குழந்தையும் தெய்வமும்.
தனுசு
குழந்தை பிறப்பு குறைந்துவிட்ட
கணக்கைக் கண்டு
காரணமறிய
கள்ளத்தனமாய்
கடவுள் வந்தான் பூமிக்கு….
சகதியில் பன்றி
தன் குட்டிகளோடு புரள
தாய் பன்றியை
ஏக்கத்தோடு பார்த்தான்
ஓரத்தில் நின்ற
அனாதை சிறுவன்.
பில்கேட்ஸின் சுவரொட்டியை
கிழித்துவிட்டு
பத்தாவது நாள் பட சுவரொட்டியை
ஒட்டுவதில்
நேர்த்தியாய் இருந்தான்
ஒரு குழந்தை தொழிலாளி.
புதிய சட்டைக்கு
பட்டன் தைக்கும் சாக்கில்
தன் மீது போட்டுப் பார்த்து
தடவிக் கொடுத்தான்
கிழிந்த ஆடையுடன் ஒரு சிறுவன்.
உணவகத்தில்
வயிறு நிறைந்து
எழுந்தவரின் இலையில்
உண்ணாமலிருந்த லட்டை
உற்றுப்பார்த்து
எடுத்துப் போட்டுத் துடைத்தான்
பசித்த வயிறோடு ஒரு பாலக ஊழியன்.
தன்னால் செய்யப்பட்ட பட்டாசுகள்
வானத்தில்
வண்ணம் காட்ட
அதை நோக்கும் எண்ணமில்லாமல்
புண்ணான உடம்பில்
உண்ணாத வயிறும்
வேதனை கொடுக்க
வதை பட்டான்
பட்டாசு தொழிற்சாலையில்
ஒரு சிறுவன்.
ஒப்பாரி பாட யாருமில்லாததால்
ஈக்கள் மொய்க்க
இறுதிப் பயணத்துக்குத் தயாரானது
குப்பைத்தொட்டியில் கிடந்த
ஒரு குழந்தை.
மலர்ந்த பூக்களை
தட்டில் வைத்து
பூ பூவென கூவினாள்
வாடிய முகத்துடன் சிறுமி.
கல் சுமக்க போனவிடத்தில்
வல்லுறவு சுமத்தப்பட்டதால்
வெளியுலகம் அஞ்சி
கூடுக்குள் குருகியது
ஒரு பூப்பெய்தா பிஞ்சு.
கும்பிட கடவுள்
கைக்கெட்டும் தூரத்திலிருக்க
கோயிலின் வாசலில்
கள்ளனோ
கபோதியோ
அவனை கையெடுத்து கும்பிட்டு
“ஐயா…சாமி….” என்றே
காசு கேட்டது
ஒரு குழந்தைக்கூட்டம்.
குழந்தையாய்ப் பிறக்க
குழந்தைகளே விரும்பவில்லை
ஏழையாய்ப் பிறக்க
எந்த உயிரும் தயாரில்லை
தன் தவறை உணர்ந்தான்
தலையில் அடித்துக்கொண்டான்
என்னடா
ஏதடா
ஏனிந்த நிலையடா
படைத்தவன் நானா?
என் பணியும் வீணா?
இறைவன் என்பவன்
இனி எதற்காக
இரங்கல் பாடுங்கள்
இன்றோடு எனக்காகவென
கண்ணீர் விட்டு அழுதான்.
படத்துக்கு நன்றி: http://qhpc.org/wp-content/uploads/2013/02/Tears-of-Faith.jpg
////உணவகத்தில்
வயிறு நிறைந்து
எழுந்தவரின் இலையில்
உண்ணாமலிருந்த லட்டை
உற்றுப்பார்த்து
எடுத்து போட்டு துடைத்தான்
பசித்த வயிறோடு ஒரு பாலக ஊழியன்.///
குழந்தைகளைப் போல் இருங்கள் என்றான் ஏசு
குழந்தைகள் தான் நாட்டின் செல்வக் களஞ்சியங்கள்
குழந்தைகள் வெள்ளை உள்ளத்தால் இறைவனுக்குச் சமமானவர்கள்
குழந்தைகள் கவலையைப் போக்கும் அருமருந்தானவர்கள்
குழந்தைகள் குடிகூத்தென்றுத் திரியும் தகப்பனுக்கு மருத்துவர்கள்
குழந்தைகள் உலகம் இயங்க உதவும் சக்கரத்தின் அச்சாணிகள்
குழந்தைகள் நாளைய உலகம் நலமாக காக்கவந்த அவதார புருஷர்கள்
இப்படியெல்லாம் எண்ணி இருந்தேன்… ஆனால்,
குழந்தைகள் தாம் படும் அவதிகளை கொதிக்கும் நீரில் மூழ்கி எடுக்கும் குஞ்சுகளாய் காட்டியக் கவிதை எந்தன் இதயம் கனக்கச் செய்கிறது….
‘கே’அவலம் கூறும் கவிதையாயினும்
பாவலம் மிக்கதாய் இருந்தினும்
கடவுளுக்கு ஏது கள்ளத்தனம்
காயவேதனையில் கடிந்த வார்த்தைகள்…
லாயக்கற்ற சமூகம் அங்கே
தாயக்கட்டை விளையாடி அரசியல்
மாயஜாலம் காட்டிடுதே….
அருமையான சமூகப் பிரஞ்ஞையை காட்டியக் கவிதை…
காலமும் காட்சியும் மாற மாறாத தத்துவமது அருளட்டும்!!!
வாழ்த்துகள் கவிஞரே!
இதயம் தொட்ட கவிதை.
குழந்தைத் தொழிலாளர்கள் படும் அவலத்தைக் கண்ணீரில் தோய்த்துக் கவி வடித்துள்ளீர்கள் தனுசு. கவிதை கண்களைப் பனிக்கவைத்து இதயத்தைக் கனக்க செய்துவிட்டது. பாராட்டுக்கள்!!
பாராட்ட வார்த்தைகளில்லை கவிஞரே!!. உணர்ச்சிப் பிழம்பாய், சொடுக்கும் வார்த்தைகளால் வரைந்திருக்கிறீர்கள் அருமையானதொரு கவிதை. தங்கள் உணர்வுகள் அப்படியே படிப்பவரையும் வந்தடைந்திருக்கின்றன. ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சைச் சுடும் நிதர்சனம்!!.
கொன்றுவிட்டீர்கள்
கவிதையில்,
குழந்தையைக் கொண்டே..
வாழ்த்துக்கள்…!
ஒவ்வொரு வரியும் சாட்டை. கவிதையை வாசித்து முடித்ததும் பின்னூட்டம் இடக்கூடத் தோன்றாமல் ஓரிரு நிமிடங்கள் மௌனத்திற்குப் பிறகே பின்னூட்டம் இடுகிறேன்.
Alasiam G wrote
///கே’அவலம் கூறும் கவிதையாயினும்
பாவலம் மிக்கதாய் இருந்தினும்
கடவுளுக்கு ஏது கள்ளத்தனம்
காயவேதனையில் கடிந்த வார்த்தைகள்…
லாயக்கற்ற சமூகம் அங்கே
தாயக்கட்டை விளையாடி அரசியல்
மாயஜாலம் காட்டிடுதே….
அருமையான சமூகப் பிரஞ்ஞையை காட்டியக் கவிதை…///
தட்டிக்கொடுத்து உற்சாகமூட்டும் தாங்களின் கவிதை வடிவிலான பாராட்டுக்கு மிக்க நன்றிகள் நண்பரே.
kothandaraman wrote
///இதயம் தொட்ட கவிதை.///
தாங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றிகள் ஐயா.
மேகலா இராமமூர்த்தி wrote
///குழந்தைத் தொழிலாளர்கள் படும் அவலத்தைக் கண்ணீரில் தோய்த்துக் கவி வடித்துள்ளீர்கள் தனுசு. கவிதை கண்களைப் பனிக்கவைத்து இதயத்தைக் கனக்க செய்துவிட்டது.////
உணர்வு பூர்வமாய் படித்து பாராட்டியதில் மிக்க மகிழ்சியடைகிறேன் தோழி மேகலா.
பார்வதி இராமச்சந்திரன். wrote
///…உணர்ச்சிப் பிழம்பாய், சொடுக்கும் வார்த்தைகளால் வரைந்திருக்கிறீர்கள் அருமையானதொரு கவிதை. தங்கள் உணர்வுகள் அப்படியே படிப்பவரையும் வந்தடைந்திருக்கின்றன. ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சைச் சுடும் நிதர்சனம்///
தாங்களின் மனதை தொட்ட என் கவிதைக்கு தாங்கள் அளித்திருக்கும் பாராட்டு நெஞ்சம் நிறைக்க செய்கிறது.
-செண்பக ஜெகதீசன்… wrote
///கொன்றுவிட்டீர்கள்…
வாழ்த்துக்கள்…!///
குறளரசரின் பாராட்டுக்கு மிக்க நன்றிகள்.
சச்சிதானந்தம் wrote
//ஒவ்வொரு வரியும் சாட்டை. கவிதையை வாசித்து முடித்ததும் பின்னூட்டம் இடக்கூடத் தோன்றாமல் ஓரிரு நிமிடங்கள் மௌனத்திற்குப் பிறகே பின்னூட்டம் இடுகிறேன்///
இன்று வல்லமையே என்னை பாராட்டியது போல் ஒரு பூரிப்பு மிக்க நன்றிகள் சச்சிதானந்தம்..