நினைவான பாரதியின் கனவு!
பவள சங்கரி
தலையங்கம்
மத்திய அரசின் உணவு பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதில் அரசாங்கத்திற்கு பொது மக்களின் மனப்பூர்வமான வாழ்த்துகள்! இதற்கு உறுதுணையாக நின்ற மத்திய மாநில அரசு மற்றும் அரசியலாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வோம். பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்தோம் என்று காட்டக்கூடிய முதல் நடவடிக்கையாக இதைக் கருதலாம். 1960 மற்றும், 1940களிலும் ஏற்பட்ட பஞ்சங்கள் பற்றிய செய்திகளை இன்று நினைத்தாலும் கண்ணீர் மழையாகப் பொழிவதை மாற்றியமைத்து நாட்டின் 67 சதவிகித மக்கள் பயனடையும் வகையில் இந்த வளமானச் சட்டத்தை நிறைவேற்றி வயிற்று உணவிற்கு வழி செய்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி வகுத்த ஆட்சியாளர்களுக்கு நன்றி தெரிவிப்போம். இந்தத் திட்டத்திற்காக அரசு ரூ.1.25 லட்சம் கோடியை செலவிடவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. குச்சிக் கிழங்கைச் சாப்பிட்டும், விவசாயிகள் வறண்டு போன வயல்களில் எலியைப்பிடித்து சுட்டுத் தின்று பசியாறிய கொடுமைகளெல்லாம் இனி நடக்காது என்று உறுதியாக நம்புவோம். தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள் குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி அல்லது கோதுமை போன்றவைகளை இலவசமாக வழங்கியும் வழிகாட்டியுள்ளனர் என்பதையும் இந்த நேரத்தில் நினைவு கூறலாம். இந்தச் சட்டத்தின் நடைமுறை இடர்பாடுகளைக் களைந்து முழுமையாக இத்திட்டம் மக்களைச் சென்று அடைவதற்கு உண்டான வழிவகைகளையும் மேற்கொள்ள வேண்டும் . எந்த நாட்டிலும் இல்லாத வகையிலான ஒரு அற்புதமான திட்டம் இது என்பதில் ஐயமில்லை.
ஆயினும், எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணம் காட்டும் நாம், அங்கு இருப்பது போல பணிரண்டாம் வகுப்பு வரையிலான கட்டாய இலவசக் கல்வியைக் கொண்டுவர வேண்டுமென்ற பொது மக்களின் ஆதங்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். கல்விக்கூடங்கள் அறச்சாலைகளாக இருப்பதைவிட்டு ஒரு வணிகத்தளமாக, தொழிலகமாக மாறிவிட்டது வேதனைக்குரிய விசயம். இப்போது இருக்கும் கட்டணங்களே அதிகமாக இருக்கும் நிலையில் மேலும் அதை அதிகப்படுத்திக்கொண்டே போவதும் அதற்கு மாநில அரசு நீதியரசர் தலைமையில் ஒருவரை நியமித்து ஆய்வுக்கு உட்படுத்தவும், அவரும் ஒரு மிகப்பெரிய தொகையைக் கட்டணமாக பெற்றோரின் மீது சுமத்துவதும், அதுவும் பத்தாது என்று பள்ளி நிர்வாகங்கள் கூறிக்கொண்டு சிலர் வழக்கு மன்றம் செல்வதும், சிலர் ஏற்றுக்கொள்வதும் வேடிக்கையான காட்சியாக உள்ளது. இதில் சில நிர்வாகங்கள் தன்னிச்சையாகவே கட்டணங்களை அதிகப்படுத்திக்கொள்வதும். குழந்தைகளின் பெற்றோர்கள் தெருவில் இறங்கி போராடுவதும் வாடிக்கையாகிக் கொண்டிருக்கிறது. இலவசப் பொருட்கள் நமக்குத் தேவையில்லை. தொலைக்காட்சிப் பெட்டியோ, காற்றாடி, மாவரைக்கும் இயந்திரம் என எந்த இலவசமும் வேண்டியதில்லை. கட்டாய இலவசக் கல்வித்திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது. மாற்று திட்டங்கள் மூலமாகவாவது பெற்றோரிடம் பணம் வசூலிப்பதையும் தடுக்க வேண்டுமென்றால் பணிரெண்டாம் வகுப்புவரை இருக்கும் அனைத்து கல்விக்கூடங்களையும் அரசுடமையாக்க வேண்டுவது மட்டுமே முழுமையான தீர்வாக இருக்க முடியும். இலவசப் பொருட்கள் வேண்டாம், இலவசக் கல்வியைக் கொடுத்து கண்ணைத் திறவுங்கள். மன்னர் மானியம் ஒழிக்கப்படவில்லையா?, வங்கிகள் தேசிய உடமையாக்கப்படவில்லையா?, பேருந்துகள் நாட்டுடமையாக்கப்படவில்லையா?. அதே போன்று மக்கள் நலவாழ்விற்காக, குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காக, அனைத்து கல்வி நிலையங்களும் தேசிய உடமையாக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் பேராவலாக இருக்கிறது என்பதையும் அரசு உணர வேண்டும்.
‘இலவசப் பொருட்கள் வேண்டாம்,
இலவசக் கல்வி கொடுங்கள்..’
நல்ல கருத்தாக்கம்…!
அண்ட மெல்லாம் அதிர ஆண்மைப் பொங்க
‘தனியொருவனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்து விடுவோம்’
அப்பேர்ப்பட்ட உலகம் வேண்டாம் என்றானே!
அந்த வரிகளோடு
‘………. அன்னச் சத்திரம் ஆயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர்
ஏழைக்கு எழுத்தறி வித்தல்’
என்பதாக…. கொண்டு கூட்டுப் பொருள் கொண்டேன்
தலையங்கத்தின் உள்ளடக்கப் பொருளதை.
பகிர்விற்கு நன்றிகள் சகோதரியாரே!
உணவு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதில் மத்திய அரசுக்கு நன்றி. இங்கே இலவசம் வேண்டாம் எனும் கட்டுரையின் குரலுக்கும் நன்றி. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் வரி தலைப்பு வரி.
இலவசங்கள் அள்ளிக்கொடுக்கும் அரசுகள் இந்த உணவு பாதுகாப்பு சட்டத்தை அவ்வளவாக ஆதரிக்கவில்லை. இதனை விளக்கினால் அரசியலாகிவிடும்.
பொதுஜன பிரச்சினையை கட்டுரையாக்கிய பவள சங்கரி அவர்களுக்கு பாராட்டுக்கள்.