தி. சுபாஷிணி

tkc1881 ஆம் ஆண்டு, ஆவணித் திங்களில், ரோகிணி நட்சத்திரத்தில் பூ ஒன்று தோன்றியது. இப்பூ பூத்து, தமிழ்க்கவியின்பத்தில் திளைத்து, எது கவியென கண்டுகொண்டு களித்தது. கம்பனைக்கண்டு குதூகளித்தது. கும்மாளம் போட்டது. கம்பனின் இதயம் புகுந்து கம்பனாகவே மாறிவிட்டது. பழந்தமிழ் பாடல்களையெல்லாம் வெளிக்கொணர்ந்து, படித்து படித்து ரசித்து சிலிர்த்தது. அச்சிலிர்ப்பில் தமிழ்ப்பண்பாடு மலர்ந்தது. சமயம், தமிழிசை, நாடகம், நடனம், ஓவியம், சிற்பம், கோயில், பக்தி என அனைத்து விடியல்களையும் அறிந்து பாராட்டியது. பாராட்டப் பாராட்ட ஆனந்தம் பெருகியது. இதை தன்னைச் சார்ந்தவர்களுக்கு அள்ளி அள்ளி அளித்தது. அறிஞர், அல்லாத பாமரன், பணக்காரன், இல்லாதவன் என பாகுபாடில்லது, தன்னிலத்தில் இருத்தி, இன்னமுதூட்டி தங்கு தங்கு எனத் தங்கவைத்து, ரசனையின்பத்தை பொதிகைச் சாரலாய்ப பொழியச் செய்தது.

இப்பூ, ‘தமிழின்பத்தால் அவரது மீசையும் முறுவல் சிந்தும்‘ எனப் போற்றப்படும் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் ஆவார். கிருஷ்ணன் அவதரித்த ரோகிணி நட்சத்திரப் பூ! இவ்வாண்டு இந்த ரசனை மலருக்கு 132 ஆவது பிறந்த நாளாகும்.

ஆன்றோர்களும் சான்றோர்களும் அடங்கிய வாசகர் வட்டம் கணையாழிக்கு உண்டு என்பதை நான் நன்கு அறிவேன். சாகித்ய விருதோடு இயல் விருதையும் தாங்கி நிற்கும் சீரிய எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் கவலையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். “விழாவிற்கு வந்திருக்கும் விருந்தினரை வரவேற்று, முதலில் கொடுக்கும் குளிர்பானமகிய எலுமிச்சை பானத்தில் பழரசத்திற்கு பதிலாக செயற்கை மணத்தை கலந்து, பொய்யான பானத்தை மெய்யான பானம்போல் கொடுக்கின்றோம். அனால் உணவு அறிந்தி கை கழுவுகையில், கழுவும் நீர்கே கிண்ணத்தில் எலுமிச்சம் பழத்துண்டை வைக்கின்றோம். நாம் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்“ என்பதுதான் அவரது கவலை. இக்கவலையின் வீச்சு என்னை 132 ஆண்டுகளுக்கு முன் போகவைத்துவிட்டது.

தமிழ் பண்பாட்டின் உன்னதத்தை உணர்ந்து தன் வாழ்வியல் ஆக்கி, தன சமகாலச்  சான்றோர்களையும்  ஆளுமைகளையும் தன் பக்கம் ஈர்த்த பூவாய் அவதரித்த ரசிகமணி டி.கே.சிநினைவில் என்னை அமரவைத்துவிட்டது.

1930 &ஆம் ஆண்டு என்றே சொல்லலாம். அப்போது சென்னையில், தி.நகரிலுள்ள பசுல்லா சாலையில் ஒரு பங்களா வீட்டில், கீழ்பகுதியில் கல்கி தங்கி வசித்து வந்தபோது, மாடிப் பகுதியில் திரு.ராஜாஜி அவர்கள் வசித்து வந்தார்.

அப்போது, பிரபல வக்கீலும், நீதிபதியுமான ஸ்ரீனிவாச அய்யங்கார் அவர்களது வீட்டில் கம்பராமாயண வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அலுவலகம் செல்பவர்களின் வசதிக்காக, வகுப்பு மாலை 7 மணிக்கு துவங்கும். வகுப்பு முடியும் நேரம் இரவு 11 மணி ஆகிவிடும். நாள் தவறாது கல்கி இந்த வகுப்பிற்கு சென்று வந்தார். தினந்தோறும் மாலையில் 6 மணிக்குச் செல்லும் கல்கி, வீடு திரும்ப பன்னிரண்டு மணிவரை ஆவதை ராஜாஜி அவர்கள் கவனித்து வந்தார். சில நாட்கள் கழித்து ராஜாஜி கல்கியிடமே இதுபற்றி விசாரித்தார். வேறு ஏதாவது தப்பு காரியம் செய்கிறாயா, என்று நேரடியாகவே கேட்டு விட்டார்.  துளியும் மறைக்க முடியாத நிலையென உணர்ந்த கல்கி, “வக்கீல் ஸ்ரீனிவாச அய்யங்கார் வீட்டில் ஒருவர் தினந்தோறும் கம்பராமாயண வகுப்பு நடத்துகிறார். அது மிகவும் அருமையாக இருக்கின்றது” என்று கூறவே தன்னையும் அங்கு அழைத்துப் போகுமாறு ராஜாஜி கல்கியிடம் வேண்டினார். அன்றிலிருந்து கம்பராமாயண வகுப்பிற்கு இருவரும் இணைந்து போகத் தொடங்கி விட்டனர். 1937 ஆம் ஆண்டு ராஜாஜி அவர்கள் சென்னை மகாண முதல்வராய் பொறுப்பேற்றார். அப்போதும் கம்பராமாயண வகுப்பை மறக்கவில்லை. விடாது சென்றார். நாட்டின் பணிகளைச் செய்து விட்டு மிகவும் களைத்து வரும் இவருக்காக வக்கீல் அவர்கள் கட்டில் ஒன்று போட்டு வைத்திருந்தார். வேலைப்பளுவின் காரணமாக அதில் படுத்துக்கொண்டே கம்பராமாயணத்தை தொடர்ந்து அனுபவித்தார்.

ஆம்! உணர்வின் உன்னதமாகிய இதய தத்துவமாகிய டி.கே.சியையும், அறிவின் ஆளுமையாகிய ராஜாஜியையும் இணைத்தவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். இந்த இணைப்பினால் இலக்கியம், இசை, கலை, அரசியல் ஆகிய துறைகளில் வரலாறு போற்றும் பல விளைவுகள் விளைந்தன. ராஜாஜியின் நட்பினால் டி.கே.சிக்கு பல பெரியவர்களின் உறவும், மதிப்பும் கிடைத்தன.

சென்னைக்கு மகாத்மா காந்தி வந்திருந்த சமயம். இராஜாஜி அவர்கள் தன்னுடன் தன் நண்பர் தி.கேசியை அழைத்துக் கொண்டு அவரைப் பார்க்கச் சென்றார். அப்போது காந்திஜியிடம் ராஜாஜி, “தன் வாழ்வின் 50வது வயதில் சந்தித்தவர் நண்பராகவும், அதிலும் மிகவும் அணுக்கமான இதயபூர்வமான நண்பராகவும் இருக்க முடியுமா? நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று கேட்க, மிகவும் புரிதலோடு மகாத்மா அவர்கள், “ஓ! பார்த்திருக்கேனே! இதோ! என்முன்! உங்களோடு!” என்று சட்டென்று பதிலளிக்கிறார். “ஆமாம்! என் 50 ஆவது வயதில் சந்தித்த இவர், இதுவரை நான் சந்தித்த, கிட்டிய நண்பர்களைக் காட்டிலும் எனக்கு நெருங்கிய நண்பர்” என்று ஆமோதித்தார். இப்படித்தான் அவரை அறிமுகப்படுத்தினார் ராஜாஜி.

மகாத்மா காந்தி தேச சேவைக்காகத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்தார். அவ்வமயம் எல்லாவகைப் பற்றுக்களையும் எளிதாக ஓரிரு நாட்களில் துறக்க முடிந்தது. அவருக்கு இலக்கியப் பற்றைத் துறக்க ஒரு வாரம் ஆகியது. ராஜாஜி அவர்களின் மகன் நரசிம்மனிடம் காந்திஜி அவர்கள், “உன் அப்பாவிடம் இலக்கியப்பற்று அதிகம் இருக்கின்றது. அதைத் துறக்கச் சொல்” என்றாராம். ஆனால் சில வருடங்கள் கழித்து, ராஜாஜி தன் நெருங்கிய நண்பரை காந்தியிடம் அழைத்துச் சென்றார். அப்போது அந்நண்பர் “கம்பராமாயணம்” பாடல் ஒன்றைப் பாடி ஆங்கிலத்தில் விளக்கம் கூறினார். அவ்வளவுதான் அந்த கணமே காந்திஜியின் இலக்கிய சன்னியாசம் கழன்று விழுந்து விட்டது.  நான் கம்பராமாயணத்தை அனுபவிக்க வேண்டும் என்று வேண்டினாராம். அதற்கு நீங்கள் தமிழ் கற்க வேண்டும் என்று அந்நண்பர் பதில் கொடுத்தாராம். காந்தியின் இலக்கிய சன்னியாசத்தை துறக்க செய்து  விட்டார் ரசிகமணி.

உயர்ந்த பதவிகளில் இருந்த அதிகாரிகள், நீதிபதிகள், அமைச்சர்கள் என அனைவரும் டி.கே.சியுளன் பழகுவதை தமக்கு ஒரு பெருமையென நினைத்தனர். எனினும் அவருடைய கம்பராமாயண திருத்தங்களால்  ஏற்ப்பட்ட எதிர்வினைகளால் டி.கே.சி மனம் நைந்து போனார். அச்சமயத்தில் ராஜாஜியின் செல்வாக்கும் அவரது நட்புக்குழாத்தின்  அவரது இதயத்திற்கு இதமாக இருந்தன.

டி.கே.சியின் நட்பினால் ராஜாஜிக்கு ஆன்ம அமைதியும், ஆனந்தமும் கிடைத்தன. அரசியல் பரபரப்பில் வேஷதாரிகளுக்கும், ஆஷாடபூதிகளுக்கும் இடையே பெற்ற சொல்லவொண்ணாத வேதனையெல்லாம்  டி.கே.சி என்ற அன்பு தத்துவத்தில் மூழ்கி மூழ்கி மறக்க கற்றுக்கொண்டார். தம்மிடத்தில் ஒருவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காத டி.கே.சியை போன்ற தன்னலமற்ற உத்தமர்களோடு பழகும்போது, ராஜாஜி தம்முடைய முகமூடியையும், கறுப்பு கண்ணாடியையும் கழற்றி எறிந்துவிட்டு, அன்பை கொட்டிக்கொண்டு இருப்பார்கள்.

அன்பு தத்துவமாக திகழ்ந்த ரசிகமணி டி.கே.சியைப்பற்றி ராஜாஜி கூறுவதை நாம் பார்க்கலாம்

ராஜாஜி::

ராஜாஜி அவர்கள் குற்றாலத்திற்கு வந்த வருடம் 1956 ஆம் ஆண்டு. அங்கு தங்குகிறார்கள். அவர்களுடன் இணைந்து மற்றவர்களும் வெளியில் நடக்கிறார்கள். ஐந்தருவிக்கு போகும் வழியில் மலை ஏறத் தொடங்குகிறார்கள். சிற்றருவிக்கும் மேலே சற்று தொலைவில் பெரிய பாறைகளால் ஆன சமவெளி இருக்கிறது. அப்படியே அங்கு தன் தோள் துண்டை உதறி விரித்து அமர்ந்து விடுகிறார். நேரமோ வெயில் கொளுத்தும் மதியம். நினைவு அலைக் குமிழுக்குள் ஆழமாகச் சென்று விட்டார். ராஜாஜி அமர்ந்த கோலம் & அப்படியே சம்மணம் போட்டு ஒரு யோகிபோல் அமர்ந்துவிட்டார்.

டி.கே.சியும் ராஜாஜியும் சந்திக்க காரணமாயிருந்தவர் ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள். ராஜாஜியின் 50 வயதில்தான் இந்நட்பு மலரத் தொடங்கியது. டி.கே.சியை காந்திக்கு அறிமுகப்படுத்தினார் ராஜாஜி. அப்போது காந்தியிடம் ராஜாஜி, “டி.கே.சி எனக்கு 50 வது வயதில் நண்பர். நண்பரைவிட காதலர்” என்றே அறிமுகப்படுத்தினார். ராஜாஜியோ அறிவின் கொடுமுடி. டி.கே.சி அவர்களோ உணர்வின் உன்னத உச்சம். அறிவு, உணர்வு இரண்டின் உச்சங்களின் நட்பு அக்காலத்தில் வரலாறாக மாறியது. ராஜாஜிக்கு அரசியலில் காந்தி குரு என்னில் இலக்கியத்திற்கு டி.கே.சிதான் குருவாக இருந்தார். அரசியல் வேலைகளால் மனம் சோர்வாய் இருக்கும்போதெல்லாம் டி.கே.சியுடன் வந்து தங்கிவிடுவார் குற்றாலத்தில். மனதை சரி செய்துகொண்டு, புத்துணர்ச்சி பெற்றுத் திரும்புவார். இலக்கிய சர்ச்சைகளும், அறிவார்த்தமான, தத்துவார்த்தமான உரையாடல்களும் இவர்கள் இடையே ஏற்படும்போது, கூட இருப்பவர்களுக்கு நல்ல சிந்தனை விருந்தாக இருக்கும் என்று கூறுவார்கள் நீதிபதி எஸ்.மகராஜன் அவர்கள். கலையை அனுபவித்து, ஆனந்தத்தை அனுபவிக்கும் அனுபவத்தை டி.கே.சி. அவர்கள் ராஜாஜிக்கு நல்கினார். பல இலக்கியச் சான்றோர்கள் அவருக்கு டி.கே.சியால் கிடைத்தனர். டி.கே.சிக்கு ராஜாஜியின் அரசுத் தலைவர்கள் மகாத்மா காந்தி, நேரு, வினோபா இன்னும் பல பெரியோர்களின் நட்பு கிடைத்தது. “தமிழிசை இயக்கம்” நடத்தும்போது, டி.கே.சியை பல வித்வான்கள் கண்டனம் தெரிவித்தனர். அவரது இராமாயண நூலை எரித்தனர். ஆனால்அவருக்குத் துணையாக ‘ராஜாஜி’ நின்றார். கல்கியில் இதுபற்றிக் கட்டுரை எழுதினார். அதுபோல், காங்கிரஸ் கட்சியில் பெருந்தகையார் ராஜாஜி பற்றி மாற்றுக் கருத்து தெரிவிக்கும்போது, ராஜாஜியின் நல்ல இதயத்தையும் பண்பையும் பற்றி ‘பத்தரைமாற்றுத் தங்கம்’ என தலைப்பிட்டு கட்டுரை எழுதி, தமிழ் மக்களுக்குப் புரிய வைத்தார் டி.கே.சி. அவர்கள். அவர்களது நல்நட்பின் பண்பும் பயனும் அது.

இந்தியா விடுதலை அடையும்முன் இடைக்கால அமைச்சரவையில் ராஜாஜியும் அங்கம் வகிக்க வேண்டும் என விரும்பி நேரு, ராஜாஜியை அழைத்தபோது, அவர் டி.கே.சியுடன் குற்றாலத்தில்தான் இருந்தார். இங்கிருந்து தில்லி கிளம்பினார். 1952ல் காமராஜர் பொதுத்தேர்தலின் போது  நிலைமையைச் சமாளிக்க ராஜாஜி தேவை என்று தீர்மானித்து காமராஜர் குற்றாலத்துக்கு வந்து, ராஜாஜியை அழைத்துச் சென்றார். தில்லியின் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்று இருந்தபோதும் ராஜாஜியின் உள்ளம் முழுவதும் டி.கே.சி. நினைவாகத்தான் இருந்தது என்பதை அவரது ஏக்கம் நிறைந்த கடிதங்கள் கூறின.

‘முதல் தாம்பூலம்’  என்னும் கட்டுரை மகாபாரத நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதினார்  ராஜாஜி அவர்கள். அதைப் படித்து ரசித்த டி.கே.சி. அவர்கள், ராஜாஜிக்கு தம் மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். அதில் “மகாபாரதக் கதை முழுவதையும் நீங்கள் தமிழ் மக்களுக்கு எழுதலாமே” என்ற யோசனையையும் வழங்கி இருந்தார். அதுதான் ‘வியாசர் விருந்து’ என்று மலர்ந்தது. பின்னாளில் “சக்ரவர்த்தித் திருமகன்’ என இராமாயணத்தையும் எளிய தமிழில் ராஜாஜி எழுதினார்கள். இவ்விரு செயல்களும் தன் பணிகளிலேயே சிறந்த பணியும் மனதிற்கு திருப்தி அளித்தன என்பதையும் அவர் உணர்ந்தார். வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் டி.கே.சியைப் பற்றிப் பேசிப் பேசி  நட்பின் ஆற்றாமையை தீர்த்துக்கொண்டார் ராஜாஜி. எதற்கும் கலங்காத அறிவின் சிகரம், தன் நண்பர் அமரரானபோது நிலை குலைந்துதான் போனார். இதோ! டி.கே.சியின் அலைகள் அந்தப் பொதிகை மலைத் தென்றலாய் வருடும் இன்பத்தை  அனுபவித்துக் கொண்டு, அந்தப் படபடக்கும் வெய்யிலில் ஆனந்தத்தின் உச்சத்தில் அமர்ந்திருக்கிறார்.  ஏனையோர் அவராக அதிலிருந்து வரட்டும் என்று அவர் முகம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். நண்பர்களே! அறிவும் அன்பும் கலக்கும் அனுபவம் அங்கு நடந்து கொண்டிருக்கின்றது. நண்பர்களே! எப்போது நீங்கள் குற்றாலம் சென்றாலும் பொதிகைத் தென்றல், அந்நல் நட்பின் பண்பைப் பகரும். உணர்வீர்கள் நண்பர்களே!

பூரணஹரியும்  பூரண ரசிகமணியும்::

சென்ற திங்கட்கிழமை கண்ணன் பிறந்த நாள். அந்தத் திங்கட்கிழமையே தமிழ்க் கவிதை தரும் மகிழ்ச்சியின் ரகசியம். தமிழ் வசன நடை முன்னேற்றத்தின் ரகசியம். தாளமும் ராகமும் சேர்ந்த நல்லிசையின் ரகசியம். தெய்வ பக்தி தரும் நிம்மதியின் ரகசியம். அன்பின் பரம மகிழ்ச்சி, வேஷங்களின் பொய்ம்மை, அனைத்தும் நன்றாகக் கண்ட பூரண ரசிகமணி டி.கே.சி. பிறந்த நாளும்,

ஹரியின் பூரணாவதார கண்ணனின் ஜன்ம நட்சத்திரமும், டி.கே.சியின் ஜன்ம நட்சத்திரமும், ஒன்றாய்ச் சேர்ந்த திருவிழாவை மகிழ்ச்சியுடன் சென்ற திங்கட்கிழமை கொண்டாடினோம். இந்தத் திருவிழாக்கள் ஞானமும் அன்பும் நாட்டில் வளரச் செய்யும்.

கண்ண பகவான் ரோஹிணி நட்சத்திரத்தில் அவதரித்தான். ரோஹிணி நட்சத்திரக் கூட்டம் சகடத்தைப்போல் இருப்பதாகக் கண்டு அதற்குப் பெயரும் சகடம் என்றே சொல்வது வழக்கம். வண்டியின் முக்கிய பாகம் அச்சு மரம். அச்சு மரத்துக்கு வடமொழி ‘அக்ஷ’. அதன் கீழ் பிறந்தான் கண்ணன்  என்று விஷ்ணுவுக்குப் பீஷ்மாச்சாரியார் தந்து பாடிய ஆயிர நாமங்களில் ‘அதோகஜ’ என்பதும் ஒன்று. அதாவது அச்சு மரத்தடியில் அவதரித்தான் என்று.

இந்த அச்சு மரத்தடியில் மற்றொருவர் அவதரித்தார். தமிழ்க் கவிக் காதலர் டி.கே.சி. என்று பெயரைப் பெற்ற மகான் சிதம்பரநாத முதலியார் அவர்கள். இவர்தான் ‘கல்கி’ கூட்டத்தின் குலபதியாக இருந்து பல்லாண்டு அந்தப் பத்திரிகையையும், அதை நடத்தியவர்களையும், படிப்பவர்களையும் ஆசீர்வதித்து வந்தார். அவரைக் கல்கி மறக்கமுடியுமா? சிரீஜயந்தி என்றால் கண்ணன் பிறந்தநாள். டி.கே.சி. பிறந்தநாள் என்றும் தமிழர் கொண்டாடும் நாள்.

பூரண ஹரியும் பூரண ரசிகமணியும் (ரசிகமணி கட்டுரைகள், மித்ர ஆர்டிஸ் கிரியேஷன்ஸ் 32/9 கஷ்காடுகாரை, சென்னை 24& முதற்பதிப்பு &2004.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “ரசனையின் சிலிர்ப்பு!…

  1. இரசிகமணி அவர்களின் நினைவுகளிலும் மூதறிஞர் இராஜாஜி அவர்களின் நினைவுகளிலும் மூழ்கித் திளைக்க வைத்த அழகான கட்டுரை. நன்றி.

  2. மிகவும் அருமையாக, மனதிற்கு தரும் நடையில் எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி!

  3. ////இதோ! டி.கே.சியின் அலைகள் அந்தப் பொதிகை மலைத் தென்றலாய் வருடும் இன்பத்தை  அனுபவித்துக் கொண்டு, அந்தப் படபடக்கும் வெய்யிலில் ஆனந்தத்தின் உச்சத்தில் அமர்ந்திருக்கிறார்.  ஏனையோர் அவராக அதிலிருந்து வரட்டும் என்று அவர் முகம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். நண்பர்களே! அறிவும் அன்பும் கலக்கும் அனுபவம் அங்கு நடந்து கொண்டிருக்கின்றது. நண்பர்களே! எப்போது நீங்கள் குற்றாலம் சென்றாலும் பொதிகைத் தென்றல், அந்நல் நட்பின் பண்பைப் பகரும். உணர்வீர்கள் நண்பர்களே!////

    எந்தன் கண்கள் பனிக்கச் செய்த இடமிது… நாம் வாழ்ந்தக் காலங்களில் நட்பின் இலக்கணமாக திகழ்ந்த இந்த இருச்சுடர் தமிழ் விளக்கு என்றும் நம் இதயத்தில் ஒளிரும்!!!

    மிகவும் அற்புதமான தகவல்களை தன்னகத்தே கொண்ட கட்டுரை. பகிர்ந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும் உரியதாகட்டும் சகோதரியாரே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *