சச்சிதானந்தம்
முயலுக்கு இரங்குதல்
விரிந்தும் விரியாத கல்வாழை மலர்போன்ற,
சுருண்டும் சுருளாத செவிமடலைச் சுழற்றி,
உருகும் பனிபோல உடல்கொண்ட வெண்முயல்,
மருளும் செவ்விழியால் இவ்வுலகைக் காணும்! 60
முயலைக் கண்டு முயலைப் போலத்,
துள்ளிக் குதித்து ஓடிச் சென்று,
கயலைக் கண்ட கரடியைப் போலக்,
கையால் அடித்து முயலைப் பிடித்தான்! 61
கண்கள் சிவந்த முயலைக் கண்டு,
கனிந்து நின்றது குறவன் நெஞ்சம்,
கொல்லத் துணிந்து பிடித்த முயலை,
உள்ளம் இரங்கி அனுப்பி வைத்தான். 62
தேன் சேகரித்தல்
வானுயர்ந்த தருவின் மீது தேனுயர்ந்த கூடிருக்க,
கறும்பாறை என்றதன்மேல் கருடனொன்று கால்பதிக்க,
கோவம்கொண்ட குளவிகள் கருடன்மீது படையெடுக்க,
பாறைதுரத்து தென்றெண்ணிப் பருந்துபயந்து பறந்தது! 63
சிதைந்து நின்ற தேன்கூட்டில், ஆழப்
புதைந்திருந்த தேனெல்லாம், கிளையில் வடிந்து,
அடிமரத்தில் பொன்னிறத்தில் ஒளிர, அதைப்
பிசினென்றெடுத்துத் தேனென்றுணர்ந்து குறவன் சேகரித்தான்! 64
பருந்தின் பயமும் பாசமும்
பாறைதுரத்து தென்றெண்ணிப் பறந்துவந்த பருந்துதன்,
கூடிருக்கும் பாறைமீதும் அமரபயந்து நின்றது!
குஞ்சிருக்கும் கூடிருக்கும் பாறைதன்னைச் சுற்றியே,
வட்டமிட்டு வட்டமிட்டு வானிலுயரப் பறந்தது! 65
பாசமிக்க பருந்துதன் பயம் தெளிந்து நின்றது,
குஞ்சினருகில் குதித்துக்குதித்து வந்தமர்ந்து கொண்டது!
கண்திறக்காக் குஞ்சுகள் தாயின்வரவை உணர்ந்து,
தேன்நிறைந்த தாயின்காலைக் கொத்திக்கொத்திச் சுவைத்தன! 66
ஊனெடுத்துக் குஞ்சுக்கு ஊட்டுகின்ற பருந்துக்கு,
தேனெடுத்துத் தெரியாமல் ஊட்டுகின்ற விருந்துக்கு,
கானெடுத்த கவினெல்லாம் கண்டுகண்டு களிப்புற்று,
தானெடுத்த பிறவிப்பயன் அடைந்திடுமே குறவனுயிர்! 67

Leave a Reply