வீட்டில் யாரும் இருப்பது போலவே தெரியவில்லை. எல்லோரும் எங்கே போயிருப்பார்கள்? ‘லலிதை’ என்று சப்தமாகக் கூப்பிடக் கூட ஒரு மாதிரியாக இருந்தது. உள்ளே சென்று பார்க்கலாம்…

    உள்ளே… கூடத்தில்… அவர்கள் கண்ட காட்சி!

    ஒரு பெரிய பையன் குனிந்து கொண்டிருக்க, அவன் மீது ஒரு சின்னப் பையன் ஏறிக் கொண்டு, உறியிலிருந்த பானையை எடுத்துக் கொண்டிருந்தான்.

    “ஆ!” என்று தன்னையுமறியாமல் சப்தமிட்டாள் ராகினி.

    திடீரென்று கேட்ட குரலால் திடுக்கிட்டு, பானையைத் தவற விட்டு விட்டான், அந்த நீல வண்ணச் சிறுவன். பானை கீழே விழுந்து உடைய, அதிலிருந்த வெண்ணெய் வெள்ளை வெளேரன்று பந்து பந்தாய் ஆங்காங்கே சிதறியது. சட்டென்று கீழே குதித்த அவன், ராகினியும் அவள் அம்மாவும் அங்கே வாய் பிளந்து நிற்பதைக் கண்டும் காணாதது போல், சாவகாசமாகக் கீழே உட்கார்ந்து வெண்ணெயைக் கைகள் நிறைய அள்ளி வாய் நிரம்ப வைத்து உண்ண ஆரம்பித்தான். அந்த இன்னொரு சிறுவனையும் உண்ணும்படி சைகை செய்தான்.

    “மாட்டிக் கொண்டாயா!”

    என்ற உற்சாகக் குரலைக் கேட்டுத் திரும்பினாள், ராகினி.

    அங்கு நின்றிருந்தவள், சாட்சாத் அவள் அத்தையேதான்! லலிதையின் அம்மா.

    ராகினியையும், அவள் அம்மாவையும் பார்த்தவள், “வாருங்கள் அக்கா, வா ராகினி. உங்களைப் பார்த்ததில் ரொம்பவும் சந்தோஷம். ஆனாலும் உங்களைக் கவனிப்பதற்கு முன், இந்தப் பயலை அவன் அம்மாவிடம் கொண்டு ஒப்புவித்து விட்டு வந்து விடுகிறேன்.”

    நீலப் பையன் தப்பிச் செல்ல எந்த அவசரமும் காட்டவில்லை. யாரோ என்னவோ நமக்குச் சம்பந்தமில்லாததைப் பேசுகிறார்கள் என்பது போன்ற பாவனையுடன், குறும்புச் சிரிப்புடன், வெண்ணெயை அள்ளித் தின்று கொண்டிருந்தான்.

    “இந்தக் கள்ளக் கிருஷ்ணன் வெண்ணெய் திருடுகிறான் என்று நான் சொன்ன போதெல்லாம் இவன் அம்மா யசோதா என்னை நம்பவே இல்லை. அவனைக் கையோடு பிடித்துக் கொண்டு வா, அப்போது பார்க்கலாம் என்று சொல்லி விட்டாள்! இவனைப் பிடிக்கத்தான் இத்தனை நேரம் ஒளிந்து கொண்டு காத்திருந்தேன்! இதோ இப்போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டானே!”

    என்று சொல்லியபடி, லலிதையின் அம்மா நீலக் கிருஷ்ணனின் ஒரு கரத்தை இறுகப் பற்றி இழுத்துக் கொண்டு, யசோதையின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். ராகினியும், அவள் அம்மாவும் கூடவே, என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆவலுடன் அவளைப் பின் தொடர்ந்தார்கள்.

    இவர்கள் போகும் வழியில் இன்னொருத்தியும் ஒரு கையை நீட்டிப் பிடித்தபடி வந்து கொண்டிருந்தாள். யாரையோ பிடித்திருப்பது போல பாவனை இருந்தாலும், அவளுடன் வேறு யாரும் வருவதாகத் தெரியவில்லை; அவள் மட்டும் வருவதாகவே ராகினிக்குத் தெரிந்தது.

    கொஞ்ச தூரம் சென்றதும், இன்னொருத்தியும் அதே போல கையை நீட்டிப் பிடித்தபடி வந்தாள். (அதாவது, ஒருத்தி பிடித்திருந்த கிருஷ்ணனை இன்னொருத்திக்குத் தெரியவில்லை!) இப்படியே ஒவ்வொருத்தியாகச் சேரச் சேர, ஒரு பெரிய கூட்டமே சேர்ந்து விட்டது. பெரியதொரு ஊர்வலம் போல அனைவரும் சேர்ந்து யசோதையின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்கள்!

    “யசோதா!”

         “யசோதா!”

                 “யசோதா!”

    ஆளுக்கொரு குரலெழுப்பிக் கூப்பிட்டார்கள். யசோதா வெளியில் வந்தவள், இத்தனை பெரிய கூட்டத்தைப் பார்த்துத் திடுக்கிட்டாள்.

    “என்னடி இது? அத்தனை பேரும் ஒன்றாகச் சேர்ந்து வந்திருக்கிறீர்கள்? அது மட்டுமில்லாமல் எல்லோரும் ஒரு கையை ஒரு பக்கமாக நீட்டிக் கொண்டே வேறு இருக்கிறீர்கள்? எல்லோருக்கும் ஒரே சமயத்தில் கை சுளுக்கிக் கொண்டு விட்டதா?”, முகவாயில் கை வைத்துக் கொண்டு ஆச்சரியமாகக் கேட்டாள். அவளுக்கும் அவர்கள் எல்லோரும் பிடித்திருந்ததாக நினைத்த கிருஷ்ணர்கள் தெரியவில்லை.

    “யசோதா! உன் பிள்ளை எங்கள் வீடுகளில் வெண்ணெய் திருடுகிறான் என்று சொன்ன போது நம்ப மாட்டேனென்றாயே? கையோடு பிடித்துக் கொண்டு வா, பார்க்கலாம் என்றாயல்லவா? பார் உன் பிள்ளையை! வெண்ணெய் அள்ளிய கையோடு, அதை உண்ட வாயோடு, அப்படியே பிடித்துக் கொண்டு வந்திருக்கிறேன்! இப்போதாவது நம்புவாயல்லவா?”, லலிதையின் அம்மா, கையில் பிடித்திருந்த கிருஷ்ணனை யசோதையின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினாள்.

    “ஆமாம்… பார், நாங்களும் உன் பிள்ளையைப் பிடித்து வந்திருக்கிறோம்”, என்று எல்லோரும் அவரவர் பிடித்து வைத்திருந்த கிருஷ்ணனை யசோதையின் முன்னால் நிறுத்தினார்கள்.

    ஒவ்வொருத்திக்கும் தன் கையில் பிடித்திருந்த கிருஷ்ணன் மட்டுமே தெரிந்தான். மற்றவர்கள் கையில் பிடித்திருந்த கிருஷ்ணன் தெரியவில்லை. யசோதைக்கோ இவர்கள் கூட்டி வந்த எந்த கிருஷ்ணனுமே தெரியவில்லை!

    இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்ட யசோதைக்குக் கோபம் வந்து விட்டது!

    “என்னடி, விளையாடுகிறீர்களா? என் பிள்ளை காலையிலிருந்து எங்குமே போகவில்லை! இப்போது கூட உள்ளே ததியோன்னம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். பார்க்கிறீர்களா?” என்றவள் உள் பக்கம் திரும்பி, “கிருஷ்ணா! கிருஷ்ணா! இங்கே வா!”, என்று உரக்கக் கூப்பிட்டாள்.

    “என்னம்மா… கூப்பிட்டாயா?” என்றபடி ததியோன்னமும் கையுமாக கிருஷ்ணன் உள்ளிருந்து வந்தானே பார்க்க வேண்டும்!

    வந்திருந்த அத்தனை கோபிகளின் வாயும் அடைத்து விட்டது! “என்ன இது? கிருஷ்ணன் உள்ளே இருந்து வருகிறானே!” என்று தன் கையில் இருந்த கிருஷ்ணனை ஐயத்துடன் பார்த்தார்கள்.

    தயிர் வழியும் வாயோடு, உள்ளிருந்து வந்த கள்ளக் கிருஷ்ணன் சிரிக்க, எல்லோருடைய கிருஷ்ணர்களும் வெண்ணெயுண்ட வாயோடு இப்போது எல்லோர் கண்களுக்கும் தெரிய… கோகுலம், ஒரு நொடியில் கோலாகலமானது!

    “தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு”,  தளர்நடை இட்டு வருவான்;
    பொன்னேய் நெய்யொடு பாலமுது உண்டொரு புள்ளுவன் பொய்யே தவழும்!
    மின்னேர்  நுண்ணிடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய்வைத்த பிரானே!
    அன்னே  உன்னை அறிந்துகொண்டேன் ; உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே! 

    தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு = இரண்டு விதமாப் பொருள் சொல்லுவார்கள்:
    1.   தானும், தன் ஆயிரம் தோழர்களும்-ன்னு = 1000 friends, is too big a number, of the same age group:)
    2.   “தன் நேர்” = தன்னைப் போலவே ஆயிரம் பிள்ளைகள்; ஆயிரம் கண்ணன்கள்!!!
    தளர்நடை இட்டு வந்து, நெய் உண்டு, உண்ணவே இல்லை-என்று சாதிக்கும், பொய்யே தவழும்
    குட்டிக் கிருஷ்ணனைக் கண்டு யசோதையும் அஞ்சுகிறாள்!

     

    “அம்மா, அம்மா! லலிதையோடு நானும் இனி கோகுலத்திலேயே இருக்கிறேனம்மா!” என்று நச்சரிக்க ஆரம்பித்திருந்தாள், ராகினி!

     

    அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்!

     

    [நன்றி: பாசுரம், உதவி – KRS என்ற கண்ணபிரான் ரவிசங்கர்]

    படத்துக்கு நன்றி: http://artstudio108.com/inspirational/Krsna_stealing_butter.jpg

    Share
  • கோகுலாஷ்டமி சிறப்புப் பகிர்வு

     

    சு.ரவி

    வணக்கம் வாழியநலம்

    Gokulashtami 1

     

    “இதழ்த்தா மரைக்குள் கரத்தா மரையால்
    பதத்தா மரைசுவைக்கும் பாலன்- மிதக்கின்றான்
    ஆலிலைப் பாய்மேல்; அவனுங்கள் இல்லத்தில்
    காலிணை வைப்பன் கனிந்து.”

     

     

     

     

     

     

     

     

     

    Yasodai krishna

     

     

    “பண்வாய் இடைச்சி பரவசமாய்க் கண்ணனைக்
    கண்ணம்மா ஆக்கிக் களிக்கின்றாள்!- எண்ணில்
    இகம்பரம் கடந்த பரம்பொருள் இங்கே
    திகம்பரமாய் நிற்கின்ற தே!”

     

     

     

     

     

     

     

     

    Share
  • குழந்தையும் தெய்வமும்.

    தனுசு

    குழந்தை பிறப்பு குறைந்துவிட்ட
    கணக்கைக் கண்டு
    காரணமறிய
    கள்ளத்தனமாய்
    கடவுள் வந்தான் பூமிக்கு….

    சகதியில் பன்றி
    தன் குட்டிகளோடு புரள
    தாய் பன்றியை
    ஏக்கத்தோடு பார்த்தான்
    ஓரத்தில் நின்ற
    அனாதை சிறுவன்.

    பில்கேட்ஸின் சுவரொட்டியை
    கிழித்துவிட்டு
    பத்தாவது நாள் பட சுவரொட்டியை
    ஒட்டுவதில்
    நேர்த்தியாய் இருந்தான்
    ஒரு குழந்தை தொழிலாளி.

    புதிய சட்டைக்கு
    பட்டன் தைக்கும் சாக்கில்
    தன் மீது போட்டுப் பார்த்து
    தடவிக் கொடுத்தான்
    கிழிந்த ஆடையுடன் ஒரு சிறுவன்.

    உணவகத்தில்
    வயிறு நிறைந்து
    எழுந்தவரின் இலையில்
    உண்ணாமலிருந்த லட்டை
    உற்றுப்பார்த்து
    எடுத்துப் போட்டுத் துடைத்தான்
    பசித்த வயிறோடு ஒரு பாலக ஊழியன்.

    தன்னால் செய்யப்பட்ட பட்டாசுகள்
    வானத்தில்
    வண்ணம் காட்ட
    அதை நோக்கும் எண்ணமில்லாமல்
    புண்ணான உடம்பில்
    உண்ணாத வயிறும்
    வேதனை கொடுக்க
    வதை பட்டான்
    பட்டாசு தொழிற்சாலையில்
    ஒரு சிறுவன்.

    ஒப்பாரி பாட யாருமில்லாததால்
    ஈக்கள் மொய்க்க
    இறுதிப் பயணத்துக்குத் தயாரானது
    குப்பைத்தொட்டியில் கிடந்த
    ஒரு குழந்தை.

    மலர்ந்த பூக்களை
    தட்டில் வைத்து
    பூ பூவென கூவினாள்
    வாடிய முகத்துடன் சிறுமி.

    கல் சுமக்க போனவிடத்தில்
    வல்லுறவு சுமத்தப்பட்டதால்
    வெளியுலகம் அஞ்சி
    கூடுக்குள் குருகியது
    ஒரு பூப்பெய்தா பிஞ்சு.

    கும்பிட கடவுள்
    கைக்கெட்டும் தூரத்திலிருக்க
    கோயிலின் வாசலில்
    கள்ளனோ
    கபோதியோ
    அவனை கையெடுத்து கும்பிட்டு
    “ஐயா…சாமி….” என்றே
    காசு கேட்டது
    ஒரு குழந்தைக்கூட்டம்.

    குழந்தையாய்ப் பிறக்க
    குழந்தைகளே விரும்பவில்லை
    ஏழையாய்ப் பிறக்க
    எந்த உயிரும் தயாரில்லை
    தன் தவறை உணர்ந்தான்
    தலையில் அடித்துக்கொண்டான்

    என்னடா
    ஏதடா
    ஏனிந்த நிலையடா
    படைத்தவன் நானா?
    என் பணியும் வீணா?
    இறைவன் என்பவன்
    இனி எதற்காக
    இரங்கல் பாடுங்கள்
    இன்றோடு எனக்காகவென
    கண்ணீர் விட்டு அழுதான்.

     

    படத்துக்கு நன்றி: http://qhpc.org/wp-content/uploads/2013/02/Tears-of-Faith.jpg

     

    Share