சு.கோதண்டராமன்

தொலை பேசி பழுதாகி விட்டது. குறை பதிவு செய்யும் அலுவலக எண்ணை வேறு ஒரு தொலை பேசி மூலமாகத் தொடர்பு கொண்டேன். ஆளிலாக் குரல் கேட்டது.

BSNL welcomes you

பிஎஸ்என்எல் ஆப்கா ஸ்வாகத் கர்தா ஹே

பிஎஸ்என்எல் உங்களை வரவேற்கிறது

To proceed in English, press one

ஹிந்தீ மேம் ஜான்காரீ கே லியே தோ தபாயேன்

தமிழில் விவரங்கள் அறிய எண் மூன்றை அழுத்தவும்  

அழுத்தினேன்.

பழுதுபட்ட தொலைபேசியின் எஸ்டிடி கோடை டயல் செய்யவும்.

செய்தேன்.

நீங்கள் டயல் செய்த எஸ்டிடி கோட் 044. இதை உறுதிப்படுத்த எண் ஒன்றை அழுத்தவும்.

அழுத்தினேன்.

பழுதடைந்த தொலைபேசி எண்ணை டயல் செய்யவும்.

செய்தேன்.

நீங்கள் டயல் செய்த எண் ்்்் ்்்். இதை உறுதிப்படுத்த எண் ஒன்றை  அழுத்தவும்.

அழுத்தினேன்

உங்கள் தொலைபேசியில் எந்தப் பழுதும் இல்லை. பிஎஸ்என்எல்லின் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொண்டதற்கு நன்றி.

????????????

………………………………………. ……………………………………………………. ……………………………………………….       இதோ மற்றொரு நிகழ்ச்சி.

வோட­ஃபோன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

உங்களுக்கான ஸ்பெஷல் ஆஃபர். இப்பொழுது நீங்கள் வெறும் 34 ரூபாயில் பத்து நாட்களுக்கு இலவசமாக உங்கள் போன் மூலம் இண்டர்நெட் வசதி பெற முடியும்………………………………………………………………………………………………….. …………………..  (நீண்ட விளம்பரத்துக்குப் பின்)

தமிழில் தொடர எண் மூன்றை அழுத்தவும்.

அழுத்தினேன்.

பில் சம்பந்தமான விஷயங்களுக்கு ஒன்றை அழுத்தவும்.

இண்டர்நெட் இணைப்பு தொடர்பான விஷயங்களுக்கு 2ஐ அழுத்தவும்.

3ஜி சம்பந்தமான விஷயங்களுக்கு 3ஐ அழுத்தவும்.

கால் டைரக்ட் சம்பந்தமான விஷயங்களுக்கு 4 ஐ அழுத்தவும்.

……………………………

………………………………..

………………………………….

மீண்டும் முந்திய மெனுவுக்குப் போக 9 ஐ அழுத்தவும்.

வரிசையாகப் போய்க் கொண்டிருந்தது. நான் வாங்கிய புதிய சிம்மை செயல்படுத்த வேண்டியிருந்தது. அதற்கான வாய்ப்பே இல்லை. மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்து கவனமாகக் கேட்டேன். எனக்குத் தேவைப்பட்டது இல்லவே இல்லை.

வேறு வழியில் அவர்களைத் தொடர்பு கொள்ளவே முடியாது போல இருக்கிறதே. சரி முயன்று பார்ப்போம் என்று கருதி எண் ஒன்றை அழுத்தினேன்.

மீண்டும் பதிவு செய்யப்பட்ட குரல்.

எங்கள் வாடிக்கையாளர் சேவை அதிகாரி பிற வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். தயவு செய்து காத்திருக்கவும்.

அவர்களுக்காக நான் காத்திருக்கும் நேரம் வெட்டியாகக் கழியக் கூடாது என்ற பெரிய பொறுப்புடன், என்னை மகிழ்விக்க, இசை ஒலிக்கத் தொடங்கியது. ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை இசை தடைபட்டு,

நீங்கள் எங்களுக்கு முக்கியமான வாடிக்கையாளர். தயவு செய்து காத்திருக்கவும். எங்கள் வாடிக்கையாளர் சேவை அதிகாரி உங்களைக் கவனிக்க வருவார்,

என்று அறிவிப்பு. தொடர்ந்து இசை. பத்து நிமிடங்களுக்குப் பின் வேறு ஒரு அசரீரீக் குரல் கேட்டது.

எங்கள் அதிகாரியுடனான உங்கள் உரையாடல் குறை தீர்த்தல் மற்றும் தர ஆய்வுச் சோதனைக்காகப் பதிவு செய்யப்படுகிறது என்பதை அறியவும்.

…………

…………..

என் பெயர் சுபாஷிணி. நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்? (அப்பாடா, கடைசியில், மனிதக் குரல்!)

முதல்லே, புகாரைக் காது கொடுத்துக் கேட்கிற மனிதக் குரலைக் கேட்க எந்த நம்பரை அழுத்த வேண்டும், சொல்லுங்க.

என்ன சார் விஷயம்?

நான் ஒரு புது சிம் வாங்கியிருக்கேன். அதை ஆக்டிவேட் பண்ணணும்.

அதுக்கு நீங்க 172ஐத் தொடர்பு கொள்ளணும், சார்.

அது எனக்கு முதலிலேயே தெரியும். அந்த நம்பருக்குத் தொடர்பு கொண்டால் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள உங்களுக்கு உரிமை இல்லைன்னு பதில் வருதே.  அந்தக் குறையை நான் யார் கிட்ட சொல்லி அழறது? குறை தீர்க்கும் நம்பர்னு போட்டிருக்கேன்னு இந்த நம்பரை டயல் செய்தால் ஒன்றை அழுத்தவும், இரண்டை அழுத்தவும்னு போய்க்கிட்டே இருக்கே தவிர என் புகாரைத் தெரிவிப்பதற்கான வழியையே காணுமே, அம்மா.

மன்னிக்கணும் சார். உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?

சொன்னேன்.

நீங்க இப்ப பேசிக்கிட்டிருக்கிற நம்பர் உங்க பேர்லே தான் இருக்கா?

இல்லே. என் மகன் பேர்லே இருக்கு.

அவர் பேரை தெரிஞ்சுக்கலாமா?

சொன்னேன்.

அவருடைய விலாசம் சொல்லுங்க.

சொன்னேன்.

சரியா இருக்கு. இப்ப வாங்கின சிம் யார் பேரிலே வாங்கியிருக்கீங்க?

சொன்னேன்.

சரி சார். கம்ப்ளெய்ண்ட் புக் பண்ணிக்கிறேன். உங்க கம்ப்ளெய்ண்ட் நம்பர் 865348974562. மறுமுறை பேசும்போது இந்த நம்பரைக் குறிப்பிடுங்க. வேற ஏதாவது தேவையா?

கொஞ்சம் இருங்க. நீங்க பாட்டுக்குப் படபடன்னு சொல்லிக்கிட்டே போனா, நான் எப்படி இத்தனை டிஜிட்டை ஞாபகம் வெச்சுக்கறது?

சரி எழுதிக்கங்க சார்.

இந்தப் பேச்சு முடிந்ததும் உங்களுக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். அதுக்கு மறக்காமப் பதில் அனுப்பிவிடுங்க சார். அதுக்குக் கட்டணம் கிடையாது. வோடஃபோன் சேவையைப் பயன்படுத்திக் கொண்டதற்கு நன்றி.

தொலை பேசி அலுவலகங்கள் மட்டுமல்ல. குடிநீர்ச் சுத்திகரிப்பு யந்திரம் பழுது பார்ப்பு மையம்  போன்ற வேறு எந்த அலுவலகமானாலும் இதே நிலை தான்.

யந்திரங்களை நாம் பயன்படுத்துகிறோமா? அல்லது அவை நம்மை ஆள்கின்றனவா?

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “அசரீரி

  1. நம்மில் பெரும்பாலானோர் அன்றாடம் சந்திக்கும் சங்கடங்களில்/தலை வலியில் முக்கியமானதும் முதன்மையானதுமான தலைவலியை அழகாகச் சுட்டிக் காட்டி உள்ளீர்கள்.

    //யந்திரங்களை நாம் பயன்படுத்துகிறோமா? அல்லது அவை நம்மை ஆள்கின்றனவா?//

    யந்திர முகமூடி அணிந்த சில மனிதர்கள், மனித முகமூடி அணிந்த கோடிக்கணக்கான யந்திரங்களை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் ஐயா!

  2.  இயந்திரங்கள், மனிதரின் நிலையை ஒருபோதும் புரிந்து கொள்ள இயலாத நிலையில், இம்மாதிரி முக்கியமான சேவைகளுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் வெறுப்புணர்வே ஏற்படுகின்றது. முக்கியமாக, வயதானவர்கள் மிகுந்த தொல்லைக்கு ஆளாகிறார்கள். ஏதாவது மாற்றம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்!!. மிக அருமையான கட்டுரை!!. பகிர்வுக்கு மிக்க நன்றி!

  3. பாராட்டிய சச்சிதானந்தம் மற்றும் பார்வதி இராமச்சந்திரன் ஆகியோருக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *