புவனேஷ்வர்

 

மகாபாரதமுத்துக்கள்பூரிசிரவஸ்வதம்வலக்கைவெட்டுண்டது!

வணக்கம் அன்பர்களே.

சென்ற பதிவில், சாத்யகி அருச்சுனனிடம் வந்ததையும், அருச்சுனனின் அதிருப்தியையும் பார்த்தோம் அல்லவா? அதன் பின் என்ன நடந்தது என இன்று பார்க்கலாம்:-

யுத்தத்தில் யாராலும் ஜெயிக்க முடியாதவனான சாத்யகி அருச்சுனனை நோக்கி வருவதைக்கண்ட பூரிசிரவஸ், மிக்க ஆத்திரத்துடன் சாத்வதனை (சாத்யகியை) நோக்கி விரைந்தான். அவனைப்பார்த்து “அடே சாத்யகி, நீ இன்று என் கண்ணில் பட்டது எனது அதிர்ஷ்டம் என்றே கருதுகின்றேன்.  நீண்டநாட்களாக எனது நெஞ்சில் பூட்டி வைத்திருந்த ஆசையினை இன்று உன்னுடன் போரிட்டு தீர்க்கப்போகிறேன். நீ யுத்தத்தில் பயந்து ஓடிப்போனாலோழிய உன்னை உயிருடன் இன்று தப்ப விட மாட்டேன். உன்னைப்பெரிய வீரன் என்று நினைத்து கர்வம் கொண்டுள்ள  தாசார்ஹனே, உன்னை இன்று போரில் கொன்று குருகுல வேந்தன் துரியோதனனின் மனம் மகிழப்பண்ணுவேன். நீ எனது பாணங்களால் எரிக்கபெற்று யுத்தகளத்தில் வீழ்ந்து கிடப்பதை இன்று கேசவனும் அர்ஜுனனும் காணப்போகிறார்கள். நீ என்னால் வதம் செய்யப்பட்டாய் என்று அறிந்து, உன்னை இப்படைக்குள் அனுப்பிய தருமன் தன் செயலை நினைத்து வெட்கி மாழ்கப்போகிறான். நிணமும் குருதியும் பூசப்பட்டு உன்னுடல் யுத்தபூமியில் கிடப்பதைக்கண்டு குந்திபுத்திரனான அருச்சுனன் பூரிசிரவசின் வீரத்தை அறிந்துகொள்ளப்போகிறான். பழங்காலத்தில் மகாபலியுடன் போர் புரிய இந்திரன் விரும்பியது போல உன்னுடன் போர் புரிய எனக்கு என்றுமே விருப்பம் உண்டு, சாத்யகி. கொடிய யுத்தம் என்றால் என்ன என்பதை இன்று நான் உனக்கு காட்டுவேன். ராமனின் இளவல் லக்ஷ்மணனால் இந்த்ரஜித் யமனுலகம் ஏகியது போல, என்னால் கொல்லப்பட்டு நீ கொடுங்கூற்றுக்கு இரையாகப்போகிறாய்! நீ என்னால் வதைக்கப்பட்டதை கண்டு கிருஷ்ணனும் பார்த்தனும் தருமராஜன் யுதிஷ்டிரனும் யுத்தத்தின் மேலுள்ள பற்றினை விடுவார்கள், பார். எனது கூரிய அம்புகளால் உன்னைக்கொன்று, உன்னால் கொல்லப்பட்ட வீரர்களின் மனைவிகளை நான் திருப்திபடுத்துவேன். சிங்கத்தின் கண்ணில் பட்ட சிறு மான் போல, என் கண்ணில் பட்ட நீ இன்று உயிருடன் திரும்ப இயலாது!” என சூளுரைத்தான் பூரிசிரவஸ்.

பூரிசிரவசின் இந்த வார்த்தைகளை கேட்ட சாத்யகி சிரித்தான். சிரித்து விட்டு பூரிசிரவசைப்பார்த்து “குருகுல வீரனே, யுத்தத்தில் பயம் எனக்கு என்றமே இருந்ததில்லை. பயனற்ற வார்த்தைகளால் ஏன் என்னை பயமுறுத்த முயற்சிக்கிறாய்? அது வீண் வேலை. என்னை யுத்தத்தில் நிராயுதபாபாணியாக்கும் வல்லமை பெற்ற வீரனே என்னை யுத்தத்தில் கொல்லவியலும். என்னை கொல்லும் வீரன், இனி வரும் எல்லா யுகங்களிலும் எதிரிகளைக்கொல்லுவான்! வீணர்கள் பேசும் வீண் வார்த்தைகளை யுத்தகளத்தில் நீ பேசுவதால் என்ன பலன்? முடிந்தால் உன் வீரத்தை செயலில் காட்டு. (மழைக்கு உதவாத) வெண்மேகங்கள் கர்ஜிப்பது போல உள்ளது உன் கூச்சல். வீரனே, உன் க்ர்ஜனைகளைக்கேட்டு எனக்கு வரும் சிரிப்பினை என்னால் அடக்க இயலவில்லை! நீ நெடுங்காலமாக ஆசைப்படுவதாக சொன்னாயே, என்னுடனான அந்த போர், அது  இன்று, இப்போதே, இங்கேயே நடக்கட்டும். உன்னுடன் போர் புரிய ஆவலுடன் உள்ள எனது மனம் இனி எந்த தாமதத்தையும் பொறுக்காது. மூடனே, உனைக்கொல்லாமல் நான் இன்று போரில் இருந்து ஓயப்போவதில்லை” என்று பதில் கூறினான்.

இப்படி சற்று நேரம் ஒருவரை ஒருவர் திட்டி விட்டு, இளம் காளைகளை ஒத்த அந்த இரு வீரர்களும் சினம் மேலிட போர் புரிய ஆரம்பித்தார்கள். ஒருவர் உயிரை மற்றொருவர் குடிக்க ஆவலோடு அம்புகளை பொழிந்தார்கள். வில்வித்தையில் தேர்ந்த அந்த இரு வீரர்களும் ஒருவரை ஒருவர் அறைகூவி, மதம்கொண்ட இரு யானைகள் ஒரு பெண்யானைக்காக மோதுவது போல போரிட்டார்கள்.

இரு மேகங்கள் மழை பொழிவது போல, அவ்விரு வில் வீரர்களும் ஒருவர் மீது ஒருவர் பாணங்களை வருஷித்தார்கள். சோமதத்தனின் மகன் சினியின் பேரனை கொல்வதற்கு அவன் மீது பத்து கூரிய அம்புகளை எய்தான். அதன் பின்னும் பல கூரிய அம்புகளை சாத்யகி மீது அவனை கொல்லும் ஆவலால் ஆத்திரத்துடன் விடுத்தான் பூரிசிரவஸ். ஆனால் சாத்யகியோ மிக நிதானமாக, அந்த அம்புகள் அவனை வந்து அடையும் முன்னரே, தன் அம்புகளால் தடுத்தான்.

தங்கள் குலங்களுக்கு பெருமைசேர்க்கும் வ்ருஷணி குல வீரனும் குருகுல வீரனும் அம்பு மழையால் ஒருவரை ஒருவர் மூடினார்கள். மகாரதர்களின் வழக்கம் போல, ஈட்டிகளையும் குறுவேல்களையும் எறிந்து ஒருவரை ஒருவர் நொறுக்கப்பார்த்தார்கள்.

இரு புலிகள் தங்கள் நகங்களால் போரிடுவதைப்போலவும், இரு மத யானைகள் தங்கள் தந்தங்களால் போரிடுவதைப்போலவும் அவர்கள் போரிட்டனர். உடல்களில் குருதி பெருக உயிரைப்பணயம் வைத்து பரம்பரைப்பகையை நினைத்து போரிட்டனர்.

வெற்றி அல்லது வீரமரணம் ஏதாயினும் மகிழ்ச்சி என, அந்த சூரர்கள் மோதினர். பிரம்மபதத்தினை வீரமரணம் மூலம் பெற விழைந்து கர்ஜித்தனர். இவர்கள் போரினைக்கண்டு தார்தராஷ்ட்ரர்களின் (துரியோதனின் மைந்தர்கள்)  மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது.

இருவர் தேர்களும் உடைந்தன. இருவர் தேர்க்குதிரைகளும் மாண்டன. இருவர் விற்களும் உடைந்தன. தேரும் வில்லும் இழந்த அந்த இரு மகாரதர்கள் கத்தியும் கேடயமுமாக மண் மீது குதித்தனர்

காளையின் தோலால் ஆன இரு பெரிய ஒளி வீசும் கேடயங்களை ஏந்தி, மின்னும் வாட்களை பற்றி சாத்யகியும் பூரிசிரவசும் யுத்தபூமியில் சுற்றி சுற்றி போரிட்டனர். வட்ட வடிவில் சுற்றி வந்தும், குறுக்கும் நெடுக்குமாக பாய்ந்தும், பக்கவாட்டில் பாய்ந்தும், மேலே குதித்தும், அவ்விரு மாவீரர்கள் வாட்போர் புரிந்தனர். எதிர்பாராத சமயம் ஒருவரை ஒருவர் வெட்டி காயப்படுத்தினர். எதிராளியை கொல்ல  சமயம் பார்த்த வண்ணம் தங்களை தற்காத்துக்கொண்டு இருவரும் செய்த லாவகமான கத்திப்போர் அற்புதமானது என வட்டமாக வீரர்கள் நின்று வேடிக்கை பார்க்க துவங்கினர். நெடுநேரம் அதி லாவகமாக பண்ணின போருக்குப்பின், படைகளுக்கு எதிரில் இருவரும் சற்றே ஓய்வெடுத்தனர். பின் புத்துணர்வுடன் போரிட ஆரம்பித்தனர். முன் நடந்த போரை விட உக்கிரமாக நடந்தது கத்திப்போர்.

சிறிது நேரத்திலேயே நூறு பொன் நிலவுகள் பொறிக்கப்பெற்ற இரு கேடயங்களும் துண்டுகளாக சிதறின. கேடயங்கள் இல்லாமல் வாட்போர் செய்யக்கூடாது எனபது யுத்த விதி.  இருவரிடமும் ஆயுதங்கள் இல்லை. ஆகையால் மல்யுத்தம் துவங்கியது. திண்மையான மார்பும், கதைகளை ஒத்த  நீண்ட புஜங்களும் கொண்ட அந்த வீரர்கள், ஒருவரை ஒருவர் கைகளால் அடித்தும் எட்டிப்பிடித்தும், கழுத்தைப்பிடித்தும் போரிட்டனர். மல்யுத்தத்தில் அவர்கள் எடுத்த வருஷக்கணக்கான பயிற்சி அன்று வேடிக்கை பார்க்க நின்ற படைவீரர்களை மகிழ்விக்கும் விதமாக வெளிப்பட்டது. அவர்கள் போரிடும் போது, மலைகளில் இடியோசை ஒலிப்பது போல ஓசைகள் எழுந்தன. தந்தங்களின் கூரிய முனைகளால் போராடும் யானைகளைப்போலவும் கூரிய கொம்புகளால் போரிடும் எருதுகளைப்போலவும் அந்த வீரர்கள் போரிட்டனர். சிலசமயம் கைகளால் கட்டிப்பிடித்தும், சில சமயம் தலைகளால் முட்டியும், சில சமயம் கால்களால் தடுக்கியும், தோள்களை தட்டியும், சிலசமயம் நகங்களால் கிள்ளியும், சில சமயம் இறுகப்பிடித்தும், இடுப்பை சுற்றி கால்களால் பிணைத்தும், பூமியில் உருண்டும், சிலசமயம் முன்னேறியும் சில சமயம் பின்வாங்கிப்பதுங்கியும் சில சமயம் உயர குதித்தும், யுத்த சாஸ்திரத்தில் உள்ள அத்துணை வகையான தாக்குதல்களையும் செய்து ஒருவரை ஒருவர் கொல்லப்பார்த்தனர்.

இவர்களுக்கிடையில் இவ்வாறு யுத்தம் மும்முரமாக நடந்துகொண்டிருக்கையில், அருச்சுனன் அவர்களைப்பற்றி லக்ஷியமே பண்ணாமல் ஜயத்ரதனை வதம் பண்ணுவதில் முனைப்பாக கடும் யுத்தம் பண்ணிக்கொண்டிருந்தான்.

சாத்யகியின் ஆயுதங்கள் தீர்ந்து போன தருணம், வாசுதேவன் பார்த்தனிடம் பேசலுற்றான். “பார்த்தனே, பூரிசிரவசுடன் போராடிக்கொண்டிருக்கும் அந்த வில்வீரன் சாத்யகி தேரை இழந்துவிட்டான். உனக்காக அவன் இந்த கௌரவ சேனையை பிளந்து கொண்டு உன்னைப்பின்தொடர்ந்து வந்துள்ளான். பெருவீரத்துடன் அவன் எல்லா கௌரவ வீரர்களுடனும் மோதி விட்டான். அப்படி மோதிக்களைத்து, அவன் இப்போது யாகங்களில் சிறந்த தானங்களை அளவின்றி கொடுக்கும் அந்த தலைசிறந்த வள்ளல் பூரிரவசுடன் போரிடுகிறான்”…. கண்ணன் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே, பூரிசிரவஸ் கடுஞ்சினத்துடன் சாத்யகியை ஒரு மத யானை இன்னொரு மதயானையை அடிப்பது போல அடித்தான்.

கண்ணனின் வார்த்தைகளை கேட்ட விஜயன், தனது போரை ஒரு நிமிஷம் நிறுத்தி விட்டு சாத்யகியின் நிலைமை என்ன என்று திரும்பிப்பார்த்தான். அப்போது வாசுதேவன் மறுபடியும் அருச்சுனனை பார்த்து, “ஒ அருச்சுனா, யாதவ குலத்துதித்த புலியைப்போன்ற சாத்யகி, அதோ பூரிசிரவசுக்கு தோற்கபோகிறான். உனக்காக செயற்கரிய வீரச்செயல்களை இன்று செய்து இங்கு வந்துள்ள உனது சிஷ்யனான யுயுதானன் (சாத்யகி) களைத்தும், தேரிழந்தும் ஆயுதங்கள் இல்லாமலும் உள்ளான். உன் படைகளிலேயே தலைசிறந்த வீரனான சாத்யகி, யாகங்கள் செய்வதில் பக்தியுள்ள, மாபெரும் வள்ளலான  பூரிசிரவசுக்கு இன்று இரையாகாமல் காக்க வேண்டியது உன் கடமை! மகாவீரனே, இப்போது சாத்யகியைக்காப்பாற்ற  என்ன செய்யவேண்டுமோ, அதை செய்யக்கடவாய்” எனக்கூறி நிறுத்தினான்.

அதற்கு தனஞ்சயன் மகிழ்ச்சியோடு வாசுதேவனைப்பார்த்து, “அதோ பார் கிருஷ்ணா, குருகுல ஸ்ரேஷ்டனான பூரிசிரவசும் யதுகுலத்து சிங்கமான சாத்யகியும் யானையும் சிம்மமும் போரிடுவதைப்போல போரிடுகிறார்கள்”. பார்த்தன் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் போதே, பூரிசிரவஸ் சாத்யகியை அடித்து மண் மேல் வீழ்த்தினான். ஒரு சிம்மம் யானையை இழுப்பது போல, தர தரவென தரையில் சாத்யகியை இழுத்தான் பூரிசிரவஸ்.

பின், தனது வாளை உறையிலிருந்து உருவி, சாத்யகியின் தலைமயிரைப்பிடித்து இழுத்து, பரம்பரைப்பகைவனை மார்பில் உதைத்தான் பூரிசிரவஸ். அழகிய குண்டலங்கள் அணிந்த  சாத்யகியின் தலையை வெட்ட ஆயத்தமாகி வாளை உயர்த்தினான் பூரிசிரவஸ். பரம்பரைப்பகைவனை கொல்லப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் பூரிசிரவஸ், வாளை உயர்த்தி, (சாத்யகி தன்னால் ஜயிக்கப்பட்டு கிடக்கும் காட்சியை ரசித்தவாறு) அப்படியே நின்றான். அந்த நேரம், பூரிசிரவசால் மிதிக்கப்பட்டு கீழே கிடந்த சாத்யகி, தன் தலையை தன்னால் ஆனமட்டும் வேகமாக, ஒரு குயவனின் சக்கரம் போல சுழற்றி தன்னை மிதித்து, தலைமயிரைப்பற்றி இருந்த பூரிசிரவசிடம் இருந்து விடுவித்துக்கொள்ள முயன்றான்.

அப்போது மீண்டும் வாசுதேவன் மிக்க கவலையுடன், “பார்த்தனே, அதோ பார், உன் நண்பனும் சிஷ்யனுமான சாத்யகி சோமதத்தனின் மகனுக்கு தோற்று விட்டான். வில்வித்தையில் உனக்கு சற்றும் சளைக்காத உன் சிஷ்யன் அதோ பார், பூரிசிரவசால் கொல்லப்படப்போகிறான். இதுவரை யுத்தத்தில் யாராலும் ஜெயிக்கப்படாதவன் என்ற உன் சிஷ்யனின் பெயர் பொய்யாகி விடும் போல இருக்கிறதே, அங்கே பார்.” என்று கூறினான்.

அப்போது அருச்சுனன், பூரிசிரவசை மனத்தால் நமஸ்கரித்து பேசலுற்றான். “குருகுலத்தின் புகழை பெருக்கும் மாவீரன் பூரிசிரவஸ் சாத்யகியைக்கொல்லாமல் வெறுமனே விளையாட்டுப்போல இழுக்கிறானே, அது குறித்து நான் மகிழ்கிறேன், கண்ணா. சாத்யகியைக்கொல்லாமல் சும்மா இழுத்து அவமானப்படுத்தும் அந்த மாவள்ளலை நான் போற்றுகிறேன்” எனக்கூறி, மனத்தால் பூரிசிரவசை அருச்சுனன் மெச்சினான்.

ஆனாலும் சாத்யகியின் கஷ்டமான நிலைமையைக்கண்டும், நிராயுதபாணியான அவனை பூரிசிரவஸ் ஆயுதத்தால் வெட்ட முயற்சிப்பதையும் கண்டு,  “வாசுதேவரே, ஜயத்ரதனைக்கொல்வதிலேயே முனைப்பாக இருந்ததினால் நான் சாத்யகியை கவனிக்க இயலாது இருந்தேன். இருந்தாலும், தங்கள் கட்டளைப்படி, இதோ யாதவ குல மாவீரனுக்காக, மிகக்கஷ்டமான ஒரு காரியத்தை பண்ணுகிறேன்” என்று சொன்னான்.

அடுத்த கணம், காண்டீபத்தில் இருந்து கூரிய அம்பு ஒன்று புறப்பட்டது. கத்தி பிடித்த பூரிசிரவசின் வலக்கரம் ஐந்து தலை நாகம் போல, நிலத்தின்கண் வீழ்ந்தது. சாத்யகி பிழைத்தான்.

பூரிசிரவசோ ஒரு கணம் திகைத்தான். சாத்யகியை விட்டு விட்டு, பின்னாலிருந்து தன் கண்ணுக்கு தெரியாமல் யார் இந்த இழிசெயலை செய்தது என சுற்றும் முற்றும் பார்த்தான். அந்தோ, பேரதிர்ச்சி! பீபத்சு (பார்த்தன்) தான் இக்காரியத்தினை செய்தது என்று அறிந்ததும் அவனால் நம்ப முடியவில்லை. சுதாரித்துக்கொண்டு, துக்கமும் கோபமும் கொண்டு பார்த்தனை இகழ்ந்து இடித்துரைக்கத்தொடங்கினான்

அப்புறம் என்ன ஆனது? பூரிசிரவஸ் என்ன சொன்னான்? இது யுத்த தருமத்துக்கு விரோதமில்லையா? அருச்சுனன் என்ன சொன்னான்?

அந்தப்பகுதி அடுத்த பதிவில்!

(தொடரும்)

உபரித்தகவல்கள்:

பீபத்சு = அருச்சுனன். தகாத காரியத்தை கனவிலும் செய்யாதவன் என்று பொருள். தனக்கு கிட்டிய சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்டு ஒருநாளும் தகாத காரியம் செய்ய மாட்டான், பாப காரியம் செய்ய மாட்டான் என்ற புகழால் வாய்த்த பெயர்.

அந்தக்காலத்தில் தேர்கள் இன்றைய armour vehicles  போலத்தான் இருந்தன என்பது பாரதத்தில் தெளிவாக வரும். இன்று தொலைக்காட்சியில் காட்டுவது போல குதிரை வண்டி போல இருக்கவில்லை. நான்கு குதிரைகள் (குறைந்த பட்சம்) பூட்டப்படும். இரண்டு முன்பக்கம் பூட்டப்பெறும். இரண்டு குதிரைகள் சக்கரத்துக்கு ஒன்றாக இடது பக்கமும் வலது பக்கமும் பூட்டப்பெறும். முன்னே ஒருவர், சக்கரத்துக்கு ஒருவர் என்று மூன்று சாரதிகள் உண்டு. ரதத்தின் எல்லா பக்கமும் புலித்தோலும் மாட்டுத்தோலும் சாளரங்கள் போல வேய்ந்து, இருக்கும். Bullet proof “Kevlar” இன்று செய்யும் பணியை அன்று தோல் செய்தது. ஆயுதங்கள் supply ஏந்தி எட்டு மாட்டு வண்டிகள் தேரை பின் தொடரும். சாதாரணமாக அந்த மாட்டு வண்டிகளை வீரர்கள் தாக்க மாட்டார்கள். எந்த ரதத்தை வீரன் பயன் படுத்துகிறானோ அதை மட்டுமே உடைக்கப் பார்ப்பார்கள். மாட்டு வண்டிகள், ஆயுதம் எடுத்து கொடுப்போர், பக்க வாத்தியம் வாசித்து உற்சாகப் படுத்துவோர், வேடிக்கை பார்க்க வந்தோர், தோல்வியை ஒப்புக்கொண்டோர், கருணை வேண்டுவோர், யுத்தத்தில் தூதர்களாக வருவோர், நிராயுதபாணிகள் ஆகியோர் மீது ஆயுதப் பிரயோகம் செய்வது யுத்த விதிகளுக்கு முற்றவும் புறம்பானது. ஆனால் யுத்த சூட்டில் சில விதி முறைகள் அவ்வப்போது மீறப்பட்டன.

கேடயங்களும் மாட்டுத்தோலால் செய்யப்பட்டவை. பொன்னால் வல்ல வடிவமாக, பிறை வடிவமாக நிலவுகள் போன்ற designs பொறிக்கப் பட்டவை. இது தமிழகத்திலும் வழக்கம், புறநானூறிலும் வரும்.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “மகாபாரத முத்துக்கள்!..பாகம் 3

  1. போர் முழக்கத்தோடு தங்கள் தமிழ் முழக்கமும் அருமை!!. அரிய தகவல்களைத் தொடர்ந்து பகிர்ந்து வருகிறீர்கள். ஆவலுடன் தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன்.

  2. மிக நுணுக்கமான தகவல்களுடனும் பலவிதமான உவமைகளுடனும் போர்க்களக் காட்சியை விவரித்துள்ளீர்கள். மிகவும் அருமை நன்றி!

  3. மதிப்பிற்குரிய சகோதரி பார்வதி இராமச்சந்திரன் அவர்களே,
    தொடர்ந்து படித்து, ஊக்குவித்து அருளும் தங்கள் மேன்மைக்கு அடியேனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தங்களைப் போன்ற பெரியோர் ஆசியாலும் இறைவனார் அருளாலும் மேலும் எழுதி தமிழ்ச் சமூகத்துக்கு என்னால் இயன்றதை செய்ய ஆவலாக உள்ளேன், விழைகிறேன்.

    பணிவன்புடன்,
    புவனேஷ்வர்

  4. மதிப்பிற்குரிய திரு. சச்சிதானந்தம் அவர்களே,
    தொடர்ந்து படித்து ஊக்கமளிக்கும் தங்களுக்கு அடியேனது நன்றிகள். தங்களைப் போன்ற வாசகப் பெருமக்களே அடியேன் போன்றோருக்கு மேலும் எழுத ஒரு உந்துசக்தியாகத் திகழ்கிறீர்கள். தங்களுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    பணிவன்புடன்,
    புவனேஷ்வர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.